*3*

அந்த துண்டுச்சீட்டு செய்தியைப் படித்தவுடன் ஏற்கனவே படபடத்த என் இதயத்தின் துடிப்பு என் காதுகளுக்கே நன்றாக கேட்க ஆரம்பித்தது . என் புகுந்த வீட்டில் எனக்கு எதிர்ப்புகள் இருக்கும் என்ற விஷயம் நான் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான் . ஆனால் இந்த அளவுக்கு நான் எதிர்பார்க்கவில்லை . வீட்டிற்குள் அடியெடுத்து வைத்து ஒரு நாள் கூட முழுதாக ஆகியிருக்கவில்லையே... யோசிக்க யோசிக்க தலை லேசாக சுற்ற ஆரம்பிக்கவே தலையில் கையைப்பிடித்துக்கொண்டு அமர்ந்து விட்டேன் . 

சிறிது நேர ஆசுவாசத்திற்குப் பிறகு மேசையின் மீதிருந்த புத்தகத்தைப் பார்த்தேன் . புத்தக வாசிப்பில் லயிக்க இப்பொழுது என்னால் இயலமுடியவில்லை . எனவே அந்த புத்தகத்தை எடுத்து அதனுடைய புத்தக வரிசையில் அடுக்கிவிட்டு எங்கள் அறையை நோக்கிச் சென்றேன் .அந்த துண்டுச்சீட்டை ஹரியிடம் காண்பிக்கலாமா வேண்டாமா என்ற யோசனையுடன் எங்கள் அறைக்குள் நுழைந்தேன் . 

என் கணவர் ஆழ்ந்த நித்திரையில் அமிழ்ந்திருந்தார் . அவரை எழுப்ப மனமில்லாமல் கதவை மெல்ல தாளிட்டுவிட்டு அவரருகில் சென்று படுத்தேன் . அமைதியாக தூங்கும் என்னவரையே பார்த்துக்கொண்டிருந்தேன் . காதலித்த நாள் முதல் இன்றைய பொழுது வரை என்னை இவர் நடத்திக்கொண்டிருக்கும் விதமே மறுபடி மறுபடி என்னவரின் மேல் காதலில் விழவைத்துக்கொண்டிருந்தது . அவரிடம் இந்த துண்டுச்சீட்டைக் காண்பித்து அவரையும் மனவருத்தம் கொள்ள வைக்க என் உள்ளம் பிரியப்படவில்லை . அதனால் அந்த துண்டுச்சீட்டை சுக்குநூறாக கிழித்து அருகிலிருந்த டஸ்ட்பின்னில் போட்டுவிட்டேன் . எதுவாக இருந்தாலும் என் ஹரி என்னுடன் இருக்கும்போது ஒருகை பார்த்துவிடலாம் என்ற எண்ணமே எனக்கு மேலோங்கியிருந்தது அது எனக்கு கூடுதல் மனதைரியத்தையும் கொடுத்தது . 

எனக்கும் பிராயாணக்களைப்பு அசதியைக் கொடுத்ததால் படுத்த சில மணி நேரங்களிலேயே உறக்கம் என்னை பீடிக்க ஆரம்பித்தது . எவ்வளவு நேரம் தூங்கினேன் என தெரியவில்லை. நான் கண் விழிக்கையில் ஹரி ட்ரஸ்ஸிங் டேபிளின் முன் நின்றுகொண்டு தலை வாரிக்கொண்டிருந்தார் . கண்களைக் கசக்கிக்கொண்டு அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன் . கண்ணாடி வழியாக நான் எழுந்துவிட்டதைப் பார்த்தவர் " என்ன மேடம் கும்பகர்ணனுக்கு ஒன்னுவிட்ட தங்கச்சி மாதிரி இவ்வளவு நேரம் தூக்கம் .... டைம் என்ன ஆச்சு தெரியுமா ? " 

" எவ்வளவு ஆச்சு " 

" ம்ம்ம்.... நைட் எட்டு மணி "

