17 கைபேசி அழைப்பு

17 கைப்பேசி அழைப்பு

இதற்கிடையில்,

மகாதேவனின் இருப்பிடம் வந்து சேர்ந்தான் சிவா. மகாதேவனிடம் இருந்து எப்படி விஷயத்தை வாங்க வேண்டும் என்று நன்றாகவே ஆலோசித்து வைத்திருந்தான் அவன். மகாதேவன் ஒரு ரவுடியாயிற்றே... அவனை கவனமுடன் தான் கையால வேண்டும். அவன் வந்து சேர்ந்த இடத்தில், ஒரு மரத்தடியில் சில பேர் அமர்ந்திருப்பதை கண்டான் அவன். அவர்கள் அவனை சந்தேக கண்ணுடன் பார்த்தார்கள்.

"நான் மகாதேவனை பாக்க முடியுமா?" என்றான் சிவா.

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"நீங்க எதுக்காக மகாதேவனை பார்க்கணும்?" என்றான் ஒருவன்.

அவன் கேட்ட தொணியிலேயே அவன் தான் மகாதேவனாக இருக்க வேண்டும் என்பதை யூகித்துக் கொண்டான் சிவா.

"நான் இந்த ஊருக்கு புதுசு. எனக்கு இங்க வேற யாரையும் தெரியாது. எனக்கு உங்க உதவி வேணும். ருத்ரன் கிட்ட ஃபோன்ல பேசினப்போ தான் மகாதேவனை பத்தி என்கிட்ட சொன்னான்"

ருத்ரனின் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அந்த ரவுடிகளின் முகத்தில் ஆனந்தம் பெருக்கெடுத்தது. அதை கவனிக்க தவறவில்லை சிவா.

"எந்த ருத்ரன்?" என்றான் உமாபதி.

"சென்னையில் இருந்து வந்திருந்தானே ருத்ரன், அவன் தான். நானும் அவனும் ஃபிரண்ட்ஸ். அவனோட திங்ஸ் எல்லாம் உங்க கிட்ட இருக்கிறதா சொன்னான். நீங்க தான் அவனோட ஹோட்டல் ரூமை வெக்கேட் பண்ணிங்களாமே... சென்னைக்கு திரும்பி வரும் போது, அதை எல்லாம் உங்க கிட்ட இருந்து வாங்கிட்டு வர சொன்னான்"

அவனிடம் வந்த மகாதேவன்,

"நான் தான் மகாதேவன். உங்களுக்கு என்ன உதவி வேணும் சார்? ருத்ரன் சாருக்காக நாங்க என்ன வேணா செய்வோம்" என்று அவனுடன் கைகுலுக்கினான். மகாதேவன்.

"எனக்கு வாடகைக்கு ஒரு வீடு வேணும். கிடைக்குமா?" என்றான்.

"ஏன் சார் கிடைக்காது? உங்க தகுதிக்கு தகுந்த மாதிரி நல்ல வீடா பாத்துடலாம்" என்றான் மகாதேவன்.

"அப்பார்ட்மெண்டா இருந்தா நல்லா இருக்கும்"

"சரிங்க சார்" என்று உமாபதியை நோக்கி திரும்பிய மகாதேவன்,

"நம்ம புரோக்கர் பொன்னம்பலத்துக்கு ஃபோன் பண்ணி வர சொல்லு" என்றான்.

சரி என்று தலையசைத்து, பொன்னம்பலத்திற்கு ஃபோன் செய்தான் உமாபதி.

"நீங்க எங்க தங்கி இருக்கீங்க சார்?" என்றான் மகாதேவன்.

"ஹோட்டலில் தான் தங்கி இருக்கேன்"

"ஏதாவது சாப்பிட்டீங்களா?"

இல்லை என்று தலையசைத்தான் சிவா.

"வாங்க சார். வந்து ஏதாவது சாப்பிடுங்க" என்றான் மகாதேவன்.

