💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச-01
வேலை முடிந்து இரவு வீட்டிற்கு வரும்பொழுது மணி பதினொன்றை கடந்திருந்தது.
வீட்டிற்குள் செல்லவே பயந்தவள் மெல்ல அடி மேல் அடி எடுத்து வைத்து நடுங்கும் கரத்துடன் கதவை திறந்தாள் தாரணி.
காரணம் இரண்டு நாட்களாக தன் வீட்டினுள் ஏதோ ஒரு மாற்றத்தை உணருகிறாள். என்னவென்று தெளிவாக கூற தெரியவில்லை. ஆனால் தன்னை யாரோ பார்த்துக்கொண்டே இருப்பது போலவும் சில நேரங்களில் தன் அருகே யாரோ இருப்பதை போன்று தோன்றும். மிக வித்யாசமான குளிர்ந்த நிலை உருவாகும். ஆனால் தாரிணிக்கு பேச நா மட்டும் எழாது.
இன்றும் அப்படி தான் வீட்டிற்க்கு வந்துவிட்டாள் இருந்தும் உள்ளே செல்ல தயக்கமாகவும் பயமாகவும் இருந்தது.
ஒர விழியால் தன் வீட்டின் வெளிப்புறத்தை ஒவ்வொரு அங்குளலும் அளந்தவள் உள்ளே நுழைந்து கரத்தில் இருந்த சாவியை ஆணியில் மாட்டிவிட்டு பூட்டை அங்கிருந்த செல்பில் வைத்தாள்.
ஏற்கனவே வேலை மிகுதியில் மிகவும் சோர்வாக இருக்கவும் இப்பொழுது பயத்தில் மேலும் வியர்த்து கொட்டி தொப்பலாக நனைந்திருந்தாள்.
திடீரென்று அவளை சுற்றி சில்லென மிக குளிர்ந்த காற்று வீச பயம் மேலோங்க அன்னார்ந்து மேலே பார்த்தாள்.
இவள் போடாமலே மின்விசிறி தானாய் சுழன்று கொண்டிருந்தது.
காற்றில் வியர்வை மறைவதற்கு பதில் மேலும் அரும்பியது.
'நாம பான் போடவே இல்லையே... எப்படி ஓடுது?' என்று தனக்குள் யோசித்தவளுக்கு பயத்தில் மயக்கம் வர, தொப்பென தரையில் அமர்ந்தாள்.
அவள் அமர்ந்த மறுநொடி அவளின் இதழருகே செம்பில் நீர் அந்தரத்தில் தொங்கியபடி நின்றது.
அவள் இதழ் திறவாமல் அதிர்ச்சியில் உறைந்திருக்க, செம்பு நீரோ பின்னும் முன்னும் சென்று சென்று வந்தது அவள் அருந்துவதற்கு.
ஒரு நொடி மிகவும் பயந்தவள் நீரை கடகடவென பருகினாள்.
மெதுவாக வாயிற் கதவு தானாக சாற்றி கொண்டு தாழிட்டது.
"யா...ரு...?" என்றாள் சற்று பயத்தை கொஞ்சம் மறைத்துவைத்து.
எந்த பதிலும் வராததால்.
"ப்ளீஸ் யாருன்னு சொல்லுங்க? எதுக்கு என் வீட்ல இருக்கீங்க? எனக்கு ரொம்ப பயமா இருக்கு வெளிய போய்டுங்க" என்றாள் விழிகளில் நீர் சுரக்க.
எந்த பதிலும் இல்லை. குளிரும் குறையவில்லை. தன்னை தவிர தன் கண்ணுக்கு புலப்படாமல் இங்கு யார் இருப்பது என்று தெரியாமல் மனதில் உதறல் நொடிக்கு நொடி அதிகமானது.
குண்டூசி விழுந்தாலும் கேட்கும் அளவு நிசப்தமாய் இருந்த அறையில் அவள் கைப்பையில் இருந்த அலைபேசி அடிக்க, "ஆஹ்ஹ்..." என்று அலரியவள் அடித்தது தன் அலைபேசித்தான் என்று கண்டு கொள்ளவே வெகு நேரம் பிடித்தது. அதற்குள் அலைபேசியின் அழைப்பு நின்றுவிட பெருமூச்சு விட்டாள்.
மீண்டும் சில நொடிகளில் அலைபேசி அடிக்க நடுங்கிய உள்ளத்தோடு எடுத்து பார்க்கவும் மீண்டும் உயிர் வந்தது போல் இருந்தது.
அலைபேசியின் அழைப்பை ஏற்க போகும் நேரம் ஏதோ ஒன்று அதை அசுர வேகத்தில் பிடுங்கி சுவற்றில் எறிய சுக்குநூறாக உடைந்தது அலைபேசி.
