2 அந்த பெண்
2 அந்த பெண்...
மறுநாள் காலை
தூக்கத்திலிருந்து கண்விழித்த ருத்ரன், தன் கைகளை விரித்து உடலை நெட்டி முறித்தான். நல்ல ஆழ்ந்த தூக்கத்தை அவன் பெற்றிருந்தான்... தூக்க மாத்திரையின் உதவியால். அவனது மனநிலை பரிபூரணமாய் மாறி, அவன் குணமாகும் வரை, அவனுக்கு தூக்க மாத்திரையை வழங்கும்படி மருத்துவர் அறிவுறுத்தி இருந்தார். ஆனால் அவனுக்கு தெரியாமல். தன் அறையில் இருந்த தன்னுடைய கட்டிலில் தான் இருப்பதை பார்த்த பிறகு தான், முதல் நாள் தான் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டுவிட்டதை நினைவு கூர்ந்தான்.
இப்பொழுதும் கூட, ஒரே ஒரு வாக்கியம் தான் அவனது தலைக்குள் எதிரொலித்துக் கொண்டிருந்தது... அவளது கடைசி வார்த்தைகள்...!
*என்னோட சாவை நெனச்சு வருத்தப்படாத. இது, மாத்தி எழுத முடியாத விதி. உனக்காக பிறந்தவ உன்கிட்ட வந்து சேருவா. ஆனா அவ என்னை மாதிரி இருப்பா. நானே அவளை உன்கிட்ட கொண்டு வந்து சேர்ப்பேன்*
*அவள் என்னை போல் இருப்பாள்* என்று அவள் கூறியதன் அர்த்தம், என்னைப் போலவே அவளும் உன்னை மனதார நேசிப்பாள் என்பது. ஆனால் ருத்ரன் அதை பொத்தம் பொதுவாய் எடுத்துக் கொண்டான்.
அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆரம்ப காலத்தின் போது, கிட்டத்தட்ட அவளது வார்த்தைகளை அவன் மறந்து விட்டே இருந்தான். சமீபத்தில் தான், அவனுக்கு அது மீண்டும் நினைவுக்கு வந்தது. அதன் பிறகு தான் அவனது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. அதனால் தான் அவனை மருத்துவமனையில் இருந்து அனுப்பி விடலாம் என்ற முடிவிற்கு மருத்துவர்கள் வந்தார்கள். அவளைப் போலவே இருக்கும் ஒருத்தியை விரைவில் தான் சந்திப்போம் என்பதை உளமாற நம்பினான் ருத்ரன்.
கட்டிலை விட்டு கீழே இறங்கி, குளியலறைக்கு சென்றவன், வேண்டிய அளவிற்கு நேரம் எடுத்துக் கொண்டு, அவசரம் காட்டாமல் நிதானமாய் குளித்து முடித்தான். இரண்டு வருடத்திற்கு பிறகு தனது அறையில் குளிக்கிறானே... குளித்துவிட்டு புத்துணர்ச்சியுடன் வெளியே வந்தான்.
ஜன்னல் வழியாக தனது வீட்டு தோட்டத்தை ஏறிட்டவன், அங்கிருந்த புத்தம் புது மலர்களை பார்த்து புன்னகை பூத்தான். அப்பொழுது அவனது அறையின் கதவை தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்தவன், அவனது மாமா பரமேஸ்வரன், தாராள சிரிப்புடன் நின்றிருந்ததை பார்த்தான்.
"குட் மார்னிங் மச்சான்"
"குட் மார்னிங் மாமா"
"நான் உள்ள வரலாமா?"
"கேக்கணுமா?" என்று அவனுக்கு வழி விட்டான் ருத்ரன்.
பரமேஸ்வரன் உள்ளே நுழைய, தேனீர் குவளைகளுடன் அவனை பின் தொடர்ந்து உள்ளே வந்தான் அவர்களது வேலையாள் பசுபதி.
"அதை வச்சுட்டு போ, பசுபதி" என்றான் பரமேஸ்வரன்.
தேனீர் குவளைகளை மேஜை மீது வைத்து விட்டு சென்றான் பசுபதி. ஒரு குவளையை எடுத்து ருத்ரனை நோக்கி நீட்டினான் பரமேஸ்வரன்.
