💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச-02
அங்கே சமயலறை மிக சுத்தமாக இருந்தது. சமையல் மேடையின் மேல் ஒரு கப்பில் சூடான காப்பி ஆவி பறக்க இருந்தது.
'அப்போ நைட் நடந்தது கனவு இல்ல. ' என்று தெரிந்ததும் மீண்டும் பயம் வந்து ஒட்டி கொண்டது.
மெல்ல அடியெடுத்து வைத்தவள் தன் முன் இருந்த காப்பியை அருந்தலாமா வேண்டாமா என்று பயத்திலும் தயக்கத்திலும் சிலையாய் சில நிமிடங்கள் நிற்க, காப்பி கோப்பை லேசாக அசைந்தது கண்டு மெல்ல பின் வாங்கினாள்.
அந்தரத்தில் தொங்கியபடி அவளருகில் வந்து நின்றது காப்பி.
'நேத்தாவது தண்ணீர் இருந்தது சொம்புல மேல விழுந்தா ஒன்னும் ஆகாது. இன்னைக்கு காப்பி ரொம்ப சூடா இருக்கு. மேல பட்டுச்சு அவ்ளோ தான் வெந்துரும். பேசாம குடிச்சிடலாம்.' என்று கூறி கொண்டவள் வேகமாக காபி கப்பை கையில் எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தாள்.
'என்ன தான் நடக்குது இங்க? வெளிய ஓடலாம்னா கதவு திறக்காது. ' என்று யோசித்தபடியே காப்பியை வாயில் வைக்க போக, அவளின் அலைபேசி அடிக்கவும் காபியின் சூடு அவளின் மேல் இதழை பதம் பார்த்தது.
'அய்யோ! நல்லா சுட்டிருச்சே. சே யாரு இந்த நேரத்துல?' என்று திட்டிக்கொண்டே எடுத்து பார்த்தாள் முகம் வியர்த்து கொட்ட ஆரம்பித்தது. சுற்றி முற்றி பார்த்தாள்.
'எடுக்கலாமா வேண்டாமா? நேத்தே பிடுங்கி ஓடச்சிடுச்சு. இப்போ எடுத்தா என்ன ஆகும்?' யோசித்தபடி பயத்தோடு மெல்ல ஆன் செய்து காதுக்கு வைத்தாள்.
எதிர் முனையில்,
"ஏய்! அறிவில்லையா உனக்கு? எத்தனை தடவை போன் பண்றது? போனே போக மாட்டேங்குது? என்ன தான் உன் பிரச்சனை? போன எடுக்க கூடவா கஷ்டமா இருக்கு. நீ போன் எடுக்கலைன்னு எங்கம்மாகிட்ட உங்கம்மா சொல்லி எங்கம்மா போன் செஞ்சு பாரு நேரா பொய் பார்த்துட்டு வான்னு என் உயிரை எடுக்கிறாங்க. எனக்கு வேரா வேலையே இல்லையா? இருபத்தி நாலு மணி நேரமும் உங்க பின்னாடியேவா அலைய முடியும்? நல்லா வந்து வாச்சிங்க எனக்குன்னு.. சே!" என்று நிறுத்த விழிகளின் ஓரத்தில் கண்ணீர் முட்டிகொண்டு நின்றது அவளுக்கு.
அமைதியாய் பதில் ஏதும் கூறாமல் இவளும் நிற்க, "வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருக்க? இவ்ளோ பேசுறேனே... உன்னை என் தலைல கட்டிவச்சு.. ஏன் தான் இப்படியிருக்கியோ? " என்றான்.
"நீங்க தானே என்னை பிடிச்சிருக்குன்னு வந்து கேட்டிங்க? இப்போ இவ்ளோ திட்றுங்க?" என்றாள் கோபம் வந்து.
