21 முடிவு

21 முடிவு

ருத்ரனின் கதையைக் கேட்ட சக்தி திகைத்து நின்றாள்.

"மாயாவோட சாவுக்கு முன்னாடி, ருத்ரனை மாதிரி ஒரு திடமான மனுஷனை பார்க்கவே முடியாது.  ஆனா அவளோட சாவுக்கு பிறகு, ஒவ்வொரு நாளும் அவன் பலவீனம் அடஞ்சிகிட்டே போனான். அவ தன்னுடைய மடியில, தன் கண் முன்னாடி இறந்ததை அவனால தாங்கவே முடியல. உயிரை விடுறதுக்கு முன்னாடி, அவ சொன்ன கடைசி வார்த்தைகள், அவன் மனசுல ரொம்ப பெரிய பாதிப்பை ஏற்படுத்திடுச்சி. மாயாவை உரிச்சு வெச்சது போல இருக்குற உங்களை பார்த்த போது, அவளோட கடைசி வார்த்தைகள் அவனுக்கு ஞாபகம் வந்திருக்கணும். உங்களை மாயா தான் அவனுக்காக அனுப்பினதா அவன் நம்புறான். நீங்க பார்க்க அச்சு அசலா மாயா மாதிரியே இருக்கீங்க. இதைவிட அவனுக்கு வேற என்ன வேணும் அவளோட வார்த்தைகளை நம்புறதுக்கு?"

சக்தியின் கண்கள் மாயாவின் புகைப்படத்தின் மீது நிலைத்து நின்றது.

"என் தம்பியை ஏத்துக்கங்கன்னு நான் உங்களை கட்டாயப்படுத்த மாட்டேன்.  இது உங்களுடைய வாழ்க்கை. அதை முடிவு பண்ண யாருக்கும் எந்த உரிமையும் இல்ல. எப்படிப்பட்ட வாழ்க்கை வாழனும்னு முடிவு பண்றதுக்கான முழு அதிகாரமும் உங்களுக்கு இருக்கு. நீங்க இதுக்கப்புறம் அவனோட இருக்க வேண்டாம்" என்றாள் துர்கா தொண்டை அடைக்க.

மாயாவின் புகைப்படத்தின் மீது இருந்த தன் கண்களை, துர்காவின் பக்கம் அதிசயத்துடன் திருப்பினாள் சக்தி.

"அப்படி சொல்லாத துர்கா... நம்ம ருத்ரா சுக்கு நூறா உடஞ்சி போய்விடுவான்" என்றார் சித்தி அபிராமி கெஞ்சலாக.

"ஆமாம் துர்கா, நம்ம ருத்ரனுடைய நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாரு" என்று அழுதார் பாட்டி.

"இல்ல பாட்டி. அவங்களுக்கு எதிர்காலம் இருக்கு... வாழ்க்கை இருக்கு.. நம்ம சுயநலமா யோசிக்க கூடாது"

சக்தியின் பக்கம் திரும்பிய துர்கா,

"எனக்கு என் தம்பியை பத்தி நல்லா தெரியும். அவன் இப்பல்லாம் கட்டுப்படுத்தவே முடியாதவனா மாறிக்கிட்டு இருக்கான். நீங்க சேலத்துக்கு திரும்பி போகலாம். ஆனா அவன் உங்களை எங்கிருந்து கொண்டு வந்தானோ அதே இடத்துக்கு நீங்க திரும்பி போனா, நிச்சயமா அவன் உங்களை மறுபடியும் தேடி கண்டுபிடிச்சிடுவான். அதனால வேற எங்கேயாவது போங்க. உங்களுக்கு வேணும்னா,  அதுக்கான ஏற்பாடை நாங்களே செஞ்சு கொடுக்கிறோம்" என்றாள் துர்கா.

அவளை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டு நின்றாள் சக்தி. ருத்ரனின் பாட்டியும் சித்தியும் சத்தம் இல்லாமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த அலமாரியை திறந்து, அதில் இருந்த ஒரு உடையை எடுத்து அதை சக்தியிடம் கொடுத்தாள் துர்கா.

"இந்த ட்ரெஸ்ஸை சேஞ்ச் பண்ணிக்கோங்க. நான் உங்களை எந்த பஸ் ஸ்டாண்டில் விடனும்னு சொல்றீங்களோ அங்க விடுறேன்" என்றாள்

சக்தியை அந்த அறையில் தனியாய் விட்டு, அனைவரும் அங்கிருந்து வெளியேறினார்கள். அங்கிருந்த ஒரு நாற்காலியில் மாயாவின் புகைப்படத்தை பார்த்தபடி அமர்ந்தாள் சக்தி.

