39 ஓசூரில் சிவா

39 ஓசூரில் சிவா

சிற்றுண்டியை தயாரித்த சக்தி ருத்ரனுடன் அமர்ந்து அதை சாப்பிட துவங்கினாள். வழக்கம் போல் அதை ருசித்து சாப்பிட்டான் ருத்ரன்.

"ஏங்க, உங்க அம்மாவை பத்தி சொல்லுங்களேன்" என்றாள் சக்தி சாப்பிட்டபடி.

"எங்க அம்மா ரொம்ப ஸ்வீட்... உன்னை மாதிரியே... நான், சிவா, அக்கா, நாங்க மூணு பேரும் தான்  அவங்களுக்கு எல்லாம். நாங்க தான் அவங்க உலகம். எங்க சந்தோஷத்துக்காக அவங்க என்ன வேணா செய்வாங்க. அவங்களுக்குன்னு தனிப்பட்ட விருப்பு வெறுப்பே கிடையாது. எங்களை சார்ந்தே தான் இருந்தாங்க. அவங்க பேச்சு கூட, என்னையும், சிவாவையும், எங்க அக்காவையும் பத்தி மட்டும் தான் இருக்கும். அவங்க எங்களைப் பத்தியே தான் நினைச்சுகிட்டு இருப்பாங்க"

"உங்களுக்கு உங்க அம்மாவை ரொம்ப பிடிக்குமா?"

"ரொம்ப ரொம்ப... ஆனா எப்பவும் அவங்களை தொல்லை பண்ணிக்கிட்டே இருப்பேன்"

"ஏன்?"

"அவங்களை என் கூடவே இருக்க வைக்கிறதுக்காக. ஏதாவது சாக்கு சொல்லி அவங்க கூடவே இருப்பேன்... சுவத்துல இடிச்சிகிட்டேன், தலைவலி, வயித்து வலி, அப்படி ஏதாவது..."

"அதெல்லாம் உண்மையா?"

"சான்சே இல்ல" வாய்விட்டு சிரித்தான் ருத்ரன்.

"அவங்க கூட இருக்கணும்னா உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா?"

"ரொம்ப..."

"நீங்க அவங்களை ரொம்ப மிஸ் பண்றீங்க இல்ல?"

"நீ என் வாழ்க்கையில வர்ற வரைக்கும் நான் அவங்களை ரொம்ப மிஸ் பண்ணேன்"

"நான் அவங்களை மறக்க வச்சிட்டேனா?"

"இல்ல... அதிகமா நினைக்க வச்சிருக்க... உன்னோட செயலால..." சற்றே நிறுத்தியவன்,

"மாயா இறந்த போது நான் அவளுக்காக ரொம்ப வருத்தப்பட்டேன்"

அன்பாய் அவள் தலையை வருடினான்.

"ஆனா, அவ எனக்காக பிறந்தவ இல்ல. அவளோட காதல் ரொம்ப உண்மையானது. அவ என் மடியில உயிரரை விட்டபோது அதை நான் உணர்ந்தேன். ஆனா, அவ உயிரோட இருந்திருந்தா கூட, நான் அவ கூட சந்தோஷமா இருந்திருப்பேனான்னு எனக்கு தெரியல. ஆனா, கடைசி நேரத்துல அவ உன்னை பத்தி சொன்ன வார்த்தைகளுக்காக நான் அவளுக்கு ரொம்ப கடமைப்பட்டு இருக்கேன். அவ சொன்னது குறிப்பா உன்னைப்பத்தி இல்லனாலும், அது தான் உன்னை கண்டுபிடிக்க எனக்கு உதவியா இருந்துச்சு"

"அது ஏன்னா, நான் தான் உங்களுக்காக விதிக்கப்பட்டவ. மாயா உயிரோடவே இருந்திருந்தா கூட, நீங்க அவளை கல்யாணம் பண்ணி இருக்க மாட்டீங்க. நான் தான் உங்களுக்கு பொண்டாட்டியா வரணும்னு எழுதி வெச்சிருக்கும் போது, அதை யாராலையும் மாத்த முடியாது"

அழகாய் புன்னகைத்தான் ருத்ரன்.

"நான் உங்க மேல ரொம்ப பொஸஸ்ஸிவ்வா இருக்கேன்னு ஒன்னும் நினைச்சிக்க வேண்டாம்" என்றாள் முகத்தை சுளுக் என்று வைத்துக் கொண்டு.

