28 நல்லவன்

28 நல்லவன்

ஜன்னலுக்கு அருகில் வந்து ருத்ரனின் முன்னாள் நின்று கொண்டாள் சக்தி. அவ்வளவு நேரம் நிலவை பார்த்துக் கொண்டிருந்த அவனது விழிகள், அந்த நிலவை விட அதிகமாய் ஒளி வீசிய  சக்தியின் பக்கம் தாவியது. அவள் அவனைப் பார்த்து புன்னகைக்க, பதிலுக்கு புன்னகைக்காமல்

"எதுக்காக நீ விரதம் இருந்த?" என்று தனக்கு நன்றாய் தெரிந்த பதிலுக்கான கேள்வியை எழுப்பினான். அதர்கான பதிலை அவன் அவளிடம் இருந்து பெற வேண்டும் என்று நினைத்திருக்கலாம். அதே நேரம், ஆரம்பத்தில் சிறிதும் பிடிப்பில்லாமல் இருந்த அவளுக்கு, எப்படி திடீரென்று இந்த பிடிப்பு ஏற்பட்டது என்று தெரிந்து கொள்ள வேண்டும். தனக்கு அவளிடமிருந்து ஈடில்லா  முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த அவன், அவள் அதை செய்யும் போது அவனால் நம்ப முடியவில்லை.

"ஏன்னா, நீங்க என்னோட ஹஸ்பண்ட்" என்று உரைத்தாள் அவனுக்கு தெரியாத விஷயத்தை கூறுவதைப் போல.

"ஆரம்பத்துல இந்த கல்யாணத்தை நீ ஏத்துக்கலையே... இப்போ என்ன ஆச்சு? எது உன்னை இந்த ரிலேஷன்ஷிப்பை அக்சப்ட் பண்ண வெச்சது?"

"எனக்கு சேலத்துக்கு திரும்பி போக எந்த காரணமும் இல்ல. நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க. என்னை கண்கொத்தி பாம்பு மாதிரி கவனிச்சுக்கிட்டே இருக்கீங்க. நான் எங்க போனாலும் திரும்பிக் கொண்டு வருவேன்னு சொன்னீங்க. சொன்னிங்க தானே?"

குறுக்கீடு செய்யாமல் அவள் கண்களை கவனித்துக் கொண்டே இருந்தான், அதில் சந்தேகப்படும்படி ஏதாவது தெரிகிறதா என்று.

"இங்கிருந்து தப்பிச்சு போக முடியாதுன்னு தெரிஞ்ச பிறகு, அதை செய்ய நான் ஏன் முயற்சி பண்ணனும்? எங்க அப்பா அடிக்கடி சொல்லுவாரு, நம்ம வாழ்க்கையில எது வந்தாலும் அதை ஏத்துக்கிற மனப்பத்துவத்தை வளத்துக்கணும்னு. நான் அதைத்தான் செய்றேன்"

"நீ... இந்த... மாற்றத்தை... ஏத்துக்கிட்டியா?" வார்த்தைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு, அந்த கேள்வியை உதிர்த்தான்.

"நீங்க என்ன நினைக்கிறீங்க?" என்று பதில் கேள்வி கேட்டாள் சக்தி.

அதற்கு பதில் கூறாமல் அவள் அழகு முகத்தை படித்துக் கொண்டிருந்தான் ருத்ரன்.

"நீங்க என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டதால, நான் உங்களை எப்பவுமே ஏத்துக்க மாட்டேன்னு நினச்சிங்களா?"

இல்லை என்று தலையசைத்த ருத்ரன்,

"நான் உன் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதுக்காக நான் எப்பவுமே வருத்தப்பட மாட்டேன். ஏன்னா, நான் செஞ்சது தப்புன்னு எனக்கு தோணல" என்றான் தயக்கமின்றி.

தன் உதடுகளை ஒன்றாய் அழுத்தி புருவம் உயர்த்தினாள் சக்தி.

"நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதால தான் நீ இன்னைக்கு எனக்கு ஓய்ஃபா இருக்க. உன்னை கல்யாணம் பண்ணிக்காம, நமக்குள்ள ஒரு உறவை என்னால எப்படி ஏற்படுத்த முடியும்?"

"உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நீங்க ரொம்ப ரூட்." அழகாய் தன் பல்லை கடித்தாள் சக்தி.

பல் தெரியாமல் புன்னகைத்தான் ருத்ரன்.

"உங்கள மாதிரி ஒரு ஆளை நான் பார்த்ததே இல்ல. செய்றதெல்லாம் தப்பு. ஆனா, அதிலேயே தீர்க்கமா நிக்கிறது..."

