10 பணமா, சிறையா?
10 பணமா, சிறையா?
அந்த சம்பவத்திற்கு பிறகு, வீட்டை விட்டும் வெளியே வரும் தைரியம் இருக்கவில்லை நடராஜுக்கு. எல்லா திருமண வேலைகளையும் பார்க்கும்படி தன் தந்தையையே அவன் அனுப்பி வைத்தான். தவிர்க்க முடியாத வேலைகளுக்கு, தன் நண்பர்கள் புடை சூழ சென்றான்.
மகாதேவனும், அவனது நண்பர்களும் ருத்ரனின் கைப்பேசி அழைப்பை ஏற்கவே நடுங்கினார்கள். அவர்களிடமிருந்து எந்த செய்தியும் வராமல் போனதால், கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான் ருத்ரன். இறுதியில், நேரில் சென்று மகாதேவனை பார்ப்பது என்று முடிவுக்கு வந்து, அவன் வீட்டிற்கு வந்தான்.
தன் கண்களில் நெருப்பை வாரி இறைத்து கொண்டிருந்த ருத்ரனை தன் வீட்டில் பார்த்ததும், மென்று முழுங்கினான் மகாதேவன்
"சார்... நாங்க வந்து..."
"நான் கொடுத்த வேலையை உங்களால செய்ய முடியலன்னா என்கிட்ட சொல்ல வேண்டியது தானே?" என்றான் காட்டமாக.
"இல்ல சார், எடுத்த வேலையை முடிக்காம நாங்க விட மாட்டோம"
"நீங்க வேலையை முடிக்கிறதுக்குள்ள, அவன் சக்தியை கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிடுவான்" சீறினான் ருத்ரன்.
"நடராஜன் வீட்டை விட்டு தனியா எங்கயுமே வரல, சார். எங்க போனாலும் அவனோட ஃபிரண்டுங்க கூடயே சேர்ந்து போறான்"
"அப்படின்னா, அவன் காலை எப்படி உடைப்பீங்க?"
"எப்படியாவது அவனை வெளியே வர வச்சு செஞ்சிடுவோம் சார்"
"உங்களுக்கு ரெண்டு நாள் டைம் தரேன். அதுக்கு பிறகு நான் வெயிட் பண்ண மாட்டேன்"
"சரிங்க சார்"
மகாதேவனிடம் கொடுக்கப்பட்ட வேலையை அவன் முடிக்காமல் போனால், அடுத்து என்ன செய்வது என்பதை பற்றி சிந்தித்தபடி அந்த இடம் விட்டு அகன்றான் ருத்ரன்.
இரண்டு நாட்களுக்கு பிறகு...
துரதிஷ்டவசமாய், மகாதேவனால் ருத்ரன் கொடுத்த வேலையை முடிக்க முடியவில்லை. தன் பொறுமையை முழுமையாய் இழந்து விட்டிருந்தான் ருத்ரன். ஏனென்றால், சக்தியின் திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருந்தது. இனி மகாதேவனை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை என்ற முடிவுக்கு வந்த அவன், தானாகவே களத்தில் இறங்கினான்.
ருத்ரனிடமிருந்து எந்த அழைப்பும் வராமல் போனதால் மகாதேவனும் அவனது நண்பர்களும் ஆச்சரியம் அடைந்தார்கள். ருத்ரன் அவர்களுக்கு ஃபோன் செய்து, அவர்களை ஒரு பிடி பிடிப்பான் என்று அவர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் அப்படி ஒன்றும் நிகழவில்லை. ருத்ரன் எதையும் செய்யக் கூடியவன் என்று அவர்களுக்கு தெரிந்த போதிலும், அவனது அழைப்புக்காக அவர்கள் காத்திருந்தார்கள்.
ருத்ரன் எங்கோ செல்வதை பார்த்த உமாபதி, இடைவெளி விட்டு அவனைப் பின்தொடர்ந்து சென்றான். அவன் மனதில் என்ன இருக்கிறது என்று அவனுக்கு தெரிந்து கொள்ள வேண்டும். நடராஜன், கார் ஓட்டுனராக பணியாற்றிக் கொண்டிருந்த அந்த வீட்டிற்குள் ருத்ரன் நுழைவதை பார்த்து அவன் திகைப்படைந்தான். அந்த வீட்டிற்குள் எதற்காக ருத்ரன் செல்கிறான்? நடராஜனின் முதலாளி, ருத்ரனுக்கு தெரிந்தவனாக இருப்பானோ? ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு ருத்ரனின் வரவுக்காக காத்திருந்தான். அரை மணி நேரத்திற்கு பிறகு அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தான் ருத்ரன். அவனை பின் தொடர்ந்து வந்த நடராஜனின் முதலாளி பக்தவச்சலம், ருத்ரனுக்கு கார் கதவை திறந்து விட்டார். அது உமாபதிக்கு மேலும் திகைப்பை தந்தது. இந்த மனிதன் லேசப்பட்டவன் அல்ல என்று மனதில் எண்ணிக் கொண்டான்.
