50 எங்கே சஞ்சனா
50 எங்கே சஞ்சனா
அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தார்கள், அவர்கள் யாருக்கும் சஞ்சனாவை பற்றி ஒன்றும் தெரியாது என்றல்ல. அவள் எப்படிப்பட்டவள் என்பதைத்தான் ஏற்கனவே மாயவன் அனைவருக்கும் புரிய வைத்துவிட்டாரே! அவர்களுடைய அதிர்ச்சிக்கு காரணம், இன்னமும் கூட சின்னசாமிக்கு சஞ்சனா தகவல் கொடுத்துக் கொண்டிருக்கிறாளா என்பது தான். அவள் அதை செய்வதற்காக தான் இப்பொழுது அங்கு வந்திருக்கிறாளா?
"நீங்க சொல்றது உண்மையா இன்ஸ்பெக்டர்?" என்றான் நான் தூயவன்.
"ஆமாம் சார். அவங்க தான் சின்னசாமிக்கு வேண்டிய மெசேஜ் கொடுத்துகிட்டு வந்திருக்காங்க. அவங்க அவனை வேற ஒரு ஃபோன்ல இருந்து கூட காண்டாக்ட் பண்ணி இருக்காங்க. அந்த நம்பரையும் நாங்க செக் பண்ணி பார்த்தோம். அது அவங்க நம்பர் இல்ல. ஆனா அந்த நம்பரை வச்சிருந்த ஆள், இவங்களோட ஆள் தான். அவனை இன்னிக்கு தான் நாங்க பிடிச்சோம். ஏற்கனவே அந்த ஆள் எங்களுக்கு ஸ்டேட்மென்ட் கொடுத்துட்டான். அவன் இப்போ எங்க கஸ்டடியில தான் இருக்கான். இது அவங்களோட அரெஸ்ட் வாரண்ட்"
அந்த பிடி வாரண்ட்டை பெற்று அதை சந்தோஷிடம் கொடுத்தான் தூயவன்.
"சஞ்சனா..." என்று கத்தி அழைத்தான் சந்தோஷ். அவள் தங்கியிருந்த அறையை விட்டு சாதாரணமாய் வெளியே வந்து, முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் நின்றாள்.
"என்ன ண்ணா? எதுக்காக என்ன கூப்பிட்ட?" என்றாள்.
"நீ இங்க வந்து, எங்க கூட தங்கித் தான் தீருவேன்னு அடம் பிடிச்சப்போ நான் ஏன்னு புரியாம நின்னேன். ஆனா இப்போ எனக்கு புரிஞ்சு போச்சு"
சஞ்சனா முகம் சுருக்கினாள்.
"நான் உன்னையும் அண்ணியையும் வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போகத்தான் வந்தேன். நீங்க வர மாட்டேன்னு சொன்னதால உங்களோட நான் இங்கேயே தங்கிட்டேன். அவ்வளவு தான்."
"பொய். நீ சொன்னது சுத்த பொய். நீ இங்க இருக்கிற ஒவ்வொருத்தரையும் வேவு பாக்க தான் வந்திருக்க" என்றான் சந்தோஷ்
"எதுக்காக நான் வேவு பார்க்கணும்?" என்றாள் தெனாவட்டாக.
"சின்னசாமிக்கு தகவல் சொல்ல..."
"இல்ல... நீ சொல்றது உண்மை இல்ல. நான் அப்படி செய்யல"
"எக்ஸ்கியூஸ் மீ மேடம், என்கிட்ட அதுக்கு ஆதாரம் இருக்கு. தூயவன் சார் கோவிலுக்கு போனதை சின்னசாமிகிட்ட சொன்னது நீங்க தான்"
"ஆமாம், அதை நான் தான் சொன்னேன். ஆனா அதுக்கப்புறம் அவனுக்கு நான் எந்த மெசேஜும் கொடுக்கல" என்றாள் சாதாரணமாக.
"நீங்க எது சொல்றதா இருந்தாலும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சொல்லுங்க மேடம். வாங்க போகலாம்"
"என்னது? போலீஸ் ஸ்டேஷனுக்கா? எவ்வளவு தைரியம் இருந்தா என்னை ஒரு கிரிமினல் மாதிரி நடத்துவீங்க? என்னைப் பத்தி என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க? நான் யாருன்னு உங்களுக்கு தெரியுமா?"
