29 ருத்ரனின் கோபம்
29 ருத்ரனின் கோபம்
துர்காவையும் பரமேஸ்வரனையும் பார்த்த சக்தி புன்னகைக்க, சிரிக்காதே என்று அவளை கண்களால் எச்சரித்தாள் துர்கா, சமையலறையில் இருந்து வெளிவந்த காமாட்சியை பார்த்து. தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்ட சக்தி, முகத்தை திடமாய் வைத்துக்கொண்டு,
"நீங்க யாரு? யாரை பார்க்க வந்திருக்கீங்க?" என்றாள் தனக்கு அவர்கள் பரிட்சயம் இல்லாதவர்களை போல.
"நீங்க (என்பதை அழுத்தி) யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" என்றாள் துர்கா.
"நான் மிஸஸ் சக்தி ருத்ரன். ருத்ரனோட வைஃப்" என்றாள் அலட்டலாய்.
"என்னது நீ ருத்துவோட வைஃபா?" என்றாள் துர்கா அதிர்ச்சியை முகத்தில் காட்டி.
"ருத்து இல்ல... ருத்ரன்..."
அவள் மேலும் எதுவும் கூறுவதற்கு முன் அங்கு வந்து சேர்ந்தான் ருத்ரன். அவனது முகத்தில் ஒருவித திகில் படர்ந்திருந்தது.
"இதோ, அவரே வந்துட்டாரு, இவர் தான் என்னோட ஹஸ்பண்ட்" என்றாள் சக்தி.
"ருத்து..." துர்கா ஆரம்பிக்க...
அவள் மேலும் எதுவும் கூறுவதற்கு முன், சக்தியின் கரம் பற்றிய ருத்ரன், அவளை தன் அறையை நோக்கி இழுத்துச் சென்றான். அவனுடைய இந்த திடீர் நடவடிக்கையால் குழப்பமடைந்தாள் சக்தி.
"என்னங்க, என்னை எங்க கூட்டிகிட்டு போறீங்க?" கேட்டுக்கொண்டே படியேறினாள் சக்தி.
"ருத்து, நில்லு... எதுக்காக இப்படி செய்ற?" கேட்டபடி அவர்களைப் பின் தொடர்ந்து சென்றாள் துர்கா.
பரமேஸ்வரனும் அவளுடன் சென்றான்.
சக்தியை தன் அறைக்குள் லேசாய் பிடித்து தள்ளி விட்டு வெளிப்புறமாக தாளிட்டான் ருத்ரன்.
"என்னங்க... கதவைத் திறங்க..." என்று கதவை தட்டினாள் சக்தி.
திடுக்கிட்ட முகபாவத்துடன் அங்கு வந்த துர்கா, தன் தம்பியின் நடவடிக்கையை புரிந்து கொள்ள முடியாமல் திணறினாள்.
"ருத்து? என்ன பண்ற நீ? யார் அந்த பொண்ணு? அவ உன்னோட ஒய்ஃப்ன்னு சொல்றா... அவ பார்க்க அப்படியே நம்ம..."
சக்தி பார்க்க யாரைப் போல் இருக்கிறாள் என்று கூறி, அவள் அந்த வாக்கியத்தை முடிக்கும் முன், அவளைக் குறுக்கீடு செய்தான் ருத்ரன்.
"அவ என்னோட வைஃப்ன்னு சொன்னா, அவ நிச்சயமா எனக்கு வைஃபா தானே இருக்கணும்?" என்றான் கோபம் கொப்பளிக்க.
"என்னடா சொல்ற நீ? எங்க யார்கிட்டயும் எதுவும் சொல்லாம நீ எப்படி அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க முடியும்?" என்றாள் ஏமாற்றம் ததும்ப.
"அதான் இப்ப தெரிஞ்சுகிட்டீங்க இல்ல... அதோட விடுங்க"
"அப்படி எப்படி விட்டுவிட முடியும்?"
"அக்கா, இப்போ தான் நான் நிம்மதியாக இருக்கேன். தயவு செய்து எந்த பிரச்சனை பண்ணாதீங்க. இங்கிருந்து போயிடுங்க"
"நீ என்னையா இங்கிருந்து போக சொல்ற? முடியாது... நீ இல்லாம இந்த இடத்தை விட்டு நான் போக மாட்டேன். உன்னை கூட்டிகிட்டு தான் போவேன்"
"என்னை கூட்டிகிட்டு போகப் போறீங்களா? அது நிச்சயம் நடக்காது"
"ஏன் ருத்து? ஏன் எங்க கூட நீ வீட்டுக்கு வர மாட்டேங்குற?"
