52 புதுவரவு

52 புதுவரவு

தங்கள் அறைக்கு வந்தாள் சக்தி. அவளை நோக்கி ஓடிவந்த ருத்ரன், அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.

"நீ என்னோட ஸ்வீட் ஹார்ட் சக்தி"

சக்தி புன்னகைக்க, அவள் கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதித்தான்.

"அப்படின்னா, இதெல்லாம் நீங்களும் சிவாவும் சேர்ந்து செஞ்ச வேலை தானா?"

"நீ என்ன நெனச்ச? உன்னை என்கிட்ட இருந்து பிரிக்க ஒருத்தர் முயற்சி செய்றார்னு தெரிஞ்ச பிறகு, நான் எப்படி அவ்வளவு கேஷுவலா இருந்திருக்க முடியுமா?" நியாயமான கேள்வியை கேட்டான் ருத்ரன்.

"உங்களால நிம்மதியா இருந்திருக்க முடியாது அப்படிங்கறத நான் ஒத்துக்குறேன். ஆனா அதே நேரம், நான் எவ்வளவு டென்ஷனா இருந்தேன் தெரியுமா? உங்க பிளானை என்கிட்ட சொல்லியிருந்தா நானும் நிம்மதியா இருந்திருப்பேனே..."

"ஆனா, என் பொண்டாட்டி எனக்காக மத்தவங்களை வெளுத்து வாங்குறதை, என்னால பார்க்க முடியாம போயிருக்குமே..." என்றான் குறிஞ்சிரிப்புடன்.

"உங்களை ஹாஸ்பிடலுக்கு கூட்டிக்கிட்டு போக, நான் தான் ஹாஸ்பிடல் ஸ்டாஃபை வர சொன்னேன்னு அவங்க சொன்ன போது, உங்களுக்கு என் மேல சந்தேகம் வரலையா?"

"ச்சே ச்சே மக்கு... எனக்கு என் மேலயே கூட சந்தேகம் வரும். ஆனா உன்னை எப்பவுமே நான் சந்தேகப்பட மாட்டேன். உன்னைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். அந்த கடவுளே நேரில் வந்து சொன்னா கூட நான் உன் மேல சந்தேகப்பட மாட்டேன்" என்றான் பெருமையுடன். அது சக்தியின் மனதை இளக்கி விட்டது.

"எனக்கு சிவா மேல சந்தேகம் வந்தது..."

"அந்த பைத்தியக்காரனுக்கு அது தேவை தான்" என்று சிரித்தான் ருத்ரன்.

"ஏன் அப்படி சொல்றீங்க?"

"நம்ம எங்க இருக்கோம்னு, அவன் தானே தேடி கண்டுபிடிச்சு வந்து போட்டு கொடுத்துட்டான்..."

"ஆனா அதுக்கு முன்னாடியே நம்ம இங்க வர்றதா முடிவு பண்ணி இருந்தோமே?"

"இங்க வர்றதும், வராம போறதும் நம்மளுடைய இஷ்டம். நம்ம தேவைப்பட்டா அதை மாத்தி இருந்திருக்கலாம். ஆனா அந்த மடையனால தான் நமக்கு வேற வழி இல்லாம போச்சு"

"இப்போ தான் எல்லாம் சரியாயிடுச்சே. அதுல வருத்தப்பட என்ன இருக்கு?"

"அதானே... என்னோட கோவில்பட்டி வீரலட்சுமி, எல்லார்கிட்டயும் எனக்காக சண்டை போட்டு என்னை ரொம்ப பெருமை பட வச்சிட்டா" சிரித்தபடி அவள் நெற்றியில் இதழ் ஒற்றினான்.

"அது என்னோட டியூட்டி... அதை நான் சந்தோஷம செய்வேன்" என்று அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.

"ஏய் பொண்டாட்டி..."

"ம்ம்ம்?"

"நான் செம மூட்ல இருக்கேன் தெரியுமா?"

"என்ன மூட்?"

