55 யோசனையில் தூயவன்
55 யோசனையில் தூயவன்
தூயவனும் பவித்ராவும் தங்கள் திருமணத்திற்கு வந்திருந்த சின்னசாமியை பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்தார்கள்.
"இவன் தான் சின்னசாமியா?" என்று அதிர்ச்சியோடு கேட்டார் குணமதி.
"ஆமாம் மா. இவன் தான் சின்னசாமி. ஆனா மாறுவேஷத்துல இருக்கான்" என்றாள் பவித்ரா.
ஆழ்ந்த யோசனையில் இருந்த தூயவனை பார்த்த குணமதி,
"நீ என்ன யோசிக்கிற தூயா?" என்றார்.
"அவனை பத்தி தான் யோசிச்சுகிட்டு இருக்கேன். அவன் எதுக்காக எங்க கல்யாணத்துக்கு வந்தான்? ஒருவேளை அங்கிருந்து பவித்ராவை கடத்திக்கிட்டு போற எண்ணம் இருந்திருக்குமா?"
"இருக்கலாம்... சஞ்சனா தான் அவனை வர சொல்லி இருப்பாள்னு நினைக்கிறேன்"
"நான் அப்படி நினைக்கல"
"ஏன்?"
"நம்ம கல்யாணத்துல செஞ்சிருந்த போலீஸ் புரொடக்ஷன் பத்தி அவளுக்கு நல்லாவே தெரியும். அப்படி இருக்கும் போது, அவ நிச்சயமா ரிஸ்க் எடுத்திருக்க மாட்டா. உண்மையை சொல்லப் போனா, அங்க வராதேன்னு அவ அவனை வார்ன் பண்ணி தான் இருப்பா... ஒருவேளை போலீஸ் சந்தேகப்பட்ட படி அவ அவனோட க்ரைம் பார்ட்னரா இருந்திருந்தா..."
"நீ என்ன சொல்ற? அவங்க ரெண்டு பேரும் கூட்டாளிங்கன்னு நான் நினைக்கல"
"ஆனா சின்னசாமி, அவ தன்னோட பார்ட்னர்னு எழுதி இருந்தானே"
"சின்னசாமி சொல்ற எல்லாமே உண்மையா இருக்கணும்னு அவசியம் இல்லையே! அப்படியே இருந்தாலும், போலீசுக்கு எந்த ஒரு குறிப்பும் கொடுக்காமலேயே அவன் அவளை விடுவிச்சிருக்க முடியுமே... அவன் போலீசுக்கு முன்னாடி வராம இருந்திருந்தா, அவளை கடத்திக்கிட்டு போனது யாருன்னு கண்டுபிடிக்க போலீஸ் ரொம்ப சிரமப்பட்டு இருப்பாங்க. அப்படி இருக்கும்போது, அவனே வலிய வந்து அவங்க ரெண்டு பேருக்கும் இடையில தொடர்பு இருக்குன்னு எதுக்காக எழுதி வச்சிட்டு போகணும்?"
"சின்னசாமி ஆபத்தானவன் மட்டுமில்ல. ரொம்ப பிடிவாத காரனும் கூட. சஞ்சனாவோட எச்சரிக்கையை அவன் உதாசீனப்படுத்தி இருக்கலாம். அவன் கல்யாணத்துக்கு வந்தான் அப்படிங்கிறதுக்காக மட்டுமே நீ ஏன் இவ்வளவு யோசிச்சிக்கிட்டிருக்க?"
"இருக்கலாம்... அதுக்கும் சாத்தியம் இருக்கு. ஆனா..." என்று இழுத்தான் தூயவன்.
"அவர் நினைக்கிறது தப்பில்லம்மா. நம்ம போலீஸ் யோசிக்கிற மாதிரி யோசிக்க கூடாது. ஏன்னா போலீசை விட நமக்கு சின்னசாமியை பத்தி நல்லாத் தெரியும். அவன் வேணும்னே சஞ்சனாவை இந்த விஷயத்துல இழுத்துவிட்டு அவளை ஒரு கிரிமினல் மாதிரி போலீஸ் கண்ல காட்டி இருக்கணும்"
"அவ கிரிமினல் தானே?" என்றார் குணமதி.
"சந்தேகம் இல்லாம அவ கிரிமினல் தான். ஆனா, அவ சட்டதால தான் தண்டிக்கப்படணுமே தவிர, சின்னசாமியால கூடாது"
"அவன் அவளை கடத்திக்கிட்டு போனது, அவளுக்கு தண்டனை கொடுக்கன்னு நினைக்கிறியா?"
"தெரியல. என்னால எந்த முடிவுக்கும் வர முடியல. நான் முதல்ல நவ்ஷத் கிட்ட பேசுறேன்"
தன் கைபேசியை எடுத்து நௌஷத்துக்கு அழைப்பு விடுத்தான் தூயவன்.