"தேங்க்ஸ் மாமா" என்று அதை அவனிடமிருந்து பெற்றுக் கொண்டான் ருத்ரன்.
"ராத்திரி நிம்மதியா தூங்கினீங்களா?"
"ஓ எஸ்" என்றான் தேனீரை பருகியபடி ருத்ரன்.
"உங்க அக்கா, அவளோட வேண்டுதலை நிறைவேத்த, சேலத்துல இருக்கிற தர்காவுக்கு போகலாம்னு நினைச்சிகிட்டு இருந்தா..."
"வேண்டுதலா? எதுக்கு?"
"போன வருஷம் ஒரு கல்யாணத்துக்காக நானும் உங்க அக்காவும் சேலம் போயிருந்தோம். அங்க எனக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு, அப்போ வேண்டிக்கிட்டா"
"அய்யய்யோ" என்ற போது அவனது முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.
"இந்த வாரம், அதுக்காக சேலம் போகலாம்னு நினைசிக்கிட்டு இருந்தோம். உங்களுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்ல. நீங்க எங்க கூட வர மாட்டீங்க..."
ருத்ரனின் முகத்தில் ஆழமான யோசனை படர்ந்தது.
"ரெண்டு வருஷம் கழிச்சு வீட்டுக்கு வந்திருக்கிற உங்களை விட்டுட்டு வர யாரும் ஒத்துக்க மாட்டாங்க. அதனால உங்க அக்காவும் வர மாட்டா. ப்ரோக்ராமை கேன்சல் பண்ணிடுவா. உங்களுக்கு தான் தெரியுமே நீங்கன்னு வந்துட்டா அவ யாரை பத்தியும் கவலைப்பட மாட்டான்னு..."
ருத்ரனுக்கு தெரியும், பரமேஸ்வரன் மிகைப்படுத்தி கூறவில்லை என்று.
"அப்படின்னா நானும் உங்க கூட வரேன்" என்றான் ருத்ரன்.
நிம்மதிப் பெருமூச்சு விட்டான் பரமேஸ்வரன். அவனுக்கு தெரியும், தன் அக்காவிற்கு என்றால் நிச்சயம் ருத்ரன் ஒப்புக் கொள்வான் என்று.
"அக்காவுக்கு நான் எப்படி முக்கியமோ, அதே மாதிரி எனக்கும் அவங்க ரொம்ப முக்கியம். அவங்க எனக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், வேண்டுதலை நிறைவேத்தாம போனா, அவங்க பெரிய மன உளைச்சலுக்கு ஆளாவாங்க. ஏன்னா, அது நீங்க சம்பந்தப்பட்ட விஷயம்" தன் செயலுக்கு தெள்ளத் தெளிவான விளக்கம் கொடுத்து அவனை திகைப்புறச் செய்தான் ருத்ரன்.
"அப்படின்னா, நாளைக்கு நம்ம கிளம்ப தேவையான ஏற்பாடுகளை செய்யட்டுமா?" என்று அவனிடம் அனுமதி கேட்டு, அவனை உயர்ந்தவனாய் உணரச் செய்தான் பரமேஸ்வரன்.
"யா..."
"தேங்க்யூ ருத்ரா, உங்க அக்காவோட பிணாத்தல்ல இருந்து நீங்க என்னை காப்பாத்திட்டீங்க" என்று சிரித்தான் பரமேஸ்வரன்.
லேசாய் புண்முறுவலித்தான் ருத்ரன். தன்னை சேர்ந்தவர்களுடைய சந்தோஷத்தை தவிர வேறு என்ன வேண்டும் அவனுக்கு?
தரைத்தளம் வந்த பரமேஸ்வரனை அனைவரும் எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
"அவரும் நம்ம கூட வரேன்னு சொல்லிட்டாரு"
"நிஜமா அவன் ஒத்துக்கிட்டானா?" என்றாள் துர்கா.
"ஆமாம். அவரோட அக்காவுக்காக ஒத்துக்கிட்டாரு"
"கோட்டை மாரியம்மனுக்கு நன்றி" தன் குலதெய்வத்தை நினைவு கூர்ந்தாள் துர்கா.
