7 மாறிப்போன திரைக்கதை

7 மாறிப்போன திரைக்கதை

தன்னையே ஆழமாய் பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதனை ஏறிட்டாள் சக்தி. அந்த மனிதன் யார் என்பது வாசகர்களுக்கு இந்த நேரம் புரிந்திருக்கும்.  ஆம், அவன், எது சரி, எது தவறு, என்று யோசிக்கக்கூடிய நிலையில் இல்லாத, நமது ஆன்டி-ஹீரோ ருத்ரன் தான்.

"சார் ப்ளீஸ், என்னை காப்பாத்துங்க. இவங்க என்கிட்ட தப்பா நடந்துக்க பாக்குறாங்க" என்றாள் ருத்ரனிடம் சக்தி.

அவளது நடுக்கம் நிறைந்த குரல், அங்கு, கையில் கத்தியுடன் நின்றிருந்த உமாபதியையும், அவனது நண்பனையும் நோக்கி ருத்ரனின் பார்வையை திருப்ப செய்தது.

அதே நேரம், வேறு சிலர், இருசக்கர வாகனங்களில் அங்கு வந்தனர். அவர்கள் வண்டியை விட்டு இறங்கி, ருத்ரனுக்கும்,  உமாபதிக்கும் நடுவில் நின்றனர். அவர்களைப் பார்த்த உமாபதி உஷாரானான்.

"இங்க பாரு பைரவா, இந்த விஷயத்துல நீ வராத" என்றான் உமாபதி.

"நீயும், மகாவும் எனக்கு என்ன பண்ணீங்கன்னு நான் இன்னும் மறக்கல. நீ சொன்னா நான் இங்கிருந்து போயிடுவேனா? அதுவும் இப்படி ஒரு டக்கரான குட்டியை விட்டுட்டு?" என்றான் சக்தியை பார்த்து.

ருத்ரனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. பதட்டத்துடன் ருத்ரனை ஏறிட்டான் உமாபதி. வந்திருப்பவர்கள் யார் என்று யூகித்துக் கொண்டான் ருத்ரன். இவர்கள் மகாதேவனின் எதிர் அணியினர். அவர்களுக்குள் ஏற்கனவே ஏதோ பிரச்சனை இருக்கிறது. தான் எழுதி இயக்கிய நாடகத்தின் திரைக்கதை மாறிப்போன விஷயம் ருத்ரனுக்கு புரிந்தது. தான் உண்மையிலேயே சக்திக்காக தான் சண்டையிட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டு விட்டது என்ற உண்மையும் அவனுக்கு உறைத்தது. பைரவனுடன் வந்திருந்தவர்கள் நால்வர். உமாபதியுடன் இருந்ததோ ஒரே ஒருவன்.

சக்தியை நோக்கி ஓரடி எடுத்து வைத்தான் பைரவன். அடுத்த நொடி, அவன் உடல் அதிரும் வண்ணம், அவன் முகத்தில் ஒரு குத்து விட்டான் ருத்ரன். அதை எதிர்பார்க்காத அவன், நிலை தடுமாறி தரையில் விழுந்தான். அவனுடன் வந்த மற்ற நால்வரும் ருத்ரனின் மீது பாய்ந்தார்கள். வெறிபிடித்த பைத்தியக்காரன் மீது அவர்கள் பாய்ந்தால் அவர்கள் நிலை என்னவாகும்? அவர்கள் வெளுத்து வாங்கப்பட்டார்கள். அவர்களை குமுறி எடுத்து விட்டான் ருத்ரன். அதைக் கண்ட உமாபதியும் அவனது நண்பனும் கூட மிரண்டு போனார்கள். அடிதடியை தொழிலாக கொண்ட அவர்களுக்கு தெரியாதா, ஒரே நேரத்தில் நான்கு ரவுடிகளை சமாளிப்பது என்பது சாமானிய விஷயம் இல்ல என்பது? நடந்த சண்டையில் ருத்ரனுக்கும் அடி விழுந்தது. அவனது கன்னத்தில் கிழிசல் ஏற்பட்டு இரத்தம் பெருகியது. ஆனால் அதெல்லாம் அவனை தடுத்து நிறுத்தி விட முடியவில்லை. சக்தியை தொட நினைத்த ஒருவனை அவன் விட்டு விடுவானா என்ன? அடி கொடுத்தே பழக்கப்பட்ட அந்த ரவுடிகளால், ருத்ரனின் பலம் வாய்ந்த குத்துகளுக்கு முன் நிற்கவே முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவர்கள் அங்கிருந்து ஓடத் தொடங்கினார்கள். அவர்களுடன் சேர்ந்து ஓடுமாறு உமாபதிக்கும் சைகை செய்தான் ருத்ரன்.

