31 சக்தி தான் குறி

31 சக்தி தான் குறி

இதற்கிடையில்...

பரமேஸ்வரனை பார்த்து புன்னகைத்தபடி கட்டிலில் அமர்ந்தாள் துர்கா.

"கடைசியில நீ நினைச்சதை சாதிச்சிட்ட. ஒரு வழியா, உன் தம்பி உன்னோட வர ஒத்துக்கிட்டாரு" என்றான் பரமேஸ்வரன்.

"அவன் இஷ்டத்துக்கு எல்லாம் நம்ம அவனை விட்டு விட முடியாது. அவனும் சக்தியும் நம்ம வீட்ல தான் இருக்கணும். அவங்களுக்குன்னு குடும்பம் இருக்கு. அப்படி இருக்கும் போது, எதுக்காக அவங்க இங்க வந்து யாரும் இல்லாத அனாதைங்க மாதிரி இருக்கணும்?"

"சீக்கிரமே ருத்ரன் முழுமையா குணமடைச்சிடுவார்னு நினைக்கிறேன்"

"ஆமாம், அவன் நம்ம வீட்டுக்கு வந்த பிறகு, அவனை ட்ரீட்மென்ட்டுக்கு ஒத்துக்க வைக்கணும்"

"ஆமாம். அவருக்கு ட்ரீட்மென்ட் அவசியம். இப்போ நம்ம அதை சக்தி மூலமா செய்யலாம்"

"நமக்காக சக்தி அதை நிச்சயமா செய்வாங்க" என்றாள் துர்கா சந்தோஷமாக.

"நல்ல காலம், நம்ம இது சம்பந்தமா ஏற்கனவே டாக்டர் கிட்ட பேசி வச்சிருந்தோம். இன்னும் ரெண்டு மூணு மாசம் ருத்ரனை ஹாஸ்பிடல் அட்மிட் பண்ணா, அவரு கம்ப்ளீட்டா குணமாயிடுவாரு"

"ஆமாம்"

"இதைப் பத்தி அவருக்கு தெரியாம பார்த்துக்கனும். அவருக்கு தெரிஞ்சா, நிச்சயம் ட்ரீட்மென்ட்க்கு ஒத்துக்கவே மாட்டாரு. அவருக்கே தெரியாம நம்ம இதை செய்யணும்"

"நீங்க சொல்றதும் சரி தான்"

"கொஞ்ச நேரம் தூங்கலாம். நாளைக்கு காலையில நம்ம கிளம்பனும் இல்லையா?" என்று கட்டிலில் படித்துக் கொண்டான் பரமேஸ்வரன்.

கட்டிலின் மறுபுறம், துர்காவும் படுத்து கண்ணயர்ந்தாள்.

அதே நேரம், அந்த பண்ணை வீட்டின் வெளியே...

அந்தப் பண்ணை வீட்டை கண்காணித்துக் கொண்டிருந்த ஒருவன், தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து கைபேசியை வெளியே எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்தான். அழைப்பு, மறுபுறம் ஏற்கப்பட்டது.

"சொல்லு மகேஷ், அவன் எங்க இருக்கான்னு கண்டுபிடிச்சியா இல்லையா?"

"அவனோட பார்ம் ஹவுஸ்ல இருக்கான் சார். அவனோட அக்காவும் மாமாவும் அவனை பார்க்க இங்க வந்திருக்காங்க"

"அவன் எதுக்காக அங்க இருக்கான்?"

"ஒரு பொண்ணுக்காக சார்"

"என்னது? பொண்ணா?"

"ஆமாம் சார், இந்த ஃபார்ம் ஹவுஸ்ல அவன் கூட ஒரு பெண்ணும் இருக்கா"

"யார் அந்த பொண்ணு?"

"அவனோட வைஃப் சார்"

"வைஃபா? அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?" மறுபக்கத்தில் இருந்த மனிதன், கோபத்தில் குமுங்கினான்.

