16 உயிருடன்...
16 உயிருடன்...
தன் பெயரை கிரிவரனின் குரலில் மீண்டும் கேட்ட ரோகிணி, மெல்ல பின்னால் திரும்ப, அவரது கணவன் கண்ணீர் மல்க நின்று கொண்டிருப்பதைக் கண்டார். அதிர்ச்சியில் அவரது கண்கள் விரிவடைந்தன. அவர் இருந்த நிலையை கண்ட கிரிவரன், கண்ணீர் விட்டார். அவர் அணிந்திருந்த சாதாரண வாயில் புடவை, அவர் வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கையின் தரத்தை கூறியது.
எதிர்பாராத அந்த திடீர் சூழ்நிலையால் நிற்கவே தடுமாறினார் ரோகிணி. அவர் கையைப் பிடித்து அவரை நிற்க செய்தார் கிரிவரன். அவரது கரத்தை கிரிவரன் பற்றியது தான் தாமதம், மற்றொரு கையால் முகத்தை மூடிக்கொண்டு வெடித்து அழுதார் ரோகிணி. தன்னை கட்டுப்படுத்த முடியாத கிரிவரனும் அழுதார். தன் கண்ணில் தேங்கிய கண்ணீரை மறைக்க, அவர்களுக்கு எதிர்ப்புறமாய் திரும்பி கொண்டான் ரிஷிவரன். ஆனால் மதுமிதாவுக்கோ அவளது கண்ணீரை மறைக்க வேண்டும் என்று தோன்றவில்லை. அது சந்தோஷ கண்ணீர்... மனமொத்த தம்பதிகளை சேர்த்து வைத்து விட்டோம் என்ற சந்தோஷத்தில் தோன்றிய கண்ணீர்... அவளது தோழி ஷெர்லின் கூட தன் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் தினறினாள்.
அனைவருக்கும் தங்களை சமநிலைப்படுத்திக் கொள்ள சில நிமிடங்கள் தேவைப்பட்டது. தன் சேலை முந்தானையால் முகத்தை துடைத்துக் கொண்டார் ரோகிணி.
"எப்படி இருக்க ரோகிணி?" என்றார் கிரிவரன் தொண்டை அடைக்க.
"இவ்வளவு நாளா ஜடமா இருந்தேன்..." என்றார் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாதவராய்.
சிறிது நேரம் நீண்ட அமைதி நிலவியது.
"நீங்க தான்னு என்னால நம்பவே முடியல" என்றார் விசும்பலுடன்.
"நீ உயிரோட தான் இருக்கேன்னு மது சொன்னப்போ என்னால கூட நம்ப முடியல"
நன்றி பெருகும் கண்களுடன் மதுமிதாவை ஏறிட்டார். ரோகிணி.
"நம்ம குட்டி உங்க கூட இல்லையா?" என்றார் ரோகிணி திகிலுடன், சுனாமி தங்கள் மகனை கொண்டு போய்விட்டதோ என்று எண்ணியபடி.
தன் பின்னால் நின்று கொண்டிருந்த ரிக்ஷிவரனை திரும்பிப் பார்த்தார் கிரிவரன்.
"குட்டி..."
அவர்களை நோக்கி வந்தான் ரிஷிவரன். அவனைப் பார்த்தவுடன் மீண்டும் அழுதார் ரோகிணி. அவன் நெற்றியில் முத்தமிட்ட அவர்,
"ஒரு நல்ல அம்மாவா, உன் கூட இருந்து, என்னால உன்னை கவனிச்சிக்க முடியாம போச்சு... " என்றார்.
"நீங்க எங்களுக்கு திரும்பி கிடைச்சுட்டீங்க... எங்களுக்கு அதுவே போதும்" தன் கண்ணீரை கட்டுப்படுத்திவிட்ட அவனால், அவனது சிவந்த கண்களை மறைக்க முடியவில்லை.
