41 மறைக்கப்பட்ட உண்மை

41 மறைக்கப்பட்ட உண்மை

மகேஷை போலீசில் ஒப்படைத்துவிட்டு வந்த பின்னரே, சிவாவை வீட்டினுள் வர அனுமதித்தான் ருத்ரன். ருத்ரனின் வீட்டில் தன் கண்களை ஓடவிட்டபடி சோபாவில் அமர்ந்தான் சிவா.

"நைஸ் ஹவுஸ்" என்றான் சிவா.

அவனது மேற்பூச்சு வார்த்தைக்கு மதிப்பு கொடுக்காமல் அவனுக்கு முன்னால் வந்து அமர்ந்தான் ருத்ரன்.

"இவனுக்கு காபி கொண்டு வா சக்தி. அவன் ரொம்ப தூரம் போகணும் இல்ல??" என்றான் சிவாவை பார்த்தபடி.

சரி என்று தலையசைத்து விட்டு, சமையலறை நோக்கி செல்ல இருந்த சக்தி, அவன் கூறியதைக் கேட்டு நின்றாள்.

"என்ன சக்தி அர்ஜென்ட்? நான் அப்புறமா குடிக்கிறேன்" என்று பல்லைக்காட்டி சிரித்த அவனை பார்த்து முறைத்தான் ருத்ரன்.

"என்னை பார்த்து முறைக்காத ருத்து... நீ தானே சொன்ன, நான் காபியை தவற வேற எதுவும் கேட்கக் கூடாதுன்னு?"

"ஒரு கப் காபியை தவிர..." என்று அந்த *ஒரு* வை அழுத்தினான் ருத்ரன்.

"அதான், அதான், அப்படின்னா என்ன அர்த்தம்? நான் ஒரே ஒரு கப் காபி மட்டும் தான் சாப்பிட முடியும். அப்படித் தானே?" என்று தெளிவாக கேட்டான், அது தனக்கு சரியாய் புரியவில்லை என்பது போல.

"ஆமாம். அதே தான். ஒரு காப்பியை சாப்பிட்டுட்டு கிளம்பு" என்றான் ருத்ரன் உறுதியாக.

"ஆங்... அதுக்கு தான் சொல்றேன், ஓசூரை விட்டு கிளம்புறதுக்கு முன்னாடி, நான் அந்த ஒரு கப் காப்பியை சாப்பிட்டுகிறேன்"

"அப்படின்னா என்ன அர்த்தம்?" தன் கண்களை சுருக்கினான் ருத்ரன்.

"நீ எந்த அர்த்தத்தை புரிஞ்சுகிட்டியோ, அது தான் அர்த்தம்"

தன் கண்களால் அவனை எரித்து விடுபவன் போல் பார்த்தான் ருத்ரன்.

"சக்தி, ருத்ரன் சொன்னது மாதிரி நான் இங்க ஒரு கப் காபிக்கு மேல எதையும் சாப்பிட மாட்டேன். ஆனா, நீங்க என்னை ஏதாவது சாப்பிட்டு தான் ஆகணும்னு கட்டாயப்படுத்தினா, நான் நிச்சயம் மறுக்க மாட்டேன். ஏன்னா, நான் முடியாதுன்னு சொன்னா, நீங்க மனசு உடைஞ்சு போயிடுவீங்கல்ல?" என்றான் முகத்தை சோகமாய் வைத்துக்கொண்டு.

தனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, சக்தி ருத்ரனை பார்க்க, அவன் சிவாவின் மீது தன் கண்களால் நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தான்.

"சக்தி, இங்கே வந்து உட்காரு" என்று, அவள் சிவாவிற்கு எதையும் கொண்டு வர உள்ளே செல்லாமல் தடுத்தான் ருத்ரன்.

