54 காணொளி

54 காணொளி

பெரியசாமியை அருவருப்போடு பார்த்தபடி நின்றாள் சஞ்சனா. ஆனால் அவன் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதாக தெரியவில்லை. கட்டிலில் கிடந்த தனது வேட்டியை எடுத்து கட்டிக்கொண்டு,

"என்ன பாக்குற? இந்த வயசுல என்னால எதுவும் செய்ய முடியாதுன்னு நினைச்சியா? நேத்து ராத்திரி நீ சுயநினைவில் இல்ல. இருந்திருந்தா, என் திறமை என்னன்னு உனக்கு தெரிஞ்சிருக்கும். கவலைப்படாத இன்னைக்கு ராத்திரி நீ தெரிஞ்சுக்குவ" என்றான் கிண்டலாய் சிரித்தபடி.

"ச்சி... உன் பேத்தி வயசுல இருக்கிற ஒரு பொண்ணுகிட்ட இப்படி பேச உனக்கு கொஞ்சம் கூட வெட்கமா இல்லயா? எங்க அப்பா கூட உன்னை விட வயசுல சின்னவரா தான் இருப்பாரு... கிழவா..."

"நீ எங்க விஷயத்துல மூக்கை நுழைக்காம இருந்திருந்தா, நான் பவித்ராவை கல்யாணம் பண்ணி இருப்பேன். நீ தானே அதைக் கெடுத்த?"

"அவளை இங்க கூட்டிகிட்டு வரத்தான் நான் உன் பையனுக்கு ஹெல்ப் பண்ணேன். நீயும் உன் முட்டாள் பையனும் ஏன் அதை புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்க?"

"அப்படியா? நீ பவித்ராவை இங்க கூட்டிக்கிட்டு வர ஹெல்ப் பண்ணியா?"

"இன்னும் எத்தனை தடவை தான் நான் அதையே சொல்றது?"

"அப்படின்னா உன்னை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் அப்படின்னு சின்னசாமி நினைச்சது சரி தான்"

"என்ன்னனது? உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு? ஆமாம்... நீயும் உன் பிள்ளையும் சரியான பைத்தியங்க. நான் சொல்றது கூட உங்க மண்டையில உறைக்கல. நான் பவித்ராவை இங்க கூட்டிகிட்டு வர அவனுக்கு ஹெல்ப் பண்ணணேன்னு சொன்னேன்..."

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்காக என்கிட்ட சத்தம் போட்ட. ஆனா நான் பவித்ராவை கல்யாணம் பண்ணிக்கிட்டா மட்டும் பரவாயில்லையா? அவளும் உன் வயசு பொண்ணு தானே? ஏன், உன்னை விட அவளுக்கு வயசு கம்மியா கூட இருக்கலாம்... ஆனா அதைப் பற்றி உனக்கு கவலை இல்ல. உன்னை கல்யாணம் பண்ணிக்கும் போது மட்டும் அது உனக்கு அநியாயமா தெரியுதா."

"அவ ஜாதகப்படி நீ அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ ரொம்ப நாள் வாழ்வ. அதுக்காக நீ அவளை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்ச. அப்புறம் எதுக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட?"

"சின்னசாமியோட அம்மா ரொம்ப நாளைக்கு முன்னாடியே இந்த உலகத்தை விட்டு போயிட்டா. நான் என் வேலையில கவனம் செலுத்தினதால, என்னால் வாழ்க்கையை  அனுபவிக்க முடியாம போயிடுச்சு. அதனால, இப்பவாவது வாழ்க்கையை அனுபவிக்க நினைக்கிறேன். உண்மைய சொல்லனும்னா, நீயும் பார்க்க நல்லா தான் இருக்க. உன் எதிர்காலத்தை பத்தி எல்லாம் நீ கவலை படாத. இந்த உலகத்தை விட்டு போறதுக்கு முன்னாடி உனக்கு ஒரு வாரிசை கொடுத்துட்டு தான் போவேன். நீ உன் குறை காலத்தை நம்ம பிள்ளைகளோட செலவு பண்ணு. என்ன சொல்ற?"

"ச்சீ... வாயை மூடு... கெழட்டு எருமை... என்கிட்ட வந்த உன்னை கொன்னுடுவேன்?"

"அப்படியா?"