"ஆமா நான் தான் உன்னை பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன். அதுக்காக எப்போ பாரு உன்னை ஒரு சுமையா என்னால சுமந்திட்டு இருக்க முடியாது. உன்னை பார்த்துக்க நீ முதல்ல தெரிஞ்சுக்க. உனக்கு நான் என்ன பாடி கார்டா? எப்போ பாரு உங்க வீட்ல என் பொண்ணு போனே எடுக்கலை, பேசவே இல்லை, அது இது கொஞ்சம் பாருங்கன்னு எங்கம்மாகிட்ட சொல்றது எங்கம்மா என் உயிரை எடுக்கிறது. உன்னால தனியா சமாளிக்க முடியலைன்னா நீ எதுக்கு இங்க இருக்க? உங்க ஊருக்கு போய் உங்க அம்மா அப்பா கூடவே கல்யாணம் வரைக்கும் இருக்க வேண்டியது தானே? கல்யாணத்துக்கு அப்புறமும் நீ இப்படியே இருந்தா ரொம்ப கஷ்டமடி பார்த்துக்க" என்றான் எரிச்சலாக.
அவனின் ஒவ்வொரு வார்த்தையும் அவளின் சுய மரியாதையை தாக்கியது. பெண் என்றாலே சுமைன்னு நினைக்கிறான் என்று கோபம் தலைக்கேற இதுவரை வாயே திறக்காதவள் முதன் முதலாக பேச ஆரம்பித்தாள்.
"ஹலோ இங்க பாருங்க என்ன கொஞ்சம் விட்டா ஓவரா பேசிட்டு இருக்கீங்க? எனக்கு பயமா இருக்குன்னு நான் சொன்னேனா? என்னால என்னை பார்த்துக்க முடியாது ப்ளீஸ் என்னை பார்த்துக்கோங்கன்னு உங்ககிட்ட உதவி கேட்டு வந்து நின்னேனா? என்னால சமாளிக்க முடியாம திணறுகிறேன்னு சொன்னேனா? தேவையில்லாதத்தை பேசாதிங்க. இனி உங்களுக்கோ உங்க வீட்டுக்கோ என் வீட்ல இருந்து ஒரு போன் கூட வராது. நமக்கு நிச்சயம் முடிஞ்சு இரண்டு மாசம் தான் ஆகுது. அதுக்கு முன்னாடியும் நீங்க இங்க தான் இருந்திங்க. நானும் இரண்டு வருஷமா இங்க தான் யார் உதவியும் இல்லாம இருக்கேன். என்னை பார்த்துக்க எனக்கு தெரியும். நான் யாருக்கும் என்னைக்கும் சுமையாய் இருக்க மாட்டேன். என் அப்பா அம்மாவோட விருப்பதுக்காக தான் கல்யாணம் செஞ்சுகவே சம்மதிச்சேன். ஆனா அது தப்போன்னு இப்போ நினைக்கிறேன். இதை பத்தி நான் யோசிச்சி எங்க அம்மா அப்பாகிட்ட பேசறேன். உங்க வீட்டுக்கு தகவல் வரும்." என்றாள் அழுகையை நிறுத்தி கணீரென்ற குரலில்.
"என்ன பேசிட்டு வீட்ல சொல்லணும்?" என்றான் தடுமாற்றமாய்.
"எதுவுமே நடக்கிறதுக்கு முன்னாடி தான் யோசிக்க முடியும். உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் சரி வருமான்னு எனக்கு குழப்பமா இருக்கு. அதை தான் சொன்னேன். சரி எனக்கு நேரமாகுது. நான் வேலைக்கு கிளம்பனும்" என்று அவன் மீண்டும் பேசுவதற்கு முன் போனை கட் செய்தாள் தாரணி.
மூச்சுவிடாமல் பேசி முடித்தவள் போனை வைத்து விட்ட பின்னும் உடலோடு உள்ளமும் நடுங்கியது.
கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
"எனக்கு மட்டும் ஏன் இப்படி வரிசையா ஏதாவது ஒன்னு நடந்துட்டே இருக்கு. நான் யாருக்கும் எந்த தீங்கும் நினைக்கலையே? " என்று புலம்பியபடி சுவரோடு சரிந்து கீழே அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.
அவளின் துன்பங்கள் அவள் மனக்கண்முன் வரிசையாய் வந்து போக அழுதும் துக்கம் தொண்டையை விட்டு நீங்காமல் இருந்தது.
மீண்டும் அலைபேசி அடிக்க, யாரென்று தெரியும் எடுக்காமல் இருந்தாள்.
அதுவும் விடாமல் மீண்டும் மீண்டும் அடித்தது.
மீண்டும் அடிக்கவும் எடுத்து எதுவும் பேசாமல் இருந்தாள்.
"இப்போ என்ன சொல்லிட்டேன்னு இவ்ளோ கோபம் உனக்கு? வேற ஏதோ டென்சன் அதை உன்மேல் காட்டிட்டேன். அதுக்குள்ள என்னென்னவோ பேசுற? சாரி நான் பேசினது தப்பு தான். கோபித்துக்கொள்ளாதே" என்றான் சற்று குழைவான குரலில்.
அவன் எவ்வளவு பேசினாலும் இவளின் மனம் இறங்கும் நிலையில் இல்லை. இது இன்று மட்டும் நடந்திருந்தால் விட்டு விட்டிருப்பாள்.. இவர்களின் திருமணம் நிச்சயிக்க பட்ட இந்த இரண்டு மாதங்களாகவே எப்பொழுது பேசினாலும் சலித்து கொள்வது, இவளை மட்டம் தட்டுவது என்றால் இவனுக்கு இனிப்பு தின்பது போல் வார்த்தைகளை அள்ளி வீசுவான். இவளும் இன்று வரை எதுவும் பேசியதே இல்லை. தன் பெற்றோர்களுக்காக பொறுத்து கொண்டிருந்தாள்.
ஆனால் இன்றோ அவனின் வார்த்தைகள் மிகவே எல்லை மீறிவிட்டன.
இவளின் குடும்பம் தான் மதன் மட்டும் தான் தன் வீட்டுக்கு மருமகன் என்று தூங்கிக்கொண்டிருந்தது போல் பேசி கொண்டிருந்தான்.
ஆறு மாதங்களாக தாரணி படும் நரக வேதனை யாரும் அறிய மாட்டார்கள்.
"எங்கண்ணன் இருந்திருந்தா யாராவது என்னை இப்படி பேச முடியுமா? பேச தான் விட்டிருப்பானா? எல்லாம் என் நேரம்" என்று மனதினுள் புலம்பி கொண்டாள்.
"இவ்ளோ தூரம் சாரி கேட்கிறேன் உனக்கு என்னை பார்த்தால் பாவமாக இல்லையா?" என்று பரிதாபமாக கேட்கவும்.
"எதற்கு மன்னிப்பெல்லாம் இனி இப்படி பேசாதீர்கள்" என்றாள் அமைதியாக உள்ளத்தில் உலை கொதித்தாலும்.
"கண்டிப்பா இனி அப்படி பேச மாட்டேன்" என்றான் சிறிய குரலில்.
மதனின் குரலில் வருத்தம் சிறிதும் தெரியவில்லை. மாறாக இப்பொழுது இந்த பிரச்சனையை தீர்த்தால் போதும் என்பது போல் தோன்றியது.
"சரி இன்னைக்கு மீட் பண்ணலாமா? உன்னை பார்க்கணும்" என்றான் மதன் மெதுவாக.
சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருந்தவள்.
"ஈவ்னிங் பார்க்கலாம்" என்றாள் தன் வாழ்க்கை இதற்கு பிறகு இது போள் இருக்க போவதில்லை என்பது தெரியாமல்.
**********
:
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top