57 சேர வேண்டிய இடம் நோக்கி

57 சேர வேண்டிய இடம் நோக்கி

மாயவனை பிடித்து தள்ளிவிட்டு உள்ளே நுழைந்த மாதேஷ்,

"தூ...யா..." என்று கத்தினார்.

அவரது குரலைக் கேட்டு திடுகிட்ட தூயவன், பவித்ராவை கேள்விக்குறியோடு பார்த்தான்.

"அது யாருங்க?" என்றாள் பவித்ரா குழப்பத்தோடு.

"குரலை கேட்டா மாதேஷ் அங்கிள் மாதிரி இருக்கு"

"அவர் எதுக்காக உங்களை கூப்பிடுறாரு?"

"போய் பாத்துட்டு வரேன்" என்று தன் அறையை விட்டு வெளியே வந்தான். பவித்ரா அவனை பின் தொடர்ந்து சென்றாள்.

மாதேஷை மாயவன் தடுத்து நிறுத்திக் கொண்டிருப்பதை பார்த்த அவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். மாதேஷின் குரல் கேட்டு குணமதியும் அங்கு வந்தார். தூயவன் படி இறங்கி வருவதை பார்த்த மாதேஷ், மாயவனை தள்ளிவிட்டு அவனை நோக்கி ஓடிச் சென்றார்.

"நீங்க இங்க என்ன பண்றீங்க? எதுக்காக என் பெயரை சொல்லி கத்துனீங்க?"

"எனக்கு உன் ஹெல்ப் வேணும். தயவுசெய்து முடியாதுன்னு மட்டும் சொல்லிடாத"

"என்னோட ஹெல்ப்பா? எதுக்கு?"

"சஞ்சனாவை சின்னசாமி கடத்திக்கிட்டு போயிட்டான்"

தன் கண்களை சுருக்கினான் தூயவன்.

"அவ சின்னசாமியோட க்ரைம் பார்ட்னர் கிடையாது. போலீஸ் தான் அப்படி நினைச்சுக்கிட்டு இருக்காங்க. சின்னசாமி தான் அப்படி ஒரு இமேஜை கிரியேட் பண்ணி அவளை கடத்திக்கிட்டு போயிட்டான். அவ உன்னோட சேர்ந்து போலீஸ்ல தன்னை மாட்டி விட்டதா நினைச்சுகிட்டு இருக்கான். தயவு செஞ்சு என் பொண்ணை காப்பாத்த எனக்கு ஹெல்ப் பண்ணு"

"போலீஸ் கிட்ட போகாம எதுக்காக இங்க வந்திருக்கீங்க?" என்றார் குணமதி.

"நான் போலீசுக்கு போனா அவங்க சஞ்சனாவை கொன்னுடுவாங்க" என்றார் மாதேஷ்.

"என் பையன் ஒன்னும் சூப்பர் ஹீரோ கிடையாது, எல்லாரையும் அடிச்சு போட்டுட்டு உங்க பொண்ணை காப்பாத்திட்டு வர்றதுக்கு... உங்க பொண்ண காப்பாத்த என் பையன் அவன் வாழ்க்கையை ஆபத்தில் போடணுமா?" என்றார் கோபமாய்.

"தூயவனுக்கு மட்டும் தான் சின்னசாமியை எப்படி டாக்கில் பண்ணணும்னு தெரியும். அதனால தான் நான் அவனோட ஹெல்ப்பை கேட்கிறேன்."

"இல்ல நான் என் பையனை அனுப்ப முடியாது"

தூயவனின் கரத்தை பற்றிக்கொண்ட மாதேஷ்,

"தயவுசெஞ்சு முடியாதுன்னு சொல்லாத. எனக்கு உன்னை விட்டா வேற யாரும் இல்ல. சந்தோஷ் இங்க இருந்திருந்தா, நான் உன்னோட ஹெல்ப் கேட்க மாட்டேன்!

குணமதி ஏதோ சொல்ல முயல அவரை தடுத்து நிறுத்தினான் தூயவன்.

"சின்னசாமி தான் சஞ்சனாவை கிட்னா பண்ணான்னு உங்களுக்கு எப்படி தெரியும்?"

"அவ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எனக்கு போன் பண்ணி இருந்தா. யார்கிட்ட இருந்தோ அவளுக்கு அந்த ஃபோன் கிடைச்சிருக்கு போலிருக்கு"

"அவ உங்களுக்கு மதுரையிலிருந்து ஃபோன் பண்ணாளா?"

"இல்ல, அவ இப்போ சென்னைல தான் இருக்கா"

"என்ன சொல்றீங்க? சென்னைலயா?" என்றான் நம்ப முடியாமல்.