"ஏய் பொண்ணு, தன்னைப் பத்தி  கவலைப்படாம உன்னை காப்பாத்தின இப்படிப்பட்ட ஒரு ஆளை கல்யாணம் பண்ணிக்கோ" என்றான் உமாபதி, ஓடியபடி.

அது ருத்ரனின் முகத்தில் புன்னகையை கொண்டு வந்தது. ஆனால் சக்திக்கோ சங்கடத்தை வார்த்தது. அந்த ரவுடி கூறியது போன்ற ஒருவன், நடராஜன் இல்லை என்ற எதார்த்தம் அவளை சுட்டது. சக்தியை நோக்கி திரும்பினான் ருத்ரன். அப்பொழுது தான், அவன் கன்னத்தில் வழிந்த ரத்தத்தை கவனித்தாள் அவள்.

"உங்களுக்கு அடிபட்டிருக்கு சார்" என்றாள் படபடப்புடன்.

"பரவாயில்ல" என்று புன்னகைத்தான் ருத்ரன்.

யார் என்றே தெரியாத அவன் மீது பரிதாபம் கொண்டாள் சக்தி.

"நான் உங்களை ட்ராப் பண்ணட்டுமா?" என்றான்.

"பரவாயில்லை சார். நான் ஒரு ஆட்டோ பிடிச்சி போய்கிறேன்" என்றாள் தயக்கத்துடன்.

"அங்க பாருங்க" என்று ஒரு பகுதியை சுட்டி காட்டினான் ருத்ரன்.

அங்கு உமாபதியும் அவனது நண்பனும் அவர்களைப் பார்த்தபடி நின்றிருந்தார்கள்.

"நான் இங்கிருந்து போகணும்னு தான் அவங்க காத்திருக்காங்க. இந்த மழை நேரத்துல உங்களுக்கு ஆட்டோ கிடைக்கலைன்னா என்ன செய்வீங்க? ஏன் ரிஸ்க் எடுக்குறீங்க?" அதை ருத்ரன் கேட்ட விதமும், அவனது மென்மையான குரலும் அவளை யோசிக்கச் செய்தது.

"அது வந்து சார்..."

"உங்க மேலே தப்பில்ல. இந்த சந்தர்ப்பத்துல, உங்களுக்கு யாரை பார்த்தாலும் சந்தேகமா தான் இருக்கும்"

"இல்ல சார். நீங்க என்னை ரௌடிங்க கிட்ட இருந்து காப்பாத்தியிருக்கீங்க. நான் உங்களை சந்தேகப்படல"

"அப்படின்னா என் கூட வாங்க"

சரி என்று தலையசைத்தாள் சக்தி.

தன் காரை நோக்கி நடந்தான் ருத்ரன். அவனை பின்தொடர்ந்த சக்தி, அந்த ரவுடிகள் இன்னும் அங்கு தான் இருக்கிறார்களா என்பதை திரும்பிப் பார்த்து தெரிந்து கொண்டாள். அவர்கள் இன்னும் அங்கேயே நின்று அவர்களை கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவளுக்காக கார்க்கதவை திறந்து விட்டான் ருத்ரன். அவள் ஏறி அமர்ந்ததும், கதவை சாத்திவிட்டு, தன் இருக்கையை நோக்கி நடந்தான். காரில் ஏறுவதற்கு முன், இன்னும் அங்கு காத்திருந்த  உமாபதியை ஒரு பார்வை பார்த்தான். பிறகு காரை கிளப்பிக்கொண்டு அந்த இடம் விட்டு அகன்றான்.

"இவரு, பைரவன் ஆளுங்க கூட சண்டை போட்டாருன்னு என்னால நம்ப முடியல" என்றான் உமாபதி.

"ஆமா மாப்ள, நான் இந்த ஆளு சும்மா உதாரு விடுறவறா இருப்பாரு, அதனால தான் அடியாள் கேக்கிறாருன்னு நினைச்சேன். ஆனா இந்த ஆளு உண்மையிலேயே ஹீரோ தான்..."

"ஆன்டி-ஹீரோ" என்று சிரித்தான் உமாபதி.

காரில்...