"எல்லாரும் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவர், பாக்க நார்மலா தான் இருக்காரு அப்படிங்கறத்துக்காக அவர் நார்மல் ஆயிட்டார்னு அர்த்தம் இல்ல." எச்சரித்தான் பரமேஸ்வரன்.
அனைவரும் அதை ஏற்றுக் கொண்டு தலையசைத்தார்கள்.
"நம்ம அவனை கவனிக்கிறோம்னு அவனுக்கு தெரியாத விதத்துல நாங்க ஜாக்கிரதையா இருப்போம்" என்றார் சித்தி அபிராமி.
"சரி, நாளைக்கு தேவையான ஏற்பாடுகளை நான் கவனிக்கிறேன்"
"நாளைக்கேவா போறோம்?" என்றார் பாட்டி திரிபுரசுந்தரி.
"அவருக்கு மனசு மாறுரதுக்கு முன்னாடி நம்ம கிளம்பி போகணும்னு நினைக்கிறேன்... "
"அவனோட முடிவை அவன் எப்பவும் மாத்திக்கவே மாட்டான்னு உங்களுக்கு தெரியாதா?" என்றாள் துர்கா.
"தெரியும். அவர் முடிவை அவர் மாத்திக்க மாட்டார் தான். ஆனா, அவரோட மனநிலை இப்போ எப்படி இருக்குன்னு நம்மால சொல்ல முடியாது இல்லையா?"
அனைவரும் ஒப்புக் கொண்டார்கள்.
அப்பொழுது முழுவதும் தயாரான நிலையில், எப்பொழுதும் போலவே கோட் அணிந்து வந்த ருத்ரனை அனைவரும் வியப்புடன் பார்த்தார்கள்.
"நீ எங்கயாவது போறியா, ருத்ரா?" என்றாள் துர்கா.
"வேற எங்க? ஆஃபீசுக்கு தான்..."
"ஆஃபீஸுக்கா?"
"ஆமாம்..." என்று அநாயாசமாய் தோள்களை குலுக்கினான் ருத்ரன்.
"தட்ஸ் கிரேட். போயிட்டு வாங்க" என்ற பரமேஸ்வரன், அமைதியாய் இருக்கும்படி துர்காவுக்கு சைகை செய்தான்.
"இன்னைக்கு ஒரு நாள் அவன் ரெஸ்ட்ல இருப்பான்னு நினைச்சேன்" என்று சமாளித்தாள் துர்கா.
"நான் ரெஸ்ட்ல இருந்து அலுத்து போயிட்டேன் கா"
"சரி.. போயிட்டு சீக்கிரம் வந்துடு" என்றாள் துர்கா.
"சரி, நீங்க இங்க தானே இருப்பீங்க?"
அவனுக்கு பதில் கூறாமல் பரமேஸ்வரனை ஏறிட்டாள் துர்கா.
"நாங்க இங்க தான் இருப்போம்" என்றான் பரமேஸ்வரன்.
"சரி. சிவா எங்க? அவன் வீட்ல இல்லையா?"
"அவன் ராத்திரி வீட்டுக்கு வரல. ஏதோ ஒரு கேஸ்ல பிசியா இருக்கான் போலிருக்கு" என்றார் சித்தி.
"இன்னும் அவன் டிடெக்டிவ் வேலையை பார்த்துக்கிட்டு தான் இருக்கானா?"
"ஆமாம், அதோட, நம்ம ஆபீஸ் வேலையையும், தியாகு, விசுவோட சேர்ந்து பாத்துக்குறான். இன்னைக்கு ஆபீஸ்ல ஒரு மீட்டிங் இருக்கிறதுனால, விசுவும், தியாகுவும் சீக்கிரம் கிளம்பிட்டாங்க. சிவா நேரா அங்க வந்துடுறேன்னு சொல்லிட்டான்"
ருத்ரனும், சிவாவும் இரட்டையர்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு முக ஒற்றுமை உடையவர்கள் அல்ல. அவர்கள் இருவருக்கும், நிறைய உருவ வேற்றுமை இருந்தது. தன் நண்பனுடன் இணைந்து ஒரு துப்பறியும் நிறுவனத்தை நடத்தி வந்தான் சிவா. ருத்ரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின், தனது குடும்ப வியாபாரத்தையும் சித்தப்பா மகன்களுடன் இணைந்து கவனித்து வந்தான். தியாகராஜனும், விஸ்வநாதனும், ருத்ரனின் சித்தப்பா, நீலகண்டனின் பிள்ளைகள்.