" என்னது.நைட் ஆகிடுச்சா.... இவ்வளவு நேரமாவா தூங்கினேன் ... என்னங்க நீங்க கொஞ்சம்.என்னை.எழுப்பி விட்ருக்க கூடாதா ... "

" இன்னும்.கொஞ்ச நேரத்துல நீ எழுந்துக்கலைன்னா நானே எழுப்பி விடலாம்னுதான் நினைச்சேன் . அதுக்குள்ளதான் நீயே எழுந்துட்டியே ... " 

" எல்லாத்துக்கும் ஒரு பதிலை ரெடிமேடா கையிலயே வச்சிட்டு இருப்பீங்களா ஹரிமா"

" நான் பதில் சொல்லனும்னுதானே நீ கேள்வியே கேக்குற வானுமா " 

" உங்க கிட்ட பேசி என்னால ஜெயிக்கவே முடியாது பேபி..."

" சரி சரி என்னை வின் பன்றது அப்புறம் இருக்கட்டும் . எனக்கு ரொம்ப பசிக்குது வானு பேபி... சீக்கிரம் ஃப்ரஸ் அப் ஆகிட்டு வா சாப்பிட போகலாம் " 

எனக்கு மறுபடியும் அனைவரையும் சந்திக்கும் சந்தர்ப்பம் . இவ்வளவு நேரம் மறந்திருந்த அந்த துண்டுச்சீட்டு சமாச்சாரம் மீண்டும் என் மனத்தில் குழப்ப ரேகையை உண்டாக்கியது . யாருமில்லா லைப்ரரியில் அதை வைத்தது யார்? . மீண்டும் மீண்டும் படபடப்பு நொடிக்கு நொடி அதிகரித்தது . கடவுளே .... எனக்கு மன உறுதியை கொடு என்று வேண்டிக்கொண்டே குளியலறைக்குச் சென்று முகம் கழுவிக்கொண்டு வந்தேன் . 

பின் இருவரும் இரவு உணவை உண்பதற்கு கீழே டைனிங் ஹாலிற்க்குச் சென்றோம் . நாங்கள் அங்கு சென்றபின்தான் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள் .ஆனால் என் மாமியாரை மட்டும் காணவில்லை . நந்திதாவும் சிறிது நேரத்திற்கெல்லாம் வந்து சேர்ந்தாள் . உண்மையிலேயே அவள் மிக அழகாகத்தான் இருந்தாள் . சரியாக சொல்வதென்றால் ஒரு ஜாடையில் நடிகை ராஷி கன்னாவை எனக்கு நினைவுபடுத்தினாள் . 

வந்தவள் என் அருகினில்தான் அமர்ந்தாள் . நான் அவளைப் பார்த்தபோது என்னைப்பார்த்து ஸ்நேகமாகப் புன்னகைத்தாள் . சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது எனக்கு . காலையில் அப்படி முறைத்தவள் இரவு ஸ்நேகமாகப் புன்னகைக்கிறாள் . 

பின்பு என்னைப் பார்த்து அந்த புன்னகை மாறாமலேயே ... " ஹாய் வான்மதி ... நான் நந்திதா... உஷாவோட சிஸ்டர் "

" ஹாய் நந்திதா .... " என்றபடியே அவளுக்கு புன்னகையுடன் பதிலளித்தேன் முகத்தில் மட்டுமே ... மனத்திற்குள் குழப்பம் கும்மியடித்துக்கொண்டுதான் இருந்தது . 

"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க வான்மதி ... ஹரிக்கு ரொம்ப பொருத்தமா இருக்கீங்க ... எனிவே ஹாப்பி மேரிட் லைஃப் வான்மதி ... " என்றபடி கைகுலுக்கினாள் .

நானும் புன்னகையுடன் அவளின் வாழ்த்தை ஏற்றுக்கொண்டேன். அடுத்த பத்து நிமிடங்களில் எங்கள் இரவு உணவை முடித்துக்கொண்டோம் . சாப்பிட்டு முடித்து அறைக்கு திரும்பும் வேளையில் மீண்டும் என்னைப்பார்த்து புன்னகையுடன் "குட்நைட் வான்மதி" என்ற நந்திதாவிடம் "ஐயம் எக்ஸ்டீரீம்லி சாரி நந்திதா " என்றேன் .

