58 சமயோஜித புத்தி
58 சமயோஜித புத்தி
சின்னசாமியுடன் நின்றிருந்த சஞ்சனாவை பார்த்த பவித்ரா, அதிர்ச்சிக்கு உள்ளானாள். சின்னசாமி சென்னையில் இருக்கிறான், அதுவும் அவர்களது வீட்டில்...! சஞ்சனாவின் மோசமான புத்தி அவளுக்கு புரிந்து போனது. தூயவனை வீட்டில் இருந்து கிளப்புவதற்காக வகுக்கப்பட்ட திட்டம் என்பது அவளுக்கு தெரிந்து போனது. அவர்களது குறி தூயவன் அல்ல, அவள் தான்.
மாயவனை பிடித்து தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தான் சின்னசாமி.
"டேய், யார் நீ?" என்றார் மாயவன் கோபத்துடன்.
"எங்க அப்பாவை கல்யாணம் பண்ணிக்க இருந்தாளே உன் மருமக, அவளை கேளு" என்றான் சின்னசாமி.
அவன் கூறுவதை புரிந்து கொள்ளாமல் பவித்ராவை பார்த்தார் மாயவன்.
"இவன் தான் சின்னசாமி" என்றாள் பவித்ரா.
மாயவனும் குணமதியும் அதிர்ச்சி அடைந்தார்கள். தன் பல்லை கடித்துக் கொண்டு கோபமாய் சஞ்சனாவை பார்த்த குணமதி,
"ச்சி, நீ எல்லாம் ஒரு பொண்ணா? வெட்கம் கெட்ட நாயே? என் பிள்ளை உன்னை காப்பாத்த நினைச்சான். ஆனா நீ...? உன்னை மாதிரி ஒரு ஈனப் பிறவியை நான் பார்த்ததே இல்ல" என்று நெருப்பை உமிழ்ந்தார் குணமதி.
"உங்க பிள்ளையோட முட்டாள் தனத்துக்கு நான் பொறுப்பாக முடியாது" என்றாள் வெட்கமின்றி.
"எதுக்காக டி இங்க வந்த?"
"உங்ககிட்ட உண்மைய சொல்றதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. உங்க மருமகளை கூட்டிட்டு போக வந்தோம்"
"என்ன உளர்ற?"
"பெரியசாமி உயிருக்கு போராடிகிட்டு இருக்காரு. அதனால சின்னசாமி உங்க மருமகளை அவங்க அப்பாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறாரு. அவளை கல்யாணம் பண்ணி வச்சா அவர் பிழைச்சிடுவாருன்னு அவர் நினைக்கிறார்!
"ஆமாம், இவளோட ஜாதகம் கோடியில ஒன்னு. அது என் அப்பாவை காப்பாத்தும்"
"உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? அவ எங்களோட மருமக" என்று எரிந்து விழுந்தார் குணமதி.
"இருந்தா என்ன? அவளை விட நல்ல பொண்ணு உன் பிள்ளைக்கு கிடைக்க மாட்டாளா?"
"வேற யாரோ எதுக்கு? நான் தான் இருக்கேனே... நானே அவனை கல்யாணம் பண்ணிக்குவேன்" என்றாள் சஞ்சனா.
"உன் வாயை மூடு. இன்னொரு தடவை என் பிள்ளையை பத்தி பேசினா, உனக்கு மரியாதை கெட்டுப் போயிடும்" என்றார் குணமதி.
அவர் கூறியது தன்னை எள்ளளவும் பாதிக்கவில்லை என்பது போல் அசட்டையாய் நின்றிருந்தாள் சஞ்சனா.
"நான் சொன்னது மாதிரியே உன்னை இங்க கூட்டிகிட்டு வந்துட்டேன். உனக்கு வேண்டிய பொண்ணு இங்க இருக்கா. அவளை கூட்டிகிட்டு சென்னையை விட்டு கிளம்பி போ" என்றாள் சஞ்சனா.
"என் மருமகளை தொட்டா நடக்கிறதே வேற" என்று பவித்ராவின் முன்னாள் வந்து நின்றார் குணமதி. அவருக்கு முன்னால் வந்து நின்ற மாயவன்,
"நான் உயிரோடு இருக்கிற வரைக்கும், உன்னால பவித்ராவை தொட முடியாது" என்றார்.
"அப்படின்னா உன்னை கொல்றதைத் தவிர எனக்கு வேற வழி இல்ல" என்று தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்து நீட்டினான் சின்னசாமி.
