44 எதிர்பாராத திருப்பம்
44 எதிர்பாராத திருப்பம்
ருத்ரனின் குரலை கேட்ட தக்ஷிணாமூர்த்தி, அலமாரியை நோக்கி ஓடிச் சென்று, அதிலிருந்த துப்பாக்கியை எடுத்து தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்து கொண்டு, தன் மகளின் மரணத்திற்கு காரணமான மனிதனை சந்திக்க தரைதளம் வந்தார். அங்கு, சிவந்த விழிகளுடன் ருத்ரன் கொதிக்கும் தணல் போல் நின்றிருந்ததை கண்டார். அவனது சிவந்த விழிகளே கூறின அவன் எவ்வளவு கோபமாய் இருக்கிறான் என்பதை. ஏன் அவன் கோபமாய் இருக்க மாட்டான்? அவர் கொல்ல நினைத்தது அவனது மனைவியை ஆயிற்றே...!
ஆம், அதை செய்ய நினைத்தது அவர் தான். தனக்கு பிரியமானவர்களை இழக்கும் போது, அந்த வலி எப்படி இருக்கும் என்பதை ருத்ரனுக்கு உணர்த்துவதற்காக அவர் அதை செய்ய நினைத்தார். மாயா இறந்த போது அவருக்கு அப்படித் தான் வலித்தது.
அவரது மகள் மாயா சுட்டித்தனமும், சுறுசுறுப்பும் நிறைந்த பெண். அப்பா, அப்பா என்று அவரை சுற்றி சுற்றி வந்தவள். அவரது வாழ்க்கையாய் இருந்தவள். சில வருடங்களுக்கு முன்பு, அவரது மனைவி உடல்நல குறைவினால் இறந்து போனார். அதற்குப் பிறகு, மாயா தக்ஷிணாமூர்த்தியின் உலகமாக மாறினாள். அவருக்கு எல்லாமுமாய் இருந்தாள். அவள் விருப்பப்பட்ட அனைத்தையும் அவர் அவளுக்காக கொண்டு வந்து கொடுத்தார்... ஒன்றே ஒன்றைத் தவிர... ருத்ரன்.
முதல் சந்திப்பிலேயே ருத்ரனிடம் மனதை பறி கொடுத்தாள் மாயா. அவனை மணந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினாள். தன்னை மணந்து கொள்ளும் படி கேட்டு, அவனை சுற்றி சுற்றி வந்தாள். ஆனால், ஏனோ ருத்ரனுக்கு அவள் மீது எந்த ஒரு ஈர்ப்பும் ஏற்படவே இல்லை. எதிர்பாராத விதமாய், மாயா ஒரு விபத்தில் காலமானாள். அவளது மரணத்திற்கு ருத்ரன் தான் காரணம் என்று தட்சிணாமூர்த்தி ஆணித்தரமாய் நம்பினார். அதற்கு பழி தீர்க்க வேண்டும் என்றும் நினைத்தார். யாரும் எதிர்பாராத வண்ணமாய், மாயாவின் மரணத்தினால், ருத்ரன் மன ரீதியாய் வெகுவாய் பாதிக்கப்பட்டான். அது ஓரளவிற்கு தட்சிணாமூர்த்திக்கு சந்தோஷத்தை தந்தது. ருத்ரன் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து விடாமல், அவனை அங்கேயே வைத்திருக்க, பணத்தை வைத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்தார். தனக்கு ருத்ரனின் மீது மிகுந்த அக்கறை இருப்பது போல் காட்டிக் கொண்டு, ருத்ரனின் குடும்பத்தாரை, அவர்களுக்கே தெரியாமல் பயன்படுத்தி, மருத்துவமனையிலேயே அவனை இருக்க செய்தார். ஒருவேளை, ருத்ரன் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தாலும், அவனை கொன்று விட வேண்டும் என்று திட்டவட்டமாய் முடிவெடுத்திருந்தார். ஆனால், மருத்துவமனையை விட்டு வெளியே வந்த ருத்ரன், அனைவருக்கும் *தண்ணீர் காட்டிவிட்டு* சக்தியை தேடி சேலத்திற்கு பறந்தான். ருத்ரனை தேடி கண்டுபிடிக்க, மகேஷை நிர்ணயித்தார் தக்ஷிணாமூர்த்தி. அதன் பிறகு நடந்தவை நாம் அறிந்ததே...!
