9 கையில் எடுத்த குணமதி
9 கையில் எடுத்த குணமதி
வீட்டில் கொட்டிய தண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தார் குழந்தைசாமி. அப்பொழுது மருத்துவர் வீட்டினுள் நுழைந்தார்.
"தூயவன் ஃபோன் பண்ணி வர சொன்னாரு" என்றார் அவர்.
"நீங்க வருவீங்கன்னு தம்பி சொல்லி இருந்தாரு. வாங்க" என்று அவரை வெண்மதியின் அறைக்கு அழைத்துச் சென்றார் குழந்தைசாமி.
"தங்கச்சி மா, டாக்டர் வந்திருக்காங்க" என்றார் பவித்ராவிடம்.
அவள் சரி என்று தலையசைத்து,
"வணக்கம் டாக்டர்" என்றாள்.
அவருக்கு ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டார் குழந்தைசாமி. பவித்ராவின் அருகில் அமர்ந்து அவளது கணுக்காலை சோதித்த மருத்துவர்,
"என்ன ஆச்சு" என்றார் அவள் கால்களை பார்த்தபடி.
"சுளுக்கு பிடிச்சுகிச்சு டாக்டர்"
மருத்துவர் வந்த விஷயத்தை தூயவனிடம் கூறுவதற்காக அவனது அறைக்கு சென்றார் குழந்தைசாமி. தனது உடையை மாற்றிக் கொண்டு குளியலறையை விட்டு வெளியே வந்த தூயவன், குழந்தைசாமி தனக்காக காத்திருப்பதை கண்டான்.
"என்ன அண்ணா?"
"டாக்டர் வந்துட்டாரு தம்பி"
"ஓ..."
தன் கைபேசியை எடுத்து, பவித்ரா தனக்கு ஃபோன் செய்தாளா, இல்லையா என்பதை பார்த்தபடி வெண்மதியின் அறையை நோக்கி நடந்தான் தூயவன். ஆனால் அவளிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. மருத்துவர் வந்தால் தன்னை ஃபோன் செய்து அழைக்கும் படி அவன் கூறியிருந்தானே, ஏன் அவள் அழைக்கவில்லை?
வெண்மதியின் அறைக்கு வந்தான் தூயவன். அதே சமயம் அந்த அறையின் கதவை திறந்தாள் சஞ்சனா.
"என்ன ஆச்சு?" என்றான் முகத்தை சுருக்கியபடி.
"பவித்ராவுக்கு டாக்டர் ஊசி போட்டாங்க. அதனால தான் கதவை சாத்தினேன்"
"ஓ..."
லேசாய் வீங்கி இருந்த அவளது காலை பார்த்த அவன்,
"அவ கால் வீங்கி இருக்கு டாக்டர்" என்றான் பதட்டத்தோடு.
"இன்ஜெக்ஷன் போட்டிருக்கேன். லேசான சுளுக்கு தான். ஒன்னும் பிரச்சனை இல்ல. சரியாயிடும்" என்றார்.
"தேங்க்யூ டாக்டர்"
"இந்த ஜெல்லை அப்ளை பண்ணுங்க" என்று பவித்ராவிடம் ஒரு ஜெல்லை கொடுத்தார். அவள் அதை தலையசைத்தபடி பெற்றுக் கொண்டாள்.
மருத்துவர் அங்கிருந்து விடை பெற்ற பின்,
"எதுக்காக எனக்கு நீ ஃபோன் பண்ணல பவித்ரா? நான் தான் டாக்டர் வந்த உடனே எனக்கு ஃபோன் பண்ண சொன்னேனே" என்றான் தூயவன்.
"டாக்டர் என்னை கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. அதனால உங்களுக்கு ஃபோன் பண்ண நான் மறந்துட்டேன்"
"உன்னை யாராவது கேள்வி கேட்டா, நீ எல்லாத்தையும் மறந்துடுவியா?" என்றான் கிண்டலாய்.