*பாவம் இந்த பொண்ணு. நிறைவேறாத ஆசையோட உயிரை விட்டுட்டா. ருத்ரனை ஆழமா காதலிச்ச பொண்ணு, சாகறதுக்கு முன்னாடி ஏதோ சில வார்த்தைகளை பேசிட்டு போயிருக்கா... என்ன நெனச்சு அதை எல்லாம் சொன்னாளோ... ருத்ரனோட குற்ற உணர்ச்சியை குறைக்க அப்படி அவ பேசியிருக்கலாம். எனக்கும் இந்த பெண்ணுக்கும் போன ஜென்மத்துல ஏதோ ஒரு தொடர்பு  இருந்திருக்கலாம்... * என்று எண்ணிய சக்தி விரக்தி புன்னகை சிந்தினாள்.

துர்கா கொடுத்த உடையை மாற்றியபடி, தீவிரமாய் ஆலோசித்தாள் சக்தி. அது அவளுடைய வாழ்க்கையை மாற்றி அமைக்கக்கூடிய முடிவை தரும் ஆலோசனையாக கூட இருக்கலாம்.

வெளியே வந்த சக்தி, துர்காவை பார்த்து புன்னகை புரிந்தாள்.

"போகலாமா சக்தி?" என்றாள் துர்கா உள்ளடங்கிய குரலில்.

சரி என்று தலையசைத்த சக்தி,

"உங்க கூட வேற யாரையாவது கூட்டிகிட்டு வாங்க. அந்தப் பக்கம் நீங்க தனியா வர வேண்டாம். அது பெண்களுக்கு பாதுகாப்பா இருக்கிற மாதிரி எனக்கு தெரியல" என்றாள்.

"இல்ல சக்தி, பஸ் ஸ்டாண்ட் சிட்டில தான் இருக்கு. அது எப்பவும் பிஸியா தான் இருக்கும்"

"நான் அந்த ரூட்டை பத்தி பேசல. நம்ம இப்போ வந்தோமே அந்த ரூட்டை பத்தி பேசுறேன்"

"அந்த பக்கம் போக வேண்டிய வேலை நமக்கு இல்ல" என்றாள் துர்கா.

"அப்படின்னா ஃபார்ம் ஹவுஸ்க்கு போக வேற வழி இருக்கா?" என்றாள் சக்தி.

"ஃபார்ம் ஹவுசுக்கா?" என்று முகம் சுருக்கினாள் துர்கா.

"ஆமாம் நான் அங்க தான் போறேன்" என்றாள் சக்தி.

"என்ன்னனது?" அதிர்ச்சி அலைகள் அந்த அறை எங்கும் படர்ந்தது.

"நான் பார்ம் ஹவுஸுக்கு திரும்பி போறேன்" என்றாள் சக்தி நிதானமாக.

"ஏன் சக்தி?"

"ஏன்னா, அவரைப் பத்தி முன்னாடி எனக்கு எதுவுமே தெரியாது. அவர் ஏன் என்னை கொண்டு வந்தார்ன்னு எனக்கு காரணம் புரியாம இருந்தது. ஏன் அவர் இப்படி எல்லாம் நடந்துக்கிறார்னு எனக்குத் தெரியாம இருந்தது" என்றாள் திகைப்பினால் ஊமையாய் நின்றிருந்த துர்காவை பார்த்து. மற்றவர்களின் நிலையும் துர்காவிடமிருந்து மாறுபடவில்லை.

"அப்படின்னா, நீங்க...?"

ஆம் என்ற தலையசைத்தாள் சக்தி.

"நான் அவர் கூடவே இருக்கிறதுன்னு முடிவு பண்ணி இருக்கேன்"

"ஆனா, அவனை கையாள்றது ரொம்ப கஷ்டம் சக்தி" என்ற துர்காவின் குரலில் நிஜ கரிசனம் தெரிந்தது.

"நான் அவர் வீட்டுல இருந்து தப்பிச்சிட்டேன்னு தெரிஞ்சா, அவர் என்ன செய்வார்?" என்றாள் சக்தி.

பதில் கூறாமல் தலை குனிந்தாள் துர்கா. அதன் பிறகு ருத்ரனின் நிலையை அவளால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. அதை யோசிக்கும் தைரியமே அவளுக்கு வரவில்லை.

"அவரு மோசமான... மூர்க்கமான நிலைக்குப் போவாரு" என்றான் பரமேஸ்வரன் தயங்கியபடி.

"உன்னை தீவிரமா தேட தொடங்குவான்" என்றார் பாட்டி.

"உன்னை கண்டுபிடிக்கிற வரைக்கும் ஓயவே மாட்டான்" என்றார் அபிராமி.

