23 எதிர்பாராத கேள்வி

23 எதிர்பாராத கேள்வி

வெகு நேர்த்தியாய் பராமரிக்கப்பட்டு கொண்டிருந்த ருத்திரனின் வீட்டு தோட்டத்தில் உலவிக்கொண்டு இருந்தாள் சக்தி. அங்கிருந்த செடிகளையும் அதில் பூத்திருந்த பூக்களையும் கவனித்தவாறு பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தாள். தன் அறையில் இருந்த ஜன்னலின் வழியாக அவளை கவனித்துக் கொண்டிருந்த ருத்ரன், அவளைப் பற்றித்தான் அவன் ஆலோசனை செய்து கொண்டிருந்தான்.

*அவள் என்ன திட்டமிட்டு கொண்டிருக்கிறாள்? மீண்டும் தப்பிச் செல்வதற்காக அந்த பார்ம் ஹவுஸின் அமைப்பினை கூர்ந்து கவனிக்கிறாளோ? அவளை கண்காணிக்க வேண்டியது அவசியம்* என்ற முடிவுக்கு வருகிறான் ருத்ரன்.

தன் கைபேசியை எடுத்து, அந்த வீட்டின் காவலாளியான ஏகாம்பரத்தை அழைத்தான்.

"வணக்கம் சார்" என்றான் ஏகாம்பரம்.

"சக்தி வீட்டை விட்டு வெளியே வரும் போதெல்லாம் அவளை  ஜாக்கிரதையா கவனிங்க"

"சரிங்க சார்"

"வீட்டு கேட்டை எப்பவும் பூட்டியே வைங்க"

"சரிங்க சார்"

"நீங்க அவளை கவனிக்கிறீங்கன்னு அவளுக்கு தெரியக்கூடாது. நீங்க அவளை ஃப்ரீயா விட்டதா அவ நினைச்சுக்கட்டும்"

"அப்படியே செய்றேன் சார்"

அந்த அழைப்பை முடித்துக் கொண்டு, தோட்டத்திற்கு வந்தான் ருத்ரன். ஆனால், அங்கு சக்தியை காணவில்லை. அவளைத் தேடிக் கொண்டு, வீட்டின் பின்புறம் இருந்த நீச்சல் குளத்தை நோக்கி சென்றான் ருத்ரன்.

தோட்டத்தில் இருந்த தண்ணிர் குழாயில் கால்களை சுத்தமாய் கழுவிக் கொண்டு, தன் கால்களை நீச்சல் குளத்தின் நீரில் மூழ்கவிட்டு அமர்ந்து கொண்டாள் சக்தி. அங்கு வந்த ருத்ரனை பார்த்து புன்னகைத்தாள்.

"இங்க என்ன செஞ்சுகிட்டு இருக்க? இருட்ட ஆரம்பிச்சிடுச்சு... வா உள்ள போலாம்"

"இந்த கார்டனை ரொம்ப அழகா மெயின்டைன் பண்ணிக்கிட்டு இருக்காங்க. எனக்கு இந்த இடம் ரொம்ப பிடிச்சிருக்கு"

மெலிதான புன்னகை பதிலாய் வந்தது ருத்ரனிடமிருந்து.

"இந்த காம்பவுண்ட் சுவரை ஏன் இவ்வளவு உயரமாக கட்டியிருக்கீங்க?" அவள் சாதாரணமாய் தான் கேட்டாள்.

ஆனால், அந்தக் கேள்வி ருத்ரனை துணுக்குற செய்தது. அவள் உண்மையிலேயே இங்கிருந்து தப்பிச்செல்ல திட்டம் தான் திட்டிக் கொண்டிருக்கிறாளோ?

"என் வீட்ல என்ன நடக்குதுன்னு வெளியில இருக்கிற யாரும் தெரிஞ்சுக்க வேண்டாம்னு தான் அதை உயரமா கட்டியிருக்கேன்"

"ஓ..."

"இந்த சுவரை சுத்தி அலாரம் ஃபிக்ஸ் பண்ணி இருக்கேன். யாராவது சுவத்து மேல கை வச்சா, அலாரம் அடிக்கும்" அவள் முகமாற்றத்தை கவனிப்பதற்காக வேண்டுமென்றே அதை கூறினான் ருத்ரன்.

