8 சமாதானம்
8 சமாதானம்
சக்திக்கு உறக்கமே வரவில்லை. நடராஜன் மீது அவள் கொண்டிருந்த நம்பிக்கை அடியோடு அழிந்து விட்டிருந்தது. அவனை திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தையும் அது அழித்துவிட்டிருந்தது. அவளது முடிவை நடராஜனின் பெற்றோரிடம் எப்படி தெரிவிப்பது என்று அவளுக்கு புரியவில்லை. ஆனால், அதை எப்படியும் அவள் செய்து தான் ஆக வேண்டும். அவளைப் பற்றிய எண்ணமே சிறிதும் இல்லாத ஒருவனை எப்படி அவள் திருமணம் செய்து கொள்ள முடியும்? ஒருவேளை அந்த ரவுடிகள் அவளை கொன்றிருந்தால்? அல்லது கற்பழித்திருந்தால்? அப்படி நடந்திருந்தால் அவள் உயிரோடு இருந்திருப்பாளா?
மறுநாள் காலை, அவனது அப்பாவுக்கு ஃபோன் செய்து, இந்த திருமணத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதை கூறி விட முடிவு செய்தாள்.
மறுப்புறம், நடராஜ் பயத்தில் தவித்துக் கொண்டிருந்தான். என்ன நடந்தது என்பது மட்டும் தெரிந்தால், அவனது அப்பா அவனை கொன்றே விடுவார். ஆனால், தனது உயிருக்கு ஆபத்திருக்கும் நிலையில், எப்படி அவன் சக்தியை காப்பாற்றுவதை பற்றி யோசிக்க முடியும்? அவளைக் காப்பாற்றி இருந்தால், நிச்சயம் அந்த ரவுடிகள் அவனை கொன்றிருப்பார்கள். அவனுக்கு தெரியும், நிச்சயம் சக்தி அவன் மீது கோபமாகத்தான் இருப்பாள். அவளை சமாதானப்படுத்தும் வழியை அவன் கண்டுபிடித்தாக வேண்டும். எல்லாவற்றிற்கும் தன்னை தயார் செய்து கொண்டு, அவளுக்கு ஃபோன் செய்தான்.
தனது ஃபோனில் ஒளிர்ந்த அவனது பெயரை பார்த்து, கோபத்தில் பல்லை கடித்தாள் சக்தி. அந்த அழைப்பை அவள் ஏற்கவில்லை. ஆனால் நடராஜ் மறுபடியும் ஃபோன் செய்தான். எரிச்சலுடன் அந்த அழைப்பை ஏற்றாள் சக்தி.
"சக்தி..."
"உங்க கிட்ட பேச நான் விரும்பல... நான் இப்போ யார்கிட்டயும் பேசுற மனநிலையில் இல்ல"
"என்ன ஆச்சு சக்தி?"
"இப்போ எதுக்காக, என் மேல ரொம்ப அக்கறை இருக்கிற மாதிரி என்கிட்ட கேக்குறீங்க?"
"உன் மேல எனக்கு அக்கறை இருக்கு. என்னை நம்பு"
"அதனால தான் என்னை அந்த ரவுடிங்க கிட்ட விட்டுட்டு ஓடி போனீங்களா?"
"ஆளுங்கள கூட்டிட்டு வந்து உன்னை காப்பாத்த தான் நான் ஓடினேன். நான் ஒன்னும் சினிமா ஹீரோ இல்லையே... நான் தனியா அவங்க கிட்ட சண்டை போட முடியாது இல்ல?"
"அவங்க என்னை கெடுத்துட்டாங்க" என்று பொய் கூறினாள் சக்தி. அவளுக்கு தெரியும், அப்படி கூறினால், நடராஜன் அவளை நிச்சயம் திருமணம் செய்து கொள்ள மாட்டான் என்று.
"என்ன்ன்னனனது?" என்று அதிர்ச்சியில் கத்தினான் நடராஜ்.
"ஆமாம். அந்த ரவுடிங்க என்னை கெடுத்துட்டாங்க"
அமைதியானான் நட்ராஜ்.
