33 மனக்கிளர்ச்சி

33 மனக்கிளர்ச்சி

தூக்கத்திலிருந்து கண்விழித்த சக்தி, தன் கைகளை நீட்டி சோம்பல் முறித்தாள். போர்வைக்கு வெளியே நீட்டப்பட்ட கைகளில் திடீர் குளிர் தாக்கியதால், மீண்டும் சட்டென்று உள்ளே இழுத்துக் கொண்டாள். அப்பொழுது தான், அவள் போர்த்தியிருந்த போர்வையின் நிறம் வெள்ளை நிறத்தில் இருந்ததை அவள் கவனித்தாள். பண்ணை வீட்டில் அவள் பயன்படுத்திய போர்வையின் நிறம், வெளிர் மஞ்சள் என்பது அவள் நினைவுக்கு வந்தது. அவள் ருத்ரனின் பக்கம் திரும்ப, அப்பொழுது தான், தான் தங்கியிருந்த அறை வேறு மாதிரியாய் இருந்ததை அவள் கவனித்தாள். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த அறையில் தன் கண்களை ஓடவிட்ட போது, தான் இருப்பது பண்ணை வீட்டின் அறையில் அல்ல என்று அவளுக்கு புரிந்தது. அந்த அறையில், ஆள் உயர பெரிய ஜன்னல் ஒன்று இருந்தது. அந்த ஜன்னலின் வழியாக அவள் கண் முன் விரிந்த காட்சி அவளுக்கு பேரானந்தத்தை அளித்தது. மலைகளால் சூழப்பட்ட, பச்சை பசேல் என்று கண்களுக்கு விருந்தளித்த காட்சி அது. கட்டிலை விட்டு கீழே இறங்கி, அந்த ஜன்னலை நோக்கி ஓடியவள், தன் பாதத்தில் சுருக் என்ற குளிர்ச்சி பாய்வதை உணர்ந்து, மீண்டும் கட்டிலுக்கு ஓடிச்சென்று, அங்கிருந்து ருத்ரனின் செருப்பை அணிந்து கொண்டு மீண்டும் அந்த ஜன்னலின் அருகே வந்தாள். அவள் தங்கியிருந்த வீட்டின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், மிகப் பெரிய, வண்ண மயமான ரோஜா தோட்டம் இருந்தது. பல வண்ண ரோஜா மலர்கள் அங்கு பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. தான் இருப்பது சென்னையில் அல்ல என்று தீர்க்கமான முடிவுக்கு வந்தாள் சக்தி. அப்படி என்றால் இது எந்த இடம்? அவள் இங்கு வந்தது எப்படி? முதல் நாள் மாலை, துர்காவும் பரமேஸ்வரனும் பண்ணை வீட்டிற்கு வந்திருந்தார்களே... அவர்கள் என்ன ஆனார்கள்? அவர்களும் இங்கு வந்திருக்கிறார்களோ? அல்லது அவர்கள் வீட்டிற்கு திரும்பி சென்று விட்டார்களா? ஆனால் அவர்கள், அவளும் ருத்திரனும் அவர்களுடன் சேர்ந்து அவர்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்றல்லவா விரும்பினார்கள்...! அதை எண்ணி ருத்ரன் கூட கோபம் கொண்டானே...! தான் வீட்டிற்கு செல்ல விரும்பவில்லை என்று ருத்ரன் கூறினான்... அதன் பிறகு அவர்கள் இருவரும்  தங்கள் தாம்பத்தியத்தை துவங்கினார்கள்...! அதை எண்ணிய போது அவளது கன்னத்தில் சிவப்பேறியது. அவள் கனவு ஒன்றும் காணவில்லையே...! தன்னைத்தானே கிள்ளி பார்த்துக்கொண்டாள் சக்தி. அவளுக்கு வலித்தது. அப்படி என்றால் அவள் காண்பது கனவல்ல. அவள் உண்மையிலேயே வேறு எங்கோ இருக்கிறாள்.

நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்த ருத்ரனை கண்டாள். அவன் தான் அவளை இங்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் ஏன் அவன் அப்படி செய்தான்? துர்காவுக்கு என்ன பதில் கூறினான்? அவர்கள் எப்படி அவனை இங்கு வர அனுமதித்தார்கள்? ருத்ரனை நோக்கிச் சென்ற அவள், மெல்ல அவனது கரம் பற்றி உலுக்கினாள்.

"என்னங்க... எழுந்திடுங்க"

லேசாய் கண் திறந்த ருத்ரன். தூக்க கலக்கத்துடன் அவளை ஏறிட்டு,

"குட்மார்னிங் சக்தி" என்று புன்னகைத்தான்.

"நம்ம இப்ப எங்க வந்திருக்கோம்? இது எந்த இடம்?" என்றாள்.

கண்களை கசக்கியபடி எழுந்தான் ருத்ரன்.

"இதுவும் நம்ம வீடு தான்" என்றான்.

"நான் எப்படி இங்கே வந்தேன்? நம்ம எப்படி இங்க வந்தோம்?"

கட்டிலின் மீது எழுந்தமர்ந்த ருத்ரன்,

"இது என்ன கேள்வி சக்தி? நான் தான் உன்னை தூக்கிக்கிட்டு வந்தேன்"

"மறுபடியுமா? முதல்ல என்னை சேலத்தில் இருந்து சென்னைக்கு தூக்கிட்டு போனீங்க..."

சற்று நிறுத்தியவள்,

"இது எந்த இடம்?" என்றாள்.

"ஓசூர்"

"ஆங்... இப்போ சென்னையிலிருந்து ஓசூருக்கு தூக்கிட்டு வந்துட்டீங்க. என்னை கிட்னாப் பண்றதை ஒரு ஹாபியாவே பண்ணிக்கிட்டு இருக்கீங்களா நீங்க?"

அதை கேட்டு சிரித்த ருத்ரன்,

"ஆமாம், நான் உன்னை கிட்னாப் தான் பண்ணிட்டேன்" என்றான்.

"போங்க... நீங்க இப்படி எல்லாம் பண்ண கூடாது..."

"பண்ணிட்டேனே..."

"உங்க அக்கா எங்க?"

"இந்நேரம் வீட்டுக்கு திரும்பி போயிருப்பாங்க"

"உங்களை அவங்க இங்க எப்படி வர விட்டாங்க...?"

"நம்ம இங்க வந்தது அவங்களுக்கு தெரியாது. நம்ம அங்கிருந்து கிளம்பும் போது அவங்க தூங்கிட்டு இருந்தாங்க"

"நீங்க அவங்க கிட்ட சொல்லிட்டு வரலையா?"

"சொல்லல... சொல்ல போறதுமில்லை... "

"ஆனா ஏன்?"

"நான் அவங்க கூட போக விரும்பல"

"எதுக்கு?"

"சக்தி ப்ளீஸ்... தயவு செய்து என்னை எதுவும் கேட்காத"

கட்டிலை விட்டு கீழே இறங்கினான்.

"நில்லுங்க"

"அவளை ஏறிட்டான் ருத்ரன்"

"தரை ஐஸ் மாதிரி இருக்கு"

தான் அணிந்திருந்த அவனது செருப்பை அவனுக்கு முன்னால் கழட்டி விட்டு, கட்டிலில் அமர்ந்து கொண்டாள் சக்தி.

"வீட்டுக்கு தேவையான பொருளை எல்லாம் வாங்கிட்டு வரச் சொல்லி செக்யூரிட்டி கிட்ட சொல்லி இருக்கேன். அவங்க உனக்கு ஸ்லிப்பர்ஸ் வாங்கிட்டு வந்திருப்பாங்க"

"ம்ம்"

கட்டிலை விட்டு கீழே இறங்கிய ருத்ரனின் கரத்தை பற்றி, அவனை நிறுத்தினாள் சக்தி.

"என்னை ஏன் இங்க கூட்டிக்கிட்டு வந்தீங்கன்னு சொல்ல மாட்டீங்களா?" என்றாள் தன் முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டு.