தன் புருவத்தை உயர்த்தி, மென்று விழுங்கினாள் சக்தி. ஆரம்பத்தில் ஏணியை பயன்படுத்தி, அவள் அந்த சுவரை தாண்டி குதிக்க நினைத்திருந்தாள். நல்ல வேலை, அவள் அப்படி எதுவும் செய்யவில்லை. அவள் முகம் போன போக்கை கவனித்த ருத்ரன், அவள் உண்மையிலேயே அங்கிருந்து தப்பிச் செல்லத்தான் திட்டமிட்டு கொண்டிருக்கிறாள் என்று உறுதியாய் எண்ணத் துவங்கினான்.

"நீ உள்ள வரியா இல்லையா?"

"நீங்க உள்ள போக போறீங்களா?" என்ற அவளது கேள்வி அவனை வியப்புறச் செய்தது.

"நான் உன் கூட இருக்கணுமா?" என்று அவன் கேட்ட போது, அவன் இதழில் புன்னகை தவழ்ந்தது.

"இல்ல... அதுக்கு இல்ல..."

"வேற எதுக்கு சக்தி?"

"இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருக்கலாம்னு நினச்சேன்"

"நான் உன் கூட இருந்தா உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே?"

"எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல"

"நிஜமாத் தான் சொல்றியா?"

"எனக்கு என்ன பிரச்சனை?"

"இப்போ வேணா இல்லாம இருக்கலாம்..."

"நீங்க சொல்றது எனக்கு புரியல"

"போகட்டும் விடு"

நீச்சல் குளத்தின் சுற்றுச்சுவரில் தானும் அமர்ந்து கொண்டான் ருத்ரன். ஆனால் அவன் சக்தியை போல் காலை தண்ணீருக்குள் நுழைக்கவில்லை.

"நான் உங்களை ஒன்னு கேக்கலாமா?" என சக்தி வினவ, ருத்ரனின் தலைக்குள் அலாரம் அடித்தது.

"உங்களுக்குன்னு யாருமே இல்லையா? இங்க தனியா இருக்கீங்களே..."

அந்தக் கேள்வி நிச்சயம் அவனை அதிசயிக்க செய்தது. தனது சொந்த வாழ்க்கை குறித்த கேள்வியை அவள் எழுப்புவாள் என்று அவன் எதிர்பாராமல் இருந்தது தான் காரணம்.

அவனிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவே,

"உங்களுக்கு விருப்பம் இல்லைனா சொல்ல வேண்டாம்" என்றாள்.

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல... என்னோட குடும்பம் ரொம்ப பெருசு. அவங்க எல்லாரும் சென்னை சிட்டில இருக்காங்க"  அதை அவளிடமிருந்து மறைக்க வேண்டிய அவசியம் இருப்பதாய் அவனுக்கு தோன்றவில்லை.

"அப்படியா? அப்படின்னா ஏன் நீங்க இங்க தனியா இருக்கீங்க?" என்றாள் போலியான அதிர்ச்சியுடன்.

"இது என்னோட ஃபார்ம் ஹவுஸ். எனக்கு எப்பவெல்லாம் மன அமைதி வேணும்னு தோணுதோ, அப்பவெல்லாம் நான் இங்க வருவேன்"

"ஓ...  எப்போ உங்க வீட்டுக்கு திரும்பி போவீங்க?"

"இப்போதைக்கு திரும்பி போற எண்ணமில்லை"

"ஏன்?"

அவளுக்கு பதில் கூறாமல், நீச்சல் குளத்தின் தண்ணீரில் தன் பார்வையை ஓட்டினான் ருத்ரன்.

"நம்ம கல்யாணம் பண்ணிக்கிட்ட விஷயம் தெரிஞ்சா, அவங்க உங்க மேல கோபப்படுவாங்களா?"

பகிர் என்றது ருத்ரனுக்கு. கல்யாணம்...! உண்மையிலேயே இவள் நடந்ததை கல்யாணம் என்று தான் கருதுகிறாளா? ஆனால் அன்று, அவன் அவள் கழுத்தில் தாலி கட்டிய போது அதை அவள் அவிழ்க்க முயன்றாளே...!

"உங்க குடும்பத்தார் என்னை அவங்க மருமகளா எடுத்துக்கலைனா என்ன செய்வீங்க?" என்றாள் எதிர்காலம் குறித்த கவலை கொண்டவளை போல.

