*2*
யார் இந்த பெண் ...? ஏன் இப்படி என்னை முறைத்துக்கொண்டிருக்கிறது என்று எண்ணியபடியே இருந்த என் கவனத்தை கலைத்தது ஹரியின் குரல் . " வானு எவ்வளவு நேரம் உன்னைக் கூப்பிடறது ... என்னோட டவலை எடுக்க மறந்துட்டேன் ... எடுத்துக்கொடு " என்றபடி குளியலறையிலிருந்து குரல் கொடுத்தார் ஹரி .
" இதோ எடுத்துட்டு வர்றேன்" என்றபடியே அங்கிருந்து நகன்றேன் நான். மீண்டும் அனிச்சையாய் என் கண்கள் அந்தப்பெண் இருந்த பால்கனியின் பக்கம் சென்றது . அப்பெண் அங்கு காணவில்லை ... கண்ணிமைக்கும் நேரத்தில் எப்படி மறைந்தாள் . ஒருவேளை அறைக்குள் சென்றிருப்பாளோ ? என்று எண்ணியபடியே என் கணவருக்கு துவாலையை கொண்டுபோய் கொடுத்தேன் .
அவர் குளியலறையிலிருந்து வந்த பிறகு நான் குளிக்கச்சென்றேன் . அவ்வீட்டின் குளியலறை கூட நேர்த்தியாக இருந்தது . ஜக்கூசி வைத்து கட்டியிருந்தார்கள்.
நான் குளித்துவிட்டு வருவதற்கும். எங்களின் அறைக்கதவை தட்டும் சப்தம் கேட்பதற்கும் சரியாக இருந்தது . " ஹரி... ஹரி... டிஃபன் ரெடியா இருக்கு . சாப்பிட கீழே வர சொன்னாங்க ..." அந்த உஷாவின் குரல்தான் . அறைக்கதவைத் தட்டியபடியே சொல்லிக்கொண்டிருந்தாள் .
" நீங்க போங்க அண்ணி நாங்க கொஞ்ச நேரத்துல வந்துட்றோம் என்றபடி என்னைப்பார்த்தவர் "சீக்கிரம் ரெடியாகு ...இங்க கரெக்ட் டைம்க்கு டைனிங் டேபிள்ல ஆஜர் ஆகலைன்னா சாப்பாடு கிடையாது . எங்க வீடு ஹாஸ்டலை விட மோசம்தான் " என்றவரையே சற்று பீதியுடன் பார்த்தேன்.
" என்ன மேடம் ... உங்க பார்வை ஏதோ சொல்ல வருதே ... என்ன அது "
" இல்ல ... இந்த வீட்ல இந்த ரூல்ஸ் எல்லாம் போட்டது யாரு? "
" இங்க கடைபிடிக்கப்பட்ற எல்லா கட்டுப்பாடுகளும் பரம்பரை பரம்பரையா கடைபிடிச்சிட்டு வரற்துதான் . எங்க குடும்பத்தைப் பொருத்த வரைக்கும் இந்த குடும்பத்து பெண்களுக்கு தான் ரொம்ப மரியாதை தருவாங்க . அதிகாரமும் பெண்கள் கிட்டதான் . அந்த வகையில பார்த்தால் எங்க அம்மாக்கு பிறகு நீதான் இந்த குடும்பத்தைப் பார்த்துக்கனும் , கட்டுப்பாடுகளை கடைபிடிக்கனும் . அதனால எல்லாத்தையும் கொஞ்சம் நல்லா கவனிச்சிக்கோ என்று கூறி கண்ணடித்தபடி புன்னகைத்தார் ஹரி.
"என்னங்க ... உங்க அம்மாவுக்கு அப்புறம் உங்க அண்ணிதானே வீட்டை கவனிச்சக்கனும் . நான் எப்படி அடுத்தபடியா வருவேன் " என்னில் உருத்திய கேள்வியை கேட்டேவிட்டேன்.
" அவர் என்னோட கூட பிறந்த அண்ணா கிடையாது . தூரத்து சொந்தம் . ஆனா சின்ன வயசுல இருந்து இங்க வளர்ந்ததால அந்யோன்யமா இருக்காங்க ... தட்ஸ் இட் ... சரி வா சீக்கிரம் கிளம்பலாம் பசிக்குது எனக்கு " என்றார் என்னவர்.
இருவரும் சாப்பிடும் அறையை நோக்கிச் சென்றோம் . அங்கேயும் பிரமாண்டத்திற்கு குறைவில்லை ஒரே நேரத்தில் நாற்பது பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய டைனிங் டேபிள் . பளபளப்பாக இருந்தது .அங்கிருந்த அனைவரும் வேண்டா வெறுப்பாகத்தான் அமர்ந்திருந்தனர் . அதுமட்டுமின்றி என்னையும் அவரையும் பார்த்து அவர்களுக்குள்ளேயே ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர் .
எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச பசியும் அவர்களின் பார்வையில் காணாமல் போய்விட்டது . நான் தயக்கத்துடன் ஹரியைப் பார்க்க அவர் என் கையை ஆதுரமாக பற்றியபடி சாப்பாட்டு மேசையருகே அழைத்துச்சென்று அங்கு அமரச்செய்து என் அருகிலேயே அவரும் அமர்ந்துகொண்டார் .
வேலைக்காரப் பெண்மணி காலைஉணவை பரிமாறியபடி இருக்க அடுத்த சில நொடிகளில் என் மாமியார் அங்கு வந்தார் . அதுவரை அங்கு முனுமுனுத்துக்கொண்டிருந்தவர்கள் அவர் அங்குவந்தவுடன் பேச்சை நிறுத்திவிட்டு சாப்பிடுவதில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.
சாப்பாட்டு மேசையில் நடுநாயகமாக போடப்பட்டிருந்த நாற்காலியில் வந்தமர்ந்தவர் " ஹரியோட கல்யாண விஷயம் உங்க எல்லாருக்கும் மட்டும் இல்லை அவனோட அம்மாவா எனக்கும் பேரதிர்ச்சிதான் . இப்ப நடந்ததை யாராலயும் மாத்த முடியாது .இந்த விஷயத்தை இதோட நிறுத்திட்டு அவங்கவங்க அவங்கவங்களோட வேலையைப் பாருங்க " என்று கூறிவிட்டு விறுட்டென்று அங்கிருந்து சென்றுவிட்டார் .
அவ்வளவுதான் அங்கிருந்த ஒருவரது முகத்திலும் ஈயாடவில்லை . என் கணவர் கூறியது முற்றிலும் உண்மை என்பதை இச்சில நிமிடங்களிலேயே என் மாமியாரின் செயல் எனக்கு ஊர்ஜிதப்படுத்திவிட்டது . அவர் மிகுந்த ஆளுமை மிக்கவர்தான். அவரது பேச்சிலேயே அதிகாரம் தூள் பறந்தது. அவரின் பேச்சிற்குத்தான் எதிர்த்து பேச அங்கு எவரும் துணியவில்லையே. என் மாமனார் உட்பட .
சாப்பிட்டு முடிந்ததும் எங்கள் அறைக்குத் திரும்பினோம் . என் பார்வை எதேச்சையாக பால்கனியின் வழியே சென்றது . அப்பெண்ணை அங்கே காணவில்லை . சாப்பாட்டு நேரத்திலும் கண்ணில்படவில்லை யாராக இருக்கும் என்று யோசிப்பதை விட அவரிடமே கேட்டுத்தெரிந்து கொள்ளலாம் என ஹரியிடம் கேட்டேன் .
" ஹரி... யாரு பக்கத்து ரூம்ல இருக்குற பொண்ணு... நான் பால்கனிகிட்ட வேடிக்கை பார்த்துட்டு இருக்கும்போது என்னையே முறைச்சு பார்த்துட்டு இருந்தா... கண்ல அவ்வளவு கோபம் .... "
" ஓ... அந்த பொண்ணா ... அவ பேரு நந்திதா .... உஷா அண்ணியோட தங்கை ... அவளைத்தான் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க இருந்தாங்க ... நான்தான் இந்த மகாராணியாரின் கடைவிழிப் பார்வைக்காக ஏங்கி அவங்களையே கைப்பிடிச்சிட்டேனே .... அதனால கோவமா பார்த்திருப்பாளோ என்னவோ...எனக்கு எவ்வளவு டிமான்ட் பார்த்தியா... "எனக் கூறி என்னை வமிபிற்கு இழுத்தார்.
"ஹே… போதும் போதும்… உடனே நாந்தான் மிஸ்டர் இண்டியா டைட்டில் வின் பண்ணேண்ற ரேஞ்சுக்கு பெருமை அடிச்சுக்காதீங்க…" என்றபடி அவரின் வாயை அடைத்தேன் நான்
நான் அவரிடம் வெளியே சகஜமாகப் பேசினாலும் மனதிற்குள் "இவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதாளதான் நம்மை அப்படி முறைச்சாளோ…ப்பா எப்படிப்பட்ட பார்வை எதிராளியை நடுங்கச்செய்யும் பார்வை" என நினைத்துக் கொண்டேன்.