அவளுக்கு என்ன பதில் கூறுவது என்று புரியவில்லை. அவள் கட்டிலை விட்டு கீழே இறங்க முயன்ற போது, அவளை தடுத்தான் தூயவன்,
"இப்ப நீ எங்க போற?" என்றான்.
"இல்ல வந்து..."
"மறுபடியும் வீட்டை துடைக்க போறியா?"
உண்மையை கூறப்போனால், அவள் அதற்க்குத்தான் முயன்றாள். அவள் அதை பாதியிலேயே விட்டுவிட்டு வந்து விட்டாள் அல்லவா?
"அம்மாவும், அக்காவும் வந்து, சோப்பு தண்ணியில கால் வச்சா, விழுந்திடுவாங்களே..."
அவள் கூறிய பதிலைக் கேட்டு, விழி விரித்தான் தூயவன். அப்படி என்றால் உண்மையிலேயே அவள் அதற்காகத் தான் போக நினைத்தாளா?
"உனக்கு என்ன பைத்தியமா? இந்த காலை வச்சுக்கிட்டு போய் நீ வீட்டை துடைக்க போறியா?"
"இப்போ எனக்கு பரவாயில்ல"
"ஓ, அப்படியா...?" என்று தன் கைகளை கட்டிக்கொண்டு புருவம் உயர்த்தினான்.
ஆமாம் என்று தலையசைத்தாள்.
"நீ ஒரு சூப்பர் ஹீரோயினா இருக்கணும்" என்று அவளை எள்ளல் செய்த அவன்,
"குழந்தை அண்ணன் இந்த நேரம் அதை துடைச்சி சுத்தப்படுத்தி இருப்பாரு. நீ அதைப் பத்தி ஒன்னும் கவலைப்பட வேண்டாம். ரெஸ்ட் எடுத்துக்கோ"
"இல்லங்க..." அவளது நாக்கு வாயில் ஒட்டிக்கொண்டது, ஒரு கண்டிப்பான பார்வையை அவன் வீசி,
"சொன்னதை செய், பவித்ரா" என்ற போது.
அப்பொழுது அவனுக்கு பாரியிடம் இருந்து அழைப்பு வந்தது. தன் கைபேசியை எடுத்து அதற்கு பதில் அளித்தான்.
"சொல்லு பாரி"
"மிஸ்டர் நாராயணன் ஃபோன் பண்ணாரு. இன்னைக்கு நடக்கயிருந்த மீட்டிங்கை நாளைக்கு தள்ளி வைக்க சொன்னாரு. ஏதோ சொந்த பிரச்சனை போல இருக்கு"
"அப்படியா? சரி"
"நீ மறுபடியும் ஆஃபீசுக்கு வருவியா?"
"கொஞ்சம் லேட்டா வருவேன்"
"நம்ம நெக்ஸ்ட் ப்ராஜெக்ட் ஃபைலை யார்கிட்டயாவது கொடுத்து அனுப்புறியா?"
தூயவனுக்கு தெரியும் அவர்களது மீட்டிங் தள்ளிப் போடப்பட்டு விட்டதால், அந்த நேரத்தை பாரி அடுத்த ப்ராஜெக்ட்க்காக செலவு செய்ய நினைக்கிறான் என்று.
"நான் ஸ்கேன் பண்ணி அதை பிடிஎஃப் ஃபைலா கன்வெர்ட் பண்ணி உனக்கு அனுப்புறேன். நான் ஆஃபிஸ் வரும் போது எடுத்துக்கிட்டு வரேன்"
"ஓகே" என்று அழைப்பை துண்டித்தான் பாரி.
"நான் இப்ப வரேன்" என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்றான் தூயவன். அந்த கோப்பை பாரிக்கு அனுப்புவதற்காக.
இதற்கிடையில்...
கோவிலுக்கு சென்று திரும்பி வந்த குணமதியும், வெண்மதியும், தங்கள் வீட்டில் இருந்து மருத்துவர் வருவதை கண்டார்கள். அவர்களைப் பார்த்து புன்னகைத்தார் மருத்துவர்.
