5 சக்தியின் நிச்சயதார்த்தம்
5 சக்தியின் நிச்சயதார்த்தம்
அமீர் கொடுத்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் ருத்ரன். அவர் கொடுத்த முகவரியில் இருந்த வீடு, பூட்டி இருந்தது. சக்தியை பற்றி விசாரித்து அறிய, யாராவது வருகிறார்களா என்று இங்கும் அங்கும் பார்த்தான். அப்பொழுது அந்த வீட்டை கடந்து சென்ற ஒரு பெரியவரை நிறுத்தினான் ருத்ரன்.
"எக்ஸ்கியூஸ் மி சார்"
கோட்டு சூட்டு அணிந்திருந்த ருத்ரனை மேலும் கீழும் பார்த்தார் அந்த பெரியவர். ஏனென்றால் அது நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பத்தினர் வசிக்கும் இடம். அந்த இடத்திற்கு, அப்படிப்பட்ட பட்டாடோபமான உடை மிகவும் புதிது.
"சக்தி வீட்ல இல்லையா?" என்றான் ருத்ரன், அவன் சக்திக்கு மிகவும் வேண்டப்பட்டவன் போல.
"பாப்பா வீட்ல இல்ல போலிருக்கு. உங்களுக்கு அவங்களை பார்க்கணும்னா கொஞ்சம் காத்திருங்க. அவங்க இப்போ வந்துடுவாங்க"
"அவங்க ஸ்வீட்ஸ் டெலிவரி பண்ண போயிருக்காங்களா?"
"அப்படியும் இருக்கலாம்... இல்லைனா, நடராஜ் வீட்டுக்கு போய் இருக்கும்"
"நட்ராஜ் யாரு?"
"அவங்களை கல்யாணம் பண்ணிக்க போறவரு"
அவர் கூறியது ருத்ரனுக்கு அதிர்ச்சியை அளித்தது என்று கூற வேண்டிய அவசியம் இல்லை.
"கல்யாணம் பண்ணிக்க போறாங்களா?" என்றான் அதிர்ச்சியை கட்டிக்கொள்ளமல்.
"ஆமாம். இன்னும் ரெண்டு மூணு மாசத்துல, அவங்க கல்யாணம் பண்ணிக்க போறாங்க"
ருத்ரனின் தரப்பு அமைதியாய் போனது. வெகு சொற்ப நேரம் எடுத்துக்கொண்டு, அவனது மூளை பரபரவென யோசித்தது.
"கல்யாண தேதி முடிவாயிடுச்சா?" என்றான்.
"இன்னும் இல்ல. சக்தியோட அம்மா, அப்பா இறந்து இன்னும் ஒரு வருஷம் முடியல. வருஷம் திரும்பாம கல்யாணம் பண்ணிக்க வேண்டாமுன்னு அந்த பொண்ணு காத்திருக்கு... அவங்க அப்பா ஈஸ்வரன் ரொம்ப நல்ல மாதிரி..."
"நட்ராஜ் வீடு எங்க இருக்கு? இங்கிருந்து ரொம்ப தூரமா?"
"அவங்க வீடு இருக்கிறது சிவாஜி நகர். அங்க போக அரை மணி நேரம் ஆகும்"
"ஓ..."
"நீங்க எதுக்காக சார் சக்தியை பார்க்கணும்னு?" என்றார் அந்த பெரியவர், கேள்வி மேல் கேள்வி கேட்ட ருத்ரனிடம்.
"கல்யாணத்துக்காக..." என்று சற்று நிறுத்தியவன்,
"கல்யாணத்துக்கு ஸ்வீட்ஸ் ஆர்டர் கொடுக்கலாமான்னு வந்தேன்" என்றான்.