மகாதேவனுக்கு ஃபோன் செய்து நடந்து விவரத்தை அவனிடம் கூறினான் உமாபதி. அதைக் கேட்ட மகாதேவனும் வியப்படைந்தான். ருத்ரன் தங்களுக்கு கொடுத்த வேலையை முடிக்க முடியாமல் போனதற்காக அவன் வெட்கம் கொண்டான். வேறு ஏதாவது ஒரு உதவியின் பொருட்டு, நிச்சயம் ருத்ரன் தங்களை அழைப்பான் என்று அவன் நம்பினான். ஆனால், ருத்ரன் அவர்களை அழைக்கவே இல்லை.
தங்களால் முடிந்த அனைத்து உத்திகளையும் பயன்படுத்தி நடராஜனை வீட்டை விட்டு வெளியே கொண்டு வர அவர்கள் பிரம்ம பிரயத்தனம் செய்தார்கள். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் வீட்டை விட்டு வெளியே வர தயாராக இல்லை நடராஜன்.
மறுநாள் சக்தியின் திருமணம். அப்பொழுதும் ருத்ரன் அமைதி காக்கவே, மகாதேவனே அவனுக்கு ஃபோன் செய்தான். அவனது அழைப்பை ஏற்றான் ருத்ரன்.
"சொல்லுங்க"
"சார், நாளைக்கு சக்தி மேடத்தோட கல்யாணம்"
"நீங்க என்னை இன்வைட் பண்றீங்களா?" என்றான் கிண்டலாக.
"எங்களை மன்னிச்சிடுங்க சார்"
"பரவாயில்லை விடுங்க. நீங்க எனக்கு எதுக்கு ஃபோன் பண்ணீங்கன்னு சொல்லுங்க"
"சார், நாங்க வேணும்னா நடராஜனை கிட்நாப் பண்ணிடட்டுமா?"
"அவசியம் இல்ல..."
"நீங்க எங்க மேல வருத்தத்துல இருக்கீங்கன்னு எங்களுக்கு தெரியும்..."
"அதனால?"
"நடராஜனை நாங்க அடிக்கும் போது யாரும் பாக்க கூடாதுன்னு நீங்க சொன்னீங்க. அதனால தான் சார் அவன் கிட்ட எங்களால நெருங்க முடியல. அவன் எப்பவும் யார் கூடவாது இருந்துகிட்டு இருந்தான்"
"ம்ம்ம்"
"எங்களுக்கு ஒரு சான்ஸ் குடுங்க சார். நாங்க அவனை முடிச்சுடறோம்"
"பரவாயில்லை விடுங்க மகாதேவன். எனக்கு தேவைப்பட்டா நான் உங்களை கூப்பிடுறேன்"
"நெஜமாத்தான் சொல்றீங்களா சார்?"
" ஆமாம்"
"நாங்க உங்ககிட்ட கை நீட்டி காசு வாங்கி இருக்கோமே, சார்..."
"அதை என்னோட அன்பளிப்பா வச்சுக்கோங்க. நீங்க எனக்காக வேலை செஞ்சு இருக்கீங்க. நான் சேலம் வரும் போது எனக்குன்னு யாருமே இல்ல. ஆனா இப்போ, இந்த தெரியாத இடத்துல எனக்காக நீங்க எல்லாரும் இருக்கீங்க..."
மகாதேவன் மனம் இளகிப் போனான்.
"சார், பணம், நீங்க கொடுத்த வேலை, இதுக்கெல்லாம் அப்பாற்பட்டு, நீங்க எங்களை எப்ப வேணாலும், எதுக்காக வேணும்னாலும் கூப்பிடலாம் சார்" என்றான் மகாதேவன்.
"தேங்க்ஸ்" என்றபடி அழைப்பை துண்டித்தான் ருத்ரன்.