சக்தி, தயக்கத்துடன் சிவாவை பார்க்க, அவள் கையை பிடித்து இழுத்து தன் பக்கத்தில் அமர வைத்தான் ருத்ரன். வேறு வழியின்றி அவன் பக்கத்தில் அமர்ந்து, தலையை குனிந்து கொண்டாள் சக்தி.

"பரவாயில்லை விடுங்க சக்தி, எனக்காக நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. அவன் எப்பவுமே இப்படித் தான்"  என்றான் சாதாரணமாய்.

"உனக்காக ஒன்னும் அவ கவலைப்படல" என்றான் ருத்ரன் கோபமாய்.

"அவங்க முகத்தைப் பாரு ருத்து, அவங்க முகம் முழுக்க சோகம் எழுதி ஒட்டி இருக்கு பாரு. அவங்க ஒன்னும் உன்னை மாதிரி இல்ல. தன் சொந்த பந்தத்து மேல அவங்களுக்கு அக்கறை இருக்கும்"

"அவளுக்கு எந்த சொந்தபந்தமும் கிடையாது"

"இருக்கு... அதான் நான் வந்துட்டேனே... அவங்க மச்சினன்..."

தன் கண்களை சுருக்கி, புருவம் உயர்த்தி அவனை பார்த்தான் ருத்ரன்.

"நான் உங்க மச்சினன் இல்லையா? என்னை உங்க சொந்தகாரனா ஏத்துக்க மாட்டீங்களா, சக்தி?"

அவனுக்கு பதில் கூறாமல் சக்தி ருத்ரனை பார்க்க, சிவாவின் முகம் தொங்கி போனது. வெற்றி சிரிப்பு சிரித்த ருத்ரன்,

"நீ என்ன நெனச்ச? எல்லாத்துக்கும் அவளை சம்மதிக்க வச்சிட முடியும்னு நினைச்சியா? அவ என்னோட சக்தி. எனக்கு பிடிக்காத எதையும் அவ செய்ய மாட்டா. அதை முதல்ல தெரிஞ்சுக்கோ" என்றான் பெருமிதத்துடன், சிவாவுக்கு வியப்பினை அளித்து.

"அப்படின்னா, என்னை அவங்க மச்சினனா ஏத்துக்க சொல்லி நீ தான் கொஞ்சம் சொல்லேன்..."

"ஏன், அதே உறவை வச்சி என்னையே கார்னர் பண்ணவா?"

"உன்னை ஏன் நான் கார்னர் பண்ண போறேன் ருத்து?"

"வாயை மூடு. உன்னை பத்தி எனக்கு தெரியாது?"

"அஃப்கோர்ஸ்... உன்னை விட வேற யாருக்கு என்னை பத்தி நல்லா தெரியும்? நான் என்ன செய்வேன்னு உனக்கு நல்லா தெரியும். நான் எப்பவுமே உன் பக்கம் தான் நிப்பேன். இல்லைன்னு சொல்லுவியா நீ?"

பதில் கூறாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான் ருத்ரன்.

"பாத்தீங்களா சக்தி... நான் சொல்லல? அவன் அமைதியாயிட்டான் பாருங்க"

"அதனால என்ன இப்போ?" என்றான் ருத்ரன்.

"நான் உன்கிட்ட முக்கியமான ஒரு விஷயம் சொல்ல தான் இங்க வந்தேன்"

"என்ன?"

"நீ இங்க இருக்குற விஷயத்தை பத்தி நான் வேற யார்கிட்டயும் சொல்ல போறது இல்ல. நீ சக்தி கூட சந்தோஷமா இரு. உன் வாழ்க்கையை எப்படி வாழனும்னு விரும்புறியோ, அப்படி நீ வாழலாம். உன்னோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்"

ருத்ரன் மென்று விழுங்கினான். நம்ப முடியாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சக்தி.

"எங்க இருந்தாலும் சேஃபா இரு. அவ்வளவு தான் எனக்கு வேணும்" சில நொடி நிறுத்தினான்,

"நம்ம வீட்ல இருந்தா நீ சேஃப்பா இருப்ப. அது உனக்கும் தெரியும். ஏன் அதைப் பத்தி நினைக்க மாட்டேங்குற?" என்றான்.

