43 மீண்டும் சென்னைக்கு
43 மீண்டும் சென்னைக்கு
மறுநாள் சென்னைக்கு கிளம்பி செல்வது என்று முடிவெடுத்தான் ருத்ரன். என்ன செய்ய வேண்டும் என்பதையும் தீர்மானித்துக் கொண்டான். அப்போது அவனது முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது. சக்தி, சுயநினைவுடன் அவனுடன் பயணிக்க போவது இது தான் முதல் முறை. இதற்கு முன் அவள் சுயநினைவின்றி தான் இருந்திருக்கிறாள்... இல்லை இல்லை... அவளை சுயநினைவிழக்கச் செய்து, இவன் தான் அவளை சேலத்தில் இருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து ஓசூருக்கும் கொண்டு வந்தான்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த காலகட்டத்தில், மாயாவின் வார்த்தைகளை ருத்ரன் அடிக்கடி நினைவு கூர்ந்து கொண்டே இருந்தான். அவன் எப்படி அவளது வார்த்தைகளை நம்பினான் என்று அவனுக்கே புரியவில்லை. மாயாவால் அனுப்பப்பட்ட பெண்ணை, ஒரு நாள் நிச்சயம் சந்திப்போம் என்று நம்பினான் அவன். அவளை சந்திப்பதற்காகவே மருத்துவமனையில் இருந்து வெளியே வர வேண்டும் என்று நினைத்தான். ஆனால், அந்த பெண் எப்படி இருப்பாள் என்று அவனுக்கு தெரியாது. சக்தியை சேலத்தில் சந்தித்த போது, அவனது வாழ்க்கையை புரட்டி போட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது. சக்தி அவனை முழுமனதாய் ஏற்றுக்கொண்டு காதலிக்க தொடங்கி விடுவாள் என்பது, அவன் சிறிதும் எதிர்பாராதாது. அவன் மீது அவள் பொழிந்த அன்பு, அவனை பேராசை காரனாக மாற்றியது. நல்ல வேலை அவன் சக்தியை இழக்கவில்லை. மகேஷின் துப்பாக்கி குண்டு அவளை துளைத்திருந்தால், நிச்சயம் மகேஷ் இந்நேரம் தன் உயிரை விட்டிருப்பான். ருத்ரன் அவனை அப்போதே அடித்துக் கொன்றிருப்பான். நாளை சென்னைக்கு திரும்பி செல்வது என்று ஒருமனதாய் முடிவெடுத்து விட்டான் ருத்ரன். அந்த முடிவு, முழுக்க முழுக்க சக்திக்காக மட்டும் தான்.
சக்தி அவனது தலையை மெல்ல வருடி கொடுக்க, கண்களைத் திறந்து அவளைப் பார்த்து புன்னகை புரிந்தான் ருத்ரன்.
"எதைப் பத்தி யோசிச்சுக்கிட்டு இருக்கீங்க?"
"உன்னை தவிர வேற எதை பத்தி நான் யோசிக்க போறேன்?" அவள் கையைப் பிடித்து, தன் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டான்.
"உங்களுக்கு யோசிக்க, என்னைத் தவிர வேறு எதுவுமே இல்லையா?"
"உன்னைத் தவிர வேற எதை பத்தியும் யோசிக்க நான் விரும்பல"
"என் மேல இவ்வளவு பைத்தியமா இருக்காதீங்க" ஒன்றுமே இல்லாத அவனது நெற்றியை துடைத்து விட்டபடி கூறினாள்.
"ஏன்? நான் ஏன் பைத்தியமா இருக்க கூடாது?"
"நீங்க தன்னிச்சையா இருக்க பழகுங்க. யாரையும் சார்ந்து இருக்காதீங்க. அப்போ தான் உங்களால ஸ்ட்ராங்கா இருக்க முடியும். யாருக்கும், எதுக்கும், தேவை இல்லாத முக்கியத்துவம் கொடுத்து, உங்களை நீங்களே பலவீனமடைய செஞ்சுக்காதிங்க"
அவளை அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்த ருத்ரன்,
"நான் உன்னை ஒன்னு கேட்கலாமா?" என்றான்.