அவனை கட்டிக்கொண்டு ஓவென்று அழுதார் ரோகிணி. அவரது தலையை வாஞ்சையாய் வருடி கொடுத்த ரிஷிவரன்,
"ப்ளீஸ் அழாதீங்க, மாம். நீங்க அழுததெல்லாம் போதும்" அவரை சமாதானப்படுத்த முயன்றான்.
கண்களை துடைத்துக் கொண்டு கிரிவரனை பார்த்து புன்னகை புரிந்தார் ரோகிணி.
"நீங்க இவனை ரொம்ப நல்லா வளர்த்திருக்கீங்க" என்றவர் ரிஷிவரனின் கண்ணம் தொட்டு புன்னகைத்தார்.
ரிஷிவரனின் கண்கள், அனிச்சையாய் மதுமிதாவை நோக்கி திரும்பியது. அவள் தன் பார்வையை ஷெர்லினின் பக்கம் திருப்பி, அவளை பார்த்து புன்னகைத்தாள், அவர்களை கவனிக்காதவள் போல்.
"நீங்க எங்களுக்கு திரும்ப கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம். வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம்" என்றான் ரிஷிவரன்.
சட்டென்று ரோகிணியின் முகத்தில் தோன்றிய தயக்கத்தை அனைவருமே உணர்ந்தார்கள்.
"என்ன ஆச்சு ரோகிணி?" என்றார் கிரிவரன் பதட்டத்துடன். அங்கு ரோகிணிக்கு என்ன விதமான பொறுப்புகள் இருக்கிறது என்று அவருக்கு தெரியாது அல்லவா...!
"நாளைக்கு கிறிஸ்மஸ்.... ஒரு நாள் பிள்ளைங்க கூட இருந்துட்டு போக முடியாதா?"
அனைவருக்கும், சென்ற உயிர் திரும்பியதை போல் இருந்தது.
"அவ்வளவு தானா?" என்றார் நிம்மதி பெருமூச்சு விட்ட கிரிவரன்.
"ஆங்..."
"ஒன்னும் பிரச்சனை இல்ல. நம்ம நாளைக்கு குழந்தைகளோட கிறிஸ்மஸ் கொண்டாடிட்டு, அப்புறமா சென்னைக்கு போகலாம். என்ன சொல்ற குட்டி?" என்றார் கிரிவரன்.
"எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல டாட். ( மதுமிதாவை பார்த்தபடி ) இன்ஃபேக்ட், இன்னும் கொஞ்ச நாள் இங்க இருக்க சொன்னா கூட, எனக்கு சந்தோஷம் தான். ஆனா மதுவுக்கு ஓகேவான்னு கேளுங்க" என்றான் மதுமிதாவை பார்த்தபடி.
கிரிவரனும், ரோகிணியும் கூட மதுமிதாவை நோக்கி திரும்பினார்கள்.
"நான் அப்பாகிட்ட பேசுறேன் அங்கிள்" என்றாள் மதுமிதா.
"தேங்க்ஸ் மா" என்றார் கிரிவரன்.
இரண்டு அடிகள் எடுத்து வைத்து அவளை நெருங்கிய ரோகிணி, அவளை அன்பாய் தழுவிக்கொண்டார்.
"உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு எனக்கு தெரியல. நீ என் வாழ்க்கையை திருப்பி கொடுத்திருக்க... என் புருஷனையும் பிள்ளையையும் திருப்பிக் கொடுத்திருக்க... இதுக்கெல்லாம் நான் என்ன செய்யப் போறேனோ..."
மதுமிதாவிற்கு சங்கடமாய் போனது.
"ரிலாக்ஸ் ஆன்ட்டி. இது சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம்..."
"ஆமாம் நான் சந்தோஷமாய் இருப்பேன், உன்னால... என் புருஷன் பிள்ளையோடு இருக்க போறேன், உன்னால... எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி" அவள் நெற்றியில் முத்தமிட்டார், சற்று நேரத்திற்கு முன்பு ரிஷியை முத்தமிட்டது போல்.