"அவரால என்னை கண்டுபிடிக்க முடியாதுன்னு உங்களால நிச்சயமா சொல்ல முடியுமா?" என்றாள் சக்தி.

அந்த கேள்விக்கு அவர்களிடத்தில் பதில் இல்லை. ஏனென்றால், என்றாவது ஒரு நாள் நிச்சயம் அவளை கண்டுபிடித்தே தீருவான் ருத்ரன் என்று அவர்களுக்கு தெரியும். அதுவும், இப்பொழுதெல்லாம் அவனது மூளை, மிக துரிதமாகவும், நுட்பத்துடனும் வேலை செய்கிறது. அவன் பிரச்சினைகளை கையாளும் விதமே ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கிறது.

"ஆனா, இது எங்களுடைய பிரச்சனை சக்தி. நீங்க எதுக்காக அதுல வந்து மாட்டிக்கணும்?" என்றாள் துர்கா.

"நான் சேலத்தை தவிர வேற எங்க போக முடியும்? சேலத்துக்கு போனா, நடராஜனும் அவனோட குடும்பமும் என்னை நிம்மதியா இருக்க விடவே மாட்டாங்க. அவங்களுக்கு என்னோட சொத்தும் என்னோட பணமும் தேவை. அதேநேரம், சேலத்தை தவிர வேற எங்க போனாலும் என்னால பாதுகாப்பா இருக்க முடியுமா? இந்த சமுதாயத்தை விட, உங்க தம்பி எவ்வளவோ மேல். அவர் கூட நான் பாதுகாப்பா இருப்பேன். நான் இதை அவருக்காகவோ, உங்க குடும்பத்துக்காகவோ மட்டும் செய்யல. எனக்காகவும் தான் செய்றேன்"

"அவனோட மனநிலை நிலையா இருக்கும்னு சொல்ல முடியாது... அவன் எப்போ எப்படி மாறுவான்னு தெரியாது"

"நான்... நான் பார்த்துக்கிறேன்..."

"எப்படி? நடக்கக் கூடாதது நடந்த பிறகு எப்படி பாத்துக்குவீங்க? ஏதாவது நடந்தா அதை நம்மால மாத்த முடியாது"

"ஒருவேளை,
நான் நடராஜை கல்யாணம் பண்ணி இருந்தா என்ன ஆகியிருக்கும்? கல்யாணத்துக்குப் பிறகு, அவன் எதுக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டான் அப்படிங்கற உண்மையான நோக்கம் எனக்கு தெரிய வந்திருந்தா என்னால என்ன செஞ்சிருக்க முடியும்? என்னால எதுவுமே செஞ்சிருக்க முடியாது... வேற வழியே இல்லாம, மனச கல்லாக்கிக்கிட்டு, ஏமாற்றத்தை சுமந்துகிட்டு என் வாழ்க்கையை நான் வாழ்ந்திருக்கணும்..."

மென்று விழுங்கினாள் துர்கா.

"ஆனா இப்போ, நான் சந்தோஷமா இருப்பேன். என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டவர், நான் அவர் கூட இருந்தா போதும் அப்படிங்கறதை தவிர வேற எதையும் என்கிட்ட எதிர்பார்க்கல. அவர் மனசுல இருக்கிற வேதனையில இருந்து, என்னால அவர் வெளியில வந்தா, அது எனக்கு திருப்தியை தரும். அதோட மட்டுமில்லாம, தன்னோட பிள்ளையோட நலனை விட, என் மேல் அக்கறை காட்ற ஒரு குடும்பம் எனக்கு கிடைக்கும்" என்றாள் மேன்மையான புன்னகையுடன்.

உணர்ச்சிவசப்பட்டு அவளை அணைத்துக் கொண்டார் பாட்டி.

" உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலம்மா... "

"கடைசியா ஒரு தடவை நல்லா யோசிச்சிக்கோங்க, சக்தி. ஏன்னா, இதுக்கு அப்புறம் உங்க முடிவை மாத்திக்குறதுக்கான சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைக்காமலேயே போகலாம்"

"நடராஜனை நாக்கை பிடுங்கிக்கிற மாதிரி கேள்வி கேட்கணும்னு தான் நான் சேலத்துக்கு போக நினைச்சேன். ஆனா இப்போ எனக்கு அது முக்கியமில்ல"

"நீங்க ஃபார்ம் ஹவுஸில் இருந்து தப்பிச்சு வந்திருக்கீங்க. அது நிச்சயம் ருத்ரனுக்கு ரொம்ப கோபத்தை உண்டாக்கியிருக்கும். அவன் இதுக்கப்புறம் உங்களை எப்பவும் நம்பவே மாட்டான். அவன் நம்பிக்கையை சம்பாதிக்குறது அவ்வளவு சுலபமா இருக்காது"

"நான் அவங்களுக்கு தூக்க மாத்திரையை கொடுத்து தூங்க வச்சுட்டு தான் வந்தேன். அதனால தான் என்னால அந்த வீட்டுல இருந்து காலை எடுத்து வெளியில வைக்க முடிஞ்சிது"

"தூக்க மாத்திரையா?" என்றாள் துர்கா.