அவளை நெருங்கினான் பெரியசாமி. அவனது தள்ளாடாத உறுதியான நடையை பார்த்து திகைத்து நின்றாள் சஞ்சனா. அவனது நடையை பார்த்தால், அவனுக்கு 80 வயது என்பதை நம்ப முடியவில்லை. அவன் தன்னிடம் வருவதை பார்த்து அவளுக்கு கோபம் தலைக்கேறியது. அவனை தாக்க தயாரானாள். அவன் எட்டிப் பிடிக்கும் தூரத்தில் வந்த போது, தன் உடலில் இருந்த மொத்த பலத்தையும் திரட்டி, அவனை எட்டி உதைத்தாள். அந்த எதிர்ப்பை எதிர்பார்க்காத பெரியசாமி, தடுமாற்றத்துடன் பின்னால் நகர்ந்து கீழே விழுந்ததில் கட்டிலின் காலில் அவன் தலை இடித்துக் கொண்டது. வலி தாங்க முடியாமல் கூடக்குரலிட்டான் பெரியசாமி.

அந்த அறையை சில காலடித்தடங்கள் நெருங்குவதை கேட்டா சஞ்சனா, கதவுக்கு பின்னால் ஒளிந்து கொண்டாள். 

சில பேருடன் அந்த அறைக்குள் நுழைந்த சின்னசாமி, பெரியசாமி தரையில் விழுந்து துடித்துக் கொண்டிருப்பதை கண்டான். அவன் தலையில் இருந்து ரத்தம் வழிந்தது. அந்த அறையில் இருந்து சத்தம் செய்யாமல் மெல்ல வெளியேறினாள் சஞ்சனா.

"உங்களுக்கு என்ன ஆச்சு? எப்படி நீங்க கீழே விழுந்தீங்க?" என்றான் சின்னசாமி, பெரியசாமியை எழுப்பி அமர வைத்தபடி.

"அவ என்னை எட்டி உதைச்சுட்டாடா" என்றான் பெரியசாமி.

சஞ்சனாவை அந்த அறையில் தேடினான் சின்னசாமி. ஆனால் அவள் என் அங்கு இல்லை.

"அவ எங்கே போனா? அவ நம்மகிட்ட இருந்து தப்பிச்சிடக் கூடாது" என்று இடி என முழங்கினான்.

சில பேர் அவளை தேடி ஓடினார்கள். தலையில் இருந்து வழிந்த ரத்தத்தின் காரணமாக பெரியசாமிக்கு மயக்கம் வந்தது. அவனை மருத்துவமனைக்கு அள்ளிச் சென்றான் சின்னசாமி.

சஞ்சனாவை தேடி வந்த ஆட்கள் அவள் ஒரு தூணுக்கு பின்னால் ஒளிந்து நிற்பதை கண்டார்கள்.

"அவ அங்க இருக்கா" என்று ஒருவன் கத்த, அனைவரும் அவளை நோக்கி ஓடினார்கள். அவர்களை தாக்க ஏதாவது கிடைக்கிறதா என்று தேடினாள் சஞ்சனா. ஒரு கட்டை கீழே கிடந்தது. அதை அவள் எடுக்கும் முன், ஓடி வந்த ஒருவன், அதை தன் காலால் எட்டி உதைத்தான். இரண்டு பேர் சேர்ந்து அவள் கைகளை பிடித்து, அருகில் இருந்த அறையில் தள்ளி பூட்டினார்கள்.

தூயவன் இல்லம்

சந்தோஷும் வெண்மதியும் ஃபிரான்சுக்கு செல்ல தயாரானார்கள். யாரையும் வழி அனுப்ப விமான நிலையம் செல்லும் வழக்கம் இல்லாதவன் தூயவன். ஆனால் அவனது அந்த பாச்சா எல்லாம் பவித்ராவிடம் பலிக்கவில்லை. அவர்களை வழி அனுப்ப விமான நிலையம் சென்று தீர வேண்டும் என்று அவள் பிடிவாதமாய் நின்றாள். அதனால் வேறு வழியின்றி அவர்களுடன் செல்ல தயாரானான் தூயவன்.

"அம்மா நீங்களும் எங்க கூட வாங்க" என்றாள் பவித்ரா.

"உன் புருஷன் உன் கூட வர்றதே எட்டாவது அதிசயம். அதனால நீ உன் புருஷனோட போ" என்றார் அவர்.

"ஆமாம் பவித்ரா. மாம் சொல்றது சரி தான். வரலாற்றிலேயே அவன் இதுவரைக்கும் யாரையும் வழி அனுப்ப ஏர்போர்ட்டுக்கு வந்ததே இல்ல" என்றாள் வெண்மதி.

"போதும், என்னை ரொம்ப புகழாதீங்க. கிளம்புங்க" என்று நடந்தான் தூயவன்.

வழக்கம் போல் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான் தூயவன். பவித்ரா வெண்மதியுடன் பின் சீட்டில் ஏறிக்கொள்ள, அதை எதிர்பார்க்காத தூயவனின் முகம் மாறியது.