அடக்கத்துடன் புன்னகைத்தாள் மதுமிதா.
"ரோகிணி, மது ரொம்ப சிம்பிளான பொண்ணு. அவ நமக்கு உதவி செய்றது இது முதல் தடவை இல்ல..." என்று சிரித்தார் கிரிவரன்.
அப்படி என்ன உதவியை அவள் செய்தாள் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் அவரை பார்த்துக் கொண்டு நின்றார் ரோகிணி.
"நம்ம குட்டிக்கு ஆக்சிடென்ட் ஆனப்போ, அவ தான் அவனை காப்பாத்தினா"
அதிர்ச்சியில் விழி விரித்த ரோகிணி,
"நெஜமாவா?" என்றார்.
"ஆமாம். அப்போ நான் வெளியூர் போயிருந்தேன். அவ தான் ராத்திரி எல்லாம் ஹாஸ்பிடல்ல அவன் கூடவே இருந்து அவனை பார்த்துக்கிட்டா"
"எங்க வாழ்க்கையோட சந்தோஷத்தை திருப்பி கொடுக்கறதுக்காகவே கடவுள் உன்னை அனுப்பி இருக்கிறாருன்னு நினைக்கிறேன்" என்றார் ரோகினி உணர்ச்சி பெருக்குடன்.
"நானும் அப்படித்தான் நினைக்கிறேன்" என்றார் கிரிவரன்.
"நீ குட்டியோட ஃபிரண்டா மா?" என்றார் ரோகிணி.
மதுமிதா அதற்கு பதில் கூறும் முன் ரிஷிவரன் கூறினான்,
"இல்ல மாம். அவ என்னோட *ஃப்ரெண்ட்* இல்ல. ஆனா..."
அவன் பேச்சுக்கு நடுவில் புகுந்து,
"நான் காலேஜ்ல அவருக்கு ஜூனியர் ஆன்ட்டி" என்றாள் மதுமிதா அவசரமாய்.
ரிஷிவரன் மட்டுமல்ல கிரிவரன் கூட தனது சிரிப்பை அடக்கி கொண்டார்.
"ரொம்ப நல்ல விஷயம். அப்படின்னா நாங்க எப்பவும் உன் கூட டச்சிலயே இருக்கலாம்" என்றார் ஆர்வத்துடன்.
*ஐயோ* என்றானது மதுமிதாவிற்கு. போகிற போக்கை பார்த்தால், ரிஷிவரனை சமாளிப்பதை காட்டிலும், அவனது அம்மாவை சமாளிப்பது தான் அவளுக்கு பெரும்பாடாய் இருக்கும் போல் தெரிகிறது. இந்த பேச்சை உடனடியாய் மாற்றியாக வேண்டும். இல்லாவிட்டால், அது அவளுக்கு பெரிய பிரச்சனையை கொண்டு வரும்.
"நாளைக்கு கிறிஸ்மஸ்க்கு நீங்க என்ன செய்வீங்க ஆன்ட்டி?" என்றாள்.
அவளது எண்ணத்தை புரிந்து கொண்ட அப்பாவும் பிள்ளையும் அவளை பார்த்து புன்னகைத்தார்கள்.
"ஜனங்க கொடுக்கிற டொனேஷன்ல தான் நாங்க ஒவ்வொரு வருஷமும் கிறிஸ்மஸ் செலப்ரேட் பண்ணுவோம். அனாவசிய செலவுகள்னு இங்க எதுவும் இல்ல. இங்க இருக்குற பிள்ளைகளுக்கு போட்டுக்க நல்ல டிரஸ் இல்ல..." தயக்கத்துடன் கிரிவரனை பார்த்த ரோகிணி,
"பிள்ளைகளுக்கு உங்களால் துணி வாங்கி கொடுக்க முடியுமா?" என்றார்.