"ஓ, கல்யாண கான்ட்ராக்ட்டா? சக்தி பொண்ணு ரொம்ப சந்தோஷப்படும்"
லேசாய் தலையசைத்து விட்டு, அவன் முன்பின் பார்த்திராத நடராஜன் மீது கொதித்துக் கொண்டிருந்த கோபத்துடன் தன் காரில் ஏறி அமர்ந்தான் ருத்ரன். நட்ராஜை குத்துவதாக நினைத்துக் கொண்டு, காரின் ஸ்டேரிங் வீலை ஓங்கி குத்தினான். சக்தி யாரோ ஒருவனை திருமணம் செய்து கொள்ளப் போகிறாள். இப்பொழுது அவன் என்ன செய்யப் போகிறான்? யார் அந்த நடராஜ்? அவள் ஏன் அவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும்? ஒருவேளை, அவளது பெற்றோர் இந்த திருமணத்தை நிச்சயம் செய்து விட்டிருந்தார்களா? எது செய்வதாக இருந்தாலும், அதற்கு முன், அவன் சக்தியை பற்றியும் நடராஜ் பற்றியும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் எப்படி அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வது?
பட்டென்று அவன் மனதில் ஒரு எண்ணம் உதித்தது. சிவாவின் அறையின் மேஜையின் மீது இருந்த குறிப்பை புகைப்படம் எடுத்த ஞாபகம் வந்தது. அது சேலத்தைச் சேர்ந்த துப்பறியும் நிறுவனத்தின் விபரங்கள் அடங்கிய குறிப்பு. ரேட்டிங்கில், 4.5/5 மதிப்பெண் பெற்று சேலம் மாவட்டத்திலேயே முதலிடம் பெற்றிருந்தது அந்த துப்பறியும் நிறுவனம். அதிலிருந்த எண்ணுடன் தொடர்பு கொண்டான் ருத்ரன். அழைப்பு ஏற்கப்பட்டது.
"ரெட் மூன் டிடெக்டிவ் ஏஜென்சி..." என்றான் அழைப்பை ஏற்றவன்.
"எனக்கு ஒரு பொண்ணை பத்தின எல்லா விபரமும் தெரியணும்"
"செஞ்சிடலாம் சார். அந்த பொண்ணு யாரு? நீங்க யாரு?"
"என் பேரு ருத்ரன். பொண்ணு பேரு சக்தி. அவங்க அப்பா ஈஸ்வரன்" சக்தியின் வீட்டு முகவரியையும் கைபேசி எண்ணையும் வழங்கினான் ருத்ரன்.
"கண்டுபிடிச்சிடலாம் சார். அது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல. என் பெயர் சந்திரசேகர்"
"ம்ம்ம்ம்"
"உங்களுக்கு அவங்களை பத்தி பர்டிகுலரா என்ன தெரியணும் சார்?"
"எனக்கு அவங்களை பத்தி எல்லாமே தெரியணும்... கம்ப்ளிட்டா... முக்கியமா அவங்க கல்யாணம் பண்ணிக்க போறவனை பத்தி..."
"உங்களுக்கு இந்த விவரம் எப்ப வேணும் சார்?"
"இப்பவே வேணும்" என்று குண்டைத் தூக்கிப் போட்டான் ருத்ரன்.
சந்திரசேகரனுக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது. இவனுக்கு என்ன பைத்தியமா? வழக்கை ஒப்படைத்த உடனே எப்படி விபரங்களை கொடுப்பது?
"சாரி சார். எங்களுக்கு குறைஞ்சது இருபத்தி நாலு மணி நேரமாவது வேணும்"
"நான் உங்களுக்கு எவ்வளவு பே பண்ணனும்?"
"இருபத்தஞ்சாயிரம் சார்"
"நான் உங்களுக்கு ஐம்பதாயிரம் தரேன்"
காதில் இருந்த கைபேசியை பின்னால் இழுத்து, அவநம்பிக்கையுடன் பார்த்தான் சந்திரசேகர்.
"என்னால 24 மணி நேரமெல்லாம் காத்திருக்க முடியாது. கிடைக்குற இன்ஃபர்மேஷன்ஸை இம்மீடியட்டா எனக்கு மெசேஜ் பண்ணிக்கிட்டே இருங்க."
"ஷ்யூர் சார்"
அழைப்பை துண்டித்தான் ருத்ரன்.