"பவித்ரா நீங்க மச்சான் பக்கத்துல உக்காருறது நல்லதுன்னு நினைக்கிறேன்" என்றான் சந்தோஷ்.

"ஒன்னும் பிரச்சனை இல்ல அண்ணா. நீங்க மறுபடி எப்ப வர போறீங்களோ தெரியல. நீங்க அவர் கூட ஏதாவது பேசணும்னு நினைப்பீங்க இல்ல" என்றாள்.

அவள் எண்ணியபடி அவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பவித்ராகவும் வெண்மதியும் தான் ஏதேதோ பேசியபடி வந்தார்கள்.

விமான நிலையம் வந்து சேர்ந்த அவர்கள், அவர்களது விமானத்தின் கடைசி அறிவிப்பிற்காக காத்திருந்தார்கள். பவித்ரா தயக்கத்தோடு நிற்பதை கண்ட சந்தோஷ்,

"பவித்ரா, நீங்க சஞ்சனாவை பத்தி கவலைப்பட வேண்டாம். நம்ம நினைச்ச அளவுக்கு அவ ஒண்ணும் சாதாரணமானவ இல்ல. அவளுக்கு கற்பனை பண்ண முடியாத அளவுக்கு நிறைய காண்டாக்ட் இருக்கு. அவளை காப்பாத்திக்க அவளுக்கு தெரியும். அதனால அவளை நினைக்கிறத விட்டுட்டு மச்சானோட சந்தோஷமா இருங்க" என்றான்.

"நல்ல வேலை, நீங்க அவகிட்ட இதை சொன்னீங்க. தன்னால தான் இதெல்லாம் நடக்குதுன்னு நினைச்சுகிட்டு இருக்கா. இந்த பொண்ணு குற்ற உணர்ச்சியை மனசுல வச்சிக்கிட்டு புலம்பிக்கிட்டு இருக்கா" என்றான் தூயவன்.

"இல்ல பவித்ரா. நீங்க அப்படியெல்லாம் நினைக்க வேண்டியதில்ல. நடந்த எதுக்கும் நீங்க காரணம் இல்ல. நீங்க எதுவும் செய்யாம உங்க வேலையை தானே பார்த்துக்கிட்டு இருந்தீங்க? இதுல ப்ளேம் பண்ண வேண்டியது சஞ்சனாவைத் தான். அவ தன் வேலையை பார்த்துக்கிட்டு ஒழுங்காக இருந்திருந்தா, இப்படி ஒரு சங்கடம் நம்ம யாருக்கும் வந்திருக்காது. அவளால நம்ம எவ்வளவு பிரச்சனைகளை  ஃபேஸ் பண்ணியிருக்கோம். அவ தூயவன் வீட்டுக்கு வந்ததிலிருந்து, ஒவ்வொரு நாளும் அவளால பிரச்சனை தான். அதனால, நீங்க அவளைப் பத்தி நினைக்காதீங்க. அவ இப்போ கிரிமினல் லிஸ்ட்ல இருக்கா. அவளைப் பத்தி யோசிச்சிட்டு இருக்காதீங்க" என்று தூயவனை நோக்கி திரும்பிய அவன்,

"சாரி, தூயவன். அவளால தான் நீங்க ரொம்ப பெரிய பிரச்சனைகளை ஃபேஸ் பண்ணிட்டீங்க. உங்க குடும்பமே நிம்மதி இழந்து போச்சு. அங்கிளும் ஆன்ட்டியும் பிரிஞ்சிட்டாங்க. ரியலி சாரி" என்றான்.

"நீங்களும் இப்படியெல்லாம் யோசிக்க வேண்டிய அவசியம் இல்ல. இந்த பிரச்சனை எல்லாம் நடந்ததால தான், எங்க அம்மா அவங்க பவர் என்னன்னு தெரிஞ்சுக்கிட்டாங்க. அம்மாவால அவர் இல்லாம தனியா இருக்க முடியும்னு அப்பாவும் புரிஞ்சுகிட்டாரு. அம்மாவுடைய உண்மையான வேல்யூ என்னன்னு அவருக்கு தெரிஞ்சிருச்சு. எல்லாத்துக்கும் மேல, நானும் பவித்ராவும் கல்யாணம் பண்ணிக்கட்டோம். உங்க காதல் கதையும் ஹேப்பி என்டுக்கு வந்துச்சி"

"இதெல்லாம் பெரிய புயல் அடிச்ச பிறகு தானே நடந்தது? அதனால என்னை சந்தோஷமா ஃபீல் பண்ண வைக்க முயற்சி பண்ணாதீங்க" என்று பெருமூச்சு விட்டான் சந்தோஷ்.

