52 திருமதி சஞ்சனா பெரியசாமி
52 திருமதி சஞ்சனா பெரியசாமி
"என்னது? நான் உங்க அப்பாவை கல்யாணம் பண்ணிக்க போறேனா? என்ன உளறல் இது? நான் உங்க அப்பாவை கல்யாணம் பண்ணிக்கணுமா? நீயே பார்க்க எருமை மாடு மாதிரி இருக்க... என்னை ஆத்தான்னு கூப்பிடுற..." சீறினாள் சஞ்சனா.
"நாங்க அதுக்கு என்ன ஆத்தா செய்றது? அது எங்க குடும்பத்தோட அம்சம். உங்களுக்கு ஒரு புள்ள பிறந்தா கூட அவனும் பார்க்க எருமை மாதிரி தான் இருப்பான்" என்று இடி இடி என சிரித்தான் சின்னசாமி.
"வாயை மூடு. நான் போலீஸ் ஸ்டேஷன்ல் தானே இருக்கணும்? நான் எப்படி இங்க வந்தேன்? யாரு இங்க கூட்டிக்கிட்டு வந்தது?"
"அதுல என்ன சந்தேகம்? நான் தான் உங்கள இங்க கூட்டிட்டு வந்தேன். உங்க பொறந்த வீட்ல எப்படியோ எனக்கு தெரியாது ஆனா நம்ம குடும்ப வழக்கப்படி, நம்ம குடும்ப பொம்பளைங்க போலீஸ் ஸ்டேஷன்ல காலடி எடுத்து வைக்க மாட்டாங்க. உங்களோட அன்பான பிள்ளையா இருந்துகிட்டு, அதை நான் எப்படி நடக்க விடுவேன்?அதனால தான் போலீஸ்ல இருந்து உங்களை காப்பாத்தி இங்க கொண்டு வந்தேன்"
"நீ ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்க"
"அட, நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? எதையும் சரியா புரிஞ்சுக்காம நான் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திருப்பேன்னு நினைக்கிறீங்களா?" என்று சிரித்தான் சின்னசாமி.
சஞ்சனா குழப்பம் அடைந்தாள்.
"முதல்ல நீ யாருன்னு சொல்லு"
"சின்னசாமி... பெரியசாமியோட பிள்ளை"
"சின்ன சாமியா? ஏய்... நீ தானா அது? என்னை உனக்கு அடையாளம் தெரியலையா? என்னை நீ மறந்துட்டேன்னு நினைக்கிறேன். நான் தான் உனக்கு பவித்ரா போன கோவிலை உனக்கு சொன்னவ..." என்றாள் குதூகலமாய் கூற,
"எனக்கு உதவி செய்ற மாதிரி நடிச்சவ..." என்றான் சின்னசாமி பேய் போல மாறிய முகத்துடன்.
"என்னது, நடிச்சேனா? என்னால தான் நீ அன்னைக்கு தூயவனை அட்டாக் பண்ண..."
"ஆமாம், உன்னால தான் என்னோட திட்டமே படுத்துச்சு... உன்னால தான் போலீஸ் என்னை சுத்தி வளைச்சாங்க... உன்னால தான் நான் தலைமறைவாகி பிச்சைக்காரன் மாதிரி ரோட்ல அலைஞ்சுகிட்டு இருந்தேன்"
"நான் என்ன செஞ்சேன்? நீ பவித்ராவை நீங்க கடத்திக்கிட்டு போக உதவி தான் செஞ்சேன். உங்க அப்பாவுக்கு அவளை கல்யாணம் பண்ணி வச்சு உங்க ஆசையை தீர்த்துக்க உதவினேன்... அவரை ரொம்ப நாள் வாழ வைக்கலாம்னு நினைச்சேன்"
"போதும்... பொய் சொல்றதை நிறுத்து. இதுக்கப்புறம் நான் உன்னை நம்ப தயாரா இல்ல. நீயும் அந்த தூயவனும் சேர்ந்து எல்லாத்தையும் பிளான் பண்ணி தான் செஞ்சீங்கன்னு எனக்கு புரிஞ்சு போச்சு"
"பிளான் பண்ணோமா? நாங்க என்ன பிளான் பண்ணினோம்?"
"எனக்கு உதவி செய்ற மாதிரி நடிச்சு என்னை அரெஸ்ட் பண்ண வைக்கணும்ங்கிறது தானே உங்க திட்டம்? உன் நடிப்பு பிரமாதமா இருந்தது. ஆனா நான் ஒன்னும் உன்னை முழுசா நம்ப முட்டாள் இல்ல..." என்றான் கோபமாய்.
