61 இறுதி பகுதி
61 இறுதி பகுதி
ஒன்றரை வருடம் கழித்து
ஃபிரான்ஸ்
அலுவலகத்திலிருந்து வந்த தூயவன், வழக்கம் போல் பவித்ராவை தேடினான். அவள் வீட்டில் எங்கும் இல்லை. தனது கைபேசியை எடுத்து அவளது எண்ணுக்கு அழைத்தான். அவள் அந்த அழைப்பை ஏற்கவில்லை. மறுபடியும் அவளுக்கு ஃபோன் செய்யலாம் என்று அவன் நினைத்தபோது,
"நான் வந்துட்டேன், நான் வந்துட்டேன்," என்று உள்ளே ஓடி வந்தாள் பவித்ரா.
"நீ எங்க போயிருந்த?"
"அப்புறம் சொல்றேன். இருங்க, உங்களுக்கு நான் காபி கொண்டு வரேன்" என்று அவள் உள்ளே செல்ல முயன்ற போது, அவள் கையை பிடித்து நிறுத்திய அவன்,
"முதல்ல நீ எங்க போனேன்னு சொல்லு. அதுக்கப்புறம் எனக்கு நீ காபி கொண்டு வரலாம்"
தயக்கத்துடன் அவனிடம் கூற துவங்கினாள்.
"வந்து... போன வாரம் எனக்கு ஜுரம் வந்தது. நீங்க என்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனீங்கல்ல?"
"ஆமாம்"
"அங்க ஒருத்தர் ஸ்பைனல் கார்டு இஞ்சூரி பத்தி டாக்டர் கிட்ட பேசிக்கிட்டு இருந்தார்."
அவள் என்ன கூறப் போகிறாள் என்பதை புரிந்து கொண்ட தூயவன் புருவம் உயர்த்தினான்.
"ஒரு பெரிய ஆக்சிடென்ட்ல கிட்டத்தட்ட அவங்களோட ஸ்பைனல் கார்ட் தூளா நொறுங்கிடுச்சாம். ஆனா ட்ரீட்மென்ட் எடுத்த பிறகு அவங்களால நடக்க முடியுதாம்."
"அதனால?"
"இந்த ட்ரீட்மென்ட் பத்தி நம்ம சந்தோஷ் அண்ணன்கிட்ட சொல்லலாம்ல?"
"நீ சீரியஸா தான் பேசுறியா?"
"நெஜமா தான் சொல்றேன். ஒன்றரை வருஷம் படுத்த படுக்கையா இருந்த பிறகு, சஞ்சனாவுக்கு இன்னும் ஏன் தண்டனை கொடுக்கணும்?"
"அப்புறம்?" என்று தன் கையை கட்டிக்கொண்டு புன்னகை புரிந்தான் தூயவன்.
"நீங்களே யோசிச்சு பாருங்களேன், ஒருவேளை நீங்க மட்டும் என்னை சந்திக்காம இருந்திருந்தா, நீங்க அவங்களை தானே கல்யாணம் பண்ணி இருப்பீங்க?"
"ஹலோ மிஸஸ் தூயவன்... ஹோல்ட் ஆன்... ரொம்ப ஓவரா பேசாத. ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த நினைக்கிறேன். என் வாழ்க்கையில என் விருப்பப்படி தான் எல்லாம் நடக்கும்னு நான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா இல்ல. நான் உன்னை மதுரையில மீட் பண்ணேன். உன்னை பெரியசாமிகிட்ட இருந்து காப்பாத்தி எங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்தேன். அது எல்லாமே விதிப்படி தான் நடந்தது. நீ என்னோட விதியில எழுதப்பட்டவ. சஞ்சனா மட்டுமல்ல, எத்தனை பேர் என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சிருந்தாலும் அது நிச்சயம் நடந்திருக்காது. ஏன்னா நீ தான் எனக்காக பிறந்தவ. புரிஞ்சுதா?"