அவள் அங்கிருந்து செல்ல முனைந்த போது, அவள் கையைப் பிடித்து நிறுத்திய ருத்ரன்,

"நான் ரூடானவன்னு உனக்கு தான் தெரிஞ்சிருக்கே... அப்புறம் எதுக்காக இந்த உறவை நீ ஏத்துக்கிட்ட?" அவனது குரல் மென்மையாய் ஒலித்தது.

தன் முகத்தை திருப்பி, அவனை  ஏறிட்டாள் சக்தி.

"ஏன்?" என்றான் நிதானமாக, ஆனால் பிடிவாதமான முக பாவத்துடன்.

இப்பொழுது அவள் அவனுக்கு பதில் சொல்லியாக வேண்டும். அந்த பதில், அவன் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அவன் அவளை நம்ப மாட்டான்.

"நான் ஏன் உங்களுக்கு பதில் சொல்லணும்?" என்றாள்.

"உனக்கு ரொம்ப பிடிவாதம் ஜாஸ்தி... என்னை மாதிரியே..."

"ஒருவேளை, என்னோட பிடிவாதம் உங்களுக்கு பிடிக்கலைன்னா, அது நீங்க உங்களையே வெறுக்கிறதுக்கு சமம்" என்று சிரித்தாள் சக்தி.

"உன்னை எனக்கு பிடிக்கலைன்னு யார் சொன்னது? உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். முக்கியமா, உன்னோட பிடிவாதம் எனக்கு ரொம்ப பிடிக்கும்"

"நீங்க ரொம்ப விசித்திரமான ஆளு"

"உன்னை மாதிரியே..." அவன் இதழில் மாறாத புன்னகை தவழ்ந்தது.

"ஆமாம், என்னை மாதிரி தான். இப்போ என் கையை விடுங்க"

"நீ எதுக்காக என்னோட உறவை எதுக்குட்டேன்னு சொல்ற வரைக்கும் விட மாட்டேன்"

"நான் சொல்றது பொய்யா இருந்தா என்ன செய்வீங்க?"

"உன்னால பொய் சொல்ல முடியாது. நான் உன்னோட பொய்யை கண்டுபிடிச்சிடுவேன்"

"நீங்க என்னோட பொய்யை கண்டுபிடிக்கிறீங்களான்னு பார்க்கலாம்"

தன் கண்களை இமைத்து, நடத்து என்பது போல் சைகை செய்தான்.

"என் கூட ஒரே பெட்ல தூங்கினாலும், நீங்க என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணல. என்னை தொட கூட நினைக்கல. நீங்க ரூடானவர் அப்படிங்கறதுல எந்த சந்தேகமும் இல்ல. ஆனா, அதே நேரம், நீங்க ஒரு ஜென்டில்மேன் அப்படிங்கிறதை நிச்சயம் மறுக்க முடியாது. உங்களோட அந்த குவாலிட்டி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு" அதைக் கூறும் போது, அவளது கண்கள், அவன் கண்களுடன் தயக்கமின்றி உறவாடியது.

அவள் கையை பிடித்திருந்த ருத்ரனின் பிடி தளர்ந்தது. அவளது பதில், எந்த சந்தேகமும் இன்றி அவனுக்கு மகிழ்ச்சி அளித்தது. ஏனென்றால், அவளது கண்களில் அவன் எந்த பொய்யையும் காணவில்லை. அதே நேரம், ஒரு புது வித பயம், அவன் மனதை கவ்வியது. அவன் அவளை தொடக்கூடாதா? அவளை தொட்டால் அவளுக்கு பிடிக்காமல் போய்விடுமோ? அவள் அவனை வெறுத்து விடுவாளோ? அவனது சிந்தனை ஆழமாய் இருந்ததால், அவளது பார்வை தன்னிடம் நிலைத்து நின்றதை அவன் கவனிக்கவில்லை.

"நான் சொன்னது பொய்யின்னு உங்களுக்கு தோணலையா?" என்றாள் கிண்டலாக, அது அவனை சுயநினைவுக்கு அழைத்து வந்தது.

"நீ சொன்னது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது..."

"அதெல்லாம் உண்மையா இருந்தா, உங்களுக்கு பிடிக்காதா?" என்றாள் வேண்டுமென்றே.

"நீ என்ன நினைக்கிற?"

"எனக்கு எப்படி தெரியும்?" என்றாள் தெனாவட்டாக.

"நீ என்கிட்ட சொன்னதெல்லாம் பொய் இல்ல... உண்மை தான்"

சிரித்த படி அவள் அங்கிருந்து செல்ல நினைத்த போது,

"நான் உன்னை தொட்டா, உனக்கு பிடிக்காதா?" என்றான் அவள் முகத்தை படித்தவாறு.

