8 நாம் ஒன்று நினைத்தால்...

8 நாம் ஒன்று நினைத்தால்...

கடைக்குச் சென்ற குழந்தைசாமி, பை முழுவதும் காய்கறிகளை வாங்கிக் கொண்டு வருவதை கண்டாள் பவித்ரா. அவரை பின்தொடர்ந்து சமையலறைக்குச் சென்றாள். அவளை பார்த்து புன்னகை புரிந்தார் குழந்தைசாமி.

"உங்களுக்கு ஏதாவது வேணுமா?"

அவள் வேண்டாம் என்று தலையசைத்தாள்.

"உங்களுக்கு காபி போட்டு கொடுக்கட்டுமா?"

"இல்ல, வேண்டாம்"

பையில் இருந்த காய்கறிகளை வெளியில் எடுத்து வைக்க துவங்கினார் அவர். பவித்ரா அங்கு தயக்கத்துடன் நின்றிருந்ததை பார்த்த அவர், மீண்டும் அவளை பார்த்து புன்னகைத்தார்.

"நீங்க இங்க எந்த மாதிரி வேலை செய்வீங்க, அண்ணா?" என்றாள் பவித்ரா.

"நான் எல்லா வேலையும் செய்வேன். எனக்கு எந்த லிமிட்டும் கிடையாது. அவங்க என்ன சொன்னாலும் செய்வேன்."

"ஓ..."

"தனியாவே சமையல் செய்வீங்களா?"

"இல்ல எப்பவுமே அம்மா தான் சமையல் செய்வாங்க. நான் அவங்க கூட ஒத்தாசையா தான் இருப்பேன்"

"ஓஹோ"

"நீங்க எதுக்காக இதையெல்லாம் கேக்குறீங்க?"

"அப்பா என்னை சமையல்காரியா அப்பாயிண்ட் பண்ணி இருக்காரு"

அதை கேட்ட அவனுக்கு குழப்பம் ஏற்பட்டது.

"அப்பாவா? யாரை சொல்றீங்க?"

"தூயவன் சாரோட அப்பாவைத் தான் சொல்கிறேன்"

"மாயவன் சாரையா சொல்றீங்க?"

"ஆமாம்"

"அவர் உங்களை சமையல் வேலைக்கு அப்பாயிண்ட் பண்ணாரா?"

"ஆமாம்"

நம்ப முடியாமல் அவளை திகைப்போடு பார்த்துக் கொண்டு நின்றான். பவித்ரா சமையல்காரியா?

"இதைப் பத்தி தூயவன் தம்பிக்கும், அம்மாவுக்கும் தெரியுமா?"

"இன்னும் தெரியாது"

குழந்தைசாமி யோசிக்க துவங்கினார். பவித்ரா தங்கள் விருந்தாளி என்று குணமதி கூறியிருந்தார். அவளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருமாறு குழந்தைசாமிக்கு அவர் கட்டளையிட்டு இருந்தார். பவித்ரா கேட்பது எதுவானாலும் கொடுக்கச் சொல்லி அவனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பவித்ரா அதற்கு முற்றிலும் மாறாய் கூறுகிறாள். பவித்ராவை பற்றி, குணமதி மாயவனிடம் பேசவில்லையா? ஆனால் இதுவரை அவர்களுக்கிடையில் எந்த முரண்பாடும் தோன்றியதில்லையே! அப்படி இருக்கும் பொழுது, இது என்ன குழப்பம்?

"இப்போ நீங்க என்ன செய்யப் போறீங்க, அண்ணா?"

"அம்மா கோவில்ல இருந்து வர்றதுக்கு முன்னாடி, சமையலுக்கு தேவையானதை எல்லாம் செஞ்சு வச்சுடுவேன். அதுக்கு பிறகு அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுவேன். அவங்க சமையலை ஆரம்பிச்ச பிறகு, நான் வீடு துடைக்கணும்"

"ஓ..."

குணமதி கூறிவிட்டு சென்றது போல் காய்கறிகளை வெட்டத் துவங்கினார் குழந்தைசாமி.

"குடுங்க, நான் கட் பண்றேன்"

"அய்யய்யோ அதெல்லாம் வேண்டாம். நீங்க தயவு செஞ்சி மதி பாப்பா ரூமுக்கு போங்க. உங்களுக்கு ஏதாவது செய்யணும்னு தோணுச்சுன்னா அதை அம்மா வந்ததுக்கு பிறகு செய்யுங்க"

"பரவாயில்ல அண்ணா"

"வேண்டாம் மா, தயவு செஞ்சி அவங்க என்னை திட்டுற மாதிரி வச்சிடாதீங்க" என்று கெஞ்சினார்.

