19 ருத்ரனின் வீட்டில் சக்தி

19 ருத்ரனின் வீட்டில் சக்தி

தன் முன்னாள் நின்றிருந்த பெண்ணை பார்த்த துர்கா, மலைத்து நின்றாள். அவள் யார் என்பதை யூகிப்பதில் அவளுக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. அவளுக்கு அதிர்ச்சி அளித்த விஷயம் என்னவென்றால், அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிக்கயிறு தான். அதற்கு என்ன அர்த்தம்? வேறொருவரின் மனைவியையா ருத்ரன் கவர்ந்து கொண்டு வந்து விட்டான்? அவன் மருத்துவரிடம் கூறிய வார்த்தைகள் அவளது நினைவுக்கு வந்தது.

*ஒருவேளை அவள் திருமணமானவளாக இருந்தால், அவளது கணவனை நான் கொன்று விடுவேன்* என்று அவன் கூறினான் அல்லவா?

என்ன காரியம் செய்து விட்டான் அவளது தம்பி? உண்மையிலேயே வேறு ஒருவரின் மனைவியையா கடத்திக் கொண்டு வந்திருக்கிறான்? அவன் ஏன் அப்படி செய்தான்? துர்காவின் மனம் என்னென்னவோ யோசிக்க துவங்கியது. அவளுக்கு எப்படி தெரியும், அந்த தாலியை சக்தியின் கழுத்தில் கட்டியது ருத்ரன் தான் என்று?

துர்காவின் எண்ணச் சங்கிலி அறுபட்டது, சக்தி அவளது காரின் கண்ணாடி கதவை தட்டிய போது. துர்கா அந்த கண்ணாடி கதவை கீழே இறக்கிவிட்டாள்.

"தயவுசெய்து என்னை சேலம் போற பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட முடியுமா?" என்றாள் சக்தி.

"சேலமா?"

"தயவுசெய்து எனக்கு ஹெல்ப் பண்ணுங்க மேடம். என்னுடைய வாழ்க்கையை காப்பாத்துங்க. என்னை ஒரு ராட்சசன் அவனோட வீட்ல அடைச்சு வச்சிருந்தான். நான் எப்படியோ கஷ்டப்பட்டு அவன்கிட்ட இருந்து தப்பிச்சு வந்திருக்கேன். தயவு செய்து என்னை இங்கிருந்து கூட்டிகிட்டு போயிடுங்க" என்றாள்.

அவள் ராட்சசன் என்று குறிப்பிட்டது யாரை என்பதை யூகிப்பதில் துர்காவுக்கு பெரிய சிரமம் ஒன்றும் இருக்கவில்லை.

"உங்களோட ஹஸ்பண்ட் சேலத்துல இருக்காரா? நீங்க இப்போ அவர்கிட்ட தான் போகணும்னு நினைக்கிறீங்களா?" என்று வேண்டுமென்றே கேட்டாள் துர்கா, சக்தியின் கழுத்தில் இருந்த தாலியை பார்த்தபடி.

"இல்லங்க... அந்த ராட்சசன் தான் இந்த தாலியை என் கழுத்தில் கட்டிட்டான். அதனால தான் அவனை நான் ராட்சசன்னு சொல்றேன். தயவு செய்து என்னை இங்கிருந்து கூட்டிகிட்டு போங்க. ப்ளீஸ்..."

அதைவிட பெரிய அதிர்ச்சியை துர்கா இதற்கு முன் எப்பொழுதும் அடைந்ததில்லை. அந்த தாலியை அவளது கழுத்தில் கட்டியது ருத்ரனா? அப்படி என்றால், அவள் தன் தம்பியின் மனைவி.

அப்பொழுது, அந்தப் பெண்கள் இருவரும் எதிர்பாராத வகையில், பக்கத்தில் இருந்த புதரின் உள்ளே இருந்து இருவர் வெளியே வந்தனர். அவர்கள் சக்தியின் கரங்களை இருபுறமும் பற்றிக்கொண்டு, அவளை தங்களுடன் இழுத்துச் சென்றனர். அவர்களது பிடியிலிருந்து வெளியே வர சக்தி எவ்வளவு முயன்ற போதும் அது அவளால் இயலவில்லை. அவர்களது பிடி, உடும்பு பிடியாய் இருந்தது. அவளுக்கு கையை வலித்தது

"என் கையை விடுங்க" என்று குரல் எழுப்பினாள் சக்தி.

