15 வில்லன்
15 வில்லன்
ருத்ரனை கண்ட சக்தி திணறிப் போனாள். அவள் கையும் களவுமாய் அகப்பட்டுக் கொண்டு விட்டாளே. அங்கிருந்து தப்பிச்செல்ல அவள் செய்த அத்தனை பிரயத்தனங்களும் வீணாகி விட்டன. அவளது கரத்தை திடமாய் பற்றிக் கொண்டு நின்றான் ருத்ரன். அவனது முகத்தில் கோபம் கொந்தளித்துக் கொண்டிருந்ததை அவளால் நன்றாக உணர முடிந்தது. தன் கரத்தை அவன் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள, இப்படியும் அப்படியும் திருப்பினாள். அவள் அணிந்திருந்த துப்பட்டாவை எடுத்து, அவள் கரங்களை கட்டினான் ருத்ரன், அவளுக்கு அதிர்ச்சி அளித்து. ஆனாலும் அவளை வீட்டினுள் இழுத்துச் செல்வது அவ்வளவு சுலபமாய் இருக்கவில்லை. சக்தி அதை அவனை அவ்வளவு சுலபமாய் செய்ய விட்டுவிடவில்லை. வேறு வழியின்றி, வழக்கம் போல் அவளை தன் தோளில் தூக்கிக் கொண்டு உள்ளே நடந்தான் ருத்ரன்.
அவளுடைய நடிப்பை ருத்ரன் நம்பியது உண்மை தான். ஆனால் காமாட்சி அவளை நம்பவில்லை. பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல், ஒரு பெண்ணை பற்றி ஒரு பெண்ணுக்கு தானே தெரியும்? சக்தியிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம் காமாட்சிக்கு குழப்பத்தை தந்தது. அந்த மாற்றத்தைக் கண்ட ருத்ரனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி, அவளுக்கு கவலையை அளித்தது. சக்தியின் மீது ஒரு கண் வைப்பது என்று முடிவு செய்தாள். தூங்காமல் விழித்திருந்து சக்தியை கண்காணித்தாள். சக்தி தரைதளம் வந்த போது காமாட்சி சமையலறையில் இல்லை அல்லவா? அவள் மொட்டை மாடிக்குச் செல்லும் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு சக்தியை கவனித்துக் கொண்டிருந்தாள். அவள் படிக்கட்டின் திருப்பத்தில் அமர்ந்திருந்ததால், சக்தியால் அவளை பார்க்க முடியவில்லை. சக்தி பூனை போல் சத்தம் செய்யாமல் அங்கிருந்து நழுவி சென்றதை கண்ட காமாட்சி, விரைந்து சென்று உறங்கிக் கொண்டிருந்த ருத்ரனை எழுப்பி, சக்தியை பற்றி கூறினாள். அங்கிருந்து விரைந்து வந்தான் ருத்ரன். அதன் பின் நடந்தது, நாம் அறிந்ததே.
சக்தியை தூக்கிக் கொண்டு வந்த ருத்ரன், அவளை கட்டிலில் கிடத்தினான். கட்டிலின் மீது உருண்டு சென்று, கட்டிலின் அடுத்த பக்கம் இறங்கினாள் சக்தி.
"அப்படின்னா, நீ சொன்னது எல்லாமே பொய்... உன்னோட செய்கை எல்லாமே நடிப்பு. அப்படித் தானே?" என்றான் ருத்ரன் கோபாகாரமாய்.
அவனுக்கு எந்த பதிலும் கூறாமல் பயமின்றி நின்றாள் சக்தி.
"பொய் சொல்றவங்களை எனக்கு அடியோட பிடிக்காது. அப்படிப்பட்டவங்களை நான் எப்பவுமே நம்ப மாட்டேன். நான் உன் மேல வச்சிருந்த நம்பிக்கையை நீ உடைச்சுட்ட" என்றான் அவள் மீது குத்தி நின்ற பார்வையுடன்.
"பாரு, நம்பிக்கையை பத்தி யார் பேசுறதுன்னு... ரொம்ப பெரிய ஜென்டில்மேன் மாதிரி என்னோட வாழ்க்கையில வந்து, என் கல்யாணத்தன்னைக்கு எங்களுக்கு நிஜமாகவே உதவி செய்யறவன் மாதிரி, நடராஜுக்கு பணம் கொடுக்கிறேன்னு சொன்ன... ஆனா, அதுக்கு பதிலா என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு கேட்ட... இதெல்லாம் ரொம்ப நல்லவன் செய்ற வேலையா? அதெல்லாம் நடிப்பு இல்லையா?"