அவர் கூறுவதும் சரி தான் என்று தோன்றியது பவித்ராவுக்கு. அதனால் குளியலறைக்கு வந்து, ஒரு வாளியில் தண்ணீர் நிரப்பி, அதில் ஃப்ளோர் கிளீனரை ஊற்றி, அந்த வாளியையும், மாப்பையும் எடுத்துக்கொண்டு வரவேற்பறைக்கு வந்து, அந்த மிகப்பெரிய அறையை துடைக்க துவங்கினாள். 

சமையலறையை விட்டு வெளியே வந்த குழந்தைசாமி, அவள் வீடு துடைத்துக் கொண்டிருப்பதை பார்த்து, அவளை நோக்கி பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார்.

"அம்மா, அம்மா, தயவு செஞ்சி இதெல்லாம் செய்யாதீங்கம்மா" அவள் கையில் இருந்த மாப்பை பிடுங்கினார்.

"அம்மா கோவில்ல இருந்து வந்ததுக்கு பிறகு நான் அவங்ககிட்ட பேசிக்கிறேன். அதுவரைக்கும் நான் இதை செய்றேன். ஒன்னும் பிரச்சனை இல்ல. நீங்க போங்க" என்றாள்.

"அவங்க வந்துடட்டுமே... அதுக்கப்புறம் செய்யுங்களேன்"

"சமையலுக்கு என்ன பிரிபரேஷன் செய்யணும்னு எனக்கு தெரியல. இல்லன்னா நான் அதை செஞ்சு கொடுப்பேன். இன்னைக்கு இதை என்னை செய்ய விடுங்க" அவர் கையில் இருந்த மாப்பை வலுக்கட்டாயமாய் பிடுங்கிக் கொண்டாள்.

"நான் உங்களை இதையெல்லாம் செய்ய விட்டேன்னு அம்மாவுக்கு தெரிஞ்சா, அவங்களுக்கு என் மேல ரொம்ப கோபம் வரும். நான் உங்களை நல்லா பார்த்துக்கணும்னு தான் அவங்க எனக்கு சொல்லி இருந்தாங்க"

"எனக்கு வீட்டில போர் அடிச்சதால இதை நான் செஞ்சதா அவங்க கிட்ட சொல்லிடுறேன்"

தவிப்போடு நின்றார் குழந்தைசாமி.

"நீங்க போங்க, அண்ணா"

அபாயத்தை உணர்ந்தார் குழந்தைசாமி. இன்று ஏதோ பெரிய கச்சேரி நடக்க இருக்கிறது. அவருக்கு தூயவனின் கோபத்தை பற்றி நன்றாக தெரியும். அவர் அதை எண்ணித்தான் பயந்தார். தன்னுடைய விருந்தாளி, வீட்டை துடைத்துக் கொண்டிருப்பதை பார்த்தால், தூயவன் என்ன செய்யப் போகிறானோ.

நுழைவு வாயிலில் இருந்து அந்த வரவேற்பறையை துடைக்க துவங்கினாள் பவித்ரா. வாளியை கதவின் அருகில் வைத்துக் கொண்டு, சோபாவின் இடுக்குகளை துடைத்துக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது, வழக்கம் போலவே புயல் என கதவை தள்ளி கொண்டு உள்ளே நுழைந்தான் தூயவன். கதவின் அருகில் வைக்கப்பட்டிருந்த சோப்பு தண்ணீர் நிரம்பிய வாளி,  கீழே விழுந்து, அறை முழுவதும் தண்ணீர் பரவியது. சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்த பவித்ரா, பதறியபடி அந்த வாளியை பிடிக்க ஓடி வந்தாள். வந்த வேகத்தில், சோப்பு தண்ணீரில் வழுக்கி தூயவன் மீது மோதிக்கொண்டாள். அந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத தூயவன், தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியாமல், பவித்ராவுடன் சோபாவில் விழுந்து, சோபாவிலிருந்து உருண்டு இருவரும் கீழே விழுந்தார்கள்.