"அக்கா, தயவு செய்து எனக்கு என்ன வேணும்னு புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க..."
"என்னவா வேணும்னாலும் இருக்கட்டும்... உனக்கு அந்த பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு விருப்பம் இருந்தா, நீ எங்ககிட்ட சொல்லியிருக்கலாமே... நாங்க உனக்கு அவளை கல்யாணம் பண்ணி வச்சிருப்போமே..."
"ஒன்னும் தேவையில்ல... நான் ஏற்கனவே அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்"
"எப்படி? எப்படி நீ அவளை கல்யாணம் பண்ணிக்கிட்ட? எந்த சடங்கு சம்பிரதாயமும் இல்லாமலா?"
"அக்கா, ப்ளீஸ் ஸ்டாப் நான்சென்ஸ்... எனக்கு அந்த மாதிரி யூஸ்லெஸ் சடங்குல எல்லாம் நம்பிக்கை இல்லைன்னு உங்களுக்கே நல்லா தெரியும்..."
"அந்த பொண்ணுக்கு? எல்லாரை மாதிரியும் ஊரறிய தானும் கல்யாணம் பண்ணிக்கனும்னு அவ நினைக்க மாட்டாளா?"
"போதும் நிறுத்துங்க அக்கா... எங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சுன்னு நான் சொன்னேன்..."
"இது கொஞ்சம் கூட சரியில்ல ருத்து. நான் தான் உனக்கு சடங்கு சம்பிரதாயத்தோட கல்யாணம் பண்ணி வக்கிறேன்னு சொல்றேனே... உனக்கு அதுல என்ன பிரச்சனை? அந்த பொண்ணுக்காகவாவது அதை செய்ய விடு. இல்லன்னா இந்த உலகம் உங்க கல்யாணத்தை ஏத்துக்காது..."
"அக்கா, அவ என்னோட வைஃப். என்னை அவளோட ஹஸ்பண்டா அவ ஏத்துக்கிட்டா. அதுக்கு மேல வேற யாரும் எங்களை புருஷன் பொண்டாட்டியா ஏத்துக்கணும்னு எனக்கு எந்த அவசியமுமில்ல. யார் ஏத்துக்கிட்டாலும், ஏத்துக்கலனாலும் நாங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி தான்"
"இல்ல ருத்து, நீ நினைக்கிறது தப்பு"
"என்னக்கா உங்க பிரச்சனை? நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... என்னோட வாழ்க்கையை நிம்மதியா என் பொண்டாட்டி கூட வாழ்ந்துகிட்டு இருக்கேன்... எதுக்காக இப்ப நீங்க தேவையில்லாம பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்கீங்க?"
"நம்ம வீட்ல, நீ உன் பொண்டாட்டி கூட சந்தோஷமா இருக்க முடியும்னு ஏன் உனக்கு தோணல? நீ எங்களைப் பத்தி என்ன நினைச்சுகிட்டு இருக்க? நீ சந்தோஷமா இருக்கணும்னு எங்களுக்கு மட்டும் எந்த அக்கறையும் இல்லையா? நீ எங்களை எல்லாம் எவ்வளவு கஷ்டப் படுத்துறேன்னு ஏன் நீ புரிஞ்சுக்க மாட்டேங்கிற?"
"நீங்களும் என்னை ரொம்ப கஷ்டப்படுத்துறீங்கன்னு புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க"
ஒரு நீண்ட எட்டில் அவனை அடைந்த துர்கா, அவன் கண்ணம் தொட்டு,
"உன்னோட சந்தோஷத்தை நான் கெடுத்துடுவேன்னு நினைக்கிறாயா?" என்றாள் கண்களில் கண்ணீர் ததும்ப.
அவளது கண்ணீர் நிச்சயம் ருத்ரனுக்கு மன வேதனையை தான் அளித்தது. அவன் எப்பொழுதும் தன் அக்காவை காயப்படுத்த வேண்டும் என்று நினைத்ததில்லை. ஆனால் சூழ்நிலை இப்பொழுது அவனை அப்படி செய்ய வைத்து விட்டது.
"அக்கா தயவுசெய்து புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க" என்றான் அமைதியான குரலில்.
"உன்னோட அக்கா எது செஞ்சாலும், உன் நல்லதுக்காக தான் இருக்கும்னு நீ ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குற?"
ஆழமாய் மூச்சை உள்ளிழுத்த ருத்ரன்,
"இப்போ நான் என்ன செய்யணும்னு சொல்றீங்க?" என்றான்.
"எங்க கூட வீட்டுக்கு வா"
"சரி வரேன். ஆனா நாளைக்கு வரேன்" என்றான்.