அவர்களது விமானத்தின் கடைசி அழைப்பு வந்தவுடன், பவித்ராவையும் தூயவனையும் ஒன்றாய் அணைத்து, அவர்களிடமிருந்து விடை பெற்றாள் வெண்மதி.

"உங்களையும் சந்தோஷையும் பாத்துக்கங்க கா" என்றான் தூயவன்.

சரி என்று தலையசைத்தாள் வெண்மதி. சந்தோஷும் வெண்மதியும் விமான நிலையத்தின் உள்ளே சென்றார்கள். அவர்கள் உள்ளே செல்லும் வரை அங்கேயே நின்றார்கள் தூயவனும் பவித்ராவும். அவர்கள் தங்கள் கண்ணில் இருந்து மறைந்த உடன்,

"வா போகலாம்" என்றான் தூயவன்.

"இருங்க. என்ன அவசரம்?"

"நீ இங்கயே நின்னு அவங்க பிளைட்டுக்கு டாட்டா கட்ட போறியா? அவங்க கிளம்பிட்டாங்க. வா போகலாம்" என்று அவளை பிடித்து இழுத்தபடி நடந்தான் தூயவன்.

தூயவன் இல்லம்

அவர்கள் வீடு திரும்பிய போது அவர்களது திருமண காணொளியை பார்த்துக் கொண்டிருந்தார் குணமதி. அவரை நோக்கி சந்தோஷமாய் ஓடி சென்று அமர்ந்து கொண்டாள் பவித்ரா.

"நாங்க வர்ற வரைக்கும் கொஞ்சம் காத்திருக்கலாம் இல்ல மாம்?"

"இப்ப தான்டா போட்டேன்"

அவர்களுக்கு பின்னால் வந்து சோபாவில் கையை ஊன்றியபடி நின்று கொண்டான் தூயவன்.

அந்த காணொளியில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி திருமண மண்டபத்தில் நுழைந்தான் தூயவன்.

"ஹீரோ வந்துட்டாரு" என்று சிரித்தார் குணமதி. தூயவனை பார்த்து கிண்டலாய் சிரித்தாள் பவித்ரா.

அப்போது, திருமணத்திற்கு வந்திருந்த விருந்தாளிகள் பக்கம் கேமரா திரும்பியது.

"இவ என் ஸ்கூல் ஃப்ரெண்ட். இந்திரா நகர்ல இருக்கா" என்று ஒரு பெண்ணை பார்த்து கூறினார் குணமதி.

"ஓ..."

"இவ நம்ம தூய கூட படிச்ச பொண்ணு... நான்சி"

"ம்ம்..."

திடீரென்று பவித்ரா தன் கண்களை சுருக்கினாள்.

"அம்மா, ரிமோட்டை என்கிட்ட கொஞ்சம் கொடுங்க" என்று அவர் கையில் இருந்த ரிமோட்டை வாங்கி, அதை ரிவைண்ட் செய்தாள்.

ஒரு குறிப்பிட்ட மனிதனை திரையில் பார்த்தபோது அந்த வீடியோவை பாஸ் செய்தாள்.

"என்னாச்சு பவித்ரா? உனக்கு அந்த ஆளை தெரியுமா?"

"எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு மா" என்றாள் அது யார் என்று நினைவு கூற முயன்ற படி.

"இது கொஞ்சம் கூட நியாயமே இல்ல. நான் எவ்வளவு ஸ்டைலா அந்த வீல்ச்சேரை எட்டி உதைச்சேன்னு பாக்க ஆசையா இருந்த. ஆனா இப்போ நீ வேற யாரையோ பார்த்து கிட்டு இருக்க..." என்று அவளை கிண்டல் செய்தான் தூயவன்.

அவனது கிண்டலுக்கு செவி சாய்க்காமல் திரையை உற்று கவனித்துக் கொண்டிருந்தாள் பவித்ரா. அவள் பக்கத்தில் வந்து அமர்ந்த தூயவன், பவித்ராவின் கண்கள் விரிவடைவதை கண்டான்.

"யாரு பவித்ரா அது?"

"சின்னசாமி" என்றாள் பவித்ரா தடுமாற்றத்துடன்.

திரையை கவனித்த தூயவன் சின்னசாமியை அடையாளம் கண்டு திகைப்படைந்தான். அவன் தங்கள் திருமணத்திற்கு வந்திருந்தான் என்பதை நம்ப முடியவில்லை தூயவனால்...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top