சரி என்று தலையசைத்தாள் பவித்ரா.
"சரி, இப்ப நம்ம என்ன செய்யணும்னு சொல்லு."
"சஞ்சனாவை இங்க கூட்டிகிட்டு வந்து டிரீட்மென்ட் கொடுக்கலாமா?"
"முதல்ல, அதனால ஏதாவது பிரயோஜனம் இருக்குமான்னு டாக்டர்கிட்ட பேசிட்டு முடிவெடுக்கலாம்"
"நான் ஏற்கனவே பேசிட்டேன்"
அது கேட்டு திகைத்த தூயவன்,
"இது எப்போ நடந்தது?" என்றான்.
"இன்னைக்கு தான்"
"சரி, அப்போ இதைப்பத்தி நம்ம சந்தோஷ் கிட்டயும் அக்கா கிட்டயும் சொல்லலாம்"
"நான் அவங்க கிட்டயும் சொல்லிட்டேன்"
"எனக்கு நீ என்ன தான் மீதி வச்ச?"
"ஒன்னும் இல்ல. இங்க வர்றதா, வேணாமான்னு அவங்க முடிவு பண்ணட்டும்"
"எல்லாம் சரி. இதை என்கிட்ட பேசணும்னு உனக்கு தோணலையா?"
அவன் மீது சாய்ந்த அவள்,
"நான் செய்ற எந்த நல்லதுக்கும் நீங்க தடை சொல்ல மாட்டீங்கன்னு எனக்கு தெரியும்." என்றாள் அவனது கன்னத்தில் வட்டம் வரைந்த படி.
"நான் வேணாம்னு சொல்ல நினைச்சாலும், நீ எனக்கு இப்படி சோப்பு போட்டு சரின்னு சொல்ல வச்சிடுவ"
"நான் உங்களுக்கு சோப்பு போடறேனா?"
"இல்லையா?"
உதடு சுழித்தபடி மீண்டும் அவன் கன்னத்தில் வட்டம் வரைந்தாள்.
"என்னை எப்படி சரின்னு சொல்ல வைக்கணும்னு உனக்கு தெரியும் தானே?"
"என் முடிவு எதிலும் உங்களுக்கு விருப்பமில்லாத மாதிரி பேசாதீங்க. உங்களுக்கு பிடிக்காத எதுக்கும் நீங்க சரின்னு சொல்ல மாட்டீங்க. எனக்கு தெரியும்." என்றாள்.
"நீ எப்பவும் நல்ல ஐடியாவோட வரும் போது நான் எப்படி முடியாதுன்னு சொல்ல முடியும்?"
"உங்களுக்கு பிடிக்காத எதையும் நான் செய்ய மாட்டேன்"
"அப்படியா?"
"சந்தேகமா?"
"ஆமாம்... ஒரு சந்தேகம் இருக்கு. செக் பண்ணி பார்த்துடலாம்."
"என்னை டெஸ்ட் பண்ண போறீங்களா?"
"ஆமாம்."
"நான் என்ன செய்யணும்?"
அவளை அள்ளி தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.
"என்ன செய்றீங்க?"
"ஷ்... நீ தான சொன்ன, என் விருப்பத்துக்கு எதிரா போக மாட்டேன்னு?"
"ஆமாம். அதனால?"
"என் விருப்பப்படி நடந்துக்கோ"
"ம்ம்ம்?"
"ம்ம்ம்..." என்று அவள் உதட்டில் முத்தமிட்டான்.