என்ன நடந்தது என்று புரிந்து கொள்ளவே சில நிமிடங்கள் கடந்தது தாரிணிக்கு.
'போன் எடுத்தோம் பேசலாம்னு ஆனா என்கிட்ட யாரோ பிடிங்கி எறிஞ்ச மாதிரி இருந்ததே... யாரு?' என்று தனக்குள் கேட்டுக்கொண்டே, வாசல் கதவை அடைந்து திறக்க முயற்சித்தாள்.
ஆனால்...
எவ்வளவு முயன்றும் அது திறக்கவில்லை.
'என்ன இது திறக்க மாட்டேங்குது?' என்று மீண்டும் சுற்றி முற்றி பார்த்தவளுக்கு விழிகள் இருட்டி கொண்டு வந்தது.
இதயம் திக் திக் என்று அடித்து கொள்ள மயங்கி சரிந்தாள்.
அரைமணி நேரம் கழித்து கண் விழித்தவள் தான் எங்கிருக்கிறோம் என்று விழிகளை சுழவிட, வேறு எங்கும் இல்லை தன் மெத்தையில் தான் படுத்திருக்கோம் என்பதை உணர்ந்து வெடுக்கென எழுந்தவள் மருண்ட விழிகளோடு சுவரோடு ஒண்டினாள்.
அவள் அருகில் மேசையிலிருந்த குவளை நீர் எதிர் சுவற்றில் வீசியடிக்க விரிந்த விழிகளோடு அங்கே பயத்தோடு பார்வையை நிலைக்க விட்டாள்.
நீர் கிழே விழுந்ததும் சுவற்றில் எழுத்துகள் தோன்ற ஆரம்பித்தன.
"தாரு! பயப்படாதே நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன். உன்னை காப்பதற்கே சுற்றி சுற்றி வருகிறேன். நீ மிக பெரிய ஆபத்தில் இருக்கிறாய்." என்ற எழுத்துக்களோடு நின்றுவிட, ஒன்றும் புரியாமல் இதை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் முழித்தாள் தாரணி.
"நீ... யா...ரு?" என்றாள் உள்ளே சென்ற பயந்த குரலில் திக்கி திணறி.
"நான் யாருன்னு சொன்னா உனக்கு புரியாது தெரியவும் தெரியாது. ஆனால் உனக்கு நல்லது செய்யவே வந்திருக்கிறேன். என்னை பற்றி யாரிடமும் கூற கூடாது..." என்று எழுத்துக்கள் நிற்க, "சொன்னா?" என்றாள் வாய் துடுக்காக...
அடுத்த நொடி அந்த சுவற்றில் அவளது வீடும் பெற்றோரும் தெரிந்தனர்.
"இவங்களுக்கு ஏதாவது ஆனா நான் பொறுப்பில்லை." என்றதும்.
"இல்ல இல்ல அவங்களுக்கு எதுவும் ஆகக்கூடாது. நான் யார்கிட்டயும் எதுவும் சொல்ல மாட்டேன்." என்றாள் அழுது கொண்டே.
"அப்போ நான் அவர்களையும் பாதுகாப்பேன்." என்று இருந்தது.
சட்டென அழுகை நிறுத்தி சுவற்றை பார்க்க, "என்ன?" என்று வர
"இல்ல ஒன்னுமில்ல... நான் " என்று நிறுத்தாமல் இழுக்க.
"நீ..?"
"நான் ரெஸ்ட் ரூம் போகணும்" என்றாள் தயக்கத்தோடு.
"போ"
"நா எப்படி... நீ..." என்று முடிக்காமல் பயத்தோடு இழுக்க.
"உன் அந்தரங்க வேலைகளை செய்யும் பொழுது நான் அங்கு இருக்க மாட்டேன். இது என் வாக்கு" என்று கிறுக்கல் வர.
"ஹ்ம்ம் " என்று எழுந்து வேகமாக செல்லும் முன் மீண்டும் சுவற்றில் "ஒரே ஒரு நிபந்தனை தான். எந்த காரணம் கொண்டும் யாரிடமும் கூற கூடாது. கூறினால் விளைவுகள் விபரீதமாகும்"
"ஹ்ம்ம்" என்று அகன்றாள்.
முகம் கழுவிய பின் அழுகையை அடக்க முடியாமல் அழுது தீர்த்தாள்.
கதவு தட்டப்படும் ஓசையில் மீண்டும் பயம் துளிர்க்க விழிகளை துடைத்து வெளியே வந்தாள்.
பழையபடி யாரும் இல்லை. அலுவலகத்தில் இன்று வேலை அதிகரித்து இருந்ததால் உணவு கூட உண்ணவில்லை. பசி ஒரு புறம் வயிற்றை கிள்ளியது. மறுபுறம் பயமும் துள்ளி குதித்து.
என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே நின்றாள்.
