45 சிங்கப்பெண்

45 சிங்கப்பெண்

ருத்ரனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. தன் பற்களை நரநரவென கடித்தான். இந்த மனிதன் யார், சக்தியை தன்னுடன் வந்துவிடும்படி கூற? எவ்வளவு தைரியம் இருந்தால் அவன் ருத்ரனை விட்டுவிடும்படி சக்தியிடம் கூறுவான்! அவனது ரத்தம் கொதித்தது. தக்ஷிணாமூர்த்தியின் தலையை, சுவற்றில் மோதி உடைத்து விட வேண்டும் என்று தோன்றியது ருத்ரனுக்கு.

ருத்ரனின் முக பாவத்தை தான் கவனித்துக் கொண்டிருந்தாள் சக்தி. அவனது மனதில் தோன்றும் எண்ணங்களை அவளால் புரிந்து கொள்ள முடியாமல் ஒன்றுமில்லை. தக்ஷிணாமூர்த்தியையோ, அவரது வார்த்தைகளையோ அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும், ருத்ரனை எண்ணி அவளுக்கு பயம் ஏற்பட்டது. அவளுக்கு தெரியாதா ருத்ரனை பற்றி? அவன் தன் பொறுமையை இழந்தால், தட்சிணாமூர்த்தியை கொன்று குவித்து விடுவானே...!

"சக்தி கண்ணா, அவனை இங்கிருந்து போக சொல்லு. நீ என்னோட ராஜகுமாரி. உன்னை ராணி மாதிரி வச்சு வாழக்கூடிய ஒருத்தனை நான் தேடி கண்டுபிடிக்கிறேன். இவன் எதுக்குமே சரிப்பட்டு வர மாட்டான். இவன் ஒரு பைத்தியம்"

தக்ஷிணாமூர்த்தியை நோக்கி முன்னேறிய ருத்ரனை தடுக்க சக்தி முயன்றாள். ஆனால் அது நடக்கின்ற காரியமா? சீறிவரும் புயலை யாரால் தடுத்துவிட முடியும்? தக்ஷிணாமூர்த்தியை ஓங்கி ஒரு உதை விட்டான் ருத்ரன். அவர் சுருண்டு விழுந்தார்.

"எவ்வளவு தைரியம் இருந்தா, என் பொண்டாட்டி கிட்ட இப்படி எல்லாம் பேசுவ? நீ யாருடா எனக்கும் என் பொண்டாட்டிக்கும் நடுவுல? நீ அவளைப் பெத்தவனா இருந்தா என்ன இப்போ? எந்த கொம்பனாலயும் என் பொண்டாட்டியை என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது. அப்படி ஏதாவது செஞ்சா, உன்னை நான் கொன்னு போடவும் தயங்க மாட்டேன்" சிங்கமென கர்ஜித்தான் ருத்ரன்.

"பாரு, இதை தான் சொன்னேன். இவனுக்கு பொறுமையும் இல்ல... மரியாதையும் இல்ல... கோவம் மட்டும் தான்... சரியான ஆத்திரக்காரன்..."

"எனக்கு என்ன இருக்கு, என்ன இல்லைன்னு, நீ ஒன்னும் சொல்ல வேண்டாம். என்னை பத்தி உன்னை விட அதிகமாவே அவளுக்கு தெரியும்"

"உன்னை பத்தி அவளுக்கு எதுவுமே தெரியாது. நீ எதையாவது சொல்லி மாயாவை மயக்குன மாதிரி இவளையும் மயக்கியிருப்ப..."

"ஷட்ட்ட் அப்" கோவத்தில் கத்தினான் ருத்ரன்.

"என்னங்க, அமைதியா இருங்க..." என்றாள் சக்தி, அவன் கரம் பற்றி.

"எப்படி அமைதியா இருக்குறது, சக்தி?"

"இது நான் சம்பந்தப்பட்ட விஷயம் அப்படிங்கிற போது நீங்க எதுக்காக கோவப்படுறீங்க? விடுங்க நான் பேசிக்கிறேன்"

"பாரு... இது தான் என்னோட பொண்ணு. என்கிட்ட பேசணும்னு அவ விரும்புறா பாரு"

"ஆமாம். நான் உங்க கிட்ட பேசணும். நான் யாருன்னு உங்க கிட்ட சொல்லணும். நீங்க யாருன்னு கூட எனக்கு தெரியாது. என்னை பொறுத்த வரைக்கும் ஈஸ்வரனும், அம்பிகாவும் தான் என்னோட அம்மா, அப்பா"

தக்ஷிணாமூர்த்தி ஏதோ சொல்ல முயல, அவரை கையமர்த்தினாள் சக்தி.