"சரி, நான் அவங்கள அங்க பாத்துக்குறேன்" என்று அங்கிருந்து நடந்தான் ருத்ரன்.
துர்காவின் முகத்தில் கலவரம் தெரிந்தது.
"கவலைப்படாத... சிவா அவனை பத்துக்குவான்" என்றான் பரமேஸ்வரன்.
தனது கைபேசியை எடுத்து சிவாவுக்கு ஃபோன் செய்தான் பரமேஸ்வரன்.
"ஹலோ மாம்ஸ்... ருத்ரா எப்படி இருக்கான்?" என்றான் சிவா.
"நல்லா இருக்காரு... உங்களைப் பத்தி கேட்டாரு"
"ஆஹா... நான் வீட்டுக்கு வர ட்ரை பண்றேன்"
"தேவையில்லை அவரே ஆஃபீசுக்கு வராரு"
"யாரு? ருத்ராவா?" என்றான் நம்ப முடியாமல்.
"ருத்ராவே தான்"
"அடப்பாவி" என்று பெருமூச்சு விட்டான் சிவா.
"அவரை கவனிச்சுக்கோங்க"
"நான் பாத்துக்குறேன்"
"உங்களுக்கு ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்..."
"அவனுக்கு எதையும் ஞாபகப்படுத்த கூடாது. நம்ம அவனை கவனிக்கறது அவனுக்கு தெரியக்கூடாது. அவ்வளவு தானே?"
"அவ்வளவு தான்"
"வேற ஏதாவது?"
"நாளைக்கு நாங்க எல்லாரும் சேலம் போகலாம்னு இருக்கோம். பெரிய மச்சானும் வரேன்னு சொல்லிட்டாரு. நீங்க..."
அவனது பேச்சை வெட்டி,
"சாரி மாம்ஸ்... நீங்க போயிட்டு வாங்க. எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு. தியாகுவும், விசுவும் உங்க கூட வந்தா, எனக்கு பிரச்சனை இல்ல. இங்க இருக்கிற வேலையை நான் பார்த்துக்கிறேன்."
"பெரிய மச்சான் உங்ககிட்ட அதை பத்தி சொல்லுவார்னு நினைக்கிறேன்"
"என்கிட்ட விடுங்க நான் பார்த்துக்கிறேன்" அழைப்பை துண்டித்தான் சிவா.
எஸ் ஆர் அலுவலகம்
ருத்ரனுக்காக காத்திருந்தான் சிவா. தன் அறைக்கு செல்லாமல் நேராக சிவாவின் அறைக்கு வந்தான் ருத்ரன். ருத்ரனை பார்த்த போது உணர்ச்சிவசப்படத் தான் செய்தான் அவன். ஆனால் பரமேஸ்வரனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து, தன்னை ஆஸ்வாஸ படுத்திக் கொண்டான்.
"எப்படி இருக்க ருத்து?"
"நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?"
"சூப்பர் கூல்..."
"உன்னோட ஜேம்ஸ் பாண்ட் வேலையெல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு?" என்ற ருத்ரன், அவனது மேஜையில் வைக்கப்பட்டிருந்த சில குறிப்புகளின் மீது தன் கண்களை ஒட்டினான்.
"வெற்றிகரமா சில குடும்பத்தை உடைச்சு, நிறைய கல்யாணத்தை நிறுத்தி, அப்படியே போய்கிட்டு இருக்கு..."
"என்னடா சொல்ற?"
"பின்ன என்ன? எவன் எங்களுக்கு உருப்படியான வேலை கொடுக்கிறான்? வரப்போற மாப்பிள்ளைக்கு கெட்ட சவகாசம் இருக்கா? வரப்போற மருமக ஒழுக்கமானவளா? தன் பொண்டாட்டிக்கு ஏதாவது கள்ளத்தொடர்பு இருக்கா? இந்த மாதிரி கேஸ் தானே வருது?" என்று அலுத்துக் கொண்டான் சிவா.