"ஹலோ தூயவன்..."
சஞ்சனாவை பத்தி ஒரு முக்கியமான விஷயம் எனக்கு தெரியணும்"
"சொல்லுங்க"
"நீங்க சஞ்சனாவோட கம்ப்ளீட் கால் ஹிஸ்டரியை செக் பண்ணீங்க தானே?"
"அதை மட்டுமில்ல. அவங்க அனுப்பியிருந்த டெக்ஸ்ட் மெசேஜையும் செக் பண்ணோம்"
"எத்தனை தடவை அவ சின்னசாமிக்கு கால் பண்ணி இருந்தா?"
"ஒரு தடவை தான். நீங்க கோவிலுக்கு போறதுக்கு முன்னாடி, அவனுக்கு அவர் அந்த லொகேஷனை பத்தி சொல்லி இருந்தா"
"அவ்வளவு தானா?"
"அவ்வளவு தான்"
"அப்படி இருக்கும் போது, அவ சின்னசாமிக்கு பார்ட்னரா இருப்பானு நீங்க எப்படி முடிவுக்கு வந்தீங்க?"
"அதைப்பத்தி அவனே அந்த சீட்ல எழுதி இருந்தானே!"
"அவன் சொன்னது உண்மையா இருக்கும்னு நம்புறீங்களா?"
"அப்படி இல்லைனா, அவன் எதுக்காக வலிய வந்து அதை எழுதணும்?"
"அதைத் தான் சார் நானும் கேக்குறேன்... அவன் உங்களுக்கு எந்த ஒரு தடயத்தையும் விட வாய்ப்பு இல்லாம இருந்தப்போ, அவன் எதுக்காக அதை வலிய செய்யணும்?"
சில நொடி திகைத்தார் நவ்ஷாத்.
"ஆமாம், அவன் அப்படி செஞ்சிருக்க வேண்டிய அவசியம் இல்ல. அவன் அதை எங்களை திசை திருப்ப செஞ்சிருக்கணும்னு நினைக்கிறீங்களா?"
"ஆமாம். என் கல்யாண வீடியோவில் நான் அவனை பார்த்தேன்"
"என்ன சொல்றீங்க? அவனை எப்படி யாரும் கவனிக்காம போனாங்க?"
"அவன் மாறுவேஷத்துல வந்திருந்தான், சார்"
"ஆனா சந்தேகப்படுற மாதிரி எந்த விஷயமும் உங்க கல்யாணத்துல நடக்கலையே... அவன் வந்திருந்த விஷயமும் யாருக்கும் தெரியல. அப்படி இருக்கும் போது, அவன் ஏன் வந்தான்?"
"அது தான் சார் என்னை வித்தியாசமாக யோசிக்க வைக்குது"
"எப்படி?"
"அவன் பவித்ராவை கல்யாண ஹாலில் இருந்து கடத்திக்கிட்டு போக நினைச்சிருக்கணும். அங்க போலீஸ் ப்ரொடக்ஷன் அதிகமாக இருந்ததனால அவனோட ஐடியாவை அவன் கைவிட்டு இருக்கணும். அதே நேரம், அவன் சஞ்சனாவை முதல் தடவையா எங்க எல்லாரோடையும் சேர்த்து பார்த்து இருக்கணும். அப்ப தான், அவ எங்க குடும்பத்தை சேர்ந்தவள்னு அவனுக்கு தெரியவந்திருக்கும்..."
அவனது பேச்சை வெட்டி,
"சின்னசாமியை மாட்டி விட, சஞ்சனா வேணுமுன்னே அவனுக்கு ஃபோன் பண்ணி வரவழைச்சி போலீஸில் மாட்டிவிட்டு இருக்கான்னு அவன் நினைச்சிருப்பான்... ரைட்?"
"எக்ஸாக்ட்லி..."
"அப்படின்னா சஞ்சனா ஆபத்துல இருக்காங்க"
"ஆமாம்..."
"இப்போ நான் என்ன செய்யணும்?" நான் ஏற்கனவே உங்க கிட்ட சொன்னேன், அவங்க ரொம்ப ஆபத்தானவங்க. மனுஷங்களையே காய்கறி மாதிரி வெட்டி தள்ளுவாங்க. அவனுக்கு அரஸ்ட் வாரண்ட் வாங்குறது கூட ரொம்ப ரிஸ்க்கான விஷயம். மதுரை போலீஸ் அதை செய்ய துணிய மாட்டாங்க. அதே நேரத்துல, நம்ம அங்க போறதுக்கும் விட மாட்டாங்க" என்றார் இயலாமையுடன்.
"நான் கமிஷனர் கிட்ட பேசுறேன்" என்றான் தூயவன்.