"கேளுங்க"
"நீ தன்னிச்சையா இருக்கணும்னு விரும்புரியா? என்னை டிப்பென்ட் பண்ணி இருக்கிறது உனக்கு பிடிக்கலையா? நான் இல்லாம நீ ஸ்ட்ராங்கா இருக்கணும்னு நினைக்கிறியா? நீ எனக்கு கொடுக்கிற முக்கியத்துவம், உன்னை பலவீனப்படுத்துதுன்னு நினைக்கிறாயா?"
இல்லை என்று தலையசைத்த சக்தி,
"நான் அந்த அர்த்தத்தில் சொல்லலங்க" என்றாள்.
"வேற எந்த அர்த்தத்துல சொன்ன?"
"உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நீங்க என் மேல காமிக்கிற இன்வால்வ்மெண்ட், உண்மையிலேயே எனக்கு ரொம்ப பயத்தை தருது. உங்களோட இந்த இன்வால்வ்மெண்ட், நம்மளை எங்க கொண்டு போய் நிறுத்த போகுதுன்னு எனக்கு தெரியல"
"நம்ம ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கக் கூடிய ஒரு இடத்துல தான் கொண்டு போய் நிறுத்தும்"
பெருமூச்சு விட்டாள் சக்தி.
"எது உன்னை இதையெல்லாம் யோசிக்க வச்சது?"
"நீங்க அந்த ஆளை போட்டு அடிச்ச அடியை பார்த்ததிலிருந்து தான் இதெல்லாம் யோசிக்கிறேன். நீங்க அந்த ஆளை எவ்வளவு பேய்த்தனமா அடிச்சிங்க தெரியுமா? நான் மிரண்டு போயிட்டேன்..."
"அவனை நான் உயிரோட விட்டேனே... அதுக்காக சந்தோஷப்படு..."
"இதைத் தான் சொன்னேன்... இதுக்கு தான் நான் பயப்படுகிறேன்"
"இப்படிப்பட்ட புருஷன் கிடைச்சதுக்காக நீ சந்தோஷம் தான் படணும். உனக்காகவும், உன் கூட இருக்கிறதுக்காகவும் எதையும் செய்யக்கூடிய புருஷன்..."
"அதை நினைச்சு நான் ரொம்ப சந்தோஷப்பறேன். அதுல எந்த சந்தேகமும் இல்ல"
"அப்புறம் எதுக்கு தேவையில்லாம பயப்படுற?"
"ஏன்னா, நீங்க என் மேல வச்சிருக்கற அன்பு ரொம்ப அப்நார்மலா இருக்கு..."
"அதுக்காக பெருமை படு"
அவனது தோளில் சாய்ந்து கொண்ட அவள்,
"என்னங்க..." என்றாள்.
"ம்ம்ம்ம்?"
"நாளைக்கு நம்ம நிச்சயமா சென்னைக்கு போய் தான் ஆகணுமா?"
அவளைப் பற்றி பின்னால் இழுத்து ஆச்சரியமாய் பார்த்தான்.
"என்ன ஆச்சு உனக்கு? நீ பாட்டுக்கு என்னென்னமோ பேசிகிட்டு இருக்க...?"
தன் முகத்தில் தவிப்பை வெளிப்படுத்தினாள் சக்தி.
"ஏன் நீ இவ்வளவு டிஸ்டர்ப்டா இருக்க, சக்தி?"
"நம்ம சென்னை போறோம். மறுபடியும் நம்மளை யாராவது அட்டாக் பண்ணா என்ன செய்றது?"
"அதைப் பத்தி நீ கவலைப்படாத அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ செய்ய வேண்டியதெல்லாம், உன் புருஷனை காதலிக்கிறது... அவனை உன்னை காதலிக்க விடுறது... சரியா?"
