18 சக்தியின் திட்டம்
சென்னையை வந்தடைந்த சிவா, நேராக தன் வீட்டிற்கு தான் போனான். அவன் வந்த நேரம், துர்காவும் பரமேஸ்வரனும் காபி குடித்துக் கொண்டிருந்தார்கள். வழக்கறிஞரான பரமேஸ்வரன், நீதிமன்றம் செல்ல தயாராகி இருந்தான்.
"பெரிய மச்சானை கண்டுபிடிச்சிட்டீங்களா?" என்றான் பரமேஸ்வரன்.
"ஆமாம் கண்டுபிடிச்சிட்டேன்"
"இப்போ எங்க இருக்கார் அவர்? எப்படி இருக்காரு?"
அவர்கள் பேசுவதை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள் துர்கா.
"அவன் எப்படி இருக்கான்னு எனக்கு தெரியல. நான் இன்னும் அவனை மீட் பண்ணல"
அதைக் கேட்ட துர்காவின் முகம் தொங்கி போனது.
"ருத்ரா சென்னையில் தான் இருக்கான்" என்றான் சிவா அமைதியாய்.
"சென்னையிலயா?" என்றாள் துர்கா, தாங்க முடியாத சந்தோஷத்துடன் நம்ப முடியாமல்.
"உங்களுக்கு எப்படி தெரியும்?" என்றான் பரமேஸ்வரன்.
"அவனுக்கு சேலத்துல கிடைச்ச புது நண்பர்கள் சொன்னாங்க. அத்தனை பேரும் ரௌடிங்க..." என்று பெருமூச்சு விட்டான் சிவா.
"புது நண்பர்களா? அதுவும் ரவுடிங்களா?" என்றான் பரமேஸ்வரன் நம்ப முடியாமல்.
ருத்ரன் யாரிடமும் ஆழமாய் நட்பு பாராட்டியதில்லை. அவன் அவ்வளவு எளிதாய் யாரையும் நண்பர்களாக ஏற்றுக் கொள்வதும் இல்லை. முக்கியமாய், திரைமறைவு வாழ்க்கை வாழும் மனிதர்களிடம் இருந்து அவன் விலகியே இருந்தான். இப்பொழுது அவர்களுக்கு கிடைத்திருக்கும் செய்தி மிகவும் புதிது. அதனால் தான் அதை அவர்களால் நம்ப முடியவில்லை.
"அந்த ரவுடியோட பேரு மகாதேவன். சொன்னா நம்ப மாட்டீங்க, அவனும் அவனோட கூட்டாளிகளும் ருத்ரனுக்காக எதையும் செய்ய தயாரா இருக்கானுங்க. அவனுக்காக சாகுறானுங்க..."
"நம்பவே முடியலையே" என்றான் பரமேஸ்வரன்.
"ஆமாம்... யாராலயும் நம்ப முடியாது. நான் ருத்ரனோட பேரை சொன்னப்போ, அவங்க முகம் மாறினதை நீங்க பார்த்திருக்கணும்... அந்த ரவுடிங்க முகத்துல அப்படி ஒரு சந்தோஷம்..."
"நெஜமாவா?" என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான் பரமேஸ்வரன்.
"ஆமாம் மாமா. வரவர, ருத்ரன் நம்ம கற்பனை பண்ணி பார்க்க முடியாத அளவுக்கு வேற லெவலுக்கு மாறிக்கிட்டு இருக்கான்"
"அப்படின்னா அவன் நார்மலா இருக்கான்னு தானே அர்த்தம்?" என்றாள் துர்கா.
"ரொம்ப அப்நார்மலான நார்மல்..." என்றான் சிவா.
ஐயோ என்று ஆனது துர்காவுக்கு.
"அவரு சென்னையில தான் இருக்காருன்னு உங்களுக்கு நிச்சயமா தெரியுமா?" என்றான் பரமேஸ்வரன்.