"தயவுசெஞ்சி பேசுங்க சார். எனக்கு வேண்டியது ஒரு அரெஸ்ட் வாரண்ட். நான் சின்னசாமியை பார்த்துக்கிறேன்" என்றார் நவ்ஷத்.
"சரிங்க சார்" என்று அழைப்பை துண்டித்தான் தூயவன்.
"அவங்க சஞ்சனாவை என்ன செஞ்சாங்களோ தெரியல" என்றாள் பவித்ரா கவலையுடன்.
"உன்னை அவங்க பிடிச்சிருந்தா என்ன செஞ்சிருப்பாங்க?" என்றான் தூயவன் பொருளோடு.
பதட்டத்தோடு தன் நகத்தைக் கடித்தாள் பவித்ரா.
"அவ உன் வாழ்க்கையை நரகமாக்க நினைச்சா... ஆனா, நீ அவளைப் பத்தி கவலைப்பட்டுக்கிட்டு இருக்க"
"வலி எல்லாருக்குமே ஒன்னு தானே! வாழ்க்கையும் அப்படித்தான். பெரியசாமியும் அவன் ஆட்களும் காட்டுமிராண்டிங்க. அவங்களுக்கு யோசிக்கிற பக்குவமே கிடையாது. அவங்களுக்கு என்ன வேணுமோ அதை செய்வாங்க. நீங்க நினைச்சது சரியா இருந்தா, அவங்க சஞ்சனாவை டார்ச்சர் பண்ணுவாங்க. அவங்களால் அதை தாங்க முடியாது"
"நீ அதை தாங்கி இருப்பியா?"
"நான் ஏன் அதை தாங்கணும், என்னை காக்க என்னுடைய ஹீரோ இருக்கும்போது?"
மென்மையாய் புன்னகை புரிந்த தூயவன், அவள் கரத்தை பற்றினான். அதை பார்த்து இரும்பிய குணமதி,
"பப்ளிக், பப்ளிக்" என்றார்.
தன் கையை வெடுக்கென இழுத்துக் கொண்டாள் பவித்ரா. குணமதியும் தூயவனும் சிரித்து, அவளை வெட்கப்பட வைத்தார்கள்.
மதுரை
அளவுக்கு அதிகமான ரத்தம் வெளியேறியதால் பெரியசாமி கவலைக்கிடமாய் இருந்தான். அவனுக்கு கொடுக்கப்பட்ட எந்த சிகிச்சையையும் அவனது உடல் ஏற்கவில்லை. மருத்துவர்கள் நம்பிக்கை இழந்தார்கள். சஞ்சனாவின் மீது கடும் கோபத்தில் இருந்த சின்னசாமி வீட்டிற்கு வந்தான்.
"எங்க அவ?" என்று உறுமினான்.
"அவளை பூட்டி வச்சிருக்கோம்"
கதவை திறக்குமாறு சைகை செய்தான். அவர்கள் கதவை திறந்தார்கள். கதவு திறக்கும் சத்தம் கேட்ட சஞ்சனா உஷாரானாள். அங்கு மூலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு பலகையை கண்டாள். அதை கையில் எடுத்துக் கொண்டு உள்ளே நுழையும் நபரை தாக்க தயாரானாள். கதவை எட்டி உதைத்துக் கொண்டு புயல் போல் உள்ளே நுழைந்தான் சின்னசாமி. அவனுக்காக காத்திருந்த சஞ்சனா, அந்த பலகையால் அவனை தாக்கினாள். அவளது அந்த செயல் அவனது கோபத்தை பல மடங்காக்கியது. அந்த பலகையை அவள் கையில் இருந்து பிடுங்கி, அவளை தாறுமாறாய் அடிக்கத் தொடங்கினான்.
"உன்னால தான் எங்க அப்பா உயிருக்கு போராடிகிட்டு இருக்காரு. அவருக்கு மட்டும் ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா, நான் உன்னை கொன்னுடுவேன்" என்று கத்தினான்.
"அந்த எருமை மாடு உயிரோட இருந்து என்ன செய்யப் போறான்? சாகட்டும். அவன் சீக்கிரமா சாகணும்னு தான் நானும் ஆசைப்படுகிறேன்"
பொறுமை இழந்த சின்னசாமி, அவள் தலை முடியை பற்றி இழுத்து,
"எங்க அப்பா மட்டும் செத்தா, அந்த நெருப்புல உன்னை தூக்கி போட்டுடுவேன். ஞாபகத்துல வச்சுக்கோ" என்றான்.
"என் முடியை விடு. உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் முடியை பிடிப்ப?" என்று ஒரு கெட்ட வார்த்தையை கூறி அவனை திட்டினாள்.