"நிச்சயமா செய்யலாம்" என்றார் கிரிவரன், நொடியும் யோசிக்காமல்.
ரோகிணியும், மதுமிதாவும் புன்னகைத்தார்கள். அப்பொழுது அந்த தேவாலயத்தின் அருட்தந்தையான ஜான் பால் அங்கு வந்தார்.
"ரோகிணிமா இவங்கல்லாம் யாரு?" என்றார்.
"இவரு என்னோட ஹஸ்பண்ட், அவன் என்னோட சன்"
"என்னம்மா சொல்றீங்க நீங்க?" என்றார் நம்ப முடியாமல்.
"ஆமாம் ஃபாதர். இந்த பொண்ணு மூலமா நான் உயிரோடு இருக்கிறதை தெரிஞ்சுக்கிட்டு, அவங்க என்னை தேடி வந்திருக்காங்க"
"நீ ரொம்ப நல்ல வேலை செஞ்சிருக்கமா" என்றார் அவர் மதுமிதாவை பார்த்து.
அவள் லேசாய் புன்னகைத்தாள்.
"என் வீட்டுக்காரரும், பிள்ளையும் நம்ம ஹோம் குழந்தைகளுக்கு டிரஸ் எடுத்துக் கொடுக்கலாம்னு இருக்காங்க. அதுக்கு உங்க பர்மிஷன் கிடைக்குமா ஃபாதர?"
"உங்களுக்கு எதுக்குமா பர்மிஷன்? இது உங்களுடைய ஹோம் தானே? இந்த குழந்தைங்க மேல, எங்க எல்லாரையும் விட உங்களுக்கு தான் அதிக உரிமை இருக்கு. நீங்க என்ன விரும்பினாலும் அதை செய்யலாம்"
"தேங்க்யூ ஃபாதர்"
கிரிவரனை பற்றியும், ரிஷிவரனை பற்றியும் விசாரித்து தெரிந்து கொண்டார் ஜான் பால். தங்களைப் பற்றிய விவரங்களை அவர்கள் ஜான் பாலிடம் கூறினார்கள். அவர்களுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு சென்றார் ஜான் பால்.
"ஷெர்லின், இவங்களை நீ கடைக்கு கூட்டிகிட்டு போக முடியுமா மா?" என்றார் ரோகிணி.
"தாராளமா கூட்டிக்கிட்டு போறேன் ஆன்ட்டி" உடனே ஒப்புக்கொண்டாள் ஷெர்லின்.
"நீங்க நாகப்பட்டினம் போயிட்டு வாங்க. எனக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்கு. அதை பாதியில என்னால் விட முடியாது" என்றார் ரோகிணி.
"குட்டி, நீ ஒரு வேலை செய். நீயும், மதுவும் நாகப்பட்டினம் போயிட்டு வாங்க. நான் அம்மாவுக்கு உதவியா இங்கேயே இருக்கேன்"
மதுமிதாவை ஏறிட்டான் ரிஷிவரன். அவளும் கிரிவரன் கூறியதைப் பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு ரிஷிவரனுடன் செல்ல விருப்பம் இல்லை தான், ஆனாலும், வெகு வருடங்களுக்குப் பிறகு சந்தித்த தன் மனைவியுடன் இருக்க வேண்டும் என்ற கிரிவரனின் ஆசையை நீராசையாக்க அவள் விரும்பவில்லை.
"சரிங்க அங்கிள்" என்று கூறி, அப்பாவையும், பிள்ளையையும் நிம்மதி பெருமூச்சு விடச் செய்தாள் மதுமிதா.
"நாளைக்கு சில்ரன்ஸ்க்கு சாப்பாடு அரேஞ்ச் பண்ணலாமா டாட்?" என்றான் ரிஷிவரன்.
சந்தோஷமாய் புன்னகைத்தார் ரோகிணி.
"நிச்சயமா செய்யலாம். நம்ம இங்கேயே அரேஞ்ச் பண்ணிட முடியுமா? இல்ல, நாகப்பட்டினத்தில் தான் செய்யணுமா?" என்றார் ஷெர்லினிடம் கிரிவரன்.