தக்ஷிணாமூர்த்தியை பார்த்த ருத்ரன், அவரை நோக்கி விரைந்து சென்று, அவர் சட்டைக்காலரை பற்றினான்.
"உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா, என்னோட சக்தியை கொல்ல நினைப்ப?" கர்ஜித்தான் ருத்ரன்.
அசைவின்றி அப்படியே நின்றார் தட்சிணாமூர்த்தி.
"நீ கொல்ல நினைச்சது யாருன்னு நெனச்ச? அவ என்னோட பொண்டாட்டி...! அவ தான் எனக்கு எல்லாமும்...! அவளை தொட நெனச்சா கூட, அடுத்த நிமிஷம் நீ உயிரோட இருக்க மாட்ட. நான் உன்னை எச்சரிக்கை பண்றேன் தக்ஷிணாமூர்த்தி, சக்திக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா, விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும். உன்னோட ஆள் மகேஷ் ஏற்கனவே போலீஸ் கஸ்டடியில் இருக்கான்"
அதைக் கேட்ட தக்ஷிணாமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். மகேஷ் போலீஸ் கஸ்டடியில் இருக்கிறானா? அதனால் தான் அவர் அவனுக்கு ஃபோன் செய்த போது அவன் பதில் அளிக்கவில்லையா? மகேஷின் மூலமாகத் தான், ருத்ரனின் மனைவியை கொல்ல வேண்டும் என்ற அவரது எண்ணத்தை ருத்ரன் தெரிந்து கொண்டு விட்டானா? அப்படி என்றால் மகேஷ் அவரது பெயரை இந்நேரம் போலீசில் கூறியிருக்க வேண்டுமே? இப்பொழுது மகேஷ் எங்கு இருக்கிறான்?
"ரொம்ப பெரிய போராட்டத்துக்குப் பிறகு எனக்கு சக்தி கிடைச்சிருக்கா. எனக்கும் அவளுக்கும் நடுவுல யார் வந்தாலும், அவங்களை கொல்ல நான் யோசிக்கவே மாட்டேன்..."
கருணையற்ற தனது கண்களை சுருக்கினார் தட்சிணாமூர்த்தி. அப்படி என்றால், சக்தியின் மூலமாக, ருத்ரன் வீழ்த்தப்படலாம்.
"நான் செத்ததுக்கு பிறகு தான் உன்னால என் சக்தியை தொட முடியும். வேணும்னா முயற்சி பண்ணி பாக்குறியா?" சீறினான் ருத்ரன்.
வாயடைத்து நின்றார் தட்சிணாமூர்த்தி. அவர் இப்பொழுது என்ன செய்யப் போகிறார்? மகேஷ் போலீசின் கஸ்டடியில் இருக்கிறான். அப்படி இருக்கும் போது, அவரால் எப்படி ருத்ரனின் மனைவியை கொல்ல முடியும்? மகேஷை விட கைதேர்ந்த ஒருவனை அந்த பணிக்காக அவர் தேடி கண்டுபிடித்தாக வேண்டும், என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அவருக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில், ருத்ரன் சக்தியை பெயர் சொல்லி அழைத்தான்.
"சக்...தி.... உள்ள வா"
திகைத்துப் போனார் தக்ஷிணாமூர்த்தி. அவனது மனைவி இங்கு தான் இருக்கிறாளா? இவனுக்கு தான் எவ்வளவு தைரியம்! இவன் உண்மையிலேயே ஒரு பைத்தியக்காரன் தான்... அதனால் தான், தன் மனைவியின் தலையை சிங்கத்தின் வாயில் வைக்கிறான். தக்ஷிணாமூர்த்தி தன் மீது எந்த அளவிற்கு கோபத்தில் இருக்கிறார் என்று ருத்ரனுக்கு தெரியவில்லை. அதனால் தான், அவர் தான் தன் மனைவியை கொல்ல முயன்றவர் என்ற உண்மை தெரிந்திருந்தும் கூட, அவரது வீட்டிற்கே அவளை அழைத்து வந்திருக்கிறான். அவள் தக்ஷிணாமூர்த்தியின் கையால் தான் மரணிக்க வேண்டும் என்ற விதி எழுதப்பட்டிருந்தால், அதை யாரால் மாற்றி விட முடியும்? ருத்ரனின் கண் முன்னாலேயே சக்தியை கொல்வது என்று முடிவெடுத்தார் தட்சிணாமூர்த்தி. எப்படி மாயா அவனது மடியில் இறந்தாளோ, அது போலவே, சக்தியும் அவனது மடியிலேயே சாகட்டும். தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த துப்பாக்கியை வெளியில் எடுக்க தயாரானார் தட்சிணாமூர்த்தி.
