9 எது எப்படி இருந்தாலும்...

9 எது எப்படி இருந்தாலும்...

நடராஜனின் குடலை கிழித்து மாலையாக போட்டுக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது ருத்ரனுக்கு. அவனுக்கு இருந்த கோபத்தில் அவன் அதை செய்து விடுவான் என்று தோன்றியது. இது எப்படி நடந்தது? அவன் தான் நடராஜன் மீதான நம்பிக்கையை உடைத்து விட்டானே? பிறகு அவனை மணந்து கொள்ள எப்படி சக்தி சம்மதித்தாள்? அவள் எப்படி அதை செய்யலாம்?

மகாதேவனுக்கு ஃபோன் செய்தான் ருத்ரன்.

"சொல்லுங்க சார்"

"நடராஜன் காலை உடைச்சிடுங்க"

"சரிங்க சார்"

"நீங்க அதை செய்யும் போது, சக்தி அவன் கூட இருக்கக் கூடாது"

"சரிங்க சார்"

சொல்லவொனா கோபத்துடன் அழைப்பை துண்டித்தான் ருத்ரன். இந்தப் பெண்கள், அறிவு கெட்டவர்கள். தேவையில்லாத சென்டிமென்ட்களில் தங்களை புகுத்திக் கொண்டு அவதிபடுபவர்கள், என்று எண்ணி பல்லை கடித்தான். அவனுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை, அப்படிப்பட்ட ஒரு சென்டிமென்ட் தான் அவனுடைய வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்று.

........

தன் அம்மா விசாலட்சியுடன் அமர்ந்திருந்தான் நடராஜன்.

"அம்மா, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கல்யாண வேலைகளை ஆரம்பிச்சு, சக்தி மனசு மாறுவதற்குள்ள இந்த கல்யாணத்தை முடிக்கணும்" என்றான் நட்ராஜ்.

"நான் அப்படி நடக்க விட்டுடுவேன்னு நினைக்கிறியா நீ?"

"நேத்து என்ன நடந்ததுன்னு நான் தான் உங்ககிட்ட சொன்னேனே"

"நீ ரொம்ப நல்ல வேலை செஞ்ச. அப்படித்தான் இவளை எல்லாம் கட்டுக்குள்ள கொண்டு வரணும். உண்மையை சொன்னா அவ ஒத்துக்க மாட்டா"

"அவ கல்யாணத்தை நிறுத்த சொன்னப்போ, நான் ரொம்ப பயந்தே போயிட்டேன்மா"

"அப்படி நடக்க விட நான் ஒன்னும் முட்டாள் இல்ல. இந்த வீட்டை பாரு... மாசமானா, எட்டாயிரம் ரூபாய் இதுக்கு தண்டமா வாடகை அழறோம். நீ மட்டும் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டா, அவ வீடு நம்ம கைக்கு வந்துடும். எழுபது லட்சம் பெறுமானம் உள்ள வீடு நமக்கு சொந்தமாகும். அது அனாமத்தா வேற ஒரு கைக்கு போக விட்டுடுவேனா நானு?"

"அது மட்டுமா, பேங்க்ல இருக்கிற  அவங்க அப்பாவோட இன்சூரன்ஸ் பணம் வந்தா நான் சொந்தமா தொழில் தொடங்குவேன்"

"நீ சொல்றதும் சரி தான். எத்தனை நாளைக்கு தான் நீயும் டிரைவராவே காலம் தள்றது?"

"அவளை கல்யாணம் பண்ணிக்கிற வரைக்கும் தான் இந்த கஷ்டமெல்லாம். அதுக்குப் பிறகு நானும் நாலு வண்டிக்கு ஓனர் ஆயிடுவேன் "

அம்மாவும், பிள்ளையும் திட்டமிட்டுக் கொண்டார்கள்.

........

மறுநாள் காலை

வழக்கம் போல் பால் வாங்க வந்தான் நடராஜன். அப்பொழுது, அவன் சில மனிதர்களால் சூழ்ந்து கொள்ள பட்டான். அவர்களைப் பார்த்த அவன், திகில் அடைந்தான். முகத்தை மறைத்தபடி முகமூடி அணிந்திருந்த பிறகும், அவர்கள் பார்க்க ரவுடிகளை போல் இருந்தார்கள். அவர்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பது அவர்களது சிவந்த கண்களை பார்த்த போதே புரிந்தது.

