ஏதோ செய்கிறாய்
வால்பாறை. மார்ச்-2020.
ஒரு மாலை நேரம்.
"ஆனா, சத்தியமா சொல்றேன்.. வெறும் நாலெட்டு தான்.. ஹோட்டல் வந்துடும்னு சொல்லிட்டு, இப்படி நாக்குத் தள்ள மூன்றரை கிலோ மீட்டர் நடக்க வச்சுட்டல?? உன்னையெல்லாம் நம்பி இனிமேல் எங்கயுமே வரமாட்டேன்டி நானு. அக்காவாடி நீ? ராட்சசி!!"
மூச்சிரைக்கப் பேசிக்கொண்டே முதுகுப்புறம் மாட்டியிருந்த பெரிய்ய பையை சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு நடந்துவந்தாள் அவளது தங்கை. அதைப்போலவே பயணப் பை ஒன்றோடும், கையில் கைபேசியோடும், கண்ணில் பரிதாபகரமான பார்வையோடும் அங்குமிங்கும் பார்த்தவாறு நடந்தாள் அவள்.
"வேணும்னா செஞ்சேன் சாரூ.. இந்த கூகுள் பழிவாங்கிடுச்சு.. ஒரு லெஃப்ட் டர்ன் தப்பா எடுத்ததால, இவ்ளோ தூரம் சுத்திட்டு இருக்கோம்.. நான் என்ன பண்ணுவேன்??"
அழுதுவிடும் குரலில் கேட்டாள் தங்கையிடம் திரும்பி.
"சரி.. இப்பயாச்சும் ஹோட்டலை கண்டுபிடிச்சயா, அதுவும் இல்ல.. இன்னும் எவ்ளோ நேரம்தான் இப்படி மலையேற வைக்கப் போற?? வால்பாறை வர்ற எத்தனையோ ஆயிரம் டூரிஸ்டெல்லாம் சந்தோஷமா என்ஜாய் பண்ணறாங்க.. நான் மட்டும் உன்கூட மாட்டிக்கிட்டு... ஹூம்.."
சாரு பயங்கரமாய் சலித்துக்கொண்டாள். அவளுக்கு அவமானமாகவும், ஏமாற்றமாகவும் இருந்தது.
இரண்டெட்டு எடுத்துவைத்துவிட்டுப் பக்கவாட்டில் பார்த்தபோது, தங்கையைக் காணவில்லை. பதறிப்போய்த் திரும்பி அங்குமிங்கும் தேடினால், ஒரு மரத்தடி பெஞ்ச்சில் அமர்ந்து மூச்சு வாங்கிக்கொண்டிருந்தாள் அவள்.
"சாரூ!! சொல்லாமக் கொள்ளாம இப்டி உக்காந்துக்கிட்டா எனக்கு திக்குனு இருக்கும்ல?"
"ஹேமா.. இன்னும் பத்து நிமிஷம் நடந்தேன்னா நான் பரலோகமே போய்டுவேன் போல இருக்கு!! உட்காரு.. யாராச்சும் ஆளுங்க வந்தா வழி கேட்கலாம்"
"ப்ச்.. இப்பவே மணி அஞ்சரை ஆச்சு. மலைல எல்லாம் சீக்கிரமே இருட்டிடும் சாரூ.. கோச்சிக்காம என்கூட எழுந்து வா. ஹோட்டலுக்குப் போயிடலாம்"
"அப்பவே ஆட்டோ புடிக்க சொன்னேன் கேட்டியா?" எனச் சிணுங்கியவாறே எழுந்தாள் சாரு.
அப்போது சாலையின் எதிர்ப்பக்கதிலிருந்து யாரோ அவர்களை நோக்கி நடந்துவர, தன்னிச்சையாகவே சாருவைப் பாதுகாத்து அவள்முன் நின்றாள் ஹேமா.
வந்ததோ ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க இளைஞன். கண்ணில் அணிந்திருந்த மூக்குக் கண்ணாடி அவனை கொஞ்சம் வயது கூட்டிக் காட்டியது. இனினும் அதை சரிசெய்ய அவனது அதரங்களில் பொங்கிய புன்னகை முயன்று வெற்றியும் பெற்றிருந்தது.
நீலவண்ண ஸ்வெட்டரும் ஸ்கார்ஃபும் அணிந்திருந்த அந்த ஆடவன், தன்னிடம் அபாயமில்லை என்பதான பாவத்தில் கைகளை மார்புயரத்திற்கு உயர்த்தியவாறே அருகில் வந்தான்.
"ஹாய்.. நீங்க Valley-view resortக்கு போகணுமா?"
ஹேமா சற்றே வியப்பாக அவனைப் பார்த்தாள்.
"எப்படித் தெரியும்?"
"ம்ம்.. உங்க பேகோட ஸைட்ல வெச்சிருக்க டிஸ்யூ பேப்பர்ல அந்த ரிசார்ட்டோட லோகோ போட்டிருக்கு. ஸோ, நீங்க அங்க தங்கியிருக்கீங்க. கால்ல ஷூவுல மண்ணும் சேறும் ஒட்டியிருக்கு. ஸோ, வெளிய எங்கேயோ போயிட்டு வர்றீங்க. உங்க ஃப்ரெண்ட் முகத்துல செம்மயா கடுப்பு தெரியுது... ஸோ, திரும்பிப் போக வழி தெரியாம சுத்திட்டு இருக்கீங்கனு தெரிஞ்சுக்கிட்டேன்."
சாரு ஆச்சரியமாகச் சிரித்தாள்.
"பிரதர், நீங்க ஷெர்லாக் ஹோம்ஸ் தான்னு ஒத்துக்கறோம்.. கொஞ்சம் வழியை சொல்றீங்களா?"
"வாங்க, அந்தப்பக்கம் தான் நானும் போறேன்"
ஹேமா சற்றே சந்தேகமாகப் பார்க்க, அவனோ சாதாரணமாக, "நீங்க தங்கியிருக்க ரிசார்ட்டுக்குப் பக்கத்து ரிசார்ட்ல தான் நான் இருக்கேன்" என்றான்.
சாரு அவளது கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு நடக்க, ஹேமாவும் உடன்நடந்தாள்.
தாங்கள் செல்ல நினைத்த பாதைக்கு நேரெதிராக அவன் நடத்திச் செல்ல, சாரு ஹேமாவை நன்றாக முறைத்தாள்.
"நல்லவேளை சார் வந்தாரு.. இல்லன்னா காட்டுக்குள்ள கூட்டிட்டுப் போயி என்னைத் தொலைய விட்டுருப்ப இல்ல நீ?? எத்தனை நாள் ப்ளான் ஹேமா?" என்றாள் பற்களைக் கடித்துக்கொண்டு.
அந்த இளைஞனோ சத்தமாகச் சிரித்தான்.
"உங்க ஃப்ரெண்டு பாவம்ங்க.. கூகுள் மேப்ல இங்கிருக்கற வழியெல்லாம் சரியா காட்டாது. ரொம்பக் கோபப்படாதீங்க.."
"ஷெர்லாக் ஹோம்ஸ் சார்.. என் ஃப்ரெண்டு இல்ல, இந்தக் கழுதை எங்க அக்கா!"
அலுத்துக்கொண்டே சாரு உரைக்க, ஹேமா அவளைத் தோளில் லேசாகத் தட்டினாள்.
அவன் இருவரையும் திரும்பிப் பார்த்து முறுவலித்துவிட்டுத் தன்பாட்டில் நடந்தான். பதினைந்து நிமிடங்களில் அவர்கள் தங்கியிருந்த விடுதி வந்துவிட, எதிரே இருந்த இன்னொரு விடுதியின் பெயர்ப்பலகையைச் சுட்டிக் காட்டியபடி, "Green Hill Inn. என் ரிசார்ட் அதுதான்" என்றுவிட்டு, சாருவுக்கும் ஹேமாவுக்கும் கைகாட்டினான்.
"சேஃபா போங்க, டேக் கேர். பை"
"ரொம்ப தேங்க்ஸ் சார். நீங்க இல்லைன்னா இன்னும் வழி தெரியாமத் தான் சுத்திட்டு இருந்திருப்போம்.."
"சேச்சே.. பரவால்ல. சாரெல்லாம் வேணாம். ஹரிஹரன். ஹரின்னு கூப்பிடலாம்; இனிமேல் பார்த்தா."
"ம்ம், ஸ்யூர். தேங்க்ஸ்"
**
"ஏன் ஹேமா.. அந்த ஆளு பார்க்க செம்மையா இருந்தான்ல?"
அறையின் கதகதப்பான இளம்வெப்பத்தில் நுழைந்து கதவைப் பூட்டியவாறே கேட்டாள் சாரு.
"சாரூ, உன்கூட தான நானும் வந்தேன்.. எந்த கேப்புல அவனை அனலைஸ் பண்ணின நீ?"
"ஹாஹாஹா! என் அம்மாஞ்சி அக்காவே! இதுக்கெல்லாம் தனித் திறமை வேணும்! எலிமென்ட்ரி ஸ்கூல் டீச்சருக்கெல்லாம் அந்த டேலண்ட் ஏது?"
"இந்தக் காலத்து காலேஜ்ல எல்லாம் என்னதான் சொல்லித் தர்றாங்களோ? எப்டி சாரு இப்படியெல்லாம் மாறின?"
"ஏய் ஏய், மூணு வருஷம் தானடி வித்தியாசம் ரெண்டு பேருக்கும்.. அதுக்குள்ள 'இந்தக் காலம், அந்தக் காலம்'னு பேசுறியே? டீச்சர்னாலே இப்படித்தானோ? என்னத் தான் அப்படி சொல்லித் தர்றாங்களோ டீச்சர் ட்ரெயினிங்ல!?"
பொய்க்கோபத்துடன் ஒரு தலையணையை எடுத்துத் தங்கையின்மீது வீசினாள் ஹேமா. அதை அலேக்காகக் கையில் பிடித்தவள், மடியில் வைத்துக்கொண்டு தீவிரமாக, "சரி அதவிடு, அவன் முகத்தையாச்சும் பார்த்தியா? கண்ணாடி போட்டிருந்தாலும் நல்ல களையா இருந்தான்ல..?" என வினவினாள்.
"அதென்ன கண்ணாடி போட்டிருந்தாலும்? கண்ணாடி போடாதவங்களை விட, கண்ணாடியில எத்தனை பேரு க்யூட்டா செக்ஸியா இருப்பாங்க தெரியுமா?"
"ஐ... அப்ப நீ அவனைப் பார்த்த..! அவன் செக்ஸியா இருக்கான்னு சொல்ற அதான?"
வாய்க்கொள்ளாச் சிரிப்புடன் அவள் வம்பிழுக்க வர, ஹேமாவோ வெட்கப்பட்டு முகம் சுழித்தாள்.
"சும்மா இரு சாரூ! அப்டிலாம் ஒண்ணும் கிடையாது! நான் பொதுவா சொன்னேன்.. க்ரிஸ் இவான்ஸ் தெரியுமா? அவரைக் கண்ணாடியோட பார்த்தா அவ்ளோ ஹேன்சமா இருப்பார்.. அதைத்தான் நெனச்சு சொன்னேன்!"
"அடடடடடா! உன் மனசுக்குள்ள இத்தனை ஆசைகளா ஹேமா? ஊமைக்கொட்டான் மாதிரி இருந்துக்கிட்டு, ஹாலிவுட் ஆக்டர் வரை சைட்டடிச்சிருக்க நீ!? உன்னைப் போய் அப்பாவின்னு தப்பா நினைச்சிட்டேனே.."
"சாரூ.. உன்னைக் கொல்லப் போறேன் நானு! குளிச்சிட்டு வா, டிபன் சாப்பிடப் போலாம். பசி வயித்தைக் கிள்ளுது!"
"ஹான்.. வரேன் வரேன்.. எனக்கும்தான் பசிக்குது. ட்ரெக்கிங் போலாம்னு வழி தெரியாம ரோடு ரோடா அலைய விட்டல்ல என்னை? ஒழுங்கா ரெண்டு ப்ளேட் பரோட்டா வாங்கிக் குடு, இல்ல..."
"ப்ச் பரோட்டாவெல்லாம்--"
"உடம்புக்குக் கேடுன்னு ஆரம்பிக்காதீங்க டீச்சரம்மா! அதை உங்க எல்.கே.ஜி பசங்ககிட்ட வெச்சிக்கோங்க! ஒரு நாளைக்கு தின்னா ஒண்ணும் ஆகாது. ஒழுங்கா வந்து வாங்கிக்குடு. இல்லன்னா அப்பாகிட்ட புகார் பண்ணுவேன்!!"
கைநீட்டி எச்சரித்துவிட்டு குளியலறைக் கதவை அவள் மூட, பெருமூச்சுடன் கட்டிலில் அமர்ந்தாள் ஹேமா.
"நீ மூச்சு விடறது எனக்கே கேக்குதுடி!!" எனக் கதவைத் தாண்டிக் குரல் வர, சிரித்தவள் எழுந்து நிலைக்கண்ணாடி முன்னால் தலைவாரச் சென்றாள்.
இருபது நிமிடங்களில் தரைத்தளத்தின் உணவுக் கூடத்திற்குச் சென்று சாரு கேட்டவற்றை எல்லாம் ஆர்டர் செய்தபோது, கைபேசியில் பெற்றோர் அழைத்தனர். இடதுகையில் அதை ஏற்று ஸ்பீக்கரில் போட்டாள் ஹேமா.