"இப்படி எல்லாம் பத்தாம் பசலியா இருக்காத சக்தி. உன் புருஷன் என்னவெல்லாம் செய்வான்னு நீ நல்லா தெரிஞ்சு வச்சிருக்கணும்" லேசாய் அவள் காதை கடித்தான். கூச்சத்தில் நெளிந்த சக்தி,

"அது சரி... உங்க மூடுக்கு என்ன காரணம்?" என்றாள்.

"என் பொண்டாட்டியை ரசிக்கணும்னு தோணுது..."

"நீங்க தான் அதை எப்பவும் செஞ்சுகிட்டு இருக்கீங்களே..."

"இன்னைக்கு அது ரொம்ப ஸ்பெஷலா இருக்கும்" என்றான் அவளது காதில் ரகசியமாய்.

சக்தியின் கன்னங்கள் தக்காளியின் சிவப்பை கடன் வாங்கிக் கொண்டது.

ஆறு மாதங்களுக்குப் பிறகு,

ருத்ரன், தொடர்ச்சியாய் அலுவலகம் செல்ல துவங்கி விட்டான், என்ற போதிலும் அவனுக்கு எப்பொழுதெல்லாம் தோன்றுகிறதோ அப்பொழுதெல்லாம் அவன் விடுப்பு எடுக்கவும் யோசிக்கவில்லை.  அவனை யார் கேள்வி கேட்பது? இந்த ஆறு மாதத்தில், ருத்ரனை விட, சக்தி அவன் குடும்பத்தாருக்கு நெருக்கமாய் மாறிப் போனாள். அவன் தன் மனைவியிடம் மட்டுமே நெருக்கமாய் இருந்தால், மற்றவரிடம் எப்படி அவன் நெருக்கமாய் இருப்பான்? அவன் குடும்பத்தார் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. அவன் கொஞ்சம் கொஞ்சமாய் பழைய நிலைக்கு திரும்புவதை கண்டு அவர்கள் சந்தோஷம் தான் அடைந்தார்கள்.

இரண்டு மாதம் வரை அவனுடன் அலுவலகம் சென்ற சக்தி, அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதை குறைத்துக் கொண்டாள். ஆனால் அவன் வீடு திரும்பும் நேரம், சக்தி வீட்டில் இல்லை என்றால், வீட்டை இரண்டாக்கினான் ருத்ரன். அவள் எப்போதும் தன்னருகில் இருக்க வேண்டும் என்று எண்ணினான்.

அன்றும் அப்படித்தான் சக்தியை தேடியபடி வீட்டுக்குள் நுழைந்தான் ருத்ரன். தங்கள் அறையில் அவள் இல்லாததால் மீண்டும் தரைதளம் வந்தான். அவள் சமையலறையிலும் இல்லை, பூஜை அறையிலும் இல்லை. எங்கு சென்றாள்? அவன் வீட்டுக்கு வந்தால், அவளை தேடுவான் என்று அவளுக்கு தெரியாதா? நேராக பாட்டியின் அறைக்கு சென்றான்.

"பாட்டி, சக்தி எங்க?" அறையின் வாசலில் நின்றவாறு கேட்டான்.

"அவ துர்காவோட கோயிலுக்கு போயிருக்கா"

"எதுக்கு? கோவிலுக்கு போகணும்னு என்ன அவசியம் இருக்கு? நான் ஆஃபீஸ்ல இருந்து வருவேன்னு அவளுக்கு தெரியாதா?" என்றான் கடுகடுப்புடன்.

"நீ வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடி வந்துடுவேன்னு தான் சொல்லிட்டு போனா. ஏன்னு தெரியல இன்னும் வரல" அவனை சமாதானப்படுத்த முயன்றார் பாட்டி.