"அதைப் பத்தியெல்லாம் எனக்கு கவலை இல்ல"

"நீங்க யாரைப் பத்தியுமே கவலைப்பட மாட்டீங்களா? இவங்களைப் பத்தி கவலைப்படுவேன்னு சொல்லிக்கிற அளவுக்கு, யாராவது ஒருத்தராவது இருக்காங்களா?"

"நீ தான் இருக்கியே... நீ நம்பினாலும் சரி நம்பலனாலும் சரி... நான் உன்னை பத்தி மட்டும் தான் கவலைப்படுவேன்"

"நீங்க, நடக்க இருந்த என் கல்யாணத்தை நிறுத்தினவரு... அதுக்காக நான் உங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கேன் தான்..."

அது அவனை திகைக்கச் செய்தது. அவளது திருமணத்தை நிறுத்தியதற்காக அவள் அவனுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறாளா?

"ஆனா, நீங்க என்னை கடத்திக்கிட்டு வந்தீங்க... என் விருப்பம் இல்லாம என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க... இந்த தனியான பங்களாவில் என்னை அடைச்சு வச்சிருக்கீங்க... என்னை பத்தி கவலைப்படறதுனால தான் இதையெல்லாம் செஞ்சிங்களா?"

"நான் உன் கல்யாணத்தை நிறுத்தினேன். உன்னை கடத்திக்கிட்டு வந்தேன். உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு, இந்த வீட்ல தனியா அடச்சு வச்சிருக்கேன். இது எல்லாத்துக்கும் ஒரு காரணம் தான்... ஒரே ஒரு காரணம்..."

"என்ன அந்த காரணம்?"

"நான் உன் கூட இருக்கணும்... எப்பவும்..." கண்களை மூடி நீண்ட பெருமூச்சை இழுத்து,

"நான் ஒத்துக்குறேன், உன்னை உன் விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டேன் தான்... ஆனா, கல்யாணம் தானே பண்ணிக்கிட்டேன்...? வேற எதுவும் தப்பா செய்யல இல்ல?"

அவன் கூறியதன் அர்த்தம் புரிந்து தலைக்கவிருந்தாள் சக்தி. ஆம் அவன் கூறுவது நியாயம் தான். காதல் என்ற பெயரில், எத்தனையோ ஆண்கள் பெண்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதை அவள் பார்க்கவில்லையா என்ன...?

"நீ என் கூட என்னோட மனைவியா இருக்கணும். மனைவி என்கிற அந்தஸ்து இல்லாம ஒரு பொண்ணு ஒரு ஆம்பள கூட இந்த சமுதாயத்துல வாழ முடியாது. நான் இந்த சமுதாயத்தை பத்தி கவலைப்படல. உன்னை பத்தி மட்டும் தான் கவலைப்பட்டேன். அதனால தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன், சக்தி"

"ஆனா, உலகத்துல இருக்கிற மத்த எல்லா பொண்ணுங்களையும் விட்டுட்டு, என்னை எதுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க?" என்ற தரமான கேள்வியை கேட்டாள் சக்தி.

திகைத்து நின்றான் ருத்ரன். இப்பொழுது அவன் என்ன பதில் கூறுவான்? ஒரு பெண்ணின் கடைசி வார்த்தைக்காக தான் உன்னை நான் திருமணம் செய்து கொண்டேன் என்றா? அவனைப் பொறுத்தவரை, அந்த வார்த்தைகள் உயிர் உள்ளவை. ஆனால், சக்தி அவனைப் பற்றி என்ன நினைப்பாள்? அவனுக்கு புரியவில்லை. அதனால் அமைதி காத்தான். அவன் தடுமாறுவதை புரிந்து கொண்ட சக்தி, அவனை மேலும் சங்கடப்படுத்த விரும்பவில்லை. அதனால் அவனைக் கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டு,

"உள்ள போலாமா?" என்றாள், கால்களை தண்ணீரில் இருந்து வெளியே இழுத்து.

அவன் சரி என்று தலையசைக்க, இருவரும் வீட்டினுள் வந்தார்கள்.

காமாட்சி சமைத்து வைத்த இரவு உணவை ருத்ரனுடன் அமர்ந்து உண்டாள் சக்தி. சாப்பிட்டு முடித்து தங்கள் அறைக்கு சென்றான் ருத்ரன். சமையலறைக்கு வந்த சக்தி, காமாட்சியிடம்,

"இங்க பாருங்க..."