"ம்ம்ம்"
"குட் "
"உங்ககிட்ட நான் இன்னொரு விஷயமும் சொல்லணும்"
"இப்போ என்ன?"
"சொல்லலாமா, வேண்டாமான்னு தெரியல"
"நீ எங்கிட்ட என்ன வேணா சொல்லலாம்"
"ஓ..."
"என்ன?"
அவள் பெருமூச்சை வெளியேற்றி பார்க்க,
"சொல்லு சக்தி" சிறிது சிறிதாய் பொறுமை இழந்து கொண்டிருந்தான் அவன்.
ஆனால் சக்தியோ, பொறுமையாய் அவன் முகத்தை ஆராய்ந்தாள்.
"உனக்கு என்ன சக்தி பிரச்சனை? கேட்டா ஏன் பதில் சொல்லாம இருக்க?" கோபத்தில் உரக்க கத்தினான்.
"நீங்க ரொம்ப லட்சணமா இருக்கீங்க" என்றாள் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு.
ருத்ரனின் முகம் ஒரு கணம் ஸ்தம்பித்து இயல்பு நிலைக்கு திரும்பியது. அவனது கோபம் ஜன்னல் வழியே பறந்து சென்றது. உதடு கடித்து புன்னகை புரிந்தான்.
"சரி, அதனால? நான் லட்சணமா இருந்து என்ன பிரயோஜனம்? நீ தான் என்னை சட்டை செய்யவே மாட்டேங்குறியே..."
"எல்லாம் செஞ்சுகிட்டு தான் இருக்கேன்..."
"எப்போ?"
"எப்பவும் தான்... நீங்க என் பக்கத்துல இருந்தாலும், இல்லனாலும்..."
"என் பொண்டாட்டி என்னை திருட்டுத்தனமா சைட் அடிக்கிறது இவ்வளவு நாள் எனக்கு தெரியாம போயிடுச்சு... ஏன்? நீ அதை ஓப்பனாவே செய்யலாமே...! உனக்கு எல்லா ரைட்ஸும் இருக்கே..."
"இப்போ நான் வேற என்ன செஞ்சுகிட்டு இருக்கேன்?"
"என்ன செஞ்சுகிட்டு இருக்க?" புன்முறுவல் பூத்தான்.
"உங்களை ரசிக்கிறேன்"
"கண்ணாலயா?"
"இதயத்தால"
உள்ளூர புன்னகைத்துக் கொண்டான் ருத்ரன்.
"நான் நம்ப மாட்டேன்"
"ஏன் நம்ப மாட்டீங்க?"
"நான் நம்பனும்னா என்னை கிஸ் பண்ணு"
அவன் கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதித்தாள் சக்தி.
"இது பொண்டாட்டி புருஷனுக்கு குடுக்குற முத்தம்மா?" அழகாய் புன்னகைத்தான்.
"நீங்க சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்கீங்க"
அவனது புன்னகை விரிவடைந்தது.
"அப்பறம்?"
"நீங்க என்னை பார்க்குறது அழகு... சிரிக்கும் போது அழகு.... தூங்கும் போது அழகு..."
"போதும் போதும் நிறுத்து..."
"போதாது போங்க" அவன் கன்னத்தோடு தன் கன்னம் உரசினாள்.
அவளை தன் மீது சாய்த்து கொண்டு கட்டிலில் உருண்டான்.
"மனசுக்கு பிடிச்சவங்களை முழுசா எப்படி ரசிக்கிறதுன்னு நான் உனக்கு சொல்றேன்" அவளது ரோஜா இதழ்களை பறித்தான் ருத்ரன்.
மறுநாள்
ருத்ரனும் சக்தியும் சென்னைக்கு செல்ல தயாரானார்கள். அவர்களது பொருள்களை காரில் ஏற்றிவிட்டு ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தான் ருத்ரன். அந்த வீட்டின் காவலாளிகளிடம் விடைபெற்றாள் சக்தி. அவர்கள் பளிச்சென்ற புன்னகையுடன் அவளுக்கு விடை கொடுத்தார்கள். ருத்ரனுக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டாள் சக்தி.