"நீங்க என்னை பத்தி சொன்னதெல்லாம் உண்மையாவே இருக்கலாம்... டிஎன்ஏ டெஸ்ட் பண்ணி, நான் உங்க மகள் தான்னு  நீங்க நிரூபிச்சும் காட்டலாம். அதுக்காக, இவ்வளவு நாள் நான் வாழ்ந்த வாழ்க்கை உண்மை இல்லைன்னு ஆயிடுமா? அதுக்கு மதிப்பு இல்லையா? ஈஸ்வரன் என்னோட அப்பா. அம்பிகா என்னோட அம்மா. இவர் என்னோட புருஷன். திடீர்னு என்னோட வாழ்க்கையில நீங்க வந்துட்டீங்க அப்படிங்கரத்துக்காக, நான் எல்லாத்தையும் விட்டுட்டு உங்ககிட்ட வரணுமா?"

"நான் உன்னோட அப்பா"

"ஆனா, நீங்க என்னை எங்க அப்பா கிட்ட வித்துட்டீங்க. உங்களால இல்லன்னு மறுக்க முடியுமா? எங்க அப்பா கிட்ட வாங்குன பணத்தை நீங்க என்ன செஞ்சீங்க? வேண்டாம்னு குப்பைத்தொட்டியில ஒன்னும் தூக்கி போட்டுடலையே...?" சாடினாள் சக்தி

வாயடைத்து போனார், தலைசிறந்த வக்கீலான தக்ஷிணாமூர்த்தி.

"நிச்சயம் நீங்க அந்த பணத்தை செலவு செஞ்சிருப்பீங்க. அதுல ஒன்னும் தப்பு இல்ல. அந்த நேரத்துல உங்களுக்கு பணம் தேவைப்பட்டிருக்கும். அதனால அப்படி செய்யறது சகஜம் தான். ஆனா இப்போ, உங்களுக்கு என் மேல எந்த உரிமையும் இல்ல. என்னை யாரும் ராணியாக்க வேண்டிய அவசியமும் இல்ல. ஏன்னா, நான் ஏற்கனவே ராணி தான். என் புருஷனோட சாம்ராஜ்யத்துக்கு நான் தான் ராணி. நான் அவர் கூட தான் இருப்பேன். என்னோட வாழ்க்கையை நான் அவர் கூட தான் வாழ்வேன். அதை யாராலும் மாத்த முடியாது. புரிஞ்சுதா?"

"நீ என்னோட பொண்ணு தான்னு நான் நிரூபிச்சா, உன்னால என்ன செய்ய முடியும்?"

"உங்களால ஒன்னும் செய்ய முடியாது. ஏன்னா, நான் இப்போ மேஜர். எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. என் விருப்பப்படி நான் எப்படி வேணா வாழலாம்"

அங்கிருந்து செல்ல எத்தனித்து நின்றவள்,

"என்ன சொன்னீங்க? என் புருஷன் பைத்தியமா? ஆமாம், அவர் பைத்தியம் தான். அவருக்கு என் மேல பைத்தியம். வேணும்னு மனசறிஞ்சு யாரையுமே அவர் காயப்படுத்த நினைச்சதில்ல. ஆனா, அதை நீங்க செஞ்சீங்க. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, நான் யாருன்னு தெரியறத வரைக்கும், என்னை கொல்லனும்னு நீங்க நினைச்சீங்க. ஒருவேளை, நீங்க அனுப்புன ஆள் என்னை கொன்னிருந்தா என்ன செஞ்சிருப்பீங்க? இப்போ பேசுற நியாயத்தை எல்லாம் அப்பவும் பேசியிருக்க முடியுமா உங்களால? உங்களால ஒண்ணுமே செஞ்சிருக்க முடியாது. இன்னொரு தடவை, என் புருஷனை பைத்தியக்காரன்னு சொன்னீங்கன்னா நான் சும்மா இருக்க மாட்டேன். என் புருஷன் தான் எனக்கு எல்லாம். என்னை அவர்கிட்ட இருந்து பிரிக்கனும்னு நீங்க முயற்சி பண்ணீங்கன்னா, என்னோட ரொம்ப மோசமான பக்கத்தை நீங்க பார்ப்பீங்க. நீங்க என்னை பெத்தவர்னு கூட பார்க்க மாட்டேன். ஜாக்கிரதை"