தனக்கு வழங்கப்பட்ட வழக்கை பற்றி நினைத்துக் கொண்டிருந்தான் சந்திரசேகர். யார் இந்த மனிதன்? எதற்காக அவன் இவ்வளவு அவசரம் காட்டுகிறான்? அவனது கைபேசியிலிருந்து எழுந்த ஒலியால் அவனது எண்ணம் அறுபட்டது. அவனுடைய வங்கி கணக்கில் ஐம்பதாயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருந்தது. அதை யார் அனுப்பியது என்பதில் அவனுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இருந்தாலும் அனுப்புனர் பெயரை சோதித்து பார்த்துக் கொண்டான். அவன் எண்ணியபடியே ருத்ரன் என்று இருந்தது. நாற்காலியை விட்டு குதித்து எழுந்த சந்திரசேகர், தனது உதவியாளரை அழைத்தான்,
"கைலாஷ்..."
"எஸ் சார்"
சக்தியின் முகவரியை தாங்கிய துண்டு சீட்டை அவனிடம் நீட்டினான்.
"இந்த அட்ரஸ்ல இருக்கிற பொண்ணு பேரு சக்தி. அவங்களைப் பத்தின ஏ டூ இசட் டீடைல்ஸ் நம்ம கலெக்ட் பண்ணியாகணும். லெட்ஸ் கோ"
........
துரிதமாய் வேலை செய்து கொண்டிருந்த ருத்ரனின் மூளைக்கு அப்பொழுது தான் ஒரு விஷயம் பிடிபட்டது. அவன் சேலத்திற்கு வந்திருக்கும் விஷயத்தை, அவனது குடும்பத்தாரிடம் மருத்துவர் கூறிவிட்டிருந்தால் என்ன ஆவது? தான் இங்கு வந்த வேலை சீக்கிரம் முடிந்து விடும் என்ற எண்ணத்தில் அவன் இருந்ததால், அதைப்பற்றி அவன் யோசிக்காமல் விட்டு விட்டான். ஆனால் இங்கு நிலமை சுலபமாக இருப்பதாய் தெரியவில்லை. சக்திக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. அவன் நினைத்தது போல் இது சுலபமாய் முடியாது. இந்நேரம் அவனது குடும்பத்தார் அவனை தேட துவங்கி இருப்பார்கள். அவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் சேலத்திற்கு வந்துவிடலாம். அப்படி நடக்கக் கூடாது. அவர்கள் நிச்சயம் சக்தியை அடைய விட மாட்டார்கள்... வேண்டாத வேதாந்தத்தை பேசிக் கொண்டிருப்பார்கள்... அதுவும் அவள் ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்டவள் என்று தெரிந்து விட்டால், சொல்லவே வேண்டாம்.
தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்களை நினைவு கூர்ந்தான் ருத்ரன். அவனுடன் பயின்ற லிங்கேஸ்வரன், காரைக்காலில் வசிப்பது அவன் நினைவுக்கு வந்தது. தன் திட்டத்திற்கு அவன் சரியானவனாக இருப்பான் என்று தோன்றியது ருத்ரனுக்கு. லிங்கேஸ்வரன் சிறிது அப்பாவி. நண்பர்கள் கூறும் எல்லா கட்டுக்கதைகளையும் நம்பி விடக் கூடியவன். ருத்ரன், கல்லூரியின் முதல் மதிப்பெண் பெரும் மாணவன் என்பதால், அவன் மீது லிங்கேஸ்வரனுக்கு ஒரு அதிக மரியாதை இருந்தது.
லிங்கேஸ்வரனை அழைத்தான் ருத்ரன். புதிய எண்ணில் இருந்து வந்த அழைப்பாக இருந்தாலும், அதை ஏற்றான் லிங்கேஸ்வரன்.
"ஹலோ யார் பேசுறீங்க?"
"ஹாய் லிங்கு... ருத்ரன் பேசுறேன்"
"ருத்த்த்து...." சந்தோஷத்தில் அரற்றினான் லிங்கேஸ்வரன்.