"என்னடா தொடை நடுங்கி... அன்னைக்கு அந்த பொண்ணை விட்டுட்டு ஓடிப் போனவன் தானே நீ?" என்றான் ஒருவன் நக்கலாய்.

"இப்ப என்னடா பண்ணப் போற பக்கி?" என்றான் மற்றொருவன்.

"உன்னை மாதிரி விளங்காதவன் எல்லாம் எந்த பொண்ணையும் கல்யாணம் பண்ணிக்க கூடாது"

மென்று முழுங்கினான் நடராஜன். அவனது உடல் வியர்வையில் நனைந்தது. அப்படி என்றால், இவர்கள்  அவனைத் தான் அன்று குறி வைத்தார்களா? அன்று முடிக்காமல் விட்ட வேலையை இன்று செய்யத்தான் வந்திருக்கிறார்களா?

"நீங்கெல்லாம் யாரு? உங்களுக்கு என்ன வேணும்?" என்றான் நடுங்கியபடி நடராஜன்.
 
"எங்களுக்கு உன் சாவு தாண்டா வேணும்" என்றான் மகாதேவன் கோபமாய்.

"நீங்கெல்லாம் யாருன்னு கூட எனக்கு தெரியாது. நான் ஏதாவது தப்பு பண்ணி இருந்தா என்னை மன்னிச்சிடுங்க"

"நீ உயிரோட இருக்கிறது தாண்டா நீ பண்ண பெரிய தப்பு" என்றான் உமாபதி.

"எதுக்குடா வீணா பேசிட்டு இருக்கீங்க? போட்டு தள்ளிட்டு போயிட்டே இருக்கலாம்" என்றான் மகாதேவன்.

அடுத்த நிமிடம் அவனை ஓங்கி ஒரு உதை விட்டான் உமாபதி. நடராஜன் சுருண்டு விழுந்தான்.

"ஒரு உதைக்கே தாங்கலடா மச்சான் இவன்" என்று சிரித்தான் மகாதேவன்.

கல்லில் மோதிகொண்ட, ரத்தம் வழியும் தன் உதட்டை தொட்டுப் பார்த்து அழுதான் நடராஜன்.

தான் கொண்டு வந்திருந்த கட்டையால் அவன் காலை உடைக்க ஓங்கினான் மகாதேவன். நடராஜனின் *இல்லாத* மூளை, துரிதமாய் வேலை செய்தது. அவர்களுக்கு பின்னால் பார்த்தபடி கத்தினான்,

"சக்தி சீக்கிரமா போலீசை கூப்பிடு, சக்தி..."

சக்தியின் பெயரை கேட்ட அவர்கள் உறைந்து நின்றார்கள். சக்தி இங்கு இருக்கிறாளா? ருத்ரன் கூறியது அவர்களுக்கு நினைவுக்கு வந்தது.

*நடராஜனை நீங்கள் தாக்கும் போது, அங்கு சக்தி இருக்கக் கூடாது* என்று அவன் கூறினான் அல்லவா?

தங்களை சமாளித்துக் கொண்டு அவர்கள் திரும்பினார்கள். ஆனால் அங்கு சக்தி இல்லை. நடராஜன் பொய் உரைத்தது அவர்களுக்கு புரிந்து போனது. கோபத்துடன் மீண்டும் நடராஜை நோக்கி அவர்கள் திரும்பினார்கள். ஆனால் அந்த சிறிய இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு, நடராஜன் எப்பொழுதோ ஓட துவங்கி விட்டிருந்தான். அவர்கள் அவனை துரத்திக் கொண்டு ஓடினார்கள். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஓடி மறைந்தான் நடராஜன்.

என்ன செய்வது என்று புரியாமல் எரிச்சலுடன் நின்றான் மகாதேவன். ருத்ரனுக்கு என்ன பதில் கூறுவது? அவர்கள் இப்படி அவனை தவற விட்டது தெரிந்தால் அவன் கொன்று விடுவானே...!