தன் முன்னாள் நின்றிருந்த தனது நண்பர்களை வேதனையுடன் பார்த்தான் மகாதேவன்.
"ருத்ரன் சாரை நம்ம வாழ்நாளில் எப்பவுமே மறக்கக் கூடாது. அவருக்கு எப்போ, எது, தேவைனாலும் அதை செய்ய நம்ம ரெடியா இருக்கணும்" என்றான்.
சரி என்று யோசிக்காமல் தலையசைத்தார்கள் அவர்கள்.
"ருத்ரன் சார் இந்த கல்யாணத்தை நிறுத்த ஏதோ பிளான் பண்ணிக்கிட்டு இருக்காரு. நம்ம அதுல தலையிட வேண்டாம். ஆனா, அவருக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டா செய்ய, நம்ம தயாரா இருக்கணும்"
"நிச்சயம் செய்யலாம்" என்று ஒப்புக் கொண்டார்கள் மற்றவர்கள்.
இரண்டு நாட்களுக்குப் பிறகும், ருத்ரன் எதுவும் செய்வதாய் தெரியவில்லை. மகாதேவனிடம் எந்த உதவியும் கேட்கவில்லை. மகாதேவனும் அவனது நண்பர்களும் மொத்தமாய் நிம்மதி இழந்து விட்டார்கள். ஏனென்றால், அடுத்த நாள் சக்தியின் திருமணம்.
மறுநாள்
சக்தி திருமணத்திற்கு தயாரானாள். எளிமையான புடவையில் பார்ப்பவர் பிரமிக்கும் அளவிற்கு அழகாய் இருந்தாள் சக்தி. திருமணத்திற்காக நிறைய செலவு செய்ய தயாராக இல்லை நடராஜனின் அம்மா விசாலாட்சி. அதனால் வெறும் ஆயிரத்து ஐநூறு ரூபாயில் சக்திக்கு பட்டுப்புடவை வாங்கிக் கொடுத்திருந்தார். அந்தப் புடவை எளிமையாகவே இருந்த போதிலும், அதனால் சக்தியின் அழகை குறைத்து காட்ட முடியவில்லை.
ருத்ரன் திருமண மண்டபத்திற்குள் நுழைவதை பார்த்த மகாதேவனும் அவனது நண்பர்களும் பேச்சிழந்து போனார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் விளங்காமல் பார்த்துக் கொண்டார்கள். தன்னை பின்தொடர்ந்து வருமாறு அவர்களுக்கு செய்கை செய்தான் மகாதேவன். திருமண மண்டபத்திற்கு வந்த அவர்கள், கடைசி இருக்கையில் அமைதியாய் அமர்ந்து கொண்டு ருத்ரன் என்ன செய்கிறான் என்று பார்க்கலானார்கள்.
மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தார் புரோகிதர். நடராஜன் மணமேடைக்கு வந்தான். நடராஜனை தன் கண் பார்வையாலேயே எரித்து விடுபவன் போல் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த ருத்ரன், தன் கைபேசிக்கு வந்த ஒரு குறுஞ்செய்தியை பார்த்து புன்முறுவழித்தான்.
ருத்ரனின் இதயம் துடிப்பதை சில நொடிகள் நிறுத்தியது சக்தியை பார்த்தபோது. அவன் இதயத்தை என்ன... அவன் மூச்சையே நிறுத்தும் அளவிற்கு அவள் அழகாய் இருந்தாள். ஒருவேளை, அவள் ருத்ரனை திருமணம் செய்து கொள்ள வில்லை என்றால், நிச்சயம் அவன் மூச்சு நின்று தான் போகும்.
சக்தி நடராஜன் பக்கத்தில் அமர முனைந்த போது,
"இந்த கல்யாணத்தை நிறுத்துங்க" என்று யாரோ கூறுவது கேட்டது.
மண்டபத்திற்குள் நுழைந்த போலீஸ்காரர்கள் மேடையை நோக்கி முன்னேறினார்கள்.
"என்ன ஆச்சு சார்? எதுக்காக கல்யாணத்தை நிறுத்த சொல்றீங்க?" என்றார் நடராஜனின் அப்பா அருணாச்சலம்.
"உங்க பிள்ளை வேலை செஞ்சுக்கிட்டு இருந்த வீட்டு முதலாளி பக்தவச்சலம் உங்க பையன் மேல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காரு"
"கம்ப்ளைன்டா என்ன கம்பிளைன்ட்?"என்றான் நடராஜன்.