"இங்கேயே அரேஞ்ச் பண்ணிடலாம் அங்கிள். அது ஒன்னும் பிரச்சனை இல்ல" என்றாள் ஷெர்லின்.
"நாங்க பசங்களோட அளவை எடுத்துக்கிட்டு டிரஸ் எடுக்க போறோம்"
"எல்லாரோட அளவும் என்கிட்ட இருக்கு. நான் தரேன்" என்றார் ரோகிணி.
தன்னுடைய கடன் அட்டையை ரிஷிவரனிடம் கொடுத்தார் கிரிவரன்.
"வேண்டாம் டாட். நீங்க வச்சுக்கோங்க. நான் என்னோட கிரெடிட் கார்டுல வாங்கிக்கிட்டு வரேன்" என்று ரிஷிவரன் கூறியது மதுமிதாவிற்கு ஆச்சரியத்தை தந்தது.
பிள்ளைகளின் உடைகளுக்கான அளவுகளை ரோகிணியிடமிருந்து பெற்றுக் கொண்டு, ஷெர்லினுடனும், மதுமிதாவுடனும் நாகைப்பட்டினம் புறப்பட்டான் ரிஷிவரன்.
தன்னுடைய காரிலேயே அவர்களை நாகப்பட்டினம் அழைத்துச் சென்றாள் ஷெர்லின். நாகப்பட்டினம் வளர்ந்து வரும் ஒரு நகரம். அந்த புது சூழலை ரிஷிவரனும், மதுமிதாவும் நன்றாகவே ரசித்துக் கொண்டு வந்தார்கள்.
கடைத்தெரு இருந்த பகுதிக்கு சற்று முன்பாகவே காரை நிறுத்த சொல்லி ஓட்டுனரை பணித்த ஷெர்லின்,
"மார்க்கெட் உள்ள கார் போகாது. நம்ம நடந்து போகலாம்" என்றாள்.
அந்த பகுதியில் இருந்த ஒரு பெரிய கடைக்கு அவர்களை அழைத்துச் சென்ற அவள்,
"தேவையானதை நம்மை இங்கேயே வாங்கிடலாம்" என்றாள்.
அனைவரும் அந்த கடைக்குள் சென்றார்கள். அங்கிருந்த துணி ரகங்கள் நன்றாகவே இருந்ததால், ரிஷிவரனும், மதுமிதாவும் திருப்தி அடைந்தார்கள்.
"மது" என்று அவளை அழைத்த ரிஷிவரன்,
"இது கேர்ள்ஸ் லிஸ்ட். அவங்களுக்கு வேண்டியதை நீயே செலக்ட் பண்ணிடு. ஒருத்தருக்கு அஞ்சு டிரஸ் எடுத்துக்கோ"
அவள் சரி என்று தலையசைக்க, அங்கிருந்து சிறுவர்களுக்கான பகுதிக்கு செல்ல ரிஷிவரன் விழைந்த போது,
"ரிஷி" என்று அவனை அவள் அழைக்க, அவளை வியப்புடன் ஏறிட்டான்.
"கேர்ள்ஸ்க்கு இன்னும் கூட சிலதெல்லாம் பர்சனலா தேவைப்படும்"
அவள் கூறுவதை புரிந்து கொண்ட அவன், சரி என்று தலையசைத்தான்.
"அதையும் வாங்கிடட்டுமா?"
"வாங்கிக்கோ"
சிறுவர்களுக்கான உடைகளை தேர்ந்தெடுக்க மூன்றாம் தளத்தை நோக்கி சென்றான் ரிஷிவரன்.
மதுமிதாவிற்கு ஷெர்லின் உதவ தொடங்கினாள்.
"அது உண்மையா மது? "
"எது?" உடைகளை தேர்ந்தெடுத்தபடி கேட்டாள்.
