49 சிந்திக்கும் திறன்

49 சிந்திக்கும் திறன்

ருத்ரனின் அறைக்கு வந்தான் சிவா. ருத்ரனை பார்த்து புன்னகைத்த சிவா, சக்தியை பார்த்தும் புன்னகைத்தான். அவள் ஒரு செயற்கையான புன்னகையை உதிர்த்துவிட்டு அமைதியாய் அமர்ந்தாள்.

"கதவை சாத்திட்டு வா" என்றான் ருத்ரன்.

சரி என்று தலையசைத்த சிவா, ருத்ரன் கூறியதை செய்தான். ருத்ரன் தன்னிடம் ஏதோ மிக முக்கியமான விஷயம் பேச போவதைய் யூகித்துக் கொண்டான். அங்கு சக்தியும் இருந்ததை பார்த்து அவனுக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. ருத்ரன் அவளை நம்புகிறான். அதனால், எந்த ரகசியத்தையும் அவன் அவள் முன் பேசுவது ஒன்று ஆச்சரியம் அல்ல.

"சொல்லு ருத்து"

"தக்ஷிணாமூர்த்தியை ஃபாலோ பண்ணனும்"

"தட்சணாமூர்த்தியையா ஆனா, ஏன்?"

"நீயா ஏன்னு கேக்குற? இப்படி நீ கேட்பேன்னு நான் எதிர்பார்க்கல" என்றான் ருத்ரன்.

"நீ எதுக்காக அவரை ஃபாலோ பண்ண  சொல்றேன்னு எனக்கு நல்லா புரியுது. அவரு உன்னை விட்டுட்டு வர சொல்லி சக்தி கிட்ட சொன்னாரு. அதனால அவரை நீ கண்காணிக்கணும்னு நினைக்கிற. அது தானே?"

"ஆமாம்..."

"ஆனா,  நீ அப்படி சொன்னதுக்கு அது மட்டும் தான் காரணமா இருக்கும்னு எனக்கு தோணல. அதனால தான் ஏன்னு கேட்டேன்"

"அவரு இதுக்கப்புறம் சும்மா இருப்பாருன்னு எனக்கு தோணல. மாயாவோட சாவுக்கு நான் தான் காரணம்னு என் மேல அவரு பயங்கர கோவத்துல இருக்காரு. அதனால, அவரு நிச்சயமா ஏதாவது செய்வாரு. அவர் என்ன செய்றார்னு நான் தெரிஞ்சுக்கணும்"

அவர்கள் பேசுவதை உன்னிப்பாய் கவனித்துக் கொண்டிருந்தாள் சக்தி. அதோடு மட்டுமல்லாமல், சிவாவின் முக பாவத்தையும் அவள் கவனிக்க தவறவில்லை.

"நான் என்ன செய்யணும்னு நீ நினைக்கிற ருத்து?"

"அவரோட ஃபோன் கால்சை ட்ராக் பண்ணா பெட்டரா இருக்கும். கூடவே, சில பேரை அப்பாயிண்ட் பண்ணி, அவர் எங்க போறாரு, யாரை மீட் பண்றாரு, என்ன செய்றாரு  எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்"

அவன் தெள்ளத் தெளிவாக திட்டமிட்டதை பார்த்த சக்தி ஆச்சரியமடைந்தாள். இப்படிப்பட்ட ஒருவனை எதற்காக இவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள்? ருத்ரனுக்கு எதற்காக  மருத்துவம் பார்க்க வேண்டும்? அறிவில்லாதவர்கள் தான், அவனுக்கு புத்தி பேதலித்து விட்டதாய் நினைப்பார்கள் என்று எண்ணினாள்.

"சரி ருத்து. வேற ஏதாவது?"