"நான் பொய் சொன்னேன் தான்... ஆனா, அது உன்னை கல்யாணம் பண்ணிக்க மட்டும் தான்"
"நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். உண்மைய சொல்லப் போனா, எந்த பொண்ணுமே உன்னை மாதிரி ஒரு ஆளை கல்யாணம் பண்ணிக்க விரும்பவே மாட்டா" அவன் மனதை சம்மட்டியால் உடைத்தாள் சக்தி.
"உன்னோட அனுமதி யாருக்கு வேணும்? நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கத் தான் போறேன். நீ என் கூட தான் இருக்க போற... உன் வாழ்நாள் முழுக்க... எனக்கு பொண்டாட்டியா... என்னை யாராலயும் தடுக்க முடியாது" என்றான் தன் பல்லை கடித்துக் கொண்டு.
"அது நிச்சயம் நடக்காது" என்று சீறினாள் சக்தி
தனது அலமாரிக்குச் சென்று, அதிலிருந்து எதையோ எடுத்து, தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான் ருத்ரன். அவளை நோக்கி திரும்பிய அவன், துப்பட்டாவால் கட்டப்பட்ட தன் கைகளை விடுவித்துக் கொள்ள, அவள் பிரயத்தனம் செய்து கொண்டிருப்பதை கண்டான்.
அவன், அவளை நோக்கி நீண்ட நெடிய அடிகளை வைத்து முன்னேற, பின்னோக்கி நகர்ந்த அவள், சுவற்றில் மோதி நின்றாள். அவளை நெருங்கி வந்த அவன், அவளை நெருக்கி நின்றான்.
"ஏன்? ஏன் சக்தி??? ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்ட??? ஏன்ன்ன்ன்? என்று அரற்றினான்.
தனது கண்களை இறுக்கமாய் மூடிக்கொண்டு நின்றாள் சக்தி. அவன் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதாய் அவள் எண்ண வில்லை. அவனுக்கு எந்த முக்கியத்துவமும் வழங்காத அவளை பார்த்து, அவன் மென்று விழுங்கினான். தான் அலமாரியில் இருந்து எடுத்த பொருளை, தன் பேன்ட் பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்தான்.
"சக்தி" என்று மென்மையாய் அழைத்தான்.
மூடியிருந்த தன் கண்களை மேலும் இறுக்கமாய் மூடினாள் சக்தி, அவனை நிமிர்ந்து பார்க்கும் விருப்பம் இல்லாமல்.
"என்னால எதுவும் செய்ய முடியாதுன்னு நினைக்கிறியா?" என்றான்.
"உன்னால ஒன்னும் செய்ய முடியாது" என்றாள் கண்களை திறக்காமல்.
"அப்படியா?" என்றான் ரகசியமாய்.
கண்களை திறந்து அவனை ஏறிட்ட சக்தி,
"நீ எதைப் பத்தி பேசுறேன்னு எனக்கு நல்லாவே புரியுது. உன்னால என் உடம்பை மட்டும் தான் தொட முடியும்..."
அவன் புன்னகைப்பதை பார்த்து முகம் சுருக்கினாள் சக்தி.
"அப்படியா?" என்றான் அதே புன்னகையுடன்.
"ஆமாம்... உன்னால எப்பவும் என் மனசை மட்டும் ஜெயிக்கவே முடியாது"
"நீ நடராஜனை கல்யாணம் பண்ணிக்க தயாராக இருந்த... உன்னை ரவுடிங்க கிட்ட தனியா விட்டுட்டு, உயிருக்கு பயந்து ஓடிப் போனவனை கல்யாணம் பண்ணிக்க நீ தயங்ல... அவன் ஒரு கோழை... அவனை விடவா நான் மோசமானவன்?" என்ற அவனது குரலில் இயலாமை தெரிந்தது.
"அவர் கோழையா இருக்கலாம். ஆனா, அதே ரௌடிங்களால கெடுக்கப்பட்ட பொண்ண கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு அவருக்கு ரொம்ப பெரிய மனசு இருந்தது"
"என்ன்னனது?" அவள் என்ன கூறுகிறாள் என்பதை புரிந்து கொள்ள முடியாத அவன் முகம் சுளித்தான்.
"ஆமாம்... நான் நடராஜ் கிட்ட பொய் சொன்னேன். ஏன்னா, எனக்கும் ஒரு கோழையை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்ல. அவர் என்னை கல்யாணம் பண்ணிக்க கூடாது அப்படிங்கிறதுக்காக அந்த ரௌடிங்க என்னை கெடுத்துட்டதா நான் பொய் சொன்னேன். அப்படி இருந்தும் அவர் என்னை கல்யாணம் பண்ணிக்க தயாரா இருந்தார்"
சில நொடிகள் அவளை திகைப்புடன் பார்த்துக் கொண்டு நின்ற ருத்ரன், வெடித்து சிரித்தான். அவன் பைத்தியக்காரனை போல் சிரிப்பதை பார்த்த சக்தி புரியாமல் நின்றாள்.