"நீங்க என்ன டாக்டர், இங்க?" என்றார் குணமதி.
"தூயவன் கால் பண்ணி வர சொன்னாரு"
குணமதியும் வென்மதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"அவனுக்கு ஒன்னும் இல்லையே?" என்றார் குணமதி.
"இல்ல, அவருக்கு ஒன்னும் இல்ல. உங்க கெஸ்ட்டுக்கு தான் ஆங்கிள் ஸ்பிரெய்ன். அவங்களை ட்ரீட் பண்ண தான் நான் வந்தேன்"
அவர்களுக்கு குழப்பமாகிப் போனது. மருத்துவர் பேசுவது எந்த விருந்தாளியை பற்றி என்பது அவர்களுக்கு புரியவில்லை.
"யாருக்கு டாக்டர் சுளுக்கு?" என்றாள் வெண்மதி.
ஒரு நொடி திகைத்தார் மருத்துவர். ஏனென்றால், அந்த பெண்ணின் பெயரை அவர் கேட்கவில்லை.
"அவங்களுக்கு லட்சணமான குண்டு முகம்... கோதுமை நிறமா..."
"பவித்ராவா?" என்று இருவரும் ஒரே நேரத்தில் கேட்க,
"அவங்க பேரை நான் கேட்கல. மாடியில செகண்ட் ரூம்ல இருந்தாங்க"
அவர் கூறுவது பவித்ராவை பற்றி தான் என்று அவர்களுக்கு நிச்சயமாகி போனது.
"அவளுக்கு எப்படி சுளுக்கு பிடிச்சது?" என்றார் குணமதி.
"வேகமா நடந்திருப்பாங்க போல இருக்கு. கால் மடக்கிக்கிச்சு"
"ஓஹோ..."
"ஊசி போட்டிருக்கேன். கவலைப்பட ஒன்னும் இல்ல. சரியாயிடும்"
"தேங்க்யூ டாக்டர்"
"வெல்கம்" என்றபடி அங்கிருந்து சென்றார் மருத்துவர்.
குணமதியும் வெண்மதியும் வீட்டினுள் விரைந்தார்கள். அதேநேரம் வெண்மதியின் அறையை விட்டு வெளியேறினான் தூயவன். அவனைப் பார்த்து அவர்கள் நின்றார்கள்.
"தூயா, என்ன ஆச்சு? பவித்ராவுக்கு சுளுக்கு புடிச்சிருக்குன்னு டாக்டர் சொன்னாங்க? அவங்க வேகமா கூட நடக்க மாட்டாங்களே...!" என்றாள் வெண்மதி.
"வீடு துடைச்சா..." என்று பெருமூச்சு விட்டான் தூயவன்
"என்ன்னனது? வீடு துடச்சாங்களா? ஆனா ஏன்?" என்றாள் அதிர்ச்சியோடு வெண்மதி.
"அவ மனசுல என்ன ஓடிக்கிட்டு இருக்குன்னு எனக்கு புரியல. அவ வீடு துடைச்சுக்கிட்டு இருக்கிறது தெரியாம, நான் வீட்டுக்குள்ள வந்தேன். கதவு தட்டி பக்கெட் கீழே விழுந்துடுச்சு. அவ சோப்பு வாட்டர்ல காலை வச்சுட்டா..."
"ஓ நோ..."
அதன் பிறகு குணமதி அங்கு நிற்கவில்லை. வெண்மதியின் அறையை நோக்கி நடந்தார்.
மறுபுறம்...