"இல்ல... இது உண்மை இல்ல"
"ஒரே குடும்பத்துல இருந்துகிட்டு எல்லாரும் சேர்ந்து பிளான் பண்ணி பவித்ராவை எங்ககிட்ட இருந்து காப்பாத்தி இருக்கீங்க"
"சத்தியமா இல்ல. என்னை நம்பு. எனக்கு இன்னும் ஒரு சான்ஸ் கொடுத்தா, அவளை இங்க நிச்சயமா கூட்டிக்கிட்டு வருவேன். அதுக்கப்புறம் அவளை உங்க அப்பாவுக்கு நீ தாராளமா கல்யாணம் பண்ணி வைக்கலாம்"
"இப்போதைக்கு நீ எங்க அப்பாவை பத்தி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்ல. எங்க அப்பாவுக்கு உன்னை கல்யாணம் பண்ணி வச்சதுக்கு அப்புறம் நீ அவரை நல்லா பாத்துக்கோ... பார்த்து தான் ஆகணும்"
"உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? படிப்பறிவில்லாத முண்டம்... கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டியா...? என்னை பத்தி என்ன நினைச்சுகிட்டு இருக்க? நான் யாருன்னு தெரியுமா? எங்க அப்பா உன்னை துண்டு துண்டா வெட்டி போட்டுடுவாரு. என்னை உங்க அப்பாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சி தப்பு செய்யாத" சஞ்சனா ஆத்திரத்தில் சீறினாள்.
"உங்க அப்பாவை சமாளிக்கிறதுக்கான வழியை, அதுக்கான நேரம் வரும் போது நாங்க யோசிச்சிக்கிறோம். இப்போ எங்க அப்பாவை கல்யாணம் பண்ணிக்க தயாராகு"
"என் ஜாதகம் உங்க அப்பாவுக்கு பொருந்தாது"
"அது எனக்கு தெரியும். பவித்ராவோட ஜாதகத்தை மாதிரி இன்னொரு ஜாதகம் நிச்சயமா கிடைக்காது. எப்படி இருந்தாலும் எங்க அப்பா இன்னும் கொஞ்ச நாள்ல சாக தான் போறாரு. இருக்கிற வரைக்கும் அவர் வாழ்க்கையை சந்தோஷமா அனுபவிக்கட்டும்... அவர் புது பொண்டாட்டியோட... ஆது நீ தான்..."
"இல்ல உங்க எல்லாரையும் நான் கொன்னுடுவேன்"
அவள் கால்களை பிணைந்த சங்கிலியை பார்த்த சின்னசாமி, நக்கலாய் புன்னகை புரிந்தான். *முதலில் அந்த சங்கிலியில் இருந்து வெளியே வர முடிகிறதா பார்* என்பது போல.
அவன் அங்கிருந்து செல்ல,
"ஏய், நில்லு... நான் சொல்றதை கேளு. நான் பொய் சொல்லல. என்னை நம்பு. நான் தூயவனுக்கு ஹெல்ப் பண்ணல" என்று கத்தினாள். ஆனால் அவளுக்கு செவி சாய்க்காமல் அங்கிருந்து நடந்தான் சின்னசாமி.
தூயவன் இல்லம்
அழைப்பு மணியின் ஓசை கேட்டு கதவை திறந்தார் குழந்தைசாமி அங்கு, கையில் ஒரு அட்டை பெட்டியோடு ஒருவன் நின்றிருந்தான்.
"நீங்க யாரு?" என்றான் குழந்தைசாமி.
"நான் மிரர் ஸ்டுடியோவில் இருந்து வரேன். இந்த கல்யாண சிடியையும் பென்டிரைவையும் தூயவன் சார் கிட்ட குடுக்க சொல்லி எங்க ஓனர் அனுப்பினார்" என்று தன் கையில் இருந்த பெட்டியை காட்டினான்.
அப்பொழுது அங்கு வந்த தூயவன்,
"யார் அது?" என்றான்.
"இவரு போட்டோ ஸ்டுடியோல இருந்து வந்திருக்காரு. உங்க கல்யாண சீடியை கொடுக்கணுமாம்"
"ஓ..."
அந்த மனிதனிடமிருந்து அதைப் பெற்று தூயவனிடம் வழங்கினார் குழந்தைசாமி.