சிவாவுக்கு வியப்பாய் இருந்தது. அவன் மகாதேவனை பற்றி கேள்விப்பட்டது வேறு. ஒரு ரவுடியாய் இருந்து கொண்டு, அவன் தன்னிடம் காட்டிய அளவுக்கு அதிகமாக மரியாதை அவனுக்கு வியப்பளிக்காமல் என்ன செய்யும்? அந்த மரியாதை தனக்கு கிடைத்துக் கொண்டிருப்பது ருத்ரனால் தான் என்று அவனுக்கு தெரியும். ஆனால் அவர்களுக்கிடையில் அப்படி என்ன நடந்தது என்று தான் அவனுக்கு புரியவில்லை.

ருத்ரனின் தகுதிக்கு ஏற்றார் போல் இருந்த ஒரு ஹோட்டலுக்கு சிவாவை அழைத்து வந்தான் மகாதேவன். ருத்ரனின் இருப்பிடம் பற்றி அவனிடம் விசாரிக்க வேண்டும் என்று எண்ணினான் சிவா. ஆனால் அதைப்பற்றி விசாரித்தால், நிச்சயம் அவன் மீது சந்தேகம் கொள்வான் மகாதேவன். அதனால், அதை வேறு விதமாக செய்ய நினைத்தான்.

"நான் வீடு தேடிக்கிட்டு இருக்கிறது என்னோட ஃபிரண்டுக்காக. அவன் போன வாரம் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டான்... அதுவும் வீட்டை விட்டு ஓடி வந்து. அவங்க ஒளிஞ்சி வாழ ஒரு இடம் தேவைப்படுது. அதனால தான், நான் அவங்க சார்பா இங்க வந்து வீடு தேடிக்கிட்டு இருக்கேன்" என்று ஒரு கதையை புனைந்தான் சிவா.

"அப்படியா சார் விஷயம்?"

"ஒரு ஃபிரண்டா நான் அவனுக்கு ஹெல்ப் பண்ணனும் தானே?" என்று தன் பேச்சுக்கு பாதை அமைத்தான்.

"நிச்சயமா பண்ணனும் சார்"

"ஆனா, ருத்ரனுக்கு யாருடைய உதவியும் தேவையில்ல. அவனுக்கு என்ன வேணுமோ அதை அவனே செஞ்சிக்குவான்" என்று புன்னகைத்தான் சிவா.

அதைக் கேட்ட மகாதேவன் வாய்விட்டு சிரித்தான்.

"நீங்க சொல்றது ரொம்ப சரி சார்" என்று அவன் கூறியதை ஆமோதித்தான் மகாதேவன்.

"அவன் எப்பவுமே அப்படித்தான்" என்றான் சிவா, மகாதேவன் அதற்கு ஏதாவது கூறுவானா என்று எதிர்பார்ப்புடன்.

"அன்னைக்கு, சென்னைக்கு கிளம்பி போனாரே... எவ்வளவு அனாயசமா சக்தி மேடத்தை தோளில் தூக்கி போட்டுக்கிட்டு, அவங்க வீட்லயிருந்து நடந்து போனாரு தெரியுமா?" என்றான் தன்னை மீறி.

திடுக்கிட்டான் சிவா. அப்படி என்றால் ருத்ரன் இருப்பது சென்னையிலா?அதுவும் சக்தி என்ற பெண்ணை தூக்கிக்கொண்டு... அப்படி என்றால் அந்த பெண்ணை அவன் கடத்திக்கொண்டு சென்றிருக்கிறான். மருத்துவரிடம் ருத்ரன் பேசியது அந்தப் பெண்ணை பற்றி தான் இருக்க வேண்டும்.

"ஆமாம். ரொம்ப தைரியசாலி அவன்" என்றான் சிவா.

"என்ன ஸ்டைல் சார்..." என்று சிலாகித்தான் மகாதேவன்.

"அவன் கார் ஓட்ற ஸ்டைலை நீங்க பார்க்கணுமே... நம்ம கண்ணை அவன் மேலே இருந்து எடுக்கவே முடியாது" என்று மேலும் கூறினான் சிவா.

