25 அவநம்பிக்கை

25 அவநம்பிக்கை

சக்தி சமைத்துக் கொடுத்த அண்ணாச்சிபழ கேசரியை ரசித்து ருசித்துக் கொண்டிருந்தான் ருத்ரன். சக்தியின் கையில் மாயாஜாலம் இருக்கிறது என்று எண்ணும் அளவிற்கு அது சுவையாய் இருந்தது. ருத்ரனுக்கு அன்னாசிப்பழ கேசரி மிகவும் பிடிக்கும் தான். ஆனால் அவன் என்றும் அதில் மனதை பறிகொடுத்ததில்லை. இன்று அவனால் அப்படி செய்யாமல் தப்பிக்க முடியவில்லை. சக்தி தான் இனிப்பு செய்வதில் கைதேர்ந்தவள் ஆயிற்றே...! அதை எண்ணி புன்னகைத்த அவன், அவள் மனதில் என்ன இருக்கிறது என்று புரிந்து கொள்ள முடியாமல் தவித்தான். இந்த முறை அவள் தப்பிச்செல்ல முயன்றால், அவளுக்கு நிச்சயம் நல்ல பாடம் புகட்டப்படும், என அவன் எண்ணிய போது, அவன் தேக்கரண்டியை பிடித்திருந்த பிடி இறுகியது. தன் வாழ்க்கைக்கு அவள் எவ்வளவு முக்கியம் என்பதை அவளுக்கு உணர்த்த வேண்டும் என்று நினைத்தான் அவன். தான் வாழ அவள் வேண்டும், அது அவளுக்கு தெரிய வேண்டும் என்பது அவசியம் என்பதை உணர்ந்தான் அவன். ஆனால் ஏன் அவள் அவனைப் புரிந்து கொள்ள மறுக்கிறாள்? நடராஜ் எவ்வளவு பெரிய ஏமாற்று பேர்வழி என்பதை அவள் புரிந்து கொண்ட பின்னும் ஏன் அவள் மனம் மாறவில்லை?

அப்பொழுது இன்னொரு கின்னத்தில் அன்னாசிப்பழ கேசரியுடன் அங்கு வந்த சக்தி, கட்டிலில் அமர்ந்து கொண்டு அதை சாப்பிட துவங்கினாள். அவள் அருகில் சென்று அமர்ந்து கொண்ட ருத்ரன்,

"நீ ரொம்ப நல்லா செஞ்சிருக்க. ரொம்ப டேஸ்டியா இருக்கு" என்றான்.

"இது என்ன பெரிய விஷயம்? நான் ஸ்வீட் செய்ற குடும்பத்திலிருந்து தானே வந்திருக்கேன்?" ஆனாயசமாய் தோள்களை குலுக்கினாள் சக்தி.

"ஆனா, சமையல்ல மனசு லயிச்சி செய்யறது ரொம்ப அவசியம். சின்ன தப்பு கூட எல்லாத்தையும் கெடுத்துடும்... இல்லயா?"

"உங்களுக்கு சமைக்க தெரியுமா?" என்றாள் சக்தி ஆர்வமாக.

இல்லை என்று தலையசைத்தான் ருத்ரன்.

"அப்புறம் எப்படி சமையல்ல தெரிஞ்சுக்க வேண்டிய ரொம்ப முக்கியமான ஒரு பாயிண்டை தெரிஞ்சு வச்சிருக்கீங்க?"

"அது எங்க அம்மா சொன்னது. அவங்க அடிக்கடி அப்படி சொல்றது உண்டு"

"உங்க அம்மா சமைக்கும் போது அவங்களுக்கு நீங்க ஹெல்ப் பண்ணுவீங்களா?"

"இல்ல... அவங்க சமைக்கும் போது கூட இருப்பேன்"

"அப்போ, தக்காளி, தேங்காய், சக்கரை இதையெல்லாம் சாப்பிடுவீங்க தானே?"

"வெல்லம், முந்திரிபருப்பு... அதெல்லாம் கூட" என்று சிரித்தான்.

