40 சக்திக்காக...

40 சக்திக்காக... 

"சக்....தி..." அந்த இடமே அதிரும் வண்ணம் ஆர்ப்பரித்தான் ருத்ரன்.

அடுத்த நொடி, பைத்தியம் பிடித்தவனை போல, அந்த காரை நோக்கி ஓடினான். அந்த கார் பின்னோக்கி பயணிக்க தொடங்கியது.  அந்தக் காரை ஓட்டிச் சென்றவன் வேறு யாருமல்ல, ருத்ரனின் பண்ணை வீட்டிற்கு வெளியே, சக்தியை கொல்வதற்காக காத்திருந்த மகேஷ் தான். ருத்ரன், தன் காரை பேய் போல  விரட்டிக் கொண்டு வந்ததை பார்த்த அவன் நடுநடுங்கிப் போனான். கீழே கிடந்த பெரிய கல் ஒன்றை எடுத்து, அந்த காரின் கண்ணாடியை நோக்கி எறிந்தான் ருத்ரன். அந்த கல், காரின் கண்ணாடியை தெறிக்க செய்தது. தெறித்த கண்ணாடி சில்கள், மகேஷின் மீது தெறிக்க, கார் அவனது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாய் ஓடி, ஒரு மண் மேட்டின் மீது ஏறி தலைக்குப்புற கவிழ்ந்தது. அவனது வீட்டின் காவலாளிகளும், உமாபதியும் அவனை பின் தொடர்ந்து ஓடி வந்தார்கள்.

இதற்கிடையில்,

சக்தி கீழே விழுந்ததை பார்த்த சிவா, அவளை நோக்கி ஓடினான். அவள் தன் கையில் படிந்திருந்த மண்ணை தட்டியபடி எழுந்ததை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டான்.

"சக்தி, உங்களுக்கு ஒன்னும் ஆகலையே?"

"கீழே இருந்த பள்ளத்தை கவனிக்காம, அதுல காலை வச்சி கீழே விழுந்துட்டேன். அடி ஒன்னும் படல" என்றபடி எழுந்து நின்றாள்.

தான் சுடப்பட்ட விஷயம் கூட அவளுக்கு தெரிவில்லை என்று எண்ணியபடி, கீழே இருந்த பள்ளத்தை கவனித்தான் சிவா. அந்தப் பள்ளம் தான் அவள் உயிரை காப்பாற்றி இருக்கிறது.

"தேங்க் காட்" என்ற படி ருத்ரனை நோக்கி ஓடினான், சக்திக்கு ஒன்றும் ஆகவில்லை என்பதை அவனுக்கு தெரிவிக்க.

குப்புற கவிழ்ந்து கிடந்த காரை நோக்கி ஓடிய ருத்ரன், மகேஷின் சட்டை காலரை பற்றி, அவனை தரதரவென வெளியே இழுத்து போட்டு வெறி பிடித்த ராட்சசன் போல் அவன் முகத்திலும், வயிற்றிலும், மார்பிலும் குத்தத் துவங்கினான்.

"எவ்வளவு தைரியம் இருந்தா என் சக்தியை நீ கொல்ல பாப்ப? எவ்வளவு தைரியம் டா உனக்கு... யாரு டா நீ? எதுக்கு அவளை சுட்ட?"

அவன் குத்திய குத்துக்கள் ஒவ்வொன்றும் மிக வேகமாய் விழுந்தது என்று கூறினால், அது வெகு சாதாரண வார்த்தைகளாக தோன்றும். அவை ஒவ்வொன்றும் அவன் முகத்தில் இடியைப் போல் இறங்கி, அவனை ரத்தத்தில் நனைத்தது.

உமாபதிக்கோ, ருத்ரனின் வீட்டு காவலாளிகளுக்கோ அவனிடம் நெருங்கும் தைரியம் இருக்கவில்லை. அவனுடைய வெறி கொண்ட கோபத்தை கண்ட அவர்கள், வெடவெடுத்து, மருண்டு நின்றார்கள். அங்கே ஓடிவந்த சிவா, மகேஷிடமிருந்து ருத்ரனை பின்னால் இழுக்க முயன்றான். இன்னும் சில குத்துக்கள் விழுந்தால் நிச்சயம் அவன் இறந்து போவான்.

"ருத்து நிறுத்து... நிறுத்து ருத்து..."

அவனை நோக்கி கோபத்துடன் திரும்பிய ருத்ரன், அவனை பிடித்து தள்ளினான்.