அதை பொறுக்க முடியாத சின்னசாமி,
"உன் முடியை தொட்டா உனக்கு பிடிக்காதா? அப்படின்னா, உனக்கு நான் சகாயம் பண்றேன். உன் முடியை மொட்டை அடிச்சிட்டா, உன் முடியை யாரும் தொட மாட்டாங்க. உன்னால கூட தொட முடியாது. ஏன்னா உன் தலையில முடியே இருக்காதே" என்று இடி இடி என சிரித்தான்.
"உனக்கு அவ்வளவு தான் மரியாதை"
"உன் மரியாதையை யார் கேட்டது?" என்ற சின்னசாமி,
"யாருடா அங்க?" என்றான்.
சிலர் அந்த அறைக்குள் நுழைந்தார்கள்.
"பார்பரை கூப்பிட்டு இவ தலையை மொட்டையடிக்க சொல்லு"
அதை கேட்டு கோபம் அடைந்த சஞ்சனா,
"யாராவது என் பக்கத்துல வந்தா, அவன் பிணமாயிடுவான்" என்றாள்.
"அப்படியா?" என்று நக்கலாய் சிரித்தான் சின்னசாமி.
"ஒரு கயிறை எடுத்துக்கிட்டு வாங்க"
ஒருவன் தடிமனான கயிறை கொண்டு வந்தான்.அதை கண்ட சஞ்சனா பின்னோக்கி நகர்ந்தாள். மூன்று பேர் சேர்ந்து அவள் மீது பாய்ந்து, அவள் கையையும் காலையும், பிறகு உடல் முழுவதும் கட்டி அவளை அசைய முடியாமல் செய்தார்கள்.
"இப்போ உன்னால முடிஞ்சா எங்களை கொன்னுப் பாரு" என்றான் சின்னசாமி.
"இங்க பாரு. இப்படி செய்யாத. என் முடிக்காக நான் எவ்வளவு பணம் செலவு பண்ணி இருக்கேன் தெரியுமா?" என்றாள் பரிதாபமாக.
"அங்க எங்கப்பன் உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கான். நீ உன் முடியை பத்தி கவலைப்படுறியா?"
"ப்ளீஸ் ப்ளீஸ்... ஐ அம் சாரி. நான் இனிமே எதுவும் பேச மாட்டேன். நீ சொல்றதை செய்றேன். இதை மட்டும் எனக்கு செய்யாதே" என்றாள்.
சற்று நேரத்திற்கு முன்பு அவ்வளவு கோபமாய் பேசிய ஒரு பெண், இப்பொழுது அவனிடம் மன்றாடியதை பார்த்து அவனுக்கு ஆச்சரியமாய் போனது. முடிக்காகவா இவ்வளவு? அவனால் நம்ப முடியவில்லை.
"எங்க அப்பா சாக கிடக்கிறார்... அதுக்கு என்ன சொல்ற?"
"எங்க அப்பாவுக்கு நிறைய ஸ்பெஷலிஸ்ட் எல்லாம் தெரியும். அவங்களை மதுரைக்கு கூட்டிக்கிட்டு வந்து அவரை காப்பாத்துறேன். சத்தியமா நான் செய்வேன். நான் தப்பா நடந்துக்கிட்டதுக்காக என்னை மன்னிச்சிரு" என்றாள் கெஞ்சலாய்.
"உன்னை என்னால மன்னிக்க முடியாது. ஏன்னா, எங்க அப்பனை நீ எட்டி உதைச்சிருக்க. அவரை சாகுற அளவுக்கு கொண்டு போய் இருக்க. அவருக்கு மட்டும் ஏதாவது நடக்கக்கூடாது நடந்தா, நான் உனக்கு நிச்சயமா மொட்டை அடிப்பேன். நான் அதை செய்வேன்னு உனக்கு தெரியும்"
சஞ்சனாவை கட்டியிருந்த கயிறை அவிழ்த்து விடுமாறு தன் ஆட்களுக்கு சைகை செய்தான் சின்னசாமி. அதை அவிழ்த்தவுடன் தன் உடலில் பாய்ந்த இரத்தத்தின் வேகத்தை உணர்ந்தாள் அவள். இவ்வளவு நேரம் அவளது உடல் அந்த கயிறால் இறுக்கி வைக்கப்பட்டிருந்ததில் ரத்த ஓட்டமே நின்று போயிருந்தது. கதவை சாத்திக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான் சின்னசாமி.
தன் விதியை நொந்தபடி தன் தலையில் அடித்துக் கொண்டாள் சஞ்சனா. அப்பொழுது, அவள் கண்ணில் ஒன்று பட்டது. அவளது முகம் பொலிவிற்றது. அது ஒரு கைபேசி. அவளை கட்டிய போது அதை சின்னசாமியின் ஆட்களில் எவனோ ஒருவன் தவற விட்டிருக்க வேண்டும். மாதேஷுக்கு ஃபோன் செய்ய அதை எடுத்தாள் சஞ்சனா.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top