"ஆமாம் சார், நான் பரமேஸ்வரனோட பேண்ட் பாக்கெட்ல ஒரு மைக்ரோபோனை போட்டிருக்கேன். அது வழியா தான் அவங்க பேசுறதை எல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கேன். அந்த பொண்ணோட பேரு சக்தி. துர்காவுக்கும், பரமேஸ்வரனுக்கும் அந்த பொண்ணை நல்லாவே தெரியும். அவங்க ஏற்கனவே அந்த பொண்ணை ஒரு தடவை சென்னையில அவங்க வீட்ல சந்திச்சிருக்காங்க. ஆனா அதை பத்தி ருத்ரனுக்கு எதுவும் தெரியாது"

"எனக்கு குழப்பமா இருக்கு"

"உங்க குழப்பத்தை நான் தீர்த்து வைக்கிறேன் சார். எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க"

"எது செய்யறதா இருந்தாலும் ஜாக்கிரதையா செய். எப்பவும் அலர்ட்டா இரு"

"நான் எப்பவும் அலார்ட்டா தான் சார் இருப்பேன். அவனை *முடிக்க* ஒரு நல்ல சந்தர்ப்பத்துக்காக நான் காத்திருக்கேன். இப்ப தான் அவன் எங்க இருக்கான்னு தெரிஞ்சு போச்சே... அதை சீக்கிரமே நான் செஞ்சு முடிப்பேன்"

"இரு... நம்ம பிளான்ல ஒரு சின்ன சேஞ்ச்..."

"என்ன சேஞ்ச் சார்?"

"நீ ருத்ரனை கொல்ல வேண்டாம். அதுக்கு பதிலா அந்த பொண்ணை கொன்னுடு..."

"என்ன சார் சொல்றீங்க?"

"ஆமாம், இப்போதைக்கு ருத்ரனை விடு. முதல்ல அவன் பொண்டாட்டியை முடி. அவனை நம்ம அப்புறம் பாத்துக்கலாம்"

"ஆனா, அந்த பொண்ணு வீட்டை விட்டு வெளியே வர்றதில்ல, சார்"

"எத்தனை நாளைக்கு அவ வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடப்பா? ஒரு நாளாவது அவ வெளியில வந்து தான் தீரனும். தோட்டத்துக்காவது அவ வருவா..."

"துர்காவும், பரமேஸ்வரனும் அவங்க ரெண்டு பேரையும் சென்னைக்கு கூட்டிக்கிட்டு போக தான் இங்க வந்திருக்காங்க. ருத்திரனும் அதுக்கு ஒத்துக்கிட்டான். அவங்க நாளைக்கு காலையில கிளம்புறாங்க"

"அப்புறம் என்ன பிரச்சனை? நமக்கு அந்த பொண்ணை போட்டுத் தள்ள நிறைய சந்தர்ப்பம் கிடைக்கும். துர்கா ஒரு சென்டிமென்டல் இடியட். அவ நிச்சயம் தன் தம்பி பொண்டாட்டியை கோவிலுக்கு கூட்டிக்கிட்டு வருவா. அப்போ நம்ம அவளை போட்டுடலாம்"

"அதை நான் பார்த்துக்கிறேன் சார்"

"அவங்களை வாட்ச் பண்ணிக்கிட்டே இரு. ருத்ரனை குறைச்சி எடை போடாத. அவன் ஒரு பைத்தியக்காரன். உன்னோட எண்ணம் மட்டும் அவனுக்கு தெரிஞ்சுடுச்சுன்னா, அதுக்கப்புறம் நீ அந்த பொண்ணை தொடவே முடியாது. அதனால முதல் முயற்சியிலேயே அவளை முடிச்சிட பாரு"

"என்னோட குறி எப்பவும் தப்பாது"

"உன்னோட திறமையை செயல்ல காட்டு"

அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது. தன் கைபேசியை, பேண்ட் பாக்கெட்டில் மீண்டும் வைத்துக் கொண்டான் மகேஷ். காரின் சீட்டை தனக்கு ஏற்றபடி வசதியாய் சமநிலைப்படுத்திக் கொண்டு, தன் சோர்வு நீங்க தூக்கம் போட எண்ணி அதில் சாய்ந்தான். அவனுக்கு இப்பொழுது ஓய்வு முக்கியம். அந்தப் பெண்ணை கொல்லும் சந்தர்ப்பம் அவனுக்கு மறுநாள் காலையிலேயே கூட கிடைக்கலாம். அதை செய்து முடிக்க அவன் திடமாய் இருக்க வேண்டும். சோர்வோடு இருந்தால், அவனால் அதை நிச்சயம் செய்ய முடியாது. மகேஷ் கண்ணை மூடியது தான் தாமதம், அடுத்த நொடி அவன் தூக்கத்தில் ஆழ்ந்தான். அவன் அந்த அளவிற்கு சோர்வாய் இருந்தான்.

