7 பவித்ராவுக்கு எதிரான ஆட்டம்
7 பவித்ராவுக்கு எதிரான ஆட்டம்
மறுநாள்
கையில் சில பைகளுடன் தூயவன் வருவதை பார்த்த சஞ்சனா, முகம் சுருக்கினாள். அவையெல்லாம் என்ன என்பதை தெரிந்து கொள்ள அவளுக்கு ஆர்வம் அதிகரித்தது. சத்தம் செய்யாமல் அவனை பின்தொடர்ந்தாள். அவன் வெண்மதியின் அறையில் நுழைவதை கண்ட அவள், வெளியே நின்று கொண்டாள்.
அந்த அறையில் யாரும் இல்லாததால், இங்கும் அங்கும் தன் பார்வையை சிதறவிட்டான் தூயவன். அந்த அறையை விட்டு வெளியே செல்லலாம் என்று அவன் நினைத்தபோது, குளியல் அறையின் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. பவித்ரா குளியல் அறையில் இருந்து ஈரமான முகத்தோடு வெளியே வந்தாள். அவள் கையில் ஒரு பூத்துவாலை இருந்தது. அவள் மென்மையாய் பார்த்து புன்னகை புரிந்தாள். பனியில் நனைந்த புத்தம் புது ரோஜாவை அவள் முகம் அவனுக்கு நினைவு படுத்தியது. தான் கொண்டு வந்த பைகளை கட்டிலின் மீது வைத்து,
"அந்த பேக்ல இருக்கிறதை எடுத்து பாரு" என்றான்.
அந்த பைகளை பார்த்த பவித்ரா, தூயவனை பார்த்தாள். அந்த பைகளில் பவித்ரவுக்கு நிறைய புது துணிகள் இருந்தன. அதை அவன் அவளுக்காக வாங்கிக் கொண்டு வந்திருந்தான். அதை கண்ட அவள், வியப்புற்றாள். அவைகள் எல்லாம் அவளுக்கு டூமச்சாய் தெரிந்தது. ஏனென்றால், அது அவள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு விலை உயர்ந்ததாய் இருந்தது. அவன் கூறிய அடுத்த வார்த்தைகளை கேட்டு அவள் விக்கித்து நின்றாள்.
"இப்போதைக்கு இதை வச்சுக்கோ. நாளைக்கு இன்னும் வாங்கிட்டு வரேன் "
"வேணாம் வேணாம், இதுவே போதுங்க" என்றாள் அவசரமாய்.
அவள் ங்க போட்டு கூப்பிட்டது அவனுக்கு பிடித்திருந்தது.
"நெஜமா தான் சொல்றீங்களாங்க?" என்றான் சிரித்தபடி.
மென்மையாய் புன்னகைத்தாள் பவித்ரா.
"இன்னும் வேணுமுன்னா என்னை கேளு"
"இல்ல, அடுத்த கொஞ்ச வருஷத்துக்கு எனக்கு இதுவே போதும்"
ஆச்சரியமாய் புருவம் உயர்த்தினான்.
"கொஞ்சம் வருஷத்துக்கா...?"
ஆமாம் என்று தலையசைத்தாள்.
"நம்ம அதைப்பத்தி அப்புறமா பேசலாம். நீ பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டாயா?"
"சாப்பிட்டேன்"
"அக்கா எங்க?"
"அவங்க பூஜை ரூம்ல இருக்காங்க"
"நீ அவங்க கூட போகலையா?"
இல்லை என்று தலையசைத்தாள்.
"ஏன், உனக்கு கடவுள் நம்பிக்கை இல்லையா?"
"நிறைய இருக்கு. நான் இன்னும் கொஞ்ச நாளைக்கு பூஜையில எல்லாம் கலந்துக்க கூடாது. அப்பா இறந்து ரெண்டு நாள் தானே ஆகுது?"
"ஓ, ஐ ஆம் சாரி"
"பரவாயில்லங்க"
"டேக் கேர் பவித்ரா. ஃபீல் ஃப்ரீ..."
அவள் சரி என்று தலையசைத்த பின், அங்கிருந்து புன்னகையுடன் நகர்ந்தான் தூயவன்.