"நீங்க யாருன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். அதுக்கு மேல உங்களை பத்தி நாங்க தெரிஞ்சுக்கணும்னா, நீங்க சாவகாசமா போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சொல்லுங்க"
"நான் உங்க கூட வர தயாரா இல்ல. நான் என் லாயருக்கு ஃபோன் பண்றேன்"
"எங்ககிட்ட அரெஸ்ட் வாரண்ட் இருக்கு. நீங்க அதுக்கு கட்டுப்பட்டுத் தான் ஆகணும். இல்லனா உங்களை இழுத்துகிட்டு போக வேண்டி இருக்கும்"
"அண்ணா, எதுக்கு இப்படி கல்லு மாதிரி நிக்கிற? உன் வாயில என்ன வச்சிருக்க? என்னை அவங்க கூட அனுப்ப மாட்டேன்னு சொல்லு"
"எங்க கடமையை செய்ய எங்களுக்கு யாருடைய பர்மிஷனும் தேவையில்ல மேடம். எங்களை கடமையை செய்யவிடாம தடுக்கிறவங்களையும் அரெஸ்ட் பண்ற உரிமை எங்களுக்கு இருக்கு"
"எங்க அப்பா கிட்டயாவது என்னை பேச விடுங்க"
"உன்னை போலீஸ் அரெஸ்ட் பண்ண விஷயத்தை அப்பாகிட்ட நான் சொல்லிக்கிறேன். நீ முதல்ல இங்கிருந்து கிளம்பு" என்றான் சந்தோஷ்.
"உன்னை ஒரு அண்ணன்னு சொல்லிக்க உனக்கு வெட்கமா இல்லயா?" என்றாள் கோபமாய்.
"ஆமாம் உன்னை என் தங்கச்சின்னு சொல்லிக்க எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு"
"இதுக்கு நீ பதில் சொல்லியே ஆகணும்"
"அவளை இங்கிருந்து கூட்டிகிட்டு போங்க, சார்" என்றான் சந்தோஷ் எரிச்சலுடன்.
ஒரு பெண் காவலர் அவள் கையில் விலங்கிட்டார். அங்கு இருந்தவர்களின் மீதும், பிறகு சந்தோஷின் மீதும் தன் கண்களை கோபமாய் பாய்ச்சினாள் சஞ்சனா.
"என் சேப்டர் முடிஞ்சிடுச்சுன்னு நினைக்காத" என்று கூறியபடி வேகமாய் காவலர்களுடன் நடந்தாள் சஞ்சனா.
தூயவனை பார்த்த அசிஸ்டன்ட் கமிஷனர் நவ்ஷத்,
"சின்னசாமியை பத்தியும் அவன் அவங்க அப்பாவை பத்தியும் நான் விசாரிச்சேன் சார். அவங்க நான் நினைச்சதை விட ஆபத்தானவங்களா இருக்காங்க. அவங்க இருக்கிற ஏரியா மொத்தமும் அவங்க கட்டுப்பாட்டுல இருக்கு. போலீஸ்காரங்க கூட அவங்க ஏரியாவுக்குள்ள போக பயப்படுவாங்களாம்"
"எப்படி சார் அப்படி இருக்க முடியும்?" என்றான் சந்தோஷ்.
"அவங்களுக்கு பலமான அரசியல் பின்புலம் இருக்கு. அவன் மதுரைக்கு திரும்பி போறதுக்கு முன்னாடி அவனை பிடிச்சாகணும். அவன் மதுரைக்கு போயிட்டா அவனை நம்ம தொட முடியாது"
"அரெஸ்ட் வாரண்டோட போனா கூட அவங்களை அரெஸ்ட் பண்ண முடியாத சார்?"
"அவங்க சட்டத்துக்கு எல்லாம் கட்டுப்பட்டு நடக்கிறவங்க இல்ல, சார். அவங்களை பிடிக்கணும்னு நினைச்சு உள்ள போனாலே கொன்னுடுவாங்க. துரதிஷ்டவசமா அவங்களை பிடிக்கிற அளவுக்கு இன்னும் ஒரு ஆஃபிசர் வரல"
சந்தோஷ் பெருமூச்சு விட்டான்
"தூயவன் சார், உங்க பவரை யூஸ் பண்ணி இந்த விஷயத்துல ஏதாவது செய்யுங்க" என்றார் நவ்ஷத்.