அவர்கள் ஏன் அவளை இழுத்துச் செல்கிறார்கள் என்று புரியாமல் இல்லை துர்காவுக்கு. அவளுக்கு பதற்றம் பற்றிக் கொண்டது. அந்த பெண் வேறு யாருமல்ல  அவளது தம்பியின் மனைவி. அவளை அந்த மனிதர்கள் இழுத்து செல்கிறார்கள்... அவளை காப்பாற்ற வேண்டிய கடமை அவளுக்கு இருக்கிறது. காரின் டேஷ் போர்டை திறந்து அதில் ஏதாவது இருக்கிறதா என்று தேடிய போது, அதில் ஒரு சிறிய கத்தி கிடைத்தது. அதை எடுத்துக்கொண்டு, காரை விட்டு கீழே இறங்கி அவர்களை நோக்கி ஓடினாள் துர்கா.

சக்தியை இழுத்துச் சென்ற அந்த மனிதர்கள், அவளை தரையில் படுக்க வைத்து, அவளது கையையும், காலையும் கெட்டியாய் பற்றிக் கொண்டார்கள். அவளது காலை பற்றி இருந்த மனிதனின் முதுகில் கத்தியால் ஒரு கோடு போட்டாள் துர்கா. அவன், கதறிக்கொண்டு சக்தியின் காலை விடுவித்தான். சக்தியின் கரத்தைப் பற்றிக் கொண்டிருந்த மனிதன், துர்காவை நோக்கி முன்னேறினான். மண்ணை வாரி அவர்களது கண்களில் தூவினாள் சக்தி. அவர்கள் கண்களை திறக்க போராடிக் கொண்டிருந்த அந்த சில நொடிகளில், சக்தியும், துர்காவும் காரை நோக்கி விரைந்தார்கள். காலதாமதம் செய்யாமல்,  அங்கிருந்து காரை கிளப்பிக் கொண்டு சென்றாள் துர்கா.

மூச்சு வாங்க இருக்கையில் சாய்ந்த சக்தி, தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டாள். அவளிடம் ஒரு தண்ணீர் பாட்டிலை நீட்டினாள் துர்கா. அவளிடம் இருந்து அதைப் பெற்று, தனது தொண்டையை ஈரப்படுத்திக் கொண்டாள் சக்தி.

"ரொம்ப நன்றிங்க. நீங்க என் உயிருக்கு மேலான விஷயத்தை காப்பாத்தி கொடுத்திருக்கீங்க. இன்னைக்கு மட்டும் ஏதாவது நடந்திருந்தா, நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன்" என்றாள் சக்தி நன்றியுடன்.

ஒன்றும் கூறாமல் காரை ஓட்டிச் சென்றாள் துர்கா.

"நான் சாகுற வரைக்கும் உங்களை மறக்க மாட்டேன்" என்று கூறிய சக்தியை பார்த்து லேசாய் புன்னகைத்தாள் துர்கா.

"என்னை பஸ் ஸ்டாண்டில் விட்டுடுங்க"

சரி என்று தலையசைத்த துர்கா,

"உங்க டிரஸ் கிழிஞ்சிருக்கு. அதை மாத்திக்கிட்டு அப்புறமா சேலத்துக்கு போங்க" என்றாள் அக்கறையுடன்.

அவளுக்கு சக்தியின் மீது ஏன் அக்கறை இருக்காது? அவள், அவளது தம்பியின் மனைவியாயிற்றே...!

"ஆனா என்கிட்ட வேற டிரஸ் இல்லையே..." என்றாள்" அந்த கிழிசலை தனது துப்பட்டாவால் மறைத்தபடி.

"நான் உங்களுக்கு கொடுக்கிறேன். கவலைப்படாதீங்க" என்றாள் துர்கா.

"ரொம்ப நன்றிங்க"

"யாரையோ ராட்சசன்னு சொன்னிங்களே... யாரது?" என்றாள் துர்கா.

"அவன் யாருன்னே எனக்கு தெரியலைங்க. சேலத்துக்கு வந்து என்னை கல்யாணம் பண்ணிக்க முயற்சி பண்ணான். அப்படி நடக்கலன்னு தெரிஞ்ச உடனே, நான் கல்யாணம் பண்ணிக்க இருந்தவரை பழி சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பிட்டு, என்னை இங்க கடத்திக்கிட்டு வந்துட்டான்"

"அப்புறம்?"