தான் வசமாய் மாட்டிக் கொண்டு விட்டோம் என்று புரிந்து போனது சக்திக்கு. அந்த கேள்வியை அவள் எதிர்பார்த்து இருக்கவில்லை. அவளால் ஆம் என்று கூறவும் முடியாது, இல்லை என்று கூறவும் முடியாது. சில நொடிகளில் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு,

"எனக்கு பிடிக்கலன்னா நீங்க என்னை தொடுவீங்களா?" என்ற கேள்வியை கேட்டு, அவன் கேட்ட கேள்வியிலிருந்து தப்பித்துக் கொண்டாள்.

மாட்டேன் என்று தலையசைத்த ருத்ரன், கட்டிலுக்கு சென்று படுத்துக் கொண்டான். உடைமாற்றிக் கொள்ள குளியலறைக்கு சென்றாள் சக்தி. சில நிமிடங்களில் இரவு உடையை  அணிந்து கொண்டு வெளியே வந்தாள் அவள்.

வழக்கமாய் உறங்குவது போல் அல்லாமல், அன்று அவன் சக்தியின் பக்கம் திரும்பி படுத்திருந்தான். அவனது கண்கள் திறந்து தான் இருந்தது. சக்தியும் அவனைப் பார்த்த வண்ணம் படுத்துக்கொண்டு, அவனையே பார்த்துக் கொண்டிருந்தது, அவனை ஏதோ செய்தது. அவள் முகத்தில் எந்த தயக்கமும் இல்லாமல் இருந்தது அவனை மேலும் ஆச்சரியத்திற்கு ஆளாக்கியது.

"நான் தொட்டா நீங்க என்னை வெறுப்பீங்களா?" என்ற கேள்வி, இந்த முறை சக்தியிடம் இருந்து வந்தது.

தான் கேட்டது உண்மை தானா என்று ருத்ரன் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்கு முன், மெல்ல அவனது கன்னம் தொட்டாள் சக்தி, அவனது உடலெங்கும் மின்சாரம் பாய்ச்சி.

"வெறுப்பீங்களா?" என்று அதையே மெல்லிய குரலில் மீண்டும் கேட்டாள்.

மாட்டேன் என்று மெதுவாய் தலையசைத்த ருத்ரன், அவளது ஸ்பரிசத்தை முழுதாய் உணரும் வண்ணம் கண்களை மூடிக்கொண்டான். அவள் தன் கையை எடுக்க முயன்ற போது,

"ப்ளீஸ், எடுக்காதே" என்றான் கெஞ்சலாய்.

அவனது வலது கன்னத்தைக் தொட்டுக் கொண்டிருந்த அவளது இடது கையை அவள் நீக்கியதும், அவன் ஏமாற்றம் அடைந்தான். ஆனால் தன் வலது கையை அவனது கன்னத்திற்கும் தலையணைக்கும் இடையில் அவள் செலுத்த, புன்னகையுடன் தன் கன்னத்தை அவள் கரத்தில் பொருத்தினான். ருத்ரனுக்கு தூக்கமே வரவில்லை. சக்தியின் வெதுவெதுப்பான கரம், அவனுக்கு முன் பின் தெரியாத ஏதோ ஒன்றை அறிமுகம் செய்து வைத்தது. அவளது கரத்தை அன்பாய் முத்தமிட்டு புன்னகை புரிந்தான் ருத்ரன்.

நேற்று வரை, அவள் அவனிடமிருந்து  தொலைவில் இருந்தாள்... இன்று, அவளது கரம் அவனுக்கு வெதுவெதுப்பை வழங்கிக் கொண்டிருக்கிறது... நாளை? யாருக்குத் தெரியும்...

மறுநாள்

தூக்கம் கலைந்து எழுந்த சக்தி, தன் கரம் ருத்ரனின் கன்னத்தை தொட்டுக் கொண்டிருப்பதையும், அவன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதையும் கண்டாள்.

"நீங்க எப்போ எழுந்திங்க?"

"நான் தான் தூங்கவே இல்லையே..."

"ஏன்?" என்றாள் புரியாமல்.

"உன்னோட சாஃப்ட்டான கை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதனால தான்"

திகைப்படைந்த சக்தி, தன் கையை எடுக்க முயன்ற போது,

"போகாத" என்றான்.

"போய் முதல்ல குளிங்க"

மாட்டேன் என்று தலையசைத்த அவன்,

"இதே மாதிரி அடிக்கடி என் கன்னத்தை தொடுவியா?" என்றான்.