முனங்கியபடி தன் அறைக்கு சென்றான் ருத்ரன். தனது கோட்டை கழட்டி கட்டிலின் மீது வீசிவிட்டு சோபாவில் அமர்ந்தான். நேரம் ஓடிக் கொண்டிருந்தது, ஆனால் சக்தி வீட்டிற்கு வரவில்லை. தன் பொறுமையை இழந்து கொண்டிருந்தான் ருத்ரன். இறுதியில் ஒரு வழியாய் சக்தி வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். நாளே எட்டில்  அவளை அடைந்த ருத்ரன், அவளது மேற்கரத்தை இறுகப்பற்றி,

"எங்க போயிருந்த? உனக்கு தெரியாதா நான் ஆபீஸ்ல இருந்து வரும் போது உன்னை பார்க்க விரும்புவேன்னு?" என்று கடுப்படித்தான்.

"அது எனக்கு தெரியாதா?" என்று அவனை பதில் கேள்வி கேட்டாள் சக்தி.

"அப்புறம், நான் வரும் போது நீ ஏன் வீட்ல இல்ல?"

"அக்காவோட கோவிலுக்கு போயிருந்தேன்..."

"நீ தான சொல்லுவ, கடவுள் எல்லா இடத்திலும் இருக்காருன்னு... அப்புறம் அவரை கோவிலில் தான் போய் கும்பிடனுமா?"

"உங்களுக்கு இப்போ என்ன பிரச்சனை? நான் கோவிலுக்கு போய் சாமி கும்பிடுறதா? இல்ல, நீங்க வீட்டுக்கு வரும் போது நான் வீட்ல இல்லாம  போனதா?"

"நீ சாமி கும்பிடறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா நான் வீட்டுக்கு வரும் போது, தயவு செய்து வீட்ல இரு சக்தி. அவ்வளவு தான் எனக்கு வேணும். ப்ளீஸ்..."
 
"எனக்கு தெரியுங்க. நீங்க வர்றதுக்கு முன்னாடி வீட்டுக்கு வந்துடலாம்னு நினைச்சுகிட்டு தான் போனேன். ஆனா, நினைச்ச மாதிரி செய்ய முடியாம போயிடுச்சு. ஐ அம் சாரி"

"நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணினேன் தெரியுமா?" என்று அவளை அணைத்துக் கொண்டான்.

இடவலமாய் தலையை அசைத்து சிரித்தாள் சக்தி. ருத்ரன் படிப்படியாய் பழைய நிலைக்கு திரும்பி விட்டாலும், சில விஷயங்களை அவன் மாற்றிக் கொள்ளவே இல்லை.

"நான் ஆபீஸ்ல இருந்து வரும் போது, நீ வீட்ல இருப்பேன்னு எனக்கு ப்ராமிஸ் பண்ணி கொடு. இல்லனா மறுபடியும் நான் உன்னை கிட்னாப் பண்ணிக்கிட்டு போயிடுவேன்" என்று மிரட்டினான்.

தன் விழியை விரித்து அவனைப் பார்த்து முறைத்தாள் சக்தி. அவளை மேலும் இறுக்கமாய் அணைத்துக் கொண்டான் ருத்ரன்.

"பிரக்னண்டா இருக்கிற பொண்ண, டைட்டா கட்டி பிடிக்கக் கூடாது" என்றாள் தன் சிரிப்பை அடக்கியவாறு.

"பிரக்னண்டா இருக்குற பொண்ண நான் ஏன் கட்டி பிடிக்க போறேன்?" என்றான் புரியாமல்.

"அப்படின்னா, இப்போ நீங்க யாரை கட்டிப்பிடிச்சுக்கிட்டு இருக்கீங்க?"  என்று சிரித்தாள் சக்தி.

