59 வினை விதைத்தவன்

59  வினை விதைத்தவன்

இதற்கிடையில்...

சஞ்சனா குறிப்பிட்ட அந்த காட்டுப்பகுதிக்கு வந்து சேர்ந்தார் மாதேஷ். அங்கு இருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினார்கள். காரில் இருந்து கீழே இறங்கினார் மாதேஷ்.

"சார், இதுக்குள்ள போறதுக்கு யாருக்கும் பர்மிஷன் கிடையாது. அதனால தான், இதை தடை செய்யப்பட்ட பகுதியா அறிவிச்சிருக்காங்க" என்றார் காவலர்.

"சார், என்னோட பொண்ணு இங்க இருக்கா. அவளை காப்பாத்தத் தான் நான் இங்க வந்திருக்கேன்."

"உங்க பொண்ணா? உங்க பொண்ணு என்ன, நரியா, ஓநாயா? ஏன்னா, இந்த காட்டுக்குள்ள மிருகங்க மட்டும் தான் இருக்கும்" என்றார் அங்கிருந்த காவல்காரர் நக்கலாக.

"என் மக சஞ்சனாவை சின்னசாமி கடத்திக்கிட்டு போயிட்டான், சார்"

"சஞ்சனாவா? இது என்ன புது கதையா இருக்கு? அந்த பொண்ணு சின்ன சாமியோட கூட்டாளின்னு தானே நாங்க கேள்விப்பட்டோம்?"

"இல்ல, சார், அது உண்மை இல்ல. சின்னசாமி தான் அப்படி ஒரு கதையை உருவாக்கி போலீஸ்காரங்க கண்ணுல அவளை குற்றவாளியா காட்டிட்டு போயிட்டான். அதுல அவளோட தப்பு எதுவும் இல்ல, சார்"

"எது எப்படி வேணும்னாலும் இருக்கட்டும். நாங்க யாரையும் உள்ள அனுமதிக்க முடியாது. ஏன்னா இதுக்குள்ள யாருமில்ல"

"சார் உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லனா, அந்த கார்ல பிரபல தொழிலதிபர் தூயவன் இருக்காரு. அவர்கிட்ட வேணா கேட்டு பாருங்க"

"என்னது? தூயவன் அந்த காரில் இருக்காரா?"

"ஆமாம், சார்"

"எங்க?"

"அந்த கார்ல" என்று பின்னால் திரும்பிப் பார்க்க, அங்கு எந்த காரும் இருக்கவில்லை.

தன் வீட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய பிரச்சனைக்கு பிறகு தனது கார் ஓட்டுநரை திரும்ப வருமாறு அழைத்துக் கொண்டான் தூயவன். பிறகு அவனது கார் எப்படி அங்கு இருக்கும்?

"சார், தூயவன் என்னோட தான் வந்தாரு"

"அவர் உங்க கூட வந்திருந்தா, திடீர்னு எப்படி மாயமா மறஞ்சாரு?"

"என்னை நம்புங்க. என் பொண்ணு அவரை கூட்டிக்கிட்டு வர சொன்னா. அதனால, என் மகளை காப்பாத்த அவரும் வந்தாரு"

"சரிங்க சார். அவர் உங்க கூட வந்ததாவே இருக்கட்டும். நாங்க இப்ப உங்களை உள்ள விட முடியாது. நீங்க திரும்பி போகலாம்"

"இல்ல நான் போக மாட்டேன்"

"அப்படின்னா, உங்களை அரெஸ்ட் பண்றதை தவிர எங்களுக்கு வேற வழியில்ல"

"நீங்க அப்படி செய்ய முடியாது. எனக்கும் சட்டம் தெரியும்"

"அப்படின்னா நீங்க கோர்ட்டுக்கு போய் அங்க வாதாடிக்கோங்க" காவலர்கள் அவரை கைது செய்ய முற்பட்டார்கள்.

தன்னை பிடிக்க வந்த காவலரை பிடித்து தள்ளினார் மாதேஷ். கீழே விழுந்த காவலருக்கு தலையில் கல்குத்தி ரத்தம் வழிந்தது.

அதை கண்ட ஆய்வாளர்,

"அவரை அரெஸ்ட் பண்ணுங்க" என்றார்.

இரண்டு காவலர்கள் அவர் மீது பாய்ந்து அவரை அவர் கையில் விலங்கு பூட்டினார்கள்.

....

அரசு மருத்துவமனையில் ஸ்கேனிங் செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்டாள் சஞ்சனா. அவளை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கு முன்பாக, அவளைப் பற்றிய முழு ஆய்வு அறிக்கை சமர்ப்பித்தாக வேண்டும், அவளது மருத்துவ சோதனை உட்பட. அப்பொழுது தான் அவளுக்கான தீர்ப்பு தாமதமாகாது. அவளை சோதனை செய்த மருத்துவர் குழுவை வேகமாய் செயல்படும்படி முடுக்கிவிட்டார் நவ்ஷாத்.

மறுபுறம், உட்காரவே சிரமப்பட்டாள் சஞ்சனா. அவள் இடுப்பில் இருந்த வலி அவளை கொன்று தின்றது. தன் தந்தையை உடனடியாக அழைத்து அவளது நிலையை பற்றி கூற வேண்டும் என்று எண்ணினாள். எப்படியும் மாதேஷ் அவளை ஜாமீனில் வெளியே கொண்டு வந்து விடுவார் என்று அவள் எதிர்பார்த்தாள். ஆனால் அவளுடைய கெட்ட நேரம், மாதேஷ் கைது செய்யப்பட்டு விட்டார் என்று அவளுக்கு தெரியாது. இப்பொழுது மாதேஷுக்கே ஒருவர் ஜாமின் வழங்க வேண்டிய நிலையில் அல்லவா அவர் இருக்கிறார்!

.........

இதற்கிடையில், தூயவன் இல்லம்,

தூயவன் இல்லத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவலர்கள் அனைவரும் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார்கள். அவர்களை மயங்கச் செய்து விட்டு தான் சின்னசாமி வீட்டிற்குள் நுழைந்து இருக்க வேண்டும். தூயவன் மருத்துவரை அழைத்து அவர்களுக்கு மாற்று மருந்து கொடுக்க ஏற்பாடு செய்தான். அவர்களை ஓய்வெடுக்க சொல்லி விட்டு வீட்டினுள் வந்தான். அப்பொழுது பவித்ரா முதலுதவி பெட்டியுடன் மாயவனிடம் சென்று,

"அப்பா, உங்களுக்கு அடிபட்டிருக்கு. மருந்து போட்டு விடுறேன்" என்றாள்.

"பரவாயில்லம்மா அவ்வளவு ஒன்னும் பெரிய அடி இல்ல." என்றார் மாயவன்.

"இருக்கலாம், ஆனா, மருந்து போடுறதுனால நல்லது தானே?"

"அவருக்கு எப்படி அடிபட்டது?" என்றான் தூயவன் அவரை நோக்கி நகர்ந்தபடி.

"கன் வச்சி அப்பாவை சின்னசாமி அடிச்சிட்டான்"

"கன்னா? அவன் கைல கன் இருந்துதுன்னா, அவன் எப்படி அதை யூஸ் பண்ணாம போனான்?" என்று ஆச்சரியப்பட்டான் தூயவன்.

"அவன் அதை வெளியில எடுத்தான். அப்பா தான் அவன்கிட்ட சண்டை போட்டு, அவனை எல்லா புல்லட்டையும் சுட வச்சு, அந்த கன்னை காலி ஆக்கிட்டார்"

அதைக் கேட்டு திகைத்தான் தூயவன்.

"அப்பா மட்டும் அவன்கிட்ட சண்டை போடாம இருந்திருந்தா, சின்னசாமி நிச்சயம் அந்த கன்னை தனக்கு சாதகமா பயன்படுத்தி இருப்பான். எல்லாமே மாறி இருக்கும். ரொம்ப தேங்க்ஸ் பா" என்றாள் பவித்ரா.
அவள் தலையை அன்பாய் தொட்டார் மாயவன்.

பவித்ராவின் கையில் இருந்த முதலுதவி பெட்டியை வாங்கிக்கொண்டு மாயவனை அமருமாறு சைகை செய்தார் குணமதி. மறுபேச்சு கூறாமல் அமர்ந்தார் மாயவன். அமைதியாய் வந்து தூயவனின் பக்கத்தில் நின்று கொண்டாள் பவித்ரா. தன் பெற்றோரை பார்த்து புன்னகைத்தபடி நின்றிருந்தான் தூயவன். ஆன்ட்டி செப்டிக் திரவத்தை வைத்து அவரது காயத்தை சுத்தப்படுத்தி அவருக்கு மருந்து போட்டு விட்டார் குணமதி.

"தேங்க்ஸ் குணா" என்ற மாயவன்.

"என் மருமகளை காப்பாத்தினதுக்கு உங்களுக்கும் தேங்க்ஸ்" என்றார் முகத்தை இறுக்கமாய் வைத்துக்கொண்டு.

"அவ எனக்கும் மருமக தான். அவளை காப்பாத்துறது என்னோட கடமை. அதுக்காக நீ எனக்கு நன்றி சொல்ல வேண்டியதில்ல"

அவர்களுக்கு முன்னால் வந்து நின்ற தூயவன்,

"மாம், இன்னும் ஏன் அவர் மேல கோவமா இருக்கீங்க? பழசை மறந்துட்டு நிகழ்காலத்தில் கான்சன்ட்ரேட் பண்ணுங்க" என்றான்.

"அவரை மன்னிக்கிறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. எனக்கு தெரிய வேண்டியது ஒன்னு தான். இந்த மாற்றம் நிலையானதா இல்லையா? ஏன்னா, மறுபடி மறுபடி என்னால அவர்கிட்ட என்னோட உரிமைக்காக போராடிகிட்டு இருக்க முடியாது" என்றார்.

மாயவனை கேள்விக்குறியோடு பார்த்தான் தூயவன்.

"மாறுறதுக்கு இன்னும் என்ன மீதம் இருக்கு? நான் நிறைய தப்பு செஞ்சிருக்கேன். எனக்கு தெரியும், அதையெல்லாம் என்னால மாத்த முடியாது. ஆனா, அதிலிருந்து நான் கத்துக்கிட்டது ரொம்ப பெரிய பாடம். காலம் என் கண்ணை திறந்ததை நீங்க நம்பித்தான் ஆகணும். குடும்பம் தான் ஒரு மனுஷனுக்கு எல்லாமும். தன் குடும்பத்தோடு சேர்ந்து உட்கார்ந்து நிம்மதியா யார் ஒருத்தனால சாப்பிட முடியுதோ, அவன் தான் இந்த உலகத்திலேயே அதிர்ஷ்டக்காரன். நான் அதை புரிஞ்சிக்கிட்டேன். எனக்கு கடைசியா ஒரு சந்தர்ப்பம் கொடு. நம்ம ஃபேமிலில என்னையும் ஒருத்தனா ஏத்துக்கோங்க"

"மாம், நான் அவரை ஏத்துக்கணும்னு நினைக்கிறேன். ஏன்னா, உங்களுக்கும் அவருடைய துணை வேணும். அவருக்கும் உண்மை புரிஞ்சிருச்சு. அவர் இல்லாம உங்களால வாழ முடியும் அப்படின்னு நீங்க அவருக்கு நிரூபிச்சி காட்டி இருக்கீங்க. அது போதும், அவர் எப்பவும் எந்த தப்பும் செய்யாம இருக்க. அதனால, நீங்க தயங்க வேண்டிய அவசியம் இல்ல." என்று தன் தந்தையின் உதவிக்கு வந்தான் தூயவன்.

சரி என்று தலையசைத்து, அவர்களின் முகத்தில் புன்னகை வர காரணமானார் குணமதி.

"ஒரு வழியா நமக்குள்ள இருந்த அத்தனை பிரச்சனையும் சால்வ் ஆயிடுச்சு" என்று நிம்மதி பெருமூச்சு விட்டான் தூயவன்.

தூயவனின் சட்டையை லேசாய் பிடித்து இழுத்த பவித்ரா,

"உங்களுக்கு முன்னாடி போனாரே மாதேஷ் அங்கிள், அவர் நிலைமை என்ன ஆச்சு? அவரை திரும்பி வர சொல்லுங்க" என்றாள்.

"அவர் போகட்டும் விடு"

"ஏன்?"

"நான் சொன்னா அந்த மனுஷனுக்கு புரியாது. என்னை இங்கிருந்து வெளியே கொண்டு வரத்தான் அவ பொய் சொல்லி நாடகமாடினா அப்படிங்குற உண்மையை அவர் புரிஞ்சுக்கவே மாட்டார். நேர்ல போய் அவரே பார்த்து தெரிஞ்சுக்கட்டும். அப்போ தான் அவரோட பொண்ணு அவரையே ஏமாத்தி இருக்கான்னு அவருக்கு தெரியும்"

"எப்படி இருந்தாலும் போலீஸ் சஞ்சனாவை அரெஸ்ட் பண்ண விஷயம் அவருக்கு தெரிய வரும்"

"அதெல்லாம் விஷயமே இல்ல. அவரை பொறுத்த வரைக்கும் அவரோட பொண்ணு ரொம்ப நல்லவ. யார் எதை விதைச்சாங்களோ அதை அறுத்து தான் ஆகணும்"

அப்பொழுது தூயவனுக்கு நவுஷத்திடம் இருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்ற தூயவன்,

"சொல்லுங்க சார்" என்றான்.

"தூயவன், சஞ்சனாவை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கோம் அவளுடைய நிலைமை ரொம்ப மோசமா இருக்கு"

"சார், எதுக்கும் ஒரு தடவைக்கு இரண்டு தடவை அவளை செக் பண்ணிடுங்க. அவ ஒரு கிரிமினல். அவர் நடிப்பை பார்த்து ஏமாந்துறாதீங்க"

"இல்ல, தூயவன். நாங்க அவளை ஸ்கேன் பண்ணி பார்த்து, அதுக்கப்புறம் தான் கன்ஃபார்ம் பண்ணி இருக்கோம். அவ வாழ்நாள் முழுக்க படுத்த படுக்கையா இருக்க வேண்டியது தான்"

"என்ன சொல்றீங்க சார்? நிஜமாத்தான் சொல்றீங்களா?"

"ஆமாம், கீழே விழுந்ததுல, கல்லுல அடிபட்டு, அவ முதுகெலும்பு உடைஞ்சிருந்தா கூட அதை சரி பண்ணிடலாம். ஆனா அவ முதுகெலும்பை இறுக்க பிடிச்சிருந்த சவ்வு எல்லாம் கிழிஞ்சு போச்சு. இனிமே அதை சரி பண்றது அவ்வளவு சுலபம் இல்ல அப்படின்னு டாக்டர் சொல்லிட்டாங்க"

உறைந்து நின்றான் தூயவன். சஞ்சனா ஊனமடைந்து விட்டாள் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. தன் முன்னால் நின்றிருந்த தன் குடும்பத்தினரை பார்த்தவாறு மென்று விழுங்கினான்.

"என்ன ஆச்சு தூயா? ஏதாவது சீரியஸா?" என்றார் குணமதி.

நவ்ஷத் தன்னிடம் கூறிய விஷயத்தை அவர்களிடம் கூற, அவர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

"நீங்க சொல்றது உண்மையா?" என்றாள் பவித்ரா.

"டாக்டர்ஸ் ஸ்கேன் பண்ணி பார்த்து தான் அவ நிலைமையை கன்ஃபார்ம் பண்ணி இருக்காங்க"

"கர்மா எப்பவுமே எல்லாருக்கும் நல்ல படத்தை தான் சொல்லிக் கொடுத்தது. நம்ம தூயாவுக்கு ஆக்சிடென்ட் ஆனபோது, இதயமே இல்லாம நம்ம தூயவை அசிங்கப்படுத்தினா. இப்போ அவளுக்கு என்ன கிடைச்சிருக்கு பாத்தீங்களா? கடவுள் இருக்காரு" என்றார் குணமதி.

"நான் மாதேஷ் அங்கிளுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொல்றேன்" என்று அவருக்கு அழைப்பு விடுத்தான் தூயவன். ஆனால் அவரது கைபேசி ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்தது. அதனால் மீண்டும் நவ்ஷத்துக்கு ஃபோன் செய்து,

"மாதேஷ் அங்கிள் என்ன ஆனார்? ஏன் அவருடைய ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருக்கு?" என்றான்.

"இப்ப தான் எனக்கும் விஷயம் தெரிஞ்சது. அவர் போலீஸ்காரனை அடிச்சு காயப்படுத்தி இருக்காரு. அதனால அவரை போலீஸ் அரெஸ்ட் பண்ணி இருக்காங்க"

"என்ன சொல்றீங்க?"

"ஆமாம். அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போய் எஃப்ஐஆர் கூட ஃபைல் பண்ணிட்டாங்க"

"நம்மால எதுவும் செய்ய முடியாதா?"

"கேஸ் கோர்ட்டுக்கு வர்ற வரைக்கும் நம்மால ஒன்னும் செய்ய முடியாது. ஏன்னா, எஃப்ஐஆர் போட்டாச்சு"

"சரிங்க சார்" என்று அழைப்பை துண்டித்தான் தூயவன்.

அனைத்து பக்கங்களிலிருந்தும் பிரச்சினைகளால் மாதேஷ் சூழப்பட்டிருப்பதை எண்ணி வருத்தமடைந்தான் தூயவன். மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கும் தன் மகளுடன் கூட அவரால் இப்பொழுது இருக்க முடியாமல் போய்விட்டதே...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top