டேஷ் போர்டை திறந்து, அதிலிருந்து ஒரு சிறிய துண்டை எடுத்து, சக்தியிடம் கொடுத்தான் ருத்ரன். அவனிடமிருந்து அதைப் பெற்றுக் கொண்ட சக்தி, தன் முகத்தை துடைத்துக் கொண்டாள்.

"எதுக்காக தனியா வெளியில வந்தீங்க? இந்த நேரத்துல தனியா  வர்றது சேஃப்டி இல்லைன்னு உங்களுக்கு தெரியாதா?" என்றான் அக்கறையாய்.

சக்தி அதற்கு பதில் கூறவில்லை. நடராஜை நினைத்த போது, அவளுக்கு அவமானமாய் இருந்தது.

"அது சரி, கத்தியை பார்த்த உடனே ஓடிப் போனாரே... அவரு யாரு?" என்றான்.

மென்று விழுங்கினாள் சக்தி. ருத்ரன் நடராஜை கவனிக்கவில்லை என்று நினைத்திருந்தாள் அவள்.

"யாரையாவது நம்பி வெளியில வர்றதுக்கு முன்னாடி, அவங்க நம்பிக்கையானவங்க தானான்னு தெரிஞ்சுக்கிட்டு வெளிய வாங்க. இவ்வளவு மோசமான ரவுடிங்க கிட்ட உங்களை எப்படி தனியா விட்டுட்டு அவர் ஓடிப் போகலாம்? நான் மட்டும் வராம போயிருந்தா என்ன ஆகியிருக்கும்?" என்றான்.

"இனிமே வரமாட்டேன்" சார் என்றாள்.

"குட்" புன்னகைத்தான் அவன்.

"நீங்க ஒரு டிடி இஞ்செக்ஷன் போட்டுக்கங்க சார்" என்றாள் சக்தி.

சரி என்று புன்னகையுடன் தலையசைத்தான்.

"சாரி சார். என்னால தான் உங்களுக்கு காயம் பட்டுடுச்சு"

*ஆமாம்... நான் உன்னால தான் காயப்பட்டிருக்கேன் சக்தி. அந்த தொடைநடுங்கி நடராஜன் தூக்கி எறிஞ்சிட்டு, என்கிட்ட வந்துடு. என்னோட காயம் முழுமையா குணமாயிடும்* என்று மனதிற்குள் எண்ணிய அவன்,

"எனக்கு ஒன்னும் இல்ல. நான் நல்லா இருக்கேன்" என்று புன்னகைத்தான்.

ஏன் அவன் நன்றாய் இருக்க மாட்டான்? சக்தி தான் அவனுடன் இருக்கிறாளே...

சக்தி வசிக்கும் பகுதிக்கு அருகில் வந்தவுடன்,

"காரை இங்கேயே நிறுத்திடுங்க சார்" என்றாள் சக்தி.

"உங்க வீடு எங்க இருக்கு?" என்றான் அவனுக்கு தெரியும் என்பதை காட்டிக் கொள்ளாமல்.

"பக்கத்து தெருவுல இருக்கு சார்"

"நான் உங்க வீட்டிலேயே இறக்கி விட்டுடுறேனே"

"இல்ல சார். நான் தனியா இருக்கேன். என்னை யார் கூடவாவது பார்த்தா, தப்பா பேசுவாங்க, சார்"

"உங்களுக்கு யாரும் இல்லையா?"

"இல்ல சார். எங்க அம்மாவும் அப்பாவும் கொஞ்ச நாளுக்கு முன்னாடி, ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க"

"ஐ அம் சாரி"

"பரவாயில்ல சார்"

"ஜாக்கிரதையா இருங்க"

"உங்க உதவிக்கு ரொம்ப நன்றி, சார்"

சக்தி, காரை விட்டு கீழே இறங்க முயன்றாள்.

"நான் உங்க பேரை தெரிஞ்சுக்கலாமா?" என்றான் ருத்ரன், அவள் பெயரை, அவள் வாயால் கேட்பதற்காக.

"சக்தி..." அவள் கூற,

ஏதோ ஒரு *சக்தி* தன் உடலில் பாய்ந்ததைப் போல் உணர்ந்தான் ருத்ரன்.

"நல்ல பேரு... என் பேரு ருத்ரன்" என்றான் ருத்ரன்.

"சரிங்க சார்... நான் கிளம்புறேன்" காரை விட்டு இறங்கிச் சென்றாள் அவள்.