பிறகு ஹரியை நோக்கி,"ஹரி... இங்க யார் யார் என்ன என்ன உறவு முறைன்னே தெரிய மாட்டேங்குது . தயவு செய்து ஃபேமிலி ஆல்பத்திலயாவது அவங்களை எல்லாம் எனக்கு அறிமுகப்படுத்தி வைங்க ...இப்போதைக்கு நம்ம கூட அதுவும் என் கூட யாரும் பேச மாட்டாங்கன்னு நினைக்கிறேன் " எனக் கூறினேன்
" நானே அதைப்பண்ணனும்னு நினைச்சேன் . ஒரு நிமிஷம் வெய்ட் பண்ணு நான் போய் எடுத்துட்டு வந்துட்றேன்" எனக்கூறி அங்கிருந்து சென்றார்.
சிறிது நேரத்திற்கெல்லாம் கையில் ஃபோட்டோ ஆல்பத்துடன் வந்தவர் அவரின் உறவினர்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்த ஆரம்பித்தார் . அறிமுகப்படலம் முடிந்தபிறகு " வானு .... எதுக்காகவும் யாருக்காகவும் நீ இந்த வீட்ல பயப்பட வேண்டாம் . அம்மாவே சொல்லிட்ட பிறகு இதை எதிர்த்து பேசற அளவுக்கு யாருக்கும் துணிச்சல் இல்ல... அதனால நீ சகஜமா இரும்மா... " எனக்கூறி என்னை ஆறுதல்படுத்தியவர் திடீரென நினைவு வந்தவராய் " வானு ... ஐ ஹேவ் எ சர்ப்ரைஸ் ஃபார் யூ ... ஐ ஆம் டாம் சூர் நீ அந்த சர்ப்ரைஸை பார்த்து மலைச்சு நிக்க போற " என்றவர் என்னைக் கைப்பிடித்து அறைக்கு வெளியே அழைத்துச் சென்றார் . எங்கள் அறையிலிருந்த வலப்பக்கத்தில் இருந்த வராண்டாவின் கடைசி அறைக்கு அழைத்துச் சென்றவர் அறை வாயிலில் என்னை நிற்கவைத்து விட்டு என் கண்ணை மூடச் சொன்னார்.
" என்ன ஹரி.... சின்னப்பிள்ளை விளையாட்டு எல்லாம் விளையாட்றீங்க... அப்படியே திறந்து காட்டுங்க " என்ற என்னை அவர் பாவமாக பார்த்த பாவனை எனக்குள் சிரிப்பை வரவழைக்க " சரி சரி கண்ணை மூடிக்கிறேன் " என்றபடி கண்ணை மூடிக்கொண்டேன் .
அந்த அறைக்குள் என்னை கூட்டிக்கொண்டு சென்றவர் என் கண்ணைத் திறக்க சொன்னார் . ஆர்வத்துடன் கண்களைத் திறந்த நான் அவர் சொன்துபோல் உண்மையிலேயே மலைத்துத்தான் போனேன். பெரிய பிரமாண்டமான அந்த அறையில் இருந்த அவ்வளவு அலமாரிகளிலும் புத்தகத்தை நிரப்பி இருந்த அந்த அறையைப் பார்த்ததும் ஒரு ஜுனியர் ஹிக்கிங்பாதம்ஸ்ஸிற்குள் நுழைந்தது போல் இருந்தது .
ஒரு புத்தக பட்ஷியான எனக்கு அந்த லைப்ரரியைக் கண்டதும் குழந்தையின் குதூகலம் எட்டிப்பார்த்து புத்தக அலமாரிகளை நோக்கி ஓட வைத்தது . ஆர்வத்துடன் ஒவ்வொரு புத்தக வரிசைகளையும் பார்த்துக்கொண்டு வந்தேன் . அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரையுள்ள அனைத்து புத்தகங்களும் சேகரிக்கப்பட்டு நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன .
" என்ன வானு... எப்படி என் சர்ப்ரைஸ்.... டிட் யூ லைக்ட் இட் " அழகாக புன்னகைத்தபடி கேட்டார் ஹரி.
" பிடிச்சிருக்கான்னு கேள்விக்கு இங்க வேலையே இல்லை ஹரி... ஆக்ட்சுவலி ஐ லவ்ட் இட் . இனி இந்த ரூம்தான் என்னோட ஃபேவரட் ப்ளேஸ் ஆஃப் திஸ் பேலஸ் . எத்தனை எத்தனை புக்ஸ் இருக்கு இங்க ... நான் ரொம்ப நாளா படிக்கனும்னு ஆசைபபட்டுட்டு ஆனா கிடைக்காம இருந்த புக்ஸ் கூட இங்க இருக்கு. யாரோட கலெக்ஷன்ஸ் இது எல்லாம் " கேள்வியுடன் அவரை பார்த்துக் கொண்டிருந்தேன் .