மறுநாள் / தூயவன் இல்லம்
தன் கையில் ஒரு புகைப்படத்துடன் நின்றிருந்தார் குணமதி. மாயவன் வரவேற்பறையின் சுவரில் ஆணி அடித்துக் கொண்டிருந்தார். தன் கையில் இருந்த சுத்தியலை குணமதியிடம் அவர் கொடுக்க, தன் கையில் இருந்த புகைப்படத்தை மாயவனிடம் கொடுத்தார் குணமதி. அந்த ஆணியில் அந்த புகைப்படத்தை மாட்டிவிட்டு கீழே குதித்தார் மாயவன். மாற்றப்பட்ட புகைப்படத்தை இருவரும் திருப்தியோடு ஏறிட்டார்கள். அது தூயவனும் பவித்ராவும் ஈஃபிள் டவரின் முன்னாள் நின்று எடுத்துக் கொண்டது.
"இருங்க வரேன்." என்று சமையலறைக்கு ஓடினார் குணமதி.
"எங்க போற?"
"இருங்க இப்ப வறேன்" அவர் ஒரு கரி துண்டோடு வந்தார். அதை வைத்து அந்த புகைப்படத்தின் மூளையில் ஒரு பொட்டு வரைந்தார்.
"நீ என்ன செய்ற?"
"என் கண்ணே பட்டுடும் போல இருக்கு. ரெண்டு பேரும் எவ்வளவு பாந்தமா, அழகா இருக்காங்க" என்றார் குணமந்தி பரவசத்தோடு.
அப்பொழுது வெண்மதியோடு அங்கு வந்த சந்தோஷ்,
"வாவ், தூயவனும் பவித்ராவும் ரொம்ப நல்லா இருக்காங்க" என்றான். ஆம் என்று தலையசைத்தாள் வெண்மதி.
"நீங்க என்ன திடீர்னு வந்து எங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கறீங்க?"
"உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி பேச வந்தோம்."
"ஏதாவது சீரியசான விஷயமா?" என்றார் மாயவன்.
"ஆமாம், டாட்."
"முதல்ல உட்காருங்க. அப்புறம் விஷயத்தைச் சொல்லுங்க"
ஸோபாவில் அமர்ந்த வெண்மதி,
"நேத்து ராத்திரி பவித்ரா கால் பண்ணி இருந்தாங்க"
"அவ எங்களுக்கும் தான் தினமும் ஃபோன் பண்ணிக்கிட்டு இருக்கா"
"எங்களை ஃபிரான்ஸுக்கு வர சொன்னாங்க"
"ஆமாம், எனக்கு ஃபோன் பண்ணும் போதெல்லாம் அவள் கூப்பிட்டுகிட்டு தான் இருக்கா." என்றார் குணமதி.
சந்தோஷ் கூறிய அடுத்த வார்த்தைகள், அவர்களை பேச்சிழக்க செய்தது.
"அவங்க எங்களை கூப்பிட்டது, சஞ்சனாவோட ட்ரீட்மென்ட்டுக்காக"
குணமதியும் மாயவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"நாங்களும் எவ்வளவோ டாக்டர்ஸை பார்த்துட்டோம். ஆனா, அவளோட முதுகெலும்பில் இருந்த டிஷ்யூஸ் எல்லாமே கம்ப்ளீட்டா டேமேஜ் ஆயிடுச்சு. அதனால எந்த டாக்டருமே ஹோப்ஃபுல்லா எதுவும் சொல்லல"
"சஞ்சனாவோட ரிப்போர்ட்டிடை இரண்டு நாளைக்கு முன்னாடி பவித்ரா கேட்டாங்கன்னு நான் அனுப்பி வச்சிருந்தேன். அவங்க ஃபிரான்ஸ்ல இருக்கிற டாக்டர்ஸ் கிட்ட பேசியிருப்பாங்க போல இருக்கு. சஞ்சனா நடக்கிறதுக்கு வாய்ப்பு இருக்குன்னு சொன்னாங்களாம்." என்றாள் வெண்மதி.
"இப்போ என்ன செய்யப் போறீங்க?"
"அப்பாவுக்கு இதுல சுத்தமா நம்பிக்கை இல்ல. அவர் நம்பிக்கையை மொத்தமாக இழந்துட்டார்" என்றான் சந்தோஷ்.