"ஆமாம் அவங்க இன்னும் சென்னையில தான் இருக்காங்க"

"அவ எந்த நம்பர்ல இருந்து உங்களுக்கு ஃபோன் பண்ணா?"

கைபேசியை எடுத்து தனக்கு அழைப்பு வந்த அந்த எண்ணை தூயவனிடம் காட்டினார். அதை மனப்பாடம் செய்வதில் அவனுக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. அந்த எண்ணுக்கு அவன் அழைப்பு விடுக்க நினைத்தபோது,

"வேண்டாம் தூயவன், அவ எந்த கண்டிஷன்ல இருக்களோ தெரியல. யாராவது அவ கூட இருந்தா அவ மாட்டிக்குவா. ஃபோன் பண்ண வேண்டாம்னு என்கிட்ட கெஞ்சினா. ப்ளீஸ் ஏதாவது செய் தூயவன்"

"நான் என்ன செய்யணும்?"

"அவ எனக்கு மறுபடியும் ஃபோன் பண்றேன்னு சொல்லியிருக்கா. அவ எங்க இருக்கான்னு எனக்கு நிச்சயம் க்ளூ கொடுப்பான்னு நினைக்கிறேன்"

சரி என்று தலையசைத்தான் தூயவன்.

"நீங்க அவளோட காலுக்காக வெயிட் பண்ணுங்க. நான் போய் ஃப்ரெஷ் ஆயிட்டு வரேன்" என்று தன் அறைக்கு நடந்தான்.

தனது அறைக்கு வந்த பிறகு அவன் மனனம் செய்த எண்ணை நௌஷத்துக்கு அனுப்பி வைத்து, பிறகு அவருக்கு ஃபோன் செய்ய, அவர் அந்த அழைப்பை ஏற்றார்.

"சொல்லுங்க தூயவன்"

"ஏசி சார், சஞ்சனாவோட அப்பா இங்க வந்திருக்காரு. அவளை காப்பாத்த என்னோட ஹெல்ப்பை கேட்டிருக்கிறார்" என்று விவரங்களை அவரிடம் கூறினான் தூயவன்.

"அவருக்கு என்ன பைத்தியமா? போலீஸ் கிட்ட போகாம அவர் ஏன் உங்ககிட்ட வந்திருக்காரு?" என்றார் நவ்ஷாத்.

"அது தான் சார் எனக்கும் சந்தேகமா இருக்கு. நீங்க யாரை சந்தேகப்படுறீங்க?"

"சஞ்சனாவைத் தான்"

"என்னன்னு சந்தேகப்படுறீங்க?"

"அவ என்னை மடக்கி பிடிக்க ஏதோ பிளான் பண்றாளோன்னு எனக்கு தோணுது"

"நான் இப்ப என்ன செய்யணும்?"

"நான் ஒரு ஃபோன் நம்பரை உங்களுக்கு அனுப்பி இருக்கேன். அந்த நம்பர்ல இருந்து தான் சஞ்சனா பேசியிருக்கா. அந்த ஃபோனோட சிக்னல் ரேஞ்சை ட்ராக் பண்ணி பாருங்க. அவங்க அப்பாவுக்கு ஃபோன் பண்ணும் போது, சிக்னல் எங்க இருந்ததுன்னு செக் பண்ணுங்க. அவ நிச்சயம் மாதேஷ் அங்கிளை மறுபடியும் ஃபோன் பண்ணி கூப்பிடுவா"

"அதை நீங்க என்கிட்ட விடுங்க. நான் பார்த்துக்கிறேன்" என்று அழைப்பை துண்டித்தார் நவ்ஷாத்.

அவனுக்கு பின்னால் நின்றிருந்த பவித்ராவை பார்த்த தூயவன்,

"நான் அவளை நம்பல" என்றான்.

"நீங்க போகணும்னு அவசியமா?" என்றாள் கவலையோடு.

"நான் நிச்சயம் தனியா போக மாட்டேன். போலிஸோட தான் போவேன்"

"ஜாக்கிரதையா இருங்க. சின்னசாமி ரொம்ப..."

"ஆபத்தானவன்னு சொல்றியா?"

"ஆமாம்"

"உன் புருஷனும் குறைஞ்சவன் இல்ல. அவனும் ஆபத்தானவன் தான்" என்று சிரித்தான்.

"எனக்கு ரொம்ப பயமா இருக்கு" என்று அவனை அணைத்துக் கொண்டாள்.

"ரிலாக்ஸ்"

"அவங்களுடைய பிளான் என்னன்னு நமக்கு தெரியாதுல்ல..."

"உண்மை தான். ஆனா, நம்ம பிளான் என்னன்னு அவங்களுக்கும் தெரியாதுல்ல?"