"நம்ம வீட்டுக்கு திரும்பி வரணும்னு நான் ஏற்கனவே முடிவு பண்ணி இருக்கேன்" எந்த முகக் குறிப்பும் காட்டாமல் இயல்பாய் கூறினான் ருத்ரன்.

அதைக் கேட்டு மலைத்துப் போன சிவா, நம்ப முடியாமல் சக்தியை ஏறிட்டான். அப்படி கூறியது உண்மையிலேயே ருத்ரன் தானா? உண்மையிலேயே அவனை வீட்டிற்கு வர சக்தி சம்மதிக்க செய்து விட்டாளா?

"நீ என்ன நினைக்கிறேன்னு எனக்கு நல்லா தெரியும். என்னை வீட்டுக்கு வர சம்மதிக்க வச்சது சக்தி இல்ல. உண்மையை சொல்லப்போனா,  எனக்கு அங்க வர விருப்பம் இல்லைன்னு தெரிஞ்சு, அவ அங்க போக வேண்டாம்னு தான் சொன்னா"

அவன் கூறியது சிவாவை மேலும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. அதே ஆச்சரியத்துடன் அவன் சக்தியை பார்க்க, ருத்ரன் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை எதிர்கொள்ள முடியாமல் திணறினாள் சக்தி.

"நான் தான் சொன்னேனே... எனக்கு பிடிக்காத எதையும் அதை அவ செய்ய மாட்டான்னு..." என்றான் ருத்ரன்.

"எது எப்படியோ, நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு திரும்பி வரணும்னு முடிவெடுத்தது எனக்கு ரொம்ப சந்தோஷம்"

"ஆனா இப்போ, என் முடிவை நான் மறுபரிசீலனை செய்யறது நல்லதுன்னு நினைக்கிறேன்" என்று சக்தியை பார்த்தான் ருத்ரன்.

"அப்படி எதுவும் செய்ய வேண்டாம்னு சொல்லுங்க சக்தி" என்றான் சிவா.

சக்தியின் பதில் அவனை வாயடைக்க செய்தது.

"இது, சும்மா ஒரு கப் காபி குடிச்சிட்டு போற மாதிரி சாதாரண விஷயம் இல்ல. அவரை நான் எதுக்காகவும் கட்டாயப்படுத்த விரும்பல"

தனக்கு கொடுக்க ஒப்புக்கொண்ட காப்பியை பற்றி தான் அவள் பேசிக் கொண்டிருக்கிறாள் என்று புரிந்தது சிவாவுக்கு. ருத்ரன் அவ்வளவு எளிதாய் யாரையும் நம்பி விட கூடியவன் அல்ல. ஆனால் இன்று, அவன் சக்தியை நம்புகிறான். அதில் நிச்சயம் தவறே இல்லை. சக்தி அதற்கு தகுதியானவள் தான் என்று எண்ணினான் சிவா.

"நீ ஏன் நம்ம வீட்டுக்கு வர மாட்டேங்குற ருத்ரா?"

"சீரியஸா ஒன்னும் இல்ல. நான் வரேன். நீ போ"

நிம்மதி பெருமூச்சு விட்டான் சிவா. அதைப்பற்றி மீண்டும் பேச வேண்டாம் என்று எண்ணினான்.  ஏனென்றால், ருத்ரனுக்கு எதற்காகவும் தன்னை கட்டாயப்படுத்துவது பிடிக்காது. அதனால் அதைப் பற்றி பேசாமல் இருப்பதே சாலச் சிறந்தது என்று எண்ணிய படி எழுந்து நின்று,

"சரி நான் கிளம்புறேன்" என்றான்.

"நீங்க காபி சாப்பிடலையா?" என்றாள் சக்தி.