பவித்ரா தூயவனுக்கு அடியில் மாட்டிக்கொண்டாள். கண்களை இறுக்கமாய் மூடியபடி தரையில் விழுந்து கிடந்தாள். அவள் தனக்கு கீழே இருப்பதைக் கண்ட தூயவன் திகைப்புக்கு ஆளானான். இதற்கு முன்பு, ஒரு பெண்ணின் மீது விழுந்து கிடக்கும் சூழ்நிலையை அவன் எதிர்கொண்டதில்லை. கண்களை இறுக்கமாய் மூடிக்கொண்டு கிடந்த அவளை பார்த்தபோது, அவனது இதழ்கள் அனிச்சையாய் விரிந்தன. சுளிப்போடு காணப்பட்ட அவளது முகம், அவனுக்கு க்யூட்டாய் தெரிந்தது.  

பவித்ரா என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று பார்ப்பதற்காக வரவேற்பறைக்கு வந்த சஞ்சனா, தூயவன் பவித்ராவின் மீது விழுந்து கிடக்கும் அந்த காட்சியை கண்டு திகில் அடைந்தாள். என்ன நடக்கிறது இங்கு?

"பவித்ரா உனக்கு ஒன்னும் இல்லையே?" என்றான் அவன் மென்மையான குரலில்.

அவன் குரலை கேட்டு திடுக்கிட்டு கண் விழித்தாள் பவித்ரா. தன் மீது கிடந்த அவனை மிரட்ச்சியோடு பார்த்த அவள், அவனை பிடித்து தள்ள முயன்றாள். ஆனால் அது அவளால் இயலவில்லை. தன்னை சமாளித்துக் கொண்ட தூயவன், எழுந்து நின்று, தன் கையை அவளை நோக்கி நீட்டினான். அவன் கையைப் பார்த்த அவள், பின் அவன் முகத்தை பார்த்தாள்.

என் கையை பிடித்துக் கொள் என்பது போல் அவன் தலையசைத்தான். அவள் அவன் கையை பிடித்துக் கொள்ள, அவள் கையை இழுத்து அவளை தூக்கி விட்டான். தன் காலை பிடித்துக் கொண்டு,

"ஆஆஆஆ..." என்றாள் பவித்ரா.

"என்ன ஆச்சு?" என்று பதறினான் தூயவன்.

"கணுக்கால் வலிக்குது"

"சுளுக்கு புடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்"

அவளும் ஆம் என்று தலையசைத்தாள்.

அந்த சூழ்நிலையை சமாளிக்க, அவர்களை நோக்கி ஓடி வந்தாள்  சஞ்சனா.

ஆனால் அதற்கு முன்பாகவே, அவள் எதிர்பாராத விதமாய், பவித்ராவை தன் கையில் தூக்கிக்கொண்டு வெண்மதியின் அறையை நோக்கி நடந்தான் தூயவன். அது, ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த சஞ்சனாவின் வயிற்றில் எண்ணெயை வார்த்தது. பவித்ராவும் தாளாத அதிர்ச்சியில் இருந்தாள். தூயவனின் முகத்தில் அவளது கண்கள் குத்திட்டு நின்றது. ஆனால் அவன் முகத்திலோ எந்த ஒரு தயக்கமும் இல்லை.

"என்ன ஆச்சு தூயவன்?" என்றாள் சஞ்சனா, தன்னை சமாளித்துக் கொண்டு.

"அவ கால் சுளிக்கிடுச்சு" என்றான் நடந்தபடி.

"அவளுக்கு நான் ஹெல்ப் பண்றேன். நீங்க அவளை இறக்கி விடுங்க"

"தேவையில்ல" என்று அவளை பார்க்காமல் கூறிவிட்டு நடந்தான்.

"என்னை கீழே விடுங்க நான் நடந்து வரேன்"

"உன்னால காலை கீழேயே வைக்க முடியல... எப்படி நடப்ப?" என்ற படி தொடர்ந்து நடந்தான்.

அவர்களை பின்தொடர்ந்து செல்வதா வேண்டாமா என்று புரியவில்லை சஞ்சனாவுக்கு. இருந்தாலும் அவர்களுக்கு பின்னால் ஓடினாள்.

பவித்ராவை கட்டிலில் அமர வைத்தான் தூயவன். அவளுக்கு பக்கத்தில் அமர்ந்து, அவள் காலை பரிசோதித்து விட்டு தன் கைபேசியை எடுத்து, மருத்துவருக்கு ஃபோன் செய்தான். அந்த அழைப்பை மருத்துவர் ஏற்றார்.