" சாரியா ? பார் வாட் வான்மதி " என்று குழப்பத்துடன் கேட்டாள் .

" அது... அது ... ஹரிக்கும் உங்களுக்கும் கல்யாண ஏற்பாடு ...." என்று என் வாக்கியத்தை முடிப்பதற்குள் " ஸ்டாப் ஸ்டாப்.... அது முடிஞ்சு போன சாப்டர் வான்மதி... பழைய கதை... இப்போ எதுக்கு அதெல்லாம் . நியூ லைஃபை சந்தோஷமா ஸ்டார்ட் பண்ணுங்க ... " என்று கூறினாள் . சற்று நிம்மதியாக இருந்தது . ஆனால் அவள் இன்று காலையில் என்னைப் பார்த்து முறைத்த பார்வையை மட்டும் என்னால் மறக்க இயலவில்லையே . துவேஷம் நிறைந்த முறைப்பு அது . உடனடியாக எப்படி மாறமுடிந்தது இவளால் .

"இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து எனக்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அனுபவங்கள் சற்று விசித்திரமானவையாகவே இருக்கின்றன" என்று என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை .

நந்திதாவுடன் நான் பேசிய பிறகு ஹரியிடம் சென்றேன் . " என்ன வானு அவ கிட்ட என்ன பேசிட்டு இருந்த ?" என்ற ஹரியிடம் " ஒன்னும் இல்ல ஹரி ஜஸ்ட் நம்ம மேரேஜ்க்கு விஷ் பண்ணா அவ " என்றேன் . பிறகு அவரும் நானும் எங்களறைக்கு வந்துவிட்டோம் . 

எங்கள் கட்டிலில் நான் அமர்ந்துகொண்டே " ஹரி... அம்மா இன்னும் சாப்பிட வரலையே ஏன் ? என் மேல இன்னும் கோபமா இருப்பாங்களோ ? மதியம் கூட சாப்பிடலைங்க ... இந்த வீட்டுக்கு வந்த முதல் நாளே இப்படின்னா எனக்கு கஷ்டமா இருக்குங்க... " என்று கூறினேன்.

அதுவரை நின்று கொண்டிருந்தவர் என் அருகினில் அமர்ந்து என் முகத்தை மெல்ல நிமிர்த்தி " கவலைப்படாத வானு . எல்லாம் போக போக சரியாகிடும் . உன்னைப்பத்தி அவங்க நல்லா புரிஞ்சிக்கிட்டாங்கன்னா மருமகளே ! மருமகளே !ன்னு வாய்நிறைய கூப்பிட்டு கைநிறைய இந்த வீட்டோட கொத்து சாவியும் கொடுத்துடுவாங்க... நீ இப்படி உம்முன்னு இருக்காதடா எனக்கும் கஷ்டமா இருக்கு " என்று ஆறுதலளித்தார் .

காலையில் இருந்த படபடப்பு இப்பொழுது சற்று கணிசமாக மட்டுப்பட்டிருந்தது . ஆனால் அந்த துண்டுச்சீட்டு செய்தி மட்டும் மனதினுள்ளிருந்து போவேனா என்றபடி சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தது .

அறைக்கு வந்த பிறகு என்னுடைய துணிமணிகளையெல்லாம் வாட்ரோப்பில் அடுக்கிக்கொண்டிருந்தேன் . சட்டென்று என் தோளில் ஒரு கரம் ஊர்ந்து சென்றது . திரும்பிப்பாராமலேயே அது யாரென்று கண்டுகொண்டேன் . என் ஹரியின் ஸ்பரிசம் எனக்குத் தெரியாதா ? 