"எங்க அம்மா சமைக்கும் போது, நானும் அப்படித் தான் செய்வேன். எங்க அம்மா திட்டிக்கிட்டே இருப்பாங்க"

"நீ அவங்களை மிஸ் பண்றல்ல?"

"ஆமாம். எங்க அப்பாவையும் ரொம்ப மிஸ் பண்றேன்... நீங்களும் உங்க அம்மாவை மிஸ் பண்றீங்க இல்ல?"

"ரொம்ப..."

"அம்மாவோட இடத்தை மட்டும் யாராலயும் நிரப்பவே முடியாது" என்றாள் சக்தி.

"சில சமயம், அது ஆம்பளைங்களுக்கு சாத்தியப்படும், அவங்களுக்கு நல்ல வைஃப் கிடைச்சா" என்றான் அவளது கண்களை ஊடுருவி.

அவனது அந்தப் பார்வை அவளது வயிற்றை மத்தால் கடைந்தது. தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். தன் கையில் இருந்த கிண்ணத்துடன், அங்கிருந்து செல்வதற்காக அவள் எழுந்து நிற்க, அவள் கரத்தை பற்றினான் ருத்ரன்.

"நான் சொன்னது உனக்கு புரிஞ்சிதா?"

*புரிந்தது* என்பது போல் தலையசைத்தாள் சக்தி. கட்டிலில் இருந்து எழுந்தான் ருத்ரன். அரை தேக்கரண்டி கேசரியை அவள் முன்னாள் நீட்டினான். அந்த தேக்கரண்டியையும், பிறகு அவனது முகத்தையும் பார்த்துவிட்டு, அவன் முகத்தைப் பார்த்த வண்ணம் அதை உண்டாள் சக்தி.

"தேங்க்ஸ்" முறுவளித்தான்.

அவள் அங்கிருந்து செல்ல நினைத்தபோது, அவளை வழி மறித்து நின்றான் ருத்ரன்.

"நான் சொன்னது புரிஞ்சதுன்னு சொன்ன... உனக்கு என்ன புரிஞ்சது?"

"நல்ல ஒய்ஃப் கிடைச்சா..."

"கிடைச்சா?"

"அம்மாவுடைய இடத்தை அவங்களால பிடிக்க முடியும்" அவனது கண்களை ஏறிட்டாள்.

புன்னகையுடன் தலையசைத்த அவன்,

"கொஞ்ச நாளுக்கு முன்னாடி வரைக்கும், நான் கூட எங்க அம்மாவுடைய இடத்தை வேற யாரும் பிடிக்கிறதுல விருப்பமில்லாம தான் இருந்தேன்..." தன் தொண்டையை அடைத்த, அந்த பெயர் தெரியாத வஸ்துவை அவன் விழுங்க, தலை கவிழ்ந்தாள் சக்தி.

அவள் முகத்தை நோக்கி தன் கைகளை அவன் உயர்த்த, அவள் சட்டென்று பின்வாங்கினாள். உயர்த்திய தன் கையை அவன் அப்படியே நிறுத்த, அவனை குழப்பத்துடன் ஏறிட்டாள் சக்தி. அவள் நெற்றியில் விழுந்த சுருள் கற்றையை ஒதுக்கி விட்டான் ருத்ரன்.

"நான்... நான் போகட்டுமா?" தடுமாறினாள் சக்தி.

"உன்னை எப்பவும் நான் *போ* ன்னு சொல்ல மாட்டேன்... "

"நான் கிச்சனுக்கு போறதை பத்தி சொன்னேன்"

"என்ன அவசரம்? இப்போ தானே பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டோம்... மனசுக்கு நிறைவான பிரேக்ஃபாஸ்ட்"

ஆம் என்று தலையசைத்தாள் சக்தி.

"என்னை பார்த்தா உனக்கு பயமா இருக்கா?"

இல்லை என்று தலையசைத்தாள்.

