💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச-11

"டேய் என்னடா பண்ற? அறிவு இருக்கா உனக்கு? எவ மேலயோ இருக்க கோபத்துல உன்னை காயப்படுத்திக்குற?" என்று திட்டியபடியே அங்கிருந்த கண்ணாடித் துண்டுகளை ஷூவால் தள்ளிவிட்டபடி அவனை அழைத்து வந்து ஹாலில் சோபாவில் அமர வைத்தான். அவனது நண்பன்.

ஓடிச்சென்று முதலுதவி பெட்டியை எடுத்து வந்தவன் மதன் கரத்தை பிடித்து சுத்தம் செய்ய பார்க்க, வெடுக்கென்று பிடுங்கினான். "விடுடா!"

"டேய்! அப்புறம் என் வாயில ஏதாவது நல்லா வந்துரும். நீ நல்லா இருந்தா தான் நீ நினைக்கிற எல்லாத்தையும் செய்ய முடியும். மரியாதையா அமைதியா உட்காரு" என்று அதட்டி மருந்திட்டான்.

"டேய் எனக்கு எவ்ளோ டென்சன். எல்லாம் தெரிஞ்சும் என்னை திட்ற?" என்று நண்பனை முறைத்தான் மதன்.

"புரியுதுடா.. எங்க போய்ட போறா? பொறுமையா யோசி. வழி இல்லாமலா போகும்"  என்றான் நண்பன்.

"சே எவ்ளோ பிளான் பண்ணி ஒவ்வொரு காயா நகர்த்தினேன் தெரியுமா?" என்று கோபத்தில் எங்கோ வெறித்திருந்தான்.

"இப்பவும் ஒன்னும் கெட்டுபோகலைடா... இன்னும் எதுவும் நம்ம கை மீறி போகலை. எல்லாமே நடக்கும். நீ கொஞ்சம் அவசரப்படாம அமைதியா இரு" என்றான் நண்பன்.

"எப்படிடா அமைதியா இருக்கிறது? அவளை கட்டிக்கணும்னு முடிவு பண்ணி என்னென்ன வேலை பார்த்திருக்கேன்... உனக்கே தெரியும்ல... ஒண்ணா ரெண்டா மூணு பேரை போட்டு தள்ளிருக்கேன்... அதோட அவ காதலிச்சவனோட பிரிவினைய உண்டாக்க எவ்ளோ பிளான் பண்ணி செயல் படுத்தினேன்." என்று புலம்பிக்கொண்டே இருந்தான்.

"சரி டா. இதுவரைக்கும் நடந்தது நமக்கே தெரியும்... இனி நடக்க போறது என்னன்னு பிளான் பண்ணு." என்றான் நண்பன்.

"இனி என்ன பிளான் பண்றது...? அவ சம்மதிகலைன்னா கூட பரவால்ல இன்னும் ரெண்டு நாளைக்குள்ள அவ கழுத்துல நா தாலி கட்றேன்." என்றான் மதன்.

"அவ ஒரு அபூர்வமான பொக்கிஷம் டா. எனக்கு தெரிஞ்ச உண்மை வேற யாருக்கும் தெரிஞ்சு அவளுக்காக வரதுக்கு முன்னாடி நான் அவள் புருஷனா இருக்கனும்" என்றான் தீவிர யோசனையில்.

**********

'இப்போ என் பொண்டாட்டி என்ன பண்ணுவான்னு எனக்கு தெரியுமே...' என்று தன் முன் இருக்கும் மடிக்கணினியில் தாரணியின் நடவடிக்கைகளை தன் அலுவலக அறையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த வருண் புன்னகைத்தவாறே கூற,

"என்னை பார்த்தா உன் மனசு மாறிடும்னு பயம் என்கிட்ட வந்து பேசிடுவியோன்னு பயம்.. சோ, ராஜினாமா கடித்ததை கூட தராம உன் வீட்டுக்கு போவ...டி.. என் செல்லம்.." என்று பெருமூச்சுவிட்டவன்.

"அப்டியே என்கிட்ட இருந்து ஓடனும்னு இந்த ஊரைவிட்டு என் கண்ல படாத தூரத்துக்கு போக பார்ப்ப, மூணு வருஷத்துக்கு முந்தி தெரிஞ்சே உன் மனசை காயப்படுத்திட்டேன். ஆனா, இந்த முறை உன்னை விடபோறதில்லை. நீ தான் அப்பவும் இப்போவும் எப்போவுமே என் பொண்டாட்டி. யாரு நினைச்சாலும் மாத்தமுடியாது. அதை உனக்கு புரியவைக்காம விடமாட்டேன்டி என் செல்ல குட்டி" என்று தன் அடுத்த திட்டத்தை வகுக்க ஆரம்பித்தான்.