"ஹலோ அப்பா.. சொல்லுங்க.. கேக்குதா?"
"கேக்குதுடா. ஹேமா, எப்டி இருக்கீங்க ரெண்டு பேரும்? குளிர் அதிகமா? சாப்பாடெல்லாம் ஓகேவா? இந்த நேரத்துல டூர் போகவேணாம்னு நாங்க சொன்னோம்.. கேக்கவே மாட்டாம ரெண்டு பேரும் குதிச்சீங்க.. எப்டி இருக்கு வால்பாறை?"
"நல்லா தான்ப்பா இருக்கு.. நீங்க பயப்படற மாதிரி இங்க ஒண்ணுமே இல்ல. எல்லாம் சேஃப் தான்.."
"ஆமா டாடி.. கொரோனாவெல்லாம் இண்டியாவுல சர்வைவே ஆகாதுன்னு ரேடியோல சொன்னாங்க! அது குளிரான க்ளைமேட்ல தான் வளருமாம். நம்ம ஊருக்கெல்லாம் வராது!"
"ஆமா, பெரிய்ய டாக்டரு.. கருத்து சொல்லிட்டாங்க! ஆப்பிரிக்கா நம்மளை விட சூடான நாடுடி.. அங்கயே வைரஸ் வந்துடுச்சாம்! ஃப்ளைட்டெல்லாம் ரத்து பண்ணி நம்மூர் ஆளுங்க ஏர்ப்போர்ட்ல அகதியா நிக்கிறாங்க. நீங்க சீக்கிரம் வீட்டுக்குத் திரும்பி வாங்க!"
"அம்மா, இன்னும் ஒரு நாள் தான்ம்மா.. நாளன்னிக்கு ட்ரெயின் டிக்கெட் புக் பண்ணியாச்சு. ஞாயித்துக்கிழமை காலைல வீட்ல இருப்போம் நாங்க!"
"ஹேமா.. நீ பொறுப்புள்ள பொண்ணு. நீதான் அந்த அறுந்தவாலை ஒழுங்கா வீட்டுக்கு கூட்டிட்டு வரணும், புரியுதா?"
"சரிம்மா.. நீங்க கவலைப்படாம தூங்குங்க. டாட்டா பைபை!"
***
நடுநிசியில் கைபேசி உரத்து ஒலிக்க, அலறியடித்து எழுந்தனர் அக்காவும் தங்கையும்.
"ம்மா...!? இந்த நேரத்துல எதுக்குமா ஃபோன் அடிக்கற?"
"இந்த நேரமா!? மணியை பாருடி, அஞ்சாச்சு!!"
"ப்ச்.. உனக்கு மனசாட்சியே கிடையாதா? லீவுல கூட எங்க தூக்கத்தைக் கெடுக்கணுமா? இல்லேன்னா உனக்குத் தூக்கம் வராதா?"
"ஏய் சாரூ!! அறைஞ்சேன்னா தெரியுமா? அக்கா கிட்ட ஃபோனை குடுடி!!!"
பதற்றமாக எதிர்முனை பேச, சாரூ கைபேசியை ஹேமாவிடம் தந்துவிட்டு மீண்டும் படுத்துக்கொள்ள, ஹேமா சற்றே கரிசனமாக வாங்கிக் காதில் வைத்தாள் கைபேசியை.
"என்னாச்சுமா?"
"நியூஸை பாருடி ஹேமா!! இந்தியாவுல நாடுதழுவிய ஊரடங்கு போடப் போறாங்களாம்!!"
"அப்டின்னா?"
"லாக்-டவுணாம்! யாரும் எங்கயும் வீட்டை விட்டுப் போக முடியாது. நாளைக்கு இருபத்தி நாலாம் தேதில இருந்து லாக்-டவுன், ஒரு வாரத்துக்கு பஸ்ஸோ ட்ரெயினோ கிடையாது! நீங்க இப்பவே கிளம்பி வீட்டுக்கு வாங்க!!"
தூக்கம் முழுமையாகக் கலைந்து விழித்து அதிர்ச்சியாக அமர்ந்திருந்தாள் அவள். கையால் போர்வையைத் தட்டி சாருவை எழுப்பினாள்.
"சாரூ.. லாக்-டவுண் போடறாங்களாம்.."
"ஹான்.. கூட ரெண்டு காபியும் போடச் சொல்லு..."
"ஏய்.. 144 தடைச்சட்டம் போட்டாச்சாம்டி!! வீட்டை விட்டு யாரும் வெளிய வரக் கூடாதாம்!!"
"ப்ச்.. இப்பதான ஜனதா ஊரடங்குன்னு சண்டே எல்லாரும் மாடியில நின்னு தட்டை தட்டுனாங்க.. அதுலயே கொரோனா செத்துடும்னு சொன்னாங்களே... இன்னும் சாகலியா?"
"சாரூ!! ஜோக் பண்றதுக்கு நேரமில்ல!! எழுந்திரி!! நான் போயி கோயமுத்தூருக்கு பஸ் எதாச்சும் இருக்கான்னு கேக்கறேன். அங்கிருந்து அன்-ரிசர்வ்லயாச்சும் எப்படியாவது ராமநாதபுரம் போயிடலாம்.."
"வாத்தியாரே.. சாப்ட்டு சாயங்காலமா போலாமா? இன்னிக்கு வியூ பாயிண்ட்டுக்கு கூட்டிட்டுப் போறேன்னு சொன்னியே ஹேமா..?"
"ரொம்ப முக்கியமா? எக்குத்தப்பா சிக்கிட்டோம்னா அப்பறம் வியூ பாயிண்டை மட்டும்தான் பாக்க முடியும்; வீட்டைப் பார்க்க முடியாது!!"
அவள் உடைமாற்றி வெளியே வந்த நேரத்தில் அனைவருமே அங்குமிங்கும் பதற்றமாக ஓடிக்கொண்டிருந்தனர். விடுதி நிர்வாகத்தினர் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். ஹேமா வரவேற்பு மேசைக்குச் சென்றாள்.
"எக்ஸ்க்யூஸ்மீ.. வால்பாறைல இருந்து கோயமுத்தூருக்கு பஸ் இருக்கா?"
"மேடம்.. வால்பாறை பஸ்ஸுங்க எல்லாமே கேன்சல்! கவர்மெண்ட் பஸ் ஒண்ணே ஒண்ணுதான்.. அதுக்கும் கூட்டம் பாருங்க அங்கே!"
வெறும் ஐம்பது இருக்கைகள் கொண்ட பேருந்துக்கு, சுமார் இருநூறு பேர் காத்திருக்க, ஹேமா விழிவிரித்து ஆயாசமானாள்.
அறைக்கு வந்து தலையைப் பிடித்தபடி அவள் அமர, அதற்குள் எழுந்து கைபேசியை நோண்டிக் கொண்டிருந்த சாரு நிமிர்ந்து பார்த்தாள்.
"ஓலா, ஊபர்னு எதுவுமே இல்ல இந்த ஊர்ல.. சரி, நடந்தே எப்படியாச்சும் கீழே போயிடலாம்னு பார்த்தா, இங்க சிறுத்தை நடமாட்டம் வேற இருக்காமே..? ப்ச், ஆசையா காலேஜ் லீவுல டூர் வந்ததுக்கு.. இப்படியா ஆகணும்?"
"ஸ்கூல் காலேஜெல்லாம் லீவு விட்டதே கொரோனாவுக்கு பயந்துதான்.. அதுலயும் அடங்காம டூர் வந்ததுக்கு, நமக்கிது தேவைதான்!!"
"ஹேமா.. வண்டி கிடைக்கலைன்னா என்ன ஹேமா பண்றது?"
"சாரூ.. நீ பயப்படாத, நான் உன்னை வீட்ல பத்திரமா கொண்டு சேர்ப்பேன், புரியுதா? போய் பேகை பேக் பண்ணு."
"ஹேமா.. ரியாலிட்டி எனக்கும் புரியும். வெளிய பாரு.. வராத பஸ்சுக்கு எத்தனை கூட்டம்னு.. நம்ம வீட்டுக்குப் போக முடியாது."
ஹேமா அழுதுவிடும் நிலையில் இருக்க, சாருவும் கலங்கிப் போயிருந்தாள்.
மதியம்வரை பேருந்திற்காகக் காத்திருந்த கூட்டம் பொறுமையிழந்து கலவரம் செய்யத் தொடங்கியிருக்க, அப்பகுதியிலிருந்த அனைத்து விடுதிகளின் பணியாளர்களும் தங்களால் இயன்றவரை வாகனங்கள் ஏற்பாடு செய்து பயணிகளை அனுப்பி வைத்துக் கொண்டிருந்தனர். ஹேமாவும் சாருவும் ஓரமாக ஒரு பெஞ்ச்சில் அமர்ந்திருந்தனர்.
"சாரு.. பசிக்குதா உனக்கு? நான் பிஸ்கெட் எதாச்சும் வாங்கிட்டு வரட்டா?"
"வேணாம் ஹேமா. உட்காரு. பஸ் வந்துடும்."
பசி மயக்கத்தில் தன் தோளில் சரிந்து கிடந்த தங்கையின் முகத்தை வேதனையுடன் பார்த்தாள் ஹேமா. வழியுமுன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு மூச்சிழுத்து விட்டுக்கொண்டாள்.
"என்ன ஆச்சு? ஏன் இப்டி உக்கார்ந்திருக்கீங்க?"
சற்றுப் பரிச்சயமான குரலொன்றைக் கேட்டு இருவரும் நிமிர்ந்தனர்.
சோர்வாக, "ஹாய் ஷெர்லாக், கொரோனா தின நல்வாழ்த்துக்கள்" என்றாள் சாரு.
அவனும் சோர்வுடன் சிரித்து, "யாருமே எதிர்பார்க்கல, இப்படியெல்லாம் ஆகும்னு. நீங்க கொஞ்ச நாள் இங்கேயே ஹோட்டல்ல தங்கிட்டு, அப்பறமா போலாமே? ஏன் எல்லாரை மாதிரியும் கூட்டத்துக்குள்ள போறீங்க? இப்டி கூட்டத்துல போனா கொரோனா வர்றதுக்கு வாய்ப்பு அதிகமாச்சே?" என்றான்.
"ஹோட்டல்ல இருக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. ஸ்டாஃப் யாருக்கோ உடம்பு சரியில்லை, ஸோ, ஹோட்டலை அவங்களே க்ளோஸ் பண்றாங்களாம். வேற ஹோட்டல்லயும் ரூம்ஸ் கிடையாது. இப்ப என்ன பண்றதுன்னே தெரியல"
இருவரையும் பார்த்தவன், சற்றே செருமிக்கொண்டு, "உங்களுக்கு ஓகேன்னா.. என்ட்ட ஒரு ஐடியா இருக்கு" என்றான்.
சாரு கண்களில் நம்பிக்கையுடன் நிமிர்ந்தாள்.
"என்கூட வாங்களேன்."
"எங்கே?"
"வேட்டைக்காரன்புதூர்."
"அங்க உங்களுக்குத் தெரிஞ்சவங்க வீடு இருக்கா?"
"அட, என் வீடே அங்கதான் இருக்கு! கூட்டம் குறைஞ்சதும் கிளம்பலாம்னு இருக்கேன்."
ஹேமா சாருவைத் திரும்பிப் பார்க்க, அவள் தோளைக் குலுக்கினாள். "எனக்கு நோ ப்ராப்ளம்"
"இருந்தாலும்..." என இழுத்தாள் ஹேமா.
"அட, எப்படியும் அடுத்த வாரம் மறுபடி பஸ்ஸெல்லாம் ஓட ஆரம்பிச்சிடும். இங்க இருக்கறதை விட, கீழ இருந்தா சீக்கிரமாவே பஸ் பிடிச்சு வீட்டுக்குப் போயிடலாம். யோசிக்காம வாங்க.. எங்க வீட்ல எங்கப்பா, அம்மா, பாட்டி, தாத்தான்னு எல்லாருமே இருக்காங்க. என்னை மட்டும் பார்த்து பயப்பட வேணாம்"
"சேச்சே.. அப்டிலாம் இல்ல..."
"அப்பறமென்ன.. தைரியமா வாங்க."
"ரொம்ப தேங்க்ஸ் ஹரி.."
"இருக்கட்டும் பரவால்ல"
சாரு கைபேசியில் பெற்றோருக்கு அழைத்துத் தகவல் தெரிவிக்க, அதிசயமாக அவர்களுமே மறுக்காமல் ஒப்புக்கொண்டனர் இந்த யோசனையை. காணொளியில் ஹரியிடம் பேசியவர்கள், அங்கேயே சென்று தங்கச் அனுமதித்தனர் அவர்களை.
"ஹோட்டல்ல இருக்கறதை விட, வீடு எவ்வளவோ பரவால்ல. அந்த பையனைப் பார்த்தா நல்லவரா தான் தெரியுது. நீங்க வீட்டுக்குப் போயிட்டு கால் பண்ணுங்க"
"சரிம்மா, நீங்களும் அப்பாவும் சேஃபா இருங்க.. நாங்க அடுத்த வாரம் வீட்டுக்கு வந்துடுவோம்."
***
ஹரியின் மகிழுந்தில், பின்சீட்டில் நன்றாகப் படுத்து உறங்கிவிட்ட சாருவை வாஞ்சையாகத் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் ஹரியிடம் திரும்பினாள் ஹேமா.
