42 இனிய இதயம்
42 இனிய இதயம்
ருத்ரனின் முகத்தில் சொல்ல முடியாத அதிர்ச்சி தெரிந்தது. இருந்தாலும் அவன் அவளை குறுக்கீடு செய்யவில்லை.
"நான் உங்க வீட்டுக்கு போனேன். அங்க தான் நான் உங்களைப் பத்தியும் உங்களோட செயல்களுக்கான காரணத்தையும் தெரிஞ்சுகிட்டேன். நீங்க எதுக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். உங்க குடும்பத்தை சேர்ந்தவங்க, உங்க வாழ்க்கையில் நடந்த விஷயங்களை என்கிட்ட சொன்னாங்க. நான் உங்ககிட்ட திரும்பி வந்துட்டேன். அது நிச்சயமா பரிதாபத்துனால கிடையாது. என் வாழ்க்கையில நடக்கிற சம்பவங்களை நெனைச்சி நான் ரொம்ப குழம்பிப் போயிருந்தேன். உங்க கிட்டயிருந்து தப்பிச்சு போகணும்னு நினைச்சேனே தவிர, எங்க போறதுன்னு எனக்கு தெரியல. அதுக்கப்புறம் என்ன செய்யறதுன்னு எந்த திட்டமும் என்கிட்ட இல்ல. உங்க குடும்பத்தை சந்திச்சதுக்கு பிறகு, உங்க கூடயே இருக்கிறதுன்னு முடிவு பண்ணேன். ஏன்னா, நீங்க என்கிட்ட எதிர்பார்த்தது வெறும் அன்பை மட்டும் தான்னு நான் புரிஞ்சுகிட்டேன். என் வாழ்க்கையில அப்படிப்பட்ட தூய்மையான இதயம் தான் தேவைன்னு நான் நெனச்சேன். நீங்க என்கிட்ட ரூடா நடந்துக்கிட்டாலும், அது கலப்படம் இல்லாம இருந்தது. அதனால தான் நான் உங்களை மனப்பூர்வமாக ஏத்துக்கிட்டு உங்ககிட்ட திரும்பி வந்தேன்"
எச்சில் விழுங்கினான் ருத்ரன்.
"நான் இதை உங்ககிட்ட வேணுமின்னு மறைக்கல. உங்ககிட்ட சொல்லனும்னு தான் நினைச்சுகிட்டு இருந்தேன். ஆனா ஒன்னு பின்னாடி ஒன்னு, எல்லாம் ரொம்ப வேகமாக நடந்துடுச்சி"
"ஆனா, எங்க வீட்டுக்கு போகணும்னு நீ என்னை ஃபோர்ஸ் பண்ணவே இல்லையே...? எங்க ஃபேமிலியை சேர்ந்தவங்க யாரும் என்னை திரும்ப கூட்டிக்கிட்டு வர சொல்லி உன்கிட்ட சொல்லலையா?"
"சொன்னாங்க. நானும் கூட உங்களை அங்க கூட்டிக்கிட்டு போகணும்னு தான் நினைச்சேன். ஆனா உங்க மனசுல இருக்குற போராட்டத்தை தெரிஞ்சுக்கிட்ட பிறகு, உங்க மன நிம்மதியை தவிர வேற எதுவுமே எனக்கு முக்கியமா தெரியல. எல்லாத்தையும் விட அதிகமா, உங்களுக்கு தேவைப்பட்ட நம்பிக்கையை உங்களுக்கு நான் கொடுக்க நினைச்சேன். நான் உங்ககிட்ட திரும்பி வந்த போது, என் முன்னால இருந்த வாழ்க்கையை ஏத்துக்க மட்டும் தான் முடிவு பண்ணி இருந்தேன். ஆனா உங்க கிட்ட நெருங்கி பழக பழக, நான் உங்களை காதலிக்க ஆரம்பிச்சுட்டேன். அந்த காதல், ஒவ்வொரு நிமிஷமும் அதிகமாயிட்டே இருந்துச்சி. நீங்க என்னை மனசார நம்புனிங்க. அந்த நம்பிக்கைக்கு முழு தகுதியோடு இருக்கணும்னு நான் நெனச்சேன். அதனால தான் எதையும் உங்ககிட்ட இருந்து மறைக்க வேண்டாம்னு சொல்லிட்டேன்"
"அப்படின்னா நீ என்னோட ஃபேமிலியை ஏற்கனவே மீட் பண்ணி இருக்க... "
"ஆமாம்"
"அவங்க என்னை வீட்டுக்கு கூட்டிகிட்டு வர சொல்லி சொன்னாங்க..."