"பரவாயில்ல சக்தி. அதான் நீங்க சென்னைக்கு வர போறீங்களே... அங்கே எத்தனை காபி வேணாலும் குடிச்சிக்கிறேன்" என்று புன்னகைத்தான்.

ருத்ரனுக்கு தெரியும், காபி வேண்டும் என்று சிவா கேட்டது, அவனுடன் பேசுவதற்கான ஒரு சாக்கு தான் என்று.

அப்பொழுது ருத்ரன் ஆர்டர் செய்திருந்த உணவு வந்து சேர்ந்தது. அதை சக்தி பெற்றுக் கொண்டாள். சிவா அங்கிருந்து புறப்பட எத்தனிக்க,

"வெயிட்" என்று கூறிவிட்டு சக்தியை நோக்கி திரும்பிய ருத்ரன்,

"அவனும் நம்ம கூட சாப்பிடட்டும்" என்றான்.

சக்தி சரி என்று புன்னகையுடன் தலையசைக்க,

"பரவாயில்லை விடு ருத்து" என்றான் சிவா.

"போதும், வாயை மூடிக்கிட்டு வந்து உட்காரு" என்றான் ருத்ரன்.

பெருமூச்சு விட்ட சிவா,

"அதை கொஞ்சம் அன்பா சொல்ல கூடாதா?" என்றான்.

"நான் இப்படி தான்"

"ஓசூருக்கு வர்ற வரைக்கும் நானும் கூட அப்படித் தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்" என்றான் சிவா, சக்தியை  பார்த்தபடி. அவள் வெட்க புன்னகையுடன் தலை குனிந்து கொண்டாள்.

அவர்கள் ஒன்றாய் அமர்ந்து உணவருந்தினார்கள்.

"உங்களுக்கு சமைக்கத் தெரியாதா சக்தி? என்றான் சிவா.

அவள் பதில் கூறும் முன்,

"அவ ரொம்ப நல்லா சமைப்பா. அவ சாப்பாடு, வாயில தண்ணி வர வைக்கும்" என்றான் ருத்ரன்.

"அப்புறம் ஏன் இன்னைக்கு நீங்க சமைக்கல?"

அவள் சங்கடத்துடன் ருத்ரனை பார்க்க,

"நாங்க தூங்கிட்டோம்" என்று சாதாரணமாய் கூறினான் ருத்ரன்.

சாப்பிடுவதை நிறுத்திவிட்டு சக்தியை ஏறிட்டான் சிவா. அவள் தன் தட்டில் கோடுகள் வரைந்து கொண்டிருந்தாள்.

"ஓ... நம்ம வீட்டுக்கு வந்தா, பகல் நேரத்தில் இப்படி எல்லாம் தூங்க முடியாதுன்னு தான் அங்க வர மாட்டேன்னு சொல்றீங்களா?" என்றான் சிவா கிண்டலாய்.

"ஏன் பகல்ல தூங்க முடியாது? யார் என்னை கேள்வி கேப்பா?"

"யாரும் கேள்வி கேட்க முடியாது. ருத்ரனை கேள்வி கேட்கிற தைரியம் யாருக்கு இருக்கு?" என்றான் சிவா.

"என் பொண்டாட்டியையும் யாரும் கேள்வி கேட்க முடியாது... எதுக்காகவும்..."

ஆம் என்பது போல் தலையசைத்துவிட்டு கை கழுவ சென்றான் சிவா.

சக்தி எதோ தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்ததை பார்த்த ருத்ரன், அவள் தோளை தொட்டு,

"என்ன யோசிச்சுகிட்டு இருக்க?" என்றான்.

ஒன்றுமில்லை என்பது போல், அவள் புன்னகைத்தபடி தலையசைத்தாள். அவனுக்கு தெரியும், அது அவளது வழக்கமான சிரிப்பு அல்ல என்று. ஏனென்றால் அவளது கண்களில் ஒருவித தவிப்பு தெரிந்தது. சாப்பிடு என்பது போல் அவன் சைகை செய்ய,

"சரி" என்று சாப்பிட்டாள் சக்தி.