"சீட் பெல்டை போடு, சக்தி" சிரித்தபடி கூறினான் ருத்ரன்.
சீட் பெல்டால் தன்னை பிணைத்துக் கொண்டு, நேராய் அமர்ந்து கொண்டாள் சக்தி. சென்னையை நோக்கி காரை செலுத்த துவங்கினான் ருத்ரன். ஆனால், அவன் ஓசூருக்கு வரும் பொழுது செலுத்திய வேகத்தில் செலுத்தாமல், மெல்லவே செலுத்தினான்.
"ஏன் சிரிக்கிறீங்க?" என்றாள் சக்தி.
"உன்னை நான் ஓசூருக்கு கொண்டு வரும் போது, நீ என் பக்கத்துல உட்கார்ந்து என்கிட்ட பேசிகிட்டு வந்தா நல்லா இருக்கும்னு யோசிச்சேன். இன்னைக்கு என்னோட நினைப்பு நிஜமாயிடுச்சு"
சென்னை வரும் வழியில், அவர்கள் பல விஷயங்களை பேசிக் கொண்டு வந்தார்கள். இது தான் முதல் முறை, ருத்ரன் இவ்வளவு பேசியது. வழக்கமாய், அவன் காரை செலுத்தும் போது அதிகம் பேசுவதில்லை. ஆனால் பக்கத்தில் இருப்பது சக்தி என்பதால், அவனால் பேசாமல் இருக்க முடியவில்லை.
*சென்னை உங்களை வரவேற்கிறது* என்ற பலகையை பார்த்தவுடன்,
"நம்ம சென்னைக்கு வந்துட்டோம்ங்க" என்றாள் சக்தி ஆர்வமாய்.
ஆம் என்று தலையசைத்தான் ருத்ரன்.
ருத்ரனின் வீடு இருக்கும் பகுதியை அவர்கள் கடந்து செல்வதை கவனித்தாள் சக்தி.
"ஏங்க, இங்க தங்க உங்க வீடு இருக்கு" என்றாள், அதை அவன் மறந்து விட்டானோ என்பது போல்.
*எனக்கு தெரியாதா?* என்பது போல் அவளை கிண்டலாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு, தொடர்ந்து காரை செலுத்தினான் ருத்ரன்.
"நம்ம எங்க போறோம்?"
"சொல்றேன்"
"நம்ம பார்ம் ஹவுஸ்க்கு போறோமா?"
"இல்ல"
அதற்குப் பிறகு அவனை எந்த கேள்வியும் கேட்கவில்லை சக்தி. ஒரு பிரம்மாண்ட வீட்டினுள் அவர்களது கார் நுழைந்தது. காரை நிறுத்திய ருத்ரன், அவளுக்கு கார் கதவை திறந்து விட்டான். அது எந்த இடம் என்று தெரியாத சக்தி, இங்கும் அங்கும் பார்த்தபடி காரை விட்டு கீழே இறங்கினாள்.
அவள் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்ற ருத்ரன், வீட்டின் முகப்பில் இருந்த சிறிய வரவேற்பு அறைக்கு வந்தவுடன்,
"இங்கேயே இரு சத்தி. நான் இப்போ வரேன்" என்றான்.
சரி என்று தலையசைத்தாள் சக்தி. உள்ளே சென்ற ருத்ரன்,
"தக்ஷிணாமூர்த்...தி..." அந்த வீடு அதிரும்படி குரல் எழுப்பினான்.
ஐம்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் அவனது குரல் கேட்டு அதிர்ந்தார். ருத்ரன் இங்கு வந்திருக்கிறானா? அவன் எதற்காக இங்கு வந்திருக்கிறான்? மகேஷ் அவனது மனைவியை கொன்று விட்டானா? அலமாரியை நோக்கி ஓடிய அவர், துப்பாக்கியை கையில் எடுத்துக் கொண்டார். ஆம் அவர் மாயாவின் தந்தை தக்ஷிணாமூர்த்தி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top