"எனக்கு ரொம்ப பசிக்குது. சாப்பிட ஏதாவது செஞ்சு கொடேன்" என்றான் அவளுக்கு பதில் கூறாமல்.

உதடு சுழித்து, முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டாள் சக்தி. சிரித்தபடி குளியலறை நோக்கி சென்றான் ருத்ரன்.

ருத்ரனின் கைபேசி, கட்டிலின் மீது இருப்பதை பார்த்தாள் சக்தி. துர்காவுக்கு ஃபோன் செய்து தாங்கள் ஓசூரில் இருக்கும் விஷயத்தை கூறலாமா என்று எண்ணி, கைபேசியை எடுக்க கையை நீட்டினாள். எதையோ யோசித்து கைபேசியை எடுக்காமல் நிறுத்திய அவள், துர்காவுக்கு ஃபோன் செய்ய வேண்டும் என்றால், அவள் அதை எப்பொழுது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ஆனால் அதற்கு முன், எதற்காக ருத்ரன் அவனது வீட்டிற்கு செல்ல விரும்பவில்லை என்று தெரிந்து கொள்ள நினைத்தாள் அவள். யாருக்கும் தெரியாமல் அவன் அவளை இங்கு அழைத்து வந்திருக்கிறான் என்றால் அதற்கு நிச்சயம் ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டும். முன்னால் சென்ற தன் கையை, பின்னால் இழுத்துக் கொண்டாள். ருத்ரனை தன்னிடம் எப்படி பேச வைப்பது என்று தீவிரமாய் யோசித்தாள்.

கட்டிலை விட்டு கீழே இறங்கி நின்ற போது, ஜில்லென்ற குளிர் அவள் தலைக்கு ஏறியது. அதை பொருட்படுத்தாமல் கீழ்தளம் நோக்கி ஓடினாள். அங்கு மிகப் பெரிய அட்டைப்பெட்டிகள் இரண்டு வைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த பொருட்களில் தேடிப் பார்த்த பொழுது, ருத்ரன் கூறியபடி, அவளுக்கான செருப்பும் இருந்தது. அதை அணிந்து கொண்டு அந்த வீட்டில் எத்தனை அறைகள் இருக்கிறது என்று அதை சுற்றிப் பார்த்து  தெரிந்து கொண்டாள். ருத்ரன் கொண்டு வந்த பைகள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. அதில் இருந்து தனது உடைகளை எடுத்து கொண்டு, தரைத்தளத்தில் இருந்த ஒரு அறையில் குளித்து முடித்தாள். பிறகு சீர் படுத்தப்படாமல் இருந்த  சமையலறைக்குச் சென்று, சமைக்க துவங்கினாள்.

சக்தியை தேடிக் கொண்டு தரைதளம் வந்தான் ருத்ரன். குளித்து முடித்துவிட்டு அவளுக்காக காத்திருந்த அவன், அவள் வராமல் போகவே அவளைத் தேடிக் கொண்டு வந்து விட்டான். அவள் சமைத்துக் கொண்டிருப்பதை பார்த்து, புன்னகைத்தபடி அவளை நோக்கி வந்தவன், சமையல் மேடையின் மீது சாய்ந்து நின்றான்.

"எனக்காக என்ன சமைக்கிற?" என்றான்.

அவனுக்கு பதில் கூறாமல் தன் வேலையை தொடர்ந்தாள் சக்தி.

"சக்தி, நான் உன்கிட்ட தான் என்னமோ கேட்டேன்..."

அவள் அவனை திரும்பி கூட பார்க்கவில்லை.

"சக்தி..." என்றான், நிலைத்த பார்வையுடன்.

"நான் கூடத்தான் உங்ககிட்ட என்னமோ கேட்டேன். ஆனா நீங்க எனக்கு பதில் சொல்லணும்னு நினைக்கலையே..." பர்ணரை ஆஃப் செய்து விட்டு அங்கிருந்து சென்றாள்.