ஆனால் சஞ்சனாவுக்கு புன்னகைக்க தோன்றவில்லை. தூயவன் மனதில் காதல் போன்ற எண்ணம் ஏதும் இல்லை என்பது அவளுக்கு நிச்சயமாக தெரிந்திருந்தது. ஆனாலும் அவன் பவித்ராவிடம் காட்டும் அக்கரையை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. சந்தோஷ் கூறியது உண்மை. தூயவன் கட்டுப்படுத்த இயலாதவன். அவனுக்கு ஏதாவது ஒன்று பிடித்து விட்டால், அவனை தடுத்து நிறுத்த முடியாது. அவன் அவளை விரும்புவதற்கு முன், அவன் மனதை திசை திருப்பியாக வேண்டும். அதனால், தன் அப்பா மாதேஷுக்கு ஃபோன் செய்தாள். அவர் அந்த அழைப்பை ஏற்றார்.
"ஹலோ சஞ்சு"
"அப்பா நீங்க தூயவனை கண்ட்ரோல் பண்ண முடியாதுன்னு சொன்னீங்க...! உங்களால மாயவன் அங்கிளை கண்ட்ரோல் பண்ண முடியும் தானே?"
அவள் எந்த அர்த்தத்துடன் அதைக் கேட்டாள் என்பது தெரியாவிட்டாலும், ஆணித்தரமாய் ஆம் என்று கூற நினைத்தார் அவர். ஏனென்றால், அவர் கிழித்த கோட்டை எப்பொழுதும் மாயவன் தாண்டியதே இல்லை. அவரை எதிர்த்து ஒரு வார்த்தை பேசியதும் இல்லை.
"ஆமாம், அவன் என் கண்ட்ரோல்ல தான் இருக்கான்"
"அப்படின்னா அவருக்கு ஃபோன் பண்ணி, எனக்கு சப்போர்ட்டிவா இருக்க சொல்லுங்க. நான் எது சொன்னாலும், அவர் முடியாதுன்னு சொல்லக்கூடாது. நான் என்ன சொல்றேனோ, அதை அவர் செய்யணும்"
"சரி, அவன் சொல்லுவான். நீ என்ன செய்யப் போற?"
"நான் ஏற்கனவே தூயவனை பத்தி உன்கிட்ட சொல்லிட்டேன். ஏதாவது செய்றதுக்கு முன்னாடி, ரெண்டு தடவை யோசி"
"எனக்கு தெரியும் டாட். நான் தூயவனை தொட போறதில்ல. அந்த பொண்ணைத்தான் அட்டாக் பண்ண போறேன்"
"ஜாக்கிரதை, அவ அவங்க கெஸ்ட்"
"டாட், இவங்களுக்கு கெஸ்ட்டா இருக்கிற தகுதி எல்லாம் அந்த பொண்ணுக்கு கிடையாது. அவ ஒரு லோ கிளாஸ் பொண்ணு. அவ தகுதி என்னன்னு அவளுக்கு நான் புரிய வைக்கப் போறேன். அவ இருக்க வேண்டிய இடம் எதுன்னு நான் அவளுக்கு காட்ட போறேன். அவ தப்பி தவறி கூட இந்த வீட்ல ஒரு இடத்தை பிடிக்க நினைக்க மாட்டா"
"சரி, நான் மாயாகிட்ட பேசுறேன்"
"சரி" என்று திருப்தியோடு அழைப்பை துண்டித்தாள் சஞ்சனா.
தான் கூறியது போலவே மாயவனுக்கு ஃபோன் செய்தார் மாதேஷ். அந்த அழைப்பை ஏற்றார் மாயவன்.
"எப்படி இருக்க மாது?" என்றார் வழக்கமான ஒரு உற்ச்சாகத்துடன்.
"நான் நல்லா தான் இருக்கேன். என் டாட்டார் எப்படி இருக்கா?"
"அவளுக்கு என்ன? அவ நல்லா இருக்கா"
"எனக்கென்னமோ அப்படி தெரியலையே"
"ஏன் அப்படி சொல்ற?"
"தூயவன் ஏதோ ஒரு பொண்ண வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்திருக்கனாமே? ஏன் இப்படி எல்லாம் செய்கிறான்?"
"இல்ல இல்ல நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல. அந்த பொண்ணை காப்பாத்த தான் இங்க கூட்டிக்கிட்டு வந்தான்"
"ஏன், அதை ஒரு ஹாஸ்டல்ல வச்சி அவனால செய்ய முடியாதா?"
"உனக்கு தூயவனை பத்தி நல்லா தெரியுமே... அவன் அவங்க அம்மா கிட்டயே பத்து வருஷமா பேசுறதில்ல. நான் அவனுக்கு எதிரா ஏதாவது சொன்னா, அவன் எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு எனக்கு தெரியல"
அவர் குரலில் இருந்த பயத்தை உணர்ந்தார் மாதேஷ்.