"என்னை சென்னைக்கு கொண்டு வந்துட்டான். அவன் கிட்ட இருந்து நான் தப்பிச்சு போகணும்னு முயற்சி பண்ண போது தான் இந்த தாலியை என் கழுத்தில் கட்டிட்டு மிரட்டினான்" என்றாள் பல்லை கடித்துக் கொண்டு கோபமாக.

"மிரட்டினானா? என்ன மிரட்டினான்?"

"இதை நான் கழட்டினா, அன்னிக்கு ராத்திரி எங்களுக்கு முதல் இரவா இருக்கும்னு மிரட்டினான்" என்றாள் மேலும் கோபத்துடன்.

"அப்படின்னா அவன் இன்னும் உங்களை தொடலையா?" என்றாள் துர்கா.

"இல்ல..." என்று அவள் கூற,

"என்னால இதை நம்ப முடியல" என்றாள் துர்கா.

"ஏன் நம்ப முடியல?"

"நீங்க அவனை ராட்சசன்னு சொன்னீங்க. உண்மையிலேயே அவன் ராட்சசனா இருந்திருந்தா, அவன் எப்படி உங்களை தொடாம இருந்திருப்பான்?"

*சுருக்* என்று குத்தியது சக்திக்கு. துர்காவின் மீதிருந்த தன் பார்வையை, சாலையின் பக்கம் திருப்பினாள்.

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்க கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணாங்களே, அவங்க தான் ராட்சசங்க... ஜெண்டிலா நடந்துக்குற ஒருத்தன் எப்படி ராட்சசனா இருக்க முடியும்?"

வயடைத்து போனாள் சக்தி.

"உங்க கழுத்துல தாலி கட்டின பிறகும் உங்களை அவன் தொடல... என்னால இதை நம்ப முடியல"

அவளை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சக்தி. துர்கா உணர்த்திய உண்மை அவளை அடித்து தான் போட்டது.

"உங்க பேரை நான் தெரிஞ்சிக்கலாமா?"

"சக்தி..."

"என் பேர் துர்கா"

"ஓ..."

"எதுக்கு அவரு உங்களை கடத்திக்கிட்டு வந்தார்?" என்றாள் துர்கா.

தன் தலையை இட வலமாய் அசைத்த சக்தி,

"எனக்கு நிச்சயமா தெரியல... சில ரௌடிங்க கிட்ட இருந்து அவன் என்னை காப்பாத்தினான். ஆனா, அந்த ரௌடிங்களை அனுப்புனதே அவன் தான். அதை அவனே சொன்னான்"

"ஓ... உங்க கிட்ட நல்ல பேர் வாங்கவா?"

"இல்ல... நான் கல்யாணம் பண்ணிக்க போற ஆளு எவ்வளவு கோழைன்னு நான் தெரிஞ்சிக்கணும்னு..."

"எனக்கு புரியல"

"அந்த ரௌடிங்க என்னை சுத்தி வளைச்சப்போ, என்னோட ஃபியான்ஸியும் என்னோட தான் இருந்தான்"

"ஓ... அவர் உங்களை காப்பாத்த முயற்சி செய்யலையா?"

"இல்ல... என்னை விட்டுட்டு ஓடிட்டான்"

"அட கடவுளே... அவனுக்கு அந்த ரௌடிங்க எவ்வளவோ மேல்"

அமைதி காத்தாள் சக்தி.

"இப்போ எதுக்கு நீங்க சேலம் போறீங்க? உங்க அம்மா, அப்பா அங்க இருக்காங்களா?"

"இல்ல... எனக்குன்னு யாரும் இல்ல. போன வருஷம் எங்க அப்பாவும் அம்மாவும் ஒரு அக்சிடண்ட்ல இறந்துட்டாங்க"

"ஐ அம் சாரிங்க"

"பரவாயில்லங்க... நான் அந்த நடராஜை ஒரு பிடி பிடிக்க போறேன்" என்றாள் கோவமாய்.

"நீங்க அவனை ஏன் பிடிக்கணும்? அதனால உங்களுக்கு என்ன பிரயோஜனம்? உங்களுக்கு என்ன கிடைக்க போகுது?

"மனசு திருப்தி..."

"உங்களுக்கு யாரும் இல்லைனு சொன்னிங்க. யாரும் இல்லாம இந்த உலகத்துல வாழுறது ரொம்ப கஷ்டம் சக்தி. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, உங்க கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணாங்களே, அதே மாதிரி மறுபடியும் நடக்காதுன்னு உங்களால சொல்ல முடியுமா? இந்த உலகத்தில் இருக்கிற எல்லோரும் உங்க புருஷனை மாதிரி உங்களை தொடாம இருப்பாங்கன்னு நீங்க நினைக்கிறீங்களா?"