"ருத்து..."
அவளை மேலே பேச விடாமல் தடுத்து,
"அக்கா ப்ளீஸ், நானோ, சக்தியோ இதுக்கு பிரிப்பேரா இல்ல. எங்களுக்கு கொஞ்சம் டைம் குடுங்க. புரிஞ்சிக்குவீங்கன்னு நினைக்கிறேன்"
"அப்படின்னா நாங்களும் உன் கூட இங்கயே இருக்கோம். இன்னைக்கு ஒரு நாள் நாங்க இங்க தங்க அனுமதி கொடுப்ப இல்ல?"
ருத்ரனுக்கு நன்றாகவே புரிந்தது, துர்கா அவனை நம்ப தயாராக இல்லை.
"நாங்க கெஸ்ட் ரூம்ல இருக்கோம்" என்று பரமேஸ்வரனை பார்த்த அவள்,
"வாங்க போகலாம்" என்று அவனை தன்னுடன் வருமாறு கண் ஜாடை காட்டினாள்.
செய்வதறியாமல் எரிச்சலுடன் நின்றான் ருத்ரன். தன் அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். கட்டிலில் அமர்ந்து தன் நகத்தை கடித்துக் கொண்டிருந்தாள் சக்தி. அவனைப் பார்த்ததும் அவனை நோக்கி ஓடி வந்தாள்.
"என்னங்க, அவங்க யாரு? எதுக்காக என்னை இந்த ரூமுக்குள்ள வச்சு பூட்டினீங்க?"
"அவங்க என்னோட அக்கா"
"அக்காவா?"
"அவங்க நம்மளை வீட்டுக்கு கூட்டிகிட்டு போக வந்திருக்காங்க"
"அப்படியா?"
"நம்ம அவங்க கூட போக போறது இல்ல" என்றான் கோபமாக.
"ஏன்?"
"உனக்கு அவங்களைப் பத்தி தெரியாது... அவங்க இங்க ஏதோ பிளானோட வந்திருக்காங்க"
"என்ன பிளான்?"
"அவங்க என்னை ஹாஸ்பிடலுக்கு அனுப்பி, அங்க டிரீட்மென்ட் அப்படிங்கிற பேர்ல என்னை பூட்டி வச்சுடுவாங்க" என்று சுவரை ஓங்கி குத்தினான் வலியை பொருட்படுத்தாமல்.
அதிர்ச்சி அடைந்த சக்தி, அவன் கரத்தை பற்றி, அவனுக்கு ஏதாவது காயம் பட்டிருக்கிறதா என்று ஆராய்ந்தாள்.
"எதுக்காக உங்களை நீங்களே இப்படி காயப்படுத்திக்கிறீங்க?" என்றாள் கவலையாக.
அவள் கையில் இருந்து தன் கரத்தை அவன் எடுக்க நினைத்த போது, அவன் கரத்தை மேலும் இறுக்கமாய் பற்றினாள் சக்தி.
"எதுக்காக அவங்க உங்களை ஹாஸ்பிடலுக்கு அனுப்பனும்? என்ன பிரச்சனை? அப்படியே அவங்க உங்களை ஆஸ்பிட்டலுக்கு அனுப்ப முயற்சி பண்ணாலும், நான் அதுக்கு நிச்சயம் அனுமதிக்க மாட்டேன்"
"சக்தி, உன்னால் அவர்களுக்கு எதிரா எதுவுமே செய்ய முடியாது"
"ஆனா உங்களால் முடியும்ல?"
"முடியாது. அவங்க எப்படியும் என்னை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிடுவாங்க"
முதல் நாள் இரவு பற்றியது போல் அவன் கன்னத்தை பற்றி,
"என்னை நம்புங்க. நான் நிச்சயம் அவங்களை அப்படி செய்ய விட மாட்டேன்"
"தயவுசெய்து புரிஞ்சுக்க முயற்சி பண்ணு சக்தி. உனக்கு அவங்களைப் பத்தி தெரியாது. அவங்க ஏற்கனவே அப்படி ஒரு தடவை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க"
"நான் தான் விட மாட்டேன்னு சொல்றேனே..."
"அவங்களோட உண்மையான இன்டென்ஷன் உனக்கு தெரியாது. அவங்க நம்ம ரெண்டு பேரையும் பிரிச்சிடுவாங்க"
"நான் உங்களை விட்டுட்டு போக மாட்டேன்"
"சக்தி, உனக்கு நான் வேணுமா? என் குடும்பம் வேணுமா?" என்றான் அச்சம் தரும் குரலில்.