"அதுமட்டுமில்ல. அவர் இன்னும் கூட சஞ்சனா மேல வருத்தத்துல தான் இருக்காரு. ஒரே வீட்டில இருந்தா கூட, அவளை அவர் பாக்குறதே இல்ல." என்றாள் வெண்மதி.
"சஞ்சனா எப்படி இருக்கா?" என்றார் மாயவன்.
"அவ எப்படி நல்லா இருக்க முடியும்? அவ தான் கிட்டத்தட்ட எல்லாத்தையும் இழந்துட்டாளே... அவ உயிரோட இருக்கா, அவ்வளவு தான்."
"என்னால ஃபிரான்சுக்கு போக முடியாது. இங்க இருக்கிற எல்லா வேலையையும் நான் பாரியோட தோள்ல சுமத்த முடியாது. அவனால தனியா எல்லாத்தையும் தாங்க முடியாது. உண்மைய சொல்லப் போனா, என்னாலையும் கூட அத எல்லாம் செய்ய முடியல. ஃபிரான்ஸ்ல இருந்தபடி தூயவன் தான் எனக்கு முடிஞ்ச அளவு ஹெல்ப் பண்ணிக்கிட்டு இருக்காரு. அவர் இங்க இருந்த போது எப்படித் தான் இவ்வளவு வேலையை மேனேஜ் பண்ணாரோ எனக்கு புரியவே இல்ல." என்றான் சந்தோஷ்.
"அது தான் என் தம்பியோட சாமர்த்தியம்." என்றாள் வெண்மதி.
"ஃபிரான்ஸ்க்கு போறது பத்தி நீங்க என்ன முடிவெடுத்திருக்கீங்க?"
"சஞ்சனாவை கூட்டிக்கிட்டு வந்து அங்க இருக்கிற ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ண சொல்லி பவித்ரா சொன்னாங்க. அதுக்கப்புறம் அவங்க பாத்துக்குறதாவும் சொல்லி இருக்காங்க."
"இந்த பொண்ணு கொஞ்சம் கூட நம்பவே முடியாதவளா இருக்கா" என்றார் குணமதி.
"ஆமாம் தூயாவும் அடிக்கடி அதைத்தான் சொல்றான்." என்று சிரித்தாள் வெண்மதி.
"உண்மை தான், ஆன்ட்டி. பவித்ரா மாதிரி ஒரு பொண்ண பார்க்கவே முடியாது. தன் வாழ்க்கையையே அழிச்ச ஒரு பொண்ணை குணப்படுத்த நினைக்க, எவ்வளவு பெரிய மனசு வேணும்! ஆயிரத்தில் ஒருத்தருக்கு தான் அப்படி ஒரு நல்ல மனசு இருக்கும்." என்றான் சந்தோஷ்.
"கோடியில் ஒருத்தருக்கு...!" என்றார் மாயவன்.
"இந்த ப்ராஜெக்ட் முடிய இன்னும் ஆறு மாசம் தான் இருக்கு. அதனால தான் பவித்ரா அவசரப்படுறாங்க."
"இதைப் பத்தி தூயா என்ன சொன்னான்?" என்றார் குணமதி.
"அவன் ரொம்ப மாறிட்டான், மாம். அவன் பொண்டாட்டியை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசறதில்ல." என்றாள் வெண்மதி.
"பவித்ரா எந்த தப்பும் செய்ய மாட்டான்னு அவனுக்கு தெரியும்" என்றார் மாயவன்.