"ஆமாம்"
"அப்படின்னா நீ ஃபோன்ல பேசினது எங்க அக்கா கிட்ட தான். இல்லையா?"
ஆமாம் என்பது போல் மெல்ல தலையசைத்தாள்.
"நம்ம எங்க வந்திருக்கோம்னு நீ அவங்க கிட்ட சொல்லலையா?"
அவள் இல்லை என்று தலையசைத்தாள்.
"ஏன் சொல்லல? அவங்க உன் மேல அப்சட்டா இருப்பாங்க"
"என்னால அவங்களுக்கு காரணம் சொல்ல முடியும். ஆனா உங்களை அப்செட் பண்ண நான் விரும்பல. எல்லாரை விடவும், எல்லாத்தையும் விடவும் எனக்கு நீங்க தான் முக்கியம்"
தன் கைகளை கட்டிக்கொண்டு ஆழம் காண முடியாத பார்வை பார்த்தபடி நின்றான் ருத்ரன்.
"என்னங்க, என்னை நம்புங்க. நான் ஒத்துக்குறேன், நான் உங்ககிட்ட இருந்து தப்பிச்சு போகணும்னு நினைச்சது உண்மை தான். ஆனா உங்க கிட்ட திரும்பி வந்ததுக்கு பிறகு, நான் அப்படி செய்ய நினைக்கல. அதுக்கு பிறகு நான் செஞ்சது எல்லாமே என் மனசார தான் செஞ்சேன். நான் உண்மையிலேயே உங்களை ரொம்ப காதலிக்கிறேன்"
சோபாவில் அமர்ந்து கொண்டு வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான் ருத்ரன். அவன் பக்கத்தில் அமர்ந்த சக்தி, அவன் முகத்தை தன்னை நோக்கி திருப்பினாள்.
"ஐ அம் சாரிங்க..."
"எதுக்கு? என்னை காதலிக்கிறத்துக்காகவா? இல்ல எனக்கு உண்மையா இருக்கிறதுக்காகவா?"
"இல்லங்க... நான் அப்படி சொல்லல" என்று அவன் கூறியதன் அர்த்தம் புரியாமல் கூறிவிட்டு, தன்னைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்த அவனை நோக்கினாள் சக்தி.
"நீ என்னை ரொம்ப ஸ்பெஷலா ஃபீல் பண்ண வச்சுட்ட சக்தி"
"உங்களுக்கு என் மேல கோபம் இல்லையே?" என்றாள் அவனது சிரிக்கும் கண்களை பார்த்து.
இல்லை எனறு தலையசைத்தான்.
"நீங்க என்னை நம்புகிறீர்களா?"
"எல்லாரையும் விட அதிகமா..."
அவனை அணைத்துக் கொண்டாள் சக்தி.
"நான் ரொம்ப பயந்துட்டேங்க"
"எதுக்காக பயப்படனும்? நீ ரொம்ப நல்ல பொண்ணு. ருத்ரனுக்கு நல்லவங்களை ரொம்ப பிடிக்கும்"
"எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும்"
அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டான் ருத்ரன்.
"நான் உங்க வீட்டுக்கு போனது உங்களுக்கு தெரிஞ்சா, நீங்க என் மேல கோபப்படுவீங்கன்னு நெனச்சேன்"
"கோபப்பட்டு இருப்பேன்... ஒருவேளை, என்னை நீ அங்க வரச் சொல்லி கட்டாயப்படுத்தி இருந்தாலோ... என்னை உனக்கு பிடிக்காம போயிருந்தாலோ... ஆனா நீ ரொம்ப நல்லவ" அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.
"என்னங்க..."
"ம்ம்ம்?"
"நம்ம உங்க வீட்டுக்கு போறோம் தானே? "
"ம்ம்ம்ம் "
"உண்மையிலேயே, அங்க போகணும்னு நினைக்கிறீங்களா? இல்ல, எனக்காக அதை செய்றீங்களா?"