"நான் சீக்கிரமே ஆபீஸ் ஜாயின் பண்ணலாம்னு இருக்கேன்"

ருத்ரனின் அந்த வார்த்தைகள் இருவருக்குமே பதற்றத்தை விளைவித்தது. ருத்ரன் அலுவலகம் செல்லப் போகிறானா? அங்கு, யாராவது, ஏதாவது, தவறு செய்தால், அவன் தன் பொறுமையை இழந்து விட்டால் என்ன ஆவது? என்று எண்ணினான்  சிவா. ஒருவேளை, அவனை வேண்டுமென்றே யாராவது சீண்டிப் பார்த்தால் என்ன செய்வது என்று கவலை கொண்டாள் சக்தி. அதோடு நிற்காமல், ருத்ரன் தொடர்ந்தான்...

"சக்தியும் என் கூட வருவா"

"என்னது? சக்தியா?" என்றான் சிவா.

"ஆமாம், அவ ஆபீஸ்லயும் என்கூட தான் இருக்க போறா" என்றான் சத்தியை பார்த்தபடி. அவள் சந்தோஷமாய் புன்னகைத்தாள்.

"அங்க வந்து சும்மாவே உட்கார்ந்திருந்தா சக்திக்கு போர் அடிக்காதா?"

"என் கூட இருந்தா அவளுக்கு போரே அடிக்காது. என்னை பார்த்துக்கிட்டே அவ டைம் பாஸ் பண்ணிடுவா. நான் சொல்றது சரி தானே சக்தி?" என்றான்.

ஆம், என்று சக்தி தலையசைக்க, ஆச்சரியமாய் புருவம் உயர்த்தினான் சிவா.

"நம்ம ஆபீஸ் உனக்காக தான் காத்திருக்கு. நீ எப்ப வேணா ஜாயின் பண்ணலாம்"

ஆமோதிப்பாய் தலையசைத்தான் ருத்ரன்.

"அப்போ நான் கிளம்புறேன் ருத்து"

"சரி போயிட்டு வா"

அங்கிருந்து கிளம்பிச் சென்றான் சிவா.

"எதுக்காக நானும் உங்க கூட ஆஃபீசுக்கு வரணும்னு நினைக்கிறீங்க?" என்றாள் சக்தி.

"இது என்ன கேள்வி சக்தி? உன்னை விட்டுட்டு நான் எப்படி இருப்பேன்?"

"இருக்கணும்... அப்படி இருந்து நீங்க பழகி தான் ஆகணும். ஏன்னா, எல்லா நேரமும் நான் உங்க கூடவே இருக்க முடியாது"

"இருந்து தான் ஆகணும். இல்லனா, நான் ஆஃபீஸ்க்கு போக மாட்டேன்"

"சின்ன குழந்தை மாதிரி அடம் பிடிக்காதீங்க"

"நீ என்கூட ஆபீசுக்கு வர்ற. அதுக்கு மேல அதுல பேச எதுவும் இல்ல. நோ ஆர்கியுமென்ட்ஸ்..."

முகத்தை உம் என்று வைத்துக் கொண்டு வேறு எங்கோ பார்த்த படி அமர்ந்தாள் சக்தி. அவள் அருகில் வந்து அமர்ந்து கொண்ட ருத்ரன்,

"என் மேல அப்சட்டா இருக்கியா?"

"இல்லையே..." என்றாள் விட்டத்தை பார்த்தபடி.

"என் முகத்தைப் பார்த்து சொல்லு பாக்கலாம்"

அவன் முகத்தை பார்த்த சக்தி, ஒன்றும் கூறாமல் உதடு சுழித்தாள்.

"என் கூட இருக்கறதுல உனக்கு விருப்பம் இல்லையா சக்தி?"

"போதும் நிறுத்துங்க. இந்த மாதிரி சில்லியான கேள்வி எல்லாம் கேட்காதீங்க. நான் என்ன பதில் சொல்லுவேன்னு உங்களுக்கே தெரியும்"

"எனக்கு பதில் தெரிஞ்சா என்ன? நீ எனக்கு பதில் சொல்ல மாட்டியா?"