சக்தி தயக்கத்துடன் உள்ளே நுழைந்தாள். துப்பாக்கியை எடுக்க முன்னேறிய தட்சிணாமூர்த்தியின் கை, மாயாவை அப்படியே உரித்து வைத்தது போல் இருந்த சக்தியை பார்த்தவுடன் அப்படியே நின்றது. அதே முகம், அதே கண்கள், அப்படியே அவள் மாயாவை போலவே இருந்தாள். வெறித்த பார்வை பார்த்தபடி சிலை போல் நின்றார் தட்சிணாமூர்த்தி.
"இவ தான் என்னோட வைஃப். உனக்கு தைரியம் இருந்தா, அவளை தொட்டுப் பாரு" என்று அவருக்கு சவால் விட்டான் ருத்ரன்.
ருத்ரனை பயத்துடன் பார்த்துக் கொண்டு நின்ற சக்தியை நோக்கி விரைந்தார் தட்சிணாமூர்த்தி. அவரை எதிர்கொள்ள தயாராக இருந்த ருத்ரன், தன் கையால் அவள் தோள்களை சுற்றி வளைத்து பாதுகாப்பு வளையம் அமைத்தான். அவர் சக்தியை ஏதாவது செய்து விடுவாரோ என்று எண்ணிய ருத்ரனை, அவர் கேட்ட கேள்வி குழப்பியது... சக்தியையும் தான்.
"உனக்கு ஈஸ்வரனை தெரியுமா?" என்றார் சக்தியிடம்.
தக்ஷிணாமூர்த்தியை பார்த்து முகம் சுருக்கிய ருத்ரனை பார்த்தாள் சக்தி.
"அவர் என்னோட அப்பா..."
"இல்ல... அவன் உன்னோட அப்பா இல்ல. நான் தான் உன்னோட அப்பா" என்று இரைந்தார்.
"என்ன்னனது...?" சக்தி விழிகளை சுருக்க, ருத்ரனோ ஆச்சரியத்தில் விழி விரித்தான்.
"நீ பிறந்தப்போ, அவன் தான் உன்னை என்கிட்ட இருந்து தூக்கிக்கிட்டு போனான்" கோபத்தில் கொந்தளித்தார் தட்சிணாமூர்த்தி.
"நீங்க என்ன சொல்றீங்க?" என்றாள் சக்தி நம்ப முடியாமல்.
"ஈஸ்வரனோட வைஃப் அம்பிகாவும், என்னோட வைஃப் கிரிஜாவும் கூட பிறந்தவங்க. கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் வரைக்கும் அம்பிகாவுக்கு குழந்தை இல்ல. ஆனா என்னோட வைஃபுக்கு, கல்யாணம் ஆகி ரெண்டே வருஷத்துல ரெட்டை குழந்தை பிறந்தது... ரெண்டும் அழகான பெண் குழந்தைங்க... மாயாவும் நீயும். அப்போ நான் வசதியா இல்ல. அப்போ, நான் *லா* முடிச்சுட்டு ஒருத்தர் கிட்ட ஜூனியரா வேலை பார்த்துகிட்டு இருந்தேன். எங்க குடும்பம் பணக்கஷ்டத்தில் இருந்தது. ஆப்ரேஷன் பண்ணி தான் குழந்தைகளை எடுத்தாங்க. ஹாஸ்பிடல் பில்லை கட்ட கூட என்கிட்ட பணம் இல்ல. அந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமா பயன்படுத்திக்க நினைச்சான் ஈஸ்வரன். தான் பணம் கொடுக்கிறதாகவும், அதுக்கு ஒரு குழந்தையை தனக்கு கொடுக்கணும்னும் கேட்டான். பணத்தை கொடுத்துட்டு, உன்னை வலுக்கட்டாயமா எங்ககிட்ட இருந்து பிடுங்கிகிட்டு போனவன், உன்னையும் அம்பிகாவையும் அழைச்சுக்கிட்டு, சென்னையை விட்டே போயிட்டான். அதுக்கப்புறம் அவனை நான் பார்க்கவே இல்ல" தான் குழந்தையை தொலைத்த கதையை கூறி முடித்தார் தட்சிணாமூர்த்தி.