"மகா, ருத்ரன் சார்கிட்ட இப்போதைக்கு எதுவும் சொல்ல வேணாம். நம்ம இவனை முடிச்சுட்டு அதுக்கப்புறம் சொல்லிக்கலாம்" என்றான் உமாபதி.

சரி என்று தலையசைத்தான் மகாதேவன். அவர்கள் அந்த இடம் விட்டு அகன்றார்கள்.

......

வழக்கம் போல் இனிப்புகளை கொடுத்து விட்டுச் செல்ல தர்காவுக்கு வந்தாள் சக்தி. கடைகளுக்கு இனிப்புகளை கொடுத்துவிட்டு திரும்பிய சக்தி, அங்கு கைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த ருத்ரனை பார்த்ததும் மனமகிழ்ந்தாள். சக்தி வந்ததை அவன் கவனிக்கவில்லை என்று சக்தி நினைத்தாள். ஆனால் அப்படி நாம் நினைக்க காரணம் இல்லை. நமக்கு தெரியாதா ருத்ரனை பற்றி? நாம் நினைப்பது சரி தான் அவளை பார்க்காதது போல் அவன் அங்கு நின்றிருந்தான். அவனுக்கு முன்னால் வந்த சக்தி அவனை நோக்கி கையசைத்தாள். அவளைப் பார்த்து புருவம் உயர்த்தி சிரித்த ருத்ரன்,

"நான் அப்புறம் பேசுறேன்" என்று அழைப்பை துண்டித்தான்.

"ஹாய் சக்தி, எப்படி இருக்கீங்க?"

"நல்லா இருக்கேன்... உங்களால..."

"நான் செஞ்சது ஒரு சின்ன ஹெல்ப் தானே..."

"உங்களால தான் நான் நல்லா இருக்கேன்னு  நான் சொன்னதை நீங்க ஏத்துக்கிட்டு தான் ஆகணும்"

"சரி ஏத்துக்கிறேன்" என்று தன் கைகளை உயர்த்தி புன்னகைத்த  ருத்ரன்,

"நீங்க இங்க என்ன செய்றீங்க சக்தி?" என்றான்.

"நான் ஸ்வீட்ஸ் சப்ளை பண்ண வந்தேன்"

"ஸ்வீட்சா?" 

"அது தான் எங்க குடும்பத் தொழில்"

"ஓ அப்படியா? கொடுத்துடீங்களா?"

"கொடுத்துட்டேன்"

"உங்களுக்கு எதுவும் ஆட்சேபனை இல்லனா, உங்களை நான் ட்ராப் பண்ணட்டுமா?"

சரி என்று தலையசைத்தாள் சக்தி. அவளுக்கு கார் கதவை திறந்து விட்டான். அவள் அமர்ந்து கொள்ளவும் காரை ஸ்டார்ட் செய்தான் ருத்ரன். 

"தனியா இருக்க உங்களுக்கு கஷ்டமா இல்லையா சக்தி?" என்று பேச்சை தொடங்கினான்

அதற்கு பதில் கூறாமல் அமைதியாக இருந்தாள் சக்தி.

"நான் உங்களை கஷ்டப்படுத்தி இருந்தா மன்னிச்சிடுங்க சக்தி"

"இல்ல ருத்திரன் சார்"

தன் பெயரை அவள் கூறி கேட்ட ருத்ரன், புளிங்காகிதம் அடைந்தான்.

"தனியா இருக்கிறது ரொம்ப கஷ்டம் சார்" என்றாள்.

"அப்படின்னா, யாராவது ஒரு நல்லவனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கலாம் இல்லையா?"

மீண்டும் அமைதி காத்தாள் சக்தி.

"நான் வேணும்னா..."

அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள் சக்தி.

"இல்ல... நான் வேணும்னா மாப்பிள்ளை பாக்கட்டுமான்னு கேட்டேன்"

"என்னோட கல்யாணம் ஏற்கனவே நிச்சயம் ஆயிடுச்சு சார்"

"அப்படியா? யார் அந்த அதிர்ஷ்டசாலி? தன்னைவிட அதிகமா அவர் உங்க பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறவரா இருப்பான்னு நம்புறேன்..."

