19

"ஹெலோ!" என்றதும் "தனியா வந்துட்டயா?" என்றான் கண்ணன்.

"ஹ்ம்" என்றான் ஷிவா.

"நீ அவளை உயிருக்கு உயிரா விரும்புறேன்னு தானே என் அப்பா அம்மா அடுத்து உன்னை நம்பி கல்யாணம் பண்ணி கொடுத்தேன். ஆனா நீ என்ன பண்ணி வச்சிருக்க? தாலி கட்டி மூணு நாள்கூட ஆகலை அதுக்குள்ள அவளுக்கு சங்கு ஊத பார்த்துருக்க இல்ல? இதான் உன் அளவு கடந்த லவ்வா?" என்றான் மிகவும் கோபமாய்.

"டேய் கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரமா திட்டிட்டு இருக்கியே உனக்கு போர் அடிக்கலை?" என்றான் ஷிவா விளையாட்டாய்.

"அங்க நம்மளால காப்பாத்த முடியாத சிட்டிவேஷனா இருந்திருந்தா என் தங்கச்சி இந்நேரம் உன் வீட்டு ஹால்ல பொணமா படுத்திருந்திருப்பா அப்போ உனக்கு போர் அடிக்கும்ல?" என்றான் கண்ணன்.

"போதும் கண்ணா ரொம்ப பேசுற? முதல்ல என்ன நடந்ததுன்னு தெரியாம பேசாத..." என்று சிவாவும் கோபமாக பேச, "போதும் நாளைக்கு காலைல நான் வரேன். என் தங்கச்சியை கூட்டிட்டு போக.." என்று பட்டென்று போனை வைத்தான் கண்ணன்.

"லூசு பய. என்ன சொல்லவரேன்னு கூட கேட்க மாட்றான்... வரட்டும் நாளைக்கு... நீ எப்படி என் பொண்டாட்டிய கூட்டிட்டுப் போறேன்னு நானும் பார்க்கிறேன்." என்று புலம்பிக் கொண்டே கீழே சென்றான்.

'பேசியாச்சா?' என்றாள் விழிகளால் அழகி.

'இவ ஒருத்தி இவுங்க அண்ணன் பேசியே கொல்றான். இவ என்னை தூரத்துல நிக்க வச்சே பார்த்து கொல்றா.. ஆக மொத்தம் என்னை பாடா படுத்தணும்னு தீயா வேலை செய்றாங்கன்னு நினைக்கிறேன்.' என்று உள்ளுக்குள் புலம்பினாலும்... மெல்லிய புன்னகையை உதிர்த்து சாப்பிட அமர்ந்தான்.

"வா டா அழகிம்மா சாப்பிடுவ. முகத்தை பாரு எவ்ளோ சோர்வா இருக்குன்னு?" சிவாவின் அருகில் அமர வைத்து தானே ஊட்டி சாப்பிட வைத்தார் அவனின் தாய்.

"அம்மா" என்றான் ஷிவா.

"அம்மா..." என்றான் மீண்டும் சத்தமாக.

"என்னடா எதுக்கு அம்மா அம்மான்னு ஏலம் போட்ற? இங்க தானே இருக்கேன்.." என்றார்.

வாய் மட்டும் அசைந்ததே தவிர, கண்ணும் திருப்பவில்லை முகமும் திரும்பவில்லை...

"நானும் உன் பையன் தான்."

"ஒஹ் அப்படியா? அதான் சரியில்லை பேசாம வேற நல்ல பையனை கூட்டிட்டு வரலாம்னு இருக்கேன்." என்றார்..

“அம்மா” என்றான் குழந்தையின் கோபம் போல் முறைத்து.

“டேய்! சும்மா சும்மா அம்மாவை அப்படி பாசமா பார்க்காதடா சிவா. அந்த புள்ள நேத்துலர்ந்து சரியாவே சாப்பிடலை அதான் ஊட்டி விட்றேன். உன்னை விட சின்ன பொண்ணு தான உன் தங்கச்சி அங்க பாரு எவ்ளோ சமத்தா புரிஞ்சிக்கிட்டு அழகா சாப்பிட்றா. தடிமாடு உனக்கென்னடா மூணு வயசு குழந்தைன்னு நினைப்பா?” என்று கேட்கவும்.

இவர்களின் உரையாடலில் வாயில் உணவோடு அழகி சிரித்துவிட, சட்டென புரையேறியது. இருமல் அதிகம் வரவும் உடனே தலையை தட்டி முதுகை லேசாக தடவி தண்ணீரை குடிக்க வைத்தவன், "அறிவிருக்காடி உனக்கு? வாய்க்குள்ள சாப்பாட்டை வச்சுக்கிட்டு சிரிப்பாங்களா? அதுவும் உங்க அத்தை என்னை திட்டினா அவ்ளோ சிரிப்பு உனக்கு?" உரிமையாய் திட்ட தொடங்கி பொய் கோபத்தில் முடித்தான்.

