4 சக்தி

4 சக்தி

ருத்ரன் கூறியதைக் கேட்ட மருத்துவர் மிரண்டு போனார். அவரது அழைப்புக்கு செவி சாய்க்காமல் அங்கிருந்து நடந்தான் ருத்ரன். என்ன செய்ய வேண்டும் என்பதை அவன் ஏற்கனவே முடிவு செய்து விட்டிருந்தான். அந்த மருத்துவரின் வேண்டாத வீண் அறிவுரையில் காலத்தை கடத்திக் கொண்டிருக்க அவன் தயாராக இல்லை. மருத்துவரின் அறையை வெளிப்பக்கமாய் தாளிட்டு விட்டு, அனாயாசமாய் நடந்து சென்றான் ருத்ரன். மருத்துவர் கதவை தட்ட யாரோ ஒருவர் கதவை திறந்து விட்டார். ருத்ரனை பிடிக்கச் சொல்லி மருத்துவமனையின் ஊழியர்களை பணித்தார் மருத்துவர். ஆனால் அதற்கு முன்னதாகவே அங்கிருந்து ருத்ரன் சென்று விட்டிருந்தான்.

தனது திட்டத்தை ஏற்கனவே வகுத்து விட்டிருந்த ருத்ரன், எந்த பதட்டமுமின்றி தனது காரை செலுத்திக் கொண்டிருந்தான். தனக்கு தேவையான துணிமணிகளை ஏற்கனவே பசுபதியிடம் கொடுத்து அவன் காரில் வைக்க சொல்லி விட்டிருந்தான். அவனுக்கு வேண்டிய துணிமணிகள் சேலத்தில் கிடைக்கும் தான். தான் உடுத்தும் துணிமணிகளை மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்யும் அவன், ஏனோதானோ என்று கிடைத்த துணிமணிகளை அணியும் விருப்பமில்லாதவன். தான் விரும்பும்படி தனது உடைகளை தைத்துக் கொடுக்கக்கூடிய தேர்ந்த தையல்காரர் அங்கு கிடைப்பார் என்று அவன் நினைக்கவில்லை. மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பே, இரண்டு தரம் வாய்ந்த பெட்டிகளை வாங்கி அந்த துணிகளை அடுக்கி வைத்துக் கொண்டான். ஏனென்றால் அவனுக்கு தெரியும், மருத்துவரை சந்தித்த பிறகு அவனுக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்காது என்று. சேலம் செல்லும் வழியில் பசியெடுத்தால் உண்பதற்காக இரண்டு சீஸ் சாண்ட்விச்களையும் வாங்கி வைத்துக் கொண்டான். ஆம் இப்பொழுது அவன் சேலம் நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறான்.

உலகப் புகழ்பெற்ற பிஎம்டபிள்யூ  நிறுவனத்தின் தயாரிப்பான, எஸ் யு வி வகை கார், காற்றை கிழித்துக்கொண்டு, சேலம் நோக்கி சீறி பாய்ந்து கொண்டிருந்தது. அது, அவன் தன் கடன் அட்டையை பயன்படுத்தி வாங்கிய புத்தம் புதிய கார். அவனுக்கு தெரியும் அவன் குடும்பத்தினர் பயன்படுத்தும் அனைத்து கார்களிலும் ஜிபிஆர்எஸ் வசதி உள்ளது என்பது. அதை வைத்து, அவன் எங்கிருக்கிறான் என்பதை அவன் குடும்பத்தார் சுலபமாய் கண்டுபிடித்து விட முடியும். அப்படி நடக்கக் கூடாது என்று தான் அவன் யாருக்கும் தெரியாமல் புத்தம் புதிய காரை வாங்கியிருக்கிறான். இந்த கார் இன்னும் பதிவு எண்ணை கூட பெறவில்லை. ஆனால் அதைப் பற்றி அவன் கவலைப்படவில்லை. தனது பிறந்த தேதியையே  எண் பலகையாக்கி பொருத்திக் கொண்டு விட்டான். இவ்வளவு விலை உயர்ந்த காரை யார் நிறுத்தி சோதிக்கப் போகிறார்கள்?