"ஆமாம். அவன் தங்கி இருந்த ஹோட்டல் ரூமை கூட, மகாதேவன் தான் அவனோட சார்பா காலி செஞ்சிருக்கான். சக்தி என்ற பெண்ணை தன்னோட தோளில் தூக்கிக்கிட்டு வந்து, கார்ல போட்டு சென்னைக்கு கொண்டு வந்திருக்கான்"
"சக்தியா? யார் அந்த பொண்ணு?" என்றான் பரமேஸ்வரன்.
"அவன் தர்காவுல பார்த்ததா சொன்ன பொண்ணா தான் இருக்கணும்" என்றாள் துர்கா.
"அதே பொண்ணு தான்" என்றான் சிவா.
"அந்தப் பொண்ணை அவரு கடத்திக்கிட்டா வந்திருக்காரு?" என்றான் பரமேஸ்வரன்.
அப்பொழுது தான் அவன் கூறியதன் அர்த்தம் புரிந்தது துர்காவுக்கு.
"என்ன்னனது?கடத்திக்கிட்டு வந்திருக்கானா?" என்றாள் திகிலுடன்.
"ஒரு பெண்ணை தூக்கிக்கிட்டு வர்றதுன்னா, வேற என்ன அர்த்தம்?" என்றான் சிவா.
"அந்த பொண்ண பத்தி ஏதாவது தெரிஞ்சுதா?" என்றாள் துர்கா.
"அந்தப் பொண்ணுக்கு ருத்ரன் மேல துளியும் விருப்பம் இல்ல போல இருக்கு" என்றான் பரமேஸ்வரன்.
"அவங்களுக்கு அவன் மேல விருப்பம் இருந்தா, அவங்களை ஏன் அவன் தோளில் தூக்கி போட்டுக்கிட்டு வர போறான்?" என்றான் சிவா.
"எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க. போலீஸ் அவனை அரெஸ்ட் பண்ணிட்டா என்னங்க செய்யறது?" என்றாள் துர்கா.
"நிச்சயமா அரெஸ்ட் பண்ணுவாங்க" என்றான் சிவா கூலாக
"அவனுக்கு ஒரு முன் ஜாமின் வாங்கி வையுங்க" என்றாள் தெஞ்சலாய் துர்கா.
மென்மையாய் அவள் தோளை 1தட்டியபடி, சரி என்று தலையசைத்தான் பரமேஸ்வரன்.
"இந்த மாதிரியான முன்னேற்பாடு மட்டும் போதாது கா. நம்ம அவனை உடனடியா கண்டுபிடிச்சே ஆகணும்" என்றான் சிவா.
"அவர் எங்க இருக்காருன்னே தெரியலையே... இவ்வளவு பெரிய சென்னைல நம்ம அவரை எப்படி தேடுறது?"
எதையோ யோசித்த துர்கா,
"அவன் அவனோட ஃபார்ம் ஹவுஸ்ல தான் இருப்பான்னு நினைக்கிறேன்" என்றாள்.
"நீ சொல்றது ரொம்ப சரி துர்கா... அவர் அங்க தான் இருக்கணும்" என்றான் பரமேஸ்வரன்.
"அவ்வளவு சுலபமா நம்ம யூகிக்க கூடிய இடத்துல அவன் இருப்பான்னு எனக்கு தோணல" என்றான் சிவா.
"ஒருவேளை அவர் அங்க இருந்தா?அந்த வீடு அவருடைய கோட்டை... அங்க இருக்கிற வேலைக்காரங்க, அவர் பேச்சை மட்டும் தான் கேட்பாங்க. அவரை மீறி, யாரும் அங்கிருந்து வெளியே போகவும் முடியாது... உள்ள நுழையவும் முடியாது" என்றான் பரமேஸ்வரன்.
"ஆமாம், சிவா மாமா சொல்றது சரி தான். அவன் பர்மிஷன் கொடுக்காத வரைக்கும், யாரையும் உள்ள விட மாட்டாங்க... என்னையும் சேர்த்து தான் சொல்றேன்" என்றாள் துர்கா.
"அப்படியா சொல்றீங்க?" என்றான் சிவா.
"அவரோட ஃபார்ம் ஹவுஸை விட ஒரு பாதுகாப்பான இடம், அவருக்கு சென்னையில் இருக்கவே முடியாது" என்றான் பரமேஸ்வரன்.