"பாருங்க, அப்பா தன் மருமகளுக்கு சப்போர்ட் பண்றதுக்கு ரெடியா இருக்காரு"
"பவித்ரா ரொம்ப நல்ல பொண்ணு. ஃபிரான்ஸ்ல இருந்தா கூட தினமும் எங்க கிட்ட பேசுறா. எங்களை ஏதாவது செய்ய சொல்லி உற்சாகப்படுத்திக்கிட்டே இருக்கா. தூயா ஆஃபிசுக்கு போனதுக்கு அப்புறம், எங்ககிட்ட பேச ஆரம்பிச்சா, ஒரு மணி நேரமாவது பேசுறா. அவ எங்ககிட்ட பேசுறது எங்க மனசுக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கு தெரியுமா?" என்றார் மாயவன்.
"உங்ககிட்ட பகலில் பேசுறாங்க. எங்ககிட்ட சாயங்காலத்துல பேசுறாங்க." என்றான் சந்தோஷ்.
"அப்படிப்பட்ட மருமகள் கிடைக்க நம்ம ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்." என்றார் மாயவன்.
"நான் அவளை ரொம்ப மிஸ் பண்றேன்" என்றார் குணமதி.
"நீங்க ஃபிரான்சுக்கு போய் அவங்க கூட இருக்கலாம்ல?" என்றாள் வெண்மதி.
"ஆமாம், பவித்ராவும் அதைத்தான் கேட்டுகிட்டே இருக்கா."
"அப்படின்னா, நீங்களும் எங்க கூட வந்து, அவங்களோட கொஞ்ச நாள் தங்கி இருங்களேன்." என்றான் சந்தோஷ்.
"நான் யோசிச்சு என் முடிவை சொல்றேன்"
ஃபிரான்ஸ்
குணமதியின் அழைப்பை ஏற்றான் தூயவன்.
"ஹாய் மாம், எப்படி இருக்கீங்க?"
"நான் நல்லா இருக்கேன். நான் மதர் தெரேசா கிட்ட கொஞ்சம் பேசலாமா?"
தூயவனுக்கு தெரியும் எதற்காக தன் அம்மா பவித்ராவை மதர் தெரேசா என்று கூறினார் என்று. அவன் சத்தமாய் சிரித்தபடி சமையலறையை வந்தடைந்தான்.
பவித்ரா சமைத்துக் கொண்டிருந்தாள்.
"பவித்ரா, உன்கிட்ட யாரோ பேசணுமாம்."
"யாரு?"
"பேசு" என்றபடி கைபேசியை அவள் காதில் வைத்து, பின்னால் இருந்து அவளை அணைத்தபடி, தன் முகத்தை அவள் தோளில் வைத்துக்கொண்டான்.
"ஹலோ..."
"எப்படி இருக்கீங்க மதர் தெரேசா?"
"அம்மா, நீங்க தானா? என்னை கிண்டல் பண்றத நிறுத்துங்க."
"பின்ன என்ன? மதர் தெரசாவுக்கு பிறகு அந்த பேரு உனக்கு தான் பொருத்தமா இருக்கும்."
அவன் அம்மா பேசியது காதில் விழுந்ததால், அதைக் கேட்டு வாய்விட்டு சிரித்தான் தூயவன்.
"பாருங்கம்மா அவர் எப்படி சிரிக்கிறார்னு...!"
"நான் ஃபிரான்சுக்கு வரும் போது நிச்சயம் அவனை ரெண்டு அடி போடுறேன்."
"ஆனா நீங்க தான் வரவே மாட்டேங்கிறீங்களே... நான் உங்களை எவ்வளவு நாளா கூப்பிட்டுகிட்டு இருக்கேன்...?" என்றாள் வருத்தத்தோடு.
"அதுக்கு தான் சொல்றேன் நான் ஃபிரான்சுக்கு வரேன்"
"நெஜமாவா?" என்று அவள் சந்தோஷத்தில் கத்த, தன் காதை பொத்திக் கொண்டான் தூயவன்.
"ஆமாம். ஏன்னா, சஞ்சனா அங்க வரும் போது, நீ ரொம்ப ஓவரா எதையும் செய்ய வேண்டாம்னு தான்." என்றார் கிண்டலாக.