"சரி, நீ ஒன்னும் அவனுக்கு எதிரா பேச வேண்டாம். உன்னோட ஒப்பினியனையும் நீ அவன்கிட்ட சொல்ல வேண்டாம். சஞ்சனாவுக்கு சப்போட்டா இரு. அந்தப் பொண்ணு விஷயத்தை அவ பார்த்துக்குவா"
"வேணாம் மாது. சஞ்சனா ஏதாவது செய்யப் போக, தூயவனுக்கு கோபம் வந்துடும்"
"அவ எதையும் வெளிப்படையா செய்ய மாட்டா. அவளோட பாணியிலே செய்வா. நீ மட்டும் அவ கூட இரு. போதும்"
"அவ எந்த பிரச்சனையிலும் மாட்டிக்காம இருந்தா சரி"
"மாட்டிக்க மாட்டா. அவ ரொம்ப கிளவர். அவளுக்கு என்ன செய்யணும்னு தெரியும்"
"ஆனா மாது..."
"என் மக உன் வீட்டுக்கு மருமகளா வர்றதுல உனக்கு விருப்பம் இல்லயா?"
"ஏன் இப்படி எல்லாம் பேசுற மாது? உனக்கு என்னை பற்றி தெரியாதா?"
"இத்தனை நாளா நீ நான் சொல்ற பேச்சைக் கேட்டு தான் நடந்திருக்க. ஆனா இந்த முக்கியமான விஷயத்துல மட்டும், ஏன் அதை நீ செய்ய தயங்குறன்னு எனக்கு புரியல" என்றார் எரிச்சலுடன்.
"ஏன்னா, இது தூயவன் சம்பந்தப்பட்ட விஷயம்"
"சஞ்சனா எல்லாத்தையும் பாத்துக்குவா. புரிஞ்சுதா உனக்கு?" என்றார் கட்டளையிடும் தொணியில்.
"சரி" என்றார் மாயவன்.
அவர்கள் அழைப்பை துண்டித்துக் கொண்டார்கள்.
தன்னுடைய திட்டத்தை செயலாற்ற சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தாள் சஞ்சனா. அந்த சந்தர்ப்பம் அவளுக்கு அடுத்த நாள் கிடைத்தது.
குணமதியும் வென்மதியும் கோவிலுக்கு சென்றார்கள். அது அவர்கள் வழக்கமாய் கோவிலுக்கு செல்லும் நேரம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் அவர்கள் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார்கள். பவித்ரா அவர்களுடன் செல்லவில்லை. அவளது அப்பா இறந்து சில நாட்கள் வரை அவள் கோவிலுக்கு செல்லக்கூடாது அல்லவா!
இப்படி ஒரு சந்தர்ப்பத்திற்காக தான் சஞ்சனா காத்திருந்தாள். அவளது திட்டத்தின் படி, மாயவனும் வீட்டில் இருக்க வைக்கப்பட்டார்.
வெண்மதியின் அறைக்கு வந்த சஞ்சனா, பவித்ரா கட்டிலில் அமர்ந்து, சுவரை வெறித்து பார்த்துக் கொண்டிருப்பதை கண்டாள்.
"ஹாய்" என்று புன்னகைத்தாள் சஞ்சனா.
"வணக்கங்க" என்று கட்டிலை விட்டு எழுந்து நின்றாள் பவித்ரா.
"எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?"
"சொல்லுங்க செய்றேன்"
"மாயா அங்கிளுக்கு காபி வேணுமாம். எனக்கு காபி போடத் தெரியாது. குழந்தைசாமி கடைக்கு போயிருக்காரு. எங்களுக்கு காபி போட்டு கொடுக்க முடியுமா?"
"போட்டு தறேங்க"
அவளுடன் சமையல் அறைக்கு சென்றாள் பவித்ரா. அவர்களுக்கு காபி போட்டு சஞ்சனாவிடம் கொடுத்தாள். அந்த குவளைகளை பெற்றுக்கொண்டு வரவேற்பறைக்கு வந்தாள் சஞ்சனா. மாயவன் அங்கு காத்திருந்தார். அவரிடம் காபியை கொடுத்தாள் சஞ்சனா. மீண்டும் வெண்மதியின் அறைக்கு சென்றாள் பவித்ரா.
"பவித்ரா தான் காபி போடா" என்றாள் சஞ்சனா.
அவரை பார்த்து புன்னகைத்த பவித்ரா,
"அப்படியா?" என்று அவர் கூறியதை கேட்டு நின்றாள்.
"உனக்கு நல்லா சமைக்க தெரியும் போல இருக்கே" என்றார்.
ஆம் என்று தலையசைத்தாள் பவித்ரா.