"இதுக்காகத் தான், நீங்க என்னை விட்டுட்டு தனியாய் இருக்கணும்னு நான் நினைக்கிறேன்"

"எதுக்கு?"

"நீங்க எல்லா இடத்திலையும் என் கூடயே சுத்திக்கிட்டு இருந்தா, உங்களுக்கு ஏதோ பிரச்சனைனு பார்க்கிறவங்க நினைப்பாங்க"

"நினைக்கட்டுமே... யார் வேணா என்ன வேணா நினைக்கட்டுமே... அவங்களைப் பத்தியெல்லாம் யார் கவலைப்பட போறா?"

"நான் கவலைப்படுறேன்.... நான் உங்களை பத்தி ரொம்ப கவலைப்படுறேன்"

"அதனால தான், என்னை பத்தி கவலைப்படுற நீ,  எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்னு நான் நினைக்கிறேன்..."

"நீங்களே யோசிச்சு பாருங்க. இதெல்லாம் சரிப்பட்டு வராது"

"எல்லாம் சரிப்பட்டு வரும். நான் சரிப்பட்டு வர மாதிரி செய்வேன்"

இவனிடம் பேசி ஜெயிக்க முடியாது என்ற முடிவுக்கு வந்த சக்தி, பெருமூச்சு விட்டாள்.

அப்பொழுது யாரோ கதவை தட்ட, ருத்ரனின் முகத்தில் எரிச்சல் தெரிந்தது. வந்தது யாராக இருந்தாலும் அப்படியே திருப்பி அனுப்பி விடலாம் என்று அவனே சென்று கதவை திறந்தான். அங்கு நின்றிருந்தது அவர்களது வீட்டின் வேலையாள் முனுசாமி.

"புடவைக்காரர் வந்திருக்கார். அக்கா அண்ணியை கூட்டிகிட்டு வர சொன்னாங்க"

 தலையை அசைத்த ருத்ரன் சக்தியை நோக்கி திரும்பினான்.

"புடவை எடுக்க அக்கா உன்னை கூப்பிட்டாங்களாம்"

"நீங்களும் என் கூட வந்து எனக்கு சாரீ செலக்ட் பண்ணி கொடுக்க மாட்டீங்களா?"

"உனக்கு நான் புடவை செலக்ட் பண்ணி கொடுக்கணும்னு நினைக்கிறியா?"

 ஆம் என்று தலையசைத்தாள்.

"இதுக்கு முன்னாடி நான் புடவை எடுத்தது இல்ல சக்தி"

"இப்போ எனக்காக செய்யுங்க. வாங்க"

சக்தியுடன் தரைதளம் நோக்கி நடந்தான் ருத்ரன்.

அவர்கள் இருவரும் வந்த போது, அனைவரது முகத்திலும் ஒரு வித பதற்றம் தெரிந்ததை கண்டாள் சக்தி. ஆம் ருத்ரன் அலுவலகம் வர விரும்புவதை பற்றி சிவா அவர்களிடம் கூறிவிட்டு இருந்தான்.

புடவை காரரின் முன் சென்று அமர்ந்து கொண்டான் ருத்ரன். அது அங்கிருந்தவர்களை திகைப்பில் அழுத்தியது.

"ருத்து நீ சாரி செலக்ட் பண்ண போறியா?" நம்ப முடியாமல் கேட்டாள் துர்கா.

"ஆமாம். சக்திக்காக..."

"அண்ணிக்கு எந்த மாதிரி சாரி பிடிக்கும்னு உனக்கு என்ன தெரியும் ருத்து?" என்றான் தியாகு.

சில நொடி தடுமாறிய ருத்ரன்,

"அவளுக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு தெரியும்" என்றான் நம்பிக்கையோடு.

"நிஜமாவா?"

"நிஜமா தான்"

"நெஜமாவே அவங்களுக்கு நீ தான் புடவை எடுத்து கொடுக்க போறியா?"

"ஆமாம்.... நான் தான்... எடுத்து கொடுக்கப் போறேன்..." என்றான் அழுத்தம் திருத்தமாக.