"நான் பார்த்திருக்கேன் சார். நீங்க சொல்றது சரி தான். அவர் ஸ்டியரிங்கை சுத்துறதே ஸ்டைலா இருந்தது. மனுஷனுக்கு சுத்தமா பயமே கிடையாது"

அப்பொழுது அவர்களது மேஜிக்கு வந்த சர்வர்,

"என்ன சாப்பிடுறீங்க சார்?" என்றார்.

"எனக்கு ஜூஸ் மட்டும் போதும்" என்றான் சிவா.

"ரெண்டு ஆப்பிள் ஜூஸ் கொண்டு வாங்க" என்றான் மகாதேவன்.

அப்பொழுது மகாதேவனுக்கு உமாபதியிடம் இருந்து அழைப்பு வந்தது.

"சொல்லு உமா"

"பொன்னம்பலம் இப்போ கொஞ்சம் பிஸியா இருக்கானாம். சாயங்காலம் தான் வர முடியும்னு சொல்றான்"

"அப்படியா? சரி" என்று அழைப்பை துண்டித்த மகாதேவன்,

"சார், வீட்டு புரோக்கர் சாயங்காலம் தான் வருவானாம்" என்றான்.

"அப்படியா?" என்று ஏமாற்றம் அடைந்து விட்டது போல் பாசாங்கு செய்தான் சிவா.

"கவலைப்படாதீங்க சார். இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள நம்ம ஒரு வீட்டை முடிச்சிடலாம்" என்றான் மகாதேவன்.

"சரி"

"உங்க நம்பர் தரீங்களா சார்?"

ருத்ரனுடைய பழைய கைபேசி எண்ணை அவனுக்கு வழங்கிவிட்டு, அவனிடமிருந்து விடைபெற்ற சிவா, சென்னை நோக்கி பயணமானான்.

சென்னை

சமையலறைக்கு வந்த சக்தி, வேலை செய்ய தொடங்கினாள். அவள் காமாட்சியை ஏறெடுத்து பார்க்கவும் இல்லை, அவளிடம் பேசவும் இல்லை. காமாட்சியும் அவளிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. அவளை தொந்தரவு செய்யாமல், அவள் என்ன செய்ய நினைக்கிறாளோ அதை செய்ய விட்டாள் காமாட்சி. காலை சிற்றுண்டியை சமைத்து முடித்து, அதை உணவு மேஜைக்கு கொண்டு வந்தாள் சக்தி.

அவளை வியப்புடன் பார்த்தான் ருத்ரன். இந்த உலகிலேயே மிகவும் கஷ்டமான காரியம் உண்டு உண்டென்றால், அது ஒரு பெண்ணை புரிந்து கொள்ள முயல்வது... அதுவும், தன் முன்னால் நின்று கொண்டிருக்கும் இந்தப் பெண்ணை புரிந்து கொள்வது மிகவும் கஷ்டம் என்று எண்ணினான் ருத்ரன். இதற்கு முன் எப்பொழுதும், தன் அக்காவையோ, பாட்டியையோ, சித்தியையோ புரிந்து கொள்ள அவன் திணறியது இல்லை. இந்த ஒரு பெண் தான் அவனுக்கு தண்ணீர் காட்டிக் கொண்டிருக்கிறாள். கடந்த முறை கூட, அவனை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பது போல் நடித்து, இப்படித் தான் அவள் சாதாரணமாய் நடந்து கொண்டு, அவனை ஏமாற்றினாள். இந்த முறை, அவள் மனதில் என்ன இருக்கிறதோ தெரியவில்லை.

"நீ எதுக்காக சமையல் செஞ்ச? அது தான் இங்க அதுக்குன்னு ஆள் இருக்கே? " என்றான் ருத்ரன்.

அவனுக்கு எந்த பதிலும் கூறாமல் அமைதியாய் உணவு பரிமாறினாள் சக்தி.