"இருபது லட்ச ரூபா மதிப்புள்ள வைர நெக்லஸ் முந்தா நேத்து அவங்க வீட்ல காணாம போயிருக்கு. அன்னைக்கு நடராஜன் மட்டும் தான் அவங்க வீட்டுக்கு வந்திருக்கான்"
நடராஜனை நம்ப முடியாத பார்வை பார்த்தாள் சக்தி.
"அடுத்த நாள் அவருக்கு ஃபோன் பண்ணி, நான் இனிமேல் வேலைக்கு வரமாட்டேன்னு சொல்லி இருக்கான். எதுக்காக அவ்வளவு அவசரமா கல்யாணத்தை வச்சுக்கிட்டு அவன் வேலையை விடனும்? வேலையில்லாம, புதுசா வந்த பொண்டாட்டிக்கு எப்படி சோறு போடுவான்? அந்த நெக்லஸை வச்சு ஏதோ செய்ய இவன் திட்டம் போட்டு இருக்கான்"
"இல்ல, அதை நான் திருடல என்னை நம்புங்க"அரற்றினான் நடராஜன்.
"எது எப்படியா இருந்தாலும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சொல்லு" என்றார் ஆய்வாளர்.
"கல்யாணம் முடிஞ்சதும் நிச்சயமா வரேன் சார்" என்றான் நடராஜன்.
சக்தியை நோக்கி திரும்பிய ஆய்வாளர்,
"இந்த திருட்டு பயலை நீ நிச்சயம் கல்யாணம் பண்ணிக்கணுமா மா?' என்றார்.
"இல்ல இன்ஸ்பெக்டர், என் பிள்ளை திருடி இருக்க மாட்டான்" என்றார் விசாலாட்சி.
"ஆமாம் சார், நான் திருடல" என்றான் நடராஜன்.
"அப்படின்னா ஒன்னு செய்யுங்க,பக்தவச்சலம் சாருக்கு இருபது லட்சம் கொடுத்தா நான் உங்களை விட்டுடுறேன்"
"இருபது லட்சமா? அவ்வளவு பணத்துக்கு நாங்க எங்க சார் போறது?" என்றான் நடராஜன்.
"அப்படின்னா என்னால எதுவும் செய்ய முடியாது" என்றார் ஆய்வாளர்.
"எங்ககிட்ட அவ்வளவு பணம் இல்ல சார். தயவு செய்து எங்களை நம்புங்க" என்றார் விசாலாட்சி.
"பக்தவச்சலம் வீட்ல இருந்து வைர நெக்லஸை திருடினதுக்காக உன்னை நான் அரெஸ்ட் பண்றேன்" என்ற ஆய்வாளர், தன்னுடன் வந்திருந்த போலீஸ்காரருக்கு நடராஜை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தார்.
கைவிலங்கோடு அவனை அனுகினார் ஒரு போலீஸ்காரர்.
அப்பொழுது,
"நான் இருபது லட்சம் தரேன்" என்ற குரல் கேட்டு அனைவரும் திரும்பினார்கள்.
அந்த வார்த்தையை உதிர்த்தது ருத்ரன் என்று தெரிந்த சக்தியின் முகம், சந்தோஷத்தில் மின்னியது.தன் திருமணத்திற்கு அவனை அழைக்க வேண்டும் என்று அவள் மிகவும் ஆசைப்பட்டாள். ஆனால் அவனது முகவரியோ, கைபேசி எண்ணோ இல்லாததால் அவளால் அதை செய்ய முடியவில்லை. தான் அழைக்காமலேயே தன் திருமணத்திற்கு வந்தது மட்டும் அல்லாமல் தங்களுக்கு உதவவும் அவன் முன்வந்ததை எண்ணி அவள் பெருமிதம் கொண்டாள்.
தன்னைப் பார்த்து சக்தி புன்னகைத்ததை கவனித்த ருத்ரன், தானும் புன்னகை புரிந்தான். ஆனால் அவன் உதிர்த்த அடுத்த வார்த்தைகள், அவளது புன்னகையை மாயமாய் மறைய செய்தது.
"நான் உங்களுக்கு இருபது லட்சம் கொடுக்கிறேன். ஆனா, சக்தியை நான் கல்யாணம் பண்ணிக்குவேன்" என்று கூறி அந்த இடத்தை நிசப்தம் அடையச் செய்தான் ருத்ரன்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top