அவனுக்கு பதில் கூற முடியாமல் தவித்தாள் சக்தி. நடராஜன் பற்றி அவனிடம் எப்படி கூறுவது என்று அவளுக்கு புரியவில்லை. அவனுக்குத் தான் நடராஜை பற்றி நன்றாய் தெரியுமே...!

"உங்க பர்சனல் விஷயத்தை என்கிட்ட சொல்ல விருப்பம் இல்லனா பரவாயில்ல"

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல சார்... அவர் பெயர் நடராஜ். எங்க அப்பாவோட ஃப்ரெண்டோட மகன்"

"கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி, அன்னைக்கு உங்களை விட்டுட்டு ஓடிப் போனானே, அவனை மாதிரி அவர் இல்லைன்னு நிச்சயமா தெரிஞ்சிக்கங்க"

பெருமூச்சு விட்டாள் சக்தி.

"என்ன ஆச்சு சக்தி?"

"நான் கல்யாணம் பண்ணிக்க போறதே அவரைத் தான்"

"என்ன்னனது?" என்று பிரேக்கை அழுத்திவிட்டு, அதிர்ச்சியுடன் அவளை பார்த்தான் ருத்ரன்.

ஆமாம் என்று தலையசைத்தாள் சக்தி.

"இதை என்னால நம்ப முடியல. உங்களை சுயமரியாதை உள்ள பொண்ணுன்னு நெனச்சேன்" என்றான் வேண்டா வெறுப்பாக.

"நட்ராஜ் ரொம்ப நல்லவர்" என்றாள் சக்தி மெல்லிய குரலில்.

"தான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ண, ரவுடிங்க கிட்ட விட்டுட்டு ஓடி போற ஒருத்தன் நிச்சயம் நல்லவனா இருக்க முடியாது. அதை புரிஞ்சிக்கோங்க"

"என்னை எங்க வீட்டுல விட்ருங்க சார்" என்றாள் சக்தி.

கோபத்தில் நறநறவென பல்லை கடித்தான் ருத்ரன். நடராஜை பற்றி அவன் பேசுவது சக்திக்கு பிடிக்கவில்லை என்பது அவனுக்கு புரிந்தது.

"உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. தன்னோட வாழ்க்கையை தானே கெடுத்துக்கிற ஒரு பெண்ணை நான் இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்ல. நீங்க சொந்தமா தொழில் செஞ்சி, சொந்த கால்ல நிக்கிறவங்க... ஒரு குடும்பத்தை நடத்துற அளவுக்கு உங்களால சம்பாதிக்க முடியுது. அப்படி இருக்கும் போது, எதுக்காக போயும் போயும் அந்த..." முடிக்காமல் பாதியில் நிறுத்தினான் ருத்ரன் கோபமாய்.

காரை ஸ்டார்ட் செய்து அதை முடுக்கினான். அதன் பிறகு அவன் எதுவும் பேசவில்லை. சக்திக்கு வருத்தமாய் போனது.

"நீங்க என் கல்யாணத்துக்கு வருவீங்களா?" என்றாள் சக்தி.

பதில் கூறாமல் திடமாய் அவளை பார்த்தான் ருத்ரன்.

"நீங்க என் கல்யாணத்துக்கு வந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்"

"ஒரு நல்ல பொண்ணோட வாழ்க்கை கெட்டுப் போறதை பார்க்கிற அளவுக்கு எனக்கு கல் நெஞ்சு கிடையாது"

சக்தி வசிக்கும் பகுதிக்கு வந்ததும் காரை நிறுத்தினான் ருத்ரன். காரை விட்டு கீழே இறங்கிய சக்தி வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள். கண்ணிமைக்காமல் அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் ருத்ரன். அவனுக்கு ஒரு விஷயம் புரிந்து போனது. சக்தி இந்த திருமணத்தை நிறுத்த மாட்டாள். அவன் தான் அதை செய்தாக வேண்டும். அவன் அதை நிச்சயம் செய்வான்... எது எப்படி இருந்தாலும்...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top