36 சிவாவின் யூகம்

36 சிவாவின் யூகம்

சிவாவின் போலீஸ் நண்பனிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்றான் சிவா.

"சொல்லுங்க சார்"

"சிவா, அந்த கார், ஏஹெச் 44 ல, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வேலூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி தாண்டி... அதாவது, சென்னை டூ பெங்களூரு ரூட்ல போயிருக்கு. ஆனா, ஓசூரை தாண்டி போகல..."

"ஓ அப்படியா சார்? ரொம்ப நன்றி சார்"

"ஏதாவது பிரச்சனையா?"

"ஒன்னும் இல்ல சார். ஒரு கேஸ் விஷயமா தான்..."

"ருத்ரன் எப்படி இருக்காரு?"

"வழக்கம் போல பிஸியா இருக்காரு"

"அப்படித் தானே இருக்கணும்? அவர் ருத்ரனாச்சே" என்று சிரித்தார் அந்த காவல் அதிகாரி.

"நீங்க சொல்றது சரி தான் சார்"

"ஏதாவது ஹெல்ப் வேணும்னா என்கிட்ட கேளுங்க, சிவா"

"நிச்சயமா சார். தேங்க்யூ சோ மச்"

அழைப்பை துண்டித்தார் அந்த காவல்துறை அதிகாரி.

*ருத்ரன் ஓசூரில் இருக்கிறான். ஆனால் அவனுக்கு அங்கு எந்த சொத்தும் இல்லையே...! அவன் அதற்காகவே கூட அந்த ஊரை தேர்ந்தெடுத்திருக்கலாம், அவர்களுடைய கவனத்தை திசை திருப்புவதற்காக. ருத்ரனுக்கு எங்கெல்லாம் சொத்துக்கள் இருக்கிறது என்பது சிவாவுக்கு நன்றாக தெரியும் என்பதற்காகவே, அவனுக்கு எந்த சொத்தும் இல்லாத ஓசூருக்கு அவன் சென்றிருக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு தெரியாமல் அவன் அங்கு ஏதாவது ஒரு சொத்தை வாங்கியிருக்க வேண்டும். ஆனால் இப்பொழுது எப்படி ருத்ரனை கண்டுபிடிப்பது? ஓசூர், *மாநகராட்சி* அந்தஸ்து பெற்றுவிட்ட, வளர்ந்து வரும் ஒரு நகரம். பெங்களூருவில் பணிபுரியும் பலரும், பெங்களூருவில் *லிவிங் காஸ்ட்* அதிகம் என்பதால், அதற்கு அருகில் இருக்கும் ஓசூரை தான் குடியேறுவதற்காக தேர்ந்தெடுக்கிறார்கள். எந்த விவரமும் இன்றி ஒருவரை கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல* என்பதையெல்லாம் அலசி ஆராய்ந்தான் சிவா.

தனது கைபேசியை எடுத்து உமாபதியை அழைத்தான்.

"சொல்லு சிவா"

"ஏதாவது தெரிஞ்சுதா?"

"ஆரம்பிச்ச இடத்திலேயே வந்து நின்னுகிட்டு இருக்கேன். இங்க எனக்கு ஒரு க்ளூ கூட கிடைக்கல. உங்க அண்ணனோட ஃபார்ம் ஹவுஸ் பக்கத்துல ஒரு கார் நின்னுகிட்டு இருந்ததா ஒரு க்ளூ கிடைச்சது. அந்த கார், மகேஷ்ங்கறவரோட பேர்ல இருந்தது. ஆனா ரெஜிஸ்ட்ரேஷன் பேப்பர்ல இருக்கிற அட்ரஸ்ல, அங்க அப்படி யாரும் இல்ல"

"மகேஷா?"

"ஆமாம். மகேஷ் என்ற பேர்ல உனக்கு யாராவது தெரியுமா?"

"தெரிஞ்ச மாதிரி தான் இருக்கு"

"கொஞ்சம் நல்லா ஞாபகப்படுத்தி பாரு, மாப்பிள"

"சரி செய்யறேன். ஆனா, நீ உடனே ஓசூர் போகணும்"

"ஓசூருக்கா?"