" எங்க கொள்ளு தாத்தா காலத்திலேர்ந்தே இந்த லைப்ரரி இருந்ததா எங்க அம்மா சொல்லிருக்காங்க . எங்க குடும்பத்துல எல்லாருக்குமே புக்ஸ்ன்னா ரொம்ப இஷ்டம் அப்படி வாங்கி சேகரிச்ச புக்ஸ்தான் இதெல்லாம்" .
"அப்ப என் மாமியார் வீட்டு ஆளுங்க என்னை விட பெரிய புத்தகப் புழுவா இருப்பாங்க போல .... ஆனா நீங்க மட்டும் ஏன் புக்ஸ்ன்னா காத தூரம் ஓடிப்போயிட்றீங்க ... பேட் பாய் "
"சரி சரி நான் பேட் பாயாவே இருக்கேன். வா ரூம்க்கு போகலாம் . ரொம்ப நேரமா கார் ஓட்டிட்டு வந்தது உடம்பெல்லாம் வலிக்கிற மாதிரி டயர்டா இருக்கு கொஞ்சமாச்சும் ரெஸ்ட் எடுக்கனும் . கம் ஆன் கம் ஆன் " என்றார் அவர் .
ஆனால் எனக்கோ இந்த அறையை விட்டு செல்லவே மனம் இல்லையே அதனால் " நீங்க போய் ரெஸ்ட் எடுங்களேன்.... நான் இங்க கொஞ்ச நேரம் படிச்சிட்டு அப்புறம் வறேனே... " கெஞ்சும் தொனியில் கேட்டேன் .
சிறிது நேரம் யோசித்தவர் "சரி வானு ... சீக்கிரம் வா ... புக்கே கதின்னு இங்கயே இருந்துடாதே ... அப்பப்ப என்னையும் கொஞ்சம் நினைச்சி பாரு " என்றபடியே சிரித்துக்கொண்டு சென்றார்.ஹரிக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் முற்றிலும் இல்லை என்று கூறிவிட முடியாது வேலை சம்பந்தமாக ஏதாவது குறிப்பு எடுக்கும்பொழுது பார்த்து படிப்பதுதான். ஆனால் என்னைப்போல் அதற்கென்று தனியாக நேரம் ஒதுக்கி புத்தகப்புழுவாக இருக்க மாட்டார்.
அவர் அங்கிருந்து சென்றவுடன் மீண்டும் புத்தக அலமாரியை நெருங்கிய நான் "த லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ்" புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு படிப்பதற்காக போடப்பட்டிருந்த மேசையில் சென்று அமர்ந்தேன். ஒரு பக்கத்தைக் கூட முழுதாக படித்திருக்க மாட்டேன் . அதற்குள் தடதடவென்று புத்தகங்களெல்லாம் கீழே விழும் சப்தம் அந்த அமைதியான அறையில் பூதாகரமாய்க் கேட்டது .
நான் சற்று அதிர்ச்சியுடன் புத்தகங்கள் விழுந்த இடத்தை நோக்கி சென்றேன் . அந்த புத்தக அலமாரியின் பின்பக்கம் ஏதோ நிழலாடியது போல் இருந்தது . நானும் ஹரியும் இந்த அறைக்குள் நுழைந்த போது யாருமே இங்கில்லை . பிறகு யாராக இருக்க முடியும் என்ற சந்தேகத்துடன் நிழலாடிய இடத்தினை நோக்கி சென்றேன். அதிசயம்.... யாருமே .... எதுவுமே அங்கில்லை ... குழப்பத்துடன் விழுந்த புத்ததகங்களை அதனதன் இடங்களில் வைத்துவிட்டு மீண்டும் படிப்பதற்காக மேசையின் அருகில் சென்றமர்ந்து புத்தகத்தை பிரித்தேன். அதில் ஒரு துண்டுச்சீட்டு மடித்து வைக்கப்பட்டிருந்தது . ஆனால் நான் இப்புத்தகத்தை எடுக்கும்போது இச்சீட்டு அதில் இல்லையே... குழப்பம் மேலும் பீறிட்டது .
அந்த துண்டுச்சீட்டில் என்னதான் எழுதியிருக்கிறது என்பதை அறிவதற்காக அதைத் திறந்தேன் " வான்மதி .... இங்க இருக்க ஒவ்வொரு நிமிஷமும் உனக்கு ஆபத்து நெருங்கிட்டு இருக்கு... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இங்க இருந்து கிளம்பறதுதான் உனக்கு நல்லது " இவ்வாறு எழுதியிருந்த அந்த சீட்டைப்படித்ததும் அதிர்ச்சியில் உறைந்து நின்றேன் .
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top