"அப்படியா? ரொம்ப நல்ல விஷயம் இல்ல அங்கிள்? பவித்ராவை நீங்க ஏன் உங்க வீட்டு சமையல்காரியா அப்பாயிண்ட் பண்ண கூடாது?"
பவித்ரா அவரை ஆர்வமுடன் பார்த்தாள். அவளுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அவளுக்கு வேலை கிடைக்கப் போகிறதே...! மாயவன் மனதில் நிம்மதி பிறந்தது. ஏனென்றால் அவள் முகத்தில் எந்த அசௌகர்யமும் தென்படவில்லை.
"நீங்க வேலை கொடுத்தீங்கன்னா, பவித்ராவுக்கு நிரந்தரமான வேலையும், தங்குறத்துக்கு இடமும் கிடைக்கும். பணம் சம்பாதிக்கிறோம் அப்படிங்கிற தைரியமும் அவளுக்கு கிடைக்கும். நான் சொல்றது சரிதானே பவித்ரா?" என்றாள் சஞ்சனா பவித்ராவை பார்த்தபடி.
ஆம் என்று யோசிக்காமல் தலையசைத்தாள் பவித்ரா. இப்படி ஒரு வேலை கிடைத்ததை எண்ணி அவளுக்கு சந்தோஷம் தாங்கவில்லை.
"நீ என்ன நினைக்கிற பவித்ரா, இந்த வீட்ல வேலை செய்றாரே குழந்தைசாமி, அவரோட சம்பளம் என்ன இருக்கும்னு நினைக்கிற?" என்று ஒரு மர்ம புன்னகை உதிர்த்தாள் சஞ்சனா.
தன் தலையை இடவலமாய் அசைத்தாள் பவித்ரா, அவளுக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது என்பதால்.
மாயவனை பார்த்தாள் சஞ்சனா.
"நாப்பது ஆயிரம் ரூபா" என்றார் மாயவன்.
பவித்ராவின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன. வீட்டில் வேலை செய்யும் ஒரு வேலைக்காரருக்கு நாற்பதாயிரம் சம்பளம் இருக்கக் கூடும் என்பதை அவள் யோசித்துக் கூட பார்த்ததில்லை.
"அதுமட்டுமில்ல. நீ தங்குறதுக்கு நல்ல கோட்ரஸ் கொடுப்பாங்க. வருஷத்துக்கு இரண்டு தடவை போனஸ் கொடுப்பாங்க. நேத்து மாயவன் உனக்கு வாங்கி கொடுத்தாரே, அது மாதிரி டிரஸ் வாங்கி கொடுப்பாங்க. ( வேலைக்காரர்களுக்கு வாங்கி கொடுப்பது போல் தான் மாயவன் அவளுக்கு உடை வாங்கி கொடுத்தான் என்று சூசகமாய் அவளுக்கு உணர்த்தினாள் சஞ்சனா) உன் வாழ்க்கையை வசதியாக ஓட்ட உனக்கு இதெல்லாம் போதாதா?"
போதும் என்று அவசரமாய் தலையசைத்தாள் பவித்ரா.
"அங்கிள், பவித்ரா நம்ம வீட்டோட பர்மனென்ட் வேலைகாரியா இருப்பா. உங்களுக்கு நன்றியோடவும் இருப்பா. அவ எவ்வளவு அடக்கமா இருக்கான்னு நீங்க பாக்கலையா? அவளுக்கு நீங்க கொடுக்குற சலுகைகள் எதையும் அவ தன்னுடைய உரிமையா எடுத்துக்க மாட்டா. அவளோட லிமிட்ல அவ இருப்பா" என்று பவித்ராவை தன் ஓரக்கண்ணால் பார்த்தவாறு கூறினாள் சஞ்சனா.
"வேலை செய்ய அவ தயாரா இருந்தா, வேலை கொடுக்க நானும் தயாராக தான் இருக்கேன்" என்ற மாயவனின் குரலில் தயக்கம் தெரிந்தது.
"நான் தயாரா தான் இருக்கேன் பா" என்றாள் பவித்ரா.
"நீங்க எதுக்காக தயங்குறீங்க அங்கிள்?" என்றாள் சஞ்சனா.
மாயவன் அமைதி காத்தார். ஏனென்றால் சஞ்சனா அவரிடம் இருந்து என்ன பதிலை எதிர்பார்க்கிறாள் என்று அவருக்கு புரியவில்லை.