"சந்தேகம் இல்லாம, நீங்க தான்..."
"அப்போ நான் சொல்றதை செய்"
"ஆனா ஏன்..."
"சக்தி, நான் எப்படிப்பட்ட நிலைமையில் இருந்தேன்னு உனக்கு தெரியாது. இப்ப தான் எனக்கு வாழ்க்கையில ஒரு பிடிப்பும், நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கு. தயவுசெய்து, எனக்கு ஏமாற்றத்தை கொடுத்துடாத. உன்னோட உறவை காப்பாத்திக்க நான் எந்த அளவுக்கு போவேன்... எந்த பிரச்சனையையும் சமாளிப்பேன்... அதுக்காக எந்த உறவையும் தூக்கி போடவும் நான் தயங்க மாட்டேன்" என்ற போது அவனது குரலில் உறுதி தெரிந்தது.
"நீங்க எதுக்காக இவ்வளவு பயப்படுறீங்க?"
"ஆமாம். நான் பயப்படுறேன் தான்... எனக்கு வேற யாரை பத்தியும் கவலை இல்ல... எதை பத்தியும் கவலை இல்ல... எனக்கு நீ மட்டும் போதும் சக்தி"
"நான் உங்க கூட தான் இருக்கேன்... இருப்பேன்... "
பல்லை இறுக்கமாய் கடித்து கண்களை மூடினான்.
"என்னை நீங்க நம்பலையா?" என்றாள்
பதில் கூற முடியாமல் தவித்துப் போனான் ருத்ரன்.
"அப்படின்னா நீங்க என்ன நம்பல. அப்படித் தானே?"
பதில் கூறாமல், அந்த அறையை விட்டு வெளியேறினான் ருத்ரன். சமையல் அறைக்கு வந்த அவன்,
"எனக்கும், சக்திக்கும் டின்னரை ரூமுக்கு கொண்டு வந்து குடுங்க. அக்காவும் மாமாவும் சாப்பிட்டாங்களானு செக் பண்ணுங்க" என்று காமாட்சிக்கு உத்தரவிட்டு விட்டு மீண்டும் தங்கள் அறைக்கு வந்தான்.
அவன் கூறியது போலவே, அவர்களுடைய இரவு உணவை அவர்களது அறைக்கே கொண்டு வந்து கொடுத்தாள் காமாட்சி. துர்காவையும், பரமேஸ்வரனையும் சாப்பிடுமாறு அழைத்தாள் துர்கா. அவள் அதை மறுக்கவில்லை. அவளுக்கு ருத்ரனையும், சக்தியையும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பது தான் முக்கியம். சிறு சிறு விஷயங்களுக்காக அவள் பிரச்சனை செய்து கொண்டிருந்தால், அவளது திட்டம் பாழாகும்.
ருத்ரனை ஏறெடுத்தும் பார்க்காமல் அமைதியாய் சாப்பிட்டாள் சக்தி. அதை ருத்ரனும் கவனித்தான். அவனுக்கு தெரியும், 'நான் உன்னை நம்புகிறேன்' என்று அவன் சக்தியிடம் கூறாததால் அவள் அவன் மீது வருத்தத்தில் இருக்கிறாள் என்று. 'நான் உன்னை நம்புகிறேன்' என்று அவனால் கூற முடியாது. அவன் அப்படி கூறினால், 'என்னை நம்புவதாக இருந்தால், என்னை உன் வீட்டிற்கு அழைத்துச் செல்' என்று அவள் கேட்கக்கூடும். அப்படி நடக்கக் கூடாது. அப்படி நடந்து விட்டால், அவனது திட்டத்தை அவன் செயல்படுத்த முடியாது.
சாப்பிட்டு முடித்து மறுபடியும் தரைதளம் வந்த ருத்ரன், துர்காவும் பரமேஸ்வரனும் சாப்பிட்டார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். அவர்கள் சாப்பிட்டார்கள் என்று தெரிந்து கொண்டு மனநிறையுடன் தன் அறைக்கு வந்தான்.
கதவை சாத்தி தாளிட்டுக் கொண்டு கட்டிலுக்கு வந்தான் ருத்ரன். ஜன்னலுக்கு பக்கத்தில் நின்றபடி, அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் சக்தி. ருத்ரனின் கால்கள் நகர மறுத்து அசையாமல் நின்றன, சக்தியின் தாலியை தனது தலையணையின் மீது பார்த்த போது. அதை கண்ட ருத்ரனின் ரத்தம் கொதித்தது. சக்தி எவ்வாறு இப்படி செய்யலாம்? கோபத்துடன் அவளை நெருங்கினான் அவன்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top