"நீ பொஸ்ஸஸிவா இல்லையா?"

"ஆமாம், இருக்கேன். அதனால என்ன?"

"நிஜமாவா?"

"பின்ன என்ன? நீங்க என் புருஷன் இல்லையா?"

"அதனால?"

"பொண்டாட்டின்னா பொஸ்ஸஸிவா தான் இருப்பா"

"அப்படியா? சரி, யாராவது என்னை உங்கிட்ட இருந்து பறிச்சிக்க நினைச்சா என்ன செய்வ?"

"அதுல யோசிக்க என்ன இருக்கு? போட்டு தள்ளிட்டு போக வேண்டியது தான்"

"ஒய்... போட்டு தள்ளிடுவியா?" புருவம் உயர்த்தி சிரித்தான் ருத்ரன்

"பின்ன என்ன? என் புருஷனை என்கிட்ட இருந்து பறிக்க நினைக்கிறவங்களுக்கு நான் கருணை காட்டுவேனா?"

"என்னை உனக்கு அவ்வளவு பிடிக்குமா?" அவனது குரலில் பெருமிதம் வழிந்து ஓடியது.

"உங்களை எனக்கு ரொம்ம்ம்ம்ம்ப பிடிக்கும்" என்ற போது அவளது குரல் சீரியஸாய் ஒலித்தது.

சாப்பிட்டு முடித்துவிட்டு கை கழுவ எழுந்து சென்றாள் சக்தி. அவளை பின்தொடர்ந்து சென்ற ருத்ரன், தன் கையை கழுவிய படி,

"உனக்கு என் மேல எவ்வளவு காதல் இருக்குன்னு நீ எப்படி காட்டுவ?" என்றான்.

"உயிரைக் கொடுத்தாவது நிரூபிச்சு காட்டுவேன்"

"வாயை மூடு" என்று தன் கையால் அவள் வாயில்  பொத்தினான்.

அவன் கையை தன் வாயிலிருந்து எடுத்த சக்தி,

"நீங்க இல்லாத வாழ்க்கைக்கு அர்த்தம் இல்ல. அப்படி ஒரு அர்த்தமில்லாத வாழ்க்கையை வாழ நான் விரும்பல"

"நீ இல்லாம என்னோட வாழ்க்கைக்கும் அர்த்தம் இல்ல.  ஆனா, சக்திங்கற அர்த்தத்தோட அந்த வாழ்க்கையை வாழ நான் விரும்புறேன். என் வாழ்க்கையை நான் உன் கூட முடிவில்லாம வாழனும்னு நினைக்கிறேன் சக்தி"

அவன் நெஞ்சில் சாய்ந்து, அவன் இடையை சுற்றி வளைத்துக் கொண்டாள் சக்தி. அவளை ருத்ரனும் தழுவிக் கொண்டான்.

"என்னங்க, நம்ம ரூமுக்கு போகலாமா?"

"ரோஸ் கார்டனை பாக்கணும்னு சொன்னியே?"

"அதை நம்ம அப்புறமா போய் பாக்கலாம்"

"இப்போ ஏன் போக வேண்டாம்?"

"எனக்கு இப்போ உங்களைத் தான் பார்க்கணும்னு தோணுது"

வியப்புடன் அவளை ஏறிட்டான்.

"இப்படி எல்லாம் பேசி, இல்லாத மூடை கிளப்பி விட்டுடாத சக்தி"

"உங்களுக்கு மூட் இல்லன்னா போங்க. கொஞ்ச நேரம் தூங்கலாம்"

"வேண்டாம் சக்தி. வம்பை விலை கொடுத்து வாங்காத"

"இப்போ வர போறீங்களா இல்லையா?"

"நீ கூப்பிட்டு நான் வர மாட்டேன்னு சொல்லுவேனா?"

"அப்படின்னா வாங்க"

அவனது கையைப் பிடித்துக் கொண்டு தன் அறையை நோக்கி நடந்தாள் சக்தி.

"இந்த ஊர் கிளைமேட் நம்மளை சோம்பேறி ஆக்கிடும் போலருக்கு" என்றாள் சக்தி.