"அப்படியா? சரி, அப்படின்னா, வா ஒரு கேம் விளையாடலாம். உனக்கு அண்ணியோட டேஸ்ட் எந்த அளவு தெரிஞ்சிருக்குன்னு பார்க்கலாம்" என்று சவால் விட்டான் தியாகு.

"என்ன கேம்?"

"இங்கிருந்து யாராவது அண்ணியை கூட்டிகிட்டு போங்க. ருத்ரன் பத்து புடவை செலக்ட் பண்ணட்டும். அதுக்கப்புறம், அண்ணி வந்து செலக்ட் பண்ணட்டும். ஒருவேளை, ருத்ரன் செலக்ட் பண்ண அதே புடவையில் இருந்து, அவங்க அஞ்சு புடவை செலக்ட் பண்ணா கூட, ருத்ரன் ஜெய்ச்சிட்டான்"

"நான் ரெடி" என்றான் ருத்ரன்.

"அக்கா, சக்தி அண்ணியை இங்கிருந்து கூட்டிக்கிட்டு போங்க"

"அதெல்லாம் முடியாது. ருத்து என்ன சாரி செலக்ட் பண்றாங்க நான் பாக்கணும்" என்றாள் துர்கா.

தன் அம்மா அபிராமியை ஏறிட்டான் தியாகு.

"நானும் பார்க்க போறேன்" என்றார் அவர்.

"ஒன்னும் பிரச்சனை இல்ல. நான் எங்க ரூமுக்கு போறேன். அவர் செலக்ட் பண்ணதும் என்னை கூப்பிடுங்க" தங்கள் அறையை நோக்கி நடந்தாள் சக்தி.

எந்த குழப்பமும் இன்றி,பதினைந்து  நிமிடத்தில் பத்து புடவைகளை தேர்ந்தெடுத்தான் ருத்ரன்.  அந்த புடவைகளுக்கு இடையில், அடையாளத்திற்காக காகித துண்டுகளை வைத்தான் தியாகு. சக்தி அழைக்கப்பட்டாள். அங்கு வந்து ருத்ரனுக்கு எதிரில் அமர்ந்து கொண்டாள். அனைவருக்கும் ஆர்வம் தாங்கவில்லை. அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல், பர பரவென பத்து புடவைகளை எடுத்தாள் சக்தி. ருத்ரனின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. அவன் குடும்பத்தாரோ வாயடைத்து போனார்கள். அவன் தேர்ந்தெடுத்த புடவையில்,  எட்டு புடவைகளை சக்தி தேர்ந்தெடுத்தாள். 

"என்ன ஒரு அண்டர்ஸ்டாண்டிங்...! அவங்களுக்கு இது தான் பிடிக்கும்னு உனக்கு எப்படி தெரியும்? அவங்க புடவை கூட அதிகமாக கட்டுறது இல்ல போல இருக்கே...!"

"அவளுக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு தெரியும்" என்றான் ருத்ரன் அலட்டிக் கொள்ளாமல்.

"கிரேட்..."

"நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து செலக்ட் பண்ண எட்டு புடவையை அவங்களுக்கு வாங்கி கொடு" என்றாள் துர்கா.

"இல்லக்கா... அவர் செலக்ட் பண்ணதுல, நான் செலக்ட் பண்ணாத அந்த ரெண்டு புடவையை மட்டும் நான் எடுத்துக்கிறேன்" என்றாள் சக்தி.

"ஆனா ஏன் சக்தி?"

"ஏன்னா, அது அவரோட செலக்‌ஷன்"

ருத்ரனின் முகத்தில் இருந்த புன்னகை விரிவடைந்தது. ருத்ரன் ஏன் சக்தியிடம் இவ்வளவு பிணைந்து கிடக்கிறான் என்ற காரணம் அவர்களுக்கு புரிந்தது.