அவள் கையில் இருந்த கிண்ணத்தை வாங்கி மேஜை மீது வைத்துவிட்டு, அவளை நோக்கி தன் கையை நீட்டினான் ருத்ரன். தன் கரத்தை மெல்ல அவன் கையில் கொடுத்ததும், தன் இரு கரங்களால் அவள் கரத்தைப் பற்றிக் கொண்டு,

"சக்தி, நீ ரொம்ப நல்ல பொண்ணு. ஆனா ரொம்ப ஏமாத்துற..." என்றான் தந்திர சிரிப்புடன்.

திடுக்கிட்டாள் சக்தி. ஏமாற்றுகிறாளா? அப்படி என்றால், அவன் அவளைப் பற்றி அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறானா?

"சக்தி, நீ ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கணும். உன்னால என்னை ஏமாத்த முடியாது. என்னை விட்டுட்டு உன்னால தப்பிச்சு போக முடியாது. நீ எங்க போனாலும் சரி, உன்னை மறுபடி கொண்டு வருவேன். எனக்கு என்ன வேணும்ங்குறது உனக்கு நல்லாவே புரிஞ்சிருக்கும். உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும், சக்தி. தயவு செய்து என்னை கோப... (கோபம் என்ற வார்த்தையை கூறாமல் நிறுத்திவிட்டு) வருத்தப்பட வைக்காதே. புரிஞ்சிக்குவேன்னு நினைக்கிறேன்."

அவனது குரல் எச்சரிக்கை செய்வது போல் இருந்தாலும், கெஞ்சலாகவும் வெளிப்பட்டது. அவளுக்கு என்ன கூறுவது என்றே புரியவில்லை. கண் இமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது கன்னத்தை மென்மையாய் தட்டினான் ருத்ரன். சங்கடத்துடன் தலை குனிந்தாள் சக்தி.

ருத்ரன் கூறியதை யோசித்தபடி அந்த இடம் விட்டு அகன்றாள். அவனது மனநிலை அவளுக்கு புரிந்து தான் இருந்தது. ஆனால், அவன் அவளைப் பற்றி இந்த விதத்தில் யோசிப்பான் என்று அவள் நினைத்திருக்கவில்லை. அவன் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறான் என்பதை அவள் இப்போது தான் தெரிந்து கொண்டாள். அவள் தனக்கு நல்ல மனைவியாய் இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். அதன் மூலமாக, இல்லாத தன் அம்மாவின் இடத்தை அவளுக்கு வழங்கவும் துடிக்கிறான். அவன் மனதில் தோன்றியிருக்கும் அவநம்பிக்கையை எப்படி அழித்தொழிப்பது என்பது அவளுக்கு புரியவில்லை.

சமையலறைக்கு வந்த அவள், தன் மனதை முழுதும் சமையலில் செலுத்தினாள். அவளது எண்ணம் முழுவதும் ருத்ரன் கூறிய வார்த்தைகளிலேயே ஆழ்ந்திருந்தது. அவனை ஏமாற்றுவதற்காக அவள் நடிப்பதாக அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான். தன்னைத்தானே நொந்து கொண்டாள் சக்தி. அவன் அவ்வாறு நினைப்பதற்கு அவள் தானே காரணம்...!

மதிய உணவு அமைதியுடன் கடந்தது. அவளது திட்டத்தை அவன் புரிந்து கொண்டு விட்டதால், அவள் பயந்துவிட்டதாய் அதையும் தவறாகவே எண்ணினான் ருத்ரன்.

மறுபுறம், ருத்ரனுக்கு ஏற்பட்ட அதே சந்தேகம் காமாட்சிக்கும் இருந்தது. அவளும் அப்படித்தான் எண்ணிக் கொண்டிருந்தாள். அங்கிருந்து தப்பிச்செல்ல ஒரு நல்ல சமயத்தை எதிர்பார்த்து சக்தி காத்திருப்பதாய் நினைத்தாள் அவள்.
அவளது கணவன் சாம்பசிவம் இரு முறை அழைத்தும் அவள் எதுவும் சொல்லாமல் இருக்கவே, அவள் அருகில் வந்து தோளை தட்டினான்.

"நான் கூப்பிடுறது கூட காதுல விழாத அளவுக்கு அப்படி என்ன யோசிச்சுக்கிட்டு இருக்க?"

