32 ஓசூர்

32 ஓசூர்

மறுநாள் காலை

தாங்கள் தங்கி இருந்த அறையின்  கதவை திறக்க முடியாததால், கலக்கமடைந்தாள் துர்கா. கதவை வேகமாய் தட்டியபடி கூச்சலிட துவங்கினாள்.

"யாராவது வெளியில இருக்கீங்களா? கதவை திறங்க"

அது வரை நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்த பரமேஸ்வரன், அவளது காட்டுகத்தலை கேட்டு திடுக்கிட்டு எழுந்து கட்டலின் மீது அமர்ந்தான்.

"என்னாச்சு துர்கா?" என்றான் தூக்கம் கலையாத குரலில்.

"கதவு வெளிப்பக்கமா தாழ்பாள் போட்டிருக்குங்க" என்றாள்.

எழுந்து வந்த பரமேஸ்வரன், கதவை பிடித்து தள்ள முயன்றான்.

"யாராவது கதவைத் திறங்க" என்று கூச்சலிட்டான், தன் தோளால் கதவை தள்ளியபடி.

அப்போது யாரோ வெளிப்புறமிருந்து கதவை திறப்பதை அவர்கள் உணர்ந்தார்கள். அது காமாட்சி தான். அவர்கள் இருவரையும் பார்த்து அவள் புரியாமல் விழித்தாள்.

"என்ன இதெல்லாம்? யாரு கதவை வெளி பக்கமா சாத்துனது?" என்றாள் துர்கா கோபமாய்.

"எனக்கு தெரியல மேடம். நான் இப்போ தான் வீட்டுக்குள்ளே நுழையிறேன். நீங்க கதவை தட்டின சத்தம் கேட்டு திறந்து விட்டேன்" என்றாள் காமாட்சி.

"உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்? என்னை உள்ள வச்சு பூட்டின விஷயம் மட்டும் என் தம்பிக்கு தெரிஞ்சுதுன்னா என்ன ஆகும் தெரியுமா?" என்றாள் அவளை பூட்டியதே அவள் தம்பி தான் என்று தெரியாமல்.

"நாங்க யாரும் ராத்திரியில இந்த வீட்ல தங்கறது இல்ல. சாரும், மேடமும் மட்டும் தான் இருப்பாங்க" என்றாள் காமாட்சி.

பரமேஸ்வரனின் மூளைக்குள் விளக்கு எரிந்தது. தலை தெறிக்க மாடியை நோக்கி ஓடினான், ருத்ரன் அங்கு இருக்கிறானா இல்லையா என்று தெரிந்து கொள்ள. அவன் சந்தேகித்தது போலவே ருத்ரனின் அறை, காலியாய் கிடந்தது. அவன் இல்லாத இடத்தில், நிச்சயம் சக்தியும் இருக்கப் போவதில்லை. அதுமட்டுமல்லாது, அந்த அறையில் இருந்த அலமாரியும் வெறுமனே கிடந்தது.

ஏமாற்றத்துடன் நின்றான் பரமேஸ்வரன். அவனை பின்தொடர்ந்து ஓடிவந்த துர்கா, அவளது கணவனின் முகத்தை பார்த்த உடனேயே,  தன் தம்பியின் திட்டம் என்ன என்பதை புரிந்து கொண்டாள். விரக்தியுடன் துர்காவை ஏறிட்ட பரமேஸ்வரன்,

"அவர் போயிட்டாரு" என்று பெருமூச்சு விட்டான்.

"அவன் எங்கங்க போயிருப்பான்?" என்றாள் தன் கண்களை இங்கும் அங்கும் ஓடவிட்டபடி.

"நிச்சயமா அவரு நம்ம வீட்டுக்கு போயிருக்க மாட்டாரு" என்றான் பரமேஸ்வரன்.

அவனை திகிலுடன் ஏறிட்டாள் துர்கா.

"நம்ம அவரை தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு நினைக்கிறேன். அப்படி செஞ்சா, அவர் இந்தியாவை விட்டே போக வாய்ப்பிருக்கு" என்றான் பரமேஸ்வரன்.

அவன் கூறுவது ஒன்றும் மிகை அல்ல. ருத்ரன் அப்படியெல்லாம் செய்யக் கூடியவன் தான். அவனை யாராவது சீண்டிப் பார்த்தால், எதை செய்தாவது அவர்களை வென்று காட்டுவான்.