"பை ருத்து..."

"பை " அவனுக்கு விடை கொடுத்து, கதவை சாத்திக் கொண்டு உள்ளே வந்தான் ருத்ரன்.

சக்தி அவர்களது அறைக்கு  சென்றாள். வேக நடை நடந்து, அவளுக்கு முன்னாள் வந்து நின்ற ருத்ரன், அவள் கையை பற்றி கொண்டு,

"என்ன பிரச்சனை?" என்றான்.

"ஒன்னும் இல்லையே..."

"சக்தி, எனக்கு உன்னை பத்தி நல்லா தெரியும். என்ன விஷயம்னு சொல்லு"

தனக்குள் எழுந்த பயத்தை மென்று விழுங்கினாள் சக்தி. அவளது முகபாவமே அவனிடம் கூறியது, ஏதோ விஷயம் இருக்கிறது என்பதை. அவள் கையைப் பற்றி அழைத்துச் சென்று கட்டிலில் அமர வைத்தவன்,

"என்ன உன்னை பாதர் பண்ணுது? என்கிட்ட சொல்லு சக்தி"

"நான்... நான்... உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். நான் அதை உங்க கிட்ட இருந்து மறைச்சிட்டேன்..."

"மறைச்சியா? என்ன மறைச்ச?"

"நான் அதை வேணும்னு உங்ககிட்ட இருந்து மறைக்கல. ஆனா, சொல்லாம விட்டுட்டேன்..."

"என்ன... விஷயம்... அது?" என்றான் வார்த்தைகளுக்கிடையில் இடைவெளி விட்டு.

"நான் ஒரு தடவை, உங்ககிட்ட இருந்து தப்பிச்சு போக முயற்சி பண்ணேன்..."

"தெரியுமே, நான் தானே உன்னை பிடிச்சிக்கிட்டு வந்தேன்..."

"இல்ல, நீங்க என்னை பிடிக்கல... நான் விருப்பப்பட்டு தான் உங்ககிட்ட திரும்ப வந்தேன்"

"நீ என்ன சொல்ற?"

"நான் உங்ககிட்டயிருந்து மறுபடியும் தப்பிச்சு போனேன் ( கண்களை மூடி பெருமூச்சு விட்டாள் சக்தி) நான் சமைச்ச சாப்பாட்டுல தூக்க மாத்திரையை கலந்து உங்களை சாப்பிட வச்சேன். நீங்க மட்டும் இல்ல, மத்த எல்லாருமே அதை சாப்பிட்டுட்டு தூங்கிட்டாங்க. நான் பார்ம் ஹவுஸில் இருந்து தப்பிச்சி ஓடிட்டேன். வழியில ரெண்டு பேர் என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணாங்க. அப்போ, அந்த பக்கமா கார்ல போன ஒரு லேடி என்னை அவங்க கிட்டயிருந்து காப்பாத்தினாங்க. நான் என்னை பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிட சொல்லி அவங்க கிட்ட கேட்டேன். என்னோட டிரஸ் கிழிஞ்சு போயிருந்ததால, அதை மாத்திக்கிட்டு போக சொல்லி, அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போனாங்க."

"முன்ன பின்ன தெரியாத ஒரு பொம்பள கூட நீ எப்படி அவ்வளவு தைரியமா போன சக்தி?" என்றான் ருத்ரன் நம்ப முடியாமல்.

"அவங்க வீட்டுக்கு போய் சேர்ற வரைக்கும், நானும் கூட அவங்க முன்ன பின்ன தெரியாதவங்க தான்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்..."

"யார் அவங்க?" என்றான் தன் கண்களை சுருக்கி.

"உங்க அக்கா துர்கா" என்றாள் சக்தி.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top