அவன் கையை பற்றி மேலே உயர்த்தி,
"பவித்ரா, உன் ரூமுக்கு போய் கதவை லாக் பண்ணிக்கோ" என்று கத்தினார் மாயவன்.
தனது பதற்றத்தை சிறிதேனும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் நின்றாள் பவித்ரா. குணமதி சஞ்சனாவை திட்டி தீர்த்துக் கொண்டிருந்தபோது, அந்த சூழ்நிலையை எப்படி கையாள வேண்டும் என்பதை அவள் ஏற்கனவே திட்டமிட்டுவிட்டாள்.
சின்னசாமியின் கையை அழுத்தி, துப்பாக்கியின் விசையை மாயவன் தொடர்ந்து அழுத்தச் செய்ய, அந்த துப்பாக்கியில் இருந்த குண்டுகள் அனைத்தும் வெடித்தன. கோபத்தில் அந்த துப்பாக்கியால் மாயவனை தாக்கினான் சின்னசாமி.
ரத்தம் வழியும் தன் நெற்றியை பிடித்தபடி கீழே சரிந்தார் மாயவன். அவரை பிடித்து தள்ளிவிட்டு பவித்ராவை நோக்கி முன்னேறினான் சின்னசாமி.
"பவித்ரா, ஓடிடு" என்றார் மாயவன்.
பவித்ரா அங்கிருந்து ஓடினாள் அவளை தடுத்து நிறுத்த சஞ்சனா முயன்ற போது, சஞ்சனாவின் தலைமுடியை பற்றி அவளை பிடித்து இழுத்து கீழே தள்ளினார் குணமதி. ஆனாலும் தன்னை சமாளித்துக் கொண்டாள் சஞ்சனா.
தனது அறைக்குச் செல்லாமல் சமையலறையை நோக்கி பவித்ரா ஓடுவதை பார்த்து குழப்பம் அடைந்தார் மாயவன்.
"பவித்ரா, நான் உன்னை உன்னோட ரூமுக்கு போக சொன்னேன்" என்று கத்தினார்.
"அவளுக்கு ஏத்த இடத்துக்கு தான் அவ போறா" என்று அவளை எள்ளி நகையாடினாள் சஞ்சனா.
அவளை துரத்திக் கொண்டு சென்றான் சின்னசாமி. பவித்ரா சமையல் அறைக்கு வந்த போது, அடுப்பில் பால் கொதித்துக் கொண்டிருந்தது. எதைப் பற்றியும் யோசிக்காமல், அதை எடுத்து சின்னசாமியின் மீது வீசினாள் பவித்ரா. அடுத்த நொடி அந்த வீடு சின்னசாமியின் அலறலால் அதிர்ந்தது. அங்கிருந்தவர்களின் செவிப்பறைகள் கிழிந்தன. சின்னசாமிக்கு என்ன ஆயிற்று என்று அவர்களுக்கு புரியவில்லை. சின்னசாமியை பின்தொடர்ந்து சஞ்சனாவும் சமையலறைக்கு வந்தாள். சரியாக அதே நேரம் மிளகாய் பொடியை அள்ளி அவள் மீது வீசினாள் பவித்ரா. அது சஞ்சனாவை தையாதக்கா என்று குதிக்க வைத்தது. மிளகாய் பொடியின் காரத்தால் அவள் முகமும் கண்ணும் பற்றி எரிந்தது. தன் கையில் மீதமிருந்த மிளகாய்ப்பொடியை சின்னசாமியின் மீது தூவினாள் பவித்ரா, அவன் தன்னை சமாளித்துக் கொள்ள சந்தர்ப்பமே வழங்காமல். சமையலறைக்கு ஓடிவந்த குணமதியும் மாயவனும் அங்கு என்ன நடந்தது என்பதை புரிந்து கொண்டார்கள். அங்கிருந்த ஒரு துண்டை எடுத்து, சின்னசாமியின் கைகளை பின்புறமாக வைத்து கட்டினார் மாயவன். அவருக்கு உதவினார் குணமதி.
அப்பொழுது தூயவன் அவசரமாய் சமையலறைக்குள் நுழைவதை அவர்கள் பார்த்தார்கள். அவனை நோக்கி ஓடிச் சென்றாள் பவித்ரா.
"என்னங்க... சின்னசாமி..."
"நான் எல்லாத்தையும் பாத்துக்கிட்டு தான் வரேன்"
"எப்படி நீங்க இங்க வந்தீங்க?"