அப்போது அவனது மேஜையின் மீது இருந்த ஒரு குறிப்பை தன் கையில் எடுத்தான் ருத்ரன். அது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்த, நன்றாய் செயல்பட்ட துப்பறியும் நிறுவனங்களின் முகவரியும் தொலைபேசி எண்ணும் அடங்கிய குறிப்பு.
"தமிழ்நாட்டுல இத்தனை டிடெக்டிவ் ஏஜென்சிஸ் இருக்கா?" என்றான் ருத்ரன் ஆச்சரியமாய்.
"அதான் சொன்னேன்... குடும்பத்தை பிரிக்கவும், கல்யாணத்தை நிறுத்தவும் நாங்க தேவைப்பா..." என்று அவன் கூறியதை கேட்டு சிரித்தான் ருத்ரன்.
"நாளைக்கு நாங்க எல்லாம் சேலம் போறோம்"
"என்ன திடீர்னு?" என்றான் அவனுக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாததை போல.
"அக்காவுக்கு ஏதோ வேண்டுதல்லாம்..."
"ஓகே ஓகே... ஜாலியா போயிட்டு வாங்க. என்னை மட்டும் ஆளை விடுங்க"
"உன்னை பத்தி எல்லாருக்கும் தெரியும். அதனால உன்னை கூப்பிட மாட்டாங்க"
"எத்தனை நாள் ட்ரிப்?"
"ரெண்டு நாள்ன்னு நினைக்கிறேன்"
"நல்ல காலம்"
"ஏன்டா? "
"நீ ஆபீசுக்கு வர ஆரம்பிச்சிட்டா, நான் என் வேலையை நிம்மதியா பாப்பேன் இல்ல"
சிரித்தபடி அவன் அறையை விட்டு வெளியேறினான் ருத்ரன்.
ருத்ரனுடைய நிலையான மனநிலையை அவ்வப்போது பரமேஸ்வரனுக்கு தெரிவித்தபடி இருந்தான் சிவா. அவனது நிதானம் அவர்களுக்கு நிம்மதியை தந்தது.
மறுநாள்
ஒரு மணி நேர விமான பயணத்திற்கு பின் சேலம் சென்றடைந்தார்கள் அனைவரும். எந்த தொந்தரவும் இல்லை ருத்ரனின் தரப்பிலிருந்து. ஹோட்டல் அறைக்கு வந்து ஓய்வெடுத்து விட்டு, மாலை நேரத்தில் இரண்டு டாக்ஸிகளை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு, தர்காவிற்கு புறப்பட்டார்கள் அனைவரும்.
தன் தம்பிக்கான தனது வேண்டுதலை நிறைவேற்றினாள் துர்கா. தன் அக்காவின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை அமைதியாய் ரசித்தான் ருத்ரன். அவனது அக்காவும், தம்பியும் தான் அவனுக்கு எப்பொழுதுமே முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். அவர்களது சந்தோஷம் அவனுக்கு சந்தோஷத்தை அளித்தது. சந்தோஷமாய் தன் முகத்தை திருப்பிய அவனது முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட நபரின் மீது குத்திட்டு நின்றது. ஒரு பெண் ஆட்டோவில் ஏறிக் கொண்டிருந்தாள். அவள் அங்கிருந்து சென்று விடப் போகிறாள் என்பதை உணர்ந்து கொண்ட போது, அவனது கண்கள் விரிவடைந்தது. அந்த ஆட்டோவை நோக்கி தலை தெறிக்க ஓடத் துவங்கினான். அந்த ஆட்டோவும் நகரத் துவங்கியது.
"மாயா... மாயா..." என்று அழைத்தபடி அந்த ஆட்டோவின் பின்னால் ஓடினான் ருத்ரன்.
அந்த ஆட்டோ நிற்கவில்லை.அவனும் விட்டுவிடவில்லை. அவனது ஓட்டத்தின் வேகம் அதிகரித்தது. அந்த ஆட்டோ, பிரதான சாலையை அடைந்து, வேகமாய் செல்ல துவங்கியது, அவன் பிடித்து விட முடியாத அளவிற்கு. மூச்சு வாங்க அந்த ஆட்டோவை பார்த்தபடி, செய்வதறியாமல் நின்றான் ருத்ரன்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top