"என்னை மறந்துட்டு, வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கங்க"
"என்னை மன்னிச்சிடு சக்தி"
"நீங்க கேக்குற மன்னிப்பு, இழந்த என் மானத்தை திரும்ப கொண்டு வராது"
"கொண்டு வரும்... நிச்சயமா கொண்டு வரும்... நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன். இப்பவும் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. ஏன்னா, உன்னை பத்தி எனக்கு தெரியும். நீ ரொம்ப நல்லவ."
வாயடைத்துப் போனாள் சக்தி. தான் கற்பழிக்கப்பட்டு இருந்தாலும் தன்னை திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறானா நடராஜ்? அவனுடைய காதல் அவ்வளவு ஆழமானதா?
"சக்தி...."
"ஆங்..."
"என்னை மன்னிச்சிடு சக்தி. தயவு செய்து என்னை மன்னிச்சிடு. என்னோட தப்பை சரி பண்ண எனக்கு ஒரே ஒரு சந்தர்ப்பம் குடு. உன்னை கல்யாணம் பண்ணிக்க எனக்கு அனுமதி குடு. உன்னுடைய இடத்துல என்னால வேற யாரையுமே யோசிச்சு பார்க்க முடியாது சக்தி"
"எனக்கு தலை வலிக்குது. நான் உங்ககிட்ட நாளைக்கு பேசுறேன்" அழைப்பை துண்டித்தாள் சக்தி.
வெற்றி புன்னகை பூத்தான் நடராஜன். சக்தியின் குரலில் இருந்த வித்தியாசத்தை அவன் நன்றாகவே உணர்ந்தான். ஆரம்பத்தில் அவள் பேசிய போது இருந்த கோபம், அவள் அழைப்பை துண்டித்த போது இல்லை. தன்னால் இயன்ற மட்டும் அவன் சக்தியை குழப்பி விட்டான். அவனுக்கு தெரியும், முடிவு அவனுக்கு சாதகமாகத் தான் இருக்கும் என்று. அவன் அவளை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினான்... ஏனென்றால் அவனுக்கு தெரியும், அவள் கற்பழிக்கப்படவில்லை என்று. அவன் அங்கிருந்து ஓடிப் போனானே தவிர, தூரத்தில் நின்று அங்கு நடப்பதை கவனித்துக் கொண்டுதான் இருந்தான். நல்ல வேளை, திடீரென்று அங்கு வந்த ஒருவன், அவளை காப்பாற்றி விட்டான். சக்தி சுத்தமாகத் தான் இருக்கிறாள். ஆனால், அவள் களங்கப்பட்ட பின்னும் நடராஜன் அவளை மணந்து கொண்டதாய் அவள் நினைத்துக் கொள்ளப் போகிறாள்.
நடராஜன் எண்ணியது சரி தான். சக்தி குழப்பத்தில் இருந்தாள். நடராஜன் கோழையாக இருந்தாலும் அவனது மனம் மிகப்பெரியது. சக்தி அப்படித் தான் நினைத்தாள்... இல்லை இல்லை, நடராஜன் அவளை அப்படி நினைக்கச் செய்தான்.
நடராஜனை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்காக சக்தி பொய் கூறினாள். ஆனால், அவள் கூறியது பொய் தான் என்று தெரிந்திருந்த நடராஜன், அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு விட்டான். எப்படியும் அவளை சம்மதிக்க வைத்து விட முடியும் என்ற எண்ணத்தில் தான் இருந்தான் நடராஜன். அவனது எண்ணத்தை சக்தி சுலபமாக்கி விட்டாள்.
.......
கட்டிலில் படித்துக் கொண்டு, விட்டத்தை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் ருத்ரன், தன் திட்டம் பலித்து விட்டதை எண்ணி. அவள் அறியாமலேயே சக்தி அவனிடம் நெருக்கமாய் வந்து விட்டாள். அவளது மனதில், அவனைப் பற்றிய நல்லெண்ணத்தை விதைத்தாகிவிட்டது. வெகு விரைவிலேயே அந்த விதை முளைக்கத் தொடங்கும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. அப்படி நடக்கும் போது, சக்தி, அவனுடன், அவன் வீட்டில் இருப்பாள்.