அங்கிருந்து செல்ல ஒரு அடி எடுத்து வைத்தவள், ருத்ரன் அவளை அசைவின்றி மலைப்புடன் பார்த்துக் கொண்டு நின்றதை கண்டாள். அவன் கையைப் பிடித்துக் கொண்டு, அங்கிருந்து நடக்க துவங்கினாள். ருத்ரன், சாவி கொடுத்த பொம்மையை போல் அவளை பின்தொடர்ந்து சென்றான். சக்தியை, பாதம் நோகாமல் நடக்கும் பெண்ணாக தான் ருத்ரன் இந்நாள் வரை கண்டிருக்கிறான். இப்போது அவள் தக்ஷிணாமூர்த்தியை மிரட்டியது போல், அவனை ஒரு நாளும் மிரட்டியதில்லை... அவன் அவளை கடத்திக் கொண்டு வந்த போது கூட. இவ்வளவு தைரியம் திடீரென்று அவளுக்கு எங்கிருந்து வந்தது? அவர்களது வீட்டிற்கு திரும்பிச் செல்வதை பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது, அவள் அவனிடம் கூறியது அவனுக்கு நினைவுக்கு வந்தது.

*உங்களுக்கு ஒண்ணுமே இல்லையே... நீங்க நல்லா தானே இருக்கீங்க?  அப்படி இருக்கும் போது, எதுக்காக அவங்க உங்களை ஹாஸ்பிடலுக்கு  கூட்டிக்கிட்டு போவாங்க? என்ன காரணம் சொல்லி கூட்டிகிட்டு போக முடியும்? அப்படியே அவங்க செஞ்சா கூட, நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய், என் புருஷனை என்கிட்ட இருந்து பிரிக்க பாக்குறாங்கன்னு அவங்க மேல கம்ப்ளைன்ட் கொடுப்பேன். அது யாராயிருந்தாலும் சரி... உங்க குடும்பத்தை சேர்ந்தவங்களா இருந்தாலும் சரி. நீங்க என்கிட்ட எவ்வளவு ஜென்டிலா நடந்துகிட்டிங்கன்னு நான் ஜட்ஜ் கிட்ட சொல்லுவேன். என்னோட பீரியட்ஸ் டைம்ல, என்னை எவ்வளவு நல்லா  கவனிச்சிக்கிட்டிங்கன்னு சொல்லுவேன். நீங்க நல்லா தான் இருக்கீங்கன்னு நான் நிரூபிச்சு காட்டுவேன்*

இதையெல்லாம் சக்தி, ருத்ரனிடம் கூறிய போது, அவள் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதாய் எண்ணினான் ருத்ரன். ஆனால், அதற்குரிய சந்தர்ப்பம் வரும் போது, நிச்சயம் சக்தி தயங்கித் தான் நிற்பாள்.  ஏனென்றால், அவளுக்கு அவ்வளவு தைரியம் கிடையாது என்று எண்ணினான். ஆனால் இன்று, தான் கூறியது எதுவும் உணர்ச்சிவசப்பட்டு மட்டும் கூறவில்லை, அது அவள் உண்மையான உள்ளுணர்வு தான் என்று நிரூபித்து விட்டாள் சக்தி. ருத்ரனுக்கு பெருமையாய் இருந்தது. ஏன் இருக்காது? சக்தியை தன் மனைவியாய் அடைந்ததற்கு பெருமைப்பட்டவன் ஆயிற்றே அவன்! அவள் தனக்காக எதையும் செய்ய தயாராய் இருக்கிறாள் என்றால் அவன் பெருமைப்படாமல் என்ன செய்வான்?

ருத்ரன் அவளுக்காக கார் கதவை திறந்து விடும் முன், அவளே கார் கதவை திறந்து, அமர்ந்து கொண்டாள். ருத்ரன் அவளிடம் ஏதோ சொல்ல விழைய,

"என்னங்க, முதல்ல என்னை இங்கிருந்து கூட்டிகிட்டு போங்க.  நம்ம மிச்சத்தை அப்புறம் பேசலாம்" என்றாள்.

புன்னகையுடன் காரை ஸ்டார்ட் செய்தான் ருத்ரன். அவன் தட்சிணாமூர்த்தியை சுத்தமாய் மறந்தே போனான். அவன் மனதில் சக்தியையும் அவளது வார்த்தைகளையும் தவிர வேறொன்றும் இல்லை.