"என் மேனேஜர் கிட்ட சொல்லி உங்க பில்லை செட்டில் பண்ண சொல்றேன்" என்றான் தூயவன்.
"தேங்க்யூ சார்" என்றபடி அந்த மனிதன் அங்கிருந்து சென்றான்.
அங்கு வந்த குணமதி, அவன் கையில் இருந்த பெட்டியை பார்த்து,
"இது என்ன தூயா?" என்றார்.
"எங்க கல்யாண சிடி" என்றான்.
"ரெண்டு நாளைக்குள்ள அதை கொடுக்க சொல்லி நான் தான் கேட்டேன். ஏன்னா நம்ம மதி ஃபிரான்ஸ்க்கு போறதுக்கு முன்னாடி, நம்ம எல்லாரும் சேர்ந்து ஒண்ணா பார்க்கலாம்னு நெனச்சேன்" என்றார் வருத்தத்தோடு.
"இப்ப மட்டும் என்னமா பிரச்சனை? நம்ம எல்லாரும் சேர்ந்து பார்க்கலாம்" என்றான் தூயவன்.
"தூயா, சூழ்நிலை புரியாம பேசாத. சஞ்சனாவை போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. சந்தோஷுக்கு நிச்சயமா இந்த வீடியோவை பார்க்கிற மூடு இருக்காது. அந்த சீடியை அவங்க கிட்ட குடு. அவங்களுக்கு எப்போ பாக்கணும்னு தோணுதோ பார்த்துக்கட்டும்"
"சரி... ஆனா மாம், சஞ்சனா இப்போ போலீஸ் கஸ்டடியில் இல்ல"
"போலீஸ் கஸ்டடியில் இல்லையா? அவ பெயில்ல வந்துட்டாளா?"
"இல்ல நடந்தது நம்ம யாரும் கொஞ்சம் கூட எதிர்பார்க்காதது"
"சுத்தி வளைக்காம விஷயத்தைச் சொல்லு"
"அவளை சின்னசாமி காப்பாத்தி கூட்டிகிட்டு போயிட்டான்"
"என்ன சொல்ற?"
"ஆமாம் அவங்க ரெண்டு பேரும் பாட்னர்ஸ் இன் க்ரைம்"
"நெஜமாதான் சொல்றியா"
"ஆமாம் நவ்ஷத் தான் ஃபோன் பண்ணி எனக்கு விஷயத்தை சொன்னாரு"
"அடக்கடவுளே! அந்த பொண்ணு இவ்வளவு மோசமானவளா இருப்பான்னு நான் எதிர்பார்க்கல"
"அவ மோசமானவளா இல்லாம இருந்திருந்தா, சின்னசாமி மாதிரி ஒரு மோசமானவனுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை பேசுற அளவுக்கு அவளுக்கு துணிச்சல் இருந்திருக்குமா?"
"நீ சொல்றது சரி தான். அவளுக்கு சின்னசாமியையும் அவங்க அப்பாவையும் பத்தி நல்லாவே தெரியும். ஏன்னா நம்ம அவ முன்னாடி தான் அவங்களை பத்தி பேசினோம். ஆனாலும் அவங்க கூட அவர் சேர்ந்து இவ்வளவு வேலை செஞ்சி இருக்கா... என்ன பெண்ணோ தெரியல... நல்ல காலம் நம்ம அவகிட்ட இருந்து தப்பிச்சிட்டோம்"
"மாம், கொஞ்சம் யோசிச்சு பாருங்களேன்... அவ மட்டும் நம்ம வீட்டு மருமகளா வந்திருந்தா, நம்ம கதி என்ன ஆகி இருக்கும்?"
"அதுக்காகத்தான் நம்ம தப்பிச்சிட்டோம்னு சொன்னேன். நம்ம பவித்ராவுக்கு தான் நன்றி சொல்லணும், அவ கிட்ட இருந்து நம்மளை காப்பாத்தினதுக்காக. அவ மட்டும் நம்ம வாழ்க்கையில வராம இருந்திருந்தா, எப்படியும் உங்க அப்பா அவளை உன் தலையில் கட்டி வைச்சிருப்பா"
"எப்படி இருந்தாலும், நான் அவளை கல்யாணம் பண்ணி இருக்க மாட்டேன். ஏன்னே தெரியல, ஆரம்பத்திலிருந்தே அந்த பொண்ண எனக்கு பிடிக்கல. அவ பார்க்க சூனியக்காரி மாதிரி இல்ல?" என்ற அவன், எதையோ யோசித்து விட்டு,
"இல்ல அவளை சூனியக்காரின்னு சொல்லக்கூடாது" என்றான்.