"அவங்க சமைக்கிற சமையல் உனக்கு பிடிக்கலையா? உனக்கு பிடிக்கலைன்னா சொல்லு, வேற யாரையாவது சமையலுக்கு அப்பாயிண்ட் பண்ணிடலாம்"

வேண்டாம் என்று தலையசைத்தாள் சக்தி.

"பரவாயில்ல சொல்லு" என்றான்.

"எனக்கு எங்க அம்மா சமைக்கிற சமையல் மட்டும் தான் பிடிக்கும். உங்களால அவங்களை திரும்பி கொண்டு வர முடியுமா?" என்றாள்.

வியப்புடன் உருவம் உயர்த்தினான் ருத்ரன். அவன் வாயை அடைத்து விட்டதாய் எண்ணினாள் சக்தி. ஆனால் அவனது பதில் அவளை திகைப்படையச் செய்தது.

"என்னால உங்க அம்மாவை கூட்டிக்கிட்டு வர முடியும்னா, நான் எப்பவோ எங்க அம்மாவை கூட்டிகிட்டு வந்திருப்பேன். அவங்க இங்க இருந்திருந்தா, உனக்கு என்னைப் பத்தி சொல்லி புரிய வச்சிருப்பாங்க" என்றான்.

அமைதியாய் அமர்ந்தது சாப்பிட துவங்கினாள் சக்தி.  அப்போது, ருத்ரனின் கைபேசி மணி அடிக்க துவங்கியது. ஒரு புதிய எண்ணை பார்த்த ருத்ரன் முகம் சுளித்தான். ஏனென்றால், அவன் அந்த எண்ணை யாருக்கும் தராமல் மிகவும் ரகசியமாய் வைத்திருந்தான். மகாதேவனும் அவனது ஆட்களும் மட்டுமே இந்த எண்ணை அறிவார்கள். அவனது கைபேசியில் ஒளிர்ந்த எண்ணை பார்த்த சக்திக்கு விக்கியது. அது நடராஜனின் எண். அவன் மறுபடி அழைப்பு விடுப்பான் என்பதை அவள் எதிர்பார்த்து இருக்கவில்லை. ஏன் அவன் அழைக்கிறான்? ஒருவேளை, அவள்  அதை ஏற்பாள் என்று எண்ணியிருக்கிறானோ?

அந்த அழைப்பை ஏற்றான் ருத்ரன்.

"யார் பேசுறீங்க?"

"நான் நட்ராஜ் பேசுறேன் சார்"

தன் புருவம் உயர்த்தி சக்தியை ஏறிட்டான் ருத்ரன். அந்த எண் நடராஜுக்கு எப்படி கிடைத்தது என்பதை யூகிக்க அவனுக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. சக்தி அவனை அழைத்திருக்க வேண்டும். அவளது முகமே அதை கூறியது.

"எந்த நடராஜ்?" என்றான் அவன், புரிந்து கொள்ளாததைப் போல.

"சக்தியை கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தேனே..."

"ஒரு நிமிஷம்" கைபேசியின் ஸ்பீக்கரை கையால் பொத்திய அவன்,

"உண்மையிலேயே நடராஜ் எப்படிப்பட்டவன்னு உனக்கு தெரியனும்னா, அவன் பேசுறதை அமைதியா கேளு"

ஸ்பீக்கரை ஆன் செய்தான் ருத்ரன்.

"என்னோட நம்பர் உங்களுக்கு எப்படி கிடைச்சது?"

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, சக்தி எனக்கு உங்க ஃபோன்ல இருந்து கால் பண்ணி இருந்தா"

"அப்படியா? சரி, சொல்லுங்க என்ன விஷயம்?"

"ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி உங்களுக்கு சொல்லத் தான் ஃபோன் பண்ணேன்"

"என்ன விஷயம்?"

"சக்தி உங்க கிட்ட இருந்து தப்பிச்சு போக திட்டம் போட்டு கிட்டு இருக்கா"

"நீங்க என்ன சொல்றீங்க?" என்றான் இல்லாத அதிர்ச்சியை தன் குரலில் காட்டி.