பெருமூச்சுவிட்டு, சரி என்று தலையசைத்தாள் சக்தி. ருத்ரன் எழுந்து அமர, சக்தியும் எழுந்து அமர்ந்தாள். அவள் கட்டிலை விட்டு கீழே இறங்கி குளியலறை நோக்கி செல்ல, அவளை நோக்கி ஓடிவந்த ருத்ரன் அவள் வழியை மறித்தான். அவள் *என்ன?* என்பது போல் ஒரு பார்வை பார்க்க, அவளிடம் தன் கன்னத்தை காட்டினான். சிரித்தபடி அவள் அவனது கன்னம் தொட, இதமாய் கண்களை மூடினான் அவன். சிரித்தபடி ஓடிச்சென்று குளியல் அறையின் கதவை தாளிட்டுக் கொண்டாள் சக்தி.

அவள் குளித்து முடித்து வந்த போது, அவளுக்காக காத்திருந்த ருத்ரன், மீண்டும் தன் கன்னத்தை காட்டினான். சிரித்தபடி அவனை பிடித்து தள்ளி விட்டாள் சக்தி.

"நல்லவங்களுக்கு இது தான் மிஞ்சும்" என்ற ருத்ரனை புரியாமல் பார்த்தாள் சக்தி.

"நான் கெட்டவனா இருந்திருந்தா, உன்னை தொட உன்னோட அனுமதிக்காக காத்திருக்க மாட்டேன். நல்லவனா இருக்கிறது எப்பவுமே துரதிஷ்டம் தான்" கூறிவிட்டு குளியலறை நோக்கி நடந்தான்.

அவனை நோக்கி ஓடிய சக்தி அவனை இறுக்கமாய் தழுவிக் கொண்டாள். என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடியாமல் திடுக்கிட்டு நின்றான் ருத்ரன். அவனும் அவளைத் தழுவி கொள்ள வேண்டுமா, வேண்டாமா என்று அவனுக்கு புரியவில்லை. அவளைத் தொட்டால், அவனை அவள் வெறுத்து விடுவாளோ என்ற பயம் அவனுக்கு இருந்தது.

"நீங்க ரொம்ப நல்லவரு. அதுக்காக எப்பவும் வருத்தப்படாதீங்க. கெட்டவனா இருக்கறது மேல்னு நினைக்காதீங்க" அவனது நெஞ்சில் சாய்ந்தபடி கூறினாள் சக்தி.

தாறுமாறான இதயத்துடிப்புடன் அப்படியே நின்றான் ருத்ரன். தன்னுடைய அனைப்பிலிருந்து அவனை விடுவித்த சக்தி, தன் இரு கரங்களால் அவன் இரு கன்னங்களையும் தொட்டாள். அவளைப் பார்த்தபடி மெல்ல கண்ணிமைத்தான் ருத்ரன். அவன் நெற்றியில் தன் இதழ் பதித்து, அவனை கண்களை மூடச் செய்தாள் சக்தி.

"நான் போகட்டுமா" என்று அவனிடம் அனுமதி கேட்க,

 உணர்வுகளின் குவியலாய் காட்சி அளித்த ருத்ரன், சரி என்று தலையசைத்தான். திருப்தியுடன் அங்கிருந்து சென்றாள் சக்தி.

கட்டிலின் மீது அமர்ந்த ருத்ரன், தன் கண்களை மூடினான். சற்று நேரத்திற்கு முன்பு நடந்த எதையுமே அவனால் நம்ப முடியவில்லை. சக்தி அவனை நல்லவன் என்று கூறினாள்... அவனை கட்டி அணைத்தாள்... முத்தமிட்டாள்... வெகு நாட்களுக்குப் பிறகு அவனது இதழ்களில் குழப்பமற்ற புன்னகை தவழ்ந்தது.

அதற்குப் பிறகு அவன் சக்தியிடம் எதையுமே கேட்கவில்லை... அவனைக் கேட்கும் படி சக்தி வைக்கவில்லை. அவன் கேட்பதற்கு முன்பாகவே, அவளாகவே அவனிடம் வந்து, அவனுக்கு ஏதாவது வேண்டுமா என்று விசாரித்தபடி இருந்தாள். அதனால் அவளிடம் எதையும்  கேட்க வேண்டும் என்ற தேவையே அவனுக்கு ஏற்படவில்லை.

மாலை

ருத்ரனுக்கு காபி கலந்து கொண்டு சமையல் அறையிலிருந்து வெளியே வந்த சக்தி, திகைத்து நின்றாள், தங்கள் வீட்டினுள் நுழைந்து கொண்டிருந்த துர்காவையும், பரமேஸ்வரனையும் பார்த்து. அவர்களைப் பார்த்து மகிழ்ச்சி புன்னகை பூத்த அவள், தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டாள்.

தன் அறையின் ஜன்னல் வழியாக அவர்கள் வருவதை கண்ட ருத்ரன், திகில் அடைந்தான். கோபமாய் பல்லை கடித்த படி தரைதளம் விரைந்தான்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top