"இது எல்லாம் உன்னால தான். நீ இங்க வந்ததால தான் அவன் சக்தியை சுட்டான். உன்னை இங்க வர சொல்லி யாருடா அழுதது? ஏண்டா இங்க வந்த?" அவன் சட்டை காலரை பற்றி, அவனை அடிக்க கை ஓங்கினான். ஓங்கிய அவனது கை அப்படியே நின்றது,

"என்னங்க..." என்ற சக்தியின் குரல் கேட்டு.

அவளைப் பார்த்த பிறகு தான், தான் செய்த முட்டாள்தனம் அவன் நினைவுக்கு வந்தது. சக்திக்கு என்ன ஆனது என்பதை பற்றி கூட யோசிக்காமல், அவளை விட்டுவிட்டு எப்படி அவன் அந்த காரின் பின்னால் ஓடினான்? பரபரவென அவளை நோக்கி ஓடியவன், அவளுக்கு ஏதாவது காயம் பட்டிருக்கிறதா என்பதை பரிசோதித்தான்.

"சக்தி உனக்கு ஒன்னும் ஆகல" என்றான் நம்ப முடியாமல்.

"எனக்கு ஒன்னும் ஆகலங்க" என்று அவள் கூற அவளை இறுக்கமாய் கட்டிப்பிடித்துக் கொண்டான்.

"சக்தி, ஐ அம் சாரி... நான் ரொம்ப பயந்துட்டேன் சக்தி... நான் உன்னை இழந்துட்டேன்னு நெனச்சு ரொம்ப பயந்துட்டேன்"

"எனக்கு ஒன்னும் ஆகல. நான் நல்லா இருக்கேன்"

அவள் முகத்தை பற்றியவன், முத்தத்தால் அவள் முகத்தை நினைத்து அவளை சங்கடத்திற்கு ஆட்படுத்தினான்.

"என்னங்க ரிலாக்ஸா இருங்க..."

மீண்டும் அவளை இறுக்கமாய் தழுவிக் கொண்டான். இந்த முறை, சக்தியும் அவனை அனைத்துக் கொண்டாள்.

"நான் உங்க கூட தான் இருக்கேன். எனக்கு ஒன்னும் ஆகல. பயப்படாதீங்க" அவன் முதுகை வருடினாள்.

அப்பொழுது, தன் முன்னாள் நின்றிருந்த சிவாவின் மீது அவன் பார்வை சென்றது.

"உன்னை இங்கிருந்து போன்னு சொன்னேன் இல்ல?" என்று கூறிவிட்டு சக்தியை தன்னுடன் இழுத்துக் கொண்டு தன் வீட்டை நோக்கி நடந்தான்.

"ருத்ரா, நான் சொல்றதை கேளு"

"நீ சொல்ற எதையும் கேட்க நான் தயாராக இல்ல. மறுபடி என்னை தேடி வராத. இன்னொரு தடவை என் கண்ணு முன்னாடி வந்தன்னா, உன்னை அடிச்சு சாவடிச்சிடுவேன்"

"சார், இவனை என்ன சார் செய்றது?"  நடுக்கத்துடன் கேட்டார் அவன் வீட்டு காவலாளி, ரத்த வெள்ளத்தில் கிடந்த மகேஷை சுட்டிக்காட்டி.

அவன் மீது கோபத்துடன் பாய்ந்த ருத்ரன், ரத்தம் வடிந்து கொண்டிருந்த அவன் முகத்திலும், வயிற்றிலும் மீண்டும் குத்தினான்.

"உனக்கு எவ்வளவு தைரியம் டா? யாருடா நீ? எதுக்காக சக்தியை சுட்ட? யார் உன்னை அனுப்பி வச்சா?" மீண்டும் அதே கேள்விகள் வந்து விழுந்தன, வயிற்றிலும், மார்பிலும் சில குத்துக்களுடன் இணைந்து.

சக்தி அவனை தடுக்க முயன்ற போது, அவளைத் தடுத்து நிறுத்தினான் சிவா.

"அவரு அவனை கொன்னுடுவாரு" என்றாள் தவிப்புடன்.

"நான் இருக்கேன். கவலைப்படாதீங்க"

"உன்னை அனுப்பி வச்சது யாருன்னு ஒழுங்கா சொல்லிடு. இல்லன்னா, இங்கேயே உன் உயிரை அவன் எடுத்துடுவான்" மகேஷை  எச்சரித்தான் சிவா.