"எப்படி இருக்க லிங்கு?"
"பொண்டாட்டி பிள்ளையோட சந்தோஷமா இருக்கேன்"
"உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா? ஏன் என்னை கூப்பிடல?"
"அப்போ நீ லண்டன்ல இருந்த. அதனால தான் உன்னை டிஸ்டர்ப் பண்ணல"
"பை தி வே கங்கிராஜுலேஷன்ஸ்... உன்னோட கல்யாணத்துக்காகவும் குழந்தைக்காகவும்" சிரித்தான் ருத்ரன்.
"தேங்க்யூ ருத்து"
"லிங்கு, எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்"
"ருத்ரனுக்காக என்ன வேணா செய்வான் இந்த லிங்கு..."
"தேங்க்யூ"
"நான் என்ன செய்யணும்னு சொல்லு"
அவன் செய்ய வேண்டியதை கூறினான் ருத்ரன்.
"அவ்வளவு தானா?"
"அவ்வளவே தான்... ஒரு கிழவன் என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருக்கார். அவரை ஃபூல் பண்ணனும் அவ்வளவு தான்"
"விடு, செஞ்சிடலாம்... இரு நான் என் வைஃபோட ஃபோனை கொண்டு வரேன்"
"சரி"
தன்னுடைய மருத்துவரான கங்காதரனுக்கு ஃபோன் செய்து, அந்த அழைப்பை, கான்ஃபிரன்சில் லிங்கேஸ்வரனின் அழைப்புடன் இணைத்தான் ருத்ரன். அந்த அழைப்பு ஏதோ ஒரு நோயாளியிடம் இருந்து வந்ததாக எண்ணி ஏற்றார் கங்காதரன்.
"ஹலோ டாக்டர்..."
ருத்ரனின் குரலைக் கேட்ட மருத்துவர் துணுக்குற்றார்.
"ருத்ரன்.... ருத்ரன்... நீங்க எங்க இருக்கீங்க ருத்ரன்?"
"ரிலாக்ஸ் டாக்டர்... நீங்க ஒரே வார்த்தையை திரும்ப திரும்ப சொல்றதை பார்த்து, உங்களுக்கு பைத்தியம் பிடிச்சிட்டதா உங்க ஹாஸ்பிடல் ஸ்டாஃப் நினைக்க போறாங்க..." என்றான் கிண்டலாய்.
மருத்துவருக்கு நன்றாகவே புரிந்தது, ருத்ரன் தன்னை எகத்தாளம் செய்கிறான் என்று. அவர் ருத்ரனை மருத்துவ கண்காணிப்பில் வைத்திருந்ததற்கு காரணமே, அவன் ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருந்தான் என்பதால் தான்.
"நீங்க எங்க இருக்கீங்க?"
"அதை நான் ஏன் உங்க கிட்ட சொல்லணும்?"
"அப்புறம் எதுக்காக எனக்கு ஃபோன் பண்ணீங்க?"
இங்க வரும் போது அக்கா கிட்ட சொல்லாம வந்துட்டேன்"
"எங்க?"
"டாக்டர், உங்க ஸ்மார்ட்னெஸ்ஸை எல்லாம் என்கிட்ட ட்ரை பண்ணாதீங்க"
என்ன கூறுவது என்று தெரியாமல் விழித்தார் மருத்துவர். சரியாக அதே நேரம், ருத்ரனின் திட்டப்படி, *இயர் ஃபோன்* பொருத்தப்பட்ட தன் மனைவியின் கைபேசியை ஒலிக்கச் செய்தான் லிங்கேஸ்வரன்.
*இது காரைக்கால் பண்பலைவரிசை... இப்போது நேரம், மாலை 6:00 மணி 45 நிமிடம் 32 நொடிகள்...*
அந்த வானொலி அறிவிப்பை கேட்ட மருத்துவர் விழிப்படைந்தார்.
"நீங்க காரைக்காலில் இருக்கீங்களா ருத்ரன்?" என்றார்.