"டாக்டர், நான் தூயவன் பேசுறேன். எங்க வீட்டுக்கு கெஸ்ட் வந்திருக்காங்க. அவங்களுக்கு கால் சுளுக்கு புடிச்சிருக்கு. நீங்க கொஞ்சம் வீட்டுக்கு வந்து அவர்களை செக் பண்ண முடியுமா?"

தூயவனைப் போன்ற பெரிய மனிதர்களின் அழைப்பு வந்தால், வர முடியாது என்று கூட எந்த மருத்துவராவது கூறி விடுவாரா? அவர் வருகிறேன் என்று ஒப்புக்கொண்டார்.

"தேங்க்யூ டாக்டர்" என்று அழைப்பை துண்டித்தான் தூயவன்.

அலமாரிக்கு சென்று ஒரு ஜெல்லை  கொண்டு வந்த அவன், மீண்டும் கட்டிலில் அமர்ந்தான். அந்த பாட்டிலின் மூடியை அவன் திறக்க நினைத்தபோது, சஞ்சனா தன் கையை நீட்டி அந்த பாட்டிலை அவனிடமிருந்து வாங்க முயன்றாள்.  தன் கையை பின்னால் இழுத்து அவளை பார்த்து முகம் சுருக்கினான் அவன்.

"நான் செய்றேன்" என்று அந்த பாட்டிலை மீண்டும் அவனிடமிருந்து பிடுங்க முயன்றாள்.

"என் வேலையில யாராவது குறுக்கிட்டா எனக்கு பிடிக்காது" என்றான் திடமாய்

"நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ண தான் நினைக்கிறேன்"

"உன்னோட ஹெல்பை நான் கேட்டேனா?"

"இல்ல, நான் வந்து..."

"பவித்ரா என்னோட கெஸ்ட்"

"நானும் உங்க கெஸ்ட் தான்"

"நான் சொன்னதை நீ தெளிவா கேட்கலன்னு நினைக்கிறேன். பவித்ரா என்னோட (என்பதை அழுத்தி) கெஸ்ட். அவளை எப்படி பார்த்துக்கணும்னு எனக்கு தெரியும்."

"நான் அதுக்கு சொல்லல..."

"உன்னோட லிமிட் என்னன்னு தெரிஞ்சுக்கோ. இங்கிருந்து கிளம்பு" என்றான் ஒரு சூடான பார்வையை அவள் மீது வீசி.

பயத்துடன் ஓரடி பின்னால் நகர்ந்தாள் சஞ்சனா. அவள் அவமானமாய் உணர்ந்தாள் என்பதில் சந்தேகம் இல்லை. தன் கையில் இருந்த பாட்டிலின் முடியை திறந்து, அதிலிருந்து சிறிதளவு தைலத்தை எடுத்து, அவன் அதை பவித்ராவின் காலில் தடவ முயன்ற போது,

"வேண்டாங்க நானே தடவிக்கிறேன்" என்று தன் கையை சங்கடத்துடன் அவனிடம் நீட்டினாள்.

அவளை நோக்கி ஓர் கூரிய பார்வையை வீசினான் தூயவன். அது தன் கையை அவளை பின்னால் இழுக்க செய்தது. சஞ்சனாவின் கண்களில் இருந்த தகிப்பை பவித்ரா உணர்ந்தாள். ஆனால் இதில் அவள் செய்யக் கூடியது ஒன்றுமில்லை.

சற்று நேரத்திற்கு முன்பு தான், பவித்ரா தன் எல்லையில் இருக்க வேண்டும் என்பதை அவளுக்கு சஞ்சனா வலியுறுத்தினாள். ஆனால் இப்பொழுது, சஞ்சனாவை அவளது எல்லையில் இருக்கும்படி தூயவன் எச்சரிக்கிறான். இப்பொழுது அவள் என்ன செய்வது?

பவித்ராவின் கணுக்காலில் மென்மையாய் தைலத்தை தடவி விட்டான் தூயவன். அது அவளுக்கு மயிர்க்கூச்செறியும் உணர்வை தந்தது. அது ஒரு ஆண்மகனின் முதல் தொடுதல்...! தன் கால் விரல்களை அழுத்தமாய் சுருட்டிக்கொண்டாள். அதை கவனிக்க தவறவில்லை தூயவன். தன் கண்களை மெல்ல அவளை நோக்கி உயர்த்தினான். அவள் தலை தாழ்த்தியபடி மென்று விழுங்கினாள். அது அவன் முகத்தில் புன்னகையை இட்டு வந்தது. 