"மாம் சொல்றது ரொம்ப கரெக்ட்" என்றான் தூயவன்.
"நான் செய்றது தப்பாம்மா?" என்றாள் பவித்ரா.
"யார் சொன்னது. நீ யாரும் நினைச்சு கூட பாக்க முடியாத அளவுக்கு நல்ல விஷயம் செய்ற. அது தான் பிரச்சனையே!"
"நீங்க இங்க வர்றது ரொம்ப நல்லதா போச்சு." என்று மேலும் சிரித்தான் தூயவன்.
"போதும். அவளை கிண்டல் பண்றத நிறுத்து. என் மருமக மாதிரி யாராலும் வர முடியாது. தன் வாழ்க்கையை அழிக்க நினைச்ச ஒருத்திக்கு வாழ்க்கை கொடுக்கணும்னு நினைக்கிறது சாதாரண விஷயமில்ல."
"அது அவங்க கேரக்டர் அம்மா. நம்ம மத்தவங்களுக்கு நல்லது பண்ணா, நமக்கு நல்லதே நடக்கும்னு நான் நம்புகிறேன்."
"உனக்கு நல்ல எதிர்காலத்தை கடவுள் கொடுக்கட்டும்."
"தேங்க்யூ அம்மா."
அழைப்பை துண்டித்தார் குணமதி.
சமையலை முடித்துவிட்டு கை கழுவிக் கொண்டாள் பவித்ரா.
"வாங்க சாப்பிடலாம்."
"மாட்டேன்."
"ஏன்?"
"நீ எனக்கு ஊட்டி விடு."
"ஏன்?"
"ஏன்னா, நீ என்னோட வைஃப்."
"அதனால?"
"உன்னோட எதிரிக்கும் அக்கறை காட்ற. உன் புருஷனுக்கு மட்டும் ஏதாவது செய்யணும்னா எதுக்கு கேள்வி கேக்குற?"
சிரித்தபடி, உணவை எடுத்து அவன் வாயில் அடைத்தாள் பவித்ரா. அவளை தன் அருகில் அமர்த்திக்கொண்ட தூயவன்,
"உன்னை மாதிரி ஒரு சுயநலமில்லாத பொண்ண நான் பார்த்ததே இல்ல. இந்த மாதிரியான கேரக்டரை எல்லாம் நான் கதையில தான் படிச்சிருக்கேன். இப்படிப்பட்டவங்க எல்லாம் உண்மை வாழ்க்கையில இருக்கவே முடியாதுன்னு நினைச்சேன்."
"சுயநலமா இருந்து நம்ம என்ன சாதிக்க போறோம்? எங்க அப்பா இறந்தப்போ இந்த உலகத்துலயே நான் தான் ரொம்ப துரதிஷ்டசாலின்னு நினைச்சேன். ஏன்னா, பெரியசாமி என்னை கல்யாணம் பண்ணிக்குவான். என்னோட வாழ்க்கையே முடிஞ்சிடும்னு நினைச்சேன். ஆனா அதுக்கு பிறகு நடந்த எல்லாமே நான் கொஞ்சம் கூட எதிர்பாராதது. ஒரு தேவனை அனுப்பி என் வாழ்க்கையை கடவுள் காப்பாத்தி இருக்காங்க. அப்ப தான் நான் புரிஞ்சிக்கிட்டேன். நம்ம நல்லதே நினைச்சா, நிச்சயம் கடவுளோட அருள் நம்ம கூட எப்பவும் இருக்கும்."
"எது எப்படியோ, நீ பல பேருடைய இதயத்தை ஜெயிச்சிட்ட, ஈடு இணை இல்லாத அன்பால...!" என்று அவள் கையில் முத்தமிட்டான் தூயவன்.
புன்னகையோடு அவன் தோளில் சாய்ந்தாள் பவித்ரா.
முற்றும்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top