...........

சக்தி சங்கடத்தில் நெளிந்தாள். அவளுக்கு நெருக்கமாய் படுத்திருந்த ருத்ரன், தன் கண்களை அவள் மீதிருந்து அகற்றாமல், அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் கழுத்தில் இருந்த வியர்வை துளிகளை மெல்ல துடைத்து விட்டான்... அவள் கன்னத்தில் தவழ்ந்த முடி கற்றையை அழகாய் ஒதுக்கி விட்டான்... அவளது கையில் முத்தமிட்டான்... இவை அனைத்தையும் செய்யும் போது கூட, அவன் தன் கண்களை அவள் முகத்தில் இருந்து அகற்றவில்லை.

"ரொம்ப வீக்கா இருக்க. நீ எவ்வளவு டயர்டா இருக்க பாரு..." என்று அவன் கூற, கன்னம் சிவந்தாள் சக்தி.

"உன்னை நீ நல்லா கவனிச்சுக்கணும் சக்தி. கேர்லெஸ்ஸா இருக்காத. நீ என்னோட வாழ்நாள் முழுக்க என் கூட வேணும்" என்றான் தன் குரலில் அக்கறை ஓங்கி ஒலிக்க.

மென்மையாய் அவன் கண்ணம் தொட்டு, சரி என்று தலையசைத்தாள் சக்தி. அவள் கையில் அன்பாய் முத்தமிட்ட ருத்ரன்,

"நான் உனக்கு குடிக்க பால் கொண்டு வரேன்" என்று அவன் கட்டிலில் இருந்து எழ முயல,

"பரவாயில்ல, வேண்டாம் விடுங்க"

"ஷ்ஷ்ஷ்..." என்று அவள் உதட்டின் மீது தன் விரல் வைத்தான்.

"வேண்டாம்னு சொல்லக்கூடாது. நான் இப்ப வரேன்" அவள் உதட்டின் மீது இருந்து நீக்கிய தன் விரலை முத்தமிட்டு கொண்டான்.

"சரியா?"

சரி என்று தலையசைத்தாள் சக்தி.

"நான் பால் கொண்டு வரேன் அதுக்குள்ள நீ டிரஸ் பண்ணிக்கோ"

தன் உடைகளுடன் குளியலறைக்கு சென்றாள் சக்தி. அவள் குளியலறையின் கதவை தாளிடும் வரை காத்திருந்த ருத்ரன், கட்டிலை விட்டு கீழே இறங்கி, அவசர அவசரமாய் தன் உடைகளை அணிந்து கொண்டு, மேஜையை நோக்கி விரைந்தான். அதில் இருந்த தூக்க மாத்திரை அடங்கிய பாட்டிலை எடுத்து, அதிலிருந்து ஒரு மாத்திரையை எடுத்துக் கொண்டான்.

தரைதளம் வந்த ருத்ரன், துர்காவும் பரமேஸ்வரனும் தங்கியிருந்த அறையின் அருகே சென்று, உள்ளிருந்து ஏதாவது சத்தம் கேட்கிறதா என்று நிச்சயப்படுத்திக் கொண்டான். ஆனால் எந்த சத்தமும் கேட்கவில்லை. பின், சமையல் அறைக்கு வந்த அவன், ஒரு தம்ளரை எடுத்து தான் கொண்டு வந்திருந்த மாத்திரையை தன் விரலால் நசுக்கி பொடியாக்கி அந்த தம்ளரில் போட்டு பாலை ஊற்றி நிரப்பினான். அதை நன்றாய் கலந்து, மீண்டும் தன் அறைக்கு வந்தான்.