தக்ஷிணாமூர்த்தியின் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு, அவன் சக்தியை பார்க்க, அவள் அவனை பார்த்து இதமாய் புன்னகை புரிந்தாள்.

"உனக்கு ரொம்ப தைரியம்" என்றான்.

"அவர் உங்க கிட்ட பேசின விதம் எனக்கு பிடிக்கல. எவ்வளவு தைரியம் இருந்தா, அவர் அப்படியெல்லாம் பேசுவாரு?" என்று அவள் கோபமாய் கூறியது அவனுக்கு உன் புன்னகையை வரவழைத்தது.

"ஒருவேளை அவர் உன்னை என்கிட்ட இருந்து கொண்டு போக நினைச்சா என்ன செய்வ?"

"நான் ஒன்னும் பதுமை இல்ல. அவர் இஷ்டத்துக்கு என்னை எங்க வேணும்னாலும் எடுத்துக்கிட்டு போக... நான் சக்திருத்ரன்... என்கிட்ட வச்சுக்கிட்டா, விளைவுகள் எவ்வளவு விபரீதமா இருக்கும்னு நான் அவருக்கு காட்டுவேன்"

"என்ன செய்வ?"

"வந்து பார்க்கட்டும்... அவர் என்னை கொலை செய்ய முயற்சி செஞ்சார்னு போலீஸ்ல பிடிச்சு கொடுத்துடுவேன்"

அதைக் கேட்டு புருவம் உயர்த்தினான் ருத்ரன்.

"போலீஸ்ல பிடிச்சு கொடுப்பியா?"

"ஆமாம். அவர் என்னை கொல்ல முயற்சி செஞ்சாரு தானே?"

ஆமாம் என்று தலையசைத்தான் ருத்ரன்.

"அதான் அவர் அனுப்புன ஆள் போலீஸ் கஸ்டடியில் இருக்கானே... அந்த ஒரு சாட்சி போதாதா அவர் என்ன செஞ்சாருன்னு நிரூபிக்க?"

ஆம் என்று புன்னகை மாறாமல் தலையசைத்தான் ருத்ரன்.

"அப்புறம்..."

"அப்புறம்?"

"நீங்க தான் என் கூட இருக்கீங்களே..."

 ருத்ரனின் புன்னகை விரிவடைந்தது.

"நான் என்ன செய்வேன்?"

"மறுபடியும் என்னை கிட்னாப் பண்ணி எங்கேயாவது கொண்டு போய்ட மாட்டீங்க?" என்றாள் தன் சிரிப்பை அடக்கிக் கொண்டு.

திகைப்புடன் அவளை ஏறிட்ட ருத்ரன்,

"சத்தியமா நான் அதைத் தான் செய்யணும்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்" என்று சிரித்தான்.

"இந்த தடவை, என்னை எங்க கூட்டிட்டு போவீங்க? இமயமலைக்கா இல்ல மேற்கு தொடர்ச்சி மலைக்கா?" என்றாள் கிண்டலாக.

"இல்ல... அந்தமான் தீவுக்கு. அந்த அடர்த்தியான காட்டுக்குள்ள வந்து நம்மளை யாரும் கண்டுபிடிக்க மாட்டாங்க..."

"வாவ், தீவுக்கா...? காட்டுல கிடைக்கிற பழத்தையும், கிழங்கையும் சாப்பிட்டுக்கிட்டு ஜாலியா இருக்கலாம்" என்று சிரித்தாள் சக்தி.

சாலையின் ஓரத்தில் வண்டியை நிறுத்தினான் ருத்ரன். தாங்கள் வீட்டிற்கு வந்து விட்டோமோ என்று சுற்றும் முற்றும் பார்த்தாள் சக்தி. ஆனால் இன்னும் அவர்கள் வீட்டை வந்து அடையவில்லை. அவள் ருத்ரனை எதுவும் கேட்கும் முன், அவள் கரத்தைப் பற்றி, அவள் கையில் முத்தமிட்டான். அவன் அவளிடம் ஏதோ கூற முயற்சிக்க, தன் விரலை அவன் உதட்டின் மீது வைத்து,

"நீங்க என்ன சொல்லப் போறீங்கன்னு எனக்கு தெரியும். ஐ லவ் யூ தானே...?"

ஆம் என்று தலையசைத்தான் ருத்ரன்.

"நீங்க என்னை எவ்வளவு லவ் பண்றீங்கன்னு எனக்கு தெரியும்"

புன்னகைத்தபடி தன் வீட்டை நோக்கி காரை கிளப்பினான்.

 தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top