சரி என்று தலையசைத்தான் தூயவன்.
"நான் கிளம்புறேன். உங்களுக்கு ட்ரபிள் கொடுத்ததுக்கு சாரி. சீக்கிரமா அவங்களை பெயில்ல எடுத்துடுங்க"
தன்னை பார்த்துக் கொண்டு நின்ற தூயவனை நோக்கி திரும்பினான் சந்தோஷ்.
"இல்ல, ஏசி சார், அவ ஜெயில்லயே இருக்கட்டும்" என்றான் சந்தோஷ் வெறுப்போடு.
நவ்ஷத் தூயவனை பார்க்க, அவன் மெல்ல தன் கண்களை இமைத்தான். சரி என்று தலையசைத்து அங்கிருந்து விடைபெற்றார் நவ்ஷாத்.
மனம் உடைந்து அங்கிருந்து சோபாவில் அமர்ந்தான் சந்தோஷ். அவன் அருகில் அமர்ந்த வெண்மதி, அவனை சமாதானப்படுத்த முயல, அவளை அமைதியாக இருக்கும்படி சைகை செய்தான் தூயவன். தூயவனை பார்த்த சந்தோஷ்,
"தயவுசெஞ்சு எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க. இதுக்கு என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல. இதை எப்படி ஹேண்டில் பண்றதுன்னும் எனக்கு தெரியல"
"எல்லாத்தையும் விட்டுட்டு முதல்ல உங்க அப்பாவுக்கு ஃபோன் பண்ணுங்க. அவர் இதுக்கு ஏதாவது செய்வார்" என்றான்
"இல்ல, அவ கொஞ்ச நாள் ஜெயில்ல இருக்கட்டும். அடுத்தவங்க நல்லா இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறவங்களுக்கு இது தான் நல்ல தண்டனை"
"இல்ல, இந்த நியூஸ் வெளியில வரக்கூடாது. அவ ஜெயிலில் இருந்து வந்ததுக்கு பிறகு, நீங்க உங்க கண்ட்ரோல்ல அவளை வச்சுக்கலாம்"
"உங்களுக்கு அவளைப் பத்தி தெரியாது. அவளால இவ்வளவு செய்ய முடியும்னா, அவ என்ன வேணும்னாலும் செய்வா. நம்ம அவளை குறைச்சி எடை போடக்கூடாது. நான் அவளை குறைச்சி எடை போடல. அவ இவ்வளவு செஞ்சதுக்கு அப்புறம், நிச்சயமா மாட்டேன். ஆனா இது உங்க கௌரவம் சம்பந்தப்பட்ட விஷயம்"
"நான் நாளைக்கு ஃபிரான்சுக்கு போறேன். ஃபிரான்ஸ்ல இருக்கிற யாருக்கும் சஞ்சனாவை தெரியாது. அவளுக்கு கிடைச்ச இந்த தண்டனை, என் கௌரவத்தை எந்த விதத்திலும் பாதிக்காது. அப்படியே பாதிச்சாலும், அதைப் பத்தி நான் கவலைப்பட போறதில்ல. ஏன்னா, அவளுக்கு இது தேவை தான். தன் மோசமான வளர்ப்போட விளைவு என்னன்னு எங்க அப்பாவும் தெரிஞ்சுக்கட்டும்" என்று எரிச்சலோடு கூறினாலும், அவன் குரலில் வேதனை நிறைந்திருந்தது.
"சரி, நீங்க எதுவும் செய்ய வேண்டாம். அக்கா, நீங்க அங்கிளுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொல்லுங்க" என்றான்.
"வேணா மதி, நீ என் விருப்பத்துக்கு எதிரா நடந்துக்க மாட்டேன்னு நினைக்கிறேன்" என்றான் சந்தோஷ்.
மாட்டேன் என்றபடி தூயவனை ஏறிட்டாள் வெண்மதி. அவன் பெருமூச்சு விட்டான்.
"தயவுசெஞ்சி இந்த விஷயத்தை அப்படியே விடுங்க. எங்க அப்பா பேசுற உதவாக்கரை டயலாக்கை எல்லாம் கேட்க எனக்கு விருப்பமில்ல" என்று கூறியபடி தங்கள் அறையை நோக்கி சென்றான்.