"நம்ம அதை செக் பண்ணி பாக்குறதுல என்ன பிரச்சனை?" என்றாள் துர்கா.
"சரி வாங்க போகலாம்" என்றான் சிவா.
"இல்ல... நம்மளை அங்க பார்த்தா அவரோட கோபம் கட்டுக்கடங்காம போகும்"
"அப்படின்னா நம்ம என்ன செய்றது?" என்றான் சிவா.
"மாட்டிக்க கூடாது அப்படிங்கறதுல அவரு ரொம்ப கவனமா இருப்பாரு. அவர் நினைச்சது நடக்காம போனாலோ, அவர் தோத்துப் போனதா உணர்ந்தாலோ, அவரோட சீற்றம் அதிகமாகும். நம்ம கிட்ட இருந்து மறுபடியும் தப்பிச்சு போகத்தான் பாப்பாரு. அப்படி நடக்க நம்ம விடக்கூடாது"
"அவனை இப்படியே இருக்கவும் நம்மளால விட முடியாது" என்றான் சிவா.
"ஃபார்ம் ஹவுஸ்க்கு நம்ம துர்காவை அனுப்பி வைக்கலாம். அவளால மட்டும் தான் அவரை கண்ட்ரோல் பண்ண முடியும்" என்றான் பரமேஸ்வரன்.
சரி என்று தலையசைத்த சிவா, அவன் கூறுவது உண்மை தான் என்பதை உணர்ந்து இருந்தான்.
"நான் நிச்சயம் போறேன்" என்றாள் துர்கா.
"நம்ம அவசரப்படக் கூடாது. திட்டம் போட்டு, யோசிச்சு தான் செய்யணும். அவரோட கஸ்டடியில ஒரு பொண்ணு இருக்கா. நம்ம செய்யற எந்த செயலும் அந்த பொண்ணை பாதிக்க கூடாது" என்றான் பரமேஸ்வரன்.
சரி என்று தலையசைத்தாள் துர்கா.
ஃபார்ம் ஹவுஸ்
கோபம், ஏமாற்றம், அதிருப்தி, எரிச்சல் எல்லாம் சேர்ந்து சக்தியை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. நட்ராஜ் செய்த காரியத்தை அவளால் தாங்கவே முடியவில்லை. அவன் இவ்வளவு கீழ்த்தரமானவனாக இருப்பான் என்பதை அவள் எதிர்பார்க்கவில்லை. அவளிடமிருந்து விலகி இருக்க, அவன் ருத்ரனிடம் பேரம் பேசினான். எவ்வளவு அற்பன் அவன்! இவ்வளவு கீழ்தரமான காரியத்தை செய்ய அவன் எப்படி துணிந்தான்? காதல் என்ற பெயரில் அவன் தன்னிடம் காட்டியதெல்லாம் காதல் அல்ல. தனது சொத்தையும்,
பணத்தையும் அடைவதற்காக அவன் ஆடிய ஒரு கேவலமான நாடகம். அவன் செய்த காரியத்திற்கான பலனை அவன் அனுபவித்து தீர வேண்டும். அவனை அவ்வளவு சுலபத்தில் விட்டு விடக்கூடாது என்று நினைத்தாள் சக்தி.
அவளுடைய வாழ்க்கை மட்டும் ஏன் இவ்வளவு கடினமாய் உள்ளது? அவளுக்கு மட்டும் நல்ல மனிதர்களின் தொடர்பு கிடைக்கவே கிடைக்காதா? அவளுடைய பணத்திற்கு ஆசைப்பட்ட நடராஜ், மற்றும் அவளை கடத்திக் கொண்டு வந்த ருத்ரன் போன்றவர்கள் தான் அவளுக்காக விதிக்கப்பட்டவர்களோ? அவள் ருத்ரனையும், நடராஜனையும் இருவேறு கோணங்களில் வெறுத்தாள். நட்ராஜ் ஒரு ஏமாற்றக்காரன். அவனுக்கு தேவை அவளது பணம் மட்டும் தான்.