இன்னும் சக்தி குளியலறையில் இருந்து வெளியே வரவில்லை. அதனால் ஜன்னல் அருகே சென்று, வானத்தை பார்த்து கொண்டு நின்றான். சக்தி குளியல் அறையில் இருந்து வெளியே வருவதை கண்ட அவன், அவளை நோக்கி சென்று அந்த பால் தம்ளரை அவளிடம் நீட்டினான். அவனிடமிருந்து அதைப் பெற்றுக் கொண்ட சக்தி, அந்த பாலை முழுவதுமாய் குளித்து முடித்தாள். அவளிடம் இருந்து காலி தம்ளரை வாங்கி மேஜையின் மீது வைத்து,

"தூங்கலாம் வா" என்று புன்னகை புரிந்தான்.

சரி என்று தலையசைத்துவிட்டு சக்தி படுத்துக்கொண்டாள். தன் கையை அவளை நோக்கி நீட்டிய ருத்ரன்,

"என்கிட்ட வா" என்றான்.

சக்தி அவனை நோக்கி நகர, அவளை தன் நெஞ்சின் மீது இழுத்துக் கொண்டான். அவள் கையை எடுத்து, தன் இடையை வளைத்துக் கொள்ளுமாறு செய்தான்.

"உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே சக்தி?" என்று மெல்ல அவள் தலையை வருடினான்.

"எனக்கு எந்த பிரச்சனையும் இல்லங்க"

"உனக்கு ஏதாவது அன்ஈசியா இருந்தா என்கிட்ட சொல்லு"

"ம்ம்ம்ம்"

"சக்தி, உனக்கு ஏதாவது வேணுமா?"

"எனக்கு எதுவும் வேண்டாங்க" அவள் குரல் உள்ளடங்குவதை கவனித்தான் அவன்.

"உனக்கு தூக்கம் வருதா?"

"ம்ம்"

"நிச்சயமா தான் சொல்றியா?"

"ம்ம்"

"சக்தி... "

அமைதி.

"சக்தி..."

சக்தியை தூக்கியபடி, தலையணையை விட்டு எழுந்தான் ருத்ரன். சக்தி உறங்கி விட்டாள் என்பதை, துவண்டு விழுந்த அவளது தலை கூறியது.

"ஐ அம் சாரி, சக்தி" அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

அவளை மீண்டும் கட்டிலில் கிடத்திவிட்டு கட்டிலை விட்டு கீழே இறங்கினான். தங்கள் துணிமணிகளை, இரண்டு பைகளில் அடைத்துக் கொண்டான். அந்தப் பைகளை எடுத்துக்கொண்டு தரைதளம் வந்தான். அவற்றை காரில் வைத்துவிட்டு, காவலாளியை நோக்கி சென்றான்.

"கதவை திறந்து வச்சுக்கிட்டு ரெடியா இருங்க" என்று உதாரவிட்டான்.

"சரிங்க சார்"

மீண்டும் வீட்டினுள் வந்த ருத்ரன், துர்காவும், பரமேஸ்வரனும் தங்கியிருந்த அறையை வெளிப்பக்கமாய் தாளிட்டான். நாலு கால் பாய்ச்சலில் படிக்கட்டை தாவி ஏறிய அவன், சக்தியை தன் கரத்தில் அள்ளிக் கொண்டு மீண்டும் தரைதளம் வந்தான். அவளை காரின் பின் சீட்டில் படுக்க வைத்து விட்டு, காவலாளியை அழைத்தான்.

"என் கூட சேர்ந்து காரை தள்ளுங்க" என்றான்.

காரை ஸ்டார்ட் செய்யாமல், அதை தள்ளி வெளியே கொண்டு வந்தான். காரை ஸ்டார்ட் செய்தால் வீட்டில் இருக்கும் மற்றவருக்கு அந்த சத்தம் கேட்டுவிடும் அல்லவா? ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த ருத்ரன், காரை ஸ்டார்ட் செய்து, பண்ணை வீட்டை விட்டு கிளம்பினான். தூக்க மாத்திரையின் தாக்கத்தால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சக்தியை பார்த்த அவன், திருப்திகரமான புன்னகை சிந்தி விட்டு, சாலையில் தன் கவனத்தை செலுத்தினான்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top