சஞ்சனா பொருமிக் கொண்டிருந்தாள். தூயவனின் நடத்தையை அவளால் சகிக்கவே முடியவில்லை. ஒரு முறை கூட அவன் அவளிடம் அன்பாய் பேசவில்லை. ஆனால் அந்த லோகிளாஸ் பெண்ணை தன் தலையில் தூக்கி வைத்து ஆடிக் கொண்டிருக்கிறான். அது மட்டும் போதாது என்று, அவளுக்கு முன்பாகவே அவளை அவமானமும் படுத்தி விட்டான். பவித்ரா வீட்டு வேலை செய்தால், என்ன குறைந்து விடப் போகிறது? எதற்காக அதை இவ்வளவு பெரிய விஷயமாக பேசுகிறான்? பவித்ராவை பார்த்தாள் அவள். தன் காலில் மருத்துவர் கொடுத்துவிட்டுச் சென்ற ஜெல்லை தடவிக் கொண்டிருந்தாள். சஞ்சனா கூறியதை கேட்டு அவள் கை நின்றது.
"உன்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கப் போகுதுன்னு நினைச்சாலே எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. இவங்க உன்னை சொந்த காலில் நிக்கவே விட மாட்டாங்க போல இருக்கு" என்றாள் சலிப்புடன்.
அதேநேரம், அங்கு வந்த குணமதி, அவள் கூறியதை கேட்டு அப்படியே நின்றார். அவள் எதைப் பற்றி பேசுகிறாள் என்று புரியாத அவர் கண்களை சுருக்கினார். எதைப்பற்றி, யாரிடம் இவள் பேசிக் கொண்டிருக்கிறாள்?
"இல்லங்க, எனக்கு இந்த வேலை வேணும். நான் பாதுகாப்பா இருக்க இந்த மாதிரி ஒரு இடம் எனக்கு வேற எங்கேயுமே கிடைக்காது. நான் இதைப் பத்தி அம்மா கிட்ட பேசலாம்னு இருக்கேன்" என்றாள் பவித்ரா.
வேலையா? எந்த வேலையை பற்றி பவித்ரா பேசிக் கொண்டிருக்கிறாள் என்று குணமதிக்கு புரியவே இல்லை.
"நீ சொல்றதை அவங்க கேட்பாங்கன்னு நினைக்கிறியா? நீ அவங்களோட கெஸ்ட். நீ தான் பாத்தியே, நீ என்னமோ செய்யக்கூடாத பெரிய குற்றத்தை செஞ்ச மாதிரி தூயவன் பேசினதை. அவங்களை புத்திசாலித்தனமா ஹேண்டில் பண்ணணும். அவங்ககிட்ட இதைப் பத்தி எதுவும் பேசாத. அவங்ககிட்ட இருந்து விலகியே இரு. உனக்கு புரிய வைக்க முடியாம அவங்க டயர்ட் ஆகி, உன் இஷ்டத்துக்கு எதையாவது செய்ய சொல்லி விட்டுடுவாங்க. ஆனா ஒரு விஷயத்தை மறந்துடாத இப்படிப்பட்ட வேலை உனக்கு எப்பவும் கிடைக்காது"
சரி என்று தலையசைத்தாள் பவித்ரா. குணமதி அந்த அறைக்குள் நுழைய நினைத்தபோது, சஞ்சனா கூறியதை கேட்டு மீண்டும் நின்றார்.
"இந்த விஷயத்துல நான் தான் உனக்கு ஹெல்ப் பண்றேன்னு தயவு செஞ்சு அவங்ககிட்ட சொல்லிடாத. முக்கியமா, அங்கிள் தான் இந்த வேலையை உனக்கு கொடுத்தார்னு அவங்களுக்கு தெரியவே கூடாது"
குழப்பத்தின் எல்லைக்கு சென்றார் குணமதி. மாயவன் அவளுக்கு வேலை கொடுத்தாரா? அப்படி என்றால், அது நல்ல விஷயம் தானே? அதில் மறைக்க என்ன இருக்கிறது? சஞ்சனா ஏன் பவித்ராவை அவர்களிடம் இருந்து விலகியே இருக்கச் சொல்கிறாள்? ஏன் அவர்கள் அவளுக்கு புரிய வைக்க முடியாமல் சோர்வடைய வேண்டும் என்று நினைக்கிறாள்? இதில் சஞ்சனாவின் திட்டம் ஏதாவது இருக்குமோ? தன் திட்டத்திற்கு அவள் மாயவனை பயன்படுத்திக் கொண்டிருக்கிறாளா? அவருக்கு எரிச்சலாய் வந்தது. அவரது கணவர் அப்படி செய்யக் கூடியவர் தானே...!