ருத்ரன் அவளை கடத்திக் கொண்டு வந்ததற்காக வருத்த பட கூடயில்லை. அதுமட்டுமல்லாமல், அவளை அவள் விருப்பமின்றி திருமணம் செய்து கொண்டு, தாலியை கிழட்டக் கூடாது என்று மிரட்ட வேறு செய்கிறான். எப்படி அவன் அவ்வாறு செய்யலாம்? சக்தியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது நடக்காத காரியம் என்பதை அவனுக்கு காட்ட நினைத்தாள் சக்தி. அவன் விருப்பப்படி எதுவும் நடக்காது என்று அவன் தெரிந்து கொள்ளட்டும்.
மறுபுறம், ருத்ரன் மகிழ்ச்சியுடன் இருந்தான். அதே நேரம், சக்திக்காக வருந்தவும் செய்தான். அவள் எவ்வளவு உடைந்து போயிருந்தாள் என்பதை அவளது வாட்டமான முகமே கூறியது. தனது கைபேசியை எடுத்து, நடராஜன் நம்பரை பிளாக் செய்தான். நட்ராஜ் தன்னிடம் பேச அவனுக்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்க விரும்பவில்லை ருத்ரன். ஒரு பெண்ணை பிணையாய் வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கும் ஒட்டுண்ணி அவன். அவனை தன்னிடம் நெருங்க விடுவதில்லை என்ற முடிவுக்கு வந்தான் ருத்ரன். அவன் எப்படிப்பட்டவன் என்பதை சக்தி தெரிந்து கொண்டு விட்டாள். அதன் பிறகு, அவனைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்தான் ருத்ரன்.
......
ருத்ரனின் அறையில் இருந்த மேஜையின் இழுவை அறையில் தான் பார்த்த தூக்க மாத்திரைகள் நினைவுக்கு வந்தது சக்திக்கு. அந்த பாட்டிலை எடுத்தவள், அதிலிருந்த மாத்திரைகளை ஒரு காகிதத்தில் வைத்து, அந்த பாட்டிலை கொண்டே அதை தூளாக்கினாள். அதை மடித்து தன் உடையில் மறைத்து வைத்துக் கொண்டாள். அப்பொழுது யாரோ வரும் காலடி ஓசையை கேட்கவே, ஓடிச்சென்று குளியல் அறையின் கதவை தாளிட்டுக் கொண்டாள்.
கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த ருத்ரன், அந்த அறை, காலியாய் இருந்ததை கண்டான். ஈரமான முகத்துடன் குளியலறையில் இருந்து வெளியே வந்தாள் சக்தி. துண்டை எடுத்து அவளிடம் நீட்டினான் ருத்ரன். அதைப் பெற்று தன் முகத்தை துடைத்துக் கொண்டாள் சக்தி. அவள் இருக்கும் மனநிலையை புரிந்து கொள்ளும் நோக்கில், அவளை பார்த்துக் கொண்டு நின்றான் ருத்ரன். அதை உணர்ந்து கொண்ட சக்தி, அங்கிருந்து விறுவிறுவென நடந்தாள்.
"எங்க போற?" என்றான்.
"கிச்சனுக்கு"
"சமைக்கப் போறியா?"
ஆமாம் என்று தலையசைத்தாள்.
"உன்னோட சமையல் ரொம்ப நல்லா இருக்கு" என்றான் புன்னகையுடன்.
மீண்டும் தலையசைத்து விட்டு அங்கிருந்து நடக்க துவங்கினாள்.
"நீ நல்லா இருக்கல்ல?" என்றான்.
"ம்ம்ம்..."