"நில்லு சக்தி..." என்று அவளை பின்தொடர்ந்தான் ருத்ரன்.

அவள் நிற்கவில்லை. அவள் கரத்தைப் பற்றி அவளை மேலும் நகர விடாமல் தடுத்தான் ருத்ரன்.

"சக்தி, என்னை யாராவது அவாய்ட் பண்ணா எனக்கு பிடிக்காது...  முக்கியமா நீ... புரிஞ்சுதா?" என்றான் தன் கோபத்தை உள்ளடக்கி.

படபடப்புடன் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் சக்தி.

"உனக்கு யார் முக்கியம், நானா? இல்ல என்னோட ஃபேமிலியா?"

"உங்களால உங்க குடும்பத்தோட இருக்க முடியாதா?" பதில் கேள்வி கேட்டாள் அவள்.

"என்னால முடியாது... நிச்சயமா முடியாது" என்ற அவனது உரத்த குரல் அந்த அறை முழுதும் எதிரொலித்தது.

"ஏன்?" என்றாள் அவன் முகத்தைப் படித்தவாறு.

"சக்தி, அவங்க என்னை ஹாஸ்பிடலுக்கு அனுப்பிடுவாங்க"

"அவங்க ஏன் அப்படி செய்யணும்?"

அவளுக்கு பதில் கூறாமல் எதிர்பக்கம் திரும்பிக் கொண்டான்.

"என்கிட்ட எதுவும் சொல்ல மாட்டீங்களா? உங்களை பத்தின விஷயங்களை தெரிஞ்சுக்க எனக்கு தகுதி இல்லைன்னு நினைக்கிறீங்களா?"

"சக்தி ப்ளீஸ்... உனக்கு நான் தகுதியானவனான்னு எனக்கு தெரியல"

அதைக் கேட்டு தடுமாறிய சக்தி, தன்னை சுதாகரித்துக் கொண்டு,

"உங்களுக்கு தகுதி இல்லன்னா, வேற யாருக்கு இருக்கு? நீங்க யார் கூட வேணும்னாலும் வாழறதுக்கு தகுதியானவர் தான்"

அவளை நோக்கி திரும்பிய ருத்ரன்,

"எனக்கு வேற யாரும் வேண்டாம். நீ தான் வேணும்" என்றான்.

"அப்படின்னா உண்மையை சொல்லுங்க. எதுக்காக உங்க பேமிலியை ஃபேஸ் பண்ண நீங்க பயப்படுறீங்க?"

மென்று விழுங்கினான் ருத்ரன்.

"சத்தியமா சொல்றேங்க, அது என்னவா வேணும்னாலும் இருக்கட்டும், நான் உங்க கூட தான் இருப்பேன். என்னை நம்புங்க. நான் நிச்சயம் உங்களை விட்டுட்டு போக மாட்டேன்"

அவளை சட்டென்று அணைத்துக் கொண்ட ருத்ரன்,

"தேங்க்ஸ் சக்தி" என்றான்.

"என்கிட்ட உண்மையை சொல்லுங்க"

அவளது அணைப்பிலிருந்து ருத்ரன் வெளிவர முயன்ற பொழுது, தன் பிடியை இறுக்கிக் கொண்டு,

"என்கிட்ட இருந்து விலகிப் போய் தான் நீங்க அதை சொல்லணும்னு அவசியமில்ல. நான் இப்படியே கேட்கிறேன். சொல்லுங்க" என்று அவள் கூற, நிச்சயம் அவளது வார்த்தைகள் அவன் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.