"நான் மாதேஷ் அங்கிள் கூட போகல. ஏன்னா, அவங்க டார்கெட் நீயா தான் இருப்பேன்னு எனக்கு சந்தேகம் இருந்தது. அதனால நம்ம டிரைவரை காரை ஓட்டிக்கிட்டு போக சொல்லிட்டு பின்பக்க வழியா நான் வீட்டுக்குள்ள வந்தேன். அப்ப தான் இவன் உன்னை துரத்திகிட்டு வர்றதை பார்த்தேன். நீ ரொம்ப நல்ல வேலை செஞ்ச"
"எனக்கு ரொம்ப நர்வசா இருக்கு"
"ஏன்? நீ எவ்வளவு பெரிய கிரிமினலை பிடிச்சிருக்க தெரியுமா?" உன்னை நினைச்சு நீ பெருமைப்படு"
"உங்க யாரையும் நான் உயிரோட விட மாட்டேன்" என்று உறுமினான் சின்னசாமி.
"முதல்ல நீ உன்னை காப்பாத்திக்கோ" என்றான் தூயவன்.
அப்பொழுது காவலர்களுடன் நவ்ஷத் ஓடி வந்தார். முகம்முழுக்க கொப்புளங்களோடு நின்றிருந்த சின்னசாமியை பார்த்த அவர், அது யார் என்று புரியாமல் திகைத்தார்.
"சின்னசாமி... கூட்டிக்கிட்டு போங்க, சார்" என்றான் தூயவன்.
அங்கிருந்து மெல்ல நழுவி சென்றாள் சஞ்சனா. அவள் ஓடுவதை பார்த்த பவித்ரா,
"சஞ்சனா தப்பிச்சு ஓடுறா" என்றாள்.
"அவளைப் பிடிங்க" என்றார் நவ்ஷாத்.
சில காவலர்கள் அவளை பின்தொடர்ந்து ஓடினார்கள். சின்னசாமியை விலங்கால் பிணைத்து அங்கிருந்து அழைத்துச் சென்றார்கள்.
நுழைவு வாயிலையே கவலையோடு பார்த்துக் கொண்டிருந்த பவித்ராவை பார்த்த நவ்ஷாத்,
"கவலைப்படாதீங்க மேடம், சஞ்சனா தப்பிக்க முடியாது. வெளியில போலீஸ்காரங்க இருக்காங்க" என்றார்.
அதைக் கேட்டு நிம்மதி பெருமூச்சு விட்டாள் பவித்ரா.
"தேங்க்யூ மிஸஸ் தூயவன். நீங்க இவனை பிடிக்க எங்களுக்கு பெரிய ஹெல்ப் பண்ணி இருக்கீங்க" என்றார்.
தனது பதற்றத்தை மறைத்துக் கொண்டு செயற்கையாய் புன்னகைத்தாள் பவித்ரா.
"நீ சமையலறையை நோக்கி ஓடினதை பார்த்து நான் பயந்து போயிட்டேன். ஆனா, நீ கலக்கிட்ட" என்றார் மாயவன்.
"கிச்சனுக்கு ஓடிப் போகணும்னு அவங்க எடுத்த முடிவு ரொம்ப சரியானது. சமையலறை அப்படிங்கறது, ஒரு படைத்தளம் மாதிரி. அங்க தன்னை காப்பாத்திக்க ஒரு பொண்ணுக்கு தேவையான எல்லா விஷயங்களும் இருக்கு. மிளகாய் பொடி, கத்தி, அரவை கல்லு... இதை பொம்பளைங்க புரிஞ்சுக்கணும். ஏதாவது ஆபத்து வரும்போது, சமையலறையை நோக்கி போனா தன்னை அவங்களால காப்பாத்திக்க முடியும்." என்றார் நவ்ஷாத்.
அவளது தோள்களை பெருமையுடன் சுற்றி வளைத்துக் கொண்ட தூயவன்,
"நீங்க சொல்றது உண்மை தான், சார். ஹீரோ வந்து தன்னை காப்பாத்தணும்னு பொம்பளைங்க காத்திருக்கக் கூடாது. அவங்களே ஒரு சூப்பர் ஹீரோ தான் அப்படிங்கறதை பொண்ணுங்க உணரணும்" என்றான் புன்னகையோடு.
"சரியான சந்தர்ப்பம் வரும் போது, எல்லா பொண்ணுங்களுமே சூப்பர் ஹீரோவா நிச்சயமா மாறுவாங்க" என்றார் குணமதி.
மென்மையாய் புன்னகைத்தாள் பவித்ரா.