"ஜாக்கிரதையா இரு பவித்ரா. உன் மனசுல என்ன இருக்குன்னு அவங்களுக்கு தெரியவே கூடாது. அவங்க இந்த வேலையை உன்னை செய்யவே விட மாட்டாங்க. உன்னை உதவாகறையா தான் வச்சிருப்பாங்க. நீ உன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியா இரு"
பவித்ரா அமைதியாய் இருந்தாள்.
இதற்கு மேல் பொறுக்க மாட்டாமல் உள்ளே நுழைந்தார் குணமதி, மேற்கொண்டு சஞ்சனா எதையும் கூறி பவித்ராவை குழப்ப வேண்டாம் என்று எண்ணினார் அவர். அவரைப் பார்த்தவுடன் அமைதியானாள் சஞ்சனா. பவித்ரா புன்னகை புரிந்தாள். அவள் நெற்றியில் குங்குமம் இட்டு விட்டார் குணமதி. அப்பொழுது உள்ளே நுழைந்த வெண்மதி,
"என்ன வேலை செஞ்சு வச்சிருக்கீங்க பவித்ரா? உங்களை யார் வீட்டை எல்லாம் துடைக்க சொன்னது?" என்றாள்.
"அது சாதாரண வேலை தானே கா?எங்க வீட்ல நான் தான் அதை செய்வேன்"
"நீ இப்படி சொல்றதை கேட்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு பவித்ரா. நீ இந்த வீட்டை உன்னோட வீடா நினைக்கிற பாரு.... ரொம்ப சந்தோஷம்" என்றார் குணமதி, சஞ்சனாவை ஓரக்கண்ணால் பார்த்தவாறு.
விழி விரித்த பவித்ரா,
"இல்ல, நான் என்ன சொல்ல வந்தேன்னா..."
அவளைப் பேச விடாமல்,
"இது தான் எங்களுக்கும் வேணும். நான் சொல்றது சரி தானே, மதி?"
"கரெக்ட். ஆனா, எது செஞ்சாலும் நம்ம எல்லாரும் சேர்ந்து செய்யலாம். தனியா செய்யாதீங்க. சரியா?" என்றாள் வெண்மதி.
"மதி சொல்றது கரெக்ட். நீயும் இப்போ எங்க குடும்பத்துல ஒருத்தி ஆயிட்ட. அதனால எங்களை கேட்காம, எங்களுக்கு தெரியாம எதுவும் செய்யாத"
பவித்ரா சங்கடத்தில் நெளிய, கோபத்தில் எறிந்தாள் சஞ்சனா.
"மதி, பவித்ராவை பார்த்துக்கோ. அவளை ரூமை விட்டு வெளியில போக விடாத" என்று கட்டளையிட்டு விட்டு அங்கிருந்து சென்றார் குணமதி.
நேராக சமையல் அறைக்கு வந்த அவர், சமையலுக்கு தேவையான முன் வேலைகளை எல்லாம் குழந்தைசாமி முடித்து வைத்திருப்பதை கண்டார்.
"குழந்தை, எதுக்காக நீங்க பவித்ராவை வீடு துடைக்க விட்டீங்க?" என்று கடுமையான முகபாவத்துடன் கேள்வி கேட்டார்.
"நான் அவங்களை செய்ய விடல மா. அவங்க தான் அதை செஞ்சே தீருவேன்னு அடம் பிடிச்சாங்க"
"அடம் பிடிச்சாளா? எதுக்கு?"
அவரிடம் உண்மையை கூற தயங்கினார் குழந்தைசாமி.