"ஆமாம். ருத்ரன் அங்க தான் இருக்கணும். அவனோட கார் சென்னையில் இருந்து ஓசூர் ரூட்ல போய் இருக்கு. ஆனா அவனோட கார் ஓசூரை தாண்டி போகல"

"ஃபென்டாஸ்டிக்..."

"நீ ருத்ரனை தேடி கண்டுபிடிக்கிற வழியை பாரு. ஏதாவது விஷயம் தெரிஞ்சா, எனக்கு உடனே ஃபோன் பண்ணி சொல்லு"

"நிச்சயம் சொல்றேன்"

"மகேஷ் விஷயத்தை என்கிட்ட விடு. அவனோட கார் நம்பரை எனக்கு டெஸ்ட் பண்ணு. நான் பார்த்துக்கிறேன்"

"சரி. ருத்ரன் கார் நம்பரை எனக்கு நீ அனுப்பு"

"அனுப்புறேன்" என்று அழைப்பை துண்டித்தான் சிவா.

இருவரும், அந்தந்த கார் எண்களை மாற்றி அனுப்பி கொண்டார்கள்.

உமாபதி, ருத்ரனை கண்டுபிடித்தவுடன், ருத்ரனை தனிமையில் சந்தித்து, அவனுடைய நிலைமை என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணினான் சிவா.

ஆம், அவனை கண்டுபிடித்த பிறகு, அவனை நேரில் சந்திக்காமல்,  அவனது இருப்பிடத்தை தன் குடும்பத்தாருக்கு தெரியப்படுத்த சிவாவுக்கு விருப்பமில்லை. யாருடைய தலையிடும் இன்றி, ருத்ரன் சக்தியுடன் வசிக்க விரும்பினால், அவனை அவன் விருப்பப்படி  விட்டு விடுவது தான் நல்லது. ஆனால் அதே நேரம், யாருக்கும் தெரியாமல் அவன் தனிமையில் வசிப்பதும் நல்லதல்ல. சிவா அவனுக்கு துணையாக இருக்கிறான் என்று ருத்ரன் அறிந்து கொள்ள வேண்டும். தன் வாழ்க்கையை, தான் நினைத்தபடி சந்தோஷமாய் வாழ ருத்ரனுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. ஏற்கனவே அவன் உடைந்து போனவன். அவன் வாழ்வின் மிக உன்னதமான இரண்டு வருடங்களை அவன் மருத்துவமனையில் கழித்து விட்டான். இனி அவன் வாழ்வில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று எண்ணினான் சிவா. அவனுக்கு வேண்டியதெல்லாம் ருத்ரனின் சந்தோஷமும், நலனும் மட்டுமே.

ஓசூர்

ஓசூரின் பகல் நேர குளிரில், தன் உடல் வெப்பத்தை சக்தியுடன் இதமாய் பரிமாறிக் கொண்ட களிப்பில், கம்பளி போர்வைக்குள் உறங்கிக் கொண்டிருந்த ருத்ரனின் தூக்கம் கலைந்தது, அவனை அணைத்துக் கொண்டு படுத்திருந்த சக்தியை காணாததால். கண்களை மூடியிருந்த  அவனது கைகள் அவளை தேடின.

"சக்தி..." என்று அழைத்தான்.

சக்தியிடமிருந்து எந்த பதிலும் இல்லை. தன் செருப்பை அணிந்து கொண்டு, அவள் குளியலறையில் இருக்கிறாளா என்று பார்த்த போது, அவள் அங்கு இல்லை. அதனால் இரண்டே தாவலில் மாடிப்படியை கடந்து கீழே வந்தான். அவள் சமையலறையிலும் இல்லை.

"சக்....தி....." என்று  உரத்த குரல் எழுப்பினான்.

முன்பக்கப் கதவு சாத்தப்பட்டிருந்தது. கதவை திறந்து கொண்டு, காவலாளியின் அறையின் கண்ணாடி சுவர் வழியாக அவர்களை கவனித்தான். அவர்கள் இருவரும் அந்த அறையில் தான் அமர்ந்திருந்தார்கள். குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தால் அவர்களது அறையின் கதவும் சாத்தப்பட்டிருந்தது. அந்த ஜில்லென்ற காற்றைப் பற்றி கவலைப்படாமல் வெளியே இறங்கி வந்தான் ருத்ரன்.