**********

எல்லா பொருட்களையும் எடுத்து ஏற கட்டியவள் மனம் ஏனோ மிக பாரமாக இருக்க, கோவிலுக்கு சென்றால் நிம்மதியா இருக்கும் என்று சென்றாள்.

அவள் மன பாரம் அறிந்த இறைவனோ அதை போக்கவோ அல்ல கூட்டவோ எதை நினைக்கின்றானென்று யார் அறிவார்.

கோவிலுக்காவது போட்டு வந்தா நல்லா இருக்குமென்று தயாராகி கதவை திறக்க, திறக்காமல் இறுக மூடியிருந்தது.

'என்ன ஆச்சு இந்த கதவுக்கு திறக்க மாட்டேங்குது? நல்லா தானே இருந்தது' என்று மீண்டும் மீண்டும் திறக்க முயற்சித்தாள்... ஆனால் திறக்கவில்லை.

'இப்போ கோவிலுக்கு போகக்கூடாதுன்னு திறக்க மாட்டேங்குதா இல்ல ஊரைவிட்டு போகக்கூடாதுன்னு திறக்க மாட்டேங்குதா?' தலையில் கை வைத்து உட்கார்ந்துகொண்டாள்.

திடீரென்று எழும்பிய அலைபேசியின் ஒலியில் திடுக்கிட்டவள்.

"ஹலோ" என்றாள்.

"தாரணி மா. எங்க போன? நா உன்னை பார்த்துட்டு தானே வெளிய போனேன். திரும்பி வந்தா இங்க இல்லையே?" என்றார் மனோகர்.

"இல்லை சார் கொஞ்சம் தலைவலியா இருந்தது.  அதான்... வந்துட்டேன். சொல்லுங்க சார். ஏதாவது முக்கியமான விஷயமா" என்றாள் முடிக்காமல்.

"சரிம்மா. ஆனா நீ உடனே ஆபிசுக்கு வரவேண்டி இருக்கும்" என்றார்.

"ஏன் சார். என்னாச்சு?" என்றாள் படப்படப்பாக.

"இல்லம்மா. நியூவா ஒரு ப்ரொஜெக்ட் அப்ளை பண்ணிருந்தோம்ல அது ஓகே ஆகிருகும்மா.. அதனால அந்த டீம் ல இருக்க யாரும் நிறைய  லீவோ... வேலை விட்டு போகவோ கூடாதுன்னு சர்க்குலர் அனுப்பிருக்கார்..  சார்.. சோ, நீ நாளிலருந்து வரமுடியுமா பாரும்மா" என்றார்.

"திடீர்னு வேலை விடனும்னா என்ன சார் பண்றது? எவ்ளோ நாள் ப்ரொஜெக்ட் வந்துருக்கு?" என்றாள்.

"ஆறு மாசம் மா. நார்மலாவே திடீர்னு போக முடியாதில்லடா. ஒன் மந்த் நோட்டீஸ் கொடுக்கணும்ல. அது மட்டுமில்ல அப்படி யாராவது போறதா இருந்தா இந்த ப்ரொஜெக்ட் அமெண்ட் மொத்தமும் கம்பெனிக்கு கட்டணுமாம்." என்றார் யோசனையாய்.

"என்னது...?" என்றாள் அதிர்ச்சியான குரலில்.

"ஆமா... அதாவது ஒரு கோடி தரனுமாம்" என்றார் மனோஹர்.

"ஒஹ்...  ஓகே சார்" என்றாள் கடுப்பாக.

"ஆமா நீ ஏன் இதை பத்தி கேட்கிற வீட்ல  ஏதாவது வர சொன்னாங்களா?" என்றார் பொறுமையாக.

"இல்ல இல்ல சார். சும்மா தான் கேட்டேன். நான் நாளைக்கு வரேன்" என்றாள் உடனே.

"சரி மா. உடம்பை பார்த்துக்கோ." என்று வைத்துவிட்டார்.

'வருண் நிச்சயமா இது உங்க வேலை தானே... நான் வேலையை விட்டு போவேன்னு தெரிஞ்சு தான் இந்த வேலை செஞ்சுருக்கிங்க... உங்களை..."  என்று பற்களை கோபத்தில் கடித்தாள்.

கோபத்தில் கொதித்து கொண்டே மெத்தையில் விழுந்தவள் உறங்கி போக... அலைபேசி எழுப்பியது.

எடுத்து பார்த்தவள், "இவன் வேற சும்மா இல்லாம இம்சை பண்றான். வேண்டாம்னா விட வேண்டியது தானே " என்று திரையில் மின்னிக்கொண்டிருந்த பெயரை பார்த்து திட்டிக்கொண்டே, 'இனிமே போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ணாதன்னு சொல்லணும்" என்று கடைசி நொடியில் போன் காலை அட்டெண்ட் செய்தாள்.