அவளை பின்னால் இழுத்து, முகத்தை சுருக்கினான் ருத்ரன். கன்னம் சிவக்க, தன் சிரிப்பை அடக்கி கொண்டிருந்தாள் சக்தி. அவள் கூறியதன் அர்த்தத்தை புரிந்து கொண்ட ருத்ரன், மென்று விழுங்கினான். அவனது கையை எடுத்து தன் வயிற்றில் வைத்தாள். பேச்சிழந்து நின்றான் ருத்ரன். அவனுக்கு என்ன கூறுவதென்றே புரியவில்லை. பிள்ளை பெறுவது பற்றி அவன் இதுவரை அவளிடம் பேசியதே இல்லை. ஏன், அதைப் பற்றி அவன் யோசித்தது கூட இல்லை. அவனைப் பொறுத்தவரை, அவன் மனதை எப்போதும் ஆக்கிரமித்து இருந்தது அவனது மனைவி மட்டும் தான். அவன் மனைவி தானே அவனுக்கு அனைத்துமாய் இருந்தாள்...! அதை பகிரங்கமாய் அனைவரிடமும் சொல்லக்கூட அவன் தயங்கியதே இல்லை. அவனும் அவன் மனைவியும் மட்டுமே சஞ்சரிக்கும் உலகத்தில், இப்பொழுது ஒரு புது வரவு வர காத்திருக்கிறது. மற்றவர்களை அதனுள் அவன் நுழைய விடாமல் தடுத்து விட்டது போல் இந்த முறை செய்து விட முடியாது. வர இருப்பது அவனுடைய சொந்த இரத்தம் ஆயிற்றே...! அவனது வாழ்வின் அங்கம் அல்லவா அந்த குழந்தை!

அவன் கன்னத்தை மெல்ல தட்டினாள் சக்தி.

"என்னங்க..."

"நான் அப்பாவாக போறேனா?" என்றான் நம்ப முடியாமல்.

ஆம் என்று தலையசைத்தாள் சக்தி.

"நம்ம பேரன்ட்ஸ் ஆக போறோமா?"

மறுபடியும் ஆம் என்று சிரித்தபடி தலையசைத்தாள்.

"அதனால தான் நான் வீட்டுக்கு வர லேட் ஆச்சு. கோவிலுக்கு போகும் போது, எனக்கு தலை சுத்துற மாதிரி இருந்தது. அக்கா தான் என்னை ஹாஸ்பிடலுக்கு கூட்டிகிட்டு போனாங்க. அங்க தான் நான் பிரக்னண்டா இருக்கேன்னு டாக்டர் கன்ஃபார்ம் பண்ணாங்க" அவனை மீண்டும் அனைத்துக் கொண்டாள் சக்தி.

"சக்தி, நான் உன்னை டைட்டா கட்டிப்பிடிக்க கூடாதா?" என்றான் கவலையாக.

"ஆமாம், டைட்டா கட்டிப் பிடிக்கக் கூடாது"

"அது குழந்தையை ஹர்ட் பண்ணுமா?"

"குழந்தையை மட்டுமில்ல, என்னையும் சேர்த்து ஹர்ட் பண்ணும்"

"நிஜமாவா சொல்ற?"

"ஆமாம்... எதுவா இருந்தாலும் அது எங்க ரெண்டு பேரையும் பாதிக்கும்... அவனோ / அவளோ இந்த உலகத்துக்கு வர்ற வரைக்கும்...."

"அவ என்னோட உலகத்துல இருந்து இந்த உலகத்துக்கு வரப்போறாளா?" என்ற அவனது கேள்வி அவளுக்கு குழப்பத்தை தந்தது.

"உங்களோட உலகத்துல இருந்தா?"

"நீ தானே சக்தி என்னோட உலகம்?" என்றான் வெதுவெதுப்பான புன்னகையுடன்.

உணர்ச்சிவசப்பட்ட சக்தி,

"எனக்கு தெரியும்" என்று அவன் நெஞ்சில் சாய்ந்தாள் சக்தி.

அவளை மென்மையாக, ஒரு பூவை போல் அனைத்து கொண்டான் ருத்ரன். அவனது அணைப்பில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்தாள் சக்தி. அது தான் ருத்ரன்... அவனது தேவையே, சக்தியின் சந்தோஷமும், பாதுகாப்பும் தான். அவன் ஒரு நல்ல கணவன். அவன் ஒரு நல்ல தகப்பனாகவும் இருப்பான் என்று நம்புவோமாக.

தொடரும்...

குறிப்பு: அடுத்த பகுதியுடன் * காதல் தின்ற மீதி...!* நிறைவடைகிறது.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top