சில நொடிகள் கடந்த பின், சமயலறையில் இருந்து ஸ்பூன் விழும் சத்தம் கேட்க வேகமாக சமையலறைக்குள் பயந்தபடியே நுழைந்தாள்.
அங்கே அவள் வேலைக்கு நேரமாகிவிட்டது என்ற அவசரகதியில் காலையில் விட்டுசென்றது போல் குப்பையாக இல்லாமல் மிக சுத்தமாக இருந்தது.
மேடையின் மீது சுட சுட ஆவி பறக்க தோசைகளும் சட்னியும் தட்டில் வைக்க பட்டு இருந்தது.
சிறிது நேர தயக்கத்திற்கு பின் தட்டில் தோசையை வைத்து உண்ண தொடங்கினாள்.
மிகவும் சுவையாக இருந்தது.
பசி தீர வயிறு முட்ட உண்டு விட்டாள். அடுத்து என்ன உறக்கம் தான் என்று கிண்டலடித்தது மனம்.
'இங்க யார் இருக்கங்கன்னு தெரியலை. என்ன பண்றதுன்னும் தெரியலை. " என்று நகம் கடித்தபடி மெத்தையில் வந்து அமர்ந்தாள்.
இருக்கும் ஏதோ ஒன்றும் தன்னை எதுவும் செய்யவில்லை என்ற நிம்மதி அவளுக்கு. அது தான் உண்டதும் உறக்கம் என்று எண்ணம் தொடர காரணம் போல.
ஆனால் தன் வீட்டில் தனக்கே தெரியாமல் ஏதோ ஒரு ஆத்மா இருக்கிறது என்பதை நினைக்கையில் உறக்கம் வரவில்லை அவளுக்கு.
அவளின் பயம் உணர்ந்தது போல் "நேரம் அதிகமாகிறது. பயப்படாமல் உறங்கு." என்று மின் விசிறி லேசாக சுற்ற ஆரம்பித்தது.
நடப்பது நடக்கட்டும் என்று பெரு மூச்சு விட்டவள் மெல்ல தலையணையில் தலைசாய்த்து கணயர்ந்தாள்.
"உன் தலைக்கு கீழ் கத்தி நிற்கிறது தாரு. இதை நீ உணரும் முன் நீ கொலைசெய்ய படப்போகிறாய். உன்னை காக்க தான் புதைகுழியில் இருந்து ஆத்மாவாக உன்னை சுற்றி திரிகிறேன். இதனால் எனக்கென்ன லாபம் என்று நினைக்காதே. இரண்டு உயிர்கள் உன் உதவிக்கு காத்திருக்கின்றன. சீக்கிரம் புரிந்து கொள்வாய்." என்று ஒரு குரல் மட்டும் உறங்கும் அவளின் முன் மெதுவாய் ஒலித்தது.
ஒலிக்கும் ஆத்மாவின் குரலோ அதனுடைய வலியோ எதுவுமே அறியாமல் உறங்கி கொண்டிருந்தாள் தாரு என்கிற தாரணி.
விடிந்ததும் தூக்க கலக்கத்தில் எழுந்த தாரணி. எதுவும் புரியாமல் சிறிது நேரம் முழித்தாள்.
பின் மெல்ல இரவு நடந்தது ஒன்றன் பின் ஒன்றாக ஞாபகம் வர, பதறியடித்து கீழிறங்கி வெளியே கூடத்திற்கு ஓடி வந்தாள்.
அங்கே அவளின் பொருட்கள் அழகாக அடுக்கி வைக்க பட்டிருந்தது. அதனுடன் அவளின் அலைபேசியும் இருந்தது.
அதனை எடுத்து திருப்பி திருப்பி பார்த்தாள் நன்றாக இருந்தது.
என்ன நடந்தது என்று அவளால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.
'அப்போ நைட் கிழ விழுந்து பீஸ் பீஸா உடைஞ்சு போச்சே அது? ஒருவேளை எல்லாமே எனக்கு வந்த கனவா இருக்குமோ? கனவா தான் இருக்கும் இல்லன்னா உடைஞ்சு போச்சுன்னு நினைச்ச மொபைல் எப்படி நல்லா இருக்கும்?" என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
'சே ரொம்ப கெட்ட கனவு. ரொம்ப பயந்துட்டேன். நல்ல வேலை அது வெறும் கனவு தான். யார்கிட்டயாவது சொன்னா என்னை தான் பைத்தியம்னு சொல்வாங்க. சரி காப்பியாவது போட்டு குடிப்போம்' என்று பேசிக்கொண்டே சமையலறைக்குள் நுழைந்தாள்.
ஒரு நொடி அசைவற்று அங்கேயே திக்கபரம்மை பிடித்தது போல் நின்றுவிட்டாள்.
அங்கே...
-தொடரும்
*********
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top