"நம்ம அவனை பின் தொடர்ந்து போகணும்னு எந்த அவசியமும் இல்ல தான். ஆனா அவன் இஷ்டத்துக்கு எல்லாம் அவனை எங்க வேணும்னாலும் போக விட முடியாது. அவன் எங்க இருக்கான்னு நம்ம தெரிஞ்சிக்கிட்டு ஆகணும். அவனோட புத்தி ஒரு நிலையில இருக்கிறது இல்ல. அவன் நம்ம கண் பார்வையில் இருக்கிறது தான் நல்லது."

ஆம் என்று தலையசைத்த பரமேஸ்வரன் உடனடியாக சிவாவுக்கு ஃபோன் செய்தான்.

"ஹலோ மாம்ஸ், எப்போ வீட்டுக்கு வரீங்க? ருத்து ரெடி ஆயிட்டானா?" என்றான் ஆர்வமாய் சிவா.

"தெரியல" என்றான் பரமேஸ்வரன்.

"அவன் கிளம்பிட்டானா இல்லையான்னு போய் பாருங்க. அவனைப் பார்த்து எத்தனை நாளாச்சு..."

"அவர் இங்க இல்ல... இன்ஃபாக்ட், அவர் இந்த பார்ம் ஹவுஸிலேயே இல்ல"

"என்ன சொல்றீங்க? எங்க போனான் அவன்?" பரபரப்பானான் சிவா.

"அவர் சக்தியோட ஓடிப் போயிட்டாரு"

"என்னது, ஓடிப்போயிட்டானா?"

"ஆமாம். துர்கா கேட்டபோது நம்ம வீட்டுக்கு வரேன்னு ஒத்துக்கிட்டாரு..."

அவனது பேச்சை இடைமறித்து,

"ஒரு நிமிஷம்..."

"சொல்லுங்க சிவா"

"அக்கா அவனை வீட்டுக்கு வர சொல்லி கூப்பிட்டாங்களா? இல்ல கட்டாயப்படுத்தினாங்களா?" என்ற கேள்வியை எழுப்பினான்.

பெருமூச்சு விட்டான் பரமேஸ்வரன்.

"சோ, அக்கா அவனை கட்டாயப்படுத்தினாங்க இல்லையா?"

"ம்ம்"

"நீங்க யாரும் அவனை இன்னும் சரியா புரிஞ்சுக்கல" என்றான் சிவா விரக்தியுடன்.

"நம்ம அவரை கண்டுபிடிச்சாகணும் சிவா"

"ஏன், மறுபடியும் அவனை எதுக்காகவாவது கட்டாயப்படுத்த வேண்டியது பாக்கி இருக்கா?" என்றான் தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு.

"ப்ளீஸ் சிவா, நம்ம அவர் மேல ஒரு கண்ணு வச்சு தான் ஆகணும்..."

"அவன் பார்ம் ஹவுஸில் இருந்த போதே நம்ம அதை நிம்மதியா செஞ்சிருக்கலாமே? உங்களுக்கு அப்படி என்ன அவசரம்? சக்தி கிட்ட அவன் நெருக்கமானதுக்குப் பிறகு அவனே நிச்சயம் அவங்களை கூட்டிகிட்டு வந்திருப்பான்"

"நடந்தது நடந்து போச்சு. அதை பத்தி பேசி எந்த பிரயோஜனமும் இல்ல. நம்ம அவரை கண்டுபிடிக்கணும்"

"விடுங்க நான் பார்த்துக்கிறேன்"

"தயவுசெய்து அதை எப்படியாவது செஞ்சி முடிங்க சிவா"

"ம்ம்"

அழைப்பை துண்டித்த சிவா, ருத்ரனை எப்படி தேடி கண்டுபிடிப்பது என்று புரியாமல் திணறினான். அவன் எங்கு சென்றான் என்றே தெரியவில்லையே. அவர்களிடமிருந்து அவன் விலகி இருக்க வேண்டும் என்று நினைத்து விட்டால், அவன் தென்துருவத்திற்கே  செல்ல கூட தயங்க மாட்டான். அவனை தேடி கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. உண்டது செறித்துப் போகும் அளவிற்கு பாடுபட வேண்டி இருக்கும். அதை அவன் ஒருவனால் செய்ய முடியாது. தன் கைபேசியை எடுத்து, தனது துப்பறியும் நிறுவனத்தின் கூட்டாளியான உமாபதிக்கு ஃபோன் செய்தான்.