"பரவாயில்லை விடு சக்தி. இந்த மாதிரி கிளைமேட் நிச்சயம் சென்னையில் கிடைக்காது"

சக்தி கூறியது உண்மை தான். ஓசூரின் காலநிலை, வேலைக்கு செல்பவர்களையே சோம்பல் முறிக்க வைத்தது. அப்படி இருக்கும் பொழுது, சும்மா இருப்பதையே வேலையாக கொண்ட அவர்களை மட்டும் விட்டு விடவா போகிறது?

படுத்தது தான் தாமதம், இருவரும் தூக்கத்தில் ஆழ்ந்தார்கள் என்று கூறினால், அது சுத்த பொய். அந்த கும்மென்ற காலநிலை, அவர்களை அவ்வளவு எளிதாய் தூங்க விட்டு விடுமா என்ன?

சக்தி தூக்கம் கலைந்து எழுந்த போது, ருத்ரன், ஏற்கனவே விழித்துவிட்டிருந்தான்.

"என்னை ஏங்க எழுப்பாம விட்டுட்டீங்க?" என்றாள் தூக்கம் கலையாத குரலில்.

"நீ ரொம்ப டீப்பா தூங்கிகிட்டு இருந்த. உன்னை எழுப்ப மனசு வரல. அதனால லஞ்சை வெளியில ஆர்டர் பண்ணிட்டேன். அதனால சமைக்கணுமேன்னு கவலைப்படாதே"

"தேங்க்யூ சோ மச்"

"சரி வா, ரோஸ் கார்டனை  பார்க்கணும்னு சொன்னல்ல? போய் பாக்கலாம்"

சரி என்று குதூகலமாய் தலை அசைத்தாள் சக்தி.

"லஞ்ச் வர்றதுக்குள்ள போய் பார்த்துட்டு வந்துடலாம்"

"சரி" என்று முகம் கழுவ குளியல் அறைக்கு சென்றாள் சக்தி.

காதை மூடிக்கொள்ளும் படியான உடையை அவளிடம் தந்தான் ருத்ரன்.

"உன்னை நல்லா கவர் பண்ணிக்கோ. கிளைமேட் ரொம்ப கோல்டா இருக்கு"

இயர்பட்டை காதில் பொருத்திக் கொண்டு அவனுடன் நடந்தாள் சக்தி.

.........

ஐந்து மணி நேரத்தில் ஓசூரை வந்து அடைந்த சிவா, உமாபதிக்கு ஃபோன் செய்தான்.

"உமா, எங்க இருக்க?"

"உங்க அண்ணனோட வீட்டுக்கு முன்னாடி தான் நின்னுகிட்டு இருக்கேன்"

"இன்னும் நீ ருத்ரனையோ, சக்தியையோ பாக்கலையா?"

"இல்ல இன்னும் பாக்கல. அதுக்காக தான் காத்துகிட்டு இருக்கேன்"

"எந்த ஏரியாவுல இருக்க?"

"இங்கிருந்து ஓசூர் ஒரு கிலோமீட்டர்"

"ஏதாவது லேண்ட்மார்க் இருக்கா?"

"இருக்கு.  மெயின் ரோட்ல, ஒரு பெரிய பேனர்ல, ஒரு நகை கடை ஆட்ல நயன்தாராவோட போட்டோ இருக்கும். அந்த பேனரை ஒட்டுன மாதிரி இருக்கிற சந்துக்குள்ள வரணும்"

"சரி, நீ அங்கேயே இரு. நான் வரேன்"

"என்ன்னனது? வரியா? அப்படின்னா நீ ஓசூர்ல தான் இருக்கியா?"

"ஆமாம். நான் அந்த பேனர் பக்கத்து சந்தில் திரும்பிட்டேன். எப்படி வரணும்னு சொல்லு"

"நேரா வா... செகண்ட் லெஃப்ட் எடு... அங்கிருந்து பாக்கும் போது, வெள்ளையும், க்ரேவும், பெயின்ட் பண்ண ஒரு பங்களா இருக்கும். அது தான் உங்க அண்ணன் வீடு"

அவன் கூறியது போலவே அங்கு ஒரு பங்களா இருந்தது. அந்த பங்களாவின் அருகில் வேறு எந்த வீடும் இருக்கவில்லை. அந்த வீட்டின் முன்னால் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினான் சிவா. அந்த வீட்டில் அவர்கள் தேடிக் கொண்டிருந்த, அதே எண்ணுடன் கூடிய கார் நின்று கொண்டிருந்தது. அந்த வீட்டில் நுழைய, உமாபதிக்கு இருந்த தயக்கம், சிவாவுக்கு இருக்க வில்லை. அவன் எதைப் பற்றியும் கவலைப்படாமல், நேராக உள்ளே சென்றான். அந்த வீட்டின் காவலாளிகள் அவனை தடுத்து நிறுத்தினார்கள்.

"நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேணும்?"

"நான் ருத்ரனை பாக்கணும்"

அந்த காவலாளிகள் இருவரும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"நீங்க வர போறீங்கன்னு எங்களுக்கு எந்த விவரமும் சொல்ல படலையே"

"அப்படின்னா நீங்களே ருத்ரனை கேளுங்க. சிவா வந்திருக்கேன்னு சொல்லுங்க"

அப்பொழுது, தொலைவில், ரோஜா தோட்டத்திற்கு இடையில், ருத்ரன், சக்தியுடன் நின்றிருந்ததை கண்டான் சிவா.

"ருத்ரா..." சிவா குரல் கொடுத்தான்.

குரல் வந்த திசையை நோக்கி ருத்ரனும், சக்தியும் திரும்பி பார்த்தார்கள். அவர்களைப் பார்த்து சிவா கையசைத்தான்.

"யாருங்க அவரு?" என்றாள் சக்தி.

"சிவா" என்றான் எரிச்சலுடன்.

"அவர் உண்மையிலேயே நம்மளை கண்டுபிடிச்சிட்டாரு"

"ஆமாம். நீ இங்கயே இரு. நான் இப்ப வரேன்" என்று சிவாவை நோக்கி நடந்தான் ருத்ரன்.

"எப்படி இருக்க ருத்து?"

"நீ இங்க என்ன பண்ற?" என்றான் அவனது கேள்விக்கு பதில் கூறாமல்.

"உன்னை பார்க்க தான் வந்தேன்"

"நீ எந்த கழுதைக்கு என்னை பார்க்க வந்த?"

"நான் எப்பவும் உன் பக்கம் தான் இருப்பேன்னு உன்கிட்ட சொல்ல வந்தேன்"

"எனக்கு யாரோட உதவியும் தேவையில்ல. மரியாதையா இங்கிருந்து கிளம்பி போ"

"நான் சொல்றதை கேளு ருத்து"

"சிவா, எனக்கு யாருடைய ஹெல்பும் தேவையில்ல. உண்மையை சொல்லப் போனா, நான் சக்தி கூட ரொம்ப சந்தோஷமா இருக்கேன். உண்மையிலேயே நீ என் பக்கம் நிக்கிறதா இருந்தா, தயவுசெய்து இங்கிருந்து போ. நான் இங்க தான் இருக்கேன்னு யார் கிட்டயும் சொல்லாத"

"நிச்சயமா, சத்தியமா சொல்ல மாட்டேன். நீ என்னை நம்பலாம்"

"சரி, நம்புறேன். இங்கிருந்து கிளம்பு"

"என்னை உன் வீட்டுக்குள்ள கூப்பிட்டு, அண்ணிக்கு என்னை இன்ட்ரடுயூஸ் பண்ணி வைக்க மாட்டியா?"

எரிச்சலுடன் அவனை ஏறிட்டான் ருத்ரன்.

அப்பொழுது அங்கு வந்து நின்றது ஒரு கார். அதன் ஜன்னல் கண்ணாடி லேசாய் கீழே இறக்கப்பட்டது. அதன் வழியாக ஒரு குழல் வெளியே வருவதை கவனித்த ருத்ரன், திகில் அடைந்தான். ஏனென்றால் அது ஒரு துப்பாக்கி. சைலன்ஸர் பொருத்தப்பட்ட அந்த துப்பாக்கியின் முனை சக்தியை குறி பார்த்திருந்தது. அடுத்த நொடி அந்த துப்பாக்கியில் இருந்து ஒரு குண்டு சக்தியை நோக்கி சீறிப்பாய்ந்தது. அதை உணர்ந்து கொண்ட ருத்ரன் சக்தியை நோக்கி திரும்ப, அவள் கீழே விழுவதை கண்டான்.

"சக்.....தி..." அந்த இடமே அதிரும் வண்ணம் குரல் எழுப்பினான் ருத்ரன்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top