"ரெண்டும் தான். நீ மட்டும் என் பக்கம் இல்லாம இருந்திருந்தா, நான் அங்க போகணும்னு நினைச்சிருக்க மாட்டேன். என் குடும்பத்தில் இருந்து மட்டமில்ல, இந்த சமுதாயத்துலயும் உனக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கணும். நம்ம எவ்வளவு நாள் இந்த மாதிரி இங்கேயும் அங்கேயும் அலைஞ்சுகிட்டு இருக்க முடியும்?"
அவளது கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டு,
"சக்தி, நீ தான் என்னுடைய பலம். நீ என் கூட இருந்தா நான் எங்க வேணாலும் வர தயார்"
தன் நெற்றியால் அவன் நெற்றியை தொட்டு புன்னகை புரிந்தாள் சக்தி.
"நம்ம சென்னைக்கு வேற ஒரு காரணத்துக்காகவும் போகணும். அங்க முக்கியமான வேலை இருக்கு"
"என்னங்க அது?"
"நம்ம சென்னைக்கு போகும் போது அதை நீயே தெரிஞ்சுக்குவ"
தன் கைபேசியை எடுத்து அவளிடம் நீட்டிய ருத்ரன்,
"உன் நாத்தனாருக்கு ஃபோன் பண்ணி பேசு" என்றான்.
தன் உதட்டை கடித்து, புருவம் உயர்த்தி அவனை தயக்கத்துடன் பார்த்தாள் சக்தி.
"பேசு"
"நீங்க அவங்க கிட்ட பேசுவீங்களா?"
மாட்டேன் என்று தலையசைத்து,
"நீ பேசு" என்றான்.
துர்காவின் எண்ணுக்கு அழைப்பு விடுத்து, ஸ்பீக்கரை ஆன் செய்தாள் சக்தி. ருத்ரன் புன்னகை புரிந்தான். அவன் பார்க்க வேண்டும் என்று நினைத்தது அதைத் தான். அவனது எண்ணத்தை பூர்த்தி செய்ய சக்தி தவறுவதே இல்லை.
அனைவருடனும் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தாள் துர்கா. தன் கைபேசி மணி அடித்ததை கேட்டு அதை நோக்கி திரும்பியவள், சக்தியின் பெயர் ஒளிர்ந்ததை பார்த்து, குதூகுலமானாள்.
"சக்தியோட ஃபோன்" என்றபடி தன் கைபேசியை எடுத்தவள், அதை தன் காதுக்கு கொடுத்தாள்.
"சக்தி... எப்படி இருக்கீங்க? எங்க இருக்கீங்க? நீங்க நல்லா இருக்கீங்க இல்ல?"
"நான் நல்லா இருக்கேன் கா. அவரும் நல்லாயிருக்கார்"
"உங்க கிட்டயிருந்து ஃபோன் வரலைன்னதும் நான் எவ்வளவு தவிச்சு போயிட்டேன் தெரியுமா? நீங்க எங்க இருக்கீங்க?"
"நாங்க ஓசூரில் இருக்கோம்"
"ஓசூர்லயா?"
"ஆமாம்"
"ருத்ரா எப்படி இருக்கான்? அவன் உங்க கிட்ட சண்டை எதுவும் போடறது இல்லையே?"
அதைக் கேட்ட ருத்ரன் நடுவிரலால் தன் நெற்றியைத் தேய்த்தான். சக்தி உள்ளூர சிரித்துக் கொண்டாள்.
"நாங்க சென்னைக்கு வறோம் கா"
"என்ன்னனது? நீங்க என்ன சொன்னீங்க?"
"நாங்க நம்ம வீட்டுக்கு வறோம்ன்னு சொன்னேன்"
"நீங்க ருத்ரனை சம்மதிக்க வச்சிட்டீங்களா?"
"இல்லக்கா... அதை செஞ்சது நான் இல்ல. உண்மையை சொல்லப் போனா, யாராலும் அவரை எதையும் செய்ய வைக்க முடியாது. அது முழுக்க முழுக்க அவருடைய முடிவு. அவர் தான் வீட்டுக்கு வரணும்னு விருப்பப்படுறாரு"
"எப்போ வரப் போறீங்க சக்தி?"