அவன் இப்பொழுது வைத்திருப்பதும், யாராலும் டிராக் செய்ய முடியாத  சேட்டிலைட் ஃபோன். அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, அவன் நல்ல மனநலையில் இருந்த போது, ஒரு ஏஜென்ட், அதை அவனிடம் விற்க வந்திருந்தான். அப்போது அவனுக்கு அதை வாங்குவதில் விருப்பம் இருக்கவில்லை. இப்பொழுது அவன் அதை வாங்கிக் கொண்டு விட்டான்.
வரும் நாளில் தன் செலவுக்கு தேவையான பணத்தையும் வங்கியில் இருந்து எடுத்தாகிவிட்டது.

வெகு தூர கார் பயணம் செல்வதில் எப்பொழுதுமே அலாதி பிரியம் உள்ளவன் ருத்ரன். இப்பொழுது அவன் அதை ஒரு அர்த்தத்துடன் செய்து கொண்டிருக்கிறான். அவன் உயிர் வாழ இன்றியமையாத, அந்த பெண்ணை பார்க்கப் போகிறான்... அவனுக்காக மாயா அனுப்பிய அந்தப் பெண்... மாயாவை போலவே இருக்கும் அந்தப் பெண்...

இதற்கிடையில்...

பரமேஸ்வரனுக்கு ஃபோன் செய்த மருத்துவர், நடந்த விபரத்தை அவனிடம் கூறினார்,

"சொல்லுங்க டாக்டர். ருத்ரன் என்ன சொன்னாரு?" என்றான் பரமேஸ்வரன்.

"அந்தப் பெண்ணை அடைஞ்சே தீருவேன்னு ரொம்ப பிடிவாதமா இருக்கார்"

"எந்த பொண்ணு டாக்டர்?"

"அவரு தர்காவுல சந்திச்சாரே அந்த பொண்ணு"

"அந்த பொண்ணா?"

"அவ மாயா மாதிரியே இருக்காளாம்"

"என்ன டாக்டர் சொல்றீங்க?"

"ஆமாம்... ஒருவேளை அவ கல்யாணம் ஆனவளா இருந்தா, அவ புருஷனை கொன்னுடுவேன்னு சொல்லிட்டு போயிருக்காரு"

"என்ன்ன்னனனது....???" அதிர்ந்தான் பரமேஸ்வரன்.

"இந்த விஷயத்துல அவர் எவ்வளவு தீவிரமா இருக்காருன்னு புரிஞ்சிக்க  அந்த ஒரு பாயிண்ட் போதும்னு நினைக்கிறேன்"

"இப்போ அவர் வீட்டுக்கு வந்தா, நாங்க எப்படி நடந்துக்கணும் டாக்டர்?"

"அவர் வீட்டுக்கு வருவாருன்னு எனக்கு தோணல"

"அப்படின்னா?"

"அந்த பொண்ணை தேடி அவர் சேலம் போயிருப்பார்" 

"அந்தப் பொண்ணு யாரு, அவ எங்க இருக்கா, எதுவுமே அவருக்கு தெரியாதே..."

"அவர் கண்டுபிடிப்பார்... நிச்சயம் கண்டுபிடிப்பார்..."

"அப்படின்னா, நான் உடனே கிளம்பி சேலம் போறேன்"

"நீங்க அங்க போய் என்ன செய்யப் போறீங்க? உங்களால அவரை கண்ட்ரோல் பண்ண முடியும்னு நினைக்கிறீங்களா?"

அமைதி காத்தான் பரமேஸ்வரன்.

"சீரியஸ்நஸ்ஸை புரிஞ்சுக்கோங்க. தன்னோட வழியில யாராவது வந்தா அவர் முரட்டுத்தனமா மாறுவார். என்ன செய்யவும் தயங்க மாட்டார். தான் நெனச்சத முடிக்க என்ன வேணா செய்வார்."

"இப்ப நாங்க என்ன செய்யறது டாக்டர்?"

"கண்ணாடி பாத்திரத்தை கையாள்ற மாதிரி ரொம்ப கவனமா கையாளணும். கண்ணாடி பாத்திரம் உடைஞ்சா அது பாத்திரத்துக்கு மட்டும் பாதிப்பு இல்ல... அதை கையாள்றவங்களும் சேர்த்து பாதிக்கப்படுவாங்க... புரியுதா?"

"புரியுது டாக்டர்"

"அவரை உங்க கண்ட்ரோல்ல கொண்டு வர முடியாது அப்படிங்கறதை மட்டும் மறந்துடாதீங்க. அப்படி ஒருவேளை நீங்க செஞ்சா, அவர் ரொம்ப ஆபத்தானவரா மாறுவார்"

"சரிங்க டாக்டர்"

அழைப்பை துண்டித்தார் மருத்துவர்.