பதட்டத்துடன் நகம் கடித்தாள் சக்தி. துர்கா சொல்வது உண்மை தான். ஒருவேளை யாராவது அவளிடம் அப்படி நடந்து கொள்ள முயன்றால் என்ன செய்வது? நடராஜனை கூட நம்ப முடியாது. அவனுக்கு தேவையெல்லாம் பணம் தான். அவன் தான் ருத்ரனிடமே பணம் கேட்டவனாயிற்றே... குழப்பமடைந்தாள் சக்தி.

அப்பொழுது, அவர்களது கார், ஒரு மிகப்பெரிய பங்களாவில் நுழைந்தது. அந்த பங்களாவின் தோற்றத்தை பார்த்த சக்தி அசந்து போனாள்.

"உள்ள வாங்க சக்தி" என்றாள் துர்கா.

காரை விட்டு கீழே இறங்கினாள் சக்தி.

"நீங்க உங்க டிரஸ்ஸை இங்க சேஞ்ச் பண்ணிக்கலாம்"

"இது உங்களுடைய வீடா?"

"இல்ல, என் தம்பியோட வீடு"

"அப்படிங்களா?" என்று தயங்கினாள் சக்தி.

"ஒன்னும் கவலைப்படாதீங்க. என் தம்பி இங்கே இல்ல" என்றாள் துர்கா.

"அப்படிங்களா?" என்றபடி துர்காவுடன் வீட்டின் உள்ளே நுழைந்தாள் சக்தி.

சக்தியை பார்த்த பாட்டி திரிபுரசுந்தரியும், சித்தி அபிராமியும் அதிர்ச்சியுடன் எழுந்து நின்றார்கள். மடியில் இருந்து கீழே இறங்கிய பரமேஸ்வரனும் அப்படியே நின்றான். மூவரும் சிலையாகி போனார்கள்.

"இவங்க என்னோட பாட்டியும், சித்தியும்" என்று அவர்களை அறிமுகம் செய்து வைத்தாள் துர்கா.

"வணக்கம் பாட்டி... வணக்கம் மா" என்றாள் சக்தி.

"இவங்க என்கிட்ட ஹெல்ப் கேட்டாங்க" என்று அவர்களுக்கு ஏதோ ஜாடை காட்டிய துர்கா,

"அவங்களோட ராட்சச புருஷன்கிட்ட இருந்து தப்பிச்சி சேலம் போகணுமாம்"

புருஷனா? மூவரும் அதிர்ந்தார்கள்.

"புருஷனா?" என்றான் பரமேஸ்வரன்.

"ஆமாம். அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு" என்றாள் துர்கா.

பாட்டியின் விழிகள் குலமாயின. சக்தியின் அருகில் வந்த அவர், அவளது கன்னத்தை தொட்டு,

"அப்படி சொல்லாதடா கண்ணு... எங்க புள்ள ராட்சசன் இல்ல" என்றார்.

"அய்யய்யோ பாட்டி, நான் உங்க பிள்ளையை சொல்லல..."

அவளது பேச்சை தடுத்து,

"எங்க பிள்ளை தான் உங்களோட புருஷன், ருத்ரன். நான் அவனோட அக்கா" என்றாள் துர்கா.

இங்கே என்ன நடக்கிறது என்பது போல, திகைத்து நின்றாள் சக்தி. இது ருத்ரனின் வீடா...? அவனது குடும்பமா...?

அவளது கையை பிடித்து ஒரு குறிப்பிட்ட அறைக்கு அவளை அழைத்து சென்றாள் துர்கா. அனைவரும் அவர்களை பித்தொடர்ந்தர்கள்.

அந்த அறையில் இருந்த ஒரு அலமாரியை திறந்தாள் துர்கா. அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு புகைப்படத்திற்கு மாலை சூடப்பட்டிருந்தது. அந்த புகைப்படத்தை பார்த்த சக்தி, அதிர்ந்து நின்றாள். ஏனென்றால் அது அவளுடைய புகைப்படம். இல்லை... அது அவளுடைய புகைப்படம் இல்லை. அந்த புகைப்படத்தில் இருந்த பெண், மிகவும் மாடர்னாக இருந்தாள். ஆனால் சக்தியை போலவே அச்சு அசலாய் இருந்தாள். அந்த புகைப்படத்தின் கீழே, *மாயா* என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top