"அவங்களுக்கா?" என்றான் பரமேஸ்வரன்.

"ஆமாம். தூக்க மாத்திரையை நான் சாம்பாரில் கலந்துட்டேன். அதை சாப்பிட்ட எல்லாருமே தூங்கிட்டாங்க"

"என்ன தூக்க மாத்திரை?"

"அதை நான் அவரோட டேபிளில் இருந்து தான் எடுத்தேன். ஒரு பாட்டில்ல இருந்தது"

துர்காவும் பரமேஸ்வரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பரமேஸ்வரன் ருத்ரனின் அறைக்குச் சென்று அங்கிருந்து ஒரு பாட்டிலை கொண்டு வந்தான்.

"இந்த மாத்திரையா?" என்றான்.

" ஆமாம், இதே தான்"

"எத்தனை மாத்திரை கலந்தீங்க?"

" பத்து"

" நல்லவேளை இந்த மாத்திரை ரொம்ப பவர்ஃபுல். அவங்க இன்னும் தூங்கிக்கிட்டு தான் இருப்பாங்க. ஏன்னா, இந்த மாத்திரையை போட்டா, ருத்ரனே நல்லா தூங்குவான்"

"இந்த பாட்டிலைக் கொண்டு போய் அவனோட பாட்டிலுக்கு பதிலா வச்சிடுங்க. ஏன்னா, அவன் நல்ல தூங்கி இருக்கான் இல்லையா, அவனுக்கு நிச்சயம் சந்தேகம் வரும். அந்த பாட்டிலை செக் பண்ணி பார்த்தா, நீங்க மாட்டிக்குவீங்க"

அந்த பாட்டிலை அவளிடம் இருந்து பெற்றுக் கொண்டாள் சக்தி.

"அங்க போனதும் நீங்களும் படுத்து தூங்குற மாதிரி நடிங்க. அப்ப தான் உங்க மேல அவங்களுக்கு சந்தேகம் வராது" என்றான் பரமேஸ்வரன்.

சரி என்று தலையசைத்தாள் சக்தி.

"நம்ம சக்திக்கு ஒரு ஃபோன் நம்பர்  தரணும். அது ரகசியமா இருக்கட்டும். சக்திக்கு ஏதாவது வேணும்னா அவங்க நம்மளை கூப்பிட வசதியா இருக்கும்"

"ஆனா ஏன்?" என்றாள் சக்தி.

"நம்மளுக்கு ஒருத்தரை ஒருத்தர் தெரியும்னு ருத்ரனுக்கு தெரியக்கூடாது. உங்களுக்கு ஏதாவது வேணும்னா எங்களுக்கு ஃபோன் பண்ணுங்க. நாங்க உங்களுக்காக உதவி செய்ய காத்துக்கிட்டு இருக்கோம்"

"சரி, கொஞ்ச நேரம் இருங்க. நான் போய் ஒரு சிம் கார்ட் வாங்கிட்டு வரேன்" என்று கிளம்பினான் பரமேஸ்வரன்.

"தயவுசெய்து ஜாக்கிரதையா இருங்க சக்தி" என்றாள் துர்கா.

சரி என்று தலையசைத்தாள் சக்தி.

"எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் நாங்க உங்களை இங்கே கூட்டிகிட்டு வர முயற்சி செய்றோம்" அவளுக்கு நம்பிக்கையூட்ட முயன்றாள் துர்கா.

பரமேஸ்வரன் புதிய சிம் கார்டுடன் வரும் வரை அவர்கள் காத்திருந்தார்கள். ருத்தரனுக்கு தெரியாத அந்த புதிய எண்ணை ஒரு சீட்டில் எழுதி அதை சக்தியிடம் கொடுத்தாள் துர்கா.

"இந்த நம்பர் என்னோடதுன்னு ருத்ரனுக்கு தெரியக்கூடாது. உங்க ஃபிரண்டு நம்பர்னு சொல்லிடுங்க"

"சரி"

" உங்க குரலைக் கேட்ட பிறகு தான் நாங்க பேசுவோம்"

அவர்கள் ஃபார்ம் ஹவுஸ் செல்ல தயாரானார்கள்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top