ரத்தம் படிந்த தன் கரங்களை உயர்த்தி கெஞ்சலாய் பார்வை பார்த்தான் மகேஷ்.

"இரு ருத்ரா" என்று அவனை மேலும் அடிக்காமல் தடுத்தான் சிவா.

ரத்த வாந்தி எடுத்தான் மகேஷ். ருத்ரன் அடித்த அடியில் அவனது உள்ளுறுப்புக்கள் அனைத்தும் சிதைந்து போய்விட்டது போலும்.

அவனது நிலைமையை கண்ட சக்திக்கு அவன் மீது பரிதாபம் தான் எழுந்தது.

"உண்மையை சொல்லு. இல்லன்னா..." என்று தன் கையை மீண்டும் ஓங்கினான் ருத்ரன்.

"சொல்லிடுறேன் சார்... சொல்லிடுறேன்" பயந்து ஒடுங்கினான் மகேஷ்.

"சொல்லு..."

"தட்சணாமூர்த்தி"

கோபத்துடன் தன் பல்லை கடித்தான் ருத்ரன். மென்று விழுங்கினான் சிவா. தட்சணாமூர்த்தி வேறு யாருமல்ல, ருத்ரனை உயிராய் காதலித்து, அவன் மடியில் உயிர்விட்ட மாயாவின் தந்தை தான். தன் மகளின் மரணத்திற்கு ருத்ரன் தான் காரணம் என்று அவர் எண்ணியதன் விளைவு தான் இது.

"ருத்ரா, இவனை என்கிட்ட விடு. நான் பார்த்துக்கிறேன்" என்றான் சிவா.

"உன்னை இங்கிருந்து கிளம்புன்னு சொன்னேன்" என்று சீறினான் ருத்ரன்.

"நீ இவனை என்ன செய்யப் போற?"

"நீ ஒன்னும் அதை தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இல்ல"

"ருத்து, சக்தியை பாரு... உனக்காக தானே அவங்க இருக்காங்க? அவங்களை பயமுறுத்தாத"

எழுந்து நின்ற ருத்ரன்,

"அவன் கையையும், காலையும் கட்டுங்க" என்று தன் காவலாளிகளுக்கு உத்தரவிட்டான்.

அவர்களில் ஒருவன், கயிறு கொண்டு வர வீட்டை நோக்கி ஓடினான். சில நிமிடங்களில் கயிறுடன் திரும்பி வந்த அவன், மகேஷின் கை கால்களை கட்டினான்.

"அவனை கார் ஷெட்ல போட்டு பூட்டுங்க" என்று ருத்ரன் கூறவும், அவர்கள் அவனை தூக்கிக் கொண்டு கார் ஷெட்டை நோக்கி நடந்தார்கள்.

"ருத்ரா ப்ளீஸ், அவனை எதுவும் செஞ்சுடாதே" என்று கெஞ்சினான் சிவா.

"ஏன்? நான் ஏன் அவனை எதுவும் செய்யக்கூடாது? அவன் சக்தியை கொல்லனும்னு நினைக்கிறியா நீ?"

"அவனை போலீஸ்ல ஹேண்ட் ஓவர் பண்ணிடு. அவனை அவங்க பாத்துக்குவாங்க"

"நான் என்ன செய்யணும்னு நீ எனக்கு சொல்லித் தர வேண்டிய அவசியம் இல்ல"

என்ன செய்வது என்று புரியாமல் தவித்த சிவா, அவனை அமைதியாய் இருக்க சொல்லி சக்தி ஜாடை செய்த போது வியப்படைந்தான்.

ருத்ரனை நோக்கி சென்ற அவள் அவனது கரத்தை மென்மையாய் பற்றியவுடன், கடுகடுவென இருந்த அவனது முகம் அப்படியே, கனிந்து தணிந்தது.

"சக்தி, ஐ அம் சாரி... இப்படி எல்லாம் நடக்கும்னு..."

அவனை மேலே பேச விடாமல்,

"எனக்கு ஒன்னும் ஆகாது. நீங்க தான் என் கூட இருக்கீங்களே... நீங்க எனக்கு எதுவும் நடக்க விட மாட்டீங்கன்னு எனக்கு தெரியும்."

கண்களை மூடி, ஆம் என்று தலையசைத்தான் ருத்ரன்.