ஆனால், சக்தியோ உண்மையிலேயே அதிர்ச்சி அடைந்தாள்.

"எப்படியோ அவ கிட்ட சாமர்த்தியமா பேசி, என்னை நம்பும்படி செஞ்சிட்டேன். அவளை காப்பாத்த வரேன்னு சொல்லியிருக்கேன்"

"ஆமாம். அவ உங்களை ரொம்ப நம்புறா. அவளை ரவுடிங்க ரேப் பண்ணதுக்கு பிறகு கூட, நீங்க அவளை கல்யாணம் பண்ணிக்க தயாரா இருந்தீங்களாம்..."

"அவளை யாரு சார் கெடுத்தது? அவளை யாரும் கெடுக்கல... நீங்க தான் அன்னைக்கு அவ கூட இருந்தீங்களே... என்னை கல்யாணம் பண்ணிக்காம இருக்க தான் அவ பொய் சொல்றான்னு எனக்கு தெரியும். அவளை கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்க தான் நான் அப்படி சொன்னேன். கெட்டுப்போன பொண்ண யாரு சார் கல்யாணம் பண்ணிக்குவா?"

"நீங்க சொல்றது சரி தான். யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க... "

"இப்ப கூட, உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கத் தான் நான் ஃபோன் பண்ணேன். ஏன்னா, இந்த நேரம், உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல என்ன நடந்திருக்கும்னு எனக்கு தெரியும்"

"என்ன?"

"அவளை இங்கிருந்து கடத்திக்கிட்டு போயிருக்கீங்க. இவ்வளவு நேரம் நீங்க என்ன சும்மாவா இருப்பீங்க?"

ருத்ரனின் கண்கள், ஏராளமான உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்த சக்தியின் முகத்தில் தான் இருந்தது.

"உங்களுக்கு என்ன வேணும் நடராஜ்?"

"இதுக்கு அப்புறம் மறைக்கிறதுல எந்த பிரயோஜனமும் இல்ல... உங்ககிட்ட உண்மையை சொல்லிடுறேன்"

"என்ன உண்மை?"

"சக்தியோட பேர்ல ஒரு வீடும், நிறைய பணமும் இருக்கு. அதுக்காக தான் நான் அவளை கல்யாணம் பண்ணிக்க நினைச்சேன்"

தன் பல்லை நறநறவென கடித்தாள் சக்தி. ஒரு வேளை நட்ராஜ் மட்டும் அவள் முன்னாள் இருந்திருந்தால், அவனை அவள் கொன்றே போட்டிருப்பாள்.

"நீங்க எனக்கு பணம் தர்றதா இருந்தா, இதுக்கு அப்புறம் நான் உங்க வழியில குறுக்கிடவே மாட்டேன்" என்றான் நட்ராஜ்.

"உங்களுக்கு எவ்வளவு வேணும்?"

"நீங்க எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்கிறேன்"

ருத்ரனின் கைபேசியை எடுக்க முயன்றாள் சக்தி. அவளது எண்ணத்தை புரிந்து கொண்ட ருத்ரன், அதை எடுத்து,

"நான் உங்களை மறுபடியும் கூப்பிடுறேன்" என்று அழைப்பை துண்டித்தான்.

கொந்தளிக்கும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினாள் சக்தி. நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ருத்ரன்.
சாப்பாட்டை பாதியில் விட்டுவிட்டு எழுந்தாள் சக்தி.

"தகுதி இல்லாத ஒருத்தனுக்காக பட்டினி கிடக்காத சக்தி"

ஒரு நொடி நின்ற சக்தி, அங்கிருந்து விறுவிறுவென நடந்தாள். அவள் பட்டினி கிடந்தது நடராஜுக்காக அல்ல. அவள் சாப்பிடும் மனநிலையில் இல்லை என்பதால் தான்.

ருத்ரனும் உணவு மேஜையை விட்டு அகன்றான்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top