தக்ஷிணாமூர்த்தி கூறிய கதை உண்மையாக இருக்குமா என்று நம்ப முடியவில்லை சக்தியால். ஈஸ்வரனும் அம்பிகாவும் அவள் மீது அன்பை பொழிந்து அவளை வளர்த்தார்கள். அவர்கள் இறந்த பிறகும் கூட, அவள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக, காப்பீடு செய்து வைத்திருந்தார்கள். ஒரு நாள் கூட அம்பிகா, தனக்கு ஒரு தங்கை இருப்பதாக கூறியதில்லை. ஈஸ்வரன் பெரிய செல்வந்தர் இல்லாவிட்டாலும், வசதிக்கு குறைவில்லாத நல்வாழ்வு வாழ்ந்திருந்தார். அவரது சொத்துக்கள் அனைத்துமே சக்தியின் பெயரில் தான் இருந்தன. அவளது எதிர்காலத்திலும் அவள் சந்தோஷமாய் வாழ வேண்டும் என்று எண்ணினார் ஈஸ்வரன். அதனால் தான் ஒரு பெரிய தொகைக்கு தன்னை காப்பீடு செய்து வைத்திருந்தார். ஆனால் இந்த மனிதன் கூறுயது, நம்ப முடியாததாய் இருந்தது.
"இல்ல. நீங்க சொல்றதை நான் நம்ப மாட்டேன்" என்றாள் சக்தி.
"நான் சொல்றது பொய்யா இருந்தா, உங்க அப்பா ஈஸ்வரனையும், உங்க அம்மா அம்பிகாவையும் எனக்கு எப்படி தெரியும்?"
அவர் கேட்ட கேள்விக்கு பதில் கூற முடியவில்லை சக்தியால் அவளுக்கு குழப்பமாய் இருந்தது.
"அவங்க அப்பா என்ன வேலை செஞ்சுகிட்டு இருந்தாரு?" என்றான் ருத்ரன்.
"சென்னையில இருந்தப்போ, சின்னதா ஒரு ஸ்வீட் ஷாப் வச்சு நடத்திக்கிட்டு இருந்தான். இங்கிருந்து போனதுக்கு அப்புறம் கூட, அவன் அதைத் தான் செஞ்சு இருக்கணும்"
ருத்ரனும், சக்தியும் திகைத்து போனார்கள்.
"நீ என்னோட மகள். என்னோட வைஃபும் பெரிய மகளும் இறந்ததற்கு பிறகு, எனக்குன்னு யாருமே இல்லன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். ஆனா நீ இருக்க. உனக்கு, உன்னோட அப்பா நான் இருக்கேன். இனிமே உன்னை நான் நல்லா பாத்துக்குவேன்" என்று உணர்ச்சிவசப்பட்டார் தட்சிணாமூர்த்தி.
நிம்மதி பெருமூச்சு விட்டான் ருத்ரன். இதற்குப் பிறகு தட்சிணாமூர்த்தியால் அவர்களுக்கு எந்த தொல்லையும் இருக்காது அல்லவா? ஆனால் தட்சிணாமூர்த்தி உதிர்த்த அடுத்த வார்த்தைகள் அவர்கள் இருவரையும் ஆட்டிப் பார்த்தது.
"நீ இனிமே இவன் கூட இருக்க வேண்டிய அவசியம் இல்ல ( ருத்ரனை சுட்டிக்காட்டி ) இவன் ஒரு பைத்தியக்காரன். உண்மையான காதலுக்கு அர்த்தம் தெரியாதவன். அதனால தான் உங்க அக்கா மாயா இறந்து போனா. நீ என் கூட இங்கேயே இரு. அவனை இங்கிருந்து போக சொல்லு. இனிமே உனக்கு அவன் வேணாம்." தக்ஷிணாமூர்த்தி அடுக்கிக் கொண்டே சென்றதைக் கேட்ட சக்தி உறைந்து நின்றாள்.
அப்போது, ருத்ரனின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்று கூற வேண்டிய அவசியமே இல்லை அல்லவா?
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top