"டாக்டர் என்னங்க சொன்னாரு?" என்றாள் துர்கா.

மருத்துவர் கூறிய விஷயங்களை அவர்களிடம் கூறினான் பரமேஸ்வரன்.

"நீங்க எதை பத்தியும் கவலைப்பட வேண்டாம். நம்ம அவரை சுலபமா பிடிச்சிட முடியும். நம்ம எல்லா கார்லயும் ட்ராக்கிங் டிவைஸ் இருக்கு." என்றான் பரமேஸ்வரன்.

உண்மை தெரியாத துர்கா நிம்மதி பெருமூச்சு விட்டாள். சிவாவுக்கு ஃபோன் செய்தான் பரமேஸ்வரன்.

"என்ன மாம்ஸ், உங்க பெரிய மச்சான் என்ன செய்றான்?" என்றான் சிவா.

"அது தான் எனக்கு தெரியல" என்றான் பரமேஸ்வரன்.

"என்ன ஆச்சு மாம்ஸ்? ஏன் ஒரு மாதிரியா பேசுறீங்க?"

விஷயத்தை அவனிடம் கூறினான் பரமேஸ்வரன்.

"போச்சுடா... " என்றான் சிவா அலுப்புடன்.

"அவரோட ஃபோனையும், காரையும் ட்ராக் பண்ணுங்க..."

"விடுங்க நான் பாத்துக்குறேன்"

"கொஞ்சம் சீக்கிரமா செய்ங்க"

"உடனே செய்றேன்"

அழைப்பை துண்டித்து விட்டு, ருத்ரனின் காரையும் கைபேசியையும் ட்ராக் செய்யக்கூடிய தன் துப்பறியும் கூட்டாளி நண்பனுக்கு ஃபோன் செய்து அந்த வேலையை செய்ய சொன்னான். ஆனால் அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால், அவனது கார், மற்றும் கைபேசியின் சிக்னல்கள், அவன் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையை குறித்தது. அது சிவாவை குழப்பியது. பரமேஸ்வரனுக்கு ஃபோன் செய்து விஷயத்தை கூறினான்.

"இதுக்கு என்ன அர்த்தம்?"

"அவன் போன காரையும், ஃபோனையும் அவன் ஹாஸ்பிடல்லையே விட்டுட்டு போயிருக்கணும்" என்றான் சிவா.

"அப்படின்னா, அவர் சேலத்துக்கு எப்படி போயிருப்பார்?" 

"அது டாக்டரோட அசம்ஷன் தானே? தான் சேலத்துக்கு போறதா ருத்ரா சொல்லலையே..."

"ஆனா, டாக்டரோட அசம்ஷனும், ருத்ராவோட ஸ்டேட்மெண்ட்டும் ஒத்துப் போகுதே..."

"சரி, நான் சேலத்துக்கு போகட்டுமா?"

"உங்களால போக முடியுமா?"

"ருத்ராவுக்காக நிச்சயம் போறேன்"

"இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு. எங்களுக்கு அப்பப்போ எல்லாத்தையும் அப்டேட் பண்ணுங்க"

"கண்டிப்பா செய்றேன் மாமா"

அழைப்பை துண்டித்து விட்டு,

"எங்கடா இருக்க ருத்ரா நீ?" தன் கைபேசியால், நெற்றியை தட்டினான் சிவா.

.........

*சேலம் ஒரு கிலோமீட்டர்* என்ற அறிவிப்பு பலகையை பார்த்த ருத்ரனின் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது. அவனுக்கும் அவளுக்கும் இடையில் இருக்கும் தூரம் ஒரு கிலோமீட்டர் மட்டும் தான்.

வலைதளத்தில் தேடி பிடித்து, ஒரு அறையை முன்பதிவு செய்திருந்த  அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் முன் காரை நிறுத்தினான். தன்னுடைய அறைக்கு வந்து, கட்டிலில் விழுந்தான், உறங்குவதற்காக அல்ல, ஓய்வெடுப்பதற்காக. மறுநாள் அவன் செய்ய வேண்டிய வேலை இரண்டு இருந்தது. அடுத்த நாள் காலை, அந்தப் பெண்ணை அவன் பார்த்த அதே சிறிய தெருவின் அருகில் சென்று காத்திருப்பது. ஒருவேளை அவள் வராவிட்டால், நாளை மாலை தர்காவுக்கு சென்று அவளுக்காக காத்திருப்பது. அவளை அவன் பார்த்த அதே நேரத்தில் சென்று காத்திருந்தால், நிச்சயம் அவளை பிடித்து விடலாம் என்று அவன் நம்பினான்.