"சொல்லுடா மச்சி" என்றான் உமாபதி.

"உமா, நான் சொல்றத கவனமா கேளு. ருத்ரன் அவன் பொண்டாட்டி கூட ஓடிப் போயிட்டான். அவன் எங்க இருக்கான்னே தெரியல. அவனை நீ தான் கண்டுபிடிக்கணும்"

"பொண்டாட்டி கூட ஓடிப் போயிட்டாரா? வழக்கமா, எல்லாரும் கல்யாணம் பண்ணிக்க தானே ஓடி போவாங்க?" என்றான் குழப்பத்துடன்.

ருத்ரன், சக்தி கதையை அவனிடம் கூறி முடித்தான் சிவா.

"சரி, விடு, கண்டுபிடிச்சுடலாம்"

"அவனோட பார்ம் ஹவுஸில் தான் அவன் தங்கி இருந்தான். இப்போ அங்க இருந்து தான் அவன் மாயமாயிட்டான்"

"சரி, நான் பாத்துக்கிறேன்"

நிம்மதி பெருமூச்சு விட்டான் சிவா. ருத்ரனுக்கு சகோதரனாய் அவனால் தெளிந்த மனதுடன் யோசிக்க முடியாது. ஆனால், உமாபதி அதை திறம்பட செய்வான் என்று நம்பினான் சிவா.

இதற்கிடையில்,

மகேஷ் வைத்த மைக்ரோ ஃபோன் இருந்த பேண்ட்டை எடுத்து அணிந்து கொண்டான் பரமேஸ்வரன். அவனும் துர்காவும், வீட்டுக்கு செல்ல தயாரான நிலையில், அந்த பண்ணை வீட்டின் காவலாளியிடம் வந்தார்கள்.

"ருத்ரன் இங்கிருந்து எப்போ கிளம்பி போனாரு?" என்றான் பரமேஸ்வரன்.

"ராத்திரி ரெண்டு மணி இருக்கும் சார்" என்று உண்மையை கூறினான் அவன்.

"அவர் எங்க போனாருன்னு தெரியுமா?"

"அது எனக்கு தெரியல சார்"

"நீ அவர்கிட்ட எதுவும் கேட்கலையா?"

"நான் எப்படி சார் அவரை கேள்வி கேட்க முடியும்?"

"இவங்க கிட்ட கேட்கிறது வேஸ்ட் ஆஃப் டைம். இவங்களுக்கு ருத்ரன் எங்கே இருக்கிறான்னு உண்மை தெரிஞ்சா கூட இவங்க நம்ம கிட்ட சொல்ல மாட்டாங்க. இவங்க எல்லாம் அவனோட ஆளுங்க தானே" என்றாள் துர்கா காட்டமாய்.

ருத்ரன் பண்ணை வீட்டிலிருந்து வெளியே வருவதற்காக காத்திருந்த மகேஷ், அவர்கள் பேசியதை, பரமேஸ்வரனின் பாக்கெட்டில் அவன் போட்ட மைக்ரோஃபோன் மூலமாக கேட்டான். அவனுக்கும் ஏமாற்றமாய் போனது. ருத்ரன் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டானா? எங்கே சென்றான்? கடும் முயற்சிக்குப் பிறகு, இப்பொழுது தானே அவன் எங்கு இருக்கிறான் என்பதை அவன் கண்டுபிடித்தான்? இப்பொழுது அவன் என்ன பதில் கூறுவது? துர்காவும் பரமேஸ்வரனும் அங்கிருந்து கிளம்பி செல்வதை கண்டான் அவன்.

*ரெண்டும்  உதவாக்கரைங்க... ருத்ரனை இங்கிருந்து தப்பி போக விட்டுட்டு, எதையோ பெருசா சாதிச்ச மாதிரி போகுதுங்க பாரு...* என்று முணுமுணுத்தான் மகேஷ்.

அப்பொழுது, முதல் நாள் சக்தியை கொல்வதற்காக அவனுக்கு கட்டளை பிறப்பித்த அதே மனிதனிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.

"சார், அந்த பொண்ண கூட்டிகிட்டு ருத்ரன் இங்கிருந்து ஓடிட்டான் சார்" என்றான்.