"சக்தி, என்னை ரெண்டு வருஷம் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி வச்சிருந்தாங்க. டிரீட்மென்ட் அப்படிங்கிற பேர்ல என்னோட குடும்பம் என்ன கைவிட்டுடுச்சு. எதுக்காக அவங்க என்னை ஹாஸ்பிடல்ல வெச்சிருந்தாங்கன்னு எனக்கு இன்னும் புரியல. என்னை உண்மையா காதலிச்ச ஒரு பொண்ணோட மரணம் என்ன ரொம்பவே பாதிச்சுது. அவ என்னை உண்மையா காதலிச்சானு அப்போ எனக்கு தெரியாது. நான் அவகிட்ட பிடி கொடுக்காம இருந்தேன். அவ ஒரு ஆக்சிடென்ட்ல அடிபட்டு, என் மடியில உயிரை விட்டா. என்னால அதை தாங்கவே முடியல. குற்ற உணர்ச்சியில நான் செத்துகிட்டு இருந்தேன். ஒவ்வொரு நாளும், என்னோட கனவுல உடம்பு ஃபுல்லா ரத்தத்தோட அந்த பொண்ணு வருவா. நான் என்னோட தூக்கத்தை மொத்தமா தொலைச்சேன். உன்னை சென்னைக்கு கூட்டிகிட்டு வந்த பிறகு தான் நான் நிம்மதியா தூங்கவே ஆரம்பிச்சேன். உன்னை பார்த்ததுக்கு அப்புறம் தான் நான் நிம்மதியானேன். உன்னை சேலத்துல பார்த்ததுக்கு  பிறகு, எனக்கு அப்படிப்பட்ட பயங்கர கனவெல்லாம் வரல. எனக்குள்ள ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்தது எனக்கு நல்லா தெரிஞ்சிது. ஆனா, யாருமே என்னை புரிஞ்சுக்கல... என்னோட டாக்டரும் கூட... என்னை சேலத்துக்கு வரவிடாம எல்லாரும் தடுக்க பார்த்தாங்க... உன்னை சந்திக்காமல் என்னை பிடிச்சி வைக்க நினைச்சாங்க. அவங்க சொன்னதை என்னால எப்படி கேட்க முடியும்? நீ இல்லாம நான் எப்படி இருப்பேன், சக்தி? பாரு, இப்போ நான் உன்கிட்ட நல்லா தானே பேசிகிட்டு இருக்கேன்? உன்னை இழந்திடுவோம்னு எனக்கு பயமா இருந்துது சக்தி... நீ எப்போ எல்லாம் என்னை விட்டு விலகி போனியோ, அப்பெல்லாம், எனக்குன்னு யாருமே இல்லாத மாதிரியும், நான் தனியான மாதிரியும் உணர்ந்தேன்..."

தன் தலையை உயர்த்தி, அவனை ஏறிட்டாள் சக்தி.

"நான் என் குடும்பத்து கிட்ட திரும்பிப் போக விரும்பல. நான் உன் கூட இருக்கணும்னு தான் விரும்புறேன்... நீ மட்டும் எனக்கு போதும். வேற யாரும் எனக்கு வேண்டாம்" என்றான் உணர்ச்சிவசப்பட்டு.

தன் கண்களை அகற்றாமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் சக்தி.

"சக்தி, அவங்க நான் பைத்தியம்னு நினைக்கிறாங்க. நான் பைத்தியமா?" என்றான் பரிதாபமாய்.

அவனைப் பார்க்கவே பாவமாய் இருந்தது சக்திக்கு அவள் இல்லை என்று தலையசைத்தாள்.

"நீ என்னை புரிஞ்சுக்கிற... ஆனா அவங்க என்னை புரிஞ்சுக்கல... எப்பவுமே புரிஞ்சிக்க மாட்டாங்க. அதனால தான் அவங்களை விட்டு நான் விலகி வந்துட்டேன். எங்க வீட்டுக்கு போகணும்னு கேக்க மாட்டேன்னு எனக்கு ப்ராமிஸ் பண்ணி குடு சக்தி"

தன் கையை அவள் முன் நீட்டினான் ருத்ரன். அவனது கரத்தைப் பற்றிய அவள், மாட்டேன் என்று தலையசைத்தாள். மீண்டும் அவளை அணைத்துக் கொண்டான், திருப்திகரமான புன்னகையுடன் ருத்ரன்.

தொடரும்...







Bạn đang đọc truyện trên: AzTruyen.Top