அவசரத்திற்கு தான் என்றாலும் அவனின் மெல்லிய தீண்டலில் அழகியின் உடல் அதிர்ந்ததென்னவோ உண்மைதான்... அவளின் நடுக்கத்தை உணர்ந்து கொண்டவன் சூழ்நிலை கருதி தனக்குள் இருந்து எழும் ஆசைகளையும் புறந்தள்ளி வேண்டுமென்றே செல்லமாய் திட்டி அவளின் கவனம் திசை திருப்பியதில் உடனே முகம் சுருங்கி அமைதியானாள் அழகி.

"டேய்! என்னடா என் முன்னாடியே புள்ளைய திட்ற? இன்னொரு முறை திட்டின தொலைச்சிருவேன் தொலைச்சு பார்த்துக்கோ." என்று முறைத்தார் சிவாவின் அப்பா.

தன் தாயையும் தந்தையையும் மாறி மாறி பார்த்தவன் தங்கையையும் பார்த்து, "ஏம்மா நீ மட்டும் அமைதியா இருக்க. சும்மாவாவது திட்டு... எல்லோரும் ஓன்னு கூடிட்டிங்கள்ல? ஆம்பிளை பிள்ளை பாவம் உங்க யாரையும் சும்மா விடாது பார்த்துக்கோங்க..." என்று வராத கண்ணீரை சுண்டிவிடுவதை பார்த்துக் கொண்டிருந்த  சிவாவின் தங்கை ஒரு குட்டுவைத்து, "ஓவர் ஆக்க்ஷன் உடம்புக்கு ஆகாதுடா." என்று எழுந்து சென்றாள்.

இன்னும் தன் தந்தை முறைத்து கொண்டிருப்பதை பார்த்து, "ஹ்ம் ஹ்ம்ம் அதெல்லாம் உங்க மருமகளை நான் மட்டுமில்ல யாருமே எதுவும் சொல்லாம பார்த்துக்குறேன் போதுமா? நேத்து வந்த மருமகளுக்காக கூடவே இருந்த மகனை திட்றிங்க... நடத்துங்க நடத்துங்க... கல்யாணம் பண்ணா பாய்ஸ் சுதந்திரம் போய்டும் போல..." என்று தான் தாயிடம் முகத்தை வெட்டி கொண்டான்.

"டேய்! யாரு என் மருமக நேத்து வந்தவளா? போடா அறிவு கெட்டவனே... மூணு வருஷத்துக்கு முன்னாடிலர்ந்து எப்போ என் மருமகளை பார்த்துட்டு வந்து தினமும் அவ புராணம் பாட ஆரம்பிச்சியோ அன்னைக்கே இந்த வீட்டுக்குள்ள வந்துடாடா அவ." என்று செல்லமாய் சிவாவின் முதுகில் ஒரு அடி போட்டுவிட்டு நகர்ந்தார்.

சட்டென்று அழகியின் முகம் நிமிர்த்தி சிவாவை நோக்க அவனும் இவளை தான் பார்த்து கொண்டிருந்தவன் லேசாக கன்னத்தில் குழிவிழ சிரித்து கண்ணடித்தான்.

அவனின் குறும்புத்தனத்தில் அழகியின் இதயம்  படபடவென்று பட்டாம்பூச்சியாய் பறந்து சிலிர்க்கத் தொடங்கியது.

அசைந்தாடும் மரங்களின் இலைகளையும் அதனால் வரும் தென்றலையும் தன் விழி மூடி ரசித்து கொண்டிருந்தவனை கலைத்தது ஆசை மனைவியின் குரல்.

"என்ன... அண்ணா ரொம்ப ஓவரா கொஞ்சிட்டாரோ?" என்றாள் லேசாய் புன்னகைத்து.

தோட்டத்தின் நடுவே போட்டிருந்த ஊஞ்சலில் ஆடாமல் அமர்ந்திருந்தவன் தன்னவளின் குரல் கேட்டதும் குறுநகை புரிந்து மெல்ல நகர்ந்து அழகியை அமரும்படி விழியசைத்தான்.

"ஹ்ம்ம்.. பின்ன அவன் உயிரான உன்னை என்கிட்ட கொடுத்து பொக்கிஷமா பொத்தி வைக்க சொன்னா உன் உயிருக்கே உலை வைக்க பார்த்த என்னை சும்மா விடுவானா? அதான் போட்டு தாளிக்கிறான்..." என்றான் புன்னகைத்து.