"சொல்லுங்கம்மா..."

"எனக்கு ஒரு மகாலட்சுமி படம் வேணும்.  மார்க்கெட்டுக்கு போனா வாங்கிட்டு வாங்க"

ஆச்சரியம் மேலிட அவளை உற்று நோக்கினாள் காமாட்சி.

"நான் சொன்னது உங்களுக்கு புரிஞ்சுதா?" என்றாள் பதில் கூறாத காமாட்சியை பார்த்து.

புரிந்தது என்று அவசரமாய் தலையசைத்தாள் காமாட்சி.

தங்கள் அறைக்கு வந்த சக்தி, ருத்ரனின் பக்கத்தில் படுத்துக்கொண்டு நிம்மதியாய் உறங்கிப் போனாள். ஆனால் ருத்ரன் தூங்கும் நிலையில் இல்லை. அவன் மனதில் ஏகப்பட்ட எண்ணச் சுழல்கள் சுழன்று கொண்டிருந்தன.

சோபாவில் அமர்ந்து கொண்டு, தூங்கும் சக்தியை பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவள் வெகு அமைதியாய் காணப்பட்டாள். அவனிடம் வெகு இயல்பாய் பேசினாள். எந்த தயக்கமுமின்றி அவனிடம் கேள்விகளை தொடுத்தாள். அவள் மனதில் இருப்பது என்ன? அவள் நம்பத் தகுந்தவள் தானா? அல்லது, முன்பை போலவே ஏதாவது திட்டம் அவள் மனதில் இருக்கிறதா?

பார்க்கலாம்... எப்படி இருந்தாலும், தெரிந்துதானே ஆகப்போகிறது...! அவள் இங்கு அவனுடன் இருக்க வேண்டும் என்பது தான் அவளுக்கு விதிக்கப்பட்டது. இங்கிருந்து தப்பிச் செல்வது என்பது ஒருபோதும் நடக்கப் போவதில்லை. என்று தனக்குத்தானே கூறிக் கொண்டான் ருத்ரன்.

மறுநாள் காலை

சக்தி தூக்கத்திலிருந்து கண்விழித்த பொழுது, அந்த அறையில் ருத்ரன் இருக்கவில்லை. குளியல் அறையில் பார்க்க, அதன் கதவு திறந்தே இருந்தது. அவன் ஜாகிங் சென்று இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள். அப்படி என்றால், துர்கா விடம் பேச இது தான் சரியான நேரம். ருத்ரனின் கைபேசியை எடுத்து, துர்காவிற்கு ஃபோன் செய்தாள்.

அழைப்பை ஏற்ற துர்கா பேசாமல் காத்திருந்தாள்,  சக்தியின் குரலை கேட்பதற்காக.

"துர்கா அக்கா, நான் சக்தி பேசுறேன்"

"சக்தி நீங்க நல்லா இருக்கீங்கல்ல? அங்க எதுவும் பிரச்சனை இல்லையே?"

"நான் நல்லா இருக்கேன். இங்க எந்த பிரச்சனையும் இல்ல"

"தேங்க் காட்..."

"அக்கா, அவருக்கு என்ன பிடிக்கும்?"

"என்ன்னன?" என்றாள், அவள் என்ன கேட்கிறாள் என்று சரியாய் புரியாத துர்கா.

"அவருக்கு என்ன சாப்பிட பிடிக்கும்?"

"அவனுக்கு ரவா இட்லியும், கொஞ்சம் காரம் தூக்கலா இருக்கிற தேங்காய் சட்னியும் ரொம்ப பிடிக்கும்"

"சரிங்க கா, நான் உங்ககிட்ட அப்புறம் பேசுறேன்"

"சரிங்க சக்தி"

அழைப்பை துண்டித்து விட்டு, அவளையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த பாட்டியையும், சித்தியையும் பார்த்து இனிப்பான புன்னகை வீசினாள் துர்கா.

சீக்கிரமே ருத்ரன் குணமாகி, பழைய நிலைக்கு திரும்பி விடுவான் என்ற நம்பிக்கை அவர்களுக்குள் துளிர்விட்டது... சக்தி நிச்சயம் அதை செய்வாள் என்று அவர்கள் நம்பத் தொடங்கினார்கள்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top