தனது மணி பர்சை எடுத்து, அந்த இரண்டு புடவைகளுக்கான பணத்தை செலுத்திவிட்டு, அவற்றை தன்னுடன் எடுத்துக் கொண்டு, தன் அறையை நோக்கி நடந்தான் ருத்ரன். அவன் செல்வதை விசித்திரமாய் பார்த்து கொண்டிருந்தார்கள் அனைவரும். அவனுடன் சக்தியும் செல்ல முற்பட்ட போது,

"சக்தி கொஞ்சம் இருமா. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றார் பாட்டி.

"சொல்லுங்க பாட்டி"

"ருத்ரன் ஆபீசுக்கு போகணும்னு முடிவெடுத்து இருக்கான் போல தெரியுது"

"ஆமாம் பாட்டி"

"அது ரொம்ப நல்ல விஷயம். ஆனா அதை செய்றதுக்கு முன்னாடி, அவன் ஒரு தடவை செக்கப்புக்கு போயி, டாக்டர் சர்டிஃபிகேட் வாங்கிக்கிட்டா நல்லதுன்னு நினைக்கிறேன்"

"எதுக்கு பாட்டி? அப்படி ஒரு சர்டிஃபிகேட் வாங்க வேண்டிய அவசியம் என்ன இருக்கு? அவர்கிட்ட யார் சர்டிஃபிகேட் கேட்கப் போறாங்க?"

"நம்ம ஆபீஸ்ல  வேலை செய்றவங்க, அவனைப் பார்த்து, பயப்படலாம் இல்லையா" என்றாள் துர்கா.

"அப்படின்னா அவங்க வேலையை விட்டுட்டு போகட்டும்" என்றாள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சக்தி.

"இல்ல சக்தி..."

"ப்ளீஸ் பாட்டி... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவர் எப்படி நடந்துக்கிட்டார்னு நீங்க எல்லாம் பாத்தீங்க இல்ல? யோசிக்கிற திறன் இல்லாத ஒருத்தன் எப்படி இவ்வளவு அழகா புடவை எல்லாம் செலக்ட் பண்ண முடியும்? அவர் செஞ்சாரு... அவருடைய யோசிக்கிற திறன் ரொம்பவே பர்ஃபெக்ட்டா இருக்கு. இதைவிட வேற என்ன வேணும் உங்களுக்கு?"

"அண்ணனை ஒரு தடவை செக் புக்கு கூட்டிகிட்டு போறதுல என்ன பிரச்சனை அண்ணி?" என்றான் விசு.

"அவருக்கு என்ன பிரச்சனையும் உங்களுக்கு என்ன தெரியும்? அவர் என்ன நினைக்கிறார்னு உங்களுக்கு தெரியுமா? அவர் இங்க வரவே கூடாதுன்னு நெனச்சதுக்கு முக்கியமான காரணமெ, அவர் வந்தா நீங்க அவரை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போவீங்கன்னு நினைச்சு தான் அவர் இங்க வரவே யோசிச்சாரு. அது அவரை எந்த அளவுக்கு பாதிச்சிருக்குன்னு உங்களுக்கு தெரியுமா? மறுபடியும் நீங்க அதையே தான் செய்யப் போறீங்களா? மறுபடியும் அவர் வீட்டை விட்டு போகணும்னு நீங்க விரும்புறீங்களா?"

"நிச்சயமா இல்ல சக்தி... "

"தயவுசெய்து அவரை செக்கப்புக்கு கூட்டிட்டு போகணும் என்கிற விஷயத்தை எல்லாரும் மறந்திடுங்க. ஏதோ ஒரு விதத்துல அதை செய்ய யாராவது நினைச்சீங்கன்னா, மன்னிச்சிடுங்க, அதை நான் நிச்சயம் நடக்க விட மாட்டேன்."

அதற்கு மேல் அங்கு நிற்காமல் தன் அறையை நோக்கி நடந்தாள் சக்தி, தன் மாமியார் வீட்டு மக்களை திகைப்புக்கு உள்ளாக்கி...!

 தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top