"பவித்ரா..."

"ஆங்...!" திடுக்கிட்டாள் அவள்.

"ரிலாக்ஸ்... எதுக்காக இப்படி டென்ஷன் ஆகுற?"

அவள் மீண்டும் தன் பார்வையை தாழ்த்தினாள்.

"உன்னை யாரு மாப் போட சொன்னது?"

சஞ்சனாவுக்கு பதற்றம் தொற்றிக்கொண்டது.

"எனக்கு போர் அடிச்சது..." என்று மெல்லிய குரலில் கூறினாள்.

"உனக்கு போர் அடிச்சது... அதனால வீடு துடைக்க ஆரம்பிச்சுட்டியா?"

"ஒண்ணுமே செய்யாம நானும் எவ்வளவு நேரத்துக்கு தான் சும்மாவே இருக்க முடியும்?"

"உனக்கு போர் அடிச்சா, புக்ஸ் படி, டிவி பாரு, மியூசிக் கேளு, அதை எல்லாம் விட்டுட்டு எதுக்காக வீட்டு வேலை செய்ற?"

அமைதியாய் இருந்தாள் பவித்ரா.

"நீ எங்களோட விருந்தாளி. நாங்க வீட்டுக்கு வந்தவங்களை வேலை செய்ய விட மாட்டோம்"

சஞ்சனாவை பார்த்த அவன்,

"பாரு, சஞ்சனா இங்க எவ்வளவு ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு இருக்கா" என்றான்.

சஞ்சனாவின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன. அவன் எப்படி தன்னை இந்த லோ கிளாஸ் பெண்ணுடன் ஒப்பிட்டு பேசலாம்...?

"நீயும் அவளை மாதிரி இரு. புரிஞ்சுதா?"

பவித்ராவுக்கு என்ன கூறுவது என்றே புரியவில்லை. ஒருவேளை தூயவனுக்கு தான் வேலைக்காரியாக நியமிக்கப்பட்ட விஷயம் தெரிந்தால் அவன் என்ன செய்வான்? ஆனால், ஏன் அவன் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறான்? அது தான் அவளுக்கு புரியவில்லை.

மேசையின் மீது இருந்த ஒரு காகிதத்தை எடுத்து தன் கைபேசி எண்ணை அதில் எழுதி, அதை பவித்ராவிடம் நீட்டினான்.

"உனக்கு ஏதாவது வேணும்னா எனக்கு ஃபோன் பண்ணு. இந்த வீட்ல உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. புரிஞ்சுதா?"

ஒன்றும் கூறாமல் அமைதியாய் இருந்தாள் பவித்ரா.

"ஏன் எனக்கு நீ பதிலே சொல்ல மாட்டேங்குற?"

"எனக்கு சீக்கிரமே சரியாயிடும்"

"நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே...!"

"என்னை மாதிரி ஒரு சாதாரண பொண்ணுக்கு இதெல்லாம் ரொம்ப அதிகமா தெரியுது"

"ரொம்ப அதிகம்னு நீ எதை சொல்ற பவித்ரா?"

அவள் ஏதோ கூற முனைய,

"உன் அப்பாவால தான் நான் இன்னைக்கு உயிரோட இருக்கேன். அவரோட தியாகத்துக்கு முன்னாடி நான் செய்றது எல்லாம் ஒண்ணுமே இல்ல. மத்ததை பத்தி எல்லாம் யோசிக்காத. புரிஞ்சுதா?"

மீண்டும் அமைதி

"டாக்டர் இங்க எப்ப வேணும்னாலும் வருவாங்க. அவங்க வந்த உடனே எனக்கு ஃபோன் பண்ணு. நான் இப்ப வரேன்" என்று தன் அறைக்கு  சென்றான், அடியில் நனைந்து விட்ட தனது பேண்டை மாற்றிக் கொண்டு வர.

பவித்ரா மெல்ல சஞ்சனாவை ஏறிட்டாள். தனக்கு வலிக்கவே இல்லை என்பது போல் சாதாரணமாய் இருக்க முயன்றாள் சஞ்சனா.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top