துணிகளை அடுக்குவதை நிறுத்திவிட்டு அவர்புறம் நோக்கித் திரும்பினேன் . காதலுடன் என்னைப் பார்த்தவர் " இதையெல்லாம் நாளைக்கு பார்த்துக்க கூடாதா ... இன்னைக்கே எல்லாத்தையும் செய்யனுமா ? " 

" இல்லைம்மா ... இப்ப சும்மாதானே இருக்கேன் ... தூக்கமும் வரலை அதான் லக்கேஜை அததோட இடத்துல வச்சிட்டு இருக்கேன் " 

" சும்மா இருக்கியா.... இனிமே சும்மா இருக்க விட்டாதானே என்றபடியே என்னருகே இன்னும் நெருங்கி வந்து காலையிலிருந்து ஏற்பட்ட அதிர்ச்சிகள் அனைத்தையும் மறக்கடித்துக்கொண்டிருந்தார். 

******

இருவரும் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தோம் . எனக்கு திடீரென முழிப்பு தட்டியது . ஏதோ சன்னமான குரலில் யாரோ வான்மதி என்று கூப்பிடும் சப்தம் . அது மட்டுமின்றி எங்கள் அறையின் கண்ணாடி சாளரத்தின் வழியே யாரோ இருப்பது போல் நிழலாடியது .

யாரென்று பார்ப்பதற்க்காக கட்டிலிலிருந்து எழுந்து அறையின் விளக்கைப் போட்டேன் . அடுத்த நொடியே சாளரத்தில் நிழலாடிக்கொண்டிருந்த உருவம் விருட்டென்று மறைந்தது . என்ன இது விநோதம் என மனத்தினில் நினைத்தபடியே கதவைத் திறந்து வெளியில் சென்றேன் . யாருமே இருக்கவில்லை . ஒருவேளை அதிகமாக சிந்தனை வயப்பட்டிருந்ததால் இது என் பிரமையாக இருக்குமோ என்று நினைத்தபடி மீண்டும் அறைக்குள் வந்தேன் . அறைக்குள் நுழைந்த நொடி அறைக்கதவிற்கு அருகே என் காலில் அது தட்டுப்பட்டது . அழகான கிஃப்ட் ரேப்பரால் சுற்றப்பட்டு சாட்டின் ரிப்பனால் கட்டப்பட்டிருந்த பரிசுப்பெட்டி .

இது நிச்சயமாக பிரம்மையில்லை. அந்த பரிசுப்பெட்டியை எடுத்து உள்ளே என்ன இருக்கிறது என்பதற்காகத் திறந்து பார்த்தேன். அதில் நானும் ஹரியும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இருந்தது . அந்த புகைப்படத்தில் என் முகத்தில் மட்டும் பெருக்கல் குறி இடப்பட்டிருந்தது . அதைப்பார்த்தவுடன் படபடவென்று இதயம் அடித்துக்கொண்டது. இந்த புகைப்படத்தை நான் என் பெட்டியில் அல்லவா வைத்திருந்தேன் . யாரோ நான் இல்லாத சமயமாக பார்த்து என் பெட்டியிலிருந்து இப்புகைப்படத்தை எடுத்து இந்த ரூபத்தில் வைத்திருக்கிறார்கள் . அது யார்? .இதுவரை பயத்தில் மூளையின் நியூரான்கள் செயலிழந்து போய் அப்படியே தரையில் அமர்ந்துவிட்டேன் ... யார் அது ? யார் என்னைப் பின்தொடர்வது ? 

மனத்தினில் கேள்விகள் அரித்துக்கொண்டிருக்க அந்த பரிசுப்பெட்டியை எடுத்து வந்து மறைத்து வைத்தேன். தூக்கமோ என்னைவிட்டு காத தூரம் பறந்துவிட்டது . என் மேல் இவ்வளவு வஞ்சம் கொண்டவர் யாரக இருக்க முடியும் ?. என் மனத்தில் இந்த கேள்வி உதித்தபோது மனக்கண்ணில் நந்திதாவின் முகம் நிழலாடியது . ஒரு வேளை என்னிடம் நயமாகப்பேசிவிட்டு இப்பொழுது இந்த வேலையை அவள் செய்திருப்பாளோ?!!! .....

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top