புன்னகை
என் வீட்டு வாசலில் வானவில்லும் வட்டமிடும் என் தோட்ட பூக்களும்
முகம் சுளிக்கும் என் ராட்சசியின் புன்னகையில்...!
புன்னகை,
மொழிகளால் நொறுக்கப்படாத பொது மொழி.
வார்த்தைகளால் இறுக்கப்படாத வாய் மொழி.
உள்ளத்தின் விதைகள் உதட்டில் விரிக்கும் உன்னத மலர் தான்
புன்னகை.
மகிழ்வின் வாடைக் காற்று தொட்டு மொட்டுப் பூட்டை உடைத்து,
பட்டென்று வரும் பரவசப் பூ தான் புன்னகை.
ஒரு வார்த்தையில் சொல்லும் நட்பின் வரலாறு தானே
புன்னகை.
விலங்கிலிருந்து மனிதன் விலகியே இருப்பது
புன்னகையின் புண்ணியத்தினால் தானே.
உதடுகளை விரியுங்கள் புன்னகை புரியுங்கள்
சிரிப்புக்கு அது தான் தாய் வீடு மகிழ்ச்சிக்கு அது தான்மறு வீடு.
உள்ளக் கவலைகளை ஏன் அறுத்தெறிய வேண்டும்,
ஒற்றைப் புன்னகை அதைத் துடைத்தெறியும் போது.
புன்னகை இல்லாத சாலைகளில் நடப்பது
நரகத்தின் வாசலில் தீக்குளிப்பது போன்றதே.
இரு கை இல்லாதவர் ஊனமானவரல்ல புன்ன'கை' இல்லாதவரே
உள்ளுக்குள் ஊனமானவர்.
புன்னகை, ஒரு வரிக் கவிதையாய் உருவாகட்டும், புரட்டிப் படிக்கும்
புத்தகமாக வேண்டாம்.
புன்னகை, ஒரு முகத்தோடு உலா வரட்டும்,
இராவணத் தலைகளை உள்ளே இரகசியமாய் வைக்க வேண்டாம்.
புன்னகைக்க மறந்தோர்க்கு ஓர் வேண்டுகோள்.
ஆனா, ஆவன்னா சொல்லிக் கொடுக்கும் சாக்கில்
மெல்லமாய் கற்றுக் கொள்ளுங்கள் ஓர் மழலையிடம், புன்னகையை...!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top