மறுநாள் காலை

அலார சத்தத்தை கேட்டு கண் விழித்த அவன், கட்டிலிலிருந்து குதித்தெழுந்தான். அதே தெருவுக்கு, அதே நேரத்தில் சென்று, காரில் அமர்ந்து காத்திருந்தான். நேரம் ஓடிக் கொண்டிருந்தது... ஆனால் அந்தப் பெண் வரவில்லை. ஏமாற்றத்துடன் இருக்கையில் சாய்ந்தான் ருத்ரன். ஒருவேளை அவள் தர்காவுக்கும் வராமல் போனால் என்ன செய்வது? அவளை எங்கு சென்று தேடுவது? மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பிய அவன், மீண்டும் மீண்டும் கடிகாரத்தை பார்த்தபடி இருந்தான்.

மதிய உணவை முடித்துக் கொண்டு, வெகு முன்னதாகவே தர்காவுக்கு கிளம்பிச் சென்றான். ஹோட்டல் அறையில் சும்மா அமர்ந்திருப்பதை விட, அங்கு சென்று காத்திருப்பது உபயோகமாக இருக்கும் என்று அவன் எண்ணியது தான் காரணம்.

அன்று அவன் அவளைப் பார்த்த அதே நேரம் வந்தது. ஆனால் அவள் வரவில்லை. அவனது கோபம் உச்சத்தை தொட்டது. அவள் அவனுக்கு வேண்டும். ஆனால் அவளை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அவளை எப்படி அடைவது? முதன் முறையாய் அவன் மனதில் அச்சம் தோன்றியது.

அப்பொழுது அங்கு ஒரு ஆட்டோ வந்து நின்றது. அவன், அன்று பார்த்த அதே பெண், கையில் இரண்டு பைகளுடன் அந்த ஆட்டோவில் இருந்து இறங்கினாள். இதுவரை உணர்ந்திடாத ஒரு கிளர்ச்சியை தன்னுள் உணர்ந்தான் ருத்ரன்.

அருகிலிருந்த ஒரு இனிப்பகத்திற்கு சென்றாள் அவள். காரை விட்டு கீழே இறங்கிய ருத்ரன், அந்த கடைக்கு அருகில் சென்று நின்று அவளை கவனிக்க துவங்கினான். தான் கொண்டு வந்த பைகளில் ஒன்றை கடைக்காரரிடம் கொடுத்தாள் அந்த பெண்.

"வாம்மா சக்தி. ரொம்ப தேங்க்ஸ்..." என்றபடி அவள் கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டார் அந்த இஸ்லாம் பெரியவர்.

அவளது பெயர் *சக்தி* என்பதை தெரிந்து கொண்டான் ருத்ரன்... அவனது வாழ்வின் உயிர் சக்தியாக இருக்கப் போகும் அவள் பெயர் சக்தி. 

"நாளைக்கு என்ன ஸ்வீட் கொண்டு வரட்டும் பாய்?" என்ற அவளது குரல், அவன் காதினுள் நுழைந்து உயிர் வரை சென்று வருடியது.

அவனுக்கு புரிந்து போனது, அவன் காத்திருந்தது இந்த பெண்ணுக்காக தான். ஏனென்றால், இப்பொழுது அவன் மனதில் ஏற்படும் உணர்வு, அவன் இதுவரை எப்பொழுதும் கண்டிராதது. யாருக்காகவும் உணர்ந்திடாதது...

"நாளைக்கும் இதே ஸ்வீட்சையே கொண்டு வாம்மா..."

"சரிங்க அமீர் பாய்..."

தான் கொண்டு வந்திருந்த இனிப்புகளை வழங்க, அடுத்த கடைக்குச் சென்றாள் சக்தி. அந்த தர்கா வளாகத்தில் இருக்கும் கடைகளுக்கு அவள் தான் இனிப்புகளை வினியோகம் செய்கிறாள் என்பதும், அங்கு அவளுக்கு நிறைய வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்பதும் ருத்ரனுக்கு புரிந்தது. அவள் கொடுத்த பையில் இருந்து இனிப்பு டப்பாக்களை எடுத்து அடுக்க துவங்கினார் அமீர்.