"நீ எல்லாரையும் விட அதிகமா நம்புற நட்ராஜ் எப்படிப்பட்டவன்னு நீ தெரிஞ்சுக்கணும்னு நான் நெனச்சேன். உன்னை காயப்படுத்தனும்னு நான் அப்படி செய்யல"
ஒன்றும் கூறாமல் அங்கிருந்து சென்றாள் சக்தி. நட்ராஜ் நல்லவன் இல்லை என்பது அவளுக்கு புரிந்து விட்டது தான். ஆனால் அதற்காக, ருத்ரன் நல்லவன் என்று ஆகிவிடாது என்று எண்ணியபடி சமையல் அறைக்கு வந்தாள். மதிய உணவை சமைக்க தொடங்கினாள். அவள் காமாட்சியின் உதவியை எதற்காகவும் நாடவில்லை. காமாட்சியும் எந்த குறுக்கீடும் செய்யவில்லை. சமைத்து முடித்த பின், ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் சாம்பாரை எடுத்து, ஒரு பெரிய கிண்ணத்தை அதன் மீது கவிழ்த்து அலமாரியில் மறைத்து வைத்துக் கொண்டாள். பிறகு, தான் பொடித்து வைத்திருந்த தூக்க மாத்திரையை மீதம் இருந்த சாம்பாரில் கலந்தாள்.
ஒரு தட்டில் சாதம் போட்டு, தனியாய் எடுத்து வைத்த சாம்பரை ஊற்றி, உணவு மேஜைக்கு கொண்டு வந்து அமர்ந்து சாப்பிட துவங்கினாள். அவள் சாப்பிடுவதை பார்த்த ருத்ரன், நிம்மதி புன்னகை சிந்தினான்.
"சாம்பசிவம்" என்று அழைத்தான்.
காமாட்சியின் கணவன் ஓடி வந்தான்.
"எனக்கு சாப்பாடு கொண்டு வாங்க"
"காமாட்சி..." அவன் எதுவும் கூறுவதற்கு முன், ருத்ரனுக்கு சாப்பாடு கொண்டு வந்தாள் காமாட்சி.
அதை சுவைத்து சாப்பிட்டான் ருத்ரன். அதை சுவையாய் சமைத்திருந்தாள் சக்தி. சாப்பிட்டு முடித்து மாடிக்கு சென்றாள். ருத்ரனும் மாடியறைக்கு வந்தான். சக்தி படுத்திருப்பதை பார்த்து, அவளை பார்த்துக்கொண்டு சோபாவில் அமர்ந்தான்.
காமாட்சி அனைவருக்கும் உணவு பறிமாறிவிட்டு தானும் உண்டாள். சாப்பிட்ட பின், அவரவர் இருப்பிடம் சென்றார்கள்.
ருத்ரன் அமர்ந்த நிலையில் உறங்குவதை கண்டாள் சக்தி. சிறிது நேரத்தில் அவன் சோபாவில் சரிந்தான். கதவை மெல்ல திறந்து கொண்டு வெளியே வந்தாள் சக்தி. தரைதளத்தில் ஒருவரும் இல்லை. சமையலறையில், தரையில் படுத்த படி உறங்கிக் கொண்டிருந்தாள் காமாட்சி. வீட்டின் முன் கதவை திறந்து, மெல்ல வெளியே எட்டிப் பார்த்தாள். வீட்டின் காவலாளியான ஏகாம்பரமும் உட்கார்ந்தபடி உறங்கிக் கொண்டிருந்தான். அவனிடமிருந்து சாவியை எடுத்து, கேட்டை திறந்து வெளியே சந்தோஷமாய் ஓடி வந்தாள் சக்தி.
அந்த இடம், ஆள் அரவமற்று மயானம் போல் காணப்பட்டது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் ஓடினாள் சக்தி. அவளுக்கு களைப்பு ஏற்பட்டது... தொண்டை வறண்டது.. அவள் தன் சக்தியை இழப்பது போல் உணர்ந்தாள். அப்பொழுது, எதிர் திசையில் இருந்து ஒரு கார் வருவதை பார்த்து, அதை நோக்கி கையசைத்தாள். அந்த கார் அவள் முன் வந்து நின்றது. ஓட்டுனரை நோக்கி ஓடிய சக்தி, அந்தக் காரை ஓட்டிக் கொண்டு வந்தது ஒரு பெண் என்று தெரிந்ததும் வியப்படைந்தாள். காரை ஓட்டிக்கொண்டு வந்த பெண்ணும் சக்தியை பார்த்து வியப்படைந்தாள். அந்தப் பெண் வேறு யாரும் அல்ல, ருத்ரனின் அக்கா துர்கா.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top