"நான் உங்ககிட்ட தான் கேட்கிறேன்"
"அதை உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியலம்மா"
"எதுவா இருந்தாலும் பரவாயில்ல, சொல்லுங்க"
"பவித்திரா பாப்பா சொன்னாங்க, நம்ம ஐயா அவங்களை நம்ம வீட்டு வேலைக்காரியா அப்பாயிண்ட் பண்ணி இருக்காராம்"
"என்ன்னனது?" என்றார் நம்ப முடியாமல்.
"ஆமாம் மா. பவித்திரா பாப்பா இன்னைக்கே வேலையை ஆரம்பிக்கணும்னு நினைச்சாங்க. நான் வேண்டாம்னு எவ்வளவோ கெஞ்சி பார்த்தேன். ஆனா அவங்க நான் சொன்னதை கேட்கல. தயவுசெய்து தூயா தம்பிகிட்ட இதை பத்தி சொல்லிடாதீங்க. அவர் என் மேல ரொம்ப கோவப்படுவாரு"
"நீங்க இந்த உண்மையை அவன்கிட்ட மறைச்சா தான் அவன் உங்க மேல கோவப்படுவான். அவனைப் பத்தி உங்களுக்கு தெரியாதா?"
"ஆனா நான் பெரிய ஐயாவுக்கு எதிரா எப்படிம்மா நடந்துகிறது?"
"இதை நான் பார்த்துக்கிறேன்"
"ரொம்ப நன்றி மா" என்று அங்கிருந்து ஓடிப்போனார் குழந்தைசாமி.
நடக்கவிருக்கும் விளைவுகளை ஆலோசித்தார் குணமதி. இது, தன் கட்டுப்பாட்டை மீறி செல்கிறது என்பது அவருக்கு புரிந்தது. தூயவன் அல்லது மாயவன் இருவரில் ஒருவரை தான் அவர் காப்பாற்ற முடியும். மாயவன் இதை செய்வது தன் நண்பனுக்காக. ஆனால் தூயவன் செய்வது, தான் பவித்ராவின் அப்பாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றுவதற்காக. இதில் அவர் மாயவனின் பக்கம் நிச்சயம் நிற்க முடியாது. அப்படி செய்தால், தூயவன் மேலும் காயமடைவான். தூயவன் அவருடன் பேசுவதில்லை என்றாலும், இந்த விஷயத்தை தன் கையில் எடுத்துக் கொள்வது என்று முடிவு செய்தார் அவர். தூயவனிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. தூயவனுக்கு எதிராக மாயவன் செய்யும் வேலை குணமதிக்கு பிடிக்கவில்லை. அதுவும் தன் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவரிடம் மறைத்து, மாயவன் அதை செய்து கொண்டிருக்கிறார். தங்கள் யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் அவராக இந்த முடிவை எப்படி எடுக்கலாம்? மாதேஷ் தன் எல்லையை மீறிக் கொண்டிருக்கிறார். தன் விருப்பத்திற்கு ஏற்ப அவர் மாயவனை ஆடச் செய்து கொண்டிருக்கிறார். அவருடைய இடம் என்ன என்பதை அவருக்கு காட்ட வேண்டிய நேரம் இது. அதை தூயவன் ஒருவனால் தான் செய்ய முடியும். தூயவனை இந்த விஷயத்திற்குள் எப்படி கொண்டுவர வேண்டும் என்று அவருக்கு தெரியும். ஏற்கனவே சஞ்சனா பவித்ராவின் மனதில் விஷத்தை விதைத்திருக்கிறாள். அவள் கூறியதை செயல்படுத்த பவித்ரா ஏதாவது செய்வாள். அது தூயவனின் கோபத்தை தூண்ட போதுமானதாக இருக்கும். சஞ்சனாவின் திட்டத்தை அறிந்து கொண்டால், தூயவன் வெடித்து சிதறுவான் தான். ஆனால் வேறு வழி இல்லை, அவனுக்கு இது தெரிந்தது தான் ஆக வேண்டும்.
தொடரும்....
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top