"தெரியல அக்கா. அவர் தான் அதையும் முடிவு பண்ணுவாரு"
"உங்களுக்காக நாங்க எல்லாரும் காத்துக்கிட்டு இருப்போம்"
"சரிங்க அக்கா, பாட்டி, மாமி, அண்ணன் எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க"
"நிச்சயமா சொல்றேன் சக்தி"
அழைப்பை துண்டித்தாள் சக்தி.
அவளை தன்னிடம் நெருக்கமாய் இழுத்துக் கொண்ட ருத்ரன்,
"ஏன் அவங்க கிட்ட பொய் சொன்ன?" என்றான்.
"நான் எப்ப பொய் சொன்னேன்?"
"அது என்னோட முடிவுன்னு சொன்னியே..."
"அது உங்க முடிவு இல்லையா?"
தன் உதடுகளை அழுத்தி சிரித்தான் ருத்ரன்.
"நீ ஒரே ஒரு கண்டிஷனுக்கு ஒத்துக்கிட்டா தான் நான் எங்க வீட்டுக்கு வருவேன்"
"என்ன கண்டிஷன்?"
"இப்போ நீ என் கூட இருக்கிற மாதிரி, அங்கேயும் நீ எல்லா நேரமும் என் கூடவே இருக்கணும்"
சக்தியின் கண்கள் தெறித்து கீழே விழுந்து விடும் அளவுக்கு விரிவடைந்தது.
"என்ன? பதிலையே காணோம்"
"என்னங்க உங்க குடும்பம் ரொம்ப பெருசு..."
இடையில் குறுக்கீடு செய்து,
"நம்ம குடும்பம்" என்றான்
தன் உதடு கடித்து ஆம் என்று தலையசைத்த அவள்,
"நம்ம குடும்பம் ரொம்ப பெருசு"
"அதனால?
"எல்லாரும் ஒண்ணா இருக்கும் போது, நான் மட்டும் எப்படி உங்க கூட இருக்க முடியும்? அவங்க தப்பா நினைக்க மாட்டாங்களா?"
"அப்படின்னா அவங்க யாரையும் அவங்க ரூமை விட்டு வெளியில் வர வேண்டாம்னு நான் சொல்லிடுறேன்"
"அய்யய்யோ, அப்படியெல்லாம் எதுவும் செஞ்சுடாதீங்க"
"அவங்களை நான் எதுவும் கேட்கவும் கூடாது... நீ என்கூடயும் இருக்க மாட்டேன்னா எப்படி?"
"அவங்க வெளியில இல்லாதப்போ நான் உங்க கூட இருக்கேன்"
"அப்படின்னா நீ ராத்திரியில மட்டும் தான் என் கூட இருக்க முடியும். அவங்க எல்லா நேரமும் ஒன்னா தான் இருப்பாங்க"
ஒன்றும் புரியாமல் நகம் கடித்தால் சக்தி.
"நம்ம வீட்டுக்கு திரும்பி போற பிளானை கேன்சல் பண்ணிடுறது நல்லது என்று நினைக்கிறேன்"
"ஆனா நம்ம ஃபோன் பண்ணி வறோம்னு சொல்லிட்டோமே..."
"அதனால என்ன? மறுபடியும் ஃபோன் பண்ணி, நாங்க வரலைன்னு சொல்லிடு" என்றான் தன் சிரிப்பை அடக்கியபடி.
"சரி" என்று முகத்தை சோகமாய் வைத்த படி தன் கையை அவனை நோக்கி நீட்டினாள், அவனது கைபேசியை கேட்டு.
அவளைப் பார்த்து புன்னகைத்த ருத்ரன்,
"உன் முகத்தை அப்படி வச்சுக்காத" என்று சிரித்தான்.
"உங்க ஃபோனை குடுங்க"
"தேவை இல்ல. நம்ம வீட்டுக்கு போகலாம்"
"நான் அவங்க கூட இருந்தா நீங்க அப்செட் ஆவீங்களா?"
"அவங்களை நான் பார்த்துக்கிறேன் விடு..." சோபாவை விட்டு எழுந்து, மாடி அறையை நோக்கி நடந்தான் ருத்ரன்.
பெருமூச்சு விட்டாள் சக்தி, அங்கு சென்ற பிறகு ருத்ரன் என்ன கலோபரம் செய்யப் போகிறானோ தெரியவில்லை என்று எண்ணியபடி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top