இவள் எடுக்கவில்லையென்ற கோபத்தில் அணைக்காமலே தன் அலைபேசியை மெத்தையில் வீசியவன்.

தன் தலைமுடியை அழுந்த கோதிவிட்டவன்.

"என்னாச்சு?" நண்பன் கேட்க.

"எடுக்கமாட்டேங்குறாடா?  எனக்கு செம டென்சன் ஆகுது... இவளால என் பிளான் எல்லாம் வேஸ்ட் ஆகக்கூடாது... நம்ம ஆளுங்களை கூப்பிட்டு எங்க இருந்தாலும் அவளை தூக்க சொல்லு. நாளைக்கு காலைல நான் கட்டின தாலி அவ கழுத்தில் இருக்கணும். குறுக்க யார் காப்பாற்ற வந்தாலும் போட சொல்லு." என்றான் மதன்.

அவனின் பேச்சில் சர்வமும் அடங்கி போயிற்று தாரணிக்கு.

"என்ன பேசுறான் இவன்? என்ன பிளான்? எதுக்கு என்னை கடத்த சொல்றான்?" என்று குழம்பி கொண்டிருக்க...

"டேய் பிரச்சனைய சமாளிக்க முடியுமா?" நண்பன் கேட்க..

"என்னடா பேசுற? நான் பார்க்காத பிரச்சனையா? நான் பண்ணாத பிரச்சனையா? என்னைக்கு அவளை பத்தின உண்மை எனக்கு தெரிஞ்சுதோ அன்னைக்கே அவ எனக்கு தான்னு முடிவு பண்ணிட்டேன். தடையா வருவான்னு தெரிஞ்ச அந்த வருணை ஸ்கெட்ச் போட்டு என் வழிலர்ந்து தூக்கினேன். இன்னைக்கு வரைக்கும் அவங்க ரெண்டு பேரும் சேராத மாதிரி பார்த்துக்குறேன். அப்டியே சேர்ந்தாலும் அவன் சொல்றதை அந்த முட்டாள் நம்ப மாட்டா... ஏன்னா அவனுக்கே இன்னும் முழுசா பாதி உண்மை தெரியாது. என்னை பத்தி உண்மை தெரிஞ்ச இரண்டு பேர்ல ஒருத்தியை போட்டு தள்ளிட்டேன். இன்னொருத்தன் மூணு வருஷமா குத்துயுருமா குலை உயிருமா இருக்கான். அவனோட பங்கு சொத்தும் அவ கையெழுத்து போட்டா தான் எனக்கு கிடைக்கும் அதனால தான் உயிரோட இருக்கான் இல்லைன்னா என்னை பத்தி உண்மைய தெரிஞ்சுகிட்ட அன்னைக்கே பரலோகம் அனுப்பிருப்பேன். இருந்தாலும் நமக்கு மட்டும் தான் அவன் உயிரோட இருக்கான்னு தெரியும்... அப்டியே ரகசியமா இருக்கட்டும். வேலை முடிஞ்சவுடனே நமக்கும் அவன் இறந்தவனாவே செஞ்சுருவோம். ஹா...ஹா..."  என்று சிரித்தான் மதன்.

அவனின் வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் தனக்கும் சம்மந்தம் இருப்பது போல் தோன்ற அவற்றை மன பெட்டகத்தில்  சேமித்துக்கொண்டாள்.

"சரி சரி அதுங்களை பத்தி பேசி நேரத்தை வீணாக்காம... நம்ம ஆளுங்களுக்கு போன் செய்வோம் வா..." என்று அவன் அலைபேசியை எடுக்க வர தன் இணைப்பை அவசரமாக துண்டித்தாள் தாரணி.

தன் வாழ்க்கையில் ஏதோ ஒரு வலையை தான் அறியாமல் பின்னி இருக்கிறார்கள் என்று மட்டும் உணர்ந்து கொண்டாள்.

இந்த நிமிடமே வருணை சந்திக்க வேண்டும் என்று தோன்றினாலும் அவன் இன்னொரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டியவன் என்பதை அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை.

வேகமாக எழுந்து கதவை திறக்க அது திறந்து கொண்டது. நடந்தே  அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு வந்தவள் கண்மூடி பிராத்தித்து கண்ணீர் வழிய தன் வாழ்க்கையை எண்ணி கலங்கியிருந்தாள்.

எதுவாயினும் சந்தித்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்து விழித்திறந்த நேரம் அவளின் அதிர்ச்சிக்கு அளவே இல்லை...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top