"எனக்கு அரை கிலோ ஸ்வீட்ஸ் குடுங்க" என்றான் ருத்ரன், சக்தி கொண்டு வந்து கொடுத்த அந்த இனிப்பை சுட்டிக்காட்டி.

அதை எடை போட்டு அவனிடம் கொடுத்தார் அமீர். அதிலிருந்து ஒரு துண்டை எடுத்து சுவைத்து பார்த்தான் ருத்ரன்.

"எனக்கு இந்த ஸ்வீட் பத்து கிலோ வேணும்... கிடைக்குமா?" அவரிடம் அவ்வளவு இனிப்பு பலகாரம் இல்லை என்று தெரிந்தே, வேண்டுமென்றே கேட்டான்.

"என்கிட்ட வெறும் மூணு கிலோ தான் சார் இருக்கு. ஆனா இதை என் கடைக்கு சப்ளை பண்ற பொண்ணு கிட்ட கேட்டா, உங்களுக்கு 10 கிலோ கிடைக்கும்"

அப்பொழுது சக்தி ஆட்டோவில் ஏறி அந்த இடத்தை விட்டு செல்வதை அவர்கள் பார்த்தார்கள்.

"அடடா... அந்த பொண்ணு போயிடுச்சே..."

"அவங்க அட்ரஸ் கிடைக்குமா?" என்றான் ருத்ரன்.

"நிச்சயமா தரேன் சார்"

"இந்த ஸ்வீட்ஸ் எல்லாம் யார் செய்யறா?"

"இப்ப வந்தாளே, அந்த பொண்ணு தான் செய்வா" என்றார் ஒரு துண்டு காகிதத்தை எடுத்தபடி.

"அவங்க வீட்ல வேற யாரும் அவங்களுக்கு ஹெல்ப் பண்ண மாட்டாங்களா?"

"அவளுக்கு யாருமில்ல சார். அவங்க அப்பா தான் இந்த வியாபாரத்தை தொடங்கினவர். மார்க்கெட்ல அவருக்கு ரொம்ப நல்ல பேரு. ஒரு வருஷத்துக்கு முன்னாடி தான் அவரும் அவங்க வீட்டுக்காரம்மாவும் ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க. பாவம் அந்த பொண்ணு, நிலை குலைஞ்சு போயிட்டா. எங்களுக்கு ஸ்வீட் சப்ளை பண்ண அவங்க அப்பா இல்லாமல் போனதால, நாங்க ரொம்ப பெரிய நஷ்டத்தை சந்திச்சோம். அப்படி ஒரு கை பக்குவம் அவங்க அப்பாவுக்கு. வேற வழி இல்லாம, அவளை இந்த வேலையை மறுபடி செய்யச் சொல்லி, நாங்க எல்லாரும் சேர்ந்து அந்த பொண்ணு கிட்ட போயி வேண்டி கேட்டுகிட்டோம். எங்களுக்காக அதை செய்ய அதை ஒத்துக்கிட்டா. ரொம்ப நல்ல பொண்ணு ஏன் தான் கடவுள் எப்பவும் நல்லவங்களையே சோதிக்கிறாரோ..."

அவர் கூறியதை ஏற்றுக் கொண்டவன் போல் தலையசைத்தான் ருத்ரன்.

*அவளுக்கு யாரும் இல்லைனா என்ன? நான் தான் வந்துட்டேனே* என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான் ருத்ரன்.

சக்தியின் முகவரி மற்றும் தொலைபேசி எண் மட்டும் அல்லாது, அவள் வீட்டிற்கு செல்லும் வழியையும் தெள்ளத் தெளிவாக எழுதி அவனிடம் கொடுத்தார் அமீர். அதிலிருந்த குறிப்பிட்டு சொல்லக்கூடிய இடங்களை நன்றாய் மனதில் வாங்கிக் கொண்ட ருத்ரன்,

"தேங்க்யூ" என்றான்.

புன்னகையுடன் தலையசைத்தார் அமீர். காரில் ஏறி அமர்ந்த ருத்ரன், தன் கையில் இருந்த துண்டு சீட்டை மீண்டும் ஒரு முறை பார்த்து,

"சக்தி..." என்று ஆழமாய் அவள் பெயரை உச்சரித்து,

"நான் வரேன்" என்று காரை முடுக்கினான்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top