"என்னோட வைஃப் எங்க? அவ எங்கையாவது போனதை பார்த்தீங்களா?"

"இல்ல சார்... நாங்க அவங்களை பார்க்கல"

"அவங்க எங்கேயும் போகல சார்" என்று மற்றொருவன் கூற, அது அவன் மனதிற்கு நிம்மதியை தந்தது.

அவர்களைக் கடந்து சக்தி வெளியே எங்கும் செல்லவில்லை. அதனால், அவளைத் தேடிக் கொண்டு அந்த வீட்டின் பின்பக்கம் வந்தான். ரோஜா செடிகளை ரசித்தபடி அங்கு நின்றிருந்தாள் சக்தி. அழகாய் பூத்திருந்த சிகப்பு ரோஜாவை அவள் வருடி கொண்டிருந்தாள். அவளை நோக்கி கோபமாய் சென்ற ருத்ரன், அவள் கரத்தைப் பற்றி இழுத்தான். அந்த ரோஜா செடியில் இருந்த முள் அவள் கையை பதம் பார்க்க,

"இஸ்ஸ்ஸ்..." என்றாள்.

ஓரிரு துளி ரத்தம் அவள் விரலில் இருந்து வெளியேறியது. அதைப் பார்த்த ருத்ரனின் பதட்டம் எல்லை மீறியது.

"சக்....தி..." அவளை தன் கையில் தூக்கிக் கொண்டு வீட்டை நோக்கி ஓடினான், அந்த காயம் அவள் உயிரையே வாங்கிவிடும் என்பது போல.

"என்னங்க... என்ன செய்றீங்க நீங்க? என்ன கீழே இறக்கி விடுங்க"

வீட்டினுள் வந்த ருத்ரன், அவளை சோபாவில் அமர வைத்துவிட்டு, அங்கிருந்து அட்டைப் பெட்டியில் அதற்கு உகந்த மருந்தை தேடினான். ஒரு மருந்தகத்தின் பெயர் பொறிக்கப்பட்ட காக்கிநிற உறை அவன் கண்ணில் பட்டது. அதிலிருந்த மருந்தை எடுத்து, அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். ஆன்ட்டி செப்டிக் லோஷனில் பஞ்சை முக்கி, அவள் காயத்தை துடைத்துவிட்டு, அதற்கு மருந்திட்டு பேண்ட்-ஏய்டை ஒட்டினான்.

"என்னங்க... இது ரொம்ப சாதாரண காயம்... இதுக்காக ஏன் இவ்வளவு பதட்டப்படுறீங்க?"

"எதுக்காக சொல்லாம கொள்ளாம வீட்டை விட்டு வெளியே போன நீ?" என்று அவன் கோபத்தில் கத்த, திடுக்கிட்டு பின்வாங்கினாள் சக்தி.

"செடிகளை பார்க்கலாம்னு நினைச்சேன்..."

"செடிகளைப் பார்க்க இது தான் நேரமா? காத்து எவ்வளவு வேகமாக வீசிக்கிட்டு இருக்குன்னு தெரியலயா உனக்கு? உனக்கு உடம்பு சரியில்லாம போச்சுன்னா என்ன செய்வ?"

"நான் இயர்பட்டும், மஃப்ளரும் போட்டுக்கிட்டு தான் போனேன்..." என்றாள் முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டு.

தன் விரல்களை தன் தலைமுடியில் ஓட விட்டான் ருத்ரன்.

"ரோஜா செடியை பார்க்க போறது கூடவா தப்பு? நீங்க முன்னாடியே போக வேண்டாம்னு சொல்லியிருந்தா, நான் போயிருக்க மாட்டேன் இல்ல?"

அவள் பயந்துவிட்டதை புரிந்து கொண்ட ருத்ரன், தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டு அவள் பக்கத்தில் அமர்ந்து அவள் தோள்களை சுற்றி வளைத்துக் கொண்டான்.