"ஏன்டா அப்படி சொல்ற?"
"ஹாரி பாட்டர் சீரிஸ் பாருங்க. அதுல சூனியக்கார பொண்ணுங்க எவ்வளவு அழகா இருப்பாங்கன்னு நீங்க தெரிஞ்சுக்கவீங்க"
"நிஜமாவா?"
"ஆமாம்"
"ஆனா எனக்கு எப்படி தெரியும்? யாருமே என்னை அதை பார்க்க சொல்லலையே..."
"நீங்க ரெண்டு பேரும் என்ன பாக்க போறீங்க?" என்றாள் அங்கு வந்த பவித்ரா.
"ஹாரி பாட்டர் மூவிஸ்"
"என்னை உங்க கூட சேர்த்துக்க மாட்டீங்களா?" என்றாள்.
"மாம், நான் சொல்லல? பாருங்க, மாமியாருக்கும், மருமகளுக்கும் இப்ப சண்டை நடக்கப்போகுது. அவளை உங்க கூட சேர்த்துக்காததுனால பவித்ரா உங்க மேல கோவப்பட போறா... இப்ப உங்ககிட்ட சண்டை போட போறா..." என்று மேலே பேசிக் கொண்டு போன அவனை,
"என்னங்க.. கொஞ்சம் நிறுத்துங்க. இப்ப நீங்க என்ன செய்றீங்க?" என்றாள் பவித்ரா.
"நடக்கப் போறதை சொன்னேன்..."
"போதும் நிறுத்துங்க. தேவையில்லாம இல்லாததை எல்லாம் சொல்லி பில்டப் கொடுக்காதீங்க. அம்மா, நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து அந்த படம் பார்க்கலாம். சரியா?"
"அதுக்கு முன்னாடி உங்க கல்யாண சீடியை பார்க்கலாம்" என்றார் குணமதி.
"அது வந்துடுச்சா?"
"ஆமாம். இப்ப தான் வந்தது" என்று தூயவன் கையில் இருந்த அதை பிடிங்கினார்.
"வாவ், அது செம ஃபன்னா இருக்க போகுது"
"அதுல என்ன ஃபன் இருக்கு?" என்றான் தூயவன்.
"இருக்கு... என் ஹீரோ வீல் சேரில் இருந்து ஸ்டைலா எழுந்து நின்னு அதை எட்டு உதைச்சதை நான் தான் பார்க்கலையே...!"
"ஆனா நான் உன்னோட எக்ஸ்பிரஷனை பார்த்தேன். ஒரு வேக வச்ச முட்டையை வச்சு அடைக்கிற அளவுக்கு நீ வாயை பிளந்துகிட்டு, கண்ணை விரிச்சுக்கிட்டு நின்ன" என்று சிரித்தான்.
"அதை இப்ப கூட என்னால நம்ப முடியல" என்றார் குணமதி.
ஆம் என்று தலையசைத்தாள் பவித்ரா. தூயவன் மீண்டும் சிரித்தான்.
"என்னங்க போதும் சிரிக்கிறத நிறுத்துங்க. சந்தோஷ அண்ணன் ரொம்ப அப்செட்டா இருக்காரு. ஆனா நீங்க இந்த சிரிச்சுகிட்டு இருக்கீங்க"
"அதுக்காக, நானும் அவரை மாதிரி சோகமா இருக்கணுமா?"
"உங்களுக்கு சிரிக்க தோணுச்சுன்னா நம்ம ரூமுக்கு போய் தனியா சிரிங்க"
"அவ சொல்றதும் சரி தான்" என்றார் குணமதி.
தலையசைத்த படி தங்கள் அறையை நோக்கி சென்றான் தூயவன்.
மதுரை
மயக்க நிலையில் இருந்த சஞ்சனா, திருமண மேடையில் அமர வைக்கப்பட்டு இருந்தாள். அவளுக்கு பக்கத்தில் பெரியசாமி அமர்ந்திருந்தான். புரோகிதர் மந்திரங்களை ஜெபித்துக் கொண்டிருந்தார். அவர் தாலியை எடுத்து பெரியசாமியிடம் கொடுக்க, அதை பெற்று சஞ்சனாவின் கழுத்தில் கட்டி அவளை திருமதி சஞ்சனா பெரியசாமியாக மாற்றினான் பெரியசாமி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top