அவருக்கு பதில் கூறாமல் வெற்றி புன்னகை பூத்தான் ருத்ரன்.
"ஏன் அமைதியா இருக்கீங்க ருத்ரன்? நீங்க எனக்கு பதில் சொல்லலனா என்ன? அது தான் ரேடியோ அனௌன்ஸ்மென்ட் சொல்லிடுச்சே..."
"ஷிட்..." மெல்லிய குரலில் முணுமுணுத்தான் ருத்ரன், தன்னுடைய யூகம் சரி என்று மருத்துவர் நினைக்க வேண்டும் என்பதற்காக.
"நீங்க எதுக்காக காரைக்கால் போனீங்க? சேலத்துக்கு போறதா தானே சொல்லிட்டு போனீங்க?"
"நான் எதுக்காக காரைக்கால் வந்தேன்னு உங்க கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. நான் நல்லா இருக்கேன்னு அக்கா கிட்ட சொல்லிடுங்க" அழைப்பை துண்டித்தான் ருத்ரன்.
செய்வதறியாமல் திகைத்து நின்றார் மருத்துவர். ஏனென்றால், ருத்ரன் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது லேண்ட்லைன் எண்ணுக்கு. அவரால் அவனுக்கு திரும்ப ஃபோன் செய்யக்கூட முடியாது.
லிங்கேஸ்வரனுக்கு நன்றி கூறிவிட்டு, தனது காரை ஸ்டார்ட் செய்து, நட்ராஜ் வீட்டை நோக்கி செலுத்தினான் ருத்ரன். சக்தியின் இல்லத்தில் அவன் சந்தித்த பெரியவர் கூறிய வழியை பின்பற்றி சென்று கொண்டிருந்தான். சக்தியைப் பற்றி அனைத்தையும் உடனடியாக தெரிந்து கொள்ள வேண்டிய அவசரத்தில் இருந்தான் அவன். அவன் உள் மனம் கூச்சலிட்டு கொண்டிருந்தது. தான் நின்று கொண்டிருக்கும் சூழ்நிலை எப்படிப்பட்டது என்று அவனுக்கு புரியவில்லை. அந்த சூழ்நிலையை தன் கைக்குள் கொண்டு வர முடியுமா என்பது கூட அவனுக்கு தெரியவில்லை. காரின் பிரேக்கை அவன் சட்டென்று அழுத்த, அந்த கார் கிறீச்சிட்டு நின்றது.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் குத்திட்டு நின்ற அவனது கண்கள், நெருப்பை உமிழ்ந்தது. அங்கிருந்த ஒரு பேருந்து நிறுத்தத்தில், சக்தி ஒருவனுடன் நின்று கொண்டிருந்தாள். அவனது கண்கள் அவர்களின் மீது... இல்லை இல்லை... சக்தியின் மீது இருந்தது. நமக்கு நன்றாகவே தெரியும், அவள் அந்த ஒருவனுடன் பேசிக் கொண்டிருந்தது ருத்ரனுக்கு பிடிக்கவில்லை என்று. ஏனென்றால், அவனுடைய யூகத்தின் படி அது நட்ராஜாகத் தான் இருக்க வேண்டும். சக்திக்கு நிச்சயம் செய்யப்பட்ட அதே நட்ராஜ்... எப்பொழுது வேண்டுமானாலும் அவளை விழுங்கி விடுபவன் போல அவளை பார்த்துக் கொண்டிருந்தான் ருத்ரன்.
ருத்ரனின் கணிப்பு சரியானது தான். சக்தியுடன் அங்கு நின்றிருந்தவன் நட்ராஜ் தான். முகமெல்லாம் பல்லாய், சக்தியை நோக்கி சிரித்துக் கொண்டிருந்த நடராஜன் முகத்தை அடித்து பெயர்க்க வேண்டும் என்று தோன்றியது ருத்ரனுக்கு. அவள் அவனுடைய சக்தி... ருத்ரனை யார் என்றே தெரியாத சக்தி...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top