" உனக்கு எங்கேயாவது போகணும்னு தோணுச்சினாலோ, எதையாவது பார்க்கணும்னு நினைச்சாலோ, என்கிட்ட சொல்லு... நான் கூட்டிக்கிட்டு போறேன்"

"ம்ம்ம்ம்" என்றாள் முகத்தை உம் என்று வைத்துக் கொண்டு.

"ஐ அம் சாரி. என்னால தான் உனக்கு கைல காயம்பட்டுடுச்சு"

"இதெல்லாம் ரொம்ப சாதாரணம். நான் ஸ்வீட் செய்யும் போது, இதை விட பெரிய காயமெல்லாம்  நிறைய பட்டிருக்கேன்"

"நீ ஏற்கனவே காயம் பட்டிருக்க அப்படிங்கிறதுக்காக, நான் உன்னை காயப்படுத்தினது சரி ஆகாது" என்று அவள் விரலில் முத்தமிட்டான்.

அவனது தோளில் சாய்ந்து கொண்டாள் சக்தி.

"ஏன் இவ்வளவு டென்ஷனானிங்க?"

"உன்னை காணோம்னு சொன்னதும் ரொம்ப பயந்துட்டேன். இது உனக்கு புது இடம். அதுவும் ரொம்ப ரிமோட்ட்டா வேற இருக்கு. அது தான் எனக்கு டென்ஷன் ஆயிடுச்சு"

"என் மேல இவ்வளவு அன்பை பொழியிற புருஷன் எனக்கு கிடைப்பார்னு நான் நினைச்சதே இல்ல"

 அவள் நெற்றியில் முத்தமிட்ட ருத்ரன்,

"எனக்கு நீ தான் சக்தி எல்லாம்" என்றான்.

"எனக்கு தெரியுங்க"

"எதுக்காக இவ்வளவு சீக்கிரம் எழுந்த?"

"அவசியம் இருந்தது"

"அப்படின்னா?"

"குளிக்கிறதுக்காக எழுந்தேன்"

"இந்த குளிர்ல எழுந்து குளிச்சியா?"

ஆமாம் என்று தலையசைத்தாள்.

"ஆனா ஏன்?"

"எனக்கு பீரியட்ஸ்"

"ஒ..."

"அதனால தான் குளிச்சேன்"

"குளிக்கிறது அவசியமா என்ன?"

"ம்ம்... குளிக்கலைன்னா எனக்கு ஒரு மாதிரியா இருக்கும்..."

"இதெல்லாம் தேவையே இல்லாத விஷயம். உன்னை மாத்திக்க பாரு"

முகத்தை உம் என்று வைத்துக் கொண்டாள் சக்தி.

" உன் முகத்தை இப்படி வச்சுக்காத"  சிரித்தான் ருத்ரன்.

 சக்தியும் சிரித்தாள்.

"சக்தி..."

"ம்ம்?"

"உனக்கு பீரியட்ஸ்னா... நம்ம இன்ட்டிமேட் பண்ண முடியாதா?"

தன் உதடுகளை அழுத்தி, முடியாது என்பது போல் தலையசைத்தாள்.

"எத்தனை நாள் வரைக்கும்?"

அவனிடம் மூன்று விரல்களை காட்டினாள்.

"ஒ..."

சக்தி புன்னகை புரிந்தாள்.

"இந்த நாள்ல உனக்கு வலிக்குமா?"

"கை, கால் குடைச்சல் இருக்கும்... டயர்டா இருக்கும்... அவ்வளவு தான்"

"அப்படின்னா நீ ரெஸ்ட் எடுத்துக்கோ. நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்"

"டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு நினைக்கிற அளவுக்கு ஒன்னும் சீரியஸ் இல்ல"

"அப்படின்னா நம்ம கிஸ் பண்ணலாமா?"

பண்ணலாம் என்பது போல் தலையசைத்தாள்.

"நெஜமாவா?" என்றான் குதூகலமாக.

"அது உங்களைப் பொறுத்த விஷயம். உங்களால முத்தத்தோடு நிறுத்த முடியும்னா, தாராளமா செய்யலாம்"

"அது போதும்... மூணு நாளை சந்தோஷமா கடத்துவேன்" என்று தன் நெற்றியை அவள் நெற்றியில் மோதி சிரித்தான் ருத்ரன்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top