"சக்தி அம்மாவை பத்தி தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்."

"ஏன், அவங்க என்ன செஞ்சாங்க?"

"அவங்க ரொம்ப சாதாரணமா இருக்காங்க. ருத்ரன் சாருக்காக சமையல் செய்றாங்க... இந்த வீட்டை சந்தோஷமா சுத்தி வராங்க... இன்னைக்கு, சாமி படம் வச்சி பூஜை பண்ணாங்க..."

"இதெல்லாம் நல்ல விஷயம் தானே?"

"இதெல்லாம் உண்மையா இருந்தா நல்ல விஷயம் தான்..."

"உண்மை இல்லைன்னு சொல்றியா?"

"எனக்கு தெரியல"

"நீ என்ன நினைக்கிற? தெளிவா பேசு"

"தான் ரொம்ப சாதாரணமா இருக்கிறதா அவங்க காட்டிக்கிறாங்க"

"ஏன்?"

"இங்கிருந்து தப்பிச்சி போக தான்..."

"அது நிச்சயம் நடக்காது... ஆனா, ஒருவேளை அவங்க உண்மையிலேயே மனசு மாதிரி இருந்தா? அப்படி நடக்கவும் வாய்ப்பிருக்கு தானே? நம்ம ருத்ரன் சாரை யாருக்கு தான் பிடிக்காது? ஆள் பார்க்க எவ்வளவு ஜம்முனு இருக்காரு..."

"ம்ம்"

இவற்றையெல்லாம் சக்தி ருத்ரனுக்காக விரும்பித் தான் செய்கிறாளா என்று சோதித்துப் பார்த்து விடுவது என்ற முடிவுக்கு வந்தாள் காமாட்சி. சமையல் அறைக்கு வந்த அவள், சக்தி ஏதோ ஆழமாய் யோசித்தபடி பாத்திரம் விளக்கிக் கொண்டிருப்பதை கண்டாள்.

"சக்தி மா..."

"ஆங்...?"

"நான் சாயங்காலம் மார்க்கெட் போகணும்... போயிட்டு வரட்டுமா?"

"போயிட்டு வாங்க"

"நாளைக்கு சுமங்கலி பூஜை இல்ல... அதுக்காகத்தான் தேவையான பொருளை எல்லாம் வாங்க போறேன்"

*சுருக்* என்றது சக்திக்கு. நாளை சுமங்கலி பூஜையா? தன் அப்பாவின் நீண்ட கால நல்வாழ்விற்காக தன் அம்மா விரதம் இருப்பதை அவள் பார்த்திருக்கிறாள். அவர்கள் ஒன்றாகவே வாழ்ந்து, ஒன்றாகவே உலகத்தை விட்டு சென்றவர்கள். சென்ற வருடம், தனக்கு நல்ல கணவன் வாய்க்க வேண்டும் என்பதற்காக சக்தி கூட விரதம் இருந்தாள். அதை எண்ணிய போது, அவளது முகத்தில் மந்தகாச புன்னகை மலர்ந்தது.

காமாட்சியிடம் ஒன்றும் கூறாமல், சமையல் அறையை விட்டு அகன்றாள் சக்தி, காமாட்சியை குழப்பத்தில் விட்டு. சுமங்கலி பூஜையை பற்றி தன்னிடம் சக்தி ஏதாவது கூறுவாள் என்று எதிர்பார்த்தாள் காமாட்சி.

சுமங்கலி பூஜையை பற்றி அவள் ஒன்றும் கூறவில்லை தான்... ஆனால், அவள் மனதில் இருந்ததெல்லாம் அதைப் பற்றிய எண்ணம் மட்டும் தான். இது அவளுடைய திருமணத்திற்கு பிறகு வரும் முதல் சுமங்கலி பூஜை. ருத்ரன் அவளைப் பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்து விட்டு போகட்டும். அவனுடைய மனைவியாய், அவனுக்காக விரதம் ஏற்க வேண்டியது அவளுடைய கடமை என்றெண்ணிய சக்தி, அதற்கு தயாரானாள்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top