"ராத்திரி ஃபுல்லா நீ அவன் கூட ஹாஸ்பிடல்லேயே இருந்தியாமே..."
அவளது கரங்கள் சில நொடி அப்படியே நின்றது. அவள் ஆம் என்று தலையசைத்தாள்.
"ரிஷி உன்னை காதலிக்கிறான்னு நினைக்கிறேன்"
அவளை வியப்புடன் ஏறிட்டாள் மதுமிதா.
"அவன் உன்னை பார்க்கிற பார்வைக்கும், என்னை பார்க்கிற பார்வைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு"
அவளுக்கு பதில் கூறவில்லை மதுமிதா.
"அது உனக்கும் தெரியும் போல இருக்கு?"
அதற்கும் பதில் இல்லை.
"ஒருவேளை உனக்கு தெரியலன்னா, அவன் சீக்கிரமாகவே உனக்கு தெரியப்படுத்துவான்"
"அவன் ஒரு பைத்தியக்காரன்..."
"ஆனா, நீ அந்த பைத்தியக்காரனை தானே காப்பாத்தின?"
"அது தான் நான் செஞ்ச பெரிய தப்பு."
"அப்படின்னா நான் நினைச்சது சரி தான். அவன் உன்னை காதலிக்கிறான். அது உனக்கும் தெரியும்"
அமைதியாய் இருந்தாள் மதுமிதா.
"நீ சொல்ற மாதிரி அவன் பைத்தியக்காரனா எனக்கு தெரியல. பாரு பிள்ளைகளுக்கு என்ன வேணும்னு யோசிச்சு எல்லாத்தையும் வாங்கிகிட்டு இருக்கான்"
"அவன் பணக்காரன். அதை செய்ய அவன் கிட்ட காசு இருக்கு..."
"அடுத்தவங்களுக்கு உதவனும்ங்குற பெரிய மனசு, எல்லா பணக்காரனுக்கும் இருக்கிறதில்ல, மது"
"அதனால?"
"எனக்கு தெரியல" சிரித்தாள் ஷெர்லின்.
பெண் பிள்ளைகளுக்கு தேவையான உள்ளாடைகளை வாங்கிக் கொண்ட பிறகு,
"எல்லாத்துக்கும் மொத்தமா பில் போட்டுடலாமா?" என்றாள் கடைக்காரரிடம்.
"போட்டுடலாம் மேடம்" என்றான் சிறுமிகளுக்கான தளத்தில் இருந்தவன்.
அந்தக் கடையின் முதலாளியும், கடையின் வேலையாட்களும், திகைத்துப் போனார்கள். அவர்களது கடையின் வரலாற்றிலேயே, இதற்கு முன்பு, யாரும் ஒட்டுமொத்தமாய் இவ்வளவு துணிகளை வாங்கியதில்லை. கிட்டத்தட்ட ஒன்னே முக்கால் லட்சம் ரூபாய்க்கான துணிமணிகளை அவர்கள் வாங்கியிருந்தார்கள். அந்த துணிமணிகளை டெலிவரி செய்ய தங்களது கடையின் வண்டியை அவர்களுக்காக அனுப்பி வைத்தார் அந்த முதலாளி.
ரிஷிவரனும், மதுமிதாவும் வேளாங்கண்ணிக்கு வந்து சேர்ந்தார்கள். அந்த கடையின் வேன், அவர்களை பின்தொடர்ந்து வந்தது. அதைக் கண்ட ரோகினியின் சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. அதிலும் குறிப்பாய் பெண் பிள்ளைகளுக்கான உள்ளாடைகளை பார்த்த அவர், மகிழ்ச்சியில் திளைத்தார்.
"இதுக்காக நீங்க மதுவுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும். அதை வாங்கற ஐடியா அவளோடது தான்" என்றான் ரிஷி.
"தேங்க்ஸ் டா செல்லம்" அவளை அணைத்துக் கொண்டார் ரோகிணி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top