"ஓ... அது தான் அவனை கல்யாணம் பண்ணிக்க உன்னை சம்மதிக்க வச்சிதா? பாவம் நீ... இதுக்குப் பிறகு உன்கிட்ட மறைச்சு ஒன்னும் ஆகப் போறது இல்ல. நான் சொல்றதை கேளு. அன்னைக்கு உன்கிட்ட வந்து கலாட்டா பண்ண ரவுடிகளை அனுப்பினதே நான் தான்"
அவனைப் பார்த்துக் கொண்டு நின்ற சக்தியின் முகத்தில் அதிர்ச்சி படர்ந்தது.
"நட்ராஜ் எப்படிப்பட்ட உதவாக்கரைன்னு உனக்கு காட்டத்தான் அதை நான் செஞ்சேன். ஞாபகம் இருக்கா? அவங்க விரல் கூட உன் மேல பட்டிருக்காது... அது என்னோட ஸ்டிரிக்டான ஆர்டர். அதனால தான் அவங்க உன் கிட்ட இருந்து தள்ளியே நின்னாங்க"
ஆம். அவன் கூறியது உண்மை தான். அவர்கள் அவளை தொடவே இல்லை.
"ஆனா, நாங்களே எதிர்பார்க்காதபடி, வேற ஒரு ரவுடி கேங் அங்க வந்துட்டாங்க. அவங்க கிட்ட இருந்து உன்னை காப்பாத்த, நான் உண்மையிலேயே சண்டை போட வேண்டியதா போச்சு. மை டியர் டார்லிங், இன்னொரு விஷயத்தையும் தெரிஞ்சிக்கோ. இவ்வளவும் நடந்த போது, நடராஜ் அங்க தான் இருந்தான். அங்க நடந்த எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு, அவன் அங்க தான் ஒளிஞ்சிருந்தான். அவங்க உன்னை தொடவே இல்லைன்னு அவனுக்கு நல்லாவே தெரியும். அதனால தான், உன்னை கல்யாணம் பண்ணிக்க அவன் ஒத்துக்கிட்டான்"
"இல்ல... இல்ல, நான் உன்னை நம்ப மாட்டேன்..." தடுமாறினாள் சக்தி.
"சரி நம்பாதே... அவனுக்கு ஃபோன் பண்ணி, இப்போ நான் உன்னை கெடுத்துட்டேன்னு சொல்லு... சொல்லி பாரு..." என்று தன் தோள்களை குலுக்கினான்.
"என்ன பைத்தியக்காரத்தனம் இது..."
"அப்போ தான் உண்மையிலேயே நட்ராஜ் யாருன்னு உனக்கு தெரியும்"
"அவர் ஜெயில்ல இருக்காரு"
"நான் அவனை வெளியிலே கொண்டு வந்துட்டேன்"
"நீயா?"
"நான் தானே அவனை ஜெயிலுக்கு அனுப்பினேன்...? அதனால நானே அவனை கொண்டு வந்துட்டேன்..."
"உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி எல்லாம் செஞ்சிருப்ப..."
"உன்னால கற்பனை பண்ணி பார்க்க முடியாத அளவுக்கு, எனக்கு இன்னும் கூட நிறைய தைரியம் இருக்கு"
அவள் அவனைப் பிடித்து தள்ள முயன்றாள்.
"உன்னோட வெறுப்பை உன் புருஷன் கிட்ட காட்டாத, செல்லம்" என்றான்.
"புருஷனா? நீயா?"
ஆமாம் என்று தலையசைத்தான்.
"நீ எப்பவும் என் புருஷனாக முடியாது"
"கொஞ்சம் உன் கழுத்தை பாரு" என்றான் புன்னகை மாறாமல்.
குனிந்து தன் கழுத்தைப் பார்த்தவள், தன் கழுத்தில் இருந்த தாலியை பார்த்து திகில் அடைந்தாள்.
"நீ என்ன காரியம் பண்ண???"
"நான் தான் ஏற்கனவே சொன்னேனே... உன்னை கல்யாணம் பண்ணிக்க எனக்கு உன்னோட அனுமதி தேவை இல்லன்னு" என்றபடி அவள் கையை கட்டி இருந்த துப்பட்டாவை அவிழ்த்து விட்டான்.
"நீ உன் மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்க? நீ என் கழுத்துல தாலி கட்டிட்டா, நான் உன்னை கணவனே கண்கண்ட தெய்வம்னு கும்பிடுவேன்னு நினைச்சியா?" என்று கூறியபடி ஆத்திரத்துடன் அதை அவிழ்க்க முயன்றாள்.