"தூயா, எதுக்காக சஞ்சனா வெளியில வரணும்னு நினைக்கிற? அவ ஜெயிலிலேயே இருக்கட்டும் விடு" என்றாள் வெண்மதி.
"அக்கா, இந்த விஷயத்தை நம்ப முடிவு பண்ணக்கூடாது. ஒருவேளை இன்னைக்கு நம்ம முடிவு பண்ணா, ஒரு நாள் உங்க புருஷன் நம்மளை நோக்கி விரலை உயர்த்த வாய்ப்பிருக்கு. அதனால தான் அவளை ஜெயில்ல இருந்து வெளியில கொண்டு வர சொன்னேன்"
"அப்படின்னா நீ அவரோட மனநிலையை செக் பண்ணி பாத்தியா?"
"பின்ன என்ன? அந்த அடங்காப்பிடாரி ஜெயிலை விட்டு வெளியில வரணும்னு நான் ஏன் நினைக்க போறேன்? வாய்ப்பே இல்ல..." என்றான்.
அதைக் கேட்டு சிரித்தாள் வெண்மதி.
"போய் உங்க வீட்டுக்காரரை சமாதானப்படுத்துங்க" என்றான்.
சரி என்று தலையசைத்து விட்டு தன் அறையை நோக்கி சென்றாள் வெண்மதி.
"நீ ரொம்ப ஸ்மார்ட் ஆயிட்ட தூயா" என்று அவன் முதுகை தட்டினார் குணமதி.
"நான் எப்பவுமே ஸ்மார்ட் தான், மா" என்று சிரித்தான் தூயவன்.
"நான் அவளை நம்ம வீட்டை விட்டு வெளியே அனுப்ப முயற்சி பண்ணினேன். ஆனா விதி அவளை நம்ம வீட்டை விட்டு எட்டி உதைச்சு வெளியில தள்ளிடுச்சு" என்று கூறியபடி தன் அறையை நோக்கி சென்றார்.
"நான் உனக்கும் அவளுக்கும் நடுவுல சில சண்டைக் காட்சி எல்லாம் பார்க்கலாம்னு ரொம்ப ஆசையா காத்துக்கிட்டு இருந்தேன். இந்த போலீஸ்காரங்க வந்து அதை எல்லாம் கெடுத்துட்டாங்க" என்றான் தூயவன் போலியான சோகத்தோடு.
"ஓ அப்படியா?" என்றாள் பவித்ரா.
ஆமாம் என்று சோகமாய் தலையசைத்தான் தூயவன்.
"கவலைப்படாதீங்க. எப்படி இருந்தாலும் அவங்க திரும்பி இங்க வருவாங்க. அவங்க அவ்வளவு சீக்கிரம் அடங்குறவங்க இல்ல. ஜெயிலை விட்டு வெளியில வந்த உடனே நேரா இங்க தான் வருவாங்க"
"நீ சொல்றதும் சரி தான்" என்று சிரித்தான் தூயவன்.
.........
காவல் நிலையத்திற்கு ஜீப்பில் அழைத்துச் செல்லப்பட்டாள் சஞ்சனா. ஒரு குறுகிய திருப்பம் வந்த போது, ஜீப் ஓட்டுநர் சட்டென்று வண்டியை நிறுத்தினார், திடீரென்று யாரோ முன்னாள் வந்து நின்றதால்...! அந்த நபரைப் பார்த்த நவுஷாத்தின் முகம் கிலி அடைந்தது. ஏனென்றால் முன்னாள் வந்து நின்றவன் சின்னசாமி. ஜிப்பை விட்டு கீழே இறங்க அவர் நினைத்தபோது, அந்த ஜீப்பிற்குள்ளே வித்தியாசமாய் எதையோ உணர்ந்தார். திணற வைக்கும் வாசனையுடன் கூடிய ஒரு புகை அந்த ஜிப்பில் பரவியது. ஜீப்பின் உள்ளே இருந்தவர்கள் தங்கள் சுயநினைவை இழக்க துவங்கினார்கள். அவர்களுக்கு சுயநினைவு வந்தபோது, அவர்களின் ஜீப் சென்னை புறநகரில் நின்று கொண்டிருந்தது. அதில் சஞ்சனா இருக்கவில்லை.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top