"என்ன்னனது? ஏன்? எப்படி? அவன் நம்மளோட திட்டத்தை தெரிஞ்சுகிட்டானா?"

"நிச்சயமா இல்லை சார். ஒருத்தருக்கும் நான் இருக்கிற விஷயமே தெரியாது"

"இந்நேரம் நீ அவளை முடிச்சிருப்பேன்னு நெனச்சேன்" என்ற போது அந்த மனிதனின் குரலில் ஏமாற்றம் தெரிந்தது.

"அவங்க இங்க இருந்திருந்தா நிச்சயமா முடிச்சிருப்பேன் சார்"

"ஆமாம்... அவங்களை தப்பிச்சு போக விட்டுட்டு என்ன பெருசா அலட்டிக்கிற?"

"இன்னும் ஒரு வாரத்துல நான் அவளை முடிக்கிறேன் சார்"

"செஞ்சு முடிச்சிட்டு என்கிட்ட பேசு" என்று அழைப்பை துண்டித்துக் கொண்டான் அந்த மனிதன்.

தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு எங்கிருந்து ஆரம்பிப்பது என்று ஆலோசித்தான் மகேஷ்.

......

அதேநேரம், தனது காரை வெகு வேகமாய் ஓட்டிக்கொண்டிருந்தான் ருத்ரன். ஐந்து மணி நேர பயணத்திற்கு பிறகு, *ஓசூர் 15 கிலோமீட்டர்* என்ற மைல் கல்லை பார்த்து அவன் முகத்தில் புன்னகைப் பிறந்தது. வண்டியை வலப்பக்கம் திருப்பியவன், தான் சென்று சேர வேண்டிய இடத்திற்கு, பத்து நிமிடத்தில் வந்தடைந்தான். அவனைக் கண்டதும், கேட்டை திறந்து விட்டார்கள் அந்த பங்களாவின் காவலாளிகள். தன் காரை விட்டு கீழே இறங்கினான் ருத்ரன். அந்த பங்களா, அவன் மாயாவின் விபத்திற்கு முன்னால் வாங்கியது. அந்த பங்களாவிற்கு துர்காவை அழைத்து வந்து, அவளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று எண்ணியிருந்தான் அவன். ஆனால் அவன் அப்படி செய்யும் முன் எல்லாம் மாறிவிட்டது.

"பேகை எல்லாம் உள்ள கொண்டு வாங்க" என்று காவலாளிகளுக்கு உத்தரவிட்டான்.

அவற்றைக் கொண்டு வந்து உள்ளே வைத்து விட்டு,

"உங்களுக்கு வேற ஏதாவது வேணுமா சார்?" என்றார் அந்தக் காவலாளிகளில் ஒருவர்.

"ஆமாம், என்னென்ன வாங்கிகிட்டு வரணும்னு நான் உங்களுக்கு லிஸ்ட் கொடுக்கிறேன்"

"சரிங்க சார்"

உறங்கிக் கொண்டிருந்த சக்தியை தன் கையில் தூக்கிக் கொண்டு, மாடிக்கு சென்றான். அவளை கட்டிலில் படுக்க வைத்து விட்டு கம்பளியால் போர்த்தி விட்டான். ஓசூரில் குளிர்,  பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தது. மீண்டும் தரைதளம் வந்தவன், வாங்க வேண்டிய பொருட்களுக்கான பட்டியலை தயார் செய்து, அதை அந்த காவலாளிகளிடம் பணத்துடன் கொடுத்து, வாங்கி வருமாறு கூறினான்.

"கடை திறக்க கொஞ்சம் நேரம் ஆகும் சார்"

"ஒன்னும் பிரச்சனை இல்ல. கடை திறந்ததும் போய் வாங்கிட்டு வந்து வச்சிடுங்க. நான் தூங்க போறேன்"

"சரிங்க சார்"

மீண்டும் மாடிக்கு வந்தவன், சக்தியின் பக்கத்தில் படுத்துக்கொண்டு, அவள் போர்த்தியிருந்த அதே கம்பளியால் தன்னை போர்த்திக் கொண்டான். முதல் நாள் முழுக்க தூக்கமே இல்லாததால் அவனுக்கு மிகவும் களைப்பாய் இருந்தது. படுத்த ஒரு சில நிமிடங்களில், தூக்கத்தில் ஆழ்ந்தான்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top