அவள் கையை இறுக்கமாய் பற்றிய ருத்ரன்,
"உன்னை நான் எச்சரிக்கிறேன், சக்தி... நீ அதை கழட்டினா விளைவுகள் ரொம்ப விபரீதமா இருக்கும்"
"என்ன செய்வ?" என்றாள் ஆத்திரத்துடன்.
"இந்த ராத்திரி, நமக்கு முதல் ராத்திரியா இருக்கும்" என்றான் கோபமாய்.
தாலிக்கயிற்றை பற்றி இருந்த அவளது பிடி இறுகியது. அவள் கண்கள் அதிர்ச்சியில் விரிவடைந்தன.
"நான் அதை நிச்சயமா செய்வேன்னு உனக்கு நல்லா தெரியும்"
அவளது முதுகெலும்பில் ஒரு நடுக்கம் பிறந்தது.
"நீ ஒரு வில்லன்"
"ஆமாம்... அதை மறக்காம ஞாபகம் வச்சுக்கோ... சந்தர்ப்பம் கிடைச்சா அதை தவற விடமாட்டான் இந்த வில்லன்" என்றான் எகத்தாளமாய்.
அவன் பின்னோக்கி நகர, தொப்பென்று அமர்ந்தாள் சக்தி.
வெளியே வந்த ருத்ரன், காமாட்சியை அழைத்தான். அவளிடம் ஏதோ கூற அவள் தலையசைத்து விட்டு அங்கிருந்து சென்றாள். திரும்பி வந்த அவளின் கையில் ஒரு பித்தளை குங்குமச்சிமிழ் இருந்தது. அதை அவளிடம் இருந்து பெற்றுக்கொண்ட ருத்ரன், அவள் அங்கிருந்து செல்லுமாறு சைகை செய்தான். மறு பேச்சு பேசாமல் அங்கிருந்து அகன்றாள் காமாட்சி.
அந்த குங்குமச்சிமிழுடன் உள்ளே வந்தான் ருத்ரன். தன் கழுத்தில் இருந்த திருமாங்கல்யத்தை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சக்தி. அந்த குங்குமச்சிமிழில் இருந்து குங்குமத்தை எடுத்து, அவள் நெற்றி வகிட்டில் வைத்த ருத்ரன்,
"இப்போ, நீ முன்ன இருந்ததை விட ரொம்ப அழகா இருக்க" என்றான்.
எந்த உணர்ச்சியும் இல்லாமல் அவனை ஏறிட்டாள் சக்தி. அவள் எதிரில் முழங்காலிட்டு அமர்ந்த ருத்ரன்,
"நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு அப்படிங்கிற நிதர்சனத்தை புரிஞ்சுக்கோ. நீ என்னோட வைஃப். நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன்... நீ என்னை விட்டுட்டு போகணும்னு நினைக்காத வரைக்கும்..."
ஒன்றும் கூறாமல் அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சக்தி. அவள் அழாமல் உறுதியாய் இருந்து அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது. அவளது கண்கள் கலங்க கூட இல்லை. அவள் எந்த அளவிற்கு தைரியமானவள் என்பதை அது காட்டியது. அவள் அருகில் அமர்ந்து கொண்ட ருத்ரன்,
"நீ என் மேல கோவமா இருக்கேன்னு எனக்கு தெரியும்" என்றபடி தனது கைபேசியை எடுத்து, அதை அவள் கையில் வைத்தான்.
"நடராஜுக்கு ஃபோன் பண்ணி உன் சந்தேகத்தை தீர்த்துக்கோ" என்றான்.
நம்பிக்கையுடன் கூறிய அவனை, நம்பிக்கை இல்லாமல் ஏறிட்டாள் சக்தி.
"அவன்கிட்ட பேசு. உண்மை என்னன்னு உனக்கே புரியும்" அந்த இடத்தை விட்டு வெளியேறினான் ருத்ரன். அவள் நடராஜுடன் பேச வேண்டும் என்று அவன் விரும்பினான். அவன் அங்கிருந்தால், அவள் அதை செய்ய மாட்டாள் என்று அந்த அறையை விட்டு வெளியேறினான்.
*ருத்ரன் கூறுவது உண்மையாக இருக்குமா? உண்மையிலேயே, நடராஜன் அன்று அங்கு தான் இருந்தானா?*
ருத்ரனின் முகத்தில் தெரிந்த நம்பிக்கை அவளை பயமுறுத்தியது. உண்மையிலேயே நடராஜ் பொய் தான் கூறினானா? நீண்ட பெருமூச்சு இழுத்து விட்டவளாய் ஒரு முடிவுக்கு வந்தாள். எது எப்படி இருந்த போதும், இந்த திருமணத்தை அவள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top