அவன் பேசிக் கொண்டிருந்த அதே நேரம் அவனது கைபேசி மணி ஒலித்தது. நவ்ஷாத் தான் அவனுக்கு ஃபோன் செய்தார்.

"தூயவன், நீங்க சொன்னது சரி. சஞ்சனா சொன்னது பொய்" என்றார்.

"என்ன சார் சொல்றீங்க?"

"அவ சென்னையில இல்ல. மதுரையில இருந்து சென்னைக்கு வர்ற வழியில இருக்கா"

"நிஜமா தான் சொல்றீங்களா?"

"ஆமாம். அவள் மாதேஷுக்கு மதுரையில் இருந்து தான் ஃபோன் பண்ணியிருக்கா. நாங்க அவ ஃபோன் சிக்னலை டிராக் பண்ணிக்கிட்டு இருக்கோம். அவ சென்னைக்கு வந்து சேர குறைஞ்சது மூணு மணி நேரம் ஆகும்"

"அப்படின்னா எதுக்காக அவ சென்னையில இருக்கேன்னு சொல்லணும்?"

"சின்னசாமி தான் அவளோட சேர்ந்து ஏதோ திட்டம் போடுகிறான்னு எனக்கு சந்தேகமா இருக்கு"

அவள் என்ன செய்ய முயல்கிறாள் என்று தூயவனுக்கு புரியவில்லை.

"சார் நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீங்களா? "

"என்ன செய்யணும்?"

அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை அவரிடம் கூறினான் தூயவன். அதற்கு நௌஷாட் ஒப்புக்கொண்டார்.

"நான் உங்களுக்கு ஃபோன் பண்ண முடியாது. மாதேஷ் அங்கிள் என் கூட இருப்பாரு. நான் எல்லா விவரத்தையும் என் வைஃப் மூலமா உங்களுக்கு கன்வே பண்றேன். நான் அவளோட நம்பரை உங்களுக்கு அனுப்புறேன். நடக்கிறதை அவ உங்களுக்கு சொல்லிக்கிட்டு இருப்பா"

"அப்படின்னா, என்னை கான்பிரன்ஸ் கால்ல கனெக்ட் பண்ண சொல்லுங்க"

"இதுவும் நல்ல ஐடியா தான்" என்று அழைப்பை துண்டித்த தூயவன், பவித்ராவை பார்த்து,

"ஒவ்வொரு பத்து நிமிஷத்துக்கும் எனக்கு கால் பண்ணிக்கிட்டே இரு. கான்ஃபரன்ஸ் கால்ல நவுஷாத்தையும் கனெக்ட் பண்ணு" என்றான்.

"சரி"

"அலர்ட்டா இரு"

நவுஷாத்தின் எண்ணை பவித்ராவுக்கு அனுப்பி வைத்தான் தூயவன்.

"அவரோட நம்பரை சேவ் பண்ணிக்கோ. அது எப்பவுமே உனக்கு ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்"

"ம்ம்ம்..."

பவித்ராவுடன் தரைதளம் வந்தான் தூயவன்.

"நீங்க ஏதாவது சாப்பிட்டீங்களா?" என்றான் மாதேஷிடம்.

அவர் இல்லை என்று தலையசைத்தார்.

"ஏதாவது சாப்பிடுங்க. அவ எப்ப ஃபோன் பண்ணுவாள்னு தெரியல" என்றான். ஏனென்றால் நிச்சயம் அவள் மாதேஷுக்கு ஃபோன் செய்ய குறைந்தது 3 மணி நேரத்திற்கு மேலாவது ஆகும் என்று அவனுக்கு தெரியும்.

அவன் எதிர்பார்த்தது போலவே நான்கு மணி நேரம் கழித்து அவனுக்கு ஃபோன் செய்தாள் சஞ்சனா. அந்த அழைப்பை ஏற்று ஸ்பீக்கரை ஆன் செய்தார் மாதேஷ்.

"சஞ்சு, நீ எங்க இருக்க?"

"டாட், சென்னை ஏர்போர்ட் பக்கத்துல ஒரு ரெஸ்ட்ரிக்டட் ஃபாரஸ்ட் இருக்கு. நாங்க அங்க தான் இருக்கோம். தயவு செய்து வந்து என்னை காப்பாத்துங்க. தூயவனையும் கூட்டிகிட்டு வாங்க"

மாதேஷ் தூயவனை பார்க்க, அவன் சரி என்று தலையசைத்தான்.

"தூயவனும் என் கூட வரான். நீ கவலைப்படாதே. என் கூட வர அவன் ஒத்துக்கிட்டான்"

"தேங்க்யூ டாட்" என்று அழைப்பை துண்டித்தாள் சஞ்சனா.