தன் கண்களை உயர்த்தி, கட்டிலின் தலைக்கட்டையில் இருந்த, சக்தி உபயோகப்படுத்திய சிறிய துண்டை பார்த்தான். அதை தன்னை நோக்கி இழுக்க, அது அவனது முகத்தில் வந்து விழுந்தது. அதை எடுக்கும் நோக்கம் அவனுக்கு இருக்கவில்லை. அதில் குறிப்பிட்டு கூறும் படி எந்த வாசனையும் வராவிட்டாலும், அவன் அதில் சக்தியின் இருப்பை உணர்ந்தான். அவனது இதழ்கள்
"சக்தி..." என்று அவள் பெயரை முணுமுணுத்தன.
காரைக்கால்
காரைக்காலில் தன் கால்களை பதித்தான் ருத்ரனின் இரட்டையனான சிவா. அவன் ஏன் அங்கு வந்தான் என்று நாம் கூற வேண்டிய அவசியம் இல்லை. அவன் ருத்ரனை தேடித்தான் அங்கு வந்திருந்தான். லிங்கேஸ்வரனின் உதவியுடன், தான் காரைக்காலில் இருப்பதாய், மருத்துவரின் கவனத்தை ருத்ரன் திசை திருப்பினான் அல்லவா? அதை ருத்ரனை சேர்ந்தவர்கள் நம்பியதின் விளைவு தான், சிவாவின் காரைக்கால் வருகை. ருத்ரனை எப்படி கண்டுபிடிப்பது என்று புரியவில்லை சிவாவுக்கு ஏனென்றால் அவனது ஃபோனை அவனால் டிராக் செய்யவே முடியவில்லை. ஆனால் எப்படியும் அவன் ருத்ரனை கண்டுபிடித்தே தீர வேண்டும். என்ன காரணத்திற்காக ருத்ரன் காரைக்கால் வந்திருக்கிறான் என்று புரியவில்லை அவனுக்கு. ஒருவேளை, அவன் தேடி வந்த பெண் காரைக்கால் சம்பந்தப்பட்டவளாக இருப்பாளோ என்னவோ... எது எப்படி இருந்தாலும், ருத்ரனை தேடி கண்டுபிடித்தாக வேண்டும்.
மறுநாள் காலை
நடராஜனையும் அவனுடைய வார்த்தைகளையும் எண்ணியபடி தேநீர் பருகிக் கொண்டிருந்தாள் சக்தி. நடராஜன் குறுகிய மனப்பான்மை உள்ளவனாக இருப்பான் என்று அவள் இவ்வளவு நாளாய் நினைத்திருந்தாள். அவன் இவ்வளவு நல்ல மனம் கொண்டவனாக இருப்பான் என்று அவள் நினைக்கவில்லை. காலியான தேனீர் குவளையுடன், சமையலறைக்கு செல்லலாம் என்று எழுந்த அவள், தனது கைபேசி ஒலித்ததால் நின்றாள்.
அழைப்பை ஏற்ற அவள், நடராஜனின் பதட்டமான குரலைக் கேட்டு அவளும் பதட்டமானாள்.
"சக்தி..."
"என்ன ஆச்சு நடராஜ்?"
"அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக்..."
"அய்யய்யோ... எந்த ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கீங்க?"
"அம்மா இப்போ ஹாஸ்பிடல்ல இல்ல. நாங்க அவங்களை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டோம்"
"சரி, நான் உடனே வரேன்" அவள் அழைப்பை துண்டித்தாள்.
வெகு சொற்ப நேரம் எடுத்துக் கொண்டு, பரபரவென, தயாராகி, கதவை பூட்டிக் கொண்டு ஆட்டோ பிடித்து நட்ராஜ் வீட்டை நோக்கி விரைந்தாள் சக்தி. ஆட்டோவிற்கு பணம் கொடுத்து அனுப்பிவிட்டு நடராஜன் வீட்டிற்குள் நுழைந்தாள்.