சற்று நேரம் காத்திருந்து விட்டு, காரை விட்டு இறங்கிய அவன், தேவையான இடைவெளியுடன் அவளை பின்தொடர்ந்து சென்றான். சக்தியின் மீது அவனுக்கு அக்கறை இருந்தது என்று கூற தேவையில்லை. அவள் நல்லபடியாய் வீட்டிற்கு சென்று சேர்ந்து விட்டாளா என்று தெரிந்து கொள்ளத்தான் அவள் பின்னால் சென்றான். அவள் வீட்டின் பூட்டை திறப்பதை பார்த்து, நிம்மதியடைந்து திரும்பி சென்றான். வீட்டினுள் சென்று கதவை சாத்திய சக்தி, ருத்ரன் செல்வதை பார்த்து ஆச்சரியம் அடைந்தாள், அவன் எதற்காக அவளை பின்தொடர்ந்து வந்திருக்க வேண்டும் என்பதை ஓரளவு அவள் புரிந்து கொண்டதால். இவர் எவ்வளவு நல்லவராக இருக்கிறார்... இப்படிப்பட்ட மக்கள் இன்னும் சிலர் இருப்பதால் தான் நாட்டில் மழை பெய்கிறது, என்று எண்ணினாள். அவள் மனதில் தனக்கென ஒரு சிறிய இடத்தை பதிவு செய்திருந்தான் ருத்ரன்.

காருக்கு திரும்பி வந்த ருத்ரன், சக்தி அமர்ந்திருந்த இருக்கையை பார்த்து புன்னகைத்தான். அவள் தன் முகத்தை துடைத்த துண்டால்,  தன் முகத்தை மூடி, ஆழமாய் மூச்சை இழுத்தான். அதே துண்டால் புன்னகைத்தபடி தன் முகத்தை துடைத்தான். சக்தி, எப்பொழுது அவனுடையவளாக போகிறாளோ...!

அவனுக்கு உமாபதியின் நினைவு வரவே, அவனுக்கு ஃபோன் செய்தான்.

"ஹலோ சார்..."

"நம்மளை அட்டாக் பண்ணவங்க யாரு?"

"அவனுங்க எங்க எதிரிங்க சார்"

"அவங்களால சக்திக்கு எந்த பிரச்சனையும் வராம பாத்துக்கங்க"

"நாங்க பாத்துக்குறோம் சார். அவங்களை நாங்க 24 மணி நேரமும் கண்காணிச்சுக்கிட்டு தான் இருக்கோம்"

"நல்லது... நடந்த விஷயத்தை மகாதேவன் கிட்ட சொல்லிடுங்க"

"சரிங்க சார்"

அழைப்பை துண்டித்தான் ருத்ரன்.

.......

தனது ஈர உடைகளை மாற்றிக்கொண்ட சக்தி, காய்ந்த துண்டால் தலையை துவட்டினாள். நட்ராஜ் எப்படி அவளை விட்டு ஓடிப் போகலாம்? இப்படிப்பட்டவன், அவளை எப்படி வாழ்நாள் முழுவதும் காப்பாற்றப் போகிறான்? தன்னைத்தானே காத்துக் கொள்ள முடியாத ஒருவனை, எப்படி அவள் நம்புவது? நடராஜனின் செயலால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தாள் சக்தி. நடராஜன் இவ்வளவு பெரிய கோழையாக இருப்பான் என்று அவள் நினைக்கவில்லை. தனக்கு யாரும் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக, இப்படிப்பட்ட பயந்தாங்கொள்ளியை அவள் திருமணம் செய்து கொள்ளத் தான் வேண்டுமா? ஒருவேளை, ருத்ரன் மட்டும் சரியான நேரத்திற்கு வந்து உதவி இருக்காவிட்டால், அவள் கதி  என்ன ஆகி இருக்கும்? அவள் தன் உயிரையும், உயிருக்கு மேலானவற்றையும் இழந்திருப்பாள். இப்படிப்பட்ட உதவாக்கரையை திருமணம் செய்து கொள்வதால் என்ன பிரயோஜனம்? அவனைத் திருமணம் செய்து கொள்வதை விட தனியாய் வாழ்வது எவ்வளவோ மேல்.

தனக்கு நடராஜனுடன் நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்துவது என்ற முடிவுக்கு வந்தாள் சக்தி. ஆனால் அவளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை, அவளே எதிர்பாராத விதமாய், நடராஜன் காய் நகர்த்தப் போகிறான் என்று...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top