"தயவுசெய்து நீங்க வருத்தப்படாதீங்க. எவ்வளவு ஆபத்து வந்தாலும், எனக்கு ஒண்ணும் ஆகாது. ஏன்னா, நீங்க என் மேல வச்சிருக்கிற அன்பு ரொம்ப உண்மையானது. அந்த அன்பு என்னை எப்பேர்பட்ட ஆபத்திலிருந்தும் காப்பாத்தும். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து நான் எவ்வளவு சாதாரணமா தப்பிச்சேன்னு நீங்க பாக்கலையா...?" அவள் அன்பாய் அவனது கன்னம் தொட்டாள்.

ஆம் என்று தலையசைத்தபடி அவள் கையில் முத்தமிட்டான் ருத்ரன்.

"உங்க தூய்மையான உள்ளத்துல, எந்த ஒரு தேவையில்லாத சுமையையும் நீங்க சுமக்க வேண்டாம். பாவப்பட்ட ஒருத்தனோட ரத்தத்தால உங்களோட கை கறைப்படிய வேண்டாம். அவனை போலீஸ்ல ஒப்படைச்சிடுங்க..."

மென்று விழுங்கினான் ருத்ரன்.

"எனக்காக... ப்ளீஸ்..." என்றாள் கெஞ்சலாக.

பெருமூச்சு விட்டபடி சரி என்று தலையசைத்தான் ருத்ரன். அதை கண்ட சிவா, மலைத்து நின்றான். கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நெருப்பை, ஈரத் துணியால் மூடியது போல, சில நொடியில், நிலைமையை தலைகீழாய் மாற்றிவிட்டாளே சக்தி...!  அழகான புன்னகையுடன், அன்பாய் அவனை அணைத்துக் கொண்டாள் சக்தி.

"உன்னோட ஒரு ஸ்மைலுக்காக நான் என்ன வேணா செய்வேன் சக்தி"

அவள், 'எனக்குத் தெரியும்' என்பது போல் புன்னகைத்தாள்.

"போலீசை கூப்பிடு" என்று ருத்ரன் கூற, தன் கைபேசியை எடுத்து கவலர்களை அழைத்தான் சிவா.

"வா சக்தி போகலாம்" என்று அவள் தோள்களை சுற்றி வளைத்துக் கொண்டான் ருத்ரன்.

"என்னை உங்க வீட்டுக்கு வான்னு கூப்பிட மாட்டியா?" என்றான் சிவா சோகமாய்.

"நான் உன்னை அடிச்சி கொல்றதுக்குள்ள இங்கிருந்து போயிடு"

"பாருங்க சக்தி, இவன் என்னை எப்படி திட்டுறான்னு... நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்களேன்"

தன் தாடையை இறுக்கிக் கடித்தபடி, வேண்டாம் என்பது போல் சக்தியை பார்த்து தலையசைத்தான் ருத்ரன்.

சக்தியின் முன் மண்டியிட்டு கைகோர்த்துக் கொண்ட சிவாவை அதிர்ச்சியுடன் பார்த்தாள் சக்தி.

"ப்ளீஸ் சக்தி... இவனை பாக்குறதுக்காக, சென்னையில இருந்து ஒரு காபி கூட குடிக்காம வந்திருக்கேன்..."

சக்தி, கவலையுடன் ருத்ரனை பார்க்க, அவன் சிவாவை பார்த்து முறைத்தான்.

"காபிக்கு மேல வேற எதையும் கேட்கக் கூடாது. சரியா?" என்றாள் சக்தி முகத்தை தீர்க்கமாக வைத்துக்கொண்டு.

"நிச்சயமா கேக்க மாட்டேன் சக்தி" என்றான் சிவா.

தன் கைகளை கட்டிக்கொண்டு, அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டு நின்றான் ருத்ரன்.

"சரிபா, உனக்கு நான் உன் வீட்டுக்கு வர்றது பிடிக்கலன்னா, நான் இப்படியே போயிடுறேன்" அவன் அங்கிருந்து ஓரடி எடுத்து வைக்க,

"போதும் ரொம்ப நடிக்காத. சக்திக்காக தான் நான் உன்னை உள்ள விடுறேன்" என்றான் ருத்ரன்.

"தேங்க்யூ ருத்து" என்று அவனை சந்தோஷமாய் கட்டிக் கொண்டான் சிவா.

"வாட் த ஹெல்" என்று அவனைப் பிடித்து தள்ளினான் ருத்ரன்.

சூழ்நிலையை மறந்து சிரித்தாள் சக்தி.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top