"தூயா, தயவு செஞ்சு போகாதே" என்றார் மாயவன்.

"ஆமாம், தூயா, நம்ம அந்த பொண்ணை பத்தி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்ல" என்று மாதேஷை பார்த்து முறைத்தபடி கூறினார் குணமதி.

"மாம், நான் இதை சஞ்சனாவுக்காக மட்டும் செய்யல. நமக்காகவும் செய்றேன். ஏன்னா, சின்னசாமி நெருப்பு மாதிரி. அதுல மிச்சம் வைக்கிறது நமக்கு என்னைக்குமே ஆபத்து. அது எப்ப வேணாலும் நம்மளை எரிக்கும்" என்றான்.

மென்று விழுங்கினார் குணமதி.

"நான் ஏற்கனவே தேவையான அரேஞ்ச்மெண்ட்ஸ் எல்லாத்தையும் செஞ்சுட்டேன். பவித்ரா உங்ககிட்ட அதை பத்தி சொல்லுவா" என்றான்.

"நான் உங்களுக்கு அடிக்கடி ஃபோன் பண்ணிக்கிட்டே இருப்பேன். தயவு செஞ்சு என் காலை மட்டும் அட்டென்ட் பண்ணுங்க" என்று மாதேஷின் முன்னாள் வேண்டுமென்றே கூறினாள் பவித்ரா. அப்பொழுது தானே அவருக்கு சந்தேகம் வராது!

"நான் எந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும், உன்னோட காலை அட்டென்ட் பண்ணுவேன்" என்று கூறிய தூயவன், மாதேஷுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றான்.

"அங்கிள் நீங்க முன்னாடி போங்க. நான் அம்பது மீட்டர் டிஸ்டன்ஸ் விட்டு உங்களை ஃபாலோ பண்ணிக்கிட்டு வரேன். அப்போ தான் சின்னசாமிக்கு சந்தேகம் வராது"

சரி என்று கூறிவிட்டு தனது காரை செலுத்த துவங்கினார் மாதேஷ். சற்று தொலைவு சென்ற பிறகு தன்னை தூயவன் தொடர்ந்து வருகிறான் என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டார். அவனது கார் தன்னை பின்தொடர்வதை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டார்.

"தூயா போறதுல எனக்கு சுத்தமா விருப்பமே இல்ல" என்றார் குணமதி

"அம்மா, அவர் தனியா போகல. போலீஸ் அவரை ஃபாலோ பண்ணிக்கிட்டு தான் இருக்காங்க. சஞ்சனாவோட ஃபோனையும் அவங்க ட்ராக் பண்ணிட்டு இருக்காங்க. நம்ம கிட்ட அவ பேசினதை கூட அவங்க கேட்டிருப்பாங்க" என்று பவித்ரா சொன்னதை கேட்டு நிம்மதி அடைந்தார் குணமதி.

"நீங்க அவரை குறைச்சி எடை போடாதீங்கம்மா. அவர் ரொம்ப புத்திசாலி" என்று பவித்ரா கூறவும் புன்னகை புரிந்தார் குணமதி.

மாயவன் ஏதோ ஆழமா யோசித்துக் கொண்டிருப்பதை பார்த்த அவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"அவர் மனசுல என்ன ஓடிக்கிட்டு இருக்குன்னு தெரியல"

"அவர் மாதேஷ் அங்கிள் கூட போனதுல அப்பாவுக்கு விருப்பமில்ல" என்றாள். 

"இப்பவாவது அவருடைய மூளை சரியான வழியில யோசிக்க ஆரம்பிச்சதே..." என்றார் குணமதி.

அப்பொழுது பவித்ராவுக்கு நௌஷாத்திடமிருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்றார் அவர்.

"மேடம், சீக்கிரமா என்னை தூயவனோட கனெக்ட் பண்ணுங்க" என்றார் அவசரமாய்.

"ஏதாவது பிரச்சனையா சார்?" என்றாள்.

"ஆமாம். சஞ்சனா ஏர்போர்ட்டுக்கு பக்கத்துல இருக்குற ரிசரவ் ஃபாரஸ்ட்டை நோக்கி போகல. அவ உங்க வீட்டுக்கு தான் வந்துகிட்டு இருக்கா" என்றார் பதற்றத்துடன்.

"என்ன சார் சொல்றீங்க?"

"ஆமாம். நீங்க ஜாக்கிரதையா இருங்க"

"நான் அவருக்கு அப்புறமா கால் பண்றேன்"

சரியாய் அதேநேரம் அழைப்பு மணியின் ஓசை கேட்டது. மாயவன் ஓடிச்சென்று கதவை திறந்தார். அங்கு சஞ்சனாவுடன் நின்றிருந்தான் சின்னசாமி.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top