அவளை பின்தொடர்ந்து வந்த உமாபதி, ருத்ரனுக்கு ஃபோன் செய்து விஷயத்தை கூறினான். சக்தி நடராஜன் வீட்டிற்கு வந்ததை தெரிந்து கொண்ட ருத்ரன், கோபத்தில் பல்லை கடித்தான். அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. நடராஜனனின் வீட்டில் என்ன நடக்கிறது என்பதும் தெரியவில்லை. எல்லாம் முடிந்து விட்டது என்று அவன் எண்ணியிருந்தானே... இப்போது எதற்காக சக்தி அவனது வீட்டிற்கு சென்றிருக்கிறாள்? ருத்ரன் தவித்துப் போனான்.
அதே நேரம், நடராஜனின் வீட்டின் மற்றொரு புறத்தில், துப்பறிவாளன் சந்திரசேகரனின் உதவியாளனான கைலாஷ், அந்த வீட்டில் நடப்பதை நோட்டமிட்டு கொண்டிருந்தான்.
வீட்டிற்குள் நுழைந்த சக்தி, நடராஜனின் அம்மா விசாலாட்சி கலைத்துப் போன முகத்துடன் கட்டிலில் படுத்திருப்பதை கண்டாள்.
"என்ன ஆச்சு ஆன்ட்டி?" என்றாள் சக்தி கவலையுடன்.
"என்னன்னே தெரியலம்மா... ஒருவேளை, கடவுள் என்னை சொர்க்கத்துக்கு வர சொல்லி கூப்பிடுறாறோ என்னவோ..." என்றபடி மூச்சு விடவே சிரமப்பட்டார்.
"அப்படியெல்லாம் சொல்லாதீங்க ஆன்ட்டி..."
"நான் என்னை பத்தி கவலைப்படல. நான் கண்ணை மூடறதுக்குள்ள, நீ இந்த வீட்டுக்கு மருமகளா வர்றத பார்த்துட்டு நான் சாகணும். அவ்வளவு தான் எனக்கு வேணும்" என்றார்.
"இங்க கவலைப்படாதீங்க மா. நானும் அப்பாவும் கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாட்டை எல்லாம் செய்றோம். உங்க விருப்பப்படியே சீக்கிரம் சக்தி நம்ம வீட்டுக்கு மருமகளா வந்துடுவா" என்றான் நடராஜன், சக்தியின் முகத்தை கவனித்தபடி.
"உனக்கு இதுல விருப்பம் தானே மா?" என்று இரும்பினார் விசாலாட்சி.
மேஜையின் மீது இருந்த தண்ணீரை எடுத்து அவரிடம் நீட்டினாள் சக்தி.
"சக்தி, உன்னோட சம்மதம் தான் அம்மாவை குணமாக்க போற மருந்து. தயவு செய்து கல்யாணத்துக்கு நீ தயார்னு சொல்லு" என்று கெஞ்சினான் நடராஜன்.
விசாலாட்சியை பார்த்து சம்மதம் என்று தலையசைத்தாள் சக்தி.
"தேங்க்யூ சக்தி... நீ எங்களுக்கு ரொம்ப பெரிய உபகாரம் பண்ணி இருக்க. வர்ற ஞாயிற்றுக்கிழமை நம்ம கல்யாணம். நான் கல்யாண வேலையை ஆரம்பிக்கிறேன். சரியா?"
மறுபடியும், சரி என்று தலையசைத்தாள் சக்தி.
ருத்ரனுக்கு ஃபோன் செய்த கைலாஷ் அங்கு நடந்தவற்றை சுடச்சுட அவனுக்கு பரிமாறினான். அதை கேட்ட ருத்ரனின் நிலை என்னவாக இருக்கும் என்று கூற வேண்டிய அவசியமே இல்லை. அவனது ரத்தம் கொதித்தது... கண்கள் சிவந்தது... பற்களை அழுத்தமாய் கடித்தபடி கண்களை மூடி நின்றான் ருத்ரன்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top