6 சக்தி வாய்ந்தவன்

6 சக்தி வாய்ந்தவன்

தூயவனின் குடும்பத்தினர் பெரிய இடத்து மனிதர்களைப் போல் பழகாமல், வெகு எளிமையாக இருந்ததால், அது பவித்ராவுக்கு நிம்மதியை தந்தது.

வெண்மதி பவித்ராவை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று தூயவன் விரும்பினான். ஆனால் அதை முழுமூச்சாய் கையில் எடுத்துக் கொண்டது குணமதி தான். அதை தன் மகனுக்காக தான் அவர் செய்தார் என்பதில் சந்தேகம் இல்லை. மீண்டும் அவன் மனதில் ஓர் நல்லெண்ணத்தை உருவாக்க அவர் முயன்று கொண்டிருந்தார், தூயவன் அவரிடத்தில் அந்த பொறுப்பை ஒப்படைக்காவிட்டாலும், அவர் அதை செய்வார் என்று அவன் எதிர்பார்த்து இருக்கலாம்.

வெண்மதிக்கும், குணமதிக்கும் இடையில் தூயவன் காட்டிய வித்தியாசத்தை நன்றாகவே உணர்ந்து இருந்தாள் பவித்ரா. அவர்கள் இருவரும், அவளை கவலையோடு இருக்க வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால் அவர்களது கண்களில் ஆழமான ஒரு துயரம் இருந்ததை அவள் கண்டாள். அவர்கள் ஏதோ ஒரு துயரத்தை தன் மனதிற்குள் மறைத்து வைத்திருப்பதாக அவளுக்கு தோன்றியது. தூயவன் கூட, தன் அக்காவிடம் மிகவும் மென்மையாத் தான் நடந்து கொண்டான். இதைப்பற்றி எல்லாம் யோசித்தபடி அவள் கட்டில் படுத்திருந்தாள். குளியலறையின் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு, சட்டென்று தன் கண்களை மூடிக்கொண்டாள். குளியல் அறையியை விட்டு, தன் முகத்தை துடைத்தவாறு வெளியே வந்தாள் வெண்மதி.

அப்பொழுது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. வெண்மதி கதவை திறக்க, அங்கு புன்னகையோடு நின்றிருந்தார் குணமதி.

"பவித்ரா தூங்கிட்டாளா?" என்றார்.

"ஆமாம், மாம். இப்ப தான் தூங்கினாங்க"

"நான் அவளுக்கு அட்வைஸ் பண்ணதுக்கு பிறகு, அவ அழலன்னு நினைக்கிறேன்"

"இல்ல, அவங்க அழல"

"பாவம், இந்த சின்ன வயசுல, விதி அவ வாழ்க்கையில எப்படி விளையாடி இருக்கு, பாரு..." என்றார் குணமந்தி கவலையோடு.

ஆம் என்று தலையசைத்தாள் வெண்மதி.

"அவங்க அம்மாவையும் அப்பாவையும் இழந்துட்டா. இதயம் இல்லாதவனுங்க அவளை கிழவனுக்கு கல்யாணம் பண்ணிக்க வைக்க நினைச்சிருக்காங்க. ஆனாலும், கடவுள் அவளை காப்பாத்தி, நிம்மதியான ஒரு இடத்துல கொண்டு வந்து சேர்த்திருக்காரு"

அவர் கூறியது உண்மை என்பதை ஏற்றுக் கொண்டு மீண்டும் தலையசைத்தாள் வெண்மதி.

"அதே மாதிரி, கடவுள் நிம்மதியான ஒரு இடத்தை உனக்கும் காட்டட்டும்" என்றார்.

தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் வெண்மதி. அதை கேட்ட பவித்ரா, புருவம் உயர்த்தினாள். அவர் கூறியதன் அர்த்தம் என்ன? வெண்மதியின் வாழ்க்கையில் அப்படி என்ன நடந்தது? தன் வாழ்க்கையுடன், வெண்மதியின் வாழ்க்கையை ஒப்பிட்டு குணமதி ஏன் பேசுகிறார்?

"ஐ அம் சாரி மதி, நான் உன்னை காயப்படுத்தணுன்னு சொல்லல"

"எனக்கு தெரியும், மாம். நீங்க என்னை எப்பவும் காயப்படுத்த மாட்டீங்க. நீங்க என்னோட அம்மாவாச்சே..." என்று அவரை சமாதானம் செய்ய முயன்றாள்.

"இல்ல மதி. நானும் என் குழந்தைகளை காயப்படுத்துவேன். நான் நம்ம தூயாவை காயப்படுத்தி இருக்கேன். அதனால தானே அவன் என்கிட்ட பேசுறது இல்ல...! பத்து வருஷமா அவன் என்கிட்ட பேசாம இருக்கான்னா, நான் அவனை எவ்வளவு ஆழமா காயப்படுத்தி இருக்கணும்?" என்ற போது அவர் தொண்டையை அடைத்தது.

"மாம், ப்ளீஸ் தயவுசெஞ்சி வருத்தப்படாதீங்க"

"எங்களுக்குள்ள இருக்கிற இந்த பிரச்சனை தீருமா தீராதான்னே எனக்கு தெரியல" என்ற போது அவர் கண்களில் இருந்து கண்ணீர் உருண்டு ஓடியது.

"கண்டிப்பா உங்களுக்கு எல்லாத்தையும் சரி கட்ட ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்"

"நாமன் என்னோட நம்பிக்கையை முழுசா இழந்துட்டேன். நான் ஆண்டவனை வேண்டாத நாளே இல்ல. காலையில் எழுந்த உடனே, என்னோட முதல் பிரார்த்தனையே தூயா என்கிட்ட பேசணும் அப்படிங்கறது தான். நான் சாகறதுக்கு முன்னாடி அவனோட மன்னிப்பு கிடைச்சா நான் சந்தோஷமா சாவேன்"

"எதுக்காக இப்படி எல்லாம் பேசுறீங்க? தூயா ஒன்னும் கெட்டவன் இல்ல"

"அவன் கெட்டவன் இல்ல. அதனால தான், அவன் தன் நிலையில பிடிவாதமா இருக்கான். நானும் என்னுடைய நிலையில பிடிவாதமா இருந்திருக்கணும். ஆனா அப்படி பிடிவாதமா இருக்க நான் தவறிட்டேன். நான் அவனை நம்பி இருக்கணும். மத்தவங்க முன்னாடி அவனை தலைகுனிய வச்சிருக்கக் கூடாது. எந்த ஒரு உறவுக்குமே நம்பிக்கை தானே முக்கியம்...! நான் அதை என் பிள்ளைக்கு கொடுக்க தவறிட்டேன்.

"எல்லாம் ஒரு நாள் சரியாகும், மாம்"

"என்னைக்கு? பத்து வருஷம் ஆயிடுச்சு... இன்னைக்கும் என் பிள்ளை என் முகத்தை கூட பாக்குறது இல்ல..."

"எல்லாம் விதி! நீங்களும் தூயாவும் எவ்வளவு ஒத்துமையா இருந்தீங்க! அவன் உங்ககிட்ட எவ்வளவு பிரியமா இருந்தான்...! அதனால தான் நீங்க அவனை நம்பாம போன போது, அவனால தாங்க முடியல. ஆனா, இன்னும் அவனுக்கு உங்க மேல பிரியம் இருக்கு. அவனால உங்களை பார்க்காம இருக்க முடியாது. ஒரு நாள் நிச்சயம் அவன் உங்க நிலைப்பாட்டை புரிஞ்சுகிட்டு உங்ககிட்ட பேசுவான்."

"அந்த நாள் சீக்கிரம் என் வாழ்க்கையில வரணும்னு நான் ஆண்டவனை வேண்டுறேன்"

குணமதிக்காக வருத்தப்பட்டாள் பவித்ரா. தூயவன் அவரிடம் மிக ஆழமான பாசம் வைத்திருந்திருக்க வேண்டும். ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்களுக்கிடையில் பேச்சு வார்த்தை நின்று விட்டிருக்கிறது. அவர்களுக்கு இடையில் அப்படி என்ன நடந்தது என்று அவளால் யூகிக்க முடியவில்லை.

அப்பொழுது அவர்கள், தங்கள் அறையை ஒரு காலடி சத்தம் நெருங்குவதை கேட்டார்கள். தன் முகத்தை துடைத்துக் கொண்டார் குணமதி.

தூயவன் அந்த அறைக்குள் நுழைந்தான். அவர்கள் இருவரின் முகத்தையும் பார்த்து, அவர்கள் ஏதோ ஒரு உணர்ச்சிப்பூர்வமான விஷயத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள் என்பதை அவன் புரிந்து கொண்டான். அவர்களை உணர்ச்சிவசப்பட செய்த விஷயம் என்னவாக இருக்கும் என்பதையும் ஓரளவு அவனால் யூகிக்க முடிந்தது.

"பவித்ராவை பார்த்துக்கோ. ஏதாவது தேவைன்னா என்னை கூப்பிட தயங்காதே. நான் காலையில வரேன்" என்று, அக்கா, தம்பி இருவருக்கும் இடைவெளி கொடுத்து அங்கிருந்து நகர்ந்து சென்றார் குணமதி.

"பவித்ரா நல்லா இருக்காளா கா?" என்றான் தூயவன் உறங்கிக் கொண்டிருப்பதைப் போல் பாசாங்கு செய்து கொண்டிருந்த பவித்ராவை பார்த்தபடி.

அவள் முதுகை காட்டிக்கொண்டு படுத்திருந்ததால், அவள் உறங்குகிறாள் என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள்.

"ஆமாம், தூங்கிட்டாங்க. அம்மா அவங்களுக்கு அட்வைஸ் பண்ணதுக்கு பிறகு, அவங்க மைண்ட் கொஞ்சம் லைட்டா ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன்"

ஆம் என்று தலையசைத்த தூயவன்,

"பவித்ராவோட இருக்கிறதுக்காக ரொம்ப தேங்க்ஸ் கா" என்றான்.

"பவித்ராவை லைட்டா ஃபீல் பண்ண வச்சதுக்காக நீ அம்மாவுக்கு தேங்க்ஸ் சொல்ல மாட்டியா?" என்றாள் வெண்மதி.

தூயவன் அமைதி காத்தான்.

"அவங்களை மன்னிச்சிடு, தூயா. நீ அவங்களை போதுமான அளவுக்கு ஏற்கனவே தண்டிச்சிட்ட. பத்து வருஷம் ஆச்சு. அவங்கள வருத்தப்பட வச்சது போதாதுன்னு நினைக்கிறியா?"

அதற்கு பதில் கூறவில்லை அவன். அதை பற்றி பேசக்கூடாது என்பதற்காக அல்ல. அவர்கள் இதைப் பற்றி ஏற்கனவே பலமுறை பேசி விட்டிருந்தார்கள். அவன் மனதில் என்ன இருக்கிறது என்பது வெண்மதி அறிந்ததே. அதுபோலவே, அவளுக்கு குணமதியை பற்றியும் தெரியும். தூயவனுக்கும் குணமதிக்கும் இடையில் ஓர் நல்ல பிணைப்பு இருந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அவர் தனக்கு ஓரவஞ்சனை செய்வதாக எப்பொழுதும் வெண்மதி, குணமதியுடன் சண்டையிட்டுக் கொண்டே இருப்பாள். ஆனால் அவர் அப்படி இல்லை என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தன் அப்பாவுடன் சேர்ந்து, அவர்கள் இருவரையும் சவாலுக்கு அழைக்க வேண்டும் என்று பலமுறை நினைத்திருக்கிறாள். ஆனால் மாயவன் வேலை பளு காரணமாக பிஸியாகவே இருந்து விட்டதால், அதற்கு அவளுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. தன்னிடம் அவர் பிணைப்போடு இல்லை என்பதால் அவள் பலமுறை மாயவனுடன் கண்டையிட்டு இருக்கிறாள்.

"எனக்கு மட்டும் அவங்க கூட பேச
விருப்பம் இல்லன்னு நினைக்கிறீங்களா? அவங்க எப்படி என்னை சந்தேகப்படலாம்? என் மேல வச்சிருந்த நம்பிக்கையை அவங்க எப்படி விட்டுக் கொடுக்கலாம்? நான் எவ்வளவு அவமானப்பட்டேன்னு உங்களுக்கு தெரியாதா?" என்ற போது அவன் தொண்டையை அடைத்தது.

"போகட்டும் விடு, தூயா"

"குட் நைட் கா" என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் தூயவன்.

பெருமூச்சு விட்டாள் வெண்மதி. எவ்வளவு நாளைக்குத்தான் இவர்களுக்கு இடையில் இருக்கும் இந்த பாச போராட்டம் நீடிக்க போகிறதோ தெரியவில்லை...!

பவித்ராவுக்கு ஒரு விஷயம் புரிந்தது, தூயவன் தன் அம்மாவின் மீது கோபமாக இல்லை, வருத்தம் தான் கொண்டிருக்கிறான். இப்பொழுதும் அவனுக்கு அவன் அம்மாவின் மீது இருக்கும் பாசம் குறையவில்லை. அதனால் தான் அவர் தன்னை நம்பாமல் போன போது அதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் இருவருமே மிகவும் இனிமையானவர்கள், என்று எண்ணினாள்.

மறுநாள் காலை

மாதேஷின் மகனான சந்தோஷ் தன் கையில் இருந்த புகைப்படத்தை பார்த்து முகத்தை சுருக்கினான். அந்த புகைப்படத்தில், தூயவன் மதிரையில் நடத்திய மிகப்பெரிய நிகழ்ச்சி மேடையில் ஒரு பெண் மருண்ட விழிகளுடன் நின்றிருப்பதை கண்டான்.

பவித்ரா இருக்கும் எந்த புகைப்படமும் வெளியே வரக்கூடாது என்பதில் தூயவன் மிகவும் கண்டிப்போடு இருந்தான். இருந்தாலும் சந்தோஷின் நம்பகமான ஊழியர் அவனுக்கு  பவித்ராவின் புகைப்படத்தை அனுப்பிவிட்டான்.

அந்த புகைப்படத்தை தனக்கு அனுப்பிய தன் நண்பன் அர்ஜுனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டான் சந்தோஷ்.

"என்ன ஃபோட்டோ நீ எனக்கு அனுப்பி இருக்க?"

"அந்த பொண்ணு திடீர்னு ஸ்டேஜ்ல வந்தா. அவளை பார்த்த உடனே தூயவன் பயங்கர டென்ஷன் ஆயிட்டாரு"

"யார் அந்த பொண்ணு?"

"எனக்கு தெரியாது. அந்த பொண்ணை தேடி கண்டுபிடிக்க சொல்லி தூயவன் அவரோட கார்ட்சுக்கு ஆடர் போட்டாரு"

"அவங்க அவளை கண்டுபிடிச்சாங்களா?"

"இல்ல. ஆனா அந்த பொண்ணு தானாவே தூயவன் வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டா"

"அது எப்படி நடந்துச்சு?"

"தவறுதலா நடந்திருக்கும்னு நினைக்கிறேன். மறுநாள் தூயவன் அந்த பொண்ணை அவங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு போனதை நான் பார்த்தேன்"

"அந்த பொண்ணு வீட்டுக்கா?"

"ஆமாம். ஆனா அங்க எதிர்பாராத ஒரு மோசமான சம்பவம் நடந்துச்சு. தூய்வனோட கார்ட் ஒருத்தன் தான் அதைப்பத்தி எனக்கு சொன்னான்"

மதுரையில் நடந்தவற்றை சந்தோஷுக்கு விளக்கினான் அர்ஜுன்.

"இப்போ அந்த பொண்ணு தூயவன் வீட்ல தான் இருக்காங்க" என்றான் அர்ஜுன்.

அதை கேட்ட சந்தோஷ் யோசனையில் ஆழ்ந்தான்.

தரைதளம் வந்த சந்தோஷ், தன் அப்பா மாதேஷ், தன் தங்கை சஞ்சனாவுடன் கைபேசியில் பேசிக் கொண்டிருப்பதை கண்டான். தூயவன் பவித்ராவை வீட்டிற்கு அழைத்து வந்த விஷயத்தைப் பற்றி தன் தந்தையிடம் அவள் கூறிக் கொண்டிருப்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்தது. அது அவன் எதிர்பார்த்தது தான்.

சந்தோஷை பார்த்த மாதேஷ், சற்று பொறு என்பது போல் அவனிடம் சைகை செய்தார். சோபாவில் அமர்ந்து அவர்கள் பேசுவதை கேட்டான் சந்தோஷ்.

"இந்த விஷயத்தை நான் பார்த்துக்கிறேன்"

"......"

"நான் பாத்துக்குறேன்னு சொல்றேன்ல...?  என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?"

"....."

"குட்" என்று அழைப்பை துண்டித்தார் மாதேஷ்.

அவர் சந்தோஷை பார்த்து,

"மாயவன் வீட்ல என்ன நடக்குதுன்னு உனக்கு தெரியுமா?" என்றார்.

"என்ன?"

"தூயவன் ஏதோ ஒரு பொண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கானாம்"

"அதனால?"

"நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரியலன்னு நினைக்கிறேன்"

"எனக்கு நல்லாவே புரியுது. தூயவன் அந்த பொண்ணை எதுக்காக வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கான்னு தெரியுமா?"

"எதுக்காக?"

மதுரையில் நடந்தவற்றை அவரிடம் கூறினான் சந்தோஷ் . அதைப்பற்றி யோசிக்கலானார் மாதேஷ்.

"ஏற்கனவே தூயவன் உங்க மேல பயங்கர கடுப்புல இருக்கான். அதுக்கான காரணமும் உங்களுக்கு தெரியும். தேவையில்லாம அவன் விஷயத்துல தலையிடாதீங்க. அவன் மாயவன் அங்கிள் மாதிரி கிடையாது. அவனை எரிச்சல் படுத்தாதீங்க. நீங்க கேட்கிற கேள்விக்கு எல்லாம், கவலையே படாம உங்களை தூக்கி எறிஞ்சு பதில் சொல்லுவான். அந்த தைரியம் அவனுக்கு இருக்கு. மாயவன் அங்கிளும், குணமதி ஆன்டியும் அவனை தடுக்க கூட நினைக்க மாட்டாங்க. அவனோட குடும்பத்துலயும், நம்ம கம்பெனியிலயும் அவன் எவ்வளவு சக்தி வாய்ந்தவன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். நம்ம உதவி இல்லாமலேயே அவனால நம்ம கம்பெனியை நடத்த முடியும். அதனால அவனுடைய ஈகோவை தொட்டு பாக்காதீங்க"

"ஒருவேளை தூயவனுக்கு அந்த பொண்ணு மேல ஏதாவது விருப்பம் இருந்தா என்ன செய்றது?"

"அவனுக்கு அந்த பொண்ணு மேல விருப்பம் இருந்தா உங்களுக்கு என்ன?"

"நம்ம சஞ்சனா அவனை காதலிக்கிறா"

"ஓ... அதுக்காகத்தான் சஞ்சனாவை அங்க அனுப்பி வச்சிருக்கீங்களா?"

ஆமாம் என்று தலையசைத்தார்.

"நீங்க என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? அவ அங்க போய் தங்கினா தூயவன் மனசுல காதலை விதைச்சிட முடியும்னு நினைக்கிறீங்களா?"

மாதேஷ் அமைதியாய் இருந்தார்.

"அந்த பொண்ணு மேல அவனுக்கு விருப்பம் இருந்தாலும் கூட உங்களால ஒன்னும் பண்ண முடியாது"

"சஞ்சனா உடைஞ்சு போய்டுவா"

"ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கோங்க. இந்த நிமிஷம் வரை, தூயவன் மனசில அந்த பொண்ணு மேல எந்த ஃபீலிங்ஸும் இல்ல. ஏதாவது ஏடாகூடமா செஞ்சு, நீங்களே அதை உருவாக்கிடாதீங்க. அவனை வெறுப்பேத்துற மாதிரி ஏதாவது செஞ்சா, உங்களை வெறுப்பேத்த, அவன் அதை வேணும்னே செய்வான். இன்னொரு விஷயத்தையும் மறந்துடாதீங்க. அவன் ஒரு தடவை ஆமாம்னு சொல்லிட்டா, அதை யாராலயும் மாத்த முடியாது. சஞ்சனாவுக்கு சொல்லி புரிய வையுங்க. போற போக்குல, எல்லாம் கரெக்டா நடக்கும். அவளுக்கு அதுக்கு பொறுமை தான் தேவை. அவசரப்பட்டு எதுவும் செய்ய வேண்டாம்னு சொல்லுங்க. அவ பொறுமையா இருந்து தான் ஆகணும். வேற வழி இல்ல"

பெருமூச்சு விட்டார் மாதேஷ். அவருக்கு தெரியும், சந்தோஷ் கூறியது எதுவும் மிகையில்லை. தூயவன் ஒரு அசுரன்... எல்லா விஷயத்திலும்...! தன் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் எவரையும் அவன் அடித்து துவைக்க தயங்க மாட்டான்.

சஞ்சனாவுக்கு ஃபோன் செய்து, சந்தோஷ் கூறிய விஷயங்களை அவளிடம் கூறினார் மாதேஷ், அவள் அறிவுரைகளை எல்லாம் கேட்டு நடக்கக்கூடிய பெண் இல்லை என்று அவருக்கு தெரிந்திருந்த போதிலும்! அந்த விஷயத்தை வேறு விதத்தில் கையாள்வது என்று தீர்மானித்தாள் சஞ்சனா. ஆம் அவள் தூயவனை விட்டு, பவித்ராவை குறி வைத்தாள்.

தொடரும்...


Bạn đang đọc truyện trên: AzTruyen.Top