"அப்படி ஏன் சொல்றிங்க? இவ்வளவு பெண்களோட வாழ்க்கையை நாசம் பண்ணினவங்களை பிடிக்க ஏதோ என்னால சின்ன உதவி செய்ய முடிஞ்சுதேன்னு ரொம்ப சந்தோஷமா இருக்கு. விடுங்க அண்ணன் அப்படி தான். அம்மா அப்பாவிட என் மேல அதிக பாசம் அதான். சரியாகிடும். நீங்க வருத்தப்படாதீங்க." என்ற அழகியின் ஒவ்வொரு சொற் முத்துகளும் கசிந்துருகி செவிகளில் தேனாய் பாய தொடங்கியது.

"உன்னை நான் ஒழுங்கா பார்த்துக்கலையாம் கல்யாணமாகி ரெண்டு நாள்கூட இல்லாம உன் உயிருக்கு உலை வைக்க பார்த்தேன்னு வருத்தப்பட்டான். நான் பேசுற எதையும் காதுல வாங்க கூட தயாரா இல்லை அவன். நாளைக்கே வந்து உன்னை கூட்டிட்டு போறானாம்." என்றான் குரல் கரகரக்க.

அவனின் இந்த முகம் அழகியின் ஆழ்மனதை உலுக்கி பார்த்தது.

"இவ்ளோ நாள் எப்படியோ தெரியலைடி... நீ தூரமா இருந்த... உன்னை பார்த்துட்டு இருந்தாக்கூட போதும்னு இருக்கும்... இப்போ அப்படியில்ல... நீ என் மனைவியாகி என் பக்கத்துல இருக்க.. உன்னை பார்த்துட்டு இருக்க இந்த நிம்மதி போதும். கண்ணன் வந்து கூப்பிட்டா நீ போய்டுவியா?" என்றான் இதயத்தில் ஏற்பட பயத்தை மறைக்காமல் மனையாளுக்கு விழியில் காட்டியபடி கெஞ்சும் குழந்தை போல்.

விடைத் தெரியாமல் தவிக்கும் மன்னவனின் மனதை விளையாட்டுக்கு கூட தவிக்க விட எண்ண முடியவில்லை என்பதை என்ன உணர்வென்று அறியமுடியாமல் பேதையவள் சிந்தனையில் சிக்குண்டு தவிக்க, அச்சிந்தனையை உருவாக்கியவனே ஆபத்பாந்தவனாய் குரல் கொடுத்தான்.

"பரவால்ல விடு அழகிம்மா. நீ ரொம்ப யோசிக்காத.. உனக்கு என்ன தோணுதோ அதை செய்... எனக்கு எப்போவுமே உன் சந்தோஷம் தான் முக்கியம்." என்று அவன் வாய் உரைத்தாலும் விழிகள் வேறு கதை படிப்பதை உணர்ந்து கொண்டவள் மெல்ல மேனி சிலிர்க்க அவன் வலிய கரத்தை பற்றினாள்.

"எனக்கு எங்க அண்ணன் தான் உயிர். அவர் என்ன சொன்னாலும் யோசிக்காம செய்வேன். அப்படிப்பட்ட எங்கண்ணன் கொடுத்த உறவு நீங்க. நிச்சயம் உங்களை விட்டு போகமாட்டேன். அண்ணன், என் மேல வச்ச பிரியத்துல பேசுறாங்க. நான் அண்ணாகிட்ட பேசுறேன். நீங்க எதையும் நினைச்சி மனசை குழப்பிக்காதீங்க. நேரமாகுது எனக்கு தூக்கம் வருது நான் மேலே போறேன்." என்று அங்கிருந்து நகர்ந்து தங்களறைக்குள் புகுந்து கொண்டாள்.

அவளின் ஒவ்வொரு சொற்களுக்கும்... தான் மீண்டும் மீண்டும் பிறந்த மகிழ்ச்சி அடைந்தவன் நிலாவை ரசிக்க தொடங்கினான்.

'அவ என்னை பார்ப்பாளான்னு எத்தனை நாள் ஏங்கிருக்கேன். என் கூட எப்போ பேசுவான்னு எவ்வளவு நாள் இரவு தூங்காமல் உறங்கா இரவுகளாய் கடந்திருப்பேன். எல்லா காத்திருப்புக்கும் ஒரே பதிலில் உன் மேல் பித்தம் கொள்ள செய்து விட்டாயடி பெண்ணே.

"இம்மண்ணில்
என் விழிமூடும்
தருணம் வரை
உன் மடி சாய
மட்டுமே மனம் கிடந்து
அல்லாடுதடி அல்லிமலரே..." '

மேலே அவர்கள் அறையின் பால்கனியில் அமர்ந்தபடி அழகியின் விழிகளும் நிலவை தான் வெறித்து கொண்டிருந்தன.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #family#love