"ஓஹோ, நீங்க தூயவனை நினைச்சு பயப்படுறீங்களா? நீங்க அவரைப் பத்தியும் மத்தவங்களை பத்தியும் கவலைப்பட வேண்டாம். பவித்ரா அவங்க எல்லாரையும் சமாளிச்சுக்குவா. இப்படி ஒரு நல்ல வேலையும், தங்குறத்துக்கு இடமும் கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம்னு அவளுக்கு தெரியாதா? எத்தனை நாளைக்கு தான் அவ மத்தவங்களை சார்ந்து இருக்க முடியும்? அவளுக்கும் தன்மானம் இருக்கு தானே? ஒரு நல்ல வேலைக்காரியா இருக்கிற சந்தர்ப்பத்தை அவள் நிச்சயம் மிஸ் பண்ணவே மாட்டா" என்று அவள் பவித்ராவை பார்த்து கூற, அவள் ஆம் என்று தலையசைத்தாள்.
"உனக்கு வேலை கிடச்சிடுச்சுன்னு நினைச்சுக்கோ" என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றார் மாயவன்.
"இப்படி ஒரு வேலை கிடைக்க நீ ரொம்ப அதிர்ஷ்டம் செஞ்சிருக்கணும், பவித்ரா"
"ரொம்ப நன்றிங்க. உங்களால தான் எனக்கு இந்த வேலை கிடைச்சிருக்கு" என்றாள் பவித்ரா.
"எனக்கு ரொம்ப இலகுன மனசு பவித்ரா. என்னால அடுத்தவங்களோட கண்ணீரை தாங்கவே முடியாது. இன்னைக்கு நான் நிம்மதியா தூங்குவேன். ஆனா நீ அங்கிளுக்கு செஞ்சு கொடுத்த சத்தியத்தை மட்டும் மறந்துடாத"
சரி என்று தலையசைத்தாள் பவித்ரா.
"நீ இங்க ஒரு வேலைக்காரி. நீ அவங்களுக்கு நன்றியோட இருக்கணும். எப்பவும் அவங்க கொடுக்கிற சலுகைகளை அட்வான்டேஜா எடுத்துக்க கூடாது. எல்லாத்துக்கும் மேல, நீ உன் லிமிட்டை தாண்டி வரக்கூடாது" என்று மீண்டும் அனைத்தையும் அவளுக்கு அடிக்கோடிட்டு காட்டினாள் சஞ்சனா
"நான் இதையெல்லாம் நிச்சயம் என் மனசுல வச்சிக்குவேங்க. ரொம்ப நன்றி!"
"யூ ஆர் வெல்கம். இந்த குடும்பத்தை சேர்ந்தவங்களை எப்படி சரி கட்டணும்னு உனக்கு தெரியலனா, என்கிட்ட கேளு நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்"
சரி என்று புன்னகையோடு தலையசைத்தாள் பவித்ரா.
"நீ உன் வேலையை இப்பவே ஆரம்பிச்சிடலாம்" என்று கூறிவிட்டு, கள்ள புன்னகையுடன் அங்கிருந்து சென்றாள் சஞ்சனா.
நீ ஒரு வேலைக்காரி என்ற விதையை அவள் மனதில் விதைத்து விட்டாள் சஞ்சனா. அதனால் அவள் அந்த குடும்பத்தாருக்கு நன்றியோடு இருப்பாள். தனக்கு அவர்கள் வழங்கும் சலுகைகளை உரிமையாக கருத மாட்டாள். தன் எல்லையை மீறி நடந்து கொள்ள மாட்டாள்.
சஞ்சனாவுக்கு தெரியாது, நன்றி விசுவாசத்தை பற்றி பவித்ராவுக்கு யாரும் எடுத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று. அவளுடைய எல்லை என்ன என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.
தன்னுடைய எல்லை என்ன என்பதை சஞ்சனா உணர்ந்து இருந்தால், பவித்ராவும் தன்னுடைய எல்லையிலேயே நின்றிருப்பாள். தூயவனும் கூட வெகு சகஜமாய் அவளிடம் பழகியதோடு நின்று இருப்பான்.
ஆனால், சஞ்சனா தனக்குத்தானே குழி வெட்டி கொண்டாள். அவள் செய்து வைத்த வேலையின் காரணமாய், மிகப்பெரிய பிரச்சனையை தூயவன் கிளப்ப இருக்கிறான். தான் ஒரு வேலைக்காரி அல்ல என்று பவித்ராவும் புரிந்து கொள்ளப் போகிறாள். எல்லாவற்றிற்கும் மேலாக, பவித்ராவுடன் நெருங்கி பழகும் வாய்ப்பை தூயவன் பெற போகிறான். அவை நமக்கும் சுவாரஸ்யத்தை தர இருக்கிறது...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top