"நீங்க செய்யற இந்த ஹெல்ப்புக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. சாருவை நினைச்சுதான் நான் பயந்தேன். எப்படி ஒரு வாரம் தன்னந்தனியா மலைமேல இருக்கறதுன்னு. கடவுள் மாதிரி வந்தீங்க நீங்க. ரொம்ப ரொம்ப நன்றி.."
"மனுஷனுக்கு மனுஷன் உதவி செய்யறது சாதாரணமான விஷயம் தான்ங்க.. பெரிசு படுத்தாதீங்க. ஏதோ என்னால முடிஞ்சுது"
"ரொம்பப் பெரிய மனசுங்க உங்களுக்கு. கண்டிப்பா இதை மறக்க மாட்டோம் நாங்க."
ஹரி புன்னகைத்தான் தண்மையாக.
வழியில் கடைகளெல்லாம் அடைத்திருக்க, சோதனைச் சாவடிகளில் எல்லாம் காவலர்கள் நிறைந்திருக்க, சாலைகள் யாவும் வாகனங்களின்றி வெறிச்சோடி இருக்க, அந்த அசாத்திய சூழல் ஹேமாவை அதிசயிக்கச் செய்தது.
வால்பாறை மலையிலிருந்து இறங்கி, கோட்டூர் சந்திப்பில் வந்து, பொள்ளாச்சி போகும் வழியில் செல்லாமல் வலதுபுறமாக அவன் திரும்ப, ஹேமா சற்றே கலவரமானாள்.
"எ.. எங்க போறோம்.. கூகுள்ல வேற வழி காட்டுதே..?"
"அச்சோ, பதற்றப்படாதீங்க. பொள்ளாச்சி டவுனுக்குள்ள இப்ப போக முடியாது. செக்போஸ்ட்ல மறிச்சிடுவாங்க. இங்கிருந்து அஞ்சு கிலோமீட்டர் தான் எங்க வீடு. உங்க பயம் நியாயம்தான், முன்னாலயே சொல்ல மறந்ததுக்கு ரொம்ப ஸாரி. நான்பாட்டுக்கு சாதாரணமா வண்டியை திருப்பிட்டேன்; உங்களோட நிலமை புரியாம. முன்னப்பின்ன தெரியாத என்னை நம்பி தங்கச்சியையும் கூட்டிட்டு வர்றீங்க.. உங்க நம்பிக்கைல நானும் பொறுப்பெடுக்கணும்ல? நீங்க வேணா என்னை ஃபோட்டோ எடுத்து உங்க பேரண்ட்சுக்கு அனுப்பிடுங்க. உங்களுக்கு என்ன ஆனாலும் நான்தான் பொறுப்புன்னு வேணாலும் சொல்லிடுங்க!"
"இல்ல.. திடீர்னு வழி மாறினதும் கொஞ்சம்.. பயமாகிடுச்சு.. அவ்ளோதான்.."
"தப்பில்லை. நாடு அப்படி."
பத்து நிமிடங்களில் கிராமத்தில் நுழைந்து ஒரு பாரம்பரியமான வீட்டின் முன்னால் வண்டி நிற்க, ஹரி இறங்கி அவளுக்குக் கதவைத் திறந்துவிட்டான்.
"வாங்க, இதுதான் எங்க வீடு"
ஹேமா அதிசயப்பார்வையுடன் வீட்டைப் பார்த்தாள் நிமிர்ந்து. அழகிய மாடங்களும், செந்நிற ஓடுகளும், அகன்ற தூண்களும் கொண்ட அழகிய வீடு அது.
வண்டி நின்றதில் சாரு தூக்கம் முழித்து சோம்பல் முறித்தவாறே எழுந்தாள்.
"அதுக்குள்ள வந்துடுச்சா?"
"ம்ம், உங்க வாங்க.. சாப்பாடு சூடா ரெடி!"
"ஐ! சாமி சோறு போடுது!!"
ஹரி வாய்விட்டுச் சிரிக்க, ஹேமா அசவுகரியமாக சிரித்துவிட்டு சாருவைத் தோளில் அடித்தாள்.
"வந்த இடத்துல கொஞ்சம் டீசண்டா பிகேவ் பண்ணு சாரு!!"
தங்கள் பைகளுடன் தயக்கமாக அவள் வாசலிலேயே நிற்க, வீட்டுக்குள்ளிருந்து வந்த சற்றே வயதான பெண்மணி ஒருவர், "ஹரி, வாப்பா.. இவங்கதான் நீ சொன்ன விருந்தாளிகளா?" என்றவாறு ஹேமாவையும் சாருவையும் அன்பாகப் பார்த்தார்.
"ஹாய் பாட்டி.. என் பேர் சாரூ. இது என் அக்கா ஹேமா. ராமநாதபுரத்துல இருந்து வால்பாறைக்கு வந்தோம்.. அப்பறம் கொரோனாவால ஊருக்குப் போக முடியாம இங்க வந்துட்டோம்."
"ஓ... வாங்கம்மா, கால் கழுவிட்டு உள்ள வாங்க. காலைல இருந்து சாப்பிட்டிருக்க மாட்டீங்க.. முதல்ல சாப்பிடுங்க, வாங்க"
பாசத்தோடு அவர் அழைக்க, முன்வாசலில் கால் அலம்பிவிட்டு உள்ளே நுழைந்தனர் இருவரும். சாரு ஹேமாவின் காதுக்குள், "வீடு பெருசா தான் இருக்கு. அனேகமா நிலத்துக்காரங்களா இருப்பாங்க போல.. நம்ம ஷெர்லாக் கொஞ்சம் பெரிய ஆளுதான் போல!" எனக் கிசுகிசுக்க, ஹேமா அவளை அடக்கிவிட்டு அமைதியாக நடந்தாள்.
ஹரியின் பெற்றோர்போல இருவர் நின்றனர் கூடத்தில். ஹேமா பணிவாகத் தலைவணங்க, அவர்களும் தலையசைத்தனர். ஹரி அவர்களை அறிமுகம் செய்துவைத்தான்.
பெற்றோரான குமரேசனும் மாலதியும் வாத்சல்யமாக வரவேற்றனர் இருவரையும்.
"சே.. திடீர்னு இப்படி நடக்கும்னு நினைச்சிருக்கவே மாட்டீங்கல்ல? பாவம்.. கவலைப்படாதீங்கம்மா, நீங்க இங்கயே தங்கிக்கலாம். ஒரு வாரத்துல லாக்-டவுண் முடிஞ்சதும் நாங்களே பத்திரமா ஊருக்கு அனுப்பி வைக்கறோம் உங்களை"
"ரொம்ப தேங்க்ஸ் ஸார்"
"இருக்கட்டும்மா. பரவால்ல. போய் சாப்பிடுங்க"
தரையில் கோரைப்பாய் விரித்து இருவரையும் அமரச் செய்து வாழையிலையில் உணவு பரிமாறினர். மிகவும் சாதாரணமான உணவுதான் எனினும், காலைமுதல் சாப்பிடாததாலோ என்னவோ, அது அமிர்தமாக இறங்கியது இருவருக்கும். ஹேமா அமைதியாகப் பூரிக்க, சாரூவோ தயங்காமல், "வாவ்! இப்படியொரு சாப்பாட்ட ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல கூட சாப்பிட்டதில்ல! சூப்பரா இருக்கு ஆன்ட்டி!" எனப் பாராட்டினாள் மனதார.
ஹரியின் அன்னை சிரித்தார்.
"நல்லாருக்கா? இன்னும் கொஞ்சம் போட்டுக்கோம்மா"
"தேங்க்ஸ் ஆன்ட்டி "
"ஆமா, வந்ததுல இருந்து உங்க அக்கா பேசவே மாட்டேங்கறாங்களே..? ஏன்ம்மா?"
"அவ அப்படித்தான் அங்க்கிள்.. கொஞ்சம் இன்ட்ரோவெர்ட். ஆனா டீச்சர், நம்ப முடியுதா?"
"டீச்சரா? சின்ன வயசா தெரியுதே..?"
"லிட்டில் ஃப்ளவர் எலிமெண்ட்ரி ஸ்கூல்ல, கிண்டர்கார்டன் டீச்சரா இருக்கேன். வேலைல சேர்ந்து ரெண்டு வருஷம் ஆகப் போகுது ஸார்"
"சாரூவெல்லாம் அழகா அங்க்கிள், ஆன்ட்டினு கூப்பிடறா.. நீ இன்னும் ஸார், மேடம்னு கூப்பிடற.. சாதாரணமா இரும்மா.. இதை உங்க வீடா நினைச்சுக்க"
"ஹ்ம்.. தேங்க்ஸ் ஸா-- அங்க்கிள்"
ஹரி சிரித்தான்.
"இன்னும் ஒரு வாரம் இருக்கே.. பழகிடும் உங்களுக்கு!"
உணவருந்தி முடித்ததும் அவர்களை அழைத்துச்சென்று விருந்தினர் அறையைக் காட்டினான் ஹரிஹரன்.
"இந்த ரூம் ஓகே தானே?"
"சூப்பரா இருக்கு. ரிசார்ட்ல இருந்த ரூமை விடவே நல்லா இருக்கு!"
"உண்மை. தேங்க்ஸ் ஹரி"
"ஹேமா.. நீங்க இதுவரை ஆயிரம் தேங்க்ஸ் சொல்லிட்டீங்க! ரிலாக்ஸ்.. ஃப்ரீயா விடுங்க!"
"ஹ்ம்.. இருந்தாலும், என் திருப்திக்காக, இன்னொரு தடவை தேங்க்ஸ்"
ஹரி முறுவலித்தபடி வெளியேற, சாரு குறுகுறுவெனப் பார்த்தாள் ஹேமாவை.
"ஏய்.. என்னடா நடக்குது இங்க?"
"என்ன நடந்தது?"
"நீயா இவ்ளோ பேசறது? அதுவும் முன்னப்பின்ன தெரியாத ஆளுகிட்ட!? என்ன டீச்சரம்மா.. ஹரியை பிடிச்சிருக்கா?"
"ப்ச்.. ஹெல்ப் பண்றவங்களுக்கு தேங்க்ஸ் சொல்றதெல்லாம் உனக்கு ஓவரா தெரியுதா? சும்மா இரு சாரூ!"
அலட்சியமாகக் கையசைத்துவிட்டு நகர்ந்தாள் அவள்.
***
மாலையில் வீட்டைச் சுற்றிப் பார்க்க வெளியே வந்து, அப்படியே தோட்டத்தில் நடந்துகொண்டிருந்தபோது, "ஹாய்.. நல்லா ரெஸ்ட் எடுத்தீங்களா?" எனக் கேட்டவண்ணம் அவளிடம் வந்தான் ஹரி.
"ம்ம். நல்ல தூக்கம். சாரூ இன்னுமே தூங்கறா"
"வீடு பிடிச்சிருக்கா?"
"ரொம்ப அழகா இருக்கு."
"தாத்தா கட்டின வீடு. தாத்தா இப்ப தோப்புப் பக்கம் போயிருக்கார். நைட்டு வந்ததும் அறிமுகப்படுத்தறேன்"
"ம்ம்.."
"உங்களுக்கு ராமநாதபுரத்துல எங்கே?"
"டவுன் தான். அப்பாவும் அம்மாவும் சேர்ந்து கேட்டரிங் சர்வீஸ் நடத்துறாங்க. கல்யாண சமையல். நான் ஸ்கூல் டீச்சர். சாரூ காலேஜ்ல கடைசி வருஷம் பி.காம் படிக்கறா."
"ம்ம். ஏன் திடீர்னு வால்பாறை?"
"சாரு தான் இன்டர்நெட்ல பாத்துட்டு, கண்டிப்பா ஒருதரமாச்சும் போயிட்டு வரணும்னு அடம்பிடிச்சா. தனியா அனுப்ப மனசில்லை, அதான் என்னையும் கூட அனுப்பினாங்க"
"வால்பாறை எப்படி இருந்துச்சு?"
"ரொம்ப அமைதியா, சாந்தமா இருந்தது. எனக்கு அந்த மாதிரி இடங்கள் பிடிக்கும். ஊர்ல இருக்கற இரைச்சலும் புகையும் வெய்யிலும் இல்லாம, அந்த இடம் சொர்க்கமா இருந்தது. ஏன், இங்ககூட அப்படித்தான் இருக்கு. அழகா.. அமைதியா.."
ஹரி சிரித்தான் அழகாக. மாலை வெய்யில் அவனது மூக்குக் கண்ணாடியில் பிரதிபலித்தது. ஹேமா அவனைப் பார்த்து முறுவலித்தாள்.
"என்ன ஷெர்லாக் ஹோம்ஸ்.. சாயங்காலம் டீ, காபி, பலகாரம்லாம் குடுக்க மாட்டீங்களா உங்க வீட்ல?" என்றபடி சாரு வர, ஹேமா புருவம் சுருக்கி முறைத்தாள் அவளை.
"சாரூ!!"
"இருக்கட்டும் பரவால்ல ஹேமா.. வாங்க சாரூ, டீ போட்டுத் தர்றேன்"
"ஐயோ ஹரி.. அவ ஏதோ சும்மா கேட்டா.. நீங்களும்.."
"ஐயைய.. சும்மாவெல்லாம் கேக்கல அக்கா.. சீரியஸா தான் கேட்டேன்!"
"ப்ச், சாரூ!!"
அவள் தோளைக் குலுக்கிவிட்டு ஹரியுடன் உள்ளே செல்ல, ஹேமாவும் ஆயாசமாகப் பின்தொடர்ந்தாள்.
உள்ளறைக்குள் நுழைந்தபோது வேடிக்கை பார்த்தபடி வந்தாள் சாரு.
"ஆமா ஹரி சார்.. நீங்க என்ன அடிக்கடி வால்பாறை போயி அந்த ரிசார்ட்ல தங்குவீங்களோ? வீடு ஃபுல்லா அதே பேர்ல காலாண்டர், போட்டோ எல்லாம் இருக்கு?"
ஹரிஹரன் பதிலளிக்காமல் சிரித்தான்.
ஹேமாவிடம் திரும்பியவள், "நாமளும் அடிக்கடி போனா இந்தமாதிரி கிப்ட்லாம் குடுப்பாங்க போல.." என்க, ஹேமாவோ அங்கு நடப்பதைப் புரிந்துகொண்டு சந்தேகமாக நிமிர்ந்தாள்.
"ஹரி.. ஒருநிமிஷம்.. நீங்கதான்.. அந்த க்ரீன்-ஹில்ஸ் ரிசார்ட்டோட... ஓனரா?"
"அட, நான்தான் ஷெர்லாக் ஹோம்ஸ்னு நினைச்சேன்.. டீச்சரும்கூட ஷார்ப்பு தான் போல! நான்தான் அன்னிக்கே சொன்னேனே.. என்னோட ரிசார்ட் தான் அதுன்னு!"
சாரூ வாய்பிளக்க, ஹேமாவும் அதிர்ச்சியாக நின்றாள். ஹரி அவர்களை சாந்தப்படுத்தினான்.
"ரிலாக்ஸ்.. அதுனால என்ன இப்போ? நீலகிரீஸ், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரின்னு எல்லா இடத்துலயும் எங்க ரிசார்ட்ஸ் இருக்கு. வருஷம் ரெண்டு தடவை நான் ஆடிட்டுக்கு போவேன் எல்லா இடத்துக்கும். வால்பாறைக்கும் அப்படித்தான் வந்தேன்; உங்களை மீட் பண்ணேன்"
"வாவ்! செம்மங்க நீங்க! உங்க ரிசார்ட்ல தங்கலைன்றதுக்காக எங்களை கைவிடாம பத்திரமா காப்பாத்தி கூட்டிட்டு வந்துட்டீங்களே!"
ஹரிஹரன் வாய்விட்டுச் சிரித்தான்.
"ஆமா.. எல்லாரும் எங்க போனாங்க? வீடு அமைதியா இருக்கே?"
"அம்மாவும் அப்பாவும் கோயிலுக்குப் போயிருக்காங்க. மாசணியம்மன் கோயிலை இன்னியோட நடை சாத்தறாங்களாம்.. அதான். பாட்டி தோப்புக்குப் போயிருக்காங்க, தாத்தாவுக்கு சாப்பாடு குடுக்க"
அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோதே பாட்டியும் தாத்தாவும் உள்ளே நுழைந்தனர். தாத்தாவிடம் அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார் பாட்டி. அவரும், "வேற வீடுன்னு சங்கடப்படாம, எத்தனை நாள் வேணாலும் சாவகாசமா தங்குங்க. இங்க நீங்க இருக்கற வரைக்கும், ஒரு குறையுமில்லாம உங்களைப் பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு" என்றார் வாஞ்சையுடன்.
அனைவருக்கும் தேநீர் தயாரித்து எடுத்து வந்தான் ஹரிஹரன்.
"அச்சோ.. நீங்க எதுக்குங்க கஷ்டப்படறீங்க? நானே போட்டிருப்பேனே..?"
"அட, இது என்னோட ஸ்பெஷல் மசாலா டீ! தாத்தோவோட ஃபேவரிட். குடிச்சுப் பாருங்க நீங்களும்!"
ஹேமா காபிப் பிரியை. சாரூவுக்கும் தேநீர் அவ்வளவாகப் பிடிக்காது. எனவே மரியாதைக்காகவே எடுத்து இருவரும் அருந்தினர்.
ஆனால் அருந்திய முதல் மிடக்கிலேயே மூளைக்குள் விளக்கெரிய, அச்சுவையை நம்ப முடியாத பார்வையுடன் நிமிர்ந்தாள் ஹேமா. சாரூவும் சத்தமாக, "வாவ்! என் லைஃப்லயே பெஸ்ட் டீ இதுதான்!!" என அறுதியிட்டாள்.
பாட்டி சிரித்தார்.
"இது நம்ம தேயிலைத் தோட்டத்துல விளைஞ்ச டீ! எந்தக் கலப்படமும் இல்லாத தரமான தேயிலை. அதான் டேஸ்ட் அப்படியிருக்கு! தினமும் அதைக் குடிச்சா, உடம்புக்கு அவ்ளோ தெம்பா இருக்கும்"
"என்னது, ஷெர்லாக் சொந்தமா டீ எஸ்டேட் வெச்சிருக்கீங்களா?"
"ஷெர்லாக்கா?" எனப் பாட்டி சந்தேகமாகக் கேட்க, சாரு சிரிப்புடன் விளக்க, அவர்களும் சிரித்தனர்.
"எங்க ஹரி சின்ன வயசுல இருந்தே இப்படித்தான். உதவின்னு யார் கேட்டாலும் இல்லைன்னு சொல்லாம செய்வான்."
உற்சாகப் பேச்சுக்களுடன் தேநீர் வேளை கழிய, கோப்பைகளை வாங்கிக்கொண்டு சமையலறைக்கு வந்தாள் ஹேமா.
"உங்களுக்கு ஏன் சிரமம்? நான் வாஷ் பண்ணிக்கறேன்.." என வாங்க முயன்றான் ஹரி.
"அட, திடுதிப்புனு உங்க வீட்ல வந்து இப்படி தங்கியிருக்கோம். இந்த சின்ன வேலையைக் கூட செய்யாம எப்படிங்க இருக்கறது? என் மனசாட்சி ஒத்துக்கவே ஒத்துக்காது!"
தண்ணீரில் அவைகளை கச்சிதமாக நனைத்து, சோப்பினால் அவள் கழுவி வைக்க, அவற்றை எடுத்து மீண்டும் அலசினான் அவன்.
"ஆமா.. ஏன் நீங்க டீச்சர் ஆனிங்க ஹேமா? ஆம்பிஷனே அதுதானா?"
"ஆமாங்க. ஸ்கூல்ல படிக்கறப்போ எனக்கு மேத்ஸ் டீச்சரா லக்ஷ்மி மிஸ்னு ஒருத்தங்க இருந்தாங்க. எல்லாருக்கும் வேப்பங்காயா கசக்கற கணக்கை, எங்களுக்கு கல்கண்டா இனிக்க வெச்சாங்க. பாட்டுப் பாடி க்ளாஸ் எடுப்பாங்க, கதை சொல்லி ஸம் போடுவாங்க, ஆடிப் பாடி விளையாடி, அந்த க்ளாசையே திருவிழாவா மாத்திடுவாங்க. அவங்களைப் போலவே ஒரு நல்ல டீச்சரா ஆகணும்னு அப்பவே ஆசைப்பட்டேன். அதுவும் குழந்தைகளோட ஆரம்பகால கல்வி தான் அவங்களோட வாழ்க்கைக்கே அடித்தளமா இருக்கப் போகுது, ஸோ அதை சரியாகக் குடுக்கணும்னு எனக்கு ஆசை. அதனால தான், கிண்டர்கார்டன் டீச்சர் ஆனேன்."
"க்ரேட்!"
"நீங்க.. எப்படி ஹோட்டல் பிஸினஸ்..?"
"அப்பா எஸ்டேட் ஓனர். அடிக்கடி மலைப்பகுதிக்கு போறதுனால டூரிஸ்ட் இன்டஸ்ட்ரி மேல எனக்கு ஆர்வம். காலேஜ்ல சேர்ந்தப்பவே இதுக்கான ப்ளான்ஸ் எல்லாம் போட ஆரம்பிச்சுட்டேன். அப்பா கொஞ்சம் தயக்கமா தான் இன்வெஸ்ட் பண்ணாரு.. ஆனா ரெண்டே வருஷத்துல பயங்கரமா டெவலப் பண்ணி, பத்து பர்சண்ட் வட்டியோட அசலைத் திரும்ப தந்தப்போ, அவர் அசந்து போயிட்டாரு"
"ஹ்ம்ம்.."
"ஆனா இப்ப பயமா இருக்கு.. கொரோனாவால டூரிஸம் இன்டஸ்ட்ரீ அடிவாங்கும். கண்டிப்பா நஷ்டம் இருக்கும். சமாளிக்கற அளவுக்கு இருக்கணும்னு தான் என் கவலை."
"ஒண்ணும் பயப்படாதீங்க ஹரி.. ஒரு வாரம் தானே.. மிஞ்சி மிஞ்சிப் போனா ரெண்டு மூணு வாரம்.. மறுபடி இயல்புக்குத் திரும்பிடுவோம் நாம."
அவன் தலையசைத்துப் புன்னகைத்தான்.
****
"என்னது!? இன்னும் இருபத்தியோரு நாளைக்கு லாக்-டவுணை நீட்டிக்க போறாங்களா?"
கைபேசியில் வந்த செய்தியைப் படித்து நம்பமாட்டாமல் திகைத்தவள் அவசர அவசரமாக வந்து கூடத்து டிவியை உயிர்ப்பித்தாள் அவள். அதில் செந்நிறத்தில் செய்தி ஓடிக்கொண்டிருந்தது.
"தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, ஏற்கனவே அமல்படுத்தப்பட ஊரடங்கை இன்னும் இருபத்தியோரு நாட்களுக்கு நீட்டிப்பதாக பிரதமர் அறிவித்துள்ளார். மக்கள் யாவரும் அவரவர் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு--"
"கடவுளே!!"
மாடியில் துணி காயப்போட்டுக் கொண்டிருந்த சாரூவிடம் ஓடினாள் ஹேமா.
"இன்னும் 21 நாளுக்கு லாக்-டவுணாம்."
"என்ன விளையாடறாங்களா? ஹேமா.. என்னடி இது?"
"எனக்கும் புரியல.. யாருமே வெளிய போகலைன்னா, கொரோனா எப்படிப் பரவுது? எப்படி இத்தனை கேஸ் தினம் தினம் வருது? எப்பதான் இது முடியும்?"
சோர்ந்துபோய் மாடித் திட்டில் அவள் அமர, கைபேசியில் பெற்றோர் அழைத்தனர்.
"நியூஸ் பாத்தியா ஹேமா? நான் தலைப்பாடா அடிச்சுக்கிட்டனே.. தனியா எங்கயும் போகாதீங்கனு! இப்பப் பார்த்தியா? என்ன பண்ணப் போற? இன்னும் இருவத்தோரு நாள் கழிச்சு தான் திறப்பாங்களாம். தளர்வுகளே இல்லாத முழு ஊரடங்காம். சாப்பாட்டுக்கு கூட வழி கிடையாது. தெரியாதவங்க வீட்ல எத்தனை நாள் சும்மாவே தங்குவீங்க?"
"என்னம்மா பண்ணறது? ஹோட்டல் எதுவும் கிடையாது. ஆம்புலன்ஸை தவிர வேற வண்டியே கிடையாது. வெளிய வந்தாலே போலீஸ் துரத்துறாங்களாம், ஏதோ தீவிரவாதிய தொறத்துற மாதிரி. வேற வழியே இல்லம்மா."
"நீ ஹரித் தம்பி கிட்ட கேட்டு, பணம் எதாச்சும் குடுக்கவான்னு கேளேன்.."
"ம்மா.. அது ரொம்ப சீப்பா இருக்கும் மா! உதவி செய்யறவங்க கிட்ட மூஞ்சில அடிச்ச மாதிரி பணத்தை நீட்ட முடியுமா? ஏற்கனவே ஹரி அவரோட ரிசார்ட் எல்லாம் நஷ்டத்துல ஓடுதுன்னு நேத்து பேசிட்டிருந்தார்.. லட்சம் லட்சமா புழங்கறவங்க கிட்ட, நான் போயி காசைப் பத்தி பேசினா நல்லாவா இருக்கும்?"
அவள் சோர்வாக அழைப்பை வைக்க, சாரூவும் வந்து அவள் தோளில் சாய்ந்து அமர்ந்தாள்.
"என்ன பண்ணப் போறோம் ஹேமா?"
"தெரியலையே சாரூ.."
ஏதோ அரவம் கேட்டு நிமிர, ஹரியின் தந்தையான குமரேசன் வந்தார்.
"எனக்கும் ஒரு பொண்ணு இருக்காம்மா. ஹரியோட அக்கா அமிர்தா. துபாய்ல கட்டிக் குடுத்துருக்கோம். அவ அங்க என்ன பண்றாளோ, எப்படி இருக்காளோன்னு நாங்க கவலைப்படாத நாளே இல்ல. அதனால, பொண்ணைப் பெத்தவங்க மனசு எங்களுக்கும் புரியும். இதை உங்க வீடா நினைச்சு தயக்கமில்லாம இருங்கம்மா. ரெண்டு பேருக்கு சேர்த்து சமைச்சா ஒண்ணும் எங்க சொத்து அழிஞ்சி போயிடாது. இந்த மாதிரி நேரத்துல தான் மனுஷங்க ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசையா இருக்கணும். இதுக்குக் கூட உதவலைன்னா, அப்பறம் சொத்தும் சுகமும் இருந்து என்ன பிரயோசனம்?"
ஹேமா கண்ணீர்மல்க கைகூப்ப, அவரோ அதைத் தடுத்துப்பிடித்துக் கண்ணசைத்தார் அன்போடு.
***
"வால்பாறைல இருந்ததை விட, இங்க நல்லா இருக்குதானே? உண்மைய சொல்லு ஹேமா!"
தென்னந்தோப்பில் அடிப்பம்பில் பீய்ச்சியடிக்கும் தண்ணீரைக் கையால் ஆசையாக வாங்கி முகம் கழுவியபடி கேட்டாள் சாரூ.
ஹேமாவும் ஒப்புக்கொண்டாள்.
"ஏதோ அதிர்ஷ்டவசமா ஹரியை மீட் பண்ணி அவரால இங்க பாதுகாப்பா, ஜாலியா இருக்கோம். இல்லைன்னா என்ன ஆகியிருப்போம்?"
"நீ அந்த ஷெர்லாக் மேல ஒரு கண்ணு வெச்சிருக்க தானே? பொய் சொல்லாம சொல்லு! நான் கோவிச்சுக்க மாட்டேன்; அத்தோட அவன் என் டைப் கிடையாது.. தாராளமா சொல்லு!"
"ஹரி ரொம்ப நல்லவர். ஹெல்ப்பிங் மைண்ட்டோட இருக்கறவர். நம்ம மேல பரிதாபப்பட்டு இதை செய்யறார். இடத்தைக் குடுத்தா மடத்தைக் கேட்ட கதையா நான் எதுவும் பண்ண மாட்டேன் சாரூ. ஏதோ நம்மால முடிஞ்ச ஹெல்ப்பை பண்ணிட்டு, அவங்களுக்கு தொந்தரவு குடுக்காம இருந்துட்டு கிளம்பிடணும். அவ்ளோதான்"
கிட்டத்தட்ட ஒரு வாரம் கடந்திருக்க, வீட்டிலேயே இருந்து போரடிப்பதாகச் சாரூ சிணுங்கியதால் சற்று ஊருக்குள் தூரமாக இருந்த அவர்களது தென்னந்தோப்பிற்கு அழைத்து வந்திருந்தான் ஹரி. தாத்தாவுடன் அவன் பேசிக்கொண்டிருக்க, ஹேமாவை இழுத்துக்கொண்டு பம்பு செட்டுக்கு வந்துவிட்டாள் சாரூ. ஆசைதீர நீரில் ஆடிய பின்னர் ஈரமான உடைகளை உதறியபடி அவள் வர, எதிரே வந்த ஹரி அவர்களுக்காக இளநீர் கொண்டுவந்திருந்தான்.
"ஓ நோ நோ நோ.. இளநி குடுக்கலாம்னு வந்தேன்.. ஆனா இந்த ஈரத்துல குடிச்சன்னா அப்பறம் கொரோனா வரும்முன்ன நிமோனியா வந்துடும்! தலையைத் துவட்டிட்டு வா, அப்பறம் தர்றேன்!"
"கமான் ஷெர்லாக்.. என் பாடி ஸ்டீல் பாடி.. இளநியை குடுங்க இப்படி!"
"நத்திங் டூயிங் சாரூ! உன்னை ஈரத்துல பார்த்தா எங்கம்மா என்னைக் கொன்னுடுவாங்க.. தலையைத் துவட்டு!"
அவள் உதட்டைச் சுழித்தபடி நடந்துசெல்ல, ஒரு செவ்விளநீரை ஹேமாவிடம் நீட்டினான் அவன்.
"தேங்க்ஸ் ஹரி" என்றபடி அதை வாங்கி அருந்தினாள் அவள்.
"சாரூ உங்க தங்கச்சினு நம்ப முடியலை இன்னமும். நீங்க ஒரு வார்த்தை பேசற டைம்ல, அவ ஆயிரம் வார்த்தை பேசறா.. எப்படி இப்படி?"
ஹேமா சிரித்தாள்.
"மூத்த பொண்ணுங்களுக்கே உரிய பொறுப்பும் டென்ஷனும் எனக்கு; கடைக்குட்டிகளுக்கே உண்டான சுதந்திரமும் சந்தோஷமும் அவளுக்கு. நீங்களும் கடைக்குட்டி தானே? உங்களுக்குப் புரியும்!"
"ம்ம்.. என்ன வயசு உங்களுக்கு, if you don't mind..?"
"Not at all. எனக்கு இருபத்தி அஞ்சு வயசு. சில்வர் ஜூப்ளி"
"பிறந்தநாள்?"
"அக்டோபர் பதினாலு"
"அடேடே.. லிப்ராவா நீங்க?"
"ஹ்ம்.. தெரியலையே..? ராசிபலன்ல நம்பிக்கை இல்ல."
"சாரூ கண்டிப்பா டாரஸ்னு நினைக்கறேன். ஏப்ரல் அல்லது மே மாசம் பொறந்தாளா?"
"கரெக்ட். மே ஒண்ணு. உழைப்பாளர் தினத்துல பொறந்தா!"
"பாத்தீங்களா!"
"நீங்க எப்ப பிறந்தீங்க ஹரி?"
"ஜூன் மூணு. ஜெமினி"
"ஓ.."
"ஜெமினியும் லிப்ராவும் ரொம்ப பொருத்தமானவங்கனு சொல்வாங்க"
"அப்டினா?"
"அதாவது.. ஃப்ரெண்ட்சாவோ, அல்லது லவ்வர்ஸாவோ இருக்கறதுக்கு ஏத்தவங்க.. லிப்ராவும் ஜெமினியும்"
"ஓஹோ.."
"நாமளும்.. பொருத்தமானவங்களா ஹேமா?"
"ஹான்..?"
"இல்ல, ஃப்ரெண்ட்ஷிப்புக்கு பொருத்தமானவங்க தானே?"
"அ.. ஆமா.. ஆமா ஹரி.."
***
அங்கே தான் இன்னும் இருபத்தியோரு நாட்கள் இருக்கப் போகிறோம் என்ற நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டனர் இருவரும்.
காலையில் எழுந்ததும் தோட்டத்தில் நடைபயிற்சி செய்வது, பின் சமையற்கட்டில் அன்னை மாலதிக்கு உதவுவது, அவர் தடுத்தாலும் கேளாமல் பாத்திரங்கள் அனைத்தையும் விளக்குவது, பின் வீட்டைத் தூய்மைப்படுத்துவது. துணிகள் துவைத்துக் காயப்போடுவது எனப் போட்டிபோட்டு வேலைகள் செய்தனர் சாரூவும் ஹேமாவும்.
ஹரி தன்னறையில் மடிக்கணினியில் வேலைபார்த்துக் கொண்டிருந்துவிட்டு, மீதி நேரங்களில் தந்தையுடன் தோப்பிற்குச் சென்று வருவான். தன்னால் இயன்றவரை முயன்று இராமநாதபுரம் செல்வதற்கு வாகனமும் அனுமதியும் பெறப் போராடிக் கொண்டிருந்தான்.
அன்று காலை பரணில் ஏறி பரமபத விளையாட்டுக்கு அட்டையும் தாயக்கட்டையும் எடுத்தான் ஹரி.
"எங்கயும் வெளிய போக முடியாது. டிவியிலயும் நியூஸை தவிர எதுவும் பார்க்க முடியாது. மெல்ல மெல்ல பழமைக்குத் திரும்பிட வேண்டியதுதான்!"
சாரூ உற்சாகமாக வந்து விளையாட அமர்ந்தாள். ஹேமாவையும் அவன் அழைக்க, மறுப்புச் சொல்லாமல் வந்து அமர்ந்துகொண்டாள் அவளும்.
பாட்டி விளையாட்டின் விதிகளை விளக்கிச் சொல்ல, அவளும் கவனமாகக் கேட்டுக்கொண்டாள். சுமார் மூன்று மணிநேரம் நீடித்த விளையாட்டில் வெட்டுப்பட்டு வெட்டுப்பட்டு மீண்டும் நுழைந்து விளையாடி, இறுதியில் ஹரியும் ஹேமாவும் மட்டும் மோதினர் எதிரெதிராய்.
கடைசிக் கட்டத்தில், ஒரு தாயம் விழுந்தால் விளையாட்டு முடிந்துவிடும் நிலையில் வந்து நின்றனர் இருவருமே. சாரூ நகத்தைக் கடித்தாள் பதற்றமாக.
"ஒரேயொரு தாயம்.. எப்படியாச்சும் ஒரேயொரு தாயம் போட்டுடு ஹேமா.. கமான்... கமான்..."
ஹேமாவும் வேண்டாத தெய்வத்தையெல்லாம் வேண்டிக்கொண்டு தாயக்கட்டையை உருட்டிவிட, சற்றே வேகமாகச் சென்ற கட்டை மேசைக்கடியே சென்றுவிட, ஹரி எழுந்து சென்றான் அதை எடுக்க.
"என்ன விழுந்தது?" என ஆர்வமாகக் கேட்டாள் ஹேமா.
ஹரி திரும்பிப் புன்னகைத்தான். "தாயம்"
"ஹே!! எஸ்!!"
எழுந்து நின்று வானுக்கும் பூமிக்குமாகக் குதித்து அவள் ஆர்ப்பரிக்க, சத்தமில்லாத சலனமில்லாத தன் தமக்கையா இப்படிக் கூத்தாடுவதென சாரூவே வாய்பிளந்து பார்க்க, மூன்றென விழுந்திருந்த தாயக்கட்டையை எடுத்துக் கையில் பத்திரப்படுத்திக்கொண்டான் ஹரிஹரன்.
***
"ஏய் ஹேமா.. இந்த வீடியோவை பாத்தியாடீ? கிரவுண்ட்ல கேரம் போர்ட் விளையாண்டவங்களை ட்ரோன் கேமரா துரத்துது.. அதுல ஒருத்தன் கேரம் போர்டை கேடயம் மாதிரி வெச்சிக்கிட்டு இருக்கான். வேற லெவல் காமெடி.. இங்க வந்து பாரு!!"
அலமாரியில் துணிகளை அடுக்கிக்கொண்டிருந்த ஹேமா திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தாள்.
"நைட்டே பாத்துட்டேன். ஹரி காட்டினார்"
"ஓஓஓ......"
குறும்பான தொனியில் அவள் இழுக்க, ஹேமா உதட்டைச் சுழித்தாள்.
"நீ இன்னும் அதை விடலியா?"
"ஏன் ஹேமா.. அவன்மேல ஒரு சின்ன அட்ராக்ஷன் கூட வரலியா உனக்கு? எங்ககிட்டவெல்லாம் 'பத்து வரிகளுக்கு மிகாமல்'னு பேசறவ, அவன்கிட்ட மட்டும் மணிக்கணக்கா பேசற.. என்ன காரணம்?"
"தெரியல சாரூ.. ஏனோ.. ஹரிகிட்ட பேசும்போது.. எனக்கு ரொம்ப பழக்கப்பட்டவங்கள்ட்ட பேசுறது மாதிரி இருக்கு.. ஐ ஃபீல் கம்ஃபர்ட்டபிள். ஹரி மட்டும்தான் நிஜமாவே நான் பேசறதை கவனிக்கற மாதிரி தோணுது."
"ம்ம்.. ஷெர்லாக்கும் உன்னை ரொம்பதான் கூர்மையா கவனிக்கறாரு.. என்ன விஷயம்னு அவர்ட்டயே கேக்கறேன்!"
"சாரு.. நில்லு!"
ஹேமா தடுப்பதற்குள் அவள் வெளியே எழுந்து செல்ல, அவளைப் பிடிப்பதற்காகப் பதற்றத்துடன் ஹேமாவும் ஓட, சரியாக அவன்மீதே மோதி நின்றாள் அவள்.
அவசரமாக மன்னிப்பு வேண்டத் தொடங்கியவாறே நிமிர்ந்து பார்த்தவள், சாரூ சற்றுத் தொலைவினில் சிரித்தபடி நிற்பதைப் பார்த்ததும் கோபமாகப் பற்களைக் கடித்தாள்.
"ஹேமா.. ஆர் யூ ஓகே?" எனக் கரிசனமாக வினவினான் ஹரி.
"ஹான்.. நீங்க? ஸாரி.. நான்தான் பார்க்காம வந்து இடிச்சிட்டேன்.."
"பரவால்ல. அப்புறம், மளிகைக் கடையெல்லாம் இன்னிக்கு திறக்கறாங்களாம்.. அம்மா உங்க ரெண்டு பேருக்கும் எதாச்சும் வேணும்னா கேட்டு லிஸ்ட் எழுத சொன்னாங்க.."
சாரூ வாயசைத்து ஏதோ சொல்ல வர, ஹேமா எது என்னவெனப் புரியாமல் முகம் சுருக்கினாள். சாரூ தலையிலடித்துக்கொள்ளாத குறையாகப் பார்த்தாள்.
"என்னாச்சு? என்ன வேணும்?"
சாரூவையும் ஹேமாவையும் மாறிமாறித் திரும்பிப் பார்த்தான் ஹரி.
வழக்கமாகத் தயக்கமின்றிப் பேசும் சாரூவும் இப்போது தரையைப் பார்த்தபடி நிற்க, அவள் கூற வருவது புரிந்து ஹேமாவும் தயங்கினாள்.
"அ..அது.. வந்து.. என்னன்னா.."
"உங்களுக்கு சொல்லக் கஷ்டமா இருந்தா, என்கூட கடைக்கு வந்து நீங்களே வாங்கிக்கலாம்"
"செம்ம ஐடியா ஷெர்லாக்! அக்கா, கூடப் போயிட்டு வா! மறக்காம அதை வாங்கிட்டு வா!"
ஹரி தனது பைக்கை உதைத்துத் தயாராக நிற்க, ஹேமா சுடிதாரின் துப்பட்டாவைக் கட்டிக்கொண்டு வந்து அமர்ந்தாள் அவன்பின்னால்.
"போலாமா?"
"ம்ம்"
சாரூ கண்ணடித்துச் சிரித்தபடி கையசைத்தாள் இருவருக்கும். ஹேமா முறைத்தாள்.
சிறிது தூரம் சென்றிருப்பர்.
"கேக்கறேன்னு சங்கடப்பட வேணாம்.. சானிடரி நாப்கின் தானே வாங்கணும் உங்களுக்கு?"
சட்டென அவன் கேட்கவும் அசவுகரியமாக அவள் தலைகுனிய, கண்ணாடியில் அவளைப் பார்த்தவன், "ஸாரி.. உங்களை கூச்சப்பட வைக்கணும்னு கேட்கல.. மன்னிச்சிருங்க. இருந்தாலும், இதுல வெட்கப்பட எதுவும் இல்லையே? எங்க அம்மாவுக்கும், அக்காவுக்கும் நான் வாங்கித் தந்திருக்கேன். நாளைக்கு வரப்போற பொண்டாட்டிக்கும் பொண்ணுக்கும் கூட வாங்கத் தான் போறேன். அதுவும் ஒரு அத்தியாவசியப் பொருள் தானே தவிர, அசிங்கப்பட எதுவும் இல்லை" என்றான்.
ஹேமாவிற்கு அவனது மதிப்பு மனதில் உயர்ந்தென்றால் பொய்யில்லை. ஆயினும் அமைதியாகவே பயணப்பட்டாள், இதழோரம் சின்னதொரு புன்முறுவலுடன்.
டவுனுக்குச் சென்று சூப்பர் மார்க்கெட்டில் தேவையான பொருட்களை வாங்கியபோது, தானே பணம் செலுத்துவதாக எவ்வளவோ போராடிப் பார்த்தாள் ஹேமா. அவனோ ஒரேயடியாக, "எங்க வீட்டுக்கு வந்த கெஸ்ட் நீங்க. என்ன சொன்னாலும் உங்களை பே பண்ண விடமுடியாது" என்றுவிட்டான்.
"சரி, மளிகை சாமானெல்லாம் நீங்க வாங்கிட்டீங்க.. கெஸ்ட்டா வந்த நான் என் பங்குக்கு பலகாரமும் பட்சணமும் வாங்கிட்டு வர வேணாமா? கெஸ்ட் வெறுங்கையோட வந்தா வீட்ல இருக்கறவங்களுக்குப் பிடிக்குமா?"
"நீங்க எப்படி வந்தாலும் பிடிக்கும்" என உதட்டுக்குள் முணுமுணுத்தான் ஹரிஹரன். அவள் கவனிக்கவில்லை.
"ஸோ.. ஸ்வீட் கடைக்குப் போறோம். உங்க வீட்ல யார்யாருக்கு எதுஎது பிடிக்கும்னு நீங்க சொல்றீங்க; நான் வாங்கறேன். நோ ஆர்க்யூமெண்ட்ஸ். ஓகே?"
"சரிங்க டீச்சர்" எனக் கைகட்டி அவன் சொல்ல, அவளும் சிரித்தாள் வெட்கப்பட்டு.
சொன்னதுபோல பலகாரங்கள் வாங்கிக்கொண்டு, மேலும் சாலையில் பார்த்த கடைகளிலெல்லாம் நிறுத்தச் சொல்லி எதையேனும் வாங்கிவந்தாள் அவள்.
"ரொம்ப தொல்லை பண்றேனோ..? வண்டியை அங்கங்க நிறுத்தச் சொல்லி?"
"அப்டிலாம் இல்லை.. உங்களுக்குப் பிடிச்சதை செய்ங்க, நோ வொரீஸ்!"
வீட்டை அடைந்தபோது கைக்கொள்ளாத பைகளுடன் இருவரும் உள்ளே நுழைய, சாரூ ஆர்வமாக வந்து நோட்டமிட்டாள் பைகளை. அவளுக்காக வாங்கிவந்த ஐஸ்கிரீமை அவன் எடுத்து நீட்ட, அவள் ஆர்ப்பரித்து வாங்கிக்கொண்டாள்.
"வாவ்! ஷெர்லாக்குக்கு என்னோட ஃபேவரிட் ஐஸ்கிரீம்லாம் தெரிஞ்சிருக்கு! சூப்பர்!!"
வீட்டினருக்கென ஹேமா வாங்கிவந்த பலகாரங்களைப் பிரித்துக் கொடுக்க, "எதுக்கும்மா இதெல்லாம்" எனப் பிரியமாகக் கோபித்துக்கொண்டார் மாலதி.
"எங்க வீட்டுக்குன்னா நான் வாங்க மாட்டேனா ஆன்ட்டி?"
அவளது தலையை ஆதுரமாகத் தடவி அவர் உச்சிமுகர்ந்தார். குமரேசனும் அவளைப் பெருமையோடு பார்த்தார்.
***
"ஹேமா.. நீ நம்ப மாட்ட."
"என்ன ஆச்சு சாரூ..?"
"லாக்-டவுண்"
"மறுபடியுமா??"
ஆமெனத் தலையை ஆட்டிவிட்டு தலையணையில் முகம் புதைத்து சிணுங்கினாள் சாரூ.
ஹேமா அவளது கைபேசியைத் திறந்து பார்த்தாள்.
'ஜூன் 20 வரை தளர்வுகளற்ற ஊரடங்கு தொடரும்'
"ஆண்டவா..! ஒழுங்கா இந்த லாக்-டவுணை கடைப்பிடிச்சிருந்தா, என்னிக்கோ கொரோனா கட்டுப்பட்டிருக்கும். மக்களை ஒழுங்குபடுத்தாம லாக்-டவுண் மேல லாக்-டவுணா போட்டுட்டு இருந்தா மட்டும் என்ன மாறிடும்??"
"ஹேமா.. எனக்கு வீட்டுக்குப் போகணும்.. அம்மாகிட்ட போகணும்.."
தன் மடியில் சாய்ந்து அழும் தங்கையைத் தேற்ற வழியின்றித் திகைத்து அமர்ந்திருந்தாள் ஹேமா.
நிலைமையை உணர்ந்து உள்ளே வந்த மாலதி, பாசமாக அவள் தோளைத் தட்டினார்.
"அழதடா சாரூ.. இன்னும் கொஞ்ச நாளுக்குத் தானே.. பொறுத்துக்கம்மா. ஹரி எப்படியாச்சும் ஈ-பாஸ் வாங்கிடுவான்.. எப்படியாச்சும் உங்களை வீட்டுல சேர்த்துடுவான்."
அவர் மடியிலும் சாய்ந்து விசும்பினாள் சாரூ. அவர் தோளில் சாய்ந்துகொண்டு அமைதியாகக் கண்ணீர் வடித்தாள் ஹேமா.
***
"ஹரி..! ஹரி..!"
தனது கதவு தட்டப்படும் சத்தத்தில் மத்தியானத் தூக்கம் கலைந்து விழித்தான் அவன். கதவைத் திறந்தபோது ஹேமா நின்றிருக்க, ஆச்சரியப் பார்வையுடன் புருவம் தூக்கினான்.
"ஹரி.. உங்க ஊரு ஆல்வா ஹாஸ்பிடல்ல, ப்ளட் கேம்ப் நடத்துறாங்களாம். இப்பதான் நோட்டீஸ் குடுத்துட்டுப் போறாங்க. நாமளும் போகணும்."
பக்கத்தில் நின்ற சாரூ சிணுங்கினாள்.
"பாருங்க ஷெர்லாக்.. இவளோட சமூக சிந்தனைக்கு ஒரு லிமிட்டே இல்லாம போச்சு! போன வாரம் தான் கொரோனா ரிலீஃப் ஃபண்டுன்ட்டு பத்தாயிரம் ரூபா டொனேஷன் அனுப்பினா. இப்ப ரத்தத்தையும் குடுக்கணும்னு நிக்கறா.."
ஹேமா கடுமையான பார்வையுடன் சாரூவை அடக்கினாள்.
"டொனேஷன் குடுக்கறது, சொல்லிக் காட்டறதுக்கு இல்லை. மூணு வேளையும் சோறா தின்னுட்டு சும்மா தானே இருக்க.. ஒழுங்கா வந்து ப்ளட் குடு!"
"இவ கூடப் பிறந்ததுக்கு உயிரை வாங்குவான்னு நினைச்சா, ரத்தத்தையும் சேர்த்து வாங்குறா.." எனப் புலம்பிக்கொண்டே உடன்நடந்தாள் சாரூ.
ஹரி ஒருவித ஆச்சரியமான பார்வையுடன் அவர்களைப் பின்தொடர்ந்தான்.
இரத்த முகாமுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது மெதுவாக, "உங்க அக்காவுக்கு சாலரி எவ்ளோ வரும்?" என சாரூவிடம் வினவினான் அவன்.
"மாசம் ஆறாயிரம் வாங்குவா.. ப்ரைவேட் ஸ்கூல் தான். பி.எஃப் பணத்தை கழிச்சிட்டு இவ்ளோதான் தருவாங்க."
"அப்பறம் எப்படி.. பத்தாயிரம் டொனேஷன்..?"
"எங்க டூருக்காக வருஷக்கணக்கா சேர்த்து வச்சிருந்த காசையெல்லாம் குடுத்துட்டா. ராட்சசி.."
மூக்கைச் சுழித்து அவளைத் திட்டியபோது சட்டென ஹேமா திரும்பிப் பார்த்துவிட, ஒரே கணத்தில் முகத்தை மாற்றிக்கொண்டு விளக்கெண்ணெய்ச் சிரிப்பாக சிரித்து வைத்தாள் சாரூ.
முகாமுக்குச் சென்று இரத்தம் கொடுத்துவிட்டு, வேறு ஏதேனும் உதவிகள் வேண்டுமா எனக் கேட்க, அந்த செவிலியரும், அங்கன்வாடிக் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள ஒரு பொறுப்பான ஆள் தேவை என்றார்.
சாரூ நடப்பதையுணர்ந்து ஆயாசமாக வானத்தைப் பார்க்க, ஹேமா உறுதியாக வந்து, "ஹரி, தினமும் காலைல என்னை இங்கே அங்கன்வாடியில ட்ராப் பண்ண முடியுமா? நான் வாலண்ட்டியரா சேர்ந்துக்கறேன்" எனக் கேட்டாள்.
தலையசைத்து ஆமோதித்தான் அவனும், பார்வையில் கொஞ்சம் ஆதுரத்துடன்.
தினமும் காலையில் கிளம்பி ஹரியுடன் பைக்கில் வந்து அங்கன்வாடி மையத்தில் இறங்கினால், மீண்டும் மாலை ஆறு மணிக்குதான் அவளைப் பார்க்க முடியும். பம்பரமாகச் சுற்றிச் சுழன்று ஒவ்வொரு குழந்தையின் தேவையையும் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்டு, அவர்கள் அம்மாவைக் கேட்டு அழாதவண்ணம் அன்பைக் கொட்டிப் பார்த்துக்கொண்டாள் அவள்.
பெரும்பாலான குழந்தைகள் முன்களப் பணியாளர்களின் குழந்தைகள் என்பதால், இராப்பகலாக தத்தம் மக்களைப் பிரித்து பொதுமக்களுக்காக இரத்தம் சிந்தி உழைக்கும் அந்த மனிதர்களுக்குத் தான் செய்யும் சின்ன நன்றிக் கடன் என்றே நினைத்துச் செய்தாள் இதை.
"பாருங்க அங்க்கிள்.. இவ ஏதோ கோவிட் வாரியர் மாதிரி தினமும் வேலைக்குப் போயிட்டு இருக்கா.. அதுவும் ஓசியா! அப்பறம் என்னைப் பத்தி நீங்க என்ன நினைப்பீங்க? அக்கா மட்டும் வேலை பாக்கும்போது தங்கச்சி வீட்ல வெட்டியா இருக்காளேன்னு தானே?"
குமரேசனிடம் சென்று அமர்ந்துகொண்டு சாரூ முறையிட, அவரோ அவள் தலையைத் தடவிக்கொடுத்தார் செல்லமாக.
"நீ கடைக்குட்டிச் செல்லமாச்சே? உன்னைப் போய் உடம்பு நோக வேலை செய்யச் சொல்லுவாங்களா சாரூம்மா? நீ பாட்டுக்கு ஜாலியா இரும்மா, அக்கா இஷ்டத்துக்கு அவ இருந்துட்டுப் போறா.."
மாலதி தட்டில் தோசையுடன் வந்தார் அவளுக்காக.
"நீதான் வீட்ல சின்னச்சின்ன வேலையெல்லாம் செய்யறியே குட்டிமா.. உன் தட்டை நீயே கழுவி வைக்கற, உன் துணியை நீயே துவைச்சிக்கற.. அப்பறம் எதுக்கு உன்னைக் குறைப்பட்டுக்கப் போறோம் நாங்க?"
"ஏதேது.. இந்த வீட்லயும் இவளுக்குத் தான் செல்லமா?"
சோர்வாக முகத்தைத் துடைத்தபடி கேட்டாள் ஹேமா, குரலில் பொய்யான ஏமாற்றத்துடன்.
"அட, மூத்த பொண்ணு ஊருக்காக உழைக்கட்டும், சின்னப் பொண்ணு வீட்டுக்காக இருக்கட்டும். சரிதானே?"
"பாட்டி! நீங்களுமா?"
தண்ணீர் பாட்டிலுடன் வந்த ஹரிஹரன் அவளுக்கு அதைக் கொடுத்தவாறே, "பாட்டியும் அவளும் ஜிகிரி தோஸ்த் ஆகிட்டாங்க ஹேமா.. நீயில்லாத நேரத்துல ரெண்டு பேரும் தாயக்கட்டையை உருட்டறதென்ன.. ஊர்ப்பழமை பேசறதென்ன.." என மாட்டிவிட்டான்.
இடுப்பில் கைவைத்து இருவரையும் அவள் முறைக்க, சாரூ கெக்கலி காட்டினாள் சிரித்து.
ஹரிஹரனுக்கு அவர்கனைவரையும் பார்த்தபோது, ஒரு நிறைவான, நிம்மதியான உணர்வு மனதை நிறைத்தது.
***
அன்றிரவு மீண்டும் அரசின் சுகாதாரத் துறை வலைப்பக்கத்தில் நுழைந்து ஈ-பாஸ் பெற விண்ணப்பித்துக் கொண்டிருந்தான் ஹரிஹரன்.
ஏற்கனவே ஏராளமான முறைகள் விண்ணப்பித்தும் அவை காரணமின்றி நிராகரிக்கப்பட்டாலும், தளராமல் தினமும் விண்ணப்பித்துக் கொண்டுதான் இருந்தான் அவனும்.
தூக்கம் சொக்கிய வேளையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அவன் சொடுக்க, திடீரென அவனது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப் பட்டதாகத் திரையில் எழுத்துக்கள் வர, தூக்கம் கலைந்து அதிர்ச்சியில் உறைந்தான் அவன்.
தூங்கப்போகும் நேரத்தில் கதவைத் தட்டும் ஓசை கேட்க, கண்களைத் துடைத்தபடி வந்து கதவைத் திறந்தாள் சாரூ.
"சாரூ!! ஈ-பாஸ் கிடைச்சாச்சு!!"
"ஓ மை காட்!!"
அவள் கத்தி ஆர்ப்பரித்து ஹேமாவை எழுப்ப, அவளும் இன்ப அதிர்ச்சியில் செயலற்று உறைய, சாரூ ஹரியை கட்டிக்கொண்டு ஈரமான குரலில் நன்றிகளைக் கொட்டினாள்.
"தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ.. தேங்க்யூ ஸோ மச் ஷெர்லாக்!! இப்படியொரு ஹேப்பி நியூஸை எனக்கு சொன்னதுக்கு லட்சம், கோடித் தடவை தேங்க்யூ!!"
ஹேமாவும் நன்றியோடு கைகூப்பினாள்.
"இந்த ஹெல்ப்பை மறக்கவே மாட்டேன் நான். ரொம்ப ரொம்ப நன்றி ஹரி"
அவன் கண்ணசைத்து ஏற்றுக்கொண்டான்.
"காலைல கிளம்பிடலாம். நிம்மதியா, சந்தோஷமா தூங்குங்க. குட் நைட்."
மனதில் ஆனந்தம் ஒருபுறம் இருந்தாலும், கிளம்பப் போகும் சோகமும் ஒருபுறம் இருப்பதை உணர்ந்தாள் ஹேமா.
சாருவும், "ஏன் ஹேமா.. கிட்டத்தட்ட நூறு நாள் இங்க தங்கியிருந்தோம்.. சொந்த வீடு மாதிரியே பழகிப் போச்சு.. திடீர்னு கிளம்பறது கொஞ்சம்.. வினோதமா இருக்குல்ல?" என்றாள், மறுநாள் காலையில் பைகளை அடுக்கும்போது.
"ம்ம், இப்படியெல்லாம் நடக்கும்னு கற்பனை கூடப் பண்ணிப் பார்க்கலை. யாராச்சும் என்கிட்ட வந்து, வேட்டைக்காரன்புதூர்ல ஒரு வீட்டுல மூணு மாசம் நீ தங்கப்போறன்னு சொல்லியிருந்தா சிரிச்சிருப்பேன் நான்!"
சாரூ மெல்ல அவளருகே வந்தாள்.
"ஹேய்.. ஹரிகிட்ட எதாச்சும் பேசணும்னா பேசிட்டு வா.."
"எ.. என்ன பேசறது..?"
"கமான் ஹேமா.. அவன் உனக்கு அத்தனை உதவி பண்ணியிருக்கான்.. உனக்கு இன்னுமா அவனைப் பிடிக்கல?"
பதிலின்றி அமர்ந்திருந்தாள் ஹேமா.
பிடிக்கவில்லை என்று சொன்னால் அது பொய். தினம்தினம் அவனது மதிப்பு மனதில் உயர்ந்தது. தினம்தினம் அவன் பேச்சில் மனது சாய்ந்தது. தினம்தினம் மையல் வளர்ந்தது. அதுவும் கடந்த ஒன்றரை மாதமாக அவனுடன் காலையும் மாலையும் பைக்கில் தன்னந்தனியாக ஆளற்ற சாலையில் அவளும் அவனும் மட்டுமே செல்லும் அந்தப் பொன்னான தருணங்களை எதிர்பார்த்தே தினமும் கண்விழித்தாள் அவள்.
அவள் பேசும்போது உன்னிப்பாகத் தலையாட்டிக் கவனிக்கும் அவனது கண்கள்; அனிச்சையாக மூக்குக் கண்ணாடியை சரிசெய்துகொள்ளும் விரல்கள்; அணியும் ஆடைகளில் இருந்த நேர்த்தி; பேச்சிலும் சிரிப்பிலும் இருந்த அன்பு; இன்றுவரை எல்லைதாண்டாத விகற்பமற்ற பழக்கம் என, அனைத்துமே அவளைக் கவர்ந்திருந்தன.
ஆயினும்...
"சாரூ.. வேறொரு நாளா இருந்திருந்தா, நாங்க சந்திச்சுக்கூட இருக்க மாட்டோம். சொத்து சுகம்னு இருக்கற அவங்க உலகம் வேற; அன்றாடம் உழைச்சு சேமிச்சு நேரமில்லாம ஓடற நம்ம உலகம் வேற. கொஞ்ச நாள் விருந்தாளியா வேணா நாம இருக்கலாம். நிரந்தரமா இருக்க நினைக்கறது தப்பு. எங்க ரெண்டு பேருக்கும் செட்டாகாது சாரூ. எதாவது பேசப் போயி சங்கடமாகிடறதுக்குள்ள, சீக்கிரம் கிளம்பு."
பெட்டிகளுடன் வெளியே வந்து, அவர்களுக்காகக் காத்திருந்த காரை நோக்கி நடந்தபோது, கண்ணீருடன் விடைகொடுத்தனர் மாலதியும் குமரேசனும். வேண்டாம் என்றாலும் விடாமல் பட்சணங்கள், துணிமணிகள், தேயிலை, ஏலக்காய் என அடுக்கினர் மூட்டைகளாக.
"அடிக்கடி ஃபோன் பண்ணுங்கம்மா.. அங்க்கிள் ஆன்ட்டியை மறந்துடாதீங்க. எங்க இருந்தாலும் சந்தோஷத்தோட இருங்க. லீவு கிடைச்சா கண்டிப்பா மறுபடி வாங்க.. உடம்பைப் பாத்துக்கங்க.. பத்திரமா போயிட்டு வாங்க.."
சாரூவும் விசும்பத் தொடங்க, போகவே மனமில்லாமல் கால்கள் முரண்டு பிடிக்க, கண்களால் ஒருமுறை அவனைத் தேடினாள் அவள்.
அவனை எங்கும் காணாமல் ஏமாற்றப் பார்வையுடன் திரும்பியபோது, காரின் ஓட்டுனர் சீட்டில் அவன் அமர்ந்திருந்ததைப் பார்த்தவள் திகைத்து உறைந்தாள்.
"டாக்சி எதுவும் கிடைக்கல.. ட்ரைவரும் கிடைக்கல.. அதான்.. நானே உங்களை ட்ராப் பண்ணிடறேன்"
தலையை மட்டும் பேச்சின்றி அசைத்தவள் அமைதியாகப் பின்சீட்டில் அமரப் போக, சாரூ ஓடிவந்து தடுத்தாள்.
"எனக்கு கால்நீட்டிப் படுத்துத் தூங்கணும். நீ முன்னாடி சீட்ல உட்காரு போ!"
"சாரூ!!"
"ப்ச்.. பேசாத, போ"
அவளை முறைத்தவாறே வந்து முன்சீட்டில் அமர, அமைதியாகவே தொடங்கியது பயணம்.
"ஆறு மணிநேரம் அவரு ட்ரைவ் பண்ணனும்.. தூங்காம இருக்கப் பேச்சுக் குடுத்துட்டே வா அக்கா!"
ஹேமா திரும்பி அவளை முறைக்க, அவளோ கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கத் தொடங்கியிருந்தாள். ஹரி சிரித்தான்.
"தைரியமா வா சாரூ, நான் வண்டியோட்டும் போதெல்லாம் தூங்க மாட்டேன்!"
"இருந்தாலும் சேஃப்டிக்கு."
"ம்ம். ஹேமா.. நீ கார் ஓட்டுவியா?"
"ஹ்ம்.. ஓட்டுவேன். லைசன்ஸ் இருக்கு"
"ஓ.. எப்ப கத்துக்கிட்ட?"
"அப்பாவுக்கு, கல்யாண மண்டபத்துக்கு சாமானை கொண்டுபோக கார் தேவைப்பட்டது.. ஆனா கூலி அதிகம் கேப்பாங்க. அதான், வாடகைக் கார் எடுத்து நான் கத்துக்கிட்டு ஓட்டுனேன்."
"ஹரி, இவளை நம்பி நீங்க காரைக் குடுத்துடாதீங்க! எதிர்ல சைக்கிள் வந்தா கூட ப்ரேக் போட்டுடுவா! உருட்டிக்கிட்டே போனான்னா நாளைக்கு சாயங்காலம்தான் ஊருக்குப் போக முடியும்!"
ஹரி வாய்விட்டுச் சிரிக்க, ஹேமா மீண்டும் இச்சிரிப்பை எப்போது கேட்போமென நினைத்துக் கண்ணீர்மல்க அவனை சிலகணங்கள் பார்க்க, அதைக் கவனித்துத் திரும்பினான் அவன்.
"என்னாச்சு? ஏன் அழற ஹேமா?"
"சேச்சே.. கண்ல காத்துப் பட்டுக் கலங்கிடுச்சு" என்று குனிந்துகொண்டாள் அவள். பூட்டியிருந்த ஜன்னல்களை ஒருகணம் பார்த்துவிட்டு சந்தேகமாக மீண்டும் சாலையைப் பார்த்தான் அவன்.
திண்டுக்கல்லில் நிறுத்தித் தேநீர் அருந்திவிட்டு, மீண்டும் கிளம்பும்போது, சாரூ சீட்டில் படுத்து உறங்கியிருந்தாள், சொன்னதுபோலவே.
ஹேமா ஜன்னலில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். பின்னே செல்லும் மரங்கள் யாவும் சற்றே வேகம் குறைந்து போவதைப் பார்த்தவள் துணுக்குற்று, வண்டியின் வேகமானியைப் பார்த்தாள்.
அதுவோ முப்பதெனக் காட்டியது.
"நீங்களும் என்னைப் போல ஓட்ட ஆரம்பிச்சிட்டீங்களா ஹரி? ஏன் ஸ்லோவா போறோம்?"
"சீக்கிரம் போனா உங்க வீடு சீக்கிரம் வந்துடும்.. சீக்கிரம் இந்த ட்ராவல் முடிஞ்சிடும்.. எனக்கு முடிய வேணாம்."
சாலையிலிருந்து கண்ணெடுக்காமல் அவன் பேச, ஹேமாவின் மனது பிசைந்தது.
"ஏன் ஹேமா.. மூணு மாசம் நாம பழகியிருக்கோம்.. இதை நான் சொன்னா என்னை சீப்பா நினைச்சுக்குவியா? மூணு மாசத்துல ஒருத்தரை இவ்ளோ ஆழமா லவ் பண்ண முடியுமா?"
ஹேமா அசவுகரியமாக சிரித்தாள்.
"ஒரே வீட்டுல இருந்து வேற பொண்ணுங்க மூஞ்சியையே பார்க்காததால, உங்களுக்கு Stockholm syndrome எதாச்சும் வந்திருக்கும் ஹரி.. அதுதான் இது!"
"இது உனக்கே நியாயமா?"
"ப்ச்.. ஹரி.. இதுதான் நிதர்சனம். இதுதான் ரியாலிட்டி. இன்னும் ரெண்டு மூணு நாள்ல என் முகம் மறக்கத் தொடங்கிடும் உங்களுக்கு. மரியாதைக்காக வாட்சாப்ல குட்மார்னிங், குட்நைட்னு மெசேஜ் பண்ணிக்குவோம். உங்களுக்கு வேற வேலைகள் வந்துடும், வெளிய போகற மாதிரி. புதுசா நிறையப் பேரை மீட் பண்ணுவீங்க.. உங்க அன்றாட வழக்கம் மாறும். தொழில்ல பிஸி ஆவீங்க.. அப்பறம் ஹேமான்றது எங்கேயோ கேட்ட பேரு மாதிரி இருக்கும். அவ்ளோதான்"
ஹரி எதுவும் பேசவில்லை. எனினும் காயம்பட்டுவிட்டான் என்பது கண்ணாடியில் தெரிந்த அவனது கண்களில் வெளிச்சமானது. வேகத்தைக் கூட்டி நூறில் செலுத்தினான் காரை.
ஹேமா கண்ணோரம் சேர்ந்த கண்ணீர்த்துளி ஒன்றைத் துடைத்துவிட்டுத் திரும்பிக்கொண்டாள்.
அந்திசாயும் நேரத்தில் ஊருக்குள் நுழைந்து அவர்கள் வீட்டு வாசலில் நின்றது வண்டி. சாரூ அம்மாவைக் கத்தி அழைத்துக்கொண்டு உள்ளே ஓட, பெற்றோர் இருவரும் வாசலுக்கு வந்து மகள்களை அணைத்துக்கொண்டு கண்ணீர்விட்டனர். இருவரும் வந்து ஹரியின் கையைப் பிடித்துக்கொண்டு பலவாறாக நன்றி நவின்றனர்.
"இருக்கட்டும் சார்.. பரவால்ல" என்றுவிட்டு மீண்டும் காரில் ஏறச் சென்றவனை சாரூ பதற்றமாகத் தடுத்தாள்.
"உள்ள வாங்க.. ஒருவாய் காபியாச்சும் சாப்பிடுங்க.."
தானே அழைக்கையில் அக்கா ஏன் அமைதியாக நிற்கிறாள் எனப் புரியவில்லை அவளுக்கு. ஹரியும் ஹேமாவை அரைக்கணம் ஆழமாகப் பார்த்துவிட்டு, "பரவால்ல" என்பதோடு கிளம்பிவிட, பெற்றோர் சற்றே புரியாமல் பார்த்தனர்.
ஏதும் பேசாமல் அறைக்குள் விரைந்து சென்று கதவைப் பூட்டிக்கொண்ட மூத்த மகளைக் கண்டு வியந்தவர்கள் சின்னவளைப் பார்க்க, சாரூ சங்கடமாகச் சிரித்தாள்.
"அ.. அது.. அக்காவுக்கு ட்ராவல் ஒத்துக்கல.. வாந்தி.. மயக்கம்.. அதாம்மா.."
***
அடுத்த சில நாட்களில் எதையோ பறிகொடுத்தவள்போல ஜன்னலின் அருகில் வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்தவளை அதிருப்தியாகப் பார்த்துச் செல்ல மட்டும்தான் முடிந்தது சாரூவால்.
எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் பேசாமல் இருப்பவளை என்ன செய்வது?
தங்கள் காலனியில் இருக்கும் அங்கன்வாடி மையத்துக்குத் தன்னார்வத் தொண்டர்கள் வேண்டுமென அழைப்பு வர, ஓடிச்சென்று ஹேமாவிடம் சொன்னாள் அவள்.
அவளோ முகத்தைத் திருப்பிக்கொண்டாள் அசட்டையாக.
"ப்ச்.. என்னதான்டி பேசினீங்க அப்படி நான் தூங்கிட்டிருந்தப்போ?? சண்டை போட்டீங்களா? ஹரி எதாச்சும் சொன்னாரா?"
இல்லையென்று தலையசைத்துவிட்டு முழங்கால்களைக் கட்டிக்கொண்டு முகம்புதைத்து விசும்பினாள் அவள்.
"ஃபோன் பண்ணியாச்சும் ஒரு வார்த்த பேசேன் ஹேமா... இப்டி அழுதுட்டே இருந்தா என்ன அர்த்தம்? அப்பா வேற துருவித் துருவி கேள்வி கேட்கறார் என்னை.. நான் என்னான்னு சொல்றது?"
பதிலில்லை. அழுகை மட்டுமே.
***
"பைத்தியம் பிடிக்குது எனக்கு! இன்னும் கொஞ்ச நாள் வீட்ல இருந்தேன்னு வைங்க, அந்த நெட்ஃப்ளிக்ஸ் படத்துல பார்த்த சைக்கோ கில்லர் மாதிரி நானும் மாறிடுவேன்னு நினைக்கறேன். காலேஜே புடிக்காத என்னையவே காலேஜ் திறங்கடான்னு கதற வெச்சிட்டாங்க!! ... ஹான்..? .. ஹேமாவா? .. அவளுக்கென்ன, நல்லா தான் இருக்கா! .. ம்ம், ஆமா ஆன்ட்டி, ஆன்லைன் க்ளாஸ் எடுக்கறா குழந்தைங்களுக்கு. அதுவொரு குடைச்சல்! பாவம்.. பொம்மைய வெச்சு விளையாடற வயசுல, ஃபோனை வச்சு க்ளாஸ் படிக்கச் சொன்னா அந்தக் குழந்தைங்க என்ன பண்ணும்? இதுல வேற, ஏன் குழந்தைக்கு ஹோம் வொர்க் குடுக்கலைன்னு நேத்து ஒரு அம்மா கம்ப்ளெய்ன் பண்ணுது! காலக்கொடுமை!"
பேசிக்கொண்டே பால்கனியில் நடந்துகொண்டிருந்த சாரூ, உள்ளே ஏதோ அதிக சத்தங்கள் வரவும் துணுக்குற்று வீட்டினுள் வந்தாள்.
அம்மாவும் அப்பாவும் தான் உரக்கப் பேசிக்கொண்டிருக்க, கைபேசியை வைத்துவிட்டு அவர்களிடம் வந்தாள் அவள்.
"ஏய்! லாக்-டவுணை எல்லாம் எடுத்தாச்சு! எல்லாத்தையும் தொறந்து விட்டுட்டாங்க! பஸ்ஸு, ட்ரெய்னு, ஏரோப்ளேன்.. எல்லாமே ஓடுதாண்டி! ஸ்கூலும் காலேஜும் கூட அவங்கவங்க இஷ்டத்துக்கு திறந்துக்கலாமாம்!!"
"பார்றா.. கொரோனா இன்னும் போகல, ஆனா அதுமேல இருந்த பயம் சுத்தமா போயிடுச்சு போல! நல்லதுதான்.. நானும் சுதந்திரமா போய் கொஞ்சம் பொல்யூஷன் வாங்கிட்டு வரேன்!!"
ஆசையாக வெளியே செல்லக் கிளம்பியவள், ஏதோ யோசனை வந்து ஹேமாவின் அறைக்குள் வந்தாள்.
"ஓய்.. லாக்-டவுண் முடிஞ்சுது! உன் ரூமையே கட்டிட்டு அழவேணாம் நீ இனி! வா ஹேமா, வெளிய போயிட்டு வரலாம் காத்தாட.."
"எனக்கு மூட் இல்ல. நீ போ"
"வேணும்னா.. பாதியில விட்ட வால்பாறை ட்ரிப்பை கன்டின்யூ பண்ணுவோமா? என்ன சொல்ற?"
கேவலமான ஒரு முறைப்பைப் பரிசாகப் பெற்றுக்கொண்டு வெளியே வந்தாள் சாரூ.
'இட் ஹேப்பன்ஸ்! நம்ம கைல என்ன இருக்கு!'
அன்று இரவெல்லாம் தெருக்கள் கூட்டத்தில் அலைமோத, வெகுநேரம் கழித்தே வீடுவந்தாள் சாரு.
"ஊரைப் பாக்கணுமே! அப்படியே திருவிழாக் கூட்டம் தான்! ஒருத்தனை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்துச்சேன்னு பக்கத்துல போயி பார்த்தா, அப்பறம்தான் தெரியுது, அந்தாள் எங்க ப்ரொஃபசர்னு! நைஸா எஸ்ஸாகி ஓடி வந்துட்டேன். அப்பா.. இன்னிக்காச்சும் வெளிய போயி பிரியாணியும் புரோட்டாவும் சாப்பிடலாம்ப்பா.. ப்ளீஸ்ப்பா.."
"ப்ச், வீட்ல உப்புமா செஞ்சு வச்சிருக்கேன்.. ஒழுங்கா வந்து சாப்பிடு."
"ஐ.. நீ இப்டி சொல்வனு தெரியும்மா! அதான், வரும்போதே பாய் கடைல சாப்டுட்டு, உனக்கும் பார்சல் வாங்கிட்டு வந்தேன்! ஐயோ அடிக்காதம்மா, வலிக்குது! ஹேமா.. காப்பாத்து!!"
அவர்கள் கூத்தில் ஹேமா சிரித்துவிட, அதில் சாரூ இன்னும் மகிழ்ந்து ஆர்ப்பரிக்க, சிரிப்புக்களுடன் கழிந்தது அந்த இரவு.
***
மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து பள்ளிக்கூடம் செல்வதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தபோது, வாசல்மணி அடித்து அழைத்தது அவளை.
அம்மாவும் இன்னும் எழாததால், ஹேமாவே சென்று கதவைத் திறந்தாள்.
"ஹாய் ஹேமா"
கையிலிருந்த கைபேசி நழுவிக் கீழே விழ, கண்ணைக் கசக்கி தன்னெதிரே நின்றவன் நிஜமான என சோதித்துப் பார்த்தாள் அவள்.
புன்னகை மாறாமல் நின்றிருந்தான் ஹரி.
"ஹ..ஹரி?"
"ரெண்டு மூணு நாள்ல உன் முகம் மறக்கல. மூணு மாசத்துல உன் பேரு மறக்கல. புதுசா எத்தனையோ பொண்ணுங்க முகத்தைப் பார்த்தேன்.. ஆனா உன் கண்ல தெரிஞ்ச அந்த அசாத்திய வெளிச்சம் மறக்கல. தினம்தினம் என்கூட கண்ணால சிரிச்சுப் பேசின உன் குரல் மறக்கல. மறந்தது ஒண்ணே ஒண்ணுதான்.. நீயில்லாத வாழ்க்கையை."
கடகடவென அவன் பேசப்பேச அவளது கண்களில் அருவியாக நீர் சுரந்து கொட்ட, கையால் வாய்பொத்திக்கொண்டு விசும்பினாள் அவள்.
"ஹரி..."
"சாரூ ஃபோன் பண்ணும் போதெல்லாம் சொல்லுவா.. எதையோ தொலைச்ச மாதிரி அழுதுட்டு இருப்பன்னு.. நீ எதைத் தொலைச்ச ஹேமா..? எங்க தொலைச்சமோ அங்கதான தேடணும்.. வா, சேர்ந்து தேடுவோம்."
பதிலின்றி அவனை அணைத்துக்கொண்டு விசும்பித் தீர்த்தாள் அவள். அரவம் கேட்டு வாசலுக்கு வந்த சாருவும் வியப்பானாள்.
"ஹரி!? எப்ப வந்தீங்க?? ஆறு மணிக்கு இங்க இருக்கீங்கனா.. அப்ப.. நேத்து நைட்டே அங்கிருந்து கிளம்பியாச்சா? லாக்-டவுணை எடுத்த அடுத்த நிமிஷம் ஓடி வந்துட்டீங்க போல? ஹூம்.. அதுக்கேத்த வரவேற்புதான் அக்காவும் குடுக்கறா.. ஆனா உங்க ரெண்டு பேரையும் சேர்த்தி வைக்கறதுக்குள்ள நான் பட்ட கஷ்டம் இருக்கே.. யப்பா!!"
ஹரிஹரன் வாய்விட்டுச் சிரிக்க, இருவரையும் சேர்த்து உற்சாகமாக அணைத்துக்கொண்டாள் சாரூ. ஹேமா கண்களைத் துடைத்தபடி நிமிர்ந்தாள்.
"சாரூ.."
"ம்ம், சொல்லுக்கா.."
"கொஞ்சம் எங்களைத் தனியா விடறயா?"
"அதான பாத்தேன்! நல்லா இரும்மா தாயே! நல்லா இரு!!"
அவள் உள்ளே செல்ல, இன்னும் விலகாமல் ஹரியை அணைத்தவண்ணமே நின்றாள் அவள். அவனது கண்களையே கண்ணிமைக்காமல் அவள் பார்த்துக்கொண்டிருக்க, அவளது நெற்றியில் முத்தமொன்று பதித்தான் அவன்.
"ஹேமா, எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு. அதுமட்டும் போதும் எனக்கு. மத்த எந்த விஷயமும் எனக்கு முக்கியமில்ல. ஐ ஜஸ்ட் லவ் யூ. தட்ஸ் ஆல். நீ போதும் எனக்கு. வேறெதுவும் வேணாம். ஐ லவ் யூ"
பதிலுக்காக அவளை எதிர்பார்த்து நோக்கியிருக்க, அவளோ மெல்ல நிமிர்ந்து அவனது மூக்குக் கண்ணாடியைக் கழற்றிவிட்டுப் புன்னகைத்தாள். அவன் புரியாமல் பார்க்க, தன் பதிலை இதழ்களால் வார்த்தையின்றிப் புரியவைத்தாள்.
****
முற்றும்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top