"வழக்கமா, பதட்டமா இருக்கும் போது யாருடைய மூளையும் வேலை செய்யவே செய்யாது. ஆனா, என் மருமகளுடைய மூளை பதட்டத்தில் தான் ரொம்ப பிரைட்டா வேலை செஞ்சிருக்கு. இது யார்கிட்டயும் இல்லாத ஒரு தனித்திறமை" என்று தன் மருமகளை புகழ்ந்தார் குணமதி.
"நீங்க ரொம்ப சொல்றது ரொம்ப சரி" என்றார் நவ்ஷாத்.
"எனக்கு ஃபோன் பண்ணாமலேயே இந்த பிரச்சனையை சமாளிக்க முடியும்னு நீ எப்படி நினைச்ச, பவித்ரா?" என்றான் தூயவன்.
"நீங்க மாதேஷ் அங்கிள் கூட போயிட்டீங்க. அப்படி இருக்கும் போது, உங்களுக்கு ஃபோன் பண்றதுல என்ன பிரயோஜனம் இருக்கும்? நீங்க வீடு வந்து சேர்றதுக்கு முன்னாடி, சின்னசாமி வந்த வேலையை முடிச்சிடுவான். அதனால தான் நானே அவனை தடுத்து நிறுத்தணும்னு முடிவு பண்னேன். அதே நேரம், அம்மாவும் சஞ்சனாவை திட்ட ஆரம்பிச்சாங்க. அந்த சின்ன கேப்ல என்ன செய்யணும்னு என்னால யோசிக்க முடிஞ்சது. என்னோட ரூமுக்கு போய் ஒளிஞ்சிக்கறதால எந்த பிரயோஜனமும் இருக்காது. ஏன்னா, சின்னசாமி நிச்சயம் கதவை உடைச்சி திறந்திருப்பான். அதனால நான் கிச்சனுக்கு போகணும்னு முடிவு பண்ணினேன்"
"உன்னோட யோசனை பிரமாதமா வேலை செஞ்சிருக்கு" தன் மனைவியை புகழ்ந்தான்.
ஆம் என்று தலையசைத்தாள் பவித்ரா.
"உங்க ஹெல்ப்புக்கு ரொம்ப தேங்க்ஸ். உங்களால தான் எங்களால சின்னசாமியை பிடிக்க முடிஞ்சிது" என்று தூயவனுடன் கைகுலுக்கினார் நவ்ஷாத்.
"இட்ஸ் மை பிளஷர், சார்" என்றான் தூயவன்.
பவித்ராவுக்கும் நன்றி கூறிவிட்டு அங்கிருந்து சென்றார் நவ்ஷத்.
இதற்கிடையில்...
வெளியே வந்த சஞ்சனா, காவலர்களின் கண்களில் படாமல் மறைந்து மறைந்து தலை வாசலுக்கு வந்தாள். மதில் சுவரின் மீது ஒரு ஏணி சாய்த்து வைக்கப்பட்டிருந்ததை கவனித்தாள். அதில் ஏறி வெளியே குதித்து விடலாம் என்பது அவளது திட்டம். அவள் அதில் ஏறி கீழே குதிக்க முயன்ற போது, அவளது உடை அந்த ஏணியின் நுனியில் மாட்டிக் கொண்டது. அவள் தனது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாய் கீழே விழுந்தாள். கீழே கிடந்த ஒரு கல்லில் அவளது முதுகெலும்பு மோதிக்கொண்டது. வலி தாங்க முடியாமல் கதறினாள் சஞ்சனா. அவளது அலறலை கேட்டு அங்கிருந்த காவலர்கள் ஓடிச் சென்றார்கள். அவளை தூக்கி நிற்க வைக்க முயன்ற போது அவளால் அது முடியவில்லை. அவளது அலறலை பற்றி கவலைப்படாமல் இரண்டு பேர் இரண்டு புறமும் அவளைப் பிடித்துக் இழுத்து வந்தார்கள்.
அவள் உட்காரவே சிரமப்பட்டதை கவனித்தார் நவ்ஷத்.
"அவளுக்கு விலங்கு போட்டு ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போங்க" என்றார்.
அவளுக்கான சிகிச்சை துவங்கப்பட்டது. மருத்துவர்கள் அவளை சோதனை செய்து, சோதனை முடிவுகளை சமர்ப்பித்தார்கள்.
*அவளது முதுகெலும்பு நொறுங்கியதோடு மட்டுமல்லாமல் அதில் இருந்த சவ்வும் கிழிந்து போனதால் அவள் நடக்கும் திறனை இழந்துவிட்டாள். வாழ்நாள் முழுக்க அவள் படுத்